Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காரும் கதியாலும்.

ஆட்டுப்பால் ....முலைப்பால்.....அன்பால்....!

அந்தக் கிராமம் பிரதான வீதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் உள்வாங்கி இருந்தது. அங்குள்ள மக்களும் விபரமானவர்களாகவும் அதே சமயம் வெள்ளந்தியானவர்களாகவும் இருந்தார்கள்.அங்கும் ஒரு பெரிய ஒழுங்கையில் இருந்து பிரிந்த சிறிய ஒழுங்கையில் சென்றால் அதன் முடிவில் எதிர் எதிராக இரண்டு வீடுகள்.அதில் ஒரு வீடு தங்கராசுவின் வீடு .அவன் மனைவி தனலட்சுமி. நண்டும் சிண்டுமாய் நாலு பிள்ளைகள். மூத்தவனுக்கு ஏழு வயசிருக்கும்.அடுத்த ஐந்து வயசில் ஆணும் பெண்ணுமாய் இரணைப்பிள்ளைகள்.மற்றது கைக்குழந்தை.அவர்களிடம் ஒரு சிறிய மொரிஸ்மைனர் கார் உண்டு. அதில்தான் வேலைக்கு போய் வருவது.தங்கராசுவுக்கு ஒரு ஆசை....ஒரு பெரிய ஃபரினா கேம்பிரிட்ஜ் வாங்கி விலாசம் காட்டவேணும். ஆனால் அதற்குத் தடையாக ஒரு கிரகம் வக்கிரமாய் நிக்குது.அதனால் ஃபரினா கனவு பாறிப்போய் கிடக்கு.

அந்தக் குறுகிய ஒழுங்கையில் எதிர்வீடு சோமர் என்னும் சோமசுந்தரத்தின் வீடு. அவர் மனைவி பூரணி. ஐந்து வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டாள். இவர்களுக்கு மகனும் மகளுமாய் இரண்டு பிள்ளைகள்.அவர்களில் மகன் ஒரு வைத்தியராக ஆஸ்பத்திரியிலும் மகள் ஆசிரியையாக நகரத்து பாடசாலையிலும் வேலை செய்கிறார்கள். அந்த பெரிய வீட்டில் சோமர் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இருவரது குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக நன்றாகத்தான் பழகி வந்தவர்கள்.சோமரும் லேசுபட்ட ஆளில்லை. அவருக்கும் ஒரு சோமசெட் கார் வாங்கி அந்த கிராமத்தில் "சோமசெட் சோமு" என்று பெயர் வாங்க வேண்டும்.என்ன அங்கும் அதே கிரகம் வாசலிலே சம்மணம் போட்டு உட்காந்திருக்கு.

இரண்டு வருடங்களுக்கு முன் தங்கரின் பொன்வாயால்தான் பிரச்சனை பிறந்தது. அவருக்கு யாரோ சொல்லிபோட்டினம் சோமர் கார் ஒன்று வாங்க ஓடித்திரியிறார் என்று.அதை கேட்டது முதல் தங்கருக்கு இருப்பு கொள்ளவில்லை. ஒருநாள் கொஞ்சம் ஏத்தத்துடன் வந்து ஒழுங்கைக்குள் நின்று யாருக்கோ சொல்வதுபோல் நீ இந்தப் பக்கம் பெரிய கேட் போட ஏலாது.  வேணுமெண்டால் உன்ர காணிக்கு வடக்காலதான்  போடலாம். என்று குத்தல் கதை கதைக்க, சோமர் வெளியே வந்து அதை நீ என்ன சொல்லுறது, இந்த ஒழுங்கைக்கு நான் காணி விட்டனான். எனக்கு நீ கதைக்குறியோ....என்று சொல்லிப்போட்டு உள்ளே போட்டார். அடுத்தநாள் வேலையால தங்கராசு வர கார் போக முடியாதபடி சுவரில் இருந்து ஒரு முழம் முன்னுக்கு வேலி போட்டிருக்கு.

தங்கராசு: (ஒழுங்கையில் நின்று) உது என்ன கோதாரி வேலை செய்திருக்கிறாய்.இப்படி ஒழுங்கையை மறிச்சு கதியால் போட்டிருக்கிறாய். உன்ர எல்லை சுவர் உள்ளுக்கை எல்லோ கிடக்கு.

