Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கக் கூண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                                           தங்கக் கூண்டு

 

     என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.

 

     என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். "அட ! உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா !" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே ! வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே !

 

     வருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா  எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் ? இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் ! கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன !

 

     வீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல்கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே !

 

     பையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான "பெண் வேலைக்குச் செல்லக் கூடாது" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். "கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.

 

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது ! 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ!), "நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், "நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே!" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், "நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா?  அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா? இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்?"

 

     அதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசைகளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே !) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ? என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது? வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ? அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ? மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ? மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும்? இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ? இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 

     இனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் ! அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

 

     வீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ ! அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு? உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். "அழாதேமா ! நீ வேண்டுமென்றா சாகடித்தாய்? அதன் விதி அவ்வளவுதான்" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். "அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்". "இல்லை, சுதா ! நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்?" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், "நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே !" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. "The sparrow has vacated its room" முனங்கினேன். மீண்டும் சுதா, "விடு எழில் ! வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்". 

 

 

                                                                                                                                                                                                                                                                      - சுப.சோமசுந்தரம் 

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் சுப. சோம சுந்தரம் யாழ் களத்துக்கு இனிய நல்வரவு . 

அரிச்சுவடியிலேயே  அழகான முற்போக்கான ஒரு சிறுகதையுடன் வந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.  கதைக்காக   வேறுபகுதி இருக்கிறது அங்கு உங்கள் பகிர்வை நகர்தினால்  நன்று அல்லது நிர்வாகத்தினரைக் கேட்கலாம்  மேலும் உங்கள் பதிவுகள்  அதிகம் வரவேண்டும் .தொடர்ந்து இணைந்து இருங்கள்.   . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நிலாமதி அவர்களுக்கு நன்றி. தங்கள் ஊக்கம் என் எழுத்துக்கு ஆக்கம் தரும். சமூகச் சாளரம் என்னும் பகுதியில் இக்கதையைப் பதிவிட அனுமதி கேட்டுள்ளேன். தங்கள் கருத்துப்படி இனி சிறுகதை எனில் 'கதை கதையாம்' பிரிவில் வெளியிடுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...சுப சோமசுந்தரம்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

சிட்டுக்குருவியின் இறப்பைப் பற்றி...அதிகம் கவலைப்படாதீர்கள்!

நாளை....அது இன்னொன்றாக உருவெடுக்கும்!

அழிந்தது அதன் சூக்கும உடல் மட்டும் தான்.....!

இன்னொரு சிட்டுக்குருவியை....அதே இடத்தில் குடியேற்றுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப சோமசுந்தரம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வரும்போதே படைப்போடு வருகிறீர்கள் 
நல்வரவு ஆகட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'யாழ்' உலகினுள்  எனக்கு நல்வரவு கூறிய மற்றும் கூறப்போகும் நல்லுள்ளங்களுக்கு பெருநன்றி. இத்தனைக் காலம் இவ்வரிய நல்லுலகத்தை அறியாத இருளில் இருந்தமைக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப. சோமசுந்தரம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வணக்கம் சுப. சோமசுந்தரம் .

வணக்கம் நவிலன். யாழில் உங்களைக் கண்டது மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வணக்கம். வாருங்கள் சோமசுந்தரம்.

வணக்கம் இணையவன். மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavallur Kanmani said:

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

நன்றி.

21 minutes ago, Kavi arunasalam said:

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

சொல்வேன். பேசுவோம்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சோமா....உங்கள் வரவு நல்வரவாகட்டும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தோழர் புத்தன் மற்றும் அபராஜிதன்.

Edited by சுப.சோமசுந்தரம்
இருவருக்கும் நன்றி சொல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2018 at 3:21 PM, suvy said:

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

 தோழர் சுவி அவர்களுக்கு நன்றி.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Quote

கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

நல்லதோர் கதை.

பழக்கவழக்கம், பண்பாடு என்று சொல்லியே பழமையைப் பேணுவது ஒரு உத்திதான். காலாவதியான பெறுமதிகளை கைவிட்டு புதியவற்றை பற்றிக்கொள்ளுவதுதான் நாகரீக முன்னேற்றமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.