Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான்
[ புதன்கிழமை, 16 மார்ச் 2016, 01:12.06 AM GMT ]
seyaaa1.jpg
4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா  சௌவ்தமி என்ற சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம பகுதியில் கடந்த செம்டெம்பர் 11ம் திகதிக்கும் செப்டெம்பர் 13ம் திகதிக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், முழு நாட்டையுமே உலுக்கியது மட்டுமன்றி, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை விதிக்கவேண்டும் என்ற குரலும் ஓங்கியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, சட்டமா அதிபரினால், சந்தேகநபருக்கு எதிராக நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அதிகுற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

சிறு வயதான சேயா சௌவ்தமி பக்மீதெனிய என்பவரை மரணமடையச் செய்தமை அல்லது மரணத்தை எதிர்நோக்கும் அபாயத்துக்கு உள்ளாக்கியமை, அதனூடாக அவருடைய சட்டரீதியான பாதுகாவலரான சமந்தி ரேணுகா என்பவரின் பாதுகாப்பை இல்லாமல் செய்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாடுகளின் ஊடாக சிறுவயதேயான அச்சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை, அந்தச் செயற்பாட்டிலிருந்து பாலியல் திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்கு வன்கொடுமை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியைப் படுகொலை செய்தமை மனிதப் படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவருக்கு எதிராக டிசெம்பர் மாதம் 23ம் திகதியன்று, அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு, 2016 மார்ச் மாதம் 3ம் திகதியன்று வழங்கப்படவிருந்த நிலையில், தீர்ப்பு 15ம் திகதியன்று (நேற்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா சௌவ்தமி, 2010 செப்டெம்பர் 16ம் திகதியன்று பிறந்தார். அவருக்கு இன்றுடன் ஐந்தரை வயது பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீட்டிலுள்ள கட்டிலில் 2015ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது சேயா சௌவ்தமி, கடத்தப்பட்டார்.

இந்நிலையில், வீட்டுக்கு அண்மையிலுள்ள வாய்க்காலிலிருந்து இரண்டு நாட்களின் பின்னர், அதாவது 13ம் திகதியன்று, அவரது சடலம் நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டது.

படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான சமத் ஜயலத்தின் மரபணு அறிக்கை (டி.என்.ஏ), படுகொலை செய்யப்பட்ட சிறுமியான சேயா சௌவ்தமியின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரியல் மாதிரிகளுடன் பொருந்தியிருந்தது. இதனையடுத்தே, அவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 25ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, ஜனவரி 29ம் திகதியன்று நிறைவடைந்தது. சாட்சி அட்டவணையில் 30 பேர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதில் அறுவர் மட்டுமே சாட்சியளித்திருந்தனர்.

பிரதிவாதியின் கோரிக்கைக்கு அமைவாகவே, ஜூரி சபை இன்றி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கடந்த 26ம் திகதியன்று மன்றில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, முறைப்பாட்டாளரின் சட்டத்தொகுப்புரையை ஆறு மணிநேரத்துக்கு மேலாக நிகழ்த்தினார்.

வழக்கின் பிரதிவாதி, குற்றத்தைச் செய்த முறைமை, சுயாதீனமான சாட்சிகள், பிரதிவாதியின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றை தனது தொகுப்புரையில் முன்வைத்தார். குற்றம் இடம்பெற்று 72 நாட்களுக்குள் பிரதிவாதிக்கு எதிராக அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது என்பதுடன் குற்றம் இடம்பெற்று 166 நாட்களுக்குள் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தன.

குற்றம் இடம்பெற்று 184 நாட்களில், (அதாவது சேயா சௌவ்தமிக்கு 5 வயதும் 6 மாதங்களும் நிறைவடையும் நாளான) நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது இலங்கை சட்ட வரலாற்றில், மிகவும் குறைந்த நாளிலேயே தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காகும்.

வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், பிரதிவாதியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத், கடும் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பொலிஸார் அதிகரித்திருந்தனர்.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியான பிரதிவாதி இனங்காணப்பட்டுள்ளார் என்று அறிவித்த, மேல் மாகாணத்தைச் சார்ந்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீரா என பிரதிவாதியைப் பார்த்துக் கேட்டார்.

பிரதிவாதியின் கூண்டுக்குள் தலையைக் கவிழ்த்தவாறு நின்றிருந்த சமத் ஜயலத் 'இவ்வாறான குற்றங்கள், மது மற்றும் புகைப்பொருள் பாவனையினாலே இடம்பெறுகின்றன. வேறொன்றும் கூறுவதற்கு இல்லை' என்றார்.

இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்து சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, 'சின்னஞ்சிறு சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்தமை, முழு நாட்டையும் உலுக்கியது. அவ்வாறான குற்றத்துக்காக அதியுச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும் எனக் கோரிநின்றார்.

பிரதிவாதியின் சார்பில், அரச செலவில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சத்துரங்க அமரதுங்க, பிரதிவாதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டமையால், அச்சம்பவங்களின் தன்மைக்கேற்ப தண்டனையைக் குறைக்குமாறு கோரிநின்றார்.

தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் கருத்துரைத்த நீதிபதி, 'பெற்றோர், வீட்டில் சுதந்திரமாக இருக்கின்றோம் என்பதற்காக, பிள்ளைகளின் பாதுகாப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. தற்போதைய பிள்ளைகளின் பாதுகாப்பு மிகப் பயங்கரமானதாகவே இருக்கின்றது. தற்போதைய பெற்றோர் இரவுவேளை வரையிலும் தொலைக்காட்சிகளை பார்க்கின்றமையால், இவ்வாறான குற்றங்களை இழைக்கின்ற வெளியாருக்கு, இலகுவில் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது' என்றார்.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. அறை இருண்டது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர். அதன்பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

'இந்த வழக்கின் பிரதிவாதியை, இந்த நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது. ஆகையால், முதலாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும 25 ஆயிரம் ரூபாய் தண்டமும். மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது.

இந்த தண்டத்தை செலுத்தாவிடின் மேலதிகமாக ஒருவரும் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும்.

நான்காவது குற்றமான சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.

ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்' என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார்.

ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் வெளியேறிவிட்டார்.