சோமர்: இதுதான் என்ற காணியின்ர உறுதியில கிடக்கிற எல்லை. அதுதான் அளந்து போட்டிருக்கிறன்.

தங்கர்: அப்ப உந்த மதில் .....!

சோமர்: அது நான் ஆடு வளர்க்க பத்தி போடப்போறன். ( சொன்ன மாதிரி அடுத்தநாள் அந்த சுவரில் பத்தி போட்டு முடிய ,ஒரு லாண்ட் மாஸ்டரில  நல்ல கருப்பு ஆடும் குட்டியும் வந்து இறங்குது).

(தங்கரும் அந்த வேலிக் கதியாலைக் கடந்து தன் வீட்டுக்கு போற மாதிரி சின்ன மொரிஸ்மைனர் கார் ஒன்று வாங்கி கொண்டு வந்து விட்டான்.அந்தக் கார் கூட அவற்ர வீட்டுக்குள் திரும்ப இரண்டுதரம் ரிவார்ஸ் போடவேண்டும். அதுபோல காலையில் போகும்போதும் திட்டி திட்டித்தான் வெட்டி ஓடிக்கொண்டு போவார்.அவருக்கும் ஒரு ஃபரிணா கேம்பிரிஜ்யோ, ஹையஸ் வானோ வாங்க முடியாமல் கிடக்கு).

விலகாது கதியால்.....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரும் கதியாலும்...... (2).

தங்கராசு சொல்வதுபோல் கேற்றை வடக்கு பக்கம் போட்டால் இன்றுவரை பலன் தந்து கொண்டிருக்கும் ஒரு பிலாமரம், இரண்டு தென்னைகள், கறிவேப்பிலை மரம் எல்லாம் தறிக்க வேண்டி வரும்.அதுகள் பிள்ளைகள் போல தாத்தா வைத்து விட்டு போன மரங்கள். அதனால் அவருக்கு அது சிறிதும் விருப்பமில்லை.

தங்கருக்கும் சோமருக்கும்தான் புடுங்குப்பாடே தவிர தனலட்சுமியோ பிள்ளைகளோ வழமைபோல சோமாரின் வீட்டுக்கு வந்துதான் குளித்து முழுகி தண்ணீரும் எடுத்துக் கொண்டு போறவை.தண்ணீரும் நல்ல உருசியான தண்ணீர். அவர்களின் விட்டு கிணறு பின் வளவிற்குள் தூரத்தில இருக்கு. அது துலாக்கிணறு.பாதுகாப்பு கருதி பிள்ளைகளை அந்தப் பக்கம் விடுகிறதில்லை. சோமற்ரை கிணறு கப்பி போட்டிருக்கு. முன்னுக்கும் ஒரு முழம்  உசத்திக் கட்டியிருக்கு.இனி எந்நேரமும் அவர் வளவிற்குள் அங்கும் இங்கும் ஊசாடித் திரிவதால் பிள்ளைகளையும் கண்காணித்துக் கொள்வார்.

இப்போது ஆடும் குட்டியும் வந்ததில் இருந்து பிள்ளைகள் எந்நேரமும் அதுகளுடன் விளையாட்டுத்தான். சோமரும் தனது  c 90 யில்  சந்தை, கடை என்றுபோய் சாமான்கள் வாங்கிவந்து தனி சமையல்தான். இப்படியே இரு வருடங்கள் ஓடிட்டுது.அதன்பின் ஆடும் இரண்டுதரம் குட்டி போட்டுட்டுது. ஒருநாள் பின்னேரம் தனலட்சுமி வந்து சோமண்ணை  எப்பன் ஆட்டுப்பால் தாறியே. உவன் பெரியதம்பிக்கு வாயெல்லாம் அவிஞ்சு போய்க் கிடக்கு. பிள்ளையால சாப்பிட ஏலாமல் கிடக்கெணை.  சோமரும் அதுக்கென்ன பிள்ளை போய் கறந்து கொண்டு போணை என்று சொன்னவர் கொஞ்சம் இரு பிள்ளை அது முரட்டு ஆடாய் கிடக்கு நான் வந்து கறந்து தாறன் என்று சொல்லி, அரை சட்டி பால் கறந்து இந்தா தனம் பிள்ளைகளுக்கும் காச்சிக் குடு என்று குடுத்து விடுகிறார். தனமும் வாங்கிக் கொண்டு போகிறாள்.

விலகாது கதியால்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரும் கதியாலும்.....(3).

