Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியாவின் ஆத்மா உங்களை மன்னிக்குமா?- குடும்பத்தினர் ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை.

 

தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்திற்காகவே உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண்.

 

ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்ற நாகரிகம் ஒரு ஆறறிவு படைத்த மனிதனுக்கு, அதுவும் ஊடக சமூகத்திற்கு நிச்சயம் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். அரை உடலை மறைத்து ஆடை அணிவதை நாகரிகமாகக் கொண்ட ஆங்கில ஊடகங்களுக்கு தெரிந்த ஊடக தர்மம், என் தாய் மொழி ஊடகங்களுக்கு தெரியாமலிருப்பது பெருத்த அவமானத்தையும், மனவருத்தத்தையும் அளிக்கின்றது.

தேசியத் தலைவர் காலங்களிலே, சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் போராளிகளும் பொதுமக்களும் சந்தித்த பல போர் விதிமீறல்கள் புகைப்படங்களாகவும், ஒளிநாடாக்களாகவும் அமைக்கக் கூடிய சூழல்கள் இருந்தன. பாரிய சண்டைகள் இராணுவ முன்நகர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும் வித்துடல்கள் பல மிகவும் மோசமான நிலையில் கேவலப்படுத்தப்பட்டிருக்கும்.

 

அவற்றையெல்லாம் ஒளிப்படமாக்கி அவர்கள் உயிருடன் வாழ்ந்த காட்சிகளுடன் இணைத்து வெளியிடத் தெரியாதவைகளாவா விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் இருந்தன. அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை. தமிழ் ஊடக சகோதரர்களே நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி தான் என்ன ?

 

இசைப்பிரியா அவர்கள் ஒரு தமிழ்ப்பெண். ஒரு இளம் தாய், ஒரு குடும்பப்பெண். பல் திறமைசாலி, எல்லா வளமும் நிறைந்த சூழலில், குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவர்களுக்கென்று பெற்றோர், சகோதரிகள், பிள்ளைகள் என எல்லா உறவுகளுமே உண்டு. அவற்றையும் விட தமிழீழ தேசியத் தலைவரின் வளர்ப்பிலே இணைந்து பத்தாண்டிற்கு மேலாக ஊடகப் போராளியாக வலம் வந்து தலைவரதும் தமிழ் மக்களதும் நன்மதிப்பை பெற்றவள்.

கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில் கூட, அவள் தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி தவிப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாள். அவளின் பாசமான வார்த்தைகளை என்றுமே எம் தமிழ் உறவுகள் மறக்க மாட்டார்கள்.

 

ஊடக சகோதரர்களே! அவளை நீங்கள் அறிந்திருந்தால்தானே அவளது மென்மையும், தாய்மையும், சகோதரப் பாங்கும் உங்கட்குப் புரியும். பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க உங்களுக்கு எப்படி மனம் ஒப்பியது. அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல தாயக்த்தே அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் உங்கள் பொறுப்பற்ற செயலை கண்டித்த வண்ணமே உள்ளார்கள்.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட இறுதி தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது உயிருடன் பிடிக்கப்பட்டு இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். துவாரகாவிலிருந்து மாறுபட்ட தோற்றமுடையவளாக இசைப்பிரியா இருந்திருந்தால் கூட சிங்களக் காடைகள் அவளை உயிருடன் விட்டிருக்கப்போவதில்லை. இந்தத் தகவலே போர் விதி மீறலுக்குப் போதுமான ஆதாரமாகும்.

 

சேனல்-4 ஒரு காணொளியை வெளியிட்டால் உடனேயே அதற்கொரு கதை, வசனம், நெறியாள்கை செய்து சினிமாப் படமாக வெளியிடுகின்றீர்கள். சினிமாப் படங்களுக்குக் கூட ஒரு தணிக்கை உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான் வெளியிடுவீர்களா? உங்கள் வீட்டுப் பெண்கள் உங்களிடம் இதுபற்றி மனம் வருந்தவில்லையா? உங்களது இந்த அபரிதமான அத்துமீறல்களையிட்டு இசைப்பிரியா குடும்பம் சார்பாக எனது அதிருப்தியையும், மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

இவ் ஒளிநாடாக்களை சிங்களவனிடமிருந்து பெற்று அதில் உள்ளவற்றை பொறுப்பற்ற முறையில் பிறரிடம் கையளித்த தமிழ் உறவுகளிடமும் எமது மன வருத்தத்தினை இவ்விடத்திலே நாம் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இதில் சம்பந்தப்பட்டிருப்பது உங்கள் அனைவருக்காகவும் மடிந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் மானம் என்பதை ஏன் நீங்கள் சிந்திக்க மறந்தீர்கள். அவளது தியாகத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகின்றீர்கள்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளென இணையங்களில் தோன்றுபவர்களே…உங்களுக்கும் இது தோன்றவில்லையா?? இதற்கான உங்கள் முன்னெடுப்பென்ன?? அவளின் பெயரை சொல்லி புகைப்படங்களில் காட்சி கொடுக்கும் நீங்கள், அசிங்கமான காட்சிகளை தணிக்கை செய்யவேண்டுவதிலும் எமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

