Jump to content

இரண்டாம் பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலையுணவு அருந்தியபின் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பரந்தன் நோக்கிப் பயணித்தோம். பரந்தனிலிருந்து வலதுபுறம் திரும்பி, பரந்தன் முல்லைத்தீவு வீதியில் முரசுமோட்டை நோக்கி வண்டி பயணித்தது. 

எனது மைத்துனர் புலிகளின் கட்டுமாணப் பிரிவில் வீதி வேலைகளில் சம்பளத்திற்கு பணிபுரிந்ததனால் புலிகள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளுடு மக்களோடு மக்களாக அவரும் தனது குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்றார். ஆகவே, இந்த வீதியில் அமைந்திருக்கும் மக்கள் அவலங்களால் நிறைந்த ஊர்கள் ஒவ்வொன்றிலும் அவர் சிலகாலமாவது வாழ்ந்திருக்கிறார். அவலங்களை அனுபவித்திருக்கிறார். அதனால், தாம் ஆங்காங்கு தங்கியிருந்த ஊர்கள் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அவ்விடங்களைப் பார்வையிடத் தொடங்கினார். நானும் அவருடன் அவ்விடங்களை தரிசித்தேன். போரின் வடுக்கள் சிறிது சிறிதாக மறைந்துப்போய், வாழ்வு மீளவும் சாம்பலில் இருந்து பூக்க ஆரம்பித்திருந்தது.  சிலவிடங்கள் அடையாளமே மாறிப்போயிருந்தது அவருக்கு. வீதியின் ஓரத்தில் 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த சில கட்டடங்களை, அடையாளங்களை அவர் தேடினார், எவையுமே அங்கு இருக்கவில்லை. 
முரசுமோட்டை, புளியம்பொக்கனை, குமாரசாமிபுரம், உடையார்கட்டு, வல்லிபுனம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், கரைய முள்ளிவாய்க்கால் என்று பல இடங்களில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். சிலவிடங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கியிருந்து மறுபடியும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். எங்கெங்கு வெளிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் மக்கள் வெள்ளம் இருந்ததாக அவர் கூறினார். கையில் கிடைத்த தகரம், ஓலை, சீலைகள், பிளாத்திக்குப் பைகள் என்று ஏதோவொன்றை எடுத்து மறைவு வைத்து, கூட்டத்தோடு கூட்டமாக குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன.   இவ்வாறு மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் மீது கடுமையான எறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சன்னங்கள் என்று தாக்குதல் நடத்தப்பட்டபோது பலர் உயிரிழந்தும், இன்னும் பலர் காயப்பட்டும்  இருந்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர்கள் அவ்விடத்திலேயே கைகளால் மண் தோண்டி புதைக்கப்பட, காயப்பட்டவர்களில் வயதானவர்கள் அவர்களின் சொந்தங்களாலேயே கைவிடப்பட்டு சென்றதை மைத்துனர் கண்ணுற்றிருக்கிறார்.

வண்டி ஆனந்தபுரத்தைத் தாண்டியதும், பரந்தன் முல்லைத்தீவு வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் வழியில் இடதுபுறமாக பயணிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், கண்டல்த் தாவரங்களும், வெளிகளும் இருக்கும் இப்பிரதேசத்திலேயே பெருமளவு மக்கள் உயிரைக் காக்க அடைக்கலம் புகுந்திருந்தனர். 

முக்கியமாக இப்பகுதியில் பனக்கூடல்களுக்கு மத்தியில் புதுமாத்தளன் இந்து ஆலயம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் பெருமளவு மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் மைத்துனரின் குடும்பமும் அடங்கும். மக்கள் இப்பகுதியில் அடைக்கலமாகி இருப்பது தெரிந்ததும் இப்பகுதி நோக்கிக் கடுமையான விமானக் குண்டு வீச்சும், எறிகணைத்தாக்குதலும் நடத்தப்பட்டபோது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டெடுக்கும் பணியில் மைத்துனரும் ஈடுபட்டிருக்கிறார். 

கடற்கரை நோக்கிப் பயணித்த நாம், கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி மணலில் நடந்தோம். தூரத்தே சாலை தெரிந்தது. கடற்புலிகளின் பாரிய முகாம் சாலைப்பகுதியிலேயே இருந்திருக்கிறது. இந்த முகாமைக் கைப்பற்ற இராணுவம் கடுமையாகச் சண்டையிட்டபோதும் பலத்த இழப்புக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். ஈற்றில் கடற்புலிகள் இம்முகாமைக் கைவிட்டுப் போக, இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டது. 

இப்பகுதியில் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டதோடு, இங்கு அவரின் அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து  அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளை கடற்கரைச் சாலையூடாகவே வலம் வந்தோம். 

அம்பலவன் பொக்கனை பகுதியில் வெற்றுக் கடற்கரை வெளியில் மக்கள் கூடாரங்களை அமைத்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒருபுறம் கடலில் இருந்து ஏவப்படும் எறிகணைகள், மறுபுறம் வானிலிருந்து பொழியப்படும் குண்டுகள், இன்னொருபுறம் முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து கனரக இயந்திரத் துப்பாக்கிகள் உமிழும் ரவைகள் என்பவற்றிற்கு மத்தியில் ஏந்த நம்பிக்கையும் அற்றும் உயிரை மட்டுமே கையில் ஏந்திக்கொண்டு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கொல்லப்பட்டவர்களை அருகில் இருந்த பற்றைகளுக்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு, ஒற்றை அழுகையுடன் கடமை முடித்தோரும் அங்கு இருந்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு மயக்க மருந்தின்றி கடற்கரையிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இரத்தப்போக்கினால் கொல்லப்பட்டவர்களும் அதிகம் இருந்திருக்கிறார்கள்.  

  • Like 9
Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

நான் இறுதியாக ஊருக்குச் சென்றது 2018 இல். எனது சித்தியைப் பார்ப்பதற்காக அன்று சென்றிருந்தேன், கூடவே குடும்பமும். சித்தியைப் பற்றி முதல் ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். 1988 இல் எனது தகப்பனாரின் கொடுங்கர

ரஞ்சித்

காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்

ரஞ்சித்

மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களா

கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து வருகிறேன்.

நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் நான் கண்ட இன்னொரு முக்கியமான இடம் புலிகளால் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த தேக்கங்காடு. காட்டுவளத்தைக் காக்கவும், எதிர்காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கென்றும் புலிகளால் தாயகத்தின் சிலவிடங்களில் இவ்வாறான காட்டு வளர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வந்தது. இச்சாலையூடாகப் பயணிக்கும்போது இதனழகைத் தரிசிக்க முடியும். ஆனால், இன்று இத்தேக்கங்காடுகளை வெட்டி விற்பதற்கு  தெற்கிலிருந்துந்து வரும் வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பதாக சாரதி கூறினார். அதன்படி இக்காட்டின் ஒருபகுதி தற்போது வெட்டப்பட்டு வருகிறது. இதன் முழு நீளத்திற்கும் வீடியோப் பதிவொன்றினைச் செய்திருந்தேன். இக்காட்டின் மத்தியில், பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவப்போது இவ்வீதியால் பயணிப்போரை மறித்து விசாரிப்பதும் நடக்கும். எனது ஒளிநாடாவிலிருந்து எடுக்கப்பட்ட படம் கீழே.

large.TeakPlantationMullaitivu.png.0f6cd8b6c9503fbd6828058abf2b6939.png

ரந்தன் முல்லைத்தீவு பாதையிலிருந்து கண்டல் வழியாகக் கடற்கரை நோக்கிச் செல்லும்போது இறுதி யுத்தத்தின் இனக்கொலை நாட்களின் அவலங்களைத் தன்னகத்தே அமிழ்த்தி வைத்திருக்கும் சிலவிடங்கள் வருகின்றன. அவற்றுள் முக்கியமானது புதுமாத்தளன் பகுதி. துரதிஸ்ட்டவசமாக அப்பகுதியில் இடம் பார்க்கும் அவதியில் படமெடுக்கமுடியாது போய்விட்டது.

ஆனால் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் நின்று, நிதானித்து சில படங்களையும், ஒளிப்படங்களையும் பதிவுசெய்துகொண்டோம். அவற்றுள் சில கீழே.

large.AmbalavanPokkanaitemple.png.30066bb70bb1b46ed7f6ca7c86e8f2cf.pnglarge.AmbalavanPokkanaibeach.png.bf30cf16d48b5d020bc7936b4d0c79d4.png

ம்பலவன் பொக்கனைப் பகுதியில் கடற்கரையினை அண்மித்ததாக சிறிய பற்றைகள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகோர பல்குழல்த் தாக்குதலிலும், விமானக் குண்டுவீச்சிலும் கொல்லப்பட்ட பலரை இவ்வாறான பற்றைக்காடுகளுக்குள் மக்கள் கைகளால் மணலைத் தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்கு இப்பகுதியில் வைத்தே அறுவைச் சிகிச்சை மயக்கமருந்தின்றி நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில்த் தோண்டிப் பார்த்தால் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்கள் இன்னும் இருக்கும் என்று மைத்துனர் கூறினார். 

large.AmbalavanPokkanaibushes.png.c58e2bdff91bb0e7a45060e95bdea7b3.png

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்பலவன் பொக்கனையிலிருந்து கடற்கரைச் சாலையூடாக வலைஞர் மடம் பகுதிக்கு வந்தோம். அண்மையில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியெங்கம் வெள்ளம் தேங்கி நின்றிருந்தது. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் இன்னமும் இடிந்த நிலையிலேயே காணப்படுகின்றன. நிலங்கள் மக்களின் பாவனையின்றி இருப்பதால் பாரிய பற்றைக்காடுகளாக வளர்ந்திருக்கின்றன. வெகு சிலரையே இங்கு காண முடிந்தது. 

large.VlainjarMadam1.png.c13d7474a80b5bc7dd89da7cccfb3773.png

இனக்கொலையாளிகளான சிங்களப் பேரினவாத மிருகங்களின் படங்களைத் தாங்கி நிற்கும் போரின் சாட்சிகளான வலைஞர் மடக் கட்டிடங்கள்

இப்பாதையினால் பயணித்து வலைஞர் மடம் (முள்ளிவாய்க்காலுக்கு உட்பட்ட இன்னொரு பகுதி) பகுதியை வந்தடைந்தோம். இப்பகுதியில் காணப்பட்ட இரு கட்டடங்கள் இனக்கொலையில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன. மைத்துனரின் குடும்பமும் இடப்பெயர்வின்போது இப்பாகுதியில் பனைமரங்களுக்குக் கீழ் மறைப்புக்கட்டி வாழ்ந்திருக்கின்றது. இக்கட்டடங்களில் இருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்திலேயே அவரது குடும்பம் தஞ்சம் அடைந்திருந்தது. அக்காலத்தில் இப்பகுதியெங்கும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டதாக அவர் சொல்கிறார். 

large.ValainjarMadam2.png.c977bdc5d5f3a3d6e1f91b1e7198607c.png

இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் பலியிடப்பட்டனர். தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருந்த இக்கட்டடங்களுக்குள் காயங்களோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்ட பலர் மருந்தின்றியும், கடுமையான இரத்தப்போக்கினாலும் இறந்துபோயினர். தான் அங்கிருந்த ஓரிரு நாட்களில் மட்டும் இக்கட்டடங்களுக்கு முன்னால் கிடத்திவைக்கப்பட்டிருந்த உடல்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டும் என்று தனது நினைவுகளைப் பகிரும்போது கூறினார். கொல்லப்பட்டவர்களின் பிணங்களிலிருந்து வீசியவாடை அப்பகுதி முழுதையும் ஆக்கிரமித்திருந்தது.

கொல்லப்பட்டவர்களைப் பற்றி எவரும் அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை. உயிருடன் மீதமாயிருப்போர் தமதுயிரைக் காத்துக்கொள்வதில் மட்டுமே அக்கறை காட்டினர். மரணம் என்பது மலிந்த பொருளாகிவிட்டிருந்தது என்று அவர் கூறினார்.

Edited by ரஞ்சித்
கொள்வதில்
  • Like 10
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டற்கரையினை அண்மித்ததாகச் செல்லும் சிறிய வீதிவழியாக எமது வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. வலைஞர்மடம் பகுதியிலிருந்து குறுகிய பாதை வழியாக மீண்டும் பரந்தன் முல்லைத்தீவு பாதைக்கு ஏறி சிறிய தூரம் ஓடியபின்னர் இடதுபுறமாகத் திரும்பி முள்ளிவாய்க்காலை அடைந்தோம்.large.Mullivaykkaal1.png.317842dcf85cfff0b79b18f083783015.png

 

நான் பார்க்க வந்தது இந்த இடத்தைத்தான். என் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவ மிருகங்களால் பலியிடப்பட்டதும் இந்த இடத்தில்த்தான். இந்தவிடத்தை காணொளிகளில் பார்க்கும் ஒவ்வொரு கணமும் மிகுந்த வலியை எனக்கு ஏற்படுத்தும். ஆனாலும், நாம் ஏன் சோர்ந்து வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்கும் இதே முள்ளிவாய்க்காலே எமக்குக் காரணமாகவும் அமைந்திருக்கும். அதைவிடவும் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்த லட்சக்கணக்கான மக்களினதும் இறுதிவரை தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களினதும் ஆன்மாக்கள் இப்பகுதியின் காற்றில் பரவியிருப்பதாக நான் உணர்கிறேன். ஆகவே தான் அந்த ஆன்மாக்களுக்கு எனது இறுதிவணக்கத்தைச் செலுத்த இங்குசெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