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள். தங்கராசுவின் வீட்டு முற்றத்தில் மொறிஸ்மைனர் நிக்குது.மகன் பெரியதம்பியும் தங்கரும் கார் கழுவிக் கொண்டு இருக்கினம். இரணைப்பிள்ளைகள் இரண்டும் குரும்பட்டியில் தேர் செய்து விளையாடுகிறார்கள்.தனம்  ஒழுங்கை முழுதும் கூட்டி சாணித்தண்ணி தெளித்துவிட்டு வெறும் வாளியோடு உள்ளே வருகிறாள்.

மகன்: கார் எல்லாம் ஒரே கீறலாய் கிடக்கு என்னப்பா.

தங்கர்: ஓமடா, உவன் துலைவான் வேலியை குறுக்க அடைச்சு கதியால் எல்லாம் கீறிப் போட்டுது.  இரவில வரேக்க ஒண்டும் தெரியுதில்லை. காரை பார்க்க பார்க்க அவனுக்கு வயித்தைப் பத்தி எரியுது.

தனம்: ஓம், காலமை போகேக்க ஒரு ஆளாய் போட்டு இரவு வரேக்க இரண்டுபேராய் வாரவர், அதுதான்.(தனக்குள் "பகலிலே பசுமாடு தெரியாது, இரவில எருமையா தெரியப்போகுது).

தங்கர்: என்ன புறுபுறுக்கிறாய். அது கிடக்கட்டும். நீ இப்ப என்ன செய்துபோட்டு வாராய். ஒழுங்கைக்குள் அவன்ர பக்கமெல்லாம் என்னத்துக்கு கூட்டினனி.

தனம்: ஏன் அதுக்கு என்ன இப்ப, பாதி ஒழுங்கை கூட்டினால் வடிவாவே இருக்கும்.(அவளும் எல்லாப் பெண்டில்மாரைப் போல புருசனிடம் நல்லா வாய் காட்டுவாள்.சிலநேரம் வாங்கிக் கட்டுறதும்தான்). உங்கட சண்டைகளை உங்களோட வச்சுக்கொள்ளுங்கோ. பூரணி அக்கா இருக்கேக்க .......!

தங்கர்: சரி....சரி....நிப்பாட்டு கதையை.உன்ர  பூரணி புராணம் கேட்டு கேட்டு காது இரண்டும் புளிச்சுப் போச்சு.

தனம்: ஓம் இப்ப உங்களுக்கு புளிக்கும்தான்.அண்டைக்கு பப்பாபழத்தை காகம் கொத்துது எண்டு நான் கொக்கத்தடி எடுத்துக் கொண்டு வாரதுக்கிடையில பாப்பாவிலே ஏறி..... சரி ஏறினால் பக்குவமாய் பழத்தை பிடுங்கிக் கொண்டு இறங்கவெல்லோ வேணும். அதை விட்டிட்டு அடுத்தவீட்டு பெட்டையலோட மரத்தில் இருந்து கொண்டு காய்யலால எறிஞ்சு விளையாடி சறுக்கி நாரி அடிபட விழுந்தது மறந்து போட்டுத்தாக்கும்.

மகன்: என்னம்மா, அப்பா அந்த உசரத்தில இருந்து விழுந்தவரோ....பிறகு என்னம்மா நடந்தது.

தனம்:பிறகு என்னத்தை சொல்ல. இடுப்பு அசைக்கேலாமல் போட்டுது. புத்தூரில கட்டு போட்டு, ஒட்டகப்புலத்தானிட்ட போய், ஒண்டும் சரிவரேல்ல.நானும் நேராத தெய்வமில்லை.அப்பத்தான் குஞ்சாச்சி வருத்தம் பார்க்க வந்தவ.அவதான் சொன்னா. நீ கைக்குள்ள நெய்ய வச்சுக்கொண்டு வெண்ணைக்கு அலையுறாய். உவள் பூரணியை கொண்டு காலால உழக்கி விட சொல்லு, சுகமாய் போயிடும்.

ஏன் ஆச்சி நான் உழக்கினால் சரியாகாதே....!