அதனையடுத்தே மின்விளக்குகள் ஒளிர விடப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான சமத் ஜயலத், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை, மன்றுக்கு வெளியே வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சேயா சௌவ்தமியின் தந்தை, 'என்னுடைய மகளின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதையோ, வெளியிடுவதையோ ஊடகங்கள் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விடயத்தில், பெற்றோர் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இந்தத் தீர்ப்பு திருப்தியளிக்கின்றது' என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyDSaSXnx3A.html

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கறுப்பி said:

அதன் பின்னர், நீதிமன்றத்தில் அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. அறை இருண்டது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர். அதன்பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

'நான்காவது குற்றமான சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.

ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்' என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார்.

ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் வெளியேறிவிட்டார்.

ஒரு பெண் கற்புள்ளவளாக இருக்கிறாளோ இல்லையோ என்பது பெரிதில்லை!

அவள் உலகத்துக்குக் கற்புள்ளவளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே அவளது 'கற்பு' தங்கியிள்ளது!

அதைத் தான் சிங்கள நீதிமன்று இப்போது செய்து முடித்துள்ளது!

உண்மையைச் சொல்வதென்றால்.. முள்ளி வாய்க்காலின் பின்னர்... சிங்களத்தில் மின் விளக்குகளோ, மின் விசிறிகளோ.... நீண்ட காலத்துக்கு எரியவோ..அல்லது சுழரவோ கூடாது!

என்னவோ ஒரு காரணத்துக்காகவே  சிங்களம்  சேலை முந்தானையைத் தேவையில்லாமல் அடிக்கடி இழுத்து..இழுத்து மூடிக் கொள்கின்றது!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது!

இந்த திரியில் கருத்தெளுத விருப்பம் இருக்கவில்லை இருந்தாலும் உங்கள் கருத்தை ஏற்காமல் விடவும் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு சரியானதே..

சிங்களத்துக்கு பல மாங்காய்கள்...

7 hours ago, புங்கையூரன் said:

ஒரு பெண் கற்புள்ளவளாக இருக்கிறாளோ இல்லையோ என்பது பெரிதில்லை!

அவள் உலகத்துக்குக் கற்புள்ளவளாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே அவளது 'கற்பு' தங்கியிள்ளது!

அதைத் தான் சிங்கள நீதிமன்று இப்போது செய்து முடித்துள்ளது!

உண்மையைச் சொல்வதென்றால்.. முள்ளி வாய்க்காலின் பின்னர்... சிங்களத்தில் மின் விளக்குகளோ, மின் விசிறிகளோ.... நீண்ட காலத்துக்கு எரியவோ..அல்லது சுழரவோ கூடாது!

என்னவோ ஒரு காரணத்துக்காகவே  சிங்களம்  சேலை முந்தானையைத் தேவையில்லாமல் அடிக்கடி இழுத்து..இழுத்து மூடிக் கொள்கின்றது!

என்ன சொல்ல வருகின்றீர்கள் புங்கை? போர்குற்றவாளிகள்  தண்டிக்கப்படவில்லை என்பதால் சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற இந்த மிருகத்துக்கு மரண தண்டனை கொடுத்தது சரியில்லை என்றா?

என்னைக் கேட்டால் இத் தண்டனையை இன்றே கொடுத்து விட வேண்டும்

புங்கைக்கு என்ன நடந்தது ,

முள்ளிவாய்காலில் அப்படி நடந்து கொண்டதினால் இனிமேல்  இலங்கையில் சட்டம் ஒழுங்கே இருக்கக்கூடாது  என்கின்றாரே,

அணுகுண்டு போட்டவன் தான் இன்றும் உலகிற்கு மனிதஉரிமை பற்றி பாடம் எடுக்கின்றான் . 

உண்மையில் முள்ளிவாய்கால் முடிவிற்கு காரணம் நாங்கள் தான் அதன் பிறகும் வெட்கம் கெட்டு உயிருடன் மனிதர்களாக நடமாடுவதே பாவம் .

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவின் வருத்தம்

இந்த தண்டனையை பற்றியதில்ல

கவனிக்கப்படாதிருக்கும் பல்லாயிரம் உயிர்களின் நீதி கோரி......

  • கருத்துக்கள உறவுகள்

நீதி எனும் போது யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்று புங்கையூரான் கூற வருகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

புங்கையண்ணாவின் வருத்தம்

இந்த தண்டனையை பற்றியதில்ல

கவனிக்கப்படாதிருக்கும் பல்லாயிரம் உயிர்களின் நீதி கோரி......

Bild in Originalgröße anzeigen  விசுகர்! முந்திரிகை பழம் பழுக்கிறதுக்கு   முதல் கொட்டை வெளியிலை வந்துடுமாம் tw_blush:

Edited by குமாரசாமி
எழுத்து திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

என்ன சொல்ல வருகின்றீர்கள் புங்கை? போர்குற்றவாளிகள்  தண்டிக்கப்படவில்லை என்பதால் சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற இந்த மிருகத்துக்கு மரண தண்டனை கொடுத்தது சரியில்லை என்றா?

என்னைக் கேட்டால் இத் தண்டனையை இன்றே கொடுத்து விட வேண்டும்

போர்க்குற்றவாளிகளை மட்டும் நோக்கிக் கருத்தெழுதவில்லை, நிழலி!

கிரிஷாந்தி முதல் கொண்டு வித்தியா ஈறாகக் குழந்தைகள் வதைப்படலம் போரில்லாத காலத்திலும் அரங்கேற்றப் படுகின்றது! குற்றவாளிகள் யாரென்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தும்.. இதே ஜனாதிபதியின் கீழான அரசே..அவர்களுக்குச் சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்து காட்டி, அவர்களைத் தண்டனைகளிலிருந்து காப்பாற்ற முனைந்திருக்கின்றது! வித்தியாவின் பின்னர் கூட.. அண்மையிலும் வவுனியா, பூந்தோட்டப் பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன! அவை இப்போதெல்லாம் வெளிச்சத்துக் கூட வருவதில்லை!

இப்போது இந்த ஆரவாரமெல்லாம்.. இலங்கையில் சட்டமும் நீதியும் மீண்டும் நிலை நாட்டப்பட்டிருக்கின்றன என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்குத் தான் என்றே நான் கருதினேன்!

ஒரு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதென்பது .. ஒரு உயிர் ஒன்று பலவந்தமாகப் பிடுங்கி எறியப்படுவது போன்றது! அதை யாரும் விரும்பிச் செய்வதில்லை என்பதைக் காட்டுவதற்கே..மின் விளக்குகளை அணைப்பதும், பேனாவை உடைத்தெறிவதும் ஆகும்!