நாம் வாகனத்தை வீதி முடிவடையும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டோம். முன்னிரவு பெய்த மழையால் நிலம் சற்று ஈரமாக இருந்தது. மணல் நிறைந்த மைதானம் போன்று காட்சியளித்த அப்பகுதியின் மத்தியில் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் தெரிந்தது. அதனை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சுமார் 200 - 300 மீட்டர்கள் பக்க நீளத்தைக் கொண்ட சதுரவடிவ மைதானமாகக் காட்சியளித்தது அப்பகுதி. ஒருபுறம் பற்றைகளும், பனைமரங்களும் காணப்பட, இன்னொரு புறம் சில வீடுகள் தெரிந்தன. மக்கள் இப்போது அங்கு வாழத் தொடங்கியிருக்கலாம். இனம்புரியாத நிசப்தம் அங்கு நிலவியது. எந்தச் சத்தமும் இன்றி அமைதியாகக் கிடந்தது அந்தப் பகுதி. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஓலங்களையும், அழுகுரல்களையும்  இடைவிடாது கேட்ட அந்தப் பூமி இப்போது அமைதியாகக் கிடந்தது.

large.Mullivaaykkaal2.png.6be71370e3e9b6b2b5f76a9c0e8550e0.png

 

  மணற்றரையூடாக நினைவுச் சின்னம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள். நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியிலும் எத்தனை உறவுகள் கொல்லப்பட்டிருக்கலாம்? எத்தனை உறவுகள் போராடி மடிந்திருக்கலாம்? எத்தனை பெண்களை சிங்கள மிருகங்கள் கடித்துக் குதறியிருக்கலாம்? சாவரும் வேளையில் அந்த உறவுகள் முகங்கொடுத்த அவலங்கள் எப்படி இருந்திருக்கும் ? என்று பல கேள்விகள் மனதில் எழ முள்ளிவாய்க்கால் பலிப்பீடத்தின் மத்திநோக்கி நடந்துகொண்டிருந்தோம்.

மைத்துனரின் மகனுக்கும், சாரதியாக வந்த இளைஞருக்கும் இப்பகுதி குறித்த பிரக்ஞை எவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், எனக்கும் மைத்துனருக்கும் மனதில் எழுந்த எண்ணங்களைச் சொல்லில் வடித்துவிடமுடியாது. அப்பகுதியில் இறங்கியதுமுதல் மைத்துனர் தனது கையடக்கத் தொலைபேசியில் அப்பகுதியை ஒளிப்படமாக எடுக்கத் தொடங்கினார். அப்பகுதியில் கையில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு உயிர்காக்க ஓடிக்கொண்டிருந்த பொழுதுகள் அவரது நினைவிற்கு வந்திருக்கலாம். ஆகவே தான் எடுத்துக்கொண்டிருந்த ஒளிப்படத்துடன் பின்னணியில் தனது நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டிருந்தார்.

 

நானும் ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினேன். இறுதி யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலத்திலும் முள்ளிவாய்காலில் சிங்கள மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட மனித நாகரீகத்திற்கு முரணான படுகொலைகளை, அட்டூழியங்களை நான் அறிந்துகொண்ட வகையில் அந்த ஒளிப்படத்தில் பின்னணியில் பதிந்துகொண்டேன். ஆனால், எம்மைப்போல பலர் இந்த பகுதியைப் படமாக்கியிருப்பதுடன் அவலங்களையும் பதிந்திருக்கிறார்கள் என்பதால் எனது ஒளிப்படம் குறித்து நான் இங்கு தனியாகப் பதியவேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். 

நீண்டநேரம் அப்பகுதியில் நின்றிருந்தோம். சுற்றிச் சுற்றி நடந்து அப்பகுதியினை அண்மித்துக் காணப்பட்ட இடங்களை, பற்றைகளை, பனைமரக் கூடல்களைப் பார்வையிட்டோம். மேல்மணலைத் தட்டிவிட்டுப் பார்த்தால் உடைந்த மட்பாண்டங்கள், அலுமினிய கோப்பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், கிழிந்த உடைகள், செருப்புக்கள் என்று பல பொருட்கள் அப்பகுதியெங்கும் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. இவை எல்லாமே எமது உறவுகளால் அவர்களின் இறுதிக் கணங்களில் பாவிக்கப்பட்டவை. இவற்றுக்கு உணர்வுகளும், பார்வையும் இருந்திருந்தால் எம்மக்கள் பட்ட துன்பங்களை இன்று சாட்சியாகச் சொல்லியிருக்கும். ஆனால், சாட்சியங்கள் எதுவுமற்ற பாரிய இனக்கொலையொன்றினை சிங்கள பெளத்த தேசம் எம்மீது கட்டவிழ்த்து விட்டது என்பதே உண்மை. 

இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தினைச் சிலமுறை சுற்றிவந்துவிட்டு அதன் முன்னால் நின்று படமெடுத்தேன். இது எனக்காக நான் எடுத்துக்கொண்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட எனது உறவுகளைப் பார்க்கவந்தேன் என்பதை எனக்கு நானே அவ்வபோது சொல்லிக்கொள்ள எடுத்துகொண்டது, எதனையும் விளம்பரப்படுத்தவல்ல. 

 

Edited by ரஞ்சித்
தனிநபர் படம் நீக்கப்பட்டிருக்கிறது
  • Like 9
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. 

நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். 

அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. 

இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.

large.VadduvaakalBridge.png.42f41dbebf90a29fd7683496763a540f.png

இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச்  செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். 

large.Nanthikkadal.png.789d4d1ee25c7a007e22cd20935ba1e4.png

இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். 

large.Nanthikkadal2.png.177ec3c717003af47fc72c34f796e18a.png

யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். 

இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். 

மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துன‌ரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை. 

  • Like 7
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, பயணத்திற்கு வரலாம்.

வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு  சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். 

அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார்.   அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன்.

முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம்.

போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம்.

சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது.

கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி. 

  • Like 9
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலியுணர்ந்த்தவருடன்....வலியடைந்த இடத்தில்....வலியை இன்றும் சுமந்த நீங்கள்   ..அனுபவித்த வேதனையை ...அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்....புலம் பெயர்ந்து வாழ்த்தாலும்...விடுதலை  உணர்வு...கடுகளவேனும் குறையாத உணர்வுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் அய்யா... தொடர்க உங்கள்  ..வரலாற்றுப்பயணத்தை...என் வாழ்நாளில் இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதே எனது ஏக்கம்..