போடி விசரி. அவள் காலால பிறந்தவள்.வாய் பேசாமல் அவள் உழக்கினால்தான் சரிவரும். அண்டைக்கு பூரணி அக்கா வந்து சீலையை சிரைச்சு கொசுவத்தை இழுத்து இடுப்பில செருகிக் கொண்டுஅப்பாவை முற்றத்திலே பாயில குப்பறக் கிடத்தி உழக்கிப்போட்டு பிறகு புரட்டிப்போட்டு நேக்கா உழக்கி விட்டவ.அதோட போன நாரிப்பிடிப்புதான். அப்பாக்கு என்ன புளுகமோ அந்த சந்தோசத்தில அந்த வருஷமே நானும் இரட்டைப் பிள்ளையாய் பெத்து போட்டன். அதை பார்க்கவோ தூக்கவோ அக்கா உசுரோட இல்லை.கண்ணை முந்தானையால் துடைச்சு கொள்கிறாள்.

விலகாது கதியால் ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியின்ர கதை வேலிக்கதிகாலையும் தாண்டும் போல கிடக்கு தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரும் கதியாலும் ......( 4).

அன்று காலை வீட்டு முத்தமெல்லாம் கூட்டி தண்ணி தெளிச்சுப்போட்டு குளிக்கிறதுக்காக மகன் பெரிய தம்பியுடன் சோமரின் வீட்டுக்கு வருகிறாள் தனம். வழக்கமாய் அவர் வளவுக்க அங்கும் இங்கும் அலுவல் பார்த்து கொண்டு திரிவார்.ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார். இப்ப சிலமனைக் காணேல்ல. எட்டிப் பார்க்கிறாள், வாசலிலே c.90 நிக்குது. ஆட்டுக் கொட்டிலும் குப்பையாய் கிடக்கு. எங்க போட்டுது இந்த மனிசன் என்று நினைத்து கொண்டு குரல் கொடுக்கிறாள். அண்ணே ! சோமண்ணே!! உன்னானை உங்கினேக்க நிக்கிறியே....கொஞ்ச நேரம் சத்தமில்லை. பிறகு ஓமனை இஞ்சதான் நிக்கிறன். குசினியில் இருந்து கிணத்தடிக்கு வரும் கதவை திறந்து கொண்டு வந்து குந்தில் இருக்கிறார்.

தனம்: அண்ணே, உது என்னண்ணா முகம் எல்லாம் வீங்கிக் கிடக்கு. 

சோமர்: அது என்னவோ தெரியேல்ல பிள்ளை.... இரவு முழுவதும் சரியான காய்ச்சல். கண் இரண்டும் குருகு மணலைக் கொட்டினது போல கர கர வென்று , ராத்திரி முழுக்க ஒரு கண் நித்திரை இல்லை. இன்று பரியாரிட்ட போவம் என்டால் ஏலாமல் கிடக்கு. அதுதான் இரண்டு டிஸ்பிரின் போட்டுட்டு போர்த்துக் கொண்டு படுத்திட்டன். 

தனம்: ஏன் அண்ணை  ஒரு குரல் குடுத்திருந்தால் நான் வந்திருப்பன்தானே. எங்க பார்ப்பம், நெற்றியில் கை வைத்து பார்க்கிறாள்.காய்ச்சல் விடவில்லை.கண்கள் ரெண்டும் கொவ்வை பழம் போல சிவந்திருக்கு. கண்ணுக்கு முலைப்பால் விட்டால் நல்லது அண்ணே. பொடியனிடம் தம்பி இந்த வாளித் தண்ணியை கொண்டுபோய் ஆட்டுக்கு வைச்சுட்டு கொஞ்சம் குழையும் ஓடிச்சுப் போடுடா.பாவம் வாயில்லாத சீவன்.

சோமர்: நானும் அதை நினைத்தனான் பிள்ளை. கொஞ்சம் பொறன பூவரசம் இலை புடுங்கிக் கொண்டு வாறன், ஒரு துளி எடுத்து கண்ணில விட்டு விடன.

தனம்: நீ உதில இரண்னை என்று சொல்லிவிட்டு ஒரு இலையை புடுங்கி சிறிது பால் எடுத்து வந்து சுட சுட அவரின் கண்களில் விட்டு விடுகிறாள்.

மெல்ல அவளின் கையை பிடித்தவர் நீ என்னைப் பெற்ற தாயென என்று நெகிழ்ந்து போகிறார். அண்ணை  இன்று நீங்கள் ஒன்றும் சமைக்க வேண்டாம், நான் புளிக்கஞ்சி காய்ச்சி எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி தானும் குளித்து மகனையும் குளிக்க வார்த்துக் கொண்டு  போகிறாள்.

