Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2.0 திரை விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது.

இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும் இறந்து போகின்றனர்.

அதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் சிட்டியை மீண்டும் கொண்டு வர, சிட்டி அக்‌ஷய் குமார் திட்டங்களை முறியடித்ததா? என்பதை செம்ம மெசெஜுடனும் பிரமாண்ட காட்சிகளுடன் காட்டியுள்ளார் ஷங்கர்.

படத்தை பற்றிய அலசல்

ஷங்கர் இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலை செய்வார் போல. ஒரு படத்தில் பிரமாண்டம் இருக்கலாம், ஆனால், படமே பிரமாண்டமாக இருக்க முடியும் என்றால் அது ராஜமௌலி, ஷங்கர் என்ற ஒரு சிலருக்கே சாத்தியம்.

மொபைல், நெட்வொர்க் வளர்ச்சி நம் வாழ்வில் எத்தனை ஆபத்துகளை தருகிறது, அதை விட நம் சுற்றுச்சூழலை அது எவ்வாறு பாதிக்கின்றது, பறவையின் அழிவு, மனித இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்ற நல்லா கான்செப்டை தன் ஸ்டைலில் சொல்லி அசத்தியுள்ளார்.

அதிலும் ஏதோ விட்டாலாச்சாரியார் படத்தில் வரும் ஆவிக்கதை போல் இல்லாமல், இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாரு ஆரோ, பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று கூறி எளிதில் மக்களுக்கு புரியும் படி கூறியுள்ளார், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், லாஜிக் இல்லாத மேஜிக் தானே படமே, என்று கொண்டாடலாம்.

சரி கதை, ஷங்கர், பிரமாண்டம் இருக்கட்டும், சூப்பர் ஸ்டார் படத்தில் எப்படி என்று கேட்பது புரிகிறது, வசீகரன் கதாபாத்திரம், வாய்ஸ் மிகவும் மோசமான அதுவும் ஆங்கில வார்த்தைகளில் அத்தனை தடுமாற்றம் இருக்க, அட என்னடா இது சூப்பர் ஸ்டார் இப்படி ஆகிட்டார் என பேச, சிட்டி எண்ட்ரீ கொஞ்சம் எழுந்து உட்கார வைத்தது, அதை தொடர்ந்து 2.0 சிட்டி அதகளம் செய்ய, 3.0 சிட்டி வர தியேட்டரே கொண்டாட ஆரம்பித்துவிட்டது.

இந்த நம்பர் 1, நம்பர் 2 இந்த போட்டியில் எல்லாம் நான் இல்லை, நான் எப்போதும் ஒன்லி ஒன் என இந்த வயதிலும் பஞ்ச் அடித்து இளம் ஹீரோக்களை அலற விடுகின்றார், அக்‌ஷய் குமார் அட இவர் படத்தில் இருக்கிறாரா, இல்லையா? என்று கேட்கும் அளவிற்கு செல்ல இடைவேளைக்கு பிறகு வரும் அவரின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, வயதான கதாபாத்திரம் என்பதால் ஜெயபிரகாஷ் வாய்ஸும் அப்படியே பொருந்தி நிற்கின்றது.

எமி ஜாக்ஸன் வெறுமென வந்துபோகும் கதாபாத்திரம் தான் பெரிதாக ஒன்றுமில்லை, படத்திற்காக உழைத்த கிராபிக்ஸ் டீமை எழுந்து நின்று பாராட்டலாம், அதுவும் 3டி டெக்னாலாஜியின் டைட்டில் கார்டிலேயே நம்மை இழுத்து விடுகின்றனர், கிளைமேக்ஸில் புல்லட் பறப்பது, பறவை அருகில் வருவது என அட இது தமிழ் படம் தானா, இல்லை ஹாலிவுட் படத்திற்கு வந்துவிட்டமோ என்று எண்ண வைக்கின்றது.

இப்படி படம் முழுவதும் பிரமாண்டாம், காட்சிக்கு காட்சி ஆச்சரியம் என்று இருந்தாலும், ஷங்கரின் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள் மாறவே இல்லை, அதாவது வித்தியாசமாக ஒருவரை கொலை செய்வதில் அவருக்கு அப்படி என்ன ஆசையோ, இந்தியன், அந்நியன், ஐ-யை தொடர்ந்து இதிலும் தொடர்கின்றது. அதுமட்டுமின்றி ஏதோ பொட்டிக்கட்டைக்கு போய் டீ வாங்கிட்டு வருவது போல் அசால்ட்டாக தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி கூடத்திற்கு செல்வது எல்லாம் உச்சக்கட்ட லாஜிக் மீறல்.

படத்தின் டெக்னிக்கல் டீமிற்கு அடுத்த வருடம் அனைத்து விருதுகளும் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை, முத்துராஜின் கலை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன்ஜினியரிங், நீரவ்ஷோவாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங், எல்லாத்திற்கும் மேலாக ரகுமானின் பின்னணி இசை என அனைத்தும் தரம்.

க்ளாப்ஸ்

படத்தின் கதை, திரைக்கதை ஐ படத்தில் விட்டதை இதில் பிடித்துவிட்டார் ஷங்கர்.

படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிக்கல் டீம்.

பிறகு என்ன சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ஸ்டைலில் விளையாண்டுள்ளார். அக்‌ஷய் குமார் கஷடமான மேக்கப் போட்டும் அவர் காட்டிய மிரட்டல் எக்‌ஷ்பிரஷன்

படத்தில் வரும் குட்டி குட்டி வசனம், மனுஷனுக்கு தற்போது தேவை டிவி, சினிமா, சாப்பாடு, மொபைல், நாலும் பேருக்கு நல்லதுனு எதுவுமே தப்பில்லை என்று ரஜினியிடமே ரோபோ சொல்வது என சுவாரஸ்யம் தான்.

பல்ப்ஸ்

படத்தில் எல்லையற்ற லாஜிக் மீறல்கள், சூப்பர் ஹீரோ படம் மன்னித்து விடலாம் என்றாலும், ப்ரோபசர் போரோ மகன் நெகட்டிவ் எனர்ஜியை வெளியே விடும் காட்சியெல்லாம் காதில் பூ சுற்றல் தான்.

அக்‌ஷய் குமார் கதாபாத்திரம் அத்தனை கொடூரமாக காட்டிவிட்டு ப்ளாஷ்பேக்கில் அவரை அவ்வளவு சாதுவாக காட்டுவது கொஞ்சம் முரண்.

மொத்தத்தில் படம் முடிந்ததும் மொபலை எடுக்கலாமா வேண்டாமா என்ற ஒரு வகை எண்ணத்தை நமக்கே தோன்ற வைத்த ஷங்கரின் இந்த பாசிட்டிவ் எனர்ஜியே 2.0 விட 3.0 மீது எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கின்றது.

https://www.cineulagam.com/films/05/100979?ref=imp-news

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2.0 Review: 2.0 திரை விமர்சனம்

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2.0 படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இதன் கதைக் கரு. தனது வாழ்வை சீரழித்த மக்களை, தனி ஒரு ஆளாக நின்று பழிவாங்குவதே ஆகும். 

