Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவெளியில் நாங்கள்..@ அமரர் ஈழநாதன் (ஈழவன்) நினைவு கட்டுரை

Featured Replies

அன்பின் யாழ் உறவுகள், வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இணைய வெளியில் சஞ்சாரம் செய்த எழுத்தாளர், கருத்தாளர் அமரர் ஈழநாதன் (ஈழவன்) அவர்கள் பதித்துச்சென்ற தடங்களின் தொடர்ச்சியாக இணைய வெளியில் நாங்கள்... எனும் சிந்தனையில் சிறகடித்து உங்கள் எண்ணங்களில் மீண்டுமொரு தடவை நான் சங்கமிக்கின்றேன்.

நேற்றுப்போல் இன்றில்லை, இன்றுபோல் நாளையில்லை. எமக்கு உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மனித வர்க்கத்தின் மாற்றங்களின் ஓர் இயங்கு தளமாக தற்போது இணையவெளியும் வியாபித்துள்ளது.

நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் எவ்வளவு நேரத்தை தினமும் இணையவெளியில் செலவளிக்கின்றோம் என்பதற்கு அப்பால் இதன் செல்வாக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எமது அன்றாட வாழ்வியலைப் பாதித்துள்ளது. இதற்கு ஒருவரும் விதிவிலக்கு இல்லை. மனித வர்க்கம் மட்டுமல்ல, வாய் பேசாத ஜீவராசிகளும், ஏனைய உயிரினங்களும்கூட இணையவெளியின் சூட்சுமத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆனால் உண்மை என்னவென்றால் என்னிடம் பேஸ்புக் கணக்கோ அல்லது ஜீமெயில் ஹாட்மெயில் மின்னஞ்சல்களோ நீண்டகாலமாக இல்லை. சில வருடங்களின்முன் அவை என்னிடமும் காணப்பட்டன. நானும் பேஸ்புக் சுழல்காற்றில் சுற்றியடித்தேன், எம்.எஸ்.என் சுனாமியில் சிக்கித்தவித்தேன். எனினும், மீண்டும் நான் நானாக சுதாகரித்து அவற்றிலிருந்து மீண்டுகொண்டேன். இதுவும் ஒரு கெட்டித்தனமோ என்று நீங்கள் நினைக்கலாம். பகிடியில்லை; கூகிழ் எனும் பெயரில் ஒன்றில் ஆரம்பித்து பிரபலத்தின் அடிப்படையிலான தரப்படுத்தலில் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் நிலைகளைப்பெற்று ஒன்றன்பின் ஒன்றாக அரக்கர்கள் போல் அணிவகுத்து நிற்கின்ற ஆயிரமாயிரம் இணையத்தளங்கள் "ஏலும் என்றால் பண்ணிப்பார்" என்று எம்மைப்பார்த்து எக்காளமிடுகின்றன, நன்மைக்குமேல் நன்மையாகவும், தீமைக்குமேல் தீமையாகவும் அவை எம்மை கட்டிப்போட்டுள்ளன.

இணையவெளியின் மூச்சுக்காற்றில் உயிர்வாழ்கின்ற உங்கள் உயிர்மூச்சையே நான் சந்தேகக்கண்களுடன் பார்க்கின்றேனோ என்று எண்ணாதீர்கள். மூச்சு வருகின்றது, போகின்றது, அது தன் வேலையை செய்கின்றது சரி, இங்கு எனது அலசல் அது எங்கள் சுவாசப்பைகளினுள் எவ்வாறு, எவ்வளவு ஆழத்தினுள் சென்று எப்படி எமது உணர்வுகளை வருடிச் செல்கின்றது என்பதே.

யாழ் இணையத்தில் நான் 2007 ம் ஆண்டு காலப்பகுதியில் தீவிரமாகவும், மிகுந்த ஆர்வத்துடனும் உலகின் வெவ்வேறு மூலைகளிலும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுடன் கருத்தாடல்களில் பங்குபற்றி பல்வேறு சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன், 2008ம் ஆண்டுடன் எனது தொடர்பாடலின் செறிவுத்தன்மை குறைந்துவிட்டது. 2010ம் ஆண்டுடன் ஏனோதானோ என்று கருத்தாடல்களில் பங்குபற்றினேன். இப்போது குறிப்பாக ஓர் கடமையின் நிமித்தம் கருத்தாடல் செய்வதுபோல் உணர்கின்றேன். அதாவது, தினந்தினம் எமக்கு ஏற்படுகின்ற அனுபவங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி, முதிர்ச்சி இவற்றின் அடிப்படையில் எங்கள் எண்ணவோட்டங்களும், செயற்பாடுகளும் மாறுபட்டு செல்கின்றன.