சிறப்பான எழுத்துநடை.. தொடர்க.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை மாலை 5 மணியளவில் வந்தடைந்தோம். அங்கிருந்து சித்தி தங்கியிருந்த பாஷையூர் மடத்திற்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுமுனையில் பேசியவர் ஒரு கன்னியாஸ்த்திரி. "நீங்கள் யாருடன் பேசவேண்டும்?" என்று என்னைக் கேட்டார். சித்தியின் பெயரைக் கூறினேன். "சற்றுப் பொறுங்கள், அவரிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சென்றுவிட்டார். சுமார் 5‍ அல்லது 6 நிமிடங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர் பேசினார், "தம்பி, அவாவால இப்ப வர ஏலாதாம், ஆறுதலாய் 8 மணிக்குப் பிறகு எடுக்கட்டுமாம்" என்று கூறினார். எனக்குப் புரிந்தது. சித்தியினால் பேசுமளவிற்கு தெம்பில்லை. அடிக்கடி அவரைச் சென்று பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு தொல்லையாகவே அவருக்கு மாறிப்போயிருந்தது. நேற்று மாலைதான் அவருடன் பேசிவிட்டு வந்தேன். சிலவேளை அதுபோதும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம். "பரவாயில்லை சிஸ்ட்டர், நான் நாளைக்கு மீண்டும் கொழும்பிற்குச் செல்கிறேன், அவருடன் ஆறுதலாய்த் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிடுங்கள்" என்று கூறிவிட்டுத் துண்டித்துக்கொண்டேன். 

பயணம் செல்லுமுன் அவருடன் பேசமுடியாது போனது சற்று வருத்தத்தைத் தந்தது. ஆனால் இரண்டு நாட்கள் அவருடன் இருந்து பேசிவிட்டேன். மற்றைய இரு சித்திமாரையும் கூட்டிவந்து அவரைக் காண்பித்துவிட்டேன். ஆகவே இப்போதைக்கு இது பரவாயில்லை என்று மனதை ஆறுதற்படுத்திக்கொண்டேன்.

இரவாவதற்கு இன்னும் சில மணிநேரம் மீதியாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் சில பொருட்களை வாங்கவேண்டிய தேவை இருந்ததனால் மைத்துனரையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இருக்கும் கடைத்தெருவிற்குச் சென்றேன். பனங்கட்டி, பனங்கற்காரம், கருவாடு என்று சில பொருட்களை வாங்கிக்கொண்டேன். உணவுப்பொருட்களை அவுஸ்த்திரேலியாவிற்குக் கொண்டுவருவதென்றால் அவற்றை நேர்த்தியாக காற்றுப்புகா பைகளில் அடைத்து, உணவுப்பொருளின் விபரம், காலாவதியாகும் திகதி போன்றவற்றையும் பொதிகளில் குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயம். அதுமட்டுமல்லாமல் உள்ளே கொண்டுவரும் பொருட்கள் பற்றி நீங்கள் தெரியப்படுத்துவதும் அவசியம். இல்லையென்றால் பொருட்களை எங்களுக்கு முன்னிலையிலேயே குப்பைத் தோட்டியில் கொட்டிவிடுவார்கள். தெரியப்படுத்தத் தவறுமிடத்து தண்டப்பணமும் கட்டவேண்டியிருக்கும். ஆகவே கடைக்காரரிடம் நான் கொள்வனவு செய்தவற்றை விபரமிட்டு பொதிசெய்து தருமாறு கேட்டபோது, "தம்பி ஒஸ்ட்ரேலியாவோ?" என்று அவர் கேட்டார். எப்படி தெரிந்துகொண்டீர்கள் என்று நான் கேட்கவும் "அங்கேயிருந்து வாற ஆக்கள் உப்பிடித்தானே கேக்கீனம்?" என்று சொன்னார். 

பொருட்களை வாங்கிக்கொண்டு மைத்துனரின் வீட்டை அடையும்போது இரவு 8 மணியாகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் 5:45 மணிக்கு ரயில் ஏறவேண்டும். ஆகவே சின்னக்குளியலுடன் இரவுணவை முடித்தோம். அருமையான உழுத்தங்களி.பனங்கட்டி போட்டிருக்கலாம், சுவையே தனி. உண்டுவிட்டு மைத்துனருடனும் அவரது துணைவியாருடனும் பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் இறுதியுத்தகால அனுபவங்கள், இடைக்கிடையே உறவினர்கள் என்று சில விடயங்கள் பேசப்பட்டது. 11 மணியானதும் மாமியிடமும் விடைபெற்றுக்கொண்டு தூங்கச் சென்றேன். 

கால 4 மணிக்கு தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல அமைதியாகக் காலைக்கடன்கள், புறப்படுவதற்கான ஆயத்தப்படுத்தல்கள் என்று கிரமமாக ஈடுபடலானேன். நான் தயாராகும் சத்தம் கேட்டிருக்கவேண்டும். மைத்துனரும் துணைவியாரும் எழுதிருந்தார்கள். அங்கே நான் அருந்தும் கடைசிக் கோப்பியுடன் வீட்டில் இருந்தவர்களுக்கு விடைகொடுத்து, மைத்துனரின் மோட்டார் சைக்கிளில் ஏறி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். ஓரளவிற்குச் சன நெரிசல் காணப்பட்டது. ஆனால், சரியான பெட்டியில் ஏறி ஆசனத்தில் அமர்வது சிரமமாக இருக்கவில்லை. கொண்டுவந்த பொருட்களைக் காட்டிலும் அதிகளவு பொருட்களை கொண்டு செல்கிறேன் என்பது பைகளைத் தூக்கித் தலைக்கு மேலால் உள்ள தட்டுக்களில் வைக்கும்போது புரிந்தது. 

நண்பன் ஜெயரட்ணமும் அதே புகையிரதத்தில் கொழும்பு செல்வதுபற்றிக் கூறியிருந்தமையினால், பைகளை வைத்துவிட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தேன். எனது பெட்டியில் இன்னொரு மூலையில் அவரது இருக்கை. அவருக்கருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். எனக்கருகில் இருந்த ஆசனம் காலியாகவே இருந்தமையினால், ஜெயரட்ணம் அங்கே வந்து அமர்ந்துகொள்ள நண்பனை மீண்டும் காணக் கிடைத்த கிடைத்த மகிழ்ச்சியில் கொழும்பு நோக்கிய புகையிரதப் பயணத்தை ஆரம்பித்தேன்.  

9 hours ago, alvayan said:

வலியுணர்ந்த்தவருடன்....வலியடைந்த இடத்தில்....வலியை இன்றும் சுமந்த நீங்கள்   ..அனுபவித்த வேதனையை ...அவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்....புலம் பெயர்ந்து வாழ்த்தாலும்...விடுதலை  உணர்வு...கடுகளவேனும் குறையாத உணர்வுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் அய்யா... தொடர்க உங்கள்  ..வரலாற்றுப்பயணத்தை...என் வாழ்நாளில் இந்த சந்தர்ப்பம் கிடைக்குமா என்பதே எனது ஏக்கம்..

சிறப்பான எழுத்துநடை.. தொடர்க.

மிக்க நன்றி அல்வாயான் !!!

Edited by ரஞ்சித்
spelling
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........!