இப்படத்தின் கதை ஒரு பகுதி சயின்டிபிக் திரில்லராகவும், ஒரு பகுதி ஹாரர் ஆகவும், ஒரு பகுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு முதியவர் செல்போன் டவரில் தூக்கிட்டு தொங்கும் காட்சியுடன் தொடங்குகிறது. 

அதன் பிறகு விஞ்ஞானி வசீகரன் அறிமுகம் ஆகிறார். அவருடைய உதவியாளராக நிலா என்கிற மனித வடிவிலான ரோபோவும் அறிமுகம் ஆகிறது. இதற்கடுத்த காட்சியில் ஒவ்வொருவர் கையில் இருக்கும் மொபைல் போன்களும் வான் நோக்கி ஈர்க்கப்படுகின்றன. 

இந்த விபரீத நிகழ்வு குறித்து விசாரிக்க, விஞ்ஞானி வசீகரன் அழைக்கப்படுகிறார். அப்போது, பிரச்சனையை தீர்க்க ஏற்கனவே பிரித்து அழிக்கப்பட்ட சிட்டி ரோபோவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். 

இதன்பிறகு உருவாக்கப்படும் சிட்டி ரோபோ, அக்‌ஷய்குமாரை எதிர்க்கிறது. அதன் அழிவுகளை தடுத்து நிறுத்துகிறது. இடைவெளிக்கும் பின்னர் வரும் பிளாஷ்பேக்கில் அக்‌ஷய்குமார் யார் என்று தெரிய வருகிறது. பறவையியல் வல்லுநராக இருக்கும் அவர், செல்போன் பயன்பாட்டால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வருகிறது என சில நடவடிக்கைகளை எடுக்கிறார். 

ஆனால் அவரது கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் ஆவியாக மாறி, பறவைகள் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி, தன்னை எதிர்த்தவர்களை கொன்று அழிக்கிறார். அதன் பிறகே சிட்டி ரோபோ உருவாக்கப்பட்டு, அக்‌ஷய்குமார் அக்கிரமங்களை அழிக்கப் போராடுகிறது. இதில் சிட்டி வெற்றி கண்டதா? இல்லையா? என்பதே கிளைமேக்ஸ் ஆகும். 

வானில் பறக்கும் செல்போன்கள் காட்சி, வனப்பகுதி முழுவதும் செல்போன்களால் ஒளிரும் காட்சி, ராட்சத பறவை திரையில் வரும் காட்சி உள்ளிட்டவை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

இப்படத்தின் காட்சிகளில் ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, கோஸ்ட்பஸ்டர்ஸ் உள்ளிட்ட சில ஆங்கில படங்களின் சாயல் இருக்கிறது. முதல் பாதி ஒரு பேய் படம் போல் நீள்கிறது. சிட்டி ரோபோ அறிமுகமான பிறகு, படம் வேகம் கூடுகிறது. 

சிட்டிக்கும், ராட்சத பறவைக்கும் இடையிலான சண்டை காட்சிகள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

முதல் பாதி முழுவதும் பக்‌ஷிராஜன்(அக்‌ஷய் குமார்) பிளாஷ் பேக் குறித்த ஆவல் ஏற்படுகிறது. அந்த பிளாஷ் பேக் கதையானது, ஷங்கரின் முந்தைய படங்களான இந்தியன், ஜென்டில்மேன் ஆகியவற்றின் பிளாஷ் பேக் காட்சிகளைப் போன்று மனதை உருக்கும் வகையில் இல்லை. 

கிளைமேக்ஸில் 2.0 மற்றும் பக்‌ஷிராஜன் மோதும் காட்சிகள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. இவை தொடர்பான காட்சிகள் டிரைலரிலேயே பார்த்திருப்போம். இருப்பினும் அதையும் தாண்டி சில ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன. 

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு தமிழ் படத்தை ஷங்கர் உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இப்படத்தில் முக்கியமான ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த உலகம் மனிதர்களுக்காக மட்டுமல்ல. பிற உயிரினங்களுக்கும் தான் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் உணரும்படியாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/robot-2-point-0-tamil-movie-review-rating/moviereview/66858160.cms

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: 2.0

உதிரன்சென்னை
20-movie-stills-2JPGjfif

சென்னை மாநகரில் ஒரே நாளில் ஒரே சமயத்தில் செல்போன்கள் மாயமானால் அதற்கான காரணத்தை ஒரு விஞ்ஞானி கண்டறிந்து, பிரச்சினைகளைத் தீர்த்தால் அதுவே '2.0'. 

சென்னையில் திடீரென்று  எல்லோருடைய செல்போன்களும் காணாமல் போகின்றன. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என்று அனைவரும் செல்போனை இழந்து தவிக்கிறார்கள். இதற்குக் காரணம் தீவிரவாதிகளின் சதியா, வேற்றுகிரக வாசிகளின் நடமாட்டமா என்பது தெரியாமல் அரசு குழம்புகிறது. முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட, விஞ்ஞானி வசீகரன் (ரஜினிகாந்த்) அதில் கலந்துகொள்கிறார்.  செல்போன் கடை வைத்திருக்கும் முதலாளியும், ஒரு தொழிலதிபரும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் அடுத்தடுத்து பலியாகின்றனர். இதற்கு செல்போனே காரணமாகிறது. இந்த நிலையில் விஞ்ஞானி ரஜினிகாந்த் பொதுமக்களின் உயிரை எப்படிக் காப்பாற்றுகிறார், அரசு என்ன செய்கிறது, எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார் போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் சொல்கிறது திரைக்கதை. 

3டி தொழில்நுட்பத்தில் தமிழில் இப்படி ஒரு படமா? என  விழிகளை விரிய வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். டைட்டிலில் தொடங்கும் அவரது ராஜ்ஜியம் படம் முடியும் வரை இமைக்காமல் ரசிக்க வைக்கிறது. கமர்ஷியல், பிரம்மாண்டம், தொழில்நுட்பம், திரைக்கதை என்று எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் ரசிகர்களை திருப்திப்படுத்திய விதத்தில் கச்சிதமான இயக்குநராய் ஈர்க்கிறார். 

20-movie-stills-9JPGjfif

 

விஞ்ஞானி வசீகரன், சிட்டி 1.0, சிட்டி 2.0, குட்டி 3.0 என்று நான்கு விதமான தோற்றங்களில் ரஜினி வசீகரிக்கிறார்.  அதுவும் சிட்டி 2.0, குட்டி 3.0 ரஜினியின் நடிப்பு அட்டகாசம்.  ''இந்த நம்பர் ஒன் நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு, எப்பவும் நான் தான் நம்பர் ஒன்'', ''ஓடிப்போறது என் சாஃப்ட்வேர்லயே கிடையாது'', ''அய்யோ சார் நீங்களா, இந்தா வாங்கிக்கோ'' என்று சிட்டி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் வசனம் பேசி அப்ளாஸ்களை அள்ளுகிறார். குட்டி 3.0 ஆக திரையில் குழந்தைக்கே உரிய குதூகலத்துடன் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்து ரஜினி ஆச்சரியப்படுத்துகிறார்.  முரட்டு குணம் கொண்ட கதாபாத்திரம் என்றால் ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போல என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார். 

 

பட்சி ராஜனாக அக்‌ஷய் குமார் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். வருத்த வடுக்களைச் சுமந்தபடி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அக்‌ஷய் குமார் அதற்குப் பிறகு வெடிப்பது வேற லெவல். 