நாங்கள் உணவை உண்கின்றோம். ஒரு கோப்பை சோறு, கறி உண்பதற்கு எனக்கு அரைமணித்தியாலத்திற்கு மேல் எடுக்கும். காரணம் (நான் வேலை வெட்டி இல்லாமல் உள்ளேனோ என்று நினைக்கக்கூடாது) நான் உண்ணும்போது நன்றாகச் சுவைத்து உண்பேன், அத்துடன் எனது மூளையும் ஏதாவது சிந்தனையில் அப்போது ஈடுபடும். உங்களில் சிலர் அதேயளவு உணவை மூன்று, நான்கு நிமிடங்களில் உண்ணக்கூடியதாய் அமையலாம். எவ்வளவு வேகமாக நாம் உணவை உள்ளெடுக்கின்றோம் என்பது தவிர எங்கள் அனைவருக்குமே உணவு சமிபாடு அடைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். முற்றாக சமிபாடு அடைவதற்கான கால அளவு ஆறு தொடக்கம் எட்டுமணித்தியாலங்கள் என்று கற்றதாக ஞாபகம். இனி, சமிபாடடைந்த உணவின் தாக்கங்கள் எங்கள் உடலில் பூரணமாக வெளிப்படுத்தப்படுவதற்கு உண்ணுதல், சமிபாடு அடைதல் இவற்றுக்கு ஏற்படும் நேரத்தை விட பலமடங்கு நேரம் பிடிக்கும். அவை கிழமைகளாக, மாதங்களாக நீளலாம். இந்த சமிபாட்டு தொகுதியுடன் ஒப்பிடும்போது இணையவெளியும் ஓர் மாறுபட்ட ஊடகம் அல்ல. இங்கு நான் கூறவரும் விடயம் என்னவெறால் நாம் எவ்வளவு வேகமாக, எவ்வளவு வீரியமாக இணையவெளியினுள் ஐக்கியமாகின்றோம் என்பதற்கு மேலாக, குறிப்பிட்ட ஐக்கியமாதலின் பாதிப்பு எவ்வளவு காலத்திற்கு, எந்தெந்த வழிவகைகளில் எமது வாழ்வினை ஆட்டிப்படைக்கும் என்று எண்ணிப்பார்கும்போது நீங்கள் வியப்பு அடைவீர்கள்.

நீங்கள் இணையத்தளங்களுக்கு அடிக்கடி கிரமமாய் போய் வந்தால் மட்டுமே அவற்றின் தாக்கம் உங்களுக்கு ஏற்படும் என்று இல்லை. ஓரிரு தடவைகள் போய்வந்தாலே போதும், அவற்றின் தாக்கம் ஆயுளுக்கு நின்று பிடிக்கும். தவிர, நீங்கள் இணையவெளியினால் கவரப்படாவிட்டாலும் உங்கள் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், உங்களுடன் உறவாடும் எவராவது அவற்றினுள் ஐக்கியமாகினால் நிச்சயமாக அதன் பாதிப்பிலிருந்து நீங்களும் தப்பமுடியாது. இன்னோர் வகையில் இலகுவாக விளங்கப்படுத்துவது என்றால் நீங்கள் சிகரெட் குடிக்காவிட்டாலும் உங்களை சுற்றியுள்ளவர்கள் சிகரெட் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்பு போன்றது இது. எமக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் புகைப்பிடிப்பவர்களின் சூழலில் அருகாக வாழும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவு உள்ளது போன்றதே தொடர்பியல் விடயத்தில் இணையவெளியின் சமாச்சாரம். மீண்டும் கூறுகின்றேன் இதை நான் கூடாத ஓர் விடயமாக விபரிக்கின்றேன் என நினைக்கவேண்டாம்.