அதே போலவே எமது மண்ணிலும், பல உயிர்கள் எந்த விதச் சம்பிரதாயங்களுமின்றிப் பிடுங்கி எறியப்பட்டன!

ஒரு கொலைகாரனது உயிருக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட....கொலை ஒன்றை நினைத்துக் கூடப் பார்க்காத உயிர்களுக்குப் கொடுக்கப் படவில்லை என்ற ஆதங்கமே எனது கருத்தாக வெளிவந்தது!

மற்றும்படிக்கு சமுதாய விலங்குகள் அகற்றப்படுவதில் எனக்கு..எந்தப் பிரச்சனைகளும் இல்லை!

8 hours ago, arjun said:

புங்கைக்கு என்ன நடந்தது ,

முள்ளிவாய்காலில் அப்படி நடந்து கொண்டதினால் இனிமேல்  இலங்கையில் சட்டம் ஒழுங்கே இருக்கக்கூடாது  என்கின்றாரே,

அணுகுண்டு போட்டவன் தான் இன்றும் உலகிற்கு மனிதஉரிமை பற்றி பாடம் எடுக்கின்றான் . 

உண்மையில் முள்ளிவாய்கால் முடிவிற்கு காரணம் நாங்கள் தான் அதன் பிறகும் வெட்கம் கெட்டு உயிருடன் மனிதர்களாக நடமாடுவதே பாவம் .

அர்ஜுன், முள்ளி வாய்க்காலில் யாரும் விரும்பி மரணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை!

மரணங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன என்பதே உண்மை !

அத்தனையும் தவிர்த்திருக்கப் பட வேண்டிய மரணங்கள்!

நாங்கள் தான் காரணம் என்பது சரியான கருத்தல்ல! நாங்களும் காரணமாக இருந்திருக்கலாம்!

முடிவெடுக்கும் உரிமை .. இறந்தவர்களிடம் இருக்கவில்லை என்பதே சரியான கருத்து!

தவிர்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்துமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன!

காரண, காரியங்கள் எல்லாம் முக்காடு போட்டு மூடி மறைக்கப்பட்டு விட்டன! விடுகின்றன!

ஆயுதம் தூக்கியவன் கொல்லப்படுவது பற்றி எனக்குக் கவலையில்லை!

ஆனால் அப்பாவிகளைப் பற்றித்தான் எனது கவலை எல்லாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மரண தண்டனையும் சமூகம் தன் கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதன் வெளிப்பாடே.

ஒரு மனிதனை கொல்லுமாறு இன்னொரு மனிதன் முடிவு எழுதுவதெ என்பது, சட்டப்படியே ஆனாலும் ஒரு பாரிய விடயம்.

இதன் தாற்பரியத்தை சிம்போலிக்காக காட்டுவதற்கே மேலே புங்கை சிவப்பில் கோடிட்ட நடைமுறைகள் பின்பற்றபடுகிறது.

இலங்கையில் நீதித்துறை ஆரம்பித்த காலம் தொட்டு இதுதான் நடைமுறை. இதொன்றும் புதிய விடயமல்ல.

அதுக்காக இலங்கையில் நீதி துறை ஆரம்பித்த நாள் முதல் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் விழவில்லை என்றாகாது.

ஐரோபிய யூனியனில் இணைவதுக்கு இருக்கும் தலைமை விதிகளில் ஒன்று,மரணதண்டனை நீக்கம்.

அப்படி இருக்கும் ஈயூ நாடுகள்தான் ஈராக்கிலும் ஆப்கானிலும் எண்ணற்ற அப்பாவிகளை காவு கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கருத்தைப் பார்த்ததும் இவர் அந்த கைதிக்கு மரண தண்டனை குடுத்ததை எதிர்த்தாப் போல எழுதின மாதிரித் தான் எனக்கும் பட்டது.

புங்கை சொல்வதில் நியாயம் இருந்தாலும் ,

அந்த குழந்தைக்கான நியாயத்தை வேறு நிகழ்வுடன் ஒப்பிட்டது எனக்கு உடன்பாடில்லை .

உலகம் முழுக்க யுத்தத்தால் ஏற்பட்ட அத்துமீறல்கள் ஏராளம் குறிப்பாக பெண்கள் ,வியாட்னாம் யுத்தம் தொடங்கி முள்ளிவாய்கால் வரை  பார்த்தே வருகின்றோம் .இந்தியா இலங்கையில் செய்ததை விட ஆயிரம் மடங்கு அநியாயம் பங்களாதேஷ் விடுதலையின் போது செய்தது .

அமைதிப்படை என்ற பெயரில் அனைத்து நாட்டுபடைகளும் இவற்றை இன்றும் செய்துகொண்டே இருகின்றன 

இதற்குள் ஒரு தனி நபரின் வக்கிரத்தை முடிச்சு போட்டது புங்கையர் விட்ட பிழை .

இந்த தனி நபர் வக்கிரகங்களும் போர்கால அத்துமீறல்களும் ஒரே கூடையில் போடமுடியாதவை என்பதுதான் எனது கருத்து .

5 hours ago, புங்கையூரன் said:

முள்ளி வாய்க்காலில் யாரும் விரும்பி மரணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை!

மரணங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன என்பதே உண்மை !

அத்தனையும் தவிர்த்திருக்கப் பட வேண்டிய மரணங்கள்!

நாங்கள் தான் காரணம் என்பது சரியான கருத்தல்ல! நாங்களும் காரணமாக இருந்திருக்கலாம்!

முடிவெடுக்கும் உரிமை .. இறந்தவர்களிடம் இருக்கவில்லை என்பதே சரியான கருத்து!

தவிர்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்துமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன!

காரண, காரியங்கள் எல்லாம் முக்காடு போட்டு மூடி மறைக்கப்பட்டு விட்டன! விடுகின்றன!

ஆயுதம் தூக்கியவன் கொல்லப்படுவது பற்றி எனக்குக் கவலையில்லை!

ஆனால் அப்பாவிகளைப் பற்றித்தான் எனது கவலை எல்லாம்!

5 hours ago, புங்கையூரன் said:

எமது மண்ணிலும், பல உயிர்கள் எந்த விதச் சம்பிரதாயங்களுமின்றிப் பிடுங்கி எறியப்பட்டன!