20-movie-stills-6JPGjfif

 

எமி ஜாக்ஸன் கதாநாயகிக்கான பங்களிப்பை நிறைவாகச் செய்கிறார். கதை நகர்த்தலுக்கான முக்கியக் கருவியாகவும் இயங்குகிறார். ''வட போச்சே'', ''நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல'', ''காதலுக்கு மரியாதை'' என்று டைமிங்கில் அவர் அடிக்கும் பன்ச்களுக்கு தியேட்டரில் சிரிப்புச் சத்தம் அதிகம் கேட்கிறது. 

அமைச்சராக வரும் கலாபவன் ஷாஜோன், அமைச்சர் பி.ஏ.வாக வரும் மயில்சாமி, விஞ்ஞானி போராவின்மகனாக வரும் சுதான்ஷு பாண்டே, ரோபோவைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி வழங்கும் அமைச்சர் அடில் ஹுசேன், செல்போன் கடை முதலாளியாக வரும் ஐசரி கணேஷ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். 

நீரவ் ஷாவின் கேமரா படம் முழுக்க ஜாலம் செய்திருக்கிறது. அதில் நம்மையும் இரண்டறக் கலந்துபோகச் செய்கிறார். ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்துக்கான பில்ட் அப் காட்சிகளிலும் ரஹ்மான் அடக்கி வாசித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. 

ஜெயமோகன், ஷங்கரின் வசனங்களும், கார்க்கியின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. 

29MPrajini2001jpgjfif

செல்போன்கள் எல்லாம் காணாமல் போனால் என்ன ஆகும் என்று யோசிப்பதும், அதைச் சொல்வதும் சுலபம்தான். ஆனால், அதை பிரச்சினைக்குரிய அம்சமாகக் காட்சிப்படுத்தி வெகுஜன மக்களுடன் தொடர்புபடுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அதை சர்வசாதாரணமாக திரையில் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.  செல்போன் பறக்குமா? என்று கேள்வி கேட்டு லாஜிக் எதிர்பார்த்தால் படத்தின் மேஜிக்கை ரசிக்க முடியாது.  ஆனால், செல்போன் பறப்பது, சூறாவளியாவது, புயலாகக் கிளம்புவது, பாம்பைப் போல ஊர்வது, சாலை முழுக்கப் பரவி நிற்பது, நீர்வீழ்ச்சியைப் போல அசரடித்து அதிர்ச்சி காட்டுவது என அத்தனை விதங்களிலும் ஆங்கிலப் படங்களைப் போன்று தரமான 3டி தொழில்நுட்பத்தில் தந்து அசத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. 

அக்‌ஷய் குமார் ஏன் அப்படி ஒரு முடிவை எடுக்கிறார், அவர் வேறு மாதிரியான பாடம் கற்பித்திருக்கலாமே, சுதான்ஷு பாண்டேவால் அவ்வளவு எளிதாக வசீகரன் ரஜினியின் கோட்டைக்குள் நுழைந்து அழிக்கப்பட்ட ஒன்றை மறு உருவாக்கம் செய்ய முடியுமா, ஹீரோ - வில்லன் என இருவருக்குள் நடக்கும் மோதல் மட்டும்தான் படத்தின் பிரதான அம்சமா என்று படத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. ஆனால், இவற்றை மறக்கடிக்கச் செய்து 2.30 மணி நேரப் படத்தை முழுக்க ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சூழலியல் சார்ந்த அவரது அக்கறையும் வரவேற்கத்தக்கது.

ஒரு முறை பார்த்த ரசிகர்கள் மறுமுறை திரும்பியும் விரும்பியும் பார்க்கும் அளவுக்கு '2.0' படத்தைக் கொடுத்து '3.0' படத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும் விதத்தில் கேப்டன் ஆஃப் தி ஷிப்பாக இயக்குநருக்கான பொறுப்பை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் ஷங்கர்.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25621327.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

2.0 : சினிமா விமர்சனம் #2Point0Review

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
திரைப்படம் 2.0
   
நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், மயில்சாமி, சுதான்ஷு பாண்டே
   
இசை ஏ.ஆர்.ரஹ்மான்
   
ஒளிப்பதிவு நீரவ் ஷா
   
இயக்கம் ஷங்கர்
   
2.0படத்தின் காப்புரிமை 2.0/Facebook

2010ல் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் பின்னணியை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம். அதாவது விஞ்ஞானி வசீகரன் மற்றும் அவரது கண்டுபிடிப்பான 'சிட்டி' ரோபோவின் அடுத்த சாகசம்.

பறவையியல் நிபுணரான டாக்டர் பக்ஷிராஜன் (அக்ஷய் குமார்) செல்போன்களாலும் அதற்காக அமைக்கப்படும் டவர்களாலும் உருவாகும் கதிர்வீச்சுகளால் பறவைகள் பாதிக்கப்படுவதைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப் போராடுகிறார். ஆனால், அது நடக்காமல் போக, ஒரு செல்போன் டவரில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

இதற்கிடையில், நகர் முழுவதும் செல்போன்கள் பறிக்கப்படுகின்றன. யார் பறிப்பது, பறிக்கப்பட்ட செல்போன்கள் எங்கே செல்கின்றன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே, கோரமான கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதையடுத்து டாக்டர் வசீகரனை (ரஜினிகாந்த்) அரசு உதவிக்கு அழைக்க, அவர் தன் முந்தைய கண்டுபிடிப்பான 'சிட்டி' வந்தால்தான் இதை எதிர்கொள்ள முடியும் என்கிறார். இதையடுத்து சிட்டி மீண்டும் உருவாக்கப்படுகிறது.

தற்கொலைசெய்துகொண்ட பக்ஷிராஜன்தான், இம்மாதிரி செல்போன்களைப் பறித்து, கொலைகளைச் செய்கிறார் என்பதும் தெரிகிறது. இதையடுத்து சிட்டியும் பக்ஷிராஜனும் மோதுகிறார்கள்.

ரொம்பவும் எளிய கதை. இந்தத் திரைக்கதையில் ஓரளவுக்கு மேல் திருப்பு முனைகளோ, சஸ்பென்ஸோ இருக்க முடியாது. ஏன், சுத்தமாக அப்படி ஏதும் இல்லை என்றே சொல்லலாம். கதாநாயகியும் ஒரு ரோபோ என்பதால் காதல், குடும்பம் போன்ற சென்டிமென்ட் காட்சிகளும் இல்லை. ஆகவே, படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை நம்பியே நகர வேண்டிய கட்டாயம். ஆனால், கிராஃபிக்ஸில் நடக்கும் அந்த ஆக்ஷன் காட்சிகளை எவ்வளவு நேரத்திற்கு ரசிக்க முடியும்?

2.0/Facebookபடத்தின் காப்புரிமை 2.0/Facebook

ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் என இரண்டே முக்கிய பாத்திரங்கள்தான். இதில் பெரும்பாலும் அக்ஷய் குமார் பறவையாக வருகிறார். ரஜினிகாந்த் பெரும்பாலும் ரோபோவாக வருகிறார். இதனால், இந்த இருவரில் யாருடனும் ஒட்ட முடியாமல், சண்டைக் காட்சிகளை மட்டும் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்டர் பக்ஷிராஜன் இவ்வளவு பெரிய வில்லனாக மாறுவதற்குப் பின்னாலிருக்கும் கதையாக சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் அவ்வளவு உணர்ச்சிகரமாக இல்லை. ஆகவே, கதையோடு சுத்தமாக ஒன்ற முடியவில்லை.