முன்பு எமக்கு வேண்டிய எம்முடன் அருகில் வாழாத உறவுகளுக்கு நாங்கள் எங்களினதும், எங்கள் குடும்பத்தினரினதும் படங்களை கடிதங்களில் அனுப்பிவைத்தோம். தற்போது என்ன நடக்கின்றது? "பேஸ்புக்கிலை அவளிண்ட சாமத்தியவீட்டு படத்தை போட்டு இருக்கிறீனமாம், எடுத்து காட்டுவியோ?" என்று அம்மா வந்து நச்சரிக்கின்றார். "டேய், டேய் ஸ்கைப்புக்கு வாவண்டா; எல்லாரையும் நேரில பாத்து கதைப்பம்!" என்று அக்கா தொலைபேசியூடாய் அன்புத்தொல்லை தருகின்றார். "ஏதோ கவன்மன்ற் வெப்சைட்டில போய் போம் (form) எடுத்து இத்தினையாம் திகதிக்கு முன்னம் நிரப்பி அனுப்பாட்டிக்கு ஊரில இருக்கிற , வீடு, காணிகளை அரசாங்கம் எடுக்கப்போகிதாம்!" இப்படி அப்பா புலம்பிக்கொள்கின்றார். விரும்பியோ, விரும்பாமலோ நாங்கள் எல்லோரும் இணையவெளியினுள் முழுதாகவோ, அரை, கால், மூக்காலாகவோ முங்கி எழும்பி குளியல் எடுக்கவேண்டிய நிலையில் இப்போது வாழ்கின்றோம்.

இணையவெளி சம்மந்தமாக இரண்டு விடயங்களை நான் காண்கின்றேன். ஒன்று, நீங்கள் அங்கு செலவளிக்கும் நேரம், மற்றையது அது உங்களை செலவளிக்கும் நேரம்.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நீங்கள் எவ்வளவு நேரத்தை தினமும் கழிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அங்கு செலவளிக்கும் நேரம் என்று கூறலாம். பேஸ்புக்கினுள் இல்லாமல் அதைவிட்டு வெளியேவந்து அன்றாட அலுவல்களை, காரியங்களை பார்க்கும்போது எவ்வளவு தூரத்திற்கு பேஸ்புக், இதர சமூகவலைத்தளங்கள் உங்கள் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதை அவை உங்களை செலவளிக்கும் நேரமாகக்கூறலாம். பேஸ்புக்கை அல்லது ஓர் இணையத்தளத்தை விட்டு விலகுதல் என்பதையும் இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று குறுகிய கால/தற்காலிகமான விலகல் - இது சில மணித்தியாலங்கள் தொடக்கம் சில கிழமைகள்வரை மாறுபடலாம், மற்றையது நீண்டகால/நிரந்தரமான விலகல் - இது சில கிழமைகள் தொடக்கம் சில வருடங்கள்வரை மாறுபடலாம்.

மேலுள்ள விடயத்தை இன்னும் சற்று ஆழமாக பார்ப்பதானால் இதை ஓர் உதாரணத்துடன் குறிப்பிடுகின்றேன். யாழ் இணையத்தளத்தில் நான் ஆர்வத்துடன் கருத்தாடல்களில் பங்குபற்றிய காலத்தில் எனக்கு யாழ் இணையம் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களின் தாக்கத்திற்கு இணையான தாக்கம் யாழ் இணையத்தில் நான் கருத்தாடலில் பங்குபற்றாத காலத்திலும் எனக்கு ஏற்பட்டது. கருத்தாடல்களில் ஈடுபடாவிட்டாலும், யாழ் இணையத்தின் வாசகராய் விளங்கிய காரணத்தினால் அதன் பாதிப்பு என்னைத்தொடர்ந்துள்ளது என நீங்கள் கூறலாம். வாசகராய் இல்லாமல் முற்று முழுதாக யாழ் இணையப்பக்கம் நீண்டகாலத்திற்கு தலைவைத்து படுக்காத காலத்திலும் அதன் பாதிப்பை நான் உணர்ந்துகொண்டேன். பாதிப்பு என்றதும் அதை கெட்டதாக நினைக்ககூடாது. அவற்றில் நல்லவிதமான பாதிப்புக்கள் பல, நல்லதல்லாத விதமான பாதிப்புக்கள் சில.யாழ் இணையத்தில் கருத்தாடல் செய்யாமல் அதிலிருந்து விலகி வாழ்ந்த காலத்திலும் யாழ் இணையத்தின் கருத்துக்களாகவே நான் வாழ்ந்துள்ளதை காண்கின்றேன். அதாவது, பகிர்ந்துகொண்ட பல்வேறு சிந்தனைகள் என்னை புடம்போட்டு வார்த்தெடுத்து எனக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளன. இங்கு நான் கூறவரும் விடயத்தை துல்லியமாக விளங்கிகொள்வதற்கு மீண்டும் சமிபாட்டுத்தொகுதியை, அதன் பொறிமுறையை நினைவுபடுத்துங்கள்.