பாராட்டுக்கள்......ரஞ்சித் .......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/1/2024 at 13:42, ரஞ்சித் said:

அது கரணவாயேதான். அது எனது அம்மமாவின் வீடு. நீங்கள் எப்படி அங்கே? 

இது என்ன கேள்வி  கிருபன் கரணவாய். தான்  நீங்களும் கரணவாய் தான்   சிலநேரம். இருவரும் சொந்தமாக இருக்கலாம் 😂🤣. மிகுதியையும். எழுதுங்கள்’’ 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரதப் பயணம் சுவாரசியமாக அமைந்திருந்தது. பல விடயங்கள் குறித்து அலசினோம். பாடசாலை நாட்கள், நண்பர்கள், தொழில், பிள்ளைகள் என்று பல விடயங்கள். நானும் அதே புகையிரதத்தில் ஜெயரட்ணத்துடன் கொழும்பு செல்கிறேன் என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தமையினால் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொடுத்துவிடப்பட்டிருந்தது. சோறு, கோழிக்கறி, முட்டை, உருளைக்கிழங்கு என்று அருமையான வீட்டுச் சாப்பாடு. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். 

எனது தாயாரின் தங்கைகளில் ஒருவர் கம்பகவில் வாழ்ந்து வருகிறார். 80 களில் கிழக்கின் சிங்களக் குடியேற்றக்கிராமமான வெலிக்கந்தைக்கு தொழில் நிமித்தம் சென்றவேளை அங்கு அவருடன் பணிபுரிந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எனது சித்தி காதலித்து திருமணம் முடித்திருந்தார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபொழுதிலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சித்தியின் கணவர் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சிறிமா முதல் சந்திரிக்கா வரை அனைத்து சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வந்தவர். 

சந்திரிக்கா ஆட்சியில் இருந்தகாலத்தில் அவர் குறித்துப் பேசும்போது மரியாதையாக "மேடம்" என்றே பேசுவார். அவ்வளவு விசுவாசம்.

80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பப்பகுதியிலும் சித்தியும் கணவரும் பதவிய, மண‌லாறு (வலிஓய), அத்தாவட்டுனுவெவ, சம்பத்நுவர ஆகிய சிங்களக் குடியேற்றங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். சித்தியின் கணவர் தனது மகனை சிங்கள பெளத்தனாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எக்காரணம் கொண்டு அவன் தனது தாய்வீட்டாருடன் நெருங்கிப் பழகுவதை அவர் விரும்பவில்லை. மேலும், இனப்பிரச்சினை தொடர்பான சிங்களவர்களின் நிலைப்பாட்டினை அவனுக்குப் புரியவைப்பதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார். இதில் சித்தியின் சொல்லிற்கு எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை. அவர்களின் குடும்பம் தொடர்ச்சியாக சிங்களப் பகுதிகளிலேயே வாழ்ந்துவந்ததனால், சித்தியும் நாளடைவில் தன்னை ஒரு சிங்களப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். 

குடியேற்றக்கிராமங்களில் வாழ்ந்துவந்ததனால் இராணுவத்தினருடனான பழக்கமும், அப்பகுதிகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. 

நாம் 90 களின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு வந்ததையடுத்து சித்தியும் கொழும்பு மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு மாற்றலாகி வர சித்தியின் கணவரோ கஹட்டகஸ்டிகிலிய எனும் அநுராதபுரக் கிராமங்களில் ஒன்றில் கிராம சேவகராக பணியாற்றி வரலானார். சித்தியுடன் அவரது மகனும் கொழும்பில் எங்களுடன் தங்கிப் படித்துவந்தான். விடுமுறைகளுக்கு அநுராதபுரம் சென்று வரும்வேளை எனக்கும் சித்தியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் மோதல்களில் புலிகளைக் கொன்றுவிட்டோம், ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று அரசதரப்புச் செய்திகளை அப்படியே உண்மையென்று நம்பி என்னுடன் வந்து வாதாடுவான். வயதில் சிறியவனான அவனிடம் நான் தேவையற்ற விதமாக அரசியல் பேசுவதாக சித்தி என்னைக் கடிந்துகொள்வதுண்டு. "நீங்கள் அவனுக்கு உண்மையைச் சொல்லி வளர்த்திருந்தால் அவன் இப்படிப் பேசமாட்டான்" என்று நான் கூறுவேன். ஆனால், அவரால் அதனைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். 

ஆனால், காலப்போக்கில் சித்தியின் கணவரின் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதம் மெளனித்துப் போனது, குறைந்தது அப்படிக் காட்டிக்கொண்டார். எனது தாயாரின் சகோதரர்கள் அவரது குடும்பத்திற்குப் பெருமளவு பண உதவிகளைச் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது மருத்துவச் செலவுகளுக்கும் அவர்களே உதவிசெய்துவந்தனர். ஆகவே, தனது கடும்போக்கு அரசியலை எம்முடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் மகனோ அவரைவிடவும் மிகத்தீவிரமான சிங்களத் தேசியவாதியாக மாறிப்போனான். எனது தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் மனம் புண்படும் விதமாக அரசியல் பேசியிருக்கிறான். சில முறை அவன் அப்படிப் பேசுவதை அவனது தந்தையே தடுத்து, "யாருடன் பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்" என்று கூறிய சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. அவர்களே இப்போது கம்பகவில் வசித்து வருகிறார்கள்.

சிட்னியிலிருந்து கிளம்பும்போது சித்தியின் கணவருக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன். சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டே வரலாம் என்று எண்ணி ஜெயரட்ணத்திடம் விடைபெற்றுக்கொண்டு கம்பகவை புகையிரதம் அடைந்தபோது இறங்கிக்கொண்டேன். 

புகையிரத நிலையத்திலிருந்து அரைமணிநேர பஸ் பயணம், பின்னர் ஓட்டோவில் பத்துநிமிடம் என்று பயணித்து சித்தியின் வீட்டை அடைந்தேன். 

2018 இல் பார்த்ததுபோல சித்தி இருந்தார். ஆனால் கணவரோ சற்றுச் சுகயீனமுற்று இருப்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றினால் நடக்க அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வரவேற்றார். ஊர்ப்புதினங்கள், தொழில், வாழ்க்கை என்று சில விடயங்கள் குறித்துப் பேசினோம். அரசியல் கடுகளவேனும் வெளியில் வரவில்லை. அதை அவரே தவிர்ப்பதுபோலத் தோன்றியது எனக்கு. மகன் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்துவருகிறான் என்று தெரிந்தது. தம்மை அடிக்கடி வந்து பார்ப்பதையே மகன் தவிர்க்கிறான் என்கிற கவலை அவர்கள் இருவரிடத்திலும் இருக்கிறது. விடைபெற்று வரும்போது என்னைக் கட்டியணைத்து வழியனுப்பினார் சித்தியின் கணவர். சிலவேளை தனது மகனை நினைத்து அவர் ஏங்கியிருக்கலாம். 