பல காட்சிகள் எந்திரன் படத்தையும் அந்நியன் (குறிப்பாக ஸ்டேடியத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சி) படத்தையும் நினைவுபடுத்துகின்றன.

தவிர, இறந்த மனிதனின் ஆவி, பேய் போன்றவற்றுக்குப் பதிலாக, அதற்கு அறிவியல் விளக்கம் கொடுப்பதாகச் சொல்லி, ஆரா, மைக்ரோ - ஃபோட்டோன்ஸ் என்றெல்லாம் அதை விளக்குவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2.0படத்தின் காப்புரிமை 2.0/Facebook

முந்தைய படத்தில் வரும் டாக்டர் போராவின் மகனாக ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது பாத்திரமும் முழுமையாகாமல் சென்றுவிடுகிறது.

படத்தின் பிற்பாதியில் சிட்டி முழுமையாக பக்ஷிராஜனுடன் சண்டைபோட களத்தில் இறங்கும்போதுதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால், அதற்குள் முக்கால்வாசிப் படத்தைப் பார்த்து சோர்ந்துபோயிருப்பதால், இந்த ஆக்ஷன் காட்சிகள் பெரிய விறுவிறுப்பை ஏற்படுத்துவதில்லை.

வசனம், நகைச்சுவை, பஞ்ச், ரசனை எதுவும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் தட்டையான வசனங்கள், படத்தின் மற்றுமொரு பலவீனம்.

படத்தின் நாயகன் ரஜினிகாந்த்துக்கு இது மற்றொரு குறிப்பிடத்தக்க படமல்ல. மிகச் சாதாரணமாக அறிமுகமாவதிலிருந்து முற்பாதி முழுக்க ரொம்பவுமே அடக்கிவாசிக்கிறார். ரஜினியிடம் சாதாரணமாக தென்படும் உற்சாகமும் துள்ளலும்கூட இதில் இல்லை. ஆனால், பிற்பாதியில் சிட்டியாக வரும்போது சில காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். அந்தக் காட்சிகளைவிட்டுவிட்டால், இந்தப் படத்தில் எதற்கு ரஜினி என்றுதான் கேட்கத் தோன்றும்.

2.0படத்தின் காப்புரிமை 2.0/Facebook

வில்லனாக வரும் அக்ஷய்குமார் படம் நெடுக கிராஃபிக்ஸ் பறவையாக வருவதால், அவரது நடிப்பைப் பற்றி ஏதும் சொல்ல முடியாது. ஆனால், ஃப்ளாஷ் - பேக் காட்சியில் வரும் அக்ஷய் குமார் பரவாயில்லை.

கதாநாயகி எமி ஜாக்சனுக்கு ரோபோ வேடம். அந்த வேடத்தில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

என்ன செய்துவிட முடியும்?

2.0படத்தின் காப்புரிமை 2.0/Facebook

'புள்ளினங்காள்', 'எந்திரலோகத்து சுந்தரியே' என இரண்டே பாடல்கள். அதிலும் ஓரு பாடல், படம் முடிந்த பிறகுதான் வருகிறது. இவற்றைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.

படத்தின் தொழில்நுட்ப அணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. குறிப்பாக படத்தின் துவக்கத்தில் பங்களித்தவர்களின் பெயர்கள் திரையில் வரும் காட்சிகள் அட்டகாசம். சில காட்சிகளில் கிராஃபிக்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும், பல இடங்களில் அசத்துகிறது.

ஆக்ஷன் காட்சிகளுக்காக குழந்தைகள் இந்தப் படத்தை ரசிக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-46381788

  • கருத்துக்கள உறவுகள்

அக்சய்குமாருக்காய் இந்தப் படத்தை பார்க்க விருப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

பக்ஷிராஜன்

a

அன்புள்ள ஜெ

2.0 படத்தில் வில்லனுக்கு எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் பெயரை வைத்துவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு வம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டது. சர்க்காரில் சுந்தர ராமசாமி பெயர் தற்செயல்தான், உங்கள் பங்களிப்பு இல்லை என்று சொன்னீர்கள். இதற்கும் ஒரு விளக்கம் சொல்லிவிடுங்கள்.

கூடவே சொல்லிவிடுகிறேன். படம் அற்புதமான அனுபவம். சந்தேகமில்லாமல் இதுவரை இந்தியாவில் வந்த படங்களிலேயே பெரிய பிளாக்பஸ்டர் இதுதான். வெறும் கிராஃபிக்ஸ் மூவி என்றே விளம்பரங்களில் காட்டி தியேட்டருக்கு சென்றபின் உணர்ச்சிமிக்க ஒரு படத்தைக் காட்டி அசரவைத்தது அற்புதமான தந்திரம்

கே.செந்தில்குமார்

பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன்

அன்புள்ள செந்தில்,

அ. படத்தில் பக்ஷிராஜன் என்று பெயர் வைத்தது நான்தான்.

ஆ. பக்ஷிராஜன் என்பது பி.ஏ.கிருஷ்ணைன் பெயர் அல்ல, அவர் அப்பாவின்பெயர். நான்குநேரி பக்ஷிராஜ அய்யங்கார் ஒரு கம்பராமாயண-நாலாயிரத் திவ்யப்பிரபந்த அறிஞர், வழக்கறிஞர். கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பின் ஆசிரியர்குழுவில் இருந்தவர். ராஜாஜியின் நண்பர்

இ. பக்ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சம்ஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார்

jatayu_mystical_bird

ஜடாயு சிலை[பக்ஷிராஜன் அல்லது பறவைக்கரசன்]

ஈ. அந்தப் பெயர் ’வில்லனு’க்கு வைக்கப்படவில்லை. படத்தில் அவர் வில்லன் அல்ல. அவர்தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம், படத்தின் ஆன்மா என்னும் கருத்து அவர் வழியாகவே சொல்லப்படுகிறது

உ.அது பறவையியல்நிபுணர் சலிம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம்.சலிம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது

2 point 0 main_0

ஊ. அந்தக்கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபுசார்ந்த பலவிஷயங்கள் அவருக்காக சேர்க்கப்பட்டன.

எ. அது ஏன் பக்ஷிராஜன்? நம் மரபில் பறவையின் இடமென்ன என்று அந்தப்பெயரே சுட்டுகிறது. ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!” என்ற நம்மாழ்வாரின் வரியே அந்தக் கதாபாத்திரத்தை, பக்ஷிராஜன் என்றபெயரை உருவாக்கியது

Salim Ali

ஏ.அவருடைய வரியை அடிக்கோடிட்டுத்தான் படம் முடிகிறது. ஆகவே என் பெருமதிப்பிற்குரிய நான்குனேரியின் அறிஞரையும், பறக்கையின் தெய்வத்தையும், நம்மாழ்வாரையும் கௌரவப்படுத்தியதாகவே நினைத்துக்கொள்கிறேன்.

ஒ.ஏன் ஜடாயு என்ற பொருளில் பக்ஷிராஜன் என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது என படம் பார்த்தால், அல்லது அக்ஷய்குமாரின் தோற்றங்களைப்பார்த்தாலே புரியும்.