கடந்த காலங்களையும், தற்காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி எங்களிடையே வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. முன்னோர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தன, எத்தனை கொடிய நோய்கள் ஏற்பட்டன, மனித வாழ்வு எவ்வளவு இடர் மிகுந்து காணப்பட்டது! ஆனினும், "எங்கடை முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையல்லோ வாழ்க்கை, நாங்கள் வாழ்வதெல்லாம் என்ன கண்டறியாத வாழ்க்கை" என்று நாம் அலுத்துக்கொள்கின்றோம். பிற்போக்கு சிந்தனைகளை எதிர்காலமாக்குவது எவ்வளவோ ஆபத்துக்கள் நிறைந்தவை. ஆயினும், பல நூறு ஆண்டுகளின் முன்னர் எழுதப்பட்ட நூற்களின் எழுத்துக்களை எதிர்காலத்தில் வாழ்க்கையாக்கவேண்டும் எனும் கனவுடன் நாம் செயற்படுகின்றோம். தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்திராவிட்டால் மனித சமூகம் உலக ஓட்டத்தில் எவ்வளவோ முடங்கியிருக்கும். ஆயினும், தொழில்நுட்பத்தினதும், விஞ்ஞானத்தினதும் செளகரியங்களில் வாழ்ந்துகொண்டு விஞ்ஞான கோட்பாடுகளையும், நவீனத்துவத்தையும் நாம் பரிகசிக்கின்றோம். இந்தவகையில் எமது கையாள்கையில் இணைய வெளியும் பல்வேறு விமர்சனங்களுக்கும், பரிகசிப்புக்களுக்கும், சோதனைகளுக்கும் உள்ளாகுவதில் ஆச்சரியம் இல்லை.

இணைய வெளியில் நாங்கள்... என்பது ஆரம்பத்தில் இணையத்தில் நாங்கள் செலவளிக்கும் நேரமாகவும், காலப்போக்கில் இணையம் எங்களைச்செலவளிக்கும் நேரமாகவும், பின்னர் அதுவே எங்கள் தனித்துவமாகவும், வாழ்க்கைப்பாதையாகவும், இறுதியில் வாழ்க்கையாகவும் மாறுவதை மகிழ்ச்சிக்குரிய விடயமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், துணிவும் எமக்குள் உண்டாகினால், அத்துடன் அதன் தொடர்ச்சியான சிந்தனைகளும், அவற்றை சீராக நெறிப்படுத்தும் ஆற்றல்களும் எமக்கு ஒருமித்து அமைந்தால் யாவும் சுபமே.

நன்றி, வணக்கம்!

@முன்னையது 23 October 2010 : கருத்தாளர் வசம்புவும் யாழ் இணையமும்: சில எண்ணத்தடங்களும் எதிர்கால பார்வையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4] அனைத்தும் உண்மை.இணைப்பிற்கு நன்றி. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால் இந்த யாழும் ஒரு போதை தான் :D கட்டுரைக்கு நன்றி கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

------

இணைய வெளியில் நாங்கள்... என்பது ஆரம்பத்தில் இணையத்தில் நாங்கள் செலவளிக்கும் நேரமாகவும், காலப்போக்கில் இணையம் எங்களைச்செலவளிக்கும் நேரமாகவும், பின்னர் அதுவே எங்கள் தனித்துவமாகவும், வாழ்க்கைப்பாதையாகவும், இறுதியில் வாழ்க்கையாகவும் மாறுவதை மகிழ்ச்சிக்குரிய விடயமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், துணிவும் எமக்குள் உண்டாகினால், அத்துடன் அதன் தொடர்ச்சியான சிந்தனைகளும், அவற்றை சீராக நெறிப்படுத்தும் ஆற்றல்களும் எமக்கு ஒருமித்து அமைந்தால் யாவும் சுபமே.

------

நீண்ட நாட்களின் பின், உங்களிடமிருந்து வந்த நல்லதொரு கட்டுரையை.. வாசித்த திருப்தி ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் பதியப்பட்ட பதிவு.