ஒரு கொலைகாரனது உயிருக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட....கொலை ஒன்றை நினைத்துக் கூடப் பார்க்காத உயிர்களுக்குப் கொடுக்கப் படவில்லை என்ற ஆதங்கமே எனது கருத்தாக வெளிவந்தது!

மற்றும்படிக்கு சமுதாய விலங்குகள் அகற்றப்படுவதில் எனக்கு..எந்தப் பிரச்சனைகளும் இல்லை!

புங்கை உங்களின் இக்கருத்துகள் பிடித்திருந்தது. அதுதான் பச்சை போட்டேன்.

இந்த செய்தியையும், பின்னூட்டங்களையும் கடந்த சில நாட்களின் முன் பார்த்தேன், பதில் எழுத வசதி கிடைக்கவில்லை.

எனது கருத்து என்ன என்றால்... குற்றம் புரிந்தவர் மரண தண்டனையை அறிவிக்கும் நீதிபதி போலவோ, அல்லது இங்கே கருத்துக்களை எழுதியுள்ள புங்கையூரன், விசுகு, நிழலி, ரதி, அர்ஜுன், அல்லது என்னை போன்றோ வாழ்க்கையில் கல்வி, வசதிகள் கிடைத்து சரியான வழிகாட்டுதல்களை பெற்று இருப்பாரா? அப்படி எம்மைபோல் அறிவை பெற்று இருந்தால் இப்படி சிறுமியை கொலை செய்து இருப்பாரா? உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள் என்று எடுப்பாக தீர்ப்பளிப்பதன் மூலம் சமூகம் தன்னை புனிதமாக காட்டிக்கொண்டு குறிப்பிட்ட குற்றவாளியின் மரணதண்டனையினுள் தனது அழுக்குகளை ஒளித்துக்கொள்ள பார்க்கின்றதா? குறிப்பிட்ட நபர் போன்ற அதே வாழ்க்கைமுறையில் நாம் வாழ்ந்து, வளர்க்கப்பட்டு இருந்தால் நானோ அல்லது நீதிபதியோ அல்லது இங்கு கருத்து எழுதியுள்ள எவராவதோ இப்படி ஓர் சிறுமியை கொலை செய்யமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அதாவது, இங்கு நான் கூறவருகின்ற விடயம் இவர் ஏன் இப்படிச்செய்தார்? இப்படி எதிர்காலத்தில் சம்பவங்கள் நடைபெறாது இருப்பதற்கு என்ன செய்யலாம்? குற்றவாளிக்கு உயிர்பிரியும்வரை கழுத்தில் கயிறு மாட்டி தூக்கிலிடுவதுடன் சமூகத்தின் பொறுப்பு நிறைவேறிவிட்டதா? இவரின் மரணதண்டனையுடன் சமூகம் திருந்திவிடுமா? எதிர்காலத்தில் இப்படி சம்பவங்கள் இலங்கையில் நடைபெறப்போவது இல்லையா? பிரச்சனைகளின் அடிப்படை காரணங்களை கண்டிபிடித்து குறைகளை திருத்தம் செய்யாமல் வெறும் விளைவுகளிற்கு மட்டும் நிவாரணம் தேடினால் போதுமா?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் இரண்டு விடயங்களை சொல்லியுள்ளீர்கள்.

1) மரணதண்டைனையுடன் சமூக பொறுப்பு முடிகிறதா? இதில் உங்களுடன் நான் முழுதும் ஒத்துப் போகிறேன். 

2) கல்வி அறிவே நம்மை இப்படிச் செய்யவிடாது தடுக்கிறது. அப்படிச் சொல்லமுடியாது. படிக்காத காமராஜ் என்ன காமுகனாய் மாறினாரா?

ஆனால் இப்படியான குற்றவாளிகள் உருவாவதில், nature v nurture argument ஒன்று உள்ளதுதான். இப்படியான குற்றவாளிகள் இயற்கையிலே உருவாகிறார்களா?  அல்லது சூழல் உருவாக்குகிறதா? சூழல் உருவாக்குகிறது எனில் அதே சூழலில் வாழ்ந்த எல்லோரும் ஏன் காமுகர்களாய் மாறவில்லை?

காமராஜரை விடுங்கள். என்னையும், உங்களையும் உதாரணமாக எடுத்து கதைப்போம்.

சொல்லுங்கள், நீங்கள் இப்படி ஓர் கொலையை செய்யக்கூடியவரா? நீங்கள் இப்படி ஓர் கொலையை எதிர்காலத்தில் செய்யக்கூடிய சாத்தியங்கள் எவை? நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அல்லது நான் செய்யமாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உங்களுக்கோ அல்லது எனக்கோ இப்படி செய்யமாட்டோம் என்று உறுதியாக தெரிகின்றது என்றால்... அந்த இயல்பு எதன் அடிப்படையில் வந்தது? அதே இயல்பு ஏன் சிறுமியை கொலை செய்த இவருக்கு வரவில்லை அல்லது இருக்கவில்லை?

உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள் என்பதையும் தாண்டி சித்திரவதை செய்து மரணதண்டனையை நிறைவேற்றுங்கள் என்றும் நீதிபதி தீர்ப்பு சொல்லலாம். இதை ஊடகங்கள் கொட்டை எழுத்தில் எழுதி காவிச்செல்லலாம். ஏன் என்றால் பொதுவாக ஊடகங்கள் இப்படியான செய்திகளிற்கு நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு அலைகின்றன. காலையில் செய்திகள் பார்ப்போம் என்று கூகிள் செய்திகளிற்கு சென்றால்... அங்கு காண்பது எல்லாம் கொலைகள், அழிவுகள், இழப்புக்கள், விதம்விதமான குற்றங்கள் சார்ந்த செய்திகள். காலை செய்தியை பார்க்க முன்னரே எப்படிப்பட்ட செய்திகள் முக்கியமான செய்திகளாக காட்டப்படும் எனக்குள் ஓர் ஊகம் இருக்கும். ஏன் என்றால் தினமும் அதையே காண்கின்றேன். இந்த சமூகத்திற்கு இப்படியான விடயங்கள் தேவைப்படுவதாலேயே இவை முக்கிய செய்திகளாக காண்பிக்கப்படுகின்றனவா? இது உண்மையில் சமூக அக்கறையா?