பி.ஏ.கிருஷ்ணனே கூப்பிட்டு அவரிடம் சிலர் மெயில் அனுப்பி அவர் தந்தைபெயரை பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டியதாகச் சொன்னார். விரிவாகவே  விளக்கிவிட்டேன்

ஜெ

 

 

https://www.jeyamohan.in/115652#.XABTrC-nxR4

  • கருத்துக்கள உறவுகள்

2வது நாளே காற்று வாங்கும் தியேட்டர்கள்: இது என்னடா 2.0 படத்திற்கு வந்த சோதனை?

சென்னை: 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் பல இடங்களில் ஈயாடுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் அசத்தலாக நடித்துள்ள 2.0 படம் நேற்று ரிலீஸானது. 2.0 படத்தை பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை. அதற்குள் 2.0 மவுசு அடங்கிவிட்டதா என்ற கேள்வி எழும் வகையில் உள்ளது தியேட்டர்களின் நிலை.

2.0 ரிலீஸான நேற்றே பல தியேட்டர்களில் சீட்டுகள் காலியாக இருந்தது. ஷங்கர் படம் அதுவும் ரஜினி படத்திற்கு இந்த நிலையா என்று வியக்க வைத்தது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று 2.0 டிக்கெட் தாராளமாக கிடைக்கிறது. காரணம் பல தியேட்டர்கள் காற்று வாங்கத் துவங்கிவிட்டடன.

Read more at: https://tamil.filmibeat.com/news/omg-the-fate-2-0-is-shocking-057129.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

2.O: தொழில்நுட்பம் மட்டும் போதுமா?

38.jpg

விமர்சனம்: 2.O

அன்றாடம் பிரச்சினைகளிலும் துன்பங்களிலும் உழலும் மனித மனம் அதிலிருந்து மீள அற்புதங்களுக்கு ஏங்கும். அந்தத் துயரங்களிலிருந்து விடுபட அந்த ஏக்கங்கள்தான் பகல் கனவுகளாக (day dreaming) மாறும். அந்தக் கனவுகள் சில சமயம் கற்பனைகளாக (fantasy) மாறுகின்றன. இதனால் அற்புதங்கள், அதிசய சக்திகள், மனித சக்தியை மீறிய சக்திகள் ஆகியவற்றைக் கலை இலக்கியங்களில் சினிமாக்களில் ரசிக்கிறோம். ரஜினி என்ற பிம்பம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் எப்போதும் ஓர் அதிசயத்தை நிகழ்த்தும் கதாநாயகனாகவே பதியப்பட்டுள்ளதால் இத்தகைய கதைகளில் அவர் நடிக்கும்போது அதற்கான வரவேற்பு அதிகம் இருக்கும். எந்திரன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு அதை உறுதிப்படுத்தியது. இரண்டாம் பாகமான 2.O திரைப்படத்துக்கு அதனாலேயே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா என்பதை அலச வேண்டியது அவசியமாகிறது.

மாயமாய் மறைந்துபோகும் லட்சக்கணக்கான மொபைல்போன்கள் ஒன்றிணைந்து பறவை மனிதனாக உருபெறுகிறது. நகரை அழிக்க வரும் அந்தப் பறவை மனிதனைச் சமாளிக்க முடியாமல் ஒட்டிமொத்த அரசாங்கமே தவிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த மக்களைக் காப்பாற்ற வசீகரன் சிட்டி ரோபோட்டை மீண்டும் களமிறக்க வேண்டும் என்கிறார். அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்தால்தான் அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பறவை மனிதனை சிட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததா, பறவை மனிதன் உருவான காரணம் என்ன என்ற கேள்விகளோடு திரைக்கதை பயணிக்கிறது.

38a.jpg

படத்தின் டீசரிலேயே படக்குழுவினர் வெளிப்படுத்திவிட்ட கதை முதல் பாதி முழுக்க வெவ்வேறு காட்சிகளின் மூலம் கூறப்பட்டுக்கொண்டே உள்ளது. கண்கவரும் விதத்தில் அனிமேஷன் காட்சிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறதே தவிர திரைக்கதையில் படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் தேங்கிவிடுகிறது. இதனால் பார்த்த காட்சிகளைத் திரும்ப பார்க்கிறோமோ என்ற உணர்வு ஏற்படுகிறது.

அக்‌ஷய் குமார் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ரெட் சிப் மாட்டப்பட்ட சிட்டியும், குட்டி சிட்டியும் உடல்மொழியால் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள். முதல் பாகத்தில் வசீகரனுக்கும் சிட்டிக்குமான மோதல் மிகுந்த வரவேற்பு பெற்றது. வில்லன் தன்மையுடன் சிட்டி செய்த அட்டகாசங்கள் ரசிக்க வைத்தன. இந்தப் பாகத்தில் வசீகரன் வில்லன் கதாபாத்திரமாக மாறி, சிட்டியுடன் மோதும் இடம் வருகிறது. சுவாரஸ்யமாகச் சென்ற அந்த ஒரு காட்சியுடன் அது முடிவடைந்துவிடுகிறது.

கதாநாயகி வேண்டும் என்பதற்காக ஏமி ஜாக்சனை ரோபோவாக மாற்றி உலவ விட்டுள்ளனரோ என்ற சந்தேகம் வந்தாலும் முக்கியமான கட்டத்தில் அவரது பங்களிப்பு அவரது இருப்பை உறுதி செய்கிறது.

38b.jpg

மனித ஆவி, பறவைகளின் ஆவி இரண்டும் இணைந்து மொபைல்களுடன் சேர்ந்து மனிதர்களை அழிப்பதாக இயக்குநர் ஷங்கர் கதை சொல்கிறார். ஆனால், நவீன தொழில்நுட்பம் என்று கூறிவிட்டு ஆவி, அனுமானுஷ்ய சக்தி என்றால் சிரித்து விடுவார்கள் என்பதால் அதை நுட்பமாக மறைத்து விடுகிறார். இது செல்போன் ஆவி கதைதான். அதற்குப் பறவைகள் காப்பாற்றப்பட்டால்தான் மனித குலம் காப்பாற்றப்படும் என்று நீதி போதனை சொல்கிறார். இதற்கு இவ்வளவு பிரமாண்டமாக அம்மி கொத்துதல் தேவையில்லை. ஆனால், பொதுவாக அனுமாஷ்ய சக்தி ஆவி கதைகள் என்றால் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அதுவும் இந்தப் படத்தில் கைகூடவில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிராபிக்ஸ் உருவாக்கத்தில் பணியாற்றியிருந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாததால், க்ளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் உட்பட பல காட்சிகளில் உணர்வுபூர்வமாக ஒன்றமுடியாமல் வெறுமனே இரு பொம்மைகள் மோதிக்கொள்வதைப் பார்க்கும் உணர்வே மேலிடுகிறது. ரஜினி என்ற மாபெரும் கதாநாயக பிம்பத்துக்கான மாஸ் படத்தில் எந்தக் காட்சியிலும் இல்லை.

ரஹ்மான் இசையில் புல்லினங்காள் பாடல் கவனம் ஈர்க்கிறது. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, முத்துராஜின் கலை இயக்கம், அந்தோணியின் படத்தொகுப்பு மற்றும் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் கிராபிக்ஸ் பணிகள் என தொழில்நுட்ப ரீதியாகப் படம் தரமாக உருவாகியிருந்தாலும் இவை அத்தனையையும் இணைக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததால் முழுமையான திரைப்பட அனுபவத்தைப் பெற முடியவில்லை.