அன்று இரவு 10:00 மணிபோல தங்கராசு காரில் வருகிறான்.குறுக்கே கதியாலையும் வேலியையும் காணவில்லை.காரின் வெளிச்சத்தில் இறங்கி நின்று சுற்றும் முற்றும் பார்க்க வேலியும் கதியாலும் அகற்றப்பட்டு பழையபடி ஒழுங்கை மதிலோடு இருக்கு.

காருடன் சுலபமாக வீட்டுக்குள் போனவன், இஞ்சேரப்பா இவ்வளவு நாளும் உவன் சோமனுக்கு அறளை போந்திருந்தது. இப்ப சரியாயிட்டுது போல.வேலி கதியால் எல்லாம் பிடுங்கி ஒழுங்கையை விட்டு தந்திட்டான். இப்ப காரை கஷ்டமில்லாமல் வீட்டை கொண்டு வந்திட்டன்.

தனம்: ஓம், அவர் சுகமாயிட்டார்.இப்ப உங்களுக்குத்தான் பிடிச்சு ஆட்டுது. நீங்கள் காலம போனால் இரவுதான் வாரியள். நான் இந்த சின்னனுகளை வைத்துக் கொண்டு படுற பாடு எனக்கெல்லோ தெரியும்.எப்பவும் அயலட்டை அக்கம் பக்கம் உதவி இருக்க வேணும்.இந்தப்பிள்ளைகளின்ர வாய் அவியல்களுக்கு அந்த மனுஷன்தான் ஆட்டுப்பால் தந்தது.அதோட பின்னேரம் பிள்ளைகள் தேத்தண்ணி குடிக்கவும் வஞ்சகமில்லாமல்  அரை சட்டி பால் கறந்து தாறவர்.கூப்பிடட குரலுக்கு அண்ணன்தான் ஓடி வரவேணும்.

தங்கர்: உதை இவ்வளவு நாளும் நீ எனக்கு சொல்லவில்லை.

தனம்: ஏன் தண்ணியை போட்டுட்டு போய் அவரோடு கொழுத்தாடு பிடிக்கவே. கேற்றை என்ன உங்கட தலையிலேயே போடப்போறார்.அவற்ர வளவில் எங்கவெண்டாலும் போடட்டுமன். பூரணி அக்கா இருக்கேக்க .......!

தங்கர்:சரி....சரி....நிப்பாட்டு உன்ர பூரணி புராணத்த...... காலமை  போய் கதைப்பம்.

அடுத்தநாள் காலை சோமரின் வீட்டுக்கு தங்கராசுவும் தனலட்சுமியும் வருகினம்.சோமரை தெரியவில்லை. குரல் மட்டும் உச்சஸ்தாயியில் தேவாரப்பாடல் கேட்குது. 

"நிரைகழல்  அரவம் சிலம்பொலி யலம்பும்  நிமலர் நீறணி திருமேனி

வரைகொடு மகளோர் பாகமாய் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் 

பாடிக் கொண்டே பால் தேத்தண்ணி போட்டுக் கொண்டிருக்கிறார். தங்கர் மனிசியிடம், துலைவானுக்கு  நல்ல கணீர் என்ற குரல். சீர்காழி மாதிரி. அண்ணைதான் கோயிலிலே திருவெம்பா எல்லாம் பாடுறவர் என்று தனம் சொல்கிறாள்.

கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் மளப்பரும் கன மணிவரன்றிக் 

குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந்தாரே".  

சோமு...எட  சோமு நான் தங்கராசு வந்திருக்கிறன். 

சோமரும் குசினி யன்னலையும் கதவையும் திறந்து விட்டு யாரு, தங்கராசுவே வா.....வா... உள்ள வந்து உட்காரு....! ஓமண்ணை  நான்தான். நான் இதில இருக்கிறன்.என்று சொல்லி விட்டு கிணற்றுக்கட்டில் இருக்கிறான்.

சோமண்ணை நீ கேற்றை எங்க வேணுமெண்டாலும் போடண்ணை. (மூத்தவன் ஆட்டுக்குட்டியை கயித்தில கட்டி இழுத்து கொண்டு வாறான்).

சோமர்: அது கிடக்கட்டுண்டா தம்பி, இந்தா இந்த பால் தேத்தண்ணியை குடி என்று சொல்லி அதை பங்கிட்டு பித்தளை மூக்குப் பேணியில் இருவருக்கும் வார்த்துக் கொடுக்கிறார்.