தனிப்பட்ட ரீதியில் அவருடன் எனக்கு மனக்கஸ்ட்டம் ஏதுமில்லை. நான் எதிர்ப்பது அவரது தீவிர சிங்கள பெளத்த மனநிலையினைத்தான். 40 வருட திருமணவாழ்வில் சிங்களவரான அவருக்கு தமிழர் தரப்பு நியாயத்தை சித்தியினால் எடுத்துக்கூறமுடியாமைக்காக அவர்மீது சற்று ஏமாற்றும் இற்றைவரை இருந்தே வருகிறது.   

 

  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன்.

large.IMG_27511.JPG.2752b63457c001782945030383d0b358.JPG

அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடையநண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காகசிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது.

உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர்.

சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம்.

large.IMG_27501.JPG.b5ece3e298198f535470cbfeb20a1093.JPG

முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம்.

நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன்.

மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது.

அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்

  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 01:13, Kandiah57 said:

இது என்ன கேள்வி  கிருபன் கரணவாய். தான்  நீங்களும் கரணவாய் தான்   சிலநேரம். இருவரும் சொந்தமாக இருக்கலாம் 😂🤣. மிகுதியையும். எழுதுங்கள்’’ 

முன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன்.

large.IMG_6941.jpeg.f7479296ce7e7ef9d13b64551a917269.jpeg

ஆனால் கரணவாய் எனும் கிராம நிர்வாக அலகு 750 இலக்க பஸ் போகும் யாழ்- பருத்தித்துறை வீதியின் இரு பக்கமும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான வீதியின் வடக்கில் எமது வீடும், எமது தோட்டங்கள் வீதிக்கு தெற்கேயும் இருந்தன.   மாரி தொடங்கும் காலத்தில் அதிகாலையில் குழைவண்டில்கள் இந்தவீதியில் எமது தோட்டத்திற்கு அருகில் தரித்து நிற்கும்!

90களில் (என நினைக்கின்றேன்) கரணவாய் நிர்வாகத் தேவைக்காக மத்தி (யாழ்-பருத்தித்துறை வீதிக்கும், வதிரி-உடுப்பிட்டி வீதிக்கும் இடையே), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டது. இதன்படி எமது வீடு அமைந்துள்ள இடம் மத்தியிலும், தோட்டம் தெற்கிலும், நான் படித்த பாலர் பாடசாலை வடக்கிலும்,  பட்டம் அறுத்துக்கொண்டு போனால் விழும் இடம் மேற்கிலும் உள்ளன! கரணவாய் கிழக்குப் பகுதிக்கு போகவேண்டிய தேவை அநேகமாக இருந்ததில்லை. 

large.IMG_6942.jpeg.efa9191fb16a6b6aec356eb8eeff1cfb.jpeg

@ரஞ்சித் இன் அம்மம்மா வீடு நாவலர் மடத்தில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் உப்புவெளிக்கு வடக்கேயும் , விக்கினேஸ்வராக் கல்லூரிக்கு மேற்கேயும் உள்ள கரணவாய்-கரவெட்டி எல்லையில் உள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் இருக்கின்றது.  நான் ஒரே ஒரு தடவைதான் குருக்கள்பகுதி, மணல்பாதிப் பக்கத்தால் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் போயிருக்கின்றேன்.😊

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

முன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன்.

large.IMG_6941.jpeg.f7479296ce7e7ef9d13b64551a917269.jpeg

ஆனால் கரணவாய் எனும் கிராம நிர்வாக அலகு 750 இலக்க பஸ் போகும் யாழ்- பருத்தித்துறை வீதியின் இரு பக்கமும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான வீதியின் வடக்கில் வீடும், தோட்டங்கள் வீதிக்கு தெற்கேயும் இருந்தன.   மாரி தொடங்கும் காலத்தில் அதிகாலையில் குழைவண்டில்கள் இந்தவீதியில் எமது தோட்டத்திற்கு அருகில் தரித்து நிற்கும்!

90களில் (என நினைக்கின்றேன்) கரணவாய் நிர்வாகத் தேவைக்காக மத்தி (யாழ்-பருத்தித்துறை வீதிக்கும், வதிரி-உடுப்பிட்டி வீதிக்கும் இடையே), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டது. இதன்படி எமது வீடு அமைந்துள்ள இடம் மத்தியிலும், தோட்டம் தெற்கிலும், நான் படித்த பாலர் பாடசாலை வடக்கிலும்,  பட்டம் அறுத்துக்கொண்டு போனால் விழும் இடம் மேற்கிலும் உள்ளன! கரணவாய் கிழக்குப் பகுதிக்கு போகவேண்டிய தேவை அநேகமாக இருந்ததில்லை. 

large.IMG_6942.jpeg.efa9191fb16a6b6aec356eb8eeff1cfb.jpeg

@ரஞ்சித் இன் அம்மம்மா வீடு நாவலர் மடத்தில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் உப்புவெளிக்கு வடக்கேயும் , விக்கினேஸ்வராக் கல்லூரிக்கு மேற்கேயும் உள்ள கரணவாய்-கரவெட்டி எல்லையில் உள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் இருக்கின்றது.  நான் ஒரே ஒரு தடவைதான் குருக்கள்பகுதி, மணல்பாதிப் பக்கத்தால் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் போயிருக்கின்றேன்.😊

 

 

நன்றி கிருபன்.  படத்துடன்.  விளக்கம் அருமை  நான் உந்த இடங்களுக்கு வந்தது இல்லை  ஒரு சின்ன கிராமத்தில் நிறைய பாடசாலைகள் உண்டு ஆச்சரியமாய் இருக்கிறது   கரணவாய்யில் அனைவரும் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன்.

large.IMG_6941.jpeg.f7479296ce7e7ef9d13b64551a917269.jpeg

ஆனால் கரணவாய் எனும் கிராம நிர்வாக அலகு 750 இலக்க பஸ் போகும் யாழ்- பருத்தித்துறை வீதியின் இரு பக்கமும் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதான வீதியின் வடக்கில் வீடும், தோட்டங்கள் வீதிக்கு தெற்கேயும் இருந்தன.   மாரி தொடங்கும் காலத்தில் அதிகாலையில் குழைவண்டில்கள் இந்தவீதியில் எமது தோட்டத்திற்கு அருகில் தரித்து நிற்கும்!