38c.jpg

இதெல்லாம் ஒரு தப்பா என்று சாதாரணமாக கடந்து போகும் விஷயங்களின் பின்னால் உள்ள மிகப் பெரும் தவறு சமூகத்தில் பெரிய அழிவை ஏற்படுத்தும். அதைக் கண்டு வருந்தும் பாமரனான படத்தின் நாயகன் அதைத் தடுக்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்து சமூகத்தை திருத்தப் போராடுவான். அதனால் பொது சமூகத்தால் இளக்காரமாகப் பார்க்கப்படும் அவன் தன் முயற்சியில் தோற்றுப்போவான். ஒரு கட்டத்தில் அடக்கிவைக்கப்பட்ட அவனது கோபங்கள் அவனை அசாதாரண உருவெடுக்க வைக்கும். வெகுண்டெழுந்து கற்பனைக்கெட்டாத குரூரத்துடன் குற்றமிழைப்பவர்களை பழிதீர்ப்பான். இந்தியன், அந்நியன் என ஷங்கரின் படங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.

நடைமுறை சாத்தியமற்ற, கொடூரக் கொலை ஒன்றே தீர்வு என்ற பொய்யான முடிவை முன்வைப்பதுகூட இதற்கெல்லாம் தீர்வே இல்லை என்று சொல்லாமல் சொல்வதாகும். திரைக்கு வெளியே இந்தப் பிரச்சினைகளை எல்லாம் பேசி பிரயோஜனமில்லை என்று சாதாரண பார்வையாளன் உணர்ந்துகொண்டு பொய்யாக அதை நிகழ்த்திக்காட்டுகிற கதாநாயகனின் செய்கைக்குக் கைதட்டி மகிழ்வான். ஷங்கரின் டிரேட் மார்க்கான இந்த ‘நாயக’ அம்சம் தான் 2.O படத்தின் வில்லனுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது வெற்றிக்கு வழிவகுத்த இந்தப் பாணி எவ்வளவு மோசமான தன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது என்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஷங்கர் உணர்ந்துகொண்டாரோ என்னவோ, தனது நாயகனை ரஜினிக்கு வில்லனாக நிறுத்தி தண்டனை பெற்றுத்தருகிறார். 2.O படத்தை முன்னிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்ட ஷங்கரை இதற்காகக் கட்டாயம் பாராட்டலாம்.

 

 

https://minnambalam.com/k/2018/11/30/38

  • கருத்துக்கள உறவுகள்


கோச்சடையான் போலவே, ரஜனி என்னும் மாஸ் விம்பத்தினை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு, இது ரஜனி  படமில்லை, சங்கர் படம் என்று தெரிந்தவுடன் தியேட்டர் கூட்டம் இல்லாமல் போய் விட்டது .  

ரஜனி விம்பம் வேறு.... கோச்சடையான் ரிசல்ட் இல் இருந்து பாடம் கற்க வில்லை.

நவீன தொழில் நுட்பத்தினை, யதார்த்தம் இல்லா கற்பனைக்கு பயன் படுத்தும் போது இதுவே நிகழும்.

கொலிவுட்  படங்களில் கதாநாயகன், அதீத சக்தி கொண்ட வில்லனை வீழ்த்துவதாகவே அமைத்து இருப்பார்கள். இங்கே இருவரும் அதீத சக்தி கொண்டவர்களாக உள்ளனர் போல் உள்ளது. (படம் இன்னும் பார்க்கவில்லை, இனி தியேட்டர் இல் பார்க்கும் ஐடியா இல்லை.)
 

இந்தியாவில் வெளியான முதல் நாள் அதிக வசூல் கொடுத்த திரைப்படங்களில் 2.0 இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கு. முதல் இடத்தை பாகுபலி 2  தொடர்ந்து தக்க தைத்துக் கொண்டு இருக்கு.

நான் இப்படம் வெல்ல வேண்டும் என விரும்புகின்றேன். லைகா மீது பல விமர்சனங்கள் இருப்பினும் (மகிந்தவுடன் குலாவியது அதில் ஒன்று; ஆனால் புலம் பெயர் பெரும் தேசிய தூண்கள் கூட திரைமறைவில் மகிந்தவுடன் கைகுலுக்கி தம் வர்த்தக விடயங்களை முன்னெடுத்து இருந்தனர்) லைகா போட்ட பணத்தையாவது பெற வேண்டும் என விரும்புகின்றேன். எம் சமூகத்தில் இருந்து ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக அவர்கள் வளர வேண்டும்.

ஈழ தமிழர் ஒருவரின் முதலீட்டில் தமிழக தமிழர் சங்கரின் இயக்கத்தில் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும் ஒரு படம் வெல்வதை வெறுக்க எனக்கு காரணங்கள் எதுவும் இல்லை. அத்துடன் ரஜனியை ஒரு நடிகராக மிக மிக பிடிக்கும் என்பதும் இன்னொரு காரணம். இப்பவும் எப்பவும் என் விருப்புக்குரிய நடிகர் என்றால் ரஜனிதான்.

அதிக கூட்டம் இருப்பதால் இவ் வாரம் நான் 2.0 இனை பார்க்க போவதாக இல்லை. ஆனால் கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்ப்பேன்

தென் மாநில படங்கள் வடக்கிலும் முக்கியத்துவம் பெறுவதை பல வடக்கை சேர்ந்த பல ஊடகங்களுக்கு பொறுக்க முடியுது இல்லை. ஹிந்தி ஆட்களை கொண்ட ஊடகங்கள் 2.0 இன் மீது வெறுப்பை உமிழ்வதையும் காணக் கூடியதாக இருக்கு. NDTV யின் விமர்சனத்தை பார்த்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

இந்தியாவில் வெளியான முதல் நாள் அதிக வசூல் கொடுத்த திரைப்படங்களில் 2.0 இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கு. முதல் இடத்தை பாகுபலி 2  தொடர்ந்து தக்க தைத்துக் கொண்டு இருக்கு.

நான் இப்படம் வெல்ல வேண்டும் என விரும்புகின்றேன். லைகா மீது பல விமர்சனங்கள் இருப்பினும் (மகிந்தவுடன் குலாவியது அதில் ஒன்று; ஆனால் புலம் பெயர் பெரும் தேசிய தூண்கள் கூட திரைமறைவில் மகிந்தவுடன் கைகுலுக்கி தம் வர்த்தக விடயங்களை முன்னெடுத்து இருந்தனர்) லைகா போட்ட பணத்தையாவது பெற வேண்டும் என விரும்புகின்றேன். எம் சமூகத்தில் இருந்து ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனமாக அவர்கள் வளர வேண்டும்.

ஈழ தமிழர் ஒருவரின் முதலீட்டில் தமிழக தமிழர் சங்கரின் இயக்கத்தில் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்கும் ஒரு படம் வெல்வதை வெறுக்க எனக்கு காரணங்கள் எதுவும் இல்லை. அத்துடன் ரஜனியை ஒரு நடிகராக மிக மிக பிடிக்கும் என்பதும் இன்னொரு காரணம். இப்பவும் எப்பவும் என் விருப்புக்குரிய நடிகர் என்றால் ரஜனிதான்.