விலாசமாக தீர்ப்புக்கூறும் நீதிபதி குற்றவாளிக்கு தனது தண்டனையை அறிவிக்கும் அதேநேரம் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழுவுக்கோ, சமூக விஞ்ஞானிகளுக்கோ, உளவியல் பிரச்சனைகள் சம்மந்தமான அரசாங்க திணைக்களத்தின் கவனத்திற்கோ இவற்றைக்கொண்டு சென்று சமூகத்தில் உள்ள ஓட்டை, உடைசல்களை சரிசெய்வதற்கு முயற்சிக்கலாம். உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நடக்கின்றன. நீதித்துறை மட்டும் வெறும் கறுப்பு போர்வை, சுத்தியல், கையொப்பங்களுடனும் பழைய பல்லவியையே மட்டும் பாடிக்கொண்டு இராமல் புதிய சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இணையாக சட்டத்துறையிலும் நவீனத்துவத்தை அறிமுகம் செய்யவேண்டும். இங்கு நான் நவீனத்துவம் என்று கூறுவது தூக்குக்கயிறுக்கு பதிலாக விஷஊசி பாவிப்பதை அல்ல. தீர்ப்பில் இடம்பெறாத சமூகப்பொறுப்புக்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இங்கு தண்டனை என்பது தனிமனிதனுக்கு மட்டுமாக இருக்கக்கூடாது. தனிமனிதன் செய்யும் குற்றத்திற்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் நேரடித்தொடர்பு உண்டு. எனவே, தீர்ப்பில் சமூகம் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயங்களும் அமையவேண்டும். அட இவன் இப்படிச்செய்துவிட்டானே, எம்முடன் வாழ்ந்த இவன் இப்படிச்செய்யும் மட்டும் நாங்கள் இவனைக் கவனியாது விட்டுவிட்டோமோ என்று சமூகத்தில் உள்ளவர்களும் ஒருவன் செய்த குற்றத்தை உணர்ந்து தாம் அந்தக்குற்றம் இடம்பெறாவண்ணம் என்ன செய்திருக்கமுடியும் என்று சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

1) என்னைப் பொறுத்தவரையில் ஒரு கொலைகாரனாய் நான் மாறாது போனதுக்கு என் பட்டப்படிப்பு எவ்வகையிலும் காரணமில்லை. நாம் இங்கே மோரல் காம்பாஸ்  ( moral compass) ஐ பற்றிக்கதைக்கிறோம். நான் ஆண்டு 8 படித்த போது நான் புலிக்கு போவதற்கு 50:50 வாய்ப்பு இருந்தது ( என் தந்தையின் சமயோசித செயல்பாட்டால் அது தடுக்கப் பட்டது). அப்படி நான் போயிருந்தாலோ அல்லது வேறு வழியில் என் படிப்பு ஆண்டு எண்டுடன் மட்டுப் பட்டிருந்தாலோ, நான் கொலைகாரனாய், காமுகனாய் ஆகியிருப்பேனா என்றால், நிச்சயமாக இல்லை. ஆக நீங்களோ, நானோ, நிழலியோ காமுகர்களாய் மாறாதற்கு படிப்பு ஒரு காரணமில்லை. பட்டப்படிப்பு நிச்சயமாய் ஒரு காரணமில்லை.

2) அப்போ அதே சூழலில், அதே குடும்பத்தில் பிறந்த ஏனையோர் எல்லாரும் எம்மை போல இருக்க இந்த குற்றவாளி மட்டும் இப்படியானது ஏன்? Are some people born evil? இது ஒரு சிக்கலான கேள்வி. சட்டம் இந்த விடை தெரியாத  கேள்வியை அவாய்ட் பண்ணி, நரோ போயிண்டில் ஒருவன் குற்றவாளியா இல்லையா என்றே முடிவு சொல்கிறது. அப்படித்தான் சொல்ல முடியும். சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது எல்லாம் பராசக்தி படத்தில்தான் முடியும். இதை நக்கலாக சொல்லவில்லை. இதுதான் யதார்த்தம்.

3) ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தப்பு செய்கிறார் எனும் போது அதற்கு எந்தளவுக்கு சமூகம் பொறுப்பாளியாக முடியும்? இந்த குற்றவாளியை எடுத்தாலும், இவர் சாப்பாட்டுக்காக களவு எடுக்கவில்லை. இப்படி ஒரு குழந்தையை இம்சிக்கும் படி அந்த சமூகத்தில் எது இவரைத்தூண்டியது? ஏதுமில்லை. இதே சமூகத்தில் இவரை விட மிகவும் தாழ்ந்த பொருளாதார நிலையில், குடும்ப சூழலில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படிச் செய்யவில்லையே? ஆகவே இது ஒரு சமூக பிறழ்வு. A very rare occurrence. இதற்க்கு சமுதாயத்தை மீளாய்வு செய்து பலனேதும் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

4)  கலைஞனும் கோசானும் மரியாதையாக உரையாடினார் என்பது செய்தியில்லை. தூசணத்தில் ஏசுப்பட்டார்கள் என்பது செய்தி, கத்தியால் குத்தினார்கள் என்பது தலைப்புச் செய்தி. என்ன செய்வது அவர்களும் பத்திரிகை விக்கணுமே. 

அழகான, ஆத்மார்த்தமான, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்.
தொடருங்கள் நண்பர்களே

On 3/16/2016 at 1:14 AM, கறுப்பி said:
வழக்கில் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியான பிரதிவாதி இனங்காணப்பட்டுள்ளார் என்று அறிவித்த, மேல் மாகாணத்தைச் சார்ந்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் ஏதாவது கூற விரும்புகின்றீரா என பிரதிவாதியைப் பார்த்துக் கேட்டார்.

பிரதிவாதியின் கூண்டுக்குள் தலையைக் கவிழ்த்தவாறு நின்றிருந்த சமத் ஜயலத் 'இவ்வாறான குற்றங்கள், மது மற்றும் புகைப்பொருள் பாவனையினாலே இடம்பெறுகின்றன. வேறொன்றும் கூறுவதற்கு இல்லை' என்றார்.