90களில் (என நினைக்கின்றேன்) கரணவாய் நிர்வாகத் தேவைக்காக மத்தி (யாழ்-பருத்தித்துறை வீதிக்கும், வதிரி-உடுப்பிட்டி வீதிக்கும் இடையே), வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டது. இதன்படி எமது வீடு அமைந்துள்ள இடம் மத்தியிலும், தோட்டம் தெற்கிலும், நான் படித்த பாலர் பாடசாலை வடக்கிலும்,  பட்டம் அறுத்துக்கொண்டு போனால் விழும் இடம் மேற்கிலும் உள்ளன! கரணவாய் கிழக்குப் பகுதிக்கு போகவேண்டிய தேவை அநேகமாக இருந்ததில்லை. 

large.IMG_6942.jpeg.efa9191fb16a6b6aec356eb8eeff1cfb.jpeg

@ரஞ்சித் இன் அம்மம்மா வீடு நாவலர் மடத்தில் இருந்து தெற்கு நோக்கிப் போகும் பாதையில் உப்புவெளிக்கு வடக்கேயும் , விக்கினேஸ்வராக் கல்லூரிக்கு மேற்கேயும் உள்ள கரணவாய்-கரவெட்டி எல்லையில் உள்ள உச்சில் அம்மன் கோயிலடியில் இருக்கின்றது.  நான் ஒரே ஒரு தடவைதான் குருக்கள்பகுதி, மணல்பாதிப் பக்கத்தால் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திற்குப் போயிருக்கின்றேன்.😊

 

 

எனது அம்மம்மாவின் வீட்டை இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்!!! எப்படிச் சாத்தியம்? எதற்காக அங்கு போகவேண்டி வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் நாங்களும் கூடவே வரும் உணர்வைத் தந்திருக்கின்ரீர்கள்........!

பாராட்டுக்கள்......ரஞ்சித் .......!   👍.....

கிருபன் உவ்வளவு துல்லியம்...ஆமா...இங்கு சோளங்கன்...(கரண்வாய்தான்)>.கிரிக்கட்டு ரீமுமொன்று  இருந்ததில்லே..அது இப்பவும் இருக்கா..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசாலையில் இருந்து நவிண்டிலில் 4 மாதங்கள் இடம்பெயர்ந்திருந்தோம். 96 உலகக்கோப்பை கிரிக்கெட் நாவலர் மடப்பக்கமாக உள்ள ஒரு வீட்டில் தான் சென்று பார்த்தோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 12:35, கிருபன் said:

முன்னர் ஒரு காலத்தில் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து கல்லுவம் போகும் வீதியில் “கரணவாய் 1 மைல்” என்று வழிகாட்டும் தூணில் இருந்தது. இது கரணவாய் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடத்தையே கரணவாய் என்று குறிக்கும் என நினைக்கின்றேன்.

 

On 30/1/2024 at 13:53, ரஞ்சித் said:

எனது அம்மம்மாவின் வீட்டை இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்!!! எப்படிச் சாத்தியம்? எதற்காக அங்கு போகவேண்டி வந்தது? 

அப்புறம் என்ன ஒன்றுக்குள் ஒன்று சொந்தக்காரர் ஆகீட்டீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் பணம் செலவு செய்து நீங்கள் போன இடமெல்லாம் எம்மையும் இலவசமாக கூட்டிச் சென்றமைக்கு மிகவும் நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 08:53, ரஞ்சித் said:

எனது அம்மம்மாவின் வீட்டை இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்!!! எப்படிச் சாத்தியம்? எதற்காக அங்கு போகவேண்டி வந்தது? 

இது தான் ராணி இல்லம், ராசாத்தி இல்லம் என்று பேர் வைக்கிறதால வாற பிரச்சினை…!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகாத இடங்களுக்கு கூட்டிப் போய் இருக்கிறீர்கள். தெரியாத முகங்களை காண வைத்திருக்கிறீர்கள். பயணம் இனிதாக இருக்கிறது ரஞ்சித்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லிக்குச் செல்லும் விமானத்தை எதிர்பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன். தில்லியுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிய விமான நிலையம் இலங்கையினுடையது. பழமையானபோதும் கூட ஓரளவிற்குத் தூய்மையாக இருந்தது. நள்ளிரவு நேரமான போதும் மிகுந்த சனக்கூட்டம். வெளிநாட்டவர்கள் பலரும் அக்கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்களுள் இந்தியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பலர் வந்து செல்கிறார்கள் போலும். 

சற்றுத் தாமதமாக இந்தியன் எயர்வேஸ் விமானம் வந்து சேர்ந்தது. இலங்கையைச் சேர்ந்த சில ஊழியர்களே அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். பயணிகளை மரியாதையாக நடத்தியதுபோல் உணர்ந்தேன். விமானத்தில் ஏறுமுன் கெடுபிடிகளை அவர்கள் கட்டவிழ்த்துவிடவில்லை. நாட்டைவிட்டு வெளியேறுகிறவர்களை எதற்குச் சோதிக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம். விமானத்தினுள் ஏறும்போது தவறாமல் நமஸ்த்தே என்று ஒரு விமானப் பணிப்பெண் வரவேற்றாள்.  செயற்கையான அவளது சிரிப்பை ஏனோ ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஹெல்லோ என்று ஆங்கிலத்தில் நானும் செயற்கையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இருக்கை தேடி அமர்ந்துகொண்டேன்.  சிறிய விமானம், இரண்டு, இரண்டு இருக்கைகளாக இரு வரிசைகள். விமானம் நிரம்பியிருந்தது. சுமார் இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் அதே இந்திரா காந்தி விமான நைலையத்தில் இறக்கிவிட்டார்கள். சிட்னிக்கான விமானத்திற்கு இன்னும் 6 மணித்தியாலங்கள் இருந்தன. 

உள்வருகை சுங்க அதிகாரிகளிடம் கடவுச் சீட்டைக் கொடுத்து மீள்பறப்பிற்கான அனுமதியைப் பெறுவதற்கான வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் ஒரு அப்பிரிக்க இளைஞன், இந்தியாவூடாக சிட்னிக்கு வருகிறான். அவனது கடவுச்சீட்டினைப் பரிசோதிக்கும் சுங்க அதிகாரிக்கு 25 இலிருந்து 30 வயதுதான் இருக்கும். அந்த ஆப்பிரிக்க இளைஞனை இந்திய அதிகாரி நடத்திய விதம் அங்கு நின்றவர்களை மனங்கோண வைத்தது. ஒருவரையொருவர் நாம் பார்த்துக்கொண்டோம். 

"எங்கேயிருந்து வருகிறாய்?, எங்கு செல்கிறாய்? எதற்காகச் செல்கிறாய்? எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போகிறாய்? அங்கு படிப்பதற்கு உனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? நீ அங்கு வேலைசெய்வதற்காகத்தான் போகிறாய் என்று நான் நம்புகிறேன், அங்கு நீ தங்கியிருக்கும் விலாசம் என்ன? எவ்வளவு பணம் கொண்டுசெல்கிறாய்? எதற்காக இந்தியாவிற்கூடாகப் பயணம் செய்கிறாய்?" என்று அடுத்தடுத்து அவனைக் கேள்விகளால்த் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தான் அந்த இந்திய அதிகாரி.