அதிக கூட்டம் இருப்பதால் இவ் வாரம் நான் 2.0 இனை பார்க்க போவதாக இல்லை. ஆனால் கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்ப்பேன்

தென் மாநில படங்கள் வடக்கிலும் முக்கியத்துவம் பெறுவதை பல வடக்கை சேர்ந்த பல ஊடகங்களுக்கு பொறுக்க முடியுது இல்லை. ஹிந்தி ஆட்களை கொண்ட ஊடகங்கள் 2.0 இன் மீது வெறுப்பை உமிழ்வதையும் காணக் கூடியதாக இருக்கு. NDTV யின் விமர்சனத்தை பார்த்தால் போதும்.

மன்னிக்க  வேண்டும் நிழலி . லைக்கா கையை சுட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இவர் வென்றால், இன்னும் முதலிடுவார் அங்கே.... ஆதலால் தோல்வி நன்று.

படம் செலவு £58மில்லியன். லைக்கா தனியார் நிறுவனம்.... £1பில்லியன் நெருங்குகிறது வருமானம்.... ஆகவே இந்த செலவு சுபாஷ்கரனுக்கு  penuts.  

வியாபாரத்தில் பணம் கொட்டும் போது, இந்த வகையில் தான் பணம் வரவேணுமா? இவர் தேவைக்கு அல்ல, எடுப்புக்கு  தான் எடுக்கிறார்.

சொந்த ஊர் முல்லைத்தீவில் எவ்வளவு அபிவிருத்திகள் செய்திருக்கலாமே இந்த பணத்தினை வைத்து....

லைக்கா வளர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா  என்று தெரியவில்லை. பிரான்சில் இருக்கும் போது வியாபாரத்தின் கருவே தாயார் தான். ஓய்வு எடுக்கும் தாயாரின், சுபாஷ்கரனின் மூன்று பிள்ளைகள் பிறந்த நாளுக்கு, London, O2 என்னும் மிக, மிக, பெரிய அரங்கினை எடுத்து நடாத்தும் பண வலிமை.

ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்து மாலத்தீவு, மொரிசியஸ் என்று வேலை செய்வோர், குடும்பம் என ஹாலிடே போவது... முழு தியேட்டர் புக் பண்ணி படம் பார்ப்பது (அதாவது வேறு யாரும் இல்லாமல்) என அதீத பண விளையாட்டுக்கள்.  கிழக்கு லண்டனின் எல்லைக்கு வெளியே உள்ள ஒரு பணக்கார ஏரியாவில் ஒரு வீட்டினை வாங்கி, பெரும் மாளிகையாக்கி , நீச்சல் தடாகம் கட்டியதில் பிரச்சனை கொடுத்த அயலவர்கள் வீடுகள், காணிகள் எல்லாம் வாங்கி, அந்த ஏரியாவே இப்ப இவர் குடும்ப சொந்தம்.   

ஆயினும் இலங்கையில், குறைந்தது சொந்த ஊரில், பெரிதாக உதவியதாக தெரியவில்லை.  தந்தை அல்லிராஜா பெயரில் ஒரு பல்கலை கழகத்தினை, கல்வி நிலையத்தினை திறந்து கல்வி வழங்கலாமே இந்த பணத்தில்.

சரி, சினிமா தான் எடுக்க வேண்டும் என்றால், இதே பணத்தில் பல நலிந்த டைரக்டர்களுக்கு கை  கொடுத்து இருக்கலாம் இல்லையா.

அஜித் கனகசுந்தரம் என்னும் சிங்கப்பூர் தேசிய வங்கியில் உயர் பதவி வகித்து ஓய்வு எடுத்தவர், யாழ்ப்பாணத்துக்கான குடி நீருக்கு, ஆணையிறவு நீரேரியினை குடிநீர் திட்டமாக மாத்த $10மில்லியன் டொலர் தேவை. நான் $1மில்லியன் போடுவேன். மிகுதி அரசு உதவவேண்டும் என்கிறார். சுபாஷ்கரன் நினைத்தால் இதை தனது தந்தை பெயரில் செய்ய முடியாதா ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் அடிப்படையே கோளாறு: ‘2.0’ படம் குறித்து சாரு நிவேதிதா

ரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ இந்தப் படத்தைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து தனது முகநூலில், “சிலரைப் பார்த்து, ‘இவர் தப்பான ஆள்’ என்று சொல்வோம் இல்லையா... அதுபோல் ‘2.0’ ஒரு தப்பான படம். பொதுவாகவே ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கருத்துகளை மக்கள் நலனைப் பேணும் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன. 5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால், அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு.

அதே அறிவுதான் இந்தப் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் கொஞ்சம்கூட சுவாரசியமே இல்லாமல், படு அலுப்பைத் தரும் விதத்தில். செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிகின்றதாம்; அதனால் மனித இனத்துக்குக் கேடு விளைகிறதாம். ஆரம்பக் காட்சியில் செல்போன் டவர்களையும், அதன் பக்கத்தில் சிட்டுக்குருவிகளையும் பார்த்த கணத்திலேயே, ‘ஐய்யய்யோ... மோசம் போனோமே... முடிஞ்சுது கதை’ என்று தலையில் கையை வைத்துவிட்டேன். ஏனென்றால், இதுபோன்ற போலி விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானே இருக்கிறோம்? ‘ராக்கெட் விடாதீங்க... போய் விவசாயம் பாருங்க...’ என்று கூச்சல் போடும் தலைவர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? அதேதான் ‘2.0’. இப்படியே இவர்கள் சட்டை வேட்டி கூடப் போட வேண்டாம் என்று சொல்லி, நம்மையெல்லாம் காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்துப்போய் விடுவார்கள். இதுபோன்ற கலாச்சாரப் புரட்சிவாதிகளை நாம் சீனாவில் மா சே துங் ஆட்சியில் பார்த்திருக்கிறோம். தாலிபான்களின் ஆட்சியிலும் சமீபத்தில் பார்த்தோம். இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் அடிப்படையில் தாலிபான்கள். ஆனால், தாலிபான்களுக்கும் ஷங்கருக்கும் என்ன வித்தியாசம் என்றால், தாலிபான்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. உதாரணம், செல்போன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்துக்குக் கேடு என்று சொல்லும் ‘2.0’வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். அதிலும் ஐரோப்பாவில். எப்படி இருக்கிறது பாருங்கள்... ஊருக்கு உபதேசம் செய்பவன்தான் ஊரைக் கெடுப்பதில் முதல் ஆளாக நிற்பான்.

படத்தில் சுவாரசியம் என்பது துளிகூட இல்லை. முதல் காட்சியில் செல்போன் டவர்களையும் சிட்டுக்குருவிகளையும் பார்த்ததுமே ரஜினி என்ன செய்யப் போகிறார், அக்‌ஷய் குமார் என்ன செய்யப் போகிறார், ரஜினி கடைசிக் காட்சியில் என்னென்ன வசனம் பேசப் போகிறார் என்ற விபரத்தையெல்லாம் நான் என் அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம் சொல்லிவிட்டேன். இப்படித் தெரிந்துபோனால் அப்புறம் என்னத்தைப் பார்ப்பது?