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு நன்றி கரும்பு. செல்பேசி போன்று சமூகவலைத்தளமும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.

நல்ல ஆரம்பம்... இன்னும் விரிவாக உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் முரளி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மாப்ஸ் மாப்ஸ் தான் 2007 களில் எழுதிய மாப்ஸ் எழுத்துகளுக்கும் இப்போதையை எழுத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் இப்பொழுதெல்லாம் உங்கள் எழுத்துக்கள்

ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் எழுதுவதை போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்களை எழுத்து துறையில் வளர்த்தது யாழ் என்பதில் கூடுதல் பெருமை சகோதரா

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு,

இணைய வெளியைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்திருக்கிறீர்கள். நாமெல்லாம் சிந்திப்பதோடு சரி எழுத்துக்குள் அதனைப் பொறுமையாக புகுத்தும் பக்குவம் கிடையாது அதனை உங்களிடம்தான் கற்கவேண்டும் நீண்ட காலத்திற்குப் பின்னரான உங்களுடைய ஆக்கம் சுண்டல் கூறியதைப்போன்று மிகவும் கைதேர்ந்த நேர்த்தியான எழுத்தாளனாக உங்களை இனங்காட்டுகிறது. வாழ்த்துக்கள் எங்களோடு தொடர்ந்திருங்கள்.

  • தொடங்கியவர்

அமரர் ஈழநாதன் (ஈழவன்) அவர்கட்கு முதற்கண் அஞ்சலிகள். அவர் பிரிவால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஈழவனின் இழப்பு யாழ் இணையத்தில் அண்மைக்காலமாக ஆக்கங்கள் ஏதும் படைக்காமல் இருந்த என்னை தூண்டி எழுப்பியுள்ளது. அமரர் வசம்புவுடன் இரண்டு மூன்று வருடங்கள் கருத்தாடல்கள் செய்தமையால் அவரது எதிர்பாராத மறைவின்போது வசம்பு பற்றிய நினைவுபகிர்வுகளை முன்பு இலகுவாக வழங்கமுடிந்தது. ஈழவனுடன் எனக்கு பரீட்சயம் இல்லாத காரணத்தினால் நினைவு பகிர்வாக எதையும் கூறமுடியவில்லை. ஆயினும், அவர் நினைவாக ஓர் கட்டுரையை வரைவது சக கருத்தாளன் எனும் வகையில் அவருக்கு நான் கொடுக்கக்கூடிய உயர் மரியாதையாகக்கருதினேன்.

கட்டுரைக்கான தொனிப்பொருள் சிறிது நேரம் சிந்தித்தபோது எதேச்சையாகத்தோன்றியது. இன்று அதிகாலையில் இந்த நினைவு கட்டுரையை எழுதினேன். உடற்சோர்வு காரணமாக இந்த கட்டுரையையை மேலும் சற்று விரிவாக எழுதமுடியவில்லை. அதிகம் விரித்து எழுதினால் பொறுமையுடன் எத்தனைபேர் வாசிப்பார்கள் எனும் சந்தேகமும் சற்று சுருக்கமாக கட்டுரையை நிறைவு செய்ய வைத்துவிட்டது. இந்தக்கட்டுரை மூலம் நீங்கள் ஏதும் பயனுள்ள விடயங்களை அறிந்துகொண்டால், உங்களுக்கு ஏதாவது ஓர் வகையில் இந்தகட்டுரை பயன்படுமாயின் நான் மகிழ்ச்சி அடைவேன். இணைய வெளியில் நாங்கள்.. உங்களுக்கு பிடித்திருந்தால் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் போய்ச்சேரவேண்டிய இடம் ஈழவன் அவர்களுக்கே.

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட எல்லோருக்கும் மிக்க நன்றிகள்! வாய்ப்புக்கள் கிடைக்கும்போது உங்களுடன் தொடர்ந்து ஆக்கங்களை பகிர்ந்துகொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஒரு அருமையான' சத்திய சோதனை'.

காலத்திற்குக் காலம், எம்மையும், எமது சூழ்நிலை மாற்றங்களையும், மீள் மதிப்பீடு செய்வது, எம்மை மேலும் தூய்மைப் படுத்தும், என்பது எனது எண்ணம்!