கொலையை செய்தவர் "இவ்வாறான குற்றங்கள், மது மற்றும் புகைப்பொருள் பாவனையினாலே இடம்பெறுகின்றன" என்று கூறுகின்றார். இதற்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லையா? இங்கு குற்றவாளி சொல்லும் விடயங்கள் கவனத்தில்கொள்ளப்படத்தேவையில்லையா? மது, மற்றும் புகைப்பொருட்களை பலரும்தான் பாவிக்கின்றார்கள். ஏன் இவர் மட்டும் கொலைசெய்தார் என்று விசர் வியாக்கியானம் மட்டும் வைக்கவேண்டாம். முடியுமானால் தர்க்கரீதியாய் சரியான பதிலை தாருங்கள். 

1 hour ago, goshan_che said:

1) என்னைப் பொறுத்தவரையில் ஒரு கொலைகாரனாய் நான் மாறாது போனதுக்கு என் பட்டப்படிப்பு எவ்வகையிலும் காரணமில்லை. நாம் இங்கே மோரல் காம்பாஸ்  ( moral compass) ஐ பற்றிக்கதைக்கிறோம். நான் ஆண்டு 8 படித்த போது நான் புலிக்கு போவதற்கு 50:50 வாய்ப்பு இருந்தது ( என் தந்தையின் சமயோசித செயல்பாட்டால் அது தடுக்கப் பட்டது). அப்படி நான் போயிருந்தாலோ அல்லது வேறு வழியில் என் படிப்பு ஆண்டு எண்டுடன் மட்டுப் பட்டிருந்தாலோ, நான் கொலைகாரனாய், காமுகனாய் ஆகியிருப்பேனா என்றால், நிச்சயமாக இல்லை. ஆக நீங்களோ, நானோ, நிழலியோ காமுகர்களாய் மாறாதற்கு படிப்பு ஒரு காரணமில்லை. பட்டப்படிப்பு நிச்சயமாய் ஒரு காரணமில்லை.

2) அப்போ அதே சூழலில், அதே குடும்பத்தில் பிறந்த ஏனையோர் எல்லாரும் எம்மை போல இருக்க இந்த குற்றவாளி மட்டும் இப்படியானது ஏன்? Are some people born evil? இது ஒரு சிக்கலான கேள்வி. சட்டம் இந்த விடை தெரியாத  கேள்வியை அவாய்ட் பண்ணி, நரோ போயிண்டில் ஒருவன் குற்றவாளியா இல்லையா என்றே முடிவு சொல்கிறது. அப்படித்தான் சொல்ல முடியும். சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது எல்லாம் பராசக்தி படத்தில்தான் முடியும். இதை நக்கலாக சொல்லவில்லை. இதுதான் யதார்த்தம்.

3) ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தப்பு செய்கிறார் எனும் போது அதற்கு எந்தளவுக்கு சமூகம் பொறுப்பாளியாக முடியும்? இந்த குற்றவாளியை எடுத்தாலும், இவர் சாப்பாட்டுக்காக களவு எடுக்கவில்லை. இப்படி ஒரு குழந்தையை இம்சிக்கும் படி அந்த சமூகத்தில் எது இவரைத்தூண்டியது? ஏதுமில்லை. இதே சமூகத்தில் இவரை விட மிகவும் தாழ்ந்த பொருளாதார நிலையில், குடும்ப சூழலில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படிச் செய்யவில்லையே? ஆகவே இது ஒரு சமூக பிறழ்வு. A very rare occurrence. இதற்க்கு சமுதாயத்தை மீளாய்வு செய்து பலனேதும் இருக்கும் என்று நான் நம்பவில்லை. 

கொலையை செய்தவர், அவரது பின்னணி முழுமையாக சமூக விஞ்ஞானிகள், மருத்துவர்களினால் ஆராயப்பட்டு அவ்விடயங்கள் வெளிச்சத்துக்கு வராதவரை நீங்கள் ஊகத்தில் கூறும்விடயங்களை வெறும் மொட்டையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

1) நீங்கள் மேலே சுட்டி இருப்பது, ஒரு குற்றவாளியின் தன்னிலை விளக்கம். அவர் என்ன சொல்லி இருப்பார் என எதிர்பார்கிறீர்கள்? ஆம் எனக்கு பூப்படையாத சிறுமிகளை கண்டால்தான் ஆண்மை விளிக்கிறது, ஆகவே என் இச்சையை தீர்த்துக்கொள்ள இந்த சிறுமியை பலிக்கடாவாக்கினேன் என்றா?  அவர் தன்னை ஏமாற்றவும், சமூகத்தை ஏமாற்றவும் ஒரு விளக்கத்தை தேடுகிறார். அதுதான் போதைப் பொருளையும், குடியையும் துணைக்கு அழைக்கிறார்.

பெரும்பாலான போதைவஸ்து பாவிப்பவனும், குடிப்பவனும் குழந்தை துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதில்லை. இது பெரும்பாலும் மனம் சம்பந்தப் பட்ட பிரச்சினை.  இலங்கை மட்டுமில்லை, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த பிரச்சினை இருக்கிறது. ஏன் இலங்கையில் கெளரவ குடியுரிமை பெற்ற ஒருவர், விஞ்ஞான எழுத்தாளர் பற்றியும் இப்படி ஒரு கதை உண்டு. அவர் எம்மை எல்லாம் விட மெத்தப் படித்தவர்.

குழந்தைகள் பாலியல் துஸ்பிர்யோகம் செய்ததாக அண்மையில் பலர் இங்கிலாந்தில் கைது செய்யப் பட்டனர். எல்லோரும் people who were born with the silver spoon and went to top universities. 

ஒரு சமுதாயத்தில் 100 ற்கு 1 ஏன் 10000 1 பேர் குழந்தை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டால், இதில் சமூகத்துக்கு பங்கிருக்கு என்று சொல்லலாம். இங்கே நிகழ்தகவு பல லட்சத்துக்கு ஒன்று.

இதில் இந்த குற்றத்துக்கான காரணத்தை சமூகத்தில் போய் தேடுவதால் விடை கிடைக்கும் என நான் நம்பவில்லை.

2) நான் மேலே கேட்பது தர்க ரீதியான கேள்விதான். அது உங்களுக்கு விசர்தனமாய் பட்டால் நான் பொறுப்பில்லை ???

3) என்னைப் பொறுத்தவரை இந்த குற்றத்துக்கான காரணத்தை சமூகத்தில் தேடுவதை விட, குற்றவாளியின் மனதுக்குள், மூளைக்குள் தேடுவதே பயனுள்ளதாய் அமையும்.  