தமிழர் மீதான, உலகறிய நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணையை நடத்த உலகைத் தூண்ட வேண்டியது ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளான எமது கடமையாகும். ஆனால், சம்பவக் கோர்வைக்காகவும், வியாபார நோக்கு, சுயஇலாபம் கருதியும் உங்கள் மனத்தே எழும் கற்பனைகளையும், யூகங்களையும் கருவாக்கி ஒளிப்படங்களுக்கேற்ப கதையெழுதும் பொறுப்பற்ற சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடானது எமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.

 

53வது படையணிக்கு கட்டளையிட்டவர்களும், படைப்பிரிவு அமைப்பவர்களும் போல் உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் எழுதும் வார்த்தைகள் எம் இதயங்களை ஈயக்குண்டுகளாக ரணமாக்குகின்றன. இசைப்பிரியாவையும், வேறு குடும்ப உறவுகள் மூவரையும் இழந்து நான்கரையாண்டுகளாக வளமிகு எம் தாய்நாட்டை விட்டு நாதியற்றலையும் எங்களை, நீங்களுமா துன்பப்படுத்த வேண்டும்.

 

ஊடகக் கோட்பாடுகளயும், அறநெறிகளயும் மீறிய சில தமிழ் ஊடகவியலாளர்களதும் அவர்கள் நடத்தும் இணையங்களதும் செயற்பாடானது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் ஏனைய தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களையும் சேர்த்தே பாதிக்கின்றது என்பதை ஒரு ஊடகப் போராளியின் சகோதரி என்ற முறையில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 

இசைப்பிரியா எம் குடும்பத்தின் அன்பு தேவதை, இசைப்பிரியா தமிழினத்தின் ஒட்டுமொத்த வலிக்கான உணர்வாதாரம். இசைப்பிரியா பூசிக்கப்பட வேண்டிய ஒரு தமிழ்த்தாய். அவளை சிங்களவனுடன் சேர்ந்து நீங்களும் அசிங்கப்படுத்தாதீர்கள். சக ஊடகவியலாளர்களதும், அவரது குடும்பத்தாரதும் உணர்வுகட்கு மதிப்பளியுங்கள்.

 

இசைப்பிரியா சார்பாகவும், அவரது குடும்பத்தினர் சார்பாகவும் எனது உணர்வுபூர்வமான வேண்டுகோள் என்னவென்றால், இன்று முதல் இசைப்பிரியா தொடர்பான எந்தவொரு அசிங்கமான ஒளிப்படங்களையோ, காணொளிகளையோ, சம்பவ யூகக் கற்பனைகளையோ வெளியிடாதீர்கள். இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது.

 

எமது இவ் வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எம்மை சட்ட நடவடிக்கை நோக்கி செல்லும் சந்தர்ப்பத்திற்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.

 

குடும்பத்தினர் சார்பாக

-திருமதி தர்மினி வாகீசன்-

08.11.2013

  • கருத்துக்கள உறவுகள்

எமது பல ஊடகங்களில் இந்த அடிப்படை மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது கடினம்.. பலம் வாய்ந்த மேற்கு ஊடகங்களிலும் இதையேதான் செய்கிறார்கள்.. ஆனால் தமிழர்கள் செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அன்று.

Well அதே கையோடை கொலை செய்த ஆமிக்கும் எதிராக ஒருக்கால் ஒரு வழக்கு தொடரவேண்டும் தர்மினி வாகீசன் அம்மா.

பிளம்பு மூலத்தை போடவில்லை. ஆனால் இதை பிரசுரித்த இன்னொரு தமிழக ஊடகம். ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால்  ஈழ செய்திகளை எழுதும் வழக்கமுடையது, ஆனால் இதை கவனமாக நேரத்துக்கு பிரசுரித்துள்ளது.

 

http://www.inneram.com/news/srilanka.html

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் இதன் மூலத்தினைக் குறிப்பிட மறந்து விட்டேன்:

 

மூலம்: http://www.radarnews.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99/

 

மல்லைக்கு, இந்த குடும்பத்தின் வேதனையை விட தனது அரசியல் தான் முக்கியமாகி, இதனை பிரசுரித்த தளங்களின் மூலவேர்களைத் தேடுகின்றார்.