ஆனாலும், சில விடயங்களில் இருந்து, நாம் ஒதுங்குவதை விடவும், அதனை 'எப்படிக் கையாள்வது( Manage) ' என அறிந்து,அதற்கேற்றவாறு,எம்மை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலமே, பல பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்!

அதுவே தான், பரிணாம வளர்ச்சியின் இரகசியமும் கூட!

யாருக்குத் தெரியும்! அப்போது ஒதுங்கியிருந்தால், இப்போதும் குகைகளின் வாழ்ந்து கொண்டிருப்போமே, என்னவோ! :icon_idea:

நன்றிகள், கரும்பு!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கரும்பு, நல்லதொரு பதிவு, தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரையை எழுதிய கலைஞனுக்கு நன்றிகள்.

ஆரம்பகாலங்களில் வாசகனாயிருந்தபொழுது கரும்பு என்கிற முரளியின் பரமரசிகன் . முதலில் காலத்துக்கேற்ற பகிர்வை தந்த்திற்கு மிகவும் நன்றிகள் . இணையவெளியின் தொடுகை என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் மனதை ஆட்சிசெய்பவர்களால் இதுகைகூடும் . ஏறத்தாள 20 வருடங்களுக்கு முதல் ஒரு கடிதம் சோற்றுப் பருக்கையால் ஒட்டி இங்கு வர 1ல் இருந்து இரண்டு மாதங்கள் செல்லும் . அப்போது அதுதான் இணையம் . தொடர்பாடலும் அப்படியே . ஒரு ரெலிக்கொம் காட்டை வாங்கி பொதுத்தொலைபேசியில் கதைத்த பொழுது இருந்த சுவாரசியம் இப்பொழுது இல்லை என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும் . அதேவேளையில் இணையத் தொடர்பாடல் புரட்சிகள் பல பாதகங்களையும் சாதகங்களையும் செய்கின்றன . எனது அம்மா இறப்பதற்கு ஒரு கிழமைகளுக்கு முன்பு அவாவிற்கு இறுதிக்கிரியைகளைச் செய்யவேண்டிய என்னுடன் லைவ்ல் கதைக்க வைத்து , அவாவை சந்தோசத்துடன் இறக்கப் பண்ணியதும் ஸ்கைப் இணையத்தொடர்பாடலே . பாதகங்களையும் இந்த இணையத் தொடுகைகளைச் செய்யத்தான் செய்கின்றன . எதையும் அளவுடன் தொட்டால் மனதில் சஞ்சலம் இல்லை என்பது எனது கருத்து . முரளி முன்புபோல் எழுதவேண்டும் என்பதும் எனது வேண்டுகோள் .

  • தொடங்கியவர்

உங்கள் எல்லோரினதும் கருத்துப்பகிர்வுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை கரும்பு...நன்றி பகிர்விற்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாக இருக்கிறது முரளி அண்ணா. உங்கள் கரும்பு.கொம் இற்கு இடைக்கிடை வந்து ஏதாவது புதுப் பாட்டு போட்டிருக்கிறீங்கலோ எண்டு பார்ப்பது வழமை. உங்களுக்கு இயலுமான நேரங்களில் கண்டிப்பாக எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

கருத்துக்களை பகிர்ந்த எல்லோருக்கும் நன்றிகள்.

யாழ் உறவு தமிழ்தங்கை அவர்களிடம் பொறுப்பை கொடுத்து 2008இல் ஆரம்பிக்கப்பட்டது கரும்பு இணையம். காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக இப்போது அது இவ்வாறு உருமாற்றம் பெற்றுள்ளது. தற்போது பிரபலமான பாடல்களை போடுகின்றேன். எனக்கு பிடித்தமான பாடல்களையும் இடையிடையே போடுகின்றேன். யூடியூப் இணையத்தினூடாக வெளிப்படும் ஒவ்வோர்இசைக்கலைஞர்களினதும் திறமை பிரமிக்க வைக்கின்றது. ஆர்வம் உள்ளவர்கள் பாடல்களை பாடி பழகுவதற்கும், இசைக்கருவிகளில் மீட்டு பழகுவதற்கும் ஏற்றவகையில் கரும்பு இணையத்தை பாவிக்கின்றேன் தும்பளையான். குறிப்பாக இது எனக்கு எனது இசை ஆர்வத்தை தீர்க்கும் வகையில் நான் ஏற்படுத்திக்கொண்ட ஒரு ஏற்பாடு. நன்றி

Edited by கரும்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.