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரைக்கும் ஒருவன் நல்லவனாகவோ/கெட்டவனாக மாறுவதற்கு அவனை சுத்தி இருக்கும் சூழ்நிலையே காரணமாகிறது.படித்தவனாக இருக்கலாம்,பணக்காரனாக இருக்கலாம்,வறியவனாக இருக்கலாம்,கல்வி அறிவில்லதாவனாக இருக்கலாம்.இவை எவையுமே ஒருவன் குற்றவாளியாவதற்கு காரணமில்லை.

ஒருவன் பிறந்த சூழ்நிலை,அவன் வளரும் போதுஅவன் எதைப் பார்த்து வளர்கிறான்?,அவனை சுத்தி இருக்கும் நண்பர்கள் கூட்டம் எப்படியானவர்கள்? என்பதைப் பொறுத்தே குற்றவாளிகள் உருவாகின்றார்கள் என்பதே என் கருத்து.

அத்தோடு மது,போதைவஸ்து என்பன முக்கிய பங்கு வகிக்கின்றது...ஒருவன் குடித்து விட்டு போதைவஸ்து பாவிச்சால் அவனை சுத்தி என்ன நடக்கின்றது என்பதே அவனுக்குத் தெரியாது.அது அவனை அடிமையாக்கி விடும். இன்னொரு திரியில் ஒரு பெண்,தனது குழந்தையையே போதையில் கழுத்தை நெரித்து கொண்டு இருக்கிறார்."சேயா"வைக் கொண்ட இந்த குற்றவாளியின் தம்பியும் ஒரு போதைவஸ்து அடிமை தானே!

On 3/16/2016 at 1:14 AM, கறுப்பி said:
உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான்

தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னர் கருத்துரைத்த நீதிபதி, 'பெற்றோர், வீட்டில் சுதந்திரமாக இருக்கின்றோம் என்பதற்காக, பிள்ளைகளின் பாதுகாப்பில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. தற்போதைய பிள்ளைகளின் பாதுகாப்பு மிகப் பயங்கரமானதாகவே இருக்கின்றது. தற்போதைய பெற்றோர் இரவுவேளை வரையிலும் தொலைக்காட்சிகளை பார்க்கின்றமையால், இவ்வாறான குற்றங்களை இழைக்கின்ற வெளியாருக்கு, இலகுவில் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றது' என்றார்.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் அந்த அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. அறை இருண்டது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் காத்தனர். அதன்பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

'இந்த வழக்கின் பிரதிவாதியை, இந்த நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது. ஆகையால், முதலாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது குற்றத்துக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும 25 ஆயிரம் ரூபாய் தண்டமும். மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 20 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது.

இந்த தண்டத்தை செலுத்தாவிடின் மேலதிகமாக ஒருவரும் சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும்.

நான்காவது குற்றமான சிறுமிக்கு மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கின்றது.

ஜனாதிபதி நியமிக்கின்ற நாளன்று, நேரத்தில் மற்றும் இடத்தில் குற்றவாளியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி அவரது உயிர், அவரது உடலிலிருந்து பிரியும் வரையிலும் தூக்கிலிடப்படவேண்டும்' என்று தீர்ப்பளித்து, தீர்ப்பில் ஒப்பமிட்டார்.

ஒப்பமிட்ட அந்தப் பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிபதி, மன்றிலிருந்து பிற்பகல் 12 மணியளவில் வெளியேறிவிட்டார்.

நீதிபதி தீர்ப்பை வாசிக்கமுன்னர் சிறு பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி பேசுகின்றார். ஆனால், அதே சிறு பிள்ளைகள் எதிர்காலத்தில் வளர்ந்து குழந்தைகளை கொல்லும் ஒரு  கொலை குற்றவாளியாக மரணதண்டனைக்கைதியாக உருவாகாமல் தடுப்பது பற்றி சமூகம் கொள்ள வேண்டிய அக்கறை பற்றியோ அல்லது நடவடிக்கைகள் பற்றியோ ஏன் ஒன்றும் சொல்லவில்லை? சும்மா நீதிமன்ற அறையின் விளக்குகளை அணைத்தும், மின்சிவிசிறிகளை நிறுத்தியும், எழுந்து நின்று மெளனம் சாதித்தும், பின்னர் தீர்ப்பு சொன்னவுடன் கையொப்பமிட்ட பேனையை உடைத்தும் சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்துவிட்டால் சமூகத்திற்கு நிவாரணம் கிடைத்துவிட்டதா? 

1 hour ago, goshan_che said:

1) நீங்கள் மேலே சுட்டி இருப்பது, ஒரு குற்றவாளியின் தன்னிலை விளக்கம். அவர் என்ன சொல்லி இருப்பார் என எதிர்பார்கிறீர்கள்? ஆம் எனக்கு பூப்படையாத சிறுமிகளை கண்டால்தான் ஆண்மை விளிக்கிறது, ஆகவே என் இச்சையை தீர்த்துக்கொள்ள இந்த சிறுமியை பலிக்கடாவாக்கினேன் என்றா?  அவர் தன்னை ஏமாற்றவும், சமூகத்தை ஏமாற்றவும் ஒரு விளக்கத்தை தேடுகிறார். அதுதான் போதைப் பொருளையும், குடியையும் துணைக்கு அழைக்கிறார்.

பெரும்பாலான போதைவஸ்து பாவிப்பவனும், குடிப்பவனும் குழந்தை துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதில்லை. இது பெரும்பாலும் மனம் சம்பந்தப் பட்ட பிரச்சினை.  இலங்கை மட்டுமில்லை, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த பிரச்சினை இருக்கிறது. ஏன் இலங்கையில் கெளரவ குடியுரிமை பெற்ற ஒருவர், விஞ்ஞான எழுத்தாளர் பற்றியும் இப்படி ஒரு கதை உண்டு. அவர் எம்மை எல்லாம் விட மெத்தப் படித்தவர்.

குழந்தைகள் பாலியல் துஸ்பிர்யோகம் செய்ததாக அண்மையில் பலர் இங்கிலாந்தில் கைது செய்யப் பட்டனர். எல்லோரும் people who were born with the silver spoon and went to top universities. 

ஒரு சமுதாயத்தில் 100 ற்கு 1 ஏன் 10000 1 பேர் குழந்தை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டால், இதில் சமூகத்துக்கு பங்கிருக்கு என்று சொல்லலாம். இங்கே நிகழ்தகவு பல லட்சத்துக்கு ஒன்று.