அந்த இளைஞனின் பல்கலைக்கழக விபரங்களைக் காட்டுமாறு பணித்தான். அந்த ஆவணங்கள் அவனுக்குத் திருப்திகரமாக இருக்கவில்லையென்பது அவனது முகபாவனையில் இருந்து தெளிவாகியது. அருகிலிருந்த இன்னொரு அதிகாரியிடம் அவற்றைக் காண்பித்து இவை போலியானவை எனுமாப்போல் பேசிக்கொண்டான். சிறிதுநேரம் அந்த இளைஞனைக் குடைந்தெடுத்த பின் போக விட்டான். 

தனது நாட்டினூடாகஇன்னொரு நாட்டிற்குப் பயணிக்கும் வெளிநாட்டவரை இந்தியர்கள் எவ்வளவு தூரத்திற்கு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

எனது முறை வந்தது. எங்கேயிருந்து வருகிறாய் என்கிற அதே கேள்வி. கொழும்பு என்று சொன்னதும், எங்கே போகிறாய் என்று அடுத்த கேள்வி. சிட்னி என்றதும் கடவுச்சீட்டினைப் பார்த்துவிட்டு, சரி போகலாம் என்று அனுமதித்தான். 

விமான நிலையம் விசாலமானது என்று பலமுறை சொல்லியாயிற்று. அதிலும் ஒரு சின்னச் சிக்கல். இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கின்றன சிட்னிக்கான விமானம் வருவதற்கு.

இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று யோசனை எழவே, சரி விமான நிலைய Wifi  இனை இணைந்த்து ஏதாவது பார்க்கலாம், நேரத்தைப் போக்கலாம் என்று தோன்றியது. 

சரி, விமான நிலையத்தின் Wifi இனை எனது கையடக்கத் தொலைபேசியில் தேடிய போது இணைப்புக் கிடைத்தது. ஆனால் அதற்கான கடவுச்சொல் தெரியாது. ஆகவே அங்கு பணிபுரியும் அதிகாரி எவரிடமாவது கேட்கலாம் என்று தேடினால் பலர் இருக்கிறார்கள், ஆனால் எவருமே நின்று, நிதானித்து நான் கேட்பதற்குப் பதிலளிப்பார்கள் போல்த் தெரியவில்லை. ஒருவாறு அதிகாரியொருவரை அணுகி, Wifi கடவுச்சொல் எங்கெடுக்கலாம் என்று வினவினேன். "அதற்கு நீங்கள் தகவல் அறியும் நிலையத்திற்குப் போகவேண்டும், விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அது இருக்கிறது" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 

 விமான நிலையத்தின் பலவிடங்களில் தகவலறியும் நிலையத்திற்கான வழிகாட்டும் அம்புக்குறிகள் கீறப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் வழியே போனால் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வருவது போலத் தோன்றியது. 10 - 15 நிமிடங்கள் நடந்து ஒருவாறு அந்த நிலையத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருக்கும் ஸ்கானர் ஒன்றினுள் உங்களது கடவுச்சீட்டை வைத்து ஸ்கான் செய்தால் உங்களுக்கான கடவுச்சொல் ஒன்றினை அது தரும். நான்கு மணித்தியாலங்களுக்கு அது செல்லுபடியாகும். 

சரி, மீதி நான்கு மணித்தியாலங்களுக்குப் பொழுது போக்குக்கிடைத்துவிட்டது என்கிற சந்தோசத்தில் இடம் தேடி அமர்ந்துகொண்டு யூடியூப் பார்த்தேன். யாழில் என்ன செய்தி, சி.என்.என் என்ன சொல்கிறது என்று அலசிவிட்டு இறுதியாகக் களைத்துப்போய் பேசாமல் இருந்துவிட்டேன்.

நேரமாகியதும் சிட்னி செல்லும் இந்தியர்களின் கூட்டம் அப்பகுதியில் அதிகமாகியது. விமானத்தில் பயணிகளை ஏற்றும் நேரம் வந்தபோதும் கடவுச்சீட்டுக்களைப் பரிசோதித்து விமானத்தினுள் அனுமதிக்கும் நிலை திறக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் விமானச் சேவையின் பணியாளர் ஒருவர் வந்தார். காத்திருக்கும் மக்களைச் சட்டை செய்யாது வேண்டுமென்றே தொலைபேசியில் யாருடனோ சத்தமாக உரையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் பயணிகள் கூட்டம் தாமாகவே வரிசை ஒன்றினை ஏற்படுத்தி தமக்கருகில் பயணப் பொதிகளையும் இழுத்துவைத்துக்கொண்டனர். இவை எல்லாவற்றையும் அந்த அலுவலகர் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு வேண்டுமென்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். 

பேசி முடிந்ததும், "நான் இன்னும் கவுன்ட்டர் திறக்கவிலை, ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள், அழைக்கும்போது வருங்கள், இப்போது உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள், அழைக்கும்போது வந்தால்ப் போதும்" என்று ஹிந்தியில் சத்தம் போடுவது புரிந்தது. பலர் தமது பொதிகளை வரிசையில் நின்ற இடத்திலேயே விட்டு விட்டு தமது இருக்கைகளுக்குத் திரும்பினார்கள். 

சிறிது நேரத்தின் பின்னர் சீக்கிய இனப் பணியாளர் ஒருவர் வந்தார். கூடவே பெண் பணியாளரும் வந்திருந்தார். அவர்களைக் கண்டபின்னர்தான் முதலாவது பணியாளரின் முகத்தில் சிரிப்பே வந்தது. பின்னர் இரு வரிசைகளில் நிற்குமாறு பயணிகளை அழைத்து கடவுச் சீட்டினை பரிசோதித்து உள்ளே அனுபினார்கள். வழமைபோலவே விமானத்தில் ஏறுமுன் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் வீரம் பயணிகள் மீது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆளை விட்டால்ப் போதுமடா சாமி என்று அவர்களுக்கும் அவர்களது நாட்டிற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அதே விமானம், அதே பணிப்பெண்கள், அதேயுணவு, இதைத்தவிர அந்த விமானப் பயணம் குறித்து சொல்வதற்கு விசேடமாக எதுவும் இருக்கவில்லை. 

ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி காலை 8 மணிக்கு சிட்னியில் வந்திறங்கினேன். அன்று மாலையே வேலைக்குச் செல்லவேண்டும். எல்லாம் பழமைக்குத் திரும்பியாயிற்று.

 முற்றும் !

இதனை எழுதும்படி கேட்டுக்கொண்ட நிழலிக்கும், கருத்தும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

 

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.
படிக்கும்போது பல்வேறு உணர்வலைகள்..

அதுவும் முல்லைத்தீவு நோக்கிய பயண விவரிப்பு மனசை மிகவும் அலைக்கழித்து கவலை கொள்ளச் செய்தது. மீண்டும் சுயநினைவிற்கு வர நேரமெடுத்தது. காலம் நல்ல தீர்வை வழங்கட்டும்.

வலிகளை சொல்லிய அருமையான பயணக் கட்டுரைக்கு மிக்க நன்றி, திரு.ரஞ்சித் 😌🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.