* Making of the "Thuvaraka"?
உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள்.
இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே.
என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை.
இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக் குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம்.
ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு.
ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி, தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது.
ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும் நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது.
அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர்.
எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது.
ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம், தமது கதையின் நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை வியப்புக்குரியதே.
அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர்.
இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள் எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்? எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை, குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும் ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி.
ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல்
விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர்.
மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்.. என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக் கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில் தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர்.
இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக் கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான்.
எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.
ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம்.
Copied:
Thanks, Uthayan S Pillai