தங்கர்: இல்லையண்ணை இவ்வளவு நாளும் நாங்கள் விசர்தனமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்திட்டம்.

சோமர்: விடுடா தம்பி, அக்கம் பக்கம் எண்டால் இதெல்லாம் சகஜம்தானே. அவ இருக்கேக்க நாங்கள் எவ்வளவு அந்நியோன்னியமாய் இருந்தனாங்கள்.

தங்கர்: ஓமண்ணை,இந்த இரண்டு வருடமாய்  கார் ஸ்டேரிங் வெட்டி வெட்டி தோள் மூட்டெல்லாம் பிடிச்சுட்டுது. அக்கா இருந்தாலாவது காலால உழக்கி விடும்.

தனம்: ஓமண்ணை, பூரணி அக்கா இருக்கேக்க ......என்று தொடங்க.....

எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடுகிறார்கள்.ஆட்டுக்குட்டியும் கயித்தை அறுத்துக் கொண்டு ஓடுது.....!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

கதியாலை காணவில்லை. 

யாழ் இணையம் 20 வது அகவைக்காக.....!

ஆக்கம் சுவி.....!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 காருக்காக   கதியால் விட்டு கொடுத்ததோ தெரியாது இருவீட்டாரின் உள்ளங்களும்  மனம் விட்டு பேசியது வரவேற்க தக்கது .. சுவியரிடம் நிறைய அனுபவ விடயங்கள்  இருக்கிறது  போலும் .  அடுத்த  தொடர் எப்போது .....????tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1980 க்கு முன்னர் கோட்டடிப் பக்கம் போனால் கூடுதலான வழக்குகள் பங்கு காணி பங்கு கிணறு பரம்பரைப் பகை.இத்தனைக்கும் அண்ணன் தம்பி நெருங்கிய உறவினராக இருப்பார்கள்.

சுவி கதையை நன்றாக நகர்த்தி சுமுகமாக முடித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலிச்சண்டை பயங்கரமாக இருந்த காலம் விரோதியாக மாறியது வெட்டு குத்தும் நிகழ்ந்தது ஆனால் த்ற்போது வேலி போட ஆட்களும் இல்லை ஆடுகளும் இல்லை 

சிறப்பு சுவியரே வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலிச்சண்டை வில்லங்கமான விவகாரமாக மாறும் என்று பார்த்தால் கண்ணுருட்டு சுகப்பட்டவுடன் சுமுகமாக தீர்ந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநேகமான ஊரிலை வேலி / கதியால் பிரச்சனை வருமெண்டால் நிலம் ரத்தத்திலை நனையாமல் அடங்காது பாருங்கோ....

 சுவியர்!

கண்ணுக்கு முலைப்பால் விடுற வைத்தியத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்....tw_blush:

எனக்கும் சிறுவயதில் ஓரிரு தடவைகள் அந்த  வைத்தியம் பார்க்கப்பட்டது.

இதை அனுபவித்த சந்ததி நமது சந்ததியாகத்தானிருக்கும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிட்னியிலும் எங்கட வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தெழுங்குக்காரர்களுக்கும், அவர்களின் வீட்டின் அருகில் இருக்கும் கிந்திக்காரர்களுக்கும் இடையில் மதில் பிரச்சனை.  மதிலுக்கு என்ன நிறத்தில் அடிக்கவேண்டும் என்பதில் பிரச்சனை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயலட்டையில் முன்னர் நடந்த வேலிச் சண்டையை எல்லாம் நினைவில் மீட்டி விட்டீர்கள் அண்ணா.

நானும் காலால தான் பிறந்தது என்று அம்மா அடிக்கடி கூறுவார். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/03/2018 at 10:37 PM, suvy said:

அண்டைக்கு பூரணி அக்கா வந்து சீலையை சிரைச்சு கொசுவத்தை இழுத்து இடுப்பில செருகிக் கொண்டுஅப்பாவை முற்றத்திலே பாயில குப்பறக் கிடத்தி உழக்கிப்போட்டு பிறகு புரட்டிப்போட்டு நேக்கா உழக்கி விட்டவ.அதோட போன நாரிப்பிடிப்புதான். அப்பாக்கு என்ன புளுகமோ

இதை வாசிக்க எனக்கே புல்லரிக்குது, தங்கருக்குஎப்படி இருந்திருக்கும் tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.