இதில் இந்த குற்றத்துக்கான காரணத்தை சமூகத்தில் போய் தேடுவதால் விடை கிடைக்கும் என நான் நம்பவில்லை.

2) நான் மேலே கேட்பது தர்க ரீதியான கேள்விதான். அது உங்களுக்கு விசர்தனமாய் பட்டால் நான் பொறுப்பில்லை ???

3) என்னைப் பொறுத்தவரை இந்த குற்றத்துக்கான காரணத்தை சமூகத்தில் தேடுவதை விட, குற்றவாளியின் மனதுக்குள், மூளைக்குள் தேடுவதே பயனுள்ளதாய் அமையும்.  

அவர் மது, போதை பாவித்தாரா இல்லையா, எவ்வளவு காலமாக பாவித்தார், இதனால் எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை எல்லாம் அவரை பரிசோதனை செய்து கண்டுபிடிக்கலாம். அதைவிடுத்து அவர் கூறும் கூற்று தன்னை ஏமாற்றவும், சமூகத்தை ஏமாற்றவுமாக சொல்லப்பட்டது என்பததை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதை மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கூறட்டும். நீங்கள் ஏன் ஊகத்தில் எழுதுகின்றீர்கள்?

நீங்கள் போதைப்பொருள் பாவித்து இருக்கின்றீர்களா? போதைப்பொருள் பாவித்தால் உங்கள் நடத்தை முறைகள் எப்படி அமையும் என்று அறுதியிட்டு கூறமுடியுமா? 

இங்கே கொலை செய்தவரும் ஒரு காலத்தில் குழந்தையாகவே இருந்தார். இவருக்கு போதைப்பொருள், மது, புகையை அறிமுகம் செய்தவர்கள், விற்றவர்கள், கூட இருந்து கும்மாளம் செய்து கெடுத்தவர்கள்... இவர்களிற்கு எல்லாம் யார் எப்படி தண்டனை கொடுப்பது? இவர்களை எல்லாம் யார் விசாரணை செய்வது?

இவ்வளவு கதைத்து சம்பிரதாயத்திற்காக நாடகம் போடும் நீதிபதி புகை, மது, போதையிற்கு எதிராக சமூகத்திற்கு ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன்? 

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

1) no one lives in a social vacuum. ஆகவே நம் எல்லோரின் நல்ல, தீய நடவடிக்கைக்கு ஒரு context ஆக சமூகம் இருந்தே தீரும். ஆனால் இந்த குற்றத்துக்கு சமூகம்தான் காரணமா? என்றால் இல்லை என்பதே என் நிலை. ஜட்ஜும் அப்படியே நினத்திருக்கலாம். சட்டத்தில் obiter dicta, ratio decedendi என்று சொல்லுவார்கள். ரேசியோ டிசிடெண்டி என்பது குறித்த வழக்கு பற்றி ஜட்ஜ் கூறுவது. ஒபிட்டர் என்பது வழக்கிற்கு சம்பந்தபட்ட இதர விபரங்களை பேசுவது. இந்த வழக்கில் ஒபிட்டர் குற்சிவாயுளது போலிருக்கு ( முழு ஜட்ஜுமெண்டை நான் படிக்கவில்லை) காரணம் ஜட்ஜ் இதை ஒரு தனிநபர் குற்றம் என்று கருதியுள்ளார்.

2) நீதித்துறை பற்றி தெரிந்திருப்பதால் கூறுகிறேன். சமூக சொற்பொழிவோ அல்லது சமூக காரணிகளை ஆராய்வதோ ஒரு நீதிபதியின் தொழில் அல்ல.

நீதிபதியின் வேலை, கிட்டத்தட்ட ஒரு கிரிகெட் அம்பயர் மாதிரி. நடக்கும் மெட்சில், இருக்கும் விதிகளை அமல் படுத்துவதுதான் அவர்கள் வேலை.

வீரகள், சூதாடுகிறார்கிறார்களா இல்லையா, இதர off the field விடயங்களை பற்றி அவர்கள் பேச வேண்டியதில்லை. சில நீதிபதிகள் ஓவ் தெ பாயிண்ட் ஆக போய் சிலதை பேசுவார்கள். அவ்வளவே.

இதை சிம்போலிக்காக காட்டத்தான் - நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறன.

மற்றும் படி தமிழ் திரைப் படங்களில் வருவது போல ஒரு social commentary கோர்ட்டில் நடப்பதில்லை. அங்கே விடயங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், குற்ற செயல் நடந்ததா( அக்டஸ் ரியஸ்), குற்றம் செய்வதுக்கான மனநிலை அல்லது எண்ணம் இருந்ததா ( மென்ஸ் ரியா), இரெண்டு கேள்விக்கும் ஆம் எனில் இதை செய்ததுக்கு தக்க மறுத்தான் ( valid defence) உண்டா ? என்பதே ஆராயப்படும். 3 கேள்விக்கும் ஆம் எனில் குற்றவாளி. 3 இல் ஒன்றுக்கேனும் இல்லை என பதில் வரின் சுற்றவாளி.

நீங்கள் சொல்லும் சமூகபாதிப்பு, வளர்ந்த முறை எல்லாம் - குற்றவாளி என தீர்ப்பானபின், தண்டனை காலத்தை கூட்ட/குறைக்க பயன் படும். Mitigating circumstances என்பார்கள்.

குற்றவியல் நடைமுறையில் - சமூககாரணிகளை பற்றி யாரும் ஆராய்வதில்லை.

அதுக்குரிய இடம், அரசியல் மேடைகள், பாராளுமன்றம் முதலிய சட்டவாக்க மையங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • Sociopathy and Sociopaths are criminals that never received adequate socialization. These type of criminals never really learned how to live in society, had dysfunctional childhoods, and had no parental role models.
  • Psychopaths are criminals who, although adequately socialized, were unable to produce conscience mechanisms and habits that would impede antisocial behavior.

https://www.quora.com/Are-people-born-criminals-or-does-society-make-them-so

அருமையான விவாதம். 

இந்த கட்டுரையிலும்  ஆய்வாளர்கள் முதல் கொண்டு, சிறையில் பல காலம் வாசம் செய்தவர்களும் தங்களின் பின்னணி, தவறுகள் போன்றனவற்றை அலசுகிறார்கள்.

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.