பறவையியலாளர் சலீம் அலியை வேறு நாற அடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் படத்தில் வரும் ஆர்னிதாலஜிஸ்ட் பக்ஷிராஜன், பறவைகளைச் சாப்பிடுவதைக் கண்டிப்பது போல் வருகிறது. அதாவது பறவையியலாளர்கள் பறவைகளைச் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற அறிவுகெட்டத்தனமான romanticization-ஐ சலீம் அலி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அவருக்குப் பிடித்த உணவு, பறவை. இதுபற்றிப் பலரும் அவ்வப்போது அவரிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்போது, “அட மூடர்களே, நான் பிறந்ததிலிருந்தே பறவைக்கறிப் பிரியன். எங்கள் வீட்டு டைனிங் டேபிளில் இல்லாத பறவைகளே கிடையாது. பறவை ஆய்வுக்கும், சைவ உணவுக்கும் என்னய்யா சம்பந்தம்?” என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், அழிந்து வரும் விலங்கினங்களை அடிக்கக் கூடாது என்பது வேறு விஷயம் என்றும் கூறுகிறார்.

ஆனால், இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அதையும் romanticise செய்திருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பலவீனம், பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன், எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது. காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது. கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு.

டெக்னாலஜி விஷயங்களுக்காக சின்னப் புள்ளைங்க பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்... அடுத்த படத்தில் ஏதாவது வில்லனுக்கு சாரு நிவேதிதா என்று பெயர் வைத்து விடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார் சாரு நிவேதிதா.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25632418.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மன்னிக்க  வேண்டும் நிழலி . லைக்கா கையை சுட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

இவர் வென்றால், இன்னும் முதலிடுவார் அங்கே.... ஆதலால் தோல்வி நன்று.

படம் செலவு £58மில்லியன். லைக்கா தனியார் நிறுவனம்.... £1பில்லியன் நெருங்குகிறது வருமானம்.... ஆகவே இந்த செலவு சுபாஷ்கரனுக்கு  penuts.  

வியாபாரத்தில் பணம் கொட்டும் போது, இந்த வகையில் தான் பணம் வரவேணுமா? இவர் தேவைக்கு அல்ல, எடுப்புக்கு  தான் எடுக்கிறார்.

சொந்த ஊர் முல்லைத்தீவில் எவ்வளவு அபிவிருத்திகள் செய்திருக்கலாமே இந்த பணத்தினை வைத்து....

லைக்கா வளர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா  என்று தெரியவில்லை. பிரான்சில் இருக்கும் போது வியாபாரத்தின் கருவே தாயார் தான். ஓய்வு எடுக்கும் தாயாரின், சுபாஷ்கரனின் மூன்று பிள்ளைகள் பிறந்த நாளுக்கு, London, O2 என்னும் மிக, மிக, பெரிய அரங்கினை எடுத்து நடாத்தும் பண வலிமை.

ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்து மாலத்தீவு, மொரிசியஸ் என்று வேலை செய்வோர், குடும்பம் என ஹாலிடே போவது... முழு தியேட்டர் புக் பண்ணி படம் பார்ப்பது (அதாவது வேறு யாரும் இல்லாமல்) என அதீத பண விளையாட்டுக்கள்.  கிழக்கு லண்டனின் எல்லைக்கு வெளியே உள்ள ஒரு பணக்கார ஏரியாவில் ஒரு வீட்டினை வாங்கி, பெரும் மாளிகையாக்கி , நீச்சல் தடாகம் கட்டியதில் பிரச்சனை கொடுத்த அயலவர்கள் வீடுகள், காணிகள் எல்லாம் வாங்கி, அந்த ஏரியாவே இப்ப இவர் குடும்ப சொந்தம்.   

ஆயினும் இலங்கையில், குறைந்தது சொந்த ஊரில், பெரிதாக உதவியதாக தெரியவில்லை.  தந்தை அல்லிராஜா பெயரில் ஒரு பல்கலை கழகத்தினை, கல்வி நிலையத்தினை திறந்து கல்வி வழங்கலாமே இந்த பணத்தில்.

சரி, சினிமா தான் எடுக்க வேண்டும் என்றால், இதே பணத்தில் பல நலிந்த டைரக்டர்களுக்கு கை  கொடுத்து இருக்கலாம் இல்லையா.

அஜித் கனகசுந்தரம் என்னும் சிங்கப்பூர் தேசிய வங்கியில் உயர் பதவி வகித்து ஓய்வு எடுத்தவர், யாழ்ப்பாணத்துக்கான குடி நீருக்கு, ஆணையிறவு நீரேரியினை குடிநீர் திட்டமாக மாத்த $10மில்லியன் டொலர் தேவை. நான் $1மில்லியன் போடுவேன். மிகுதி அரசு உதவவேண்டும் என்கிறார். சுபாஷ்கரன் நினைத்தால் இதை தனது தந்தை பெயரில் செய்ய முடியாதா ?

முடியல்ல மாம்ஸ்? தெரியாத விஷயமே இல்லை  போல 

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 3D இல் பார்க்கவுள்ளேன்?

கதையைவிட பிரமாண்டம் எப்படி வந்திருக்கு என்று பார்ப்போம்.

சங்கர் இயக்கத்தில் வந்த படங்களில் நண்பன் தவிர எல்லாமே அகன்ற திரையில் பார்த்துள்ளேன்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் ஆகா ஓகோ என்று சவுண்டு வந்து கொண்டு இருந்தது இப்ப தொனி மாறுது விமரிசனம்கள்  பாப்பம் எது மட்டும் பாயினம் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

முடிவா என்னதான் சொல்கிறீர்களப்பு?

திரையரங்கில் சென்று பார்க்குமளவிற்கு தகுதியான படமா?

இணையத்தில் பார்ப்பதே செலவு மிச்சமென இருந்துவிடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

முடிவா என்னதான் சொல்கிறீர்களப்பு?

திரையரங்கில் சென்று பார்க்குமளவிற்கு தகுதியான படமா?

இணையத்தில் பார்ப்பதே செலவு மிச்சமென இருந்துவிடலாமா?

ரஜனியை எதிர்பார்க்காமல் போனால் ரசிக்கலாம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விமர்சனம்கள் எதும் படிக்காமல் செல்லுங்கள் படம் பிடிக்கும்

அக்சய் குமார் தான் ஹீரோ என்னை பொருத்தவரை..

எனக்கென்னவோ பட்சி ராஜன்,(அஹ்சய்குமார்) க்கான பின்னனி பிடித்திருக்கிறது.. உண்மையில் அந்த பின்னனி வில்லனுக்கான பின்னனி இல்லையே #2PointO

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 3D இல் பார்த்தேன். அரங்கு நிறைந்திருந்தது. ஒரு சில குழந்தைகள் 3D இல் பார்த்துப் பயந்து வீரிட்டுக் கத்தின?.  வந்தவர்களிலும் ஒரு சிலருக்கு 3D முதல் அனுபவம் போலிருந்தது!?

எந்திரன் போன்று இல்லாவிட்டாலும் தொழில்நுட்பத்திற்காகப் பார்க்கலாம். பாடல்கள் இரண்டுதான். அதிலும் ஒரு பாடல் படம் முடிந்த பின்னர்!!

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting and text

முதல்ல போனை..   நிப்பாட்டுங்கப்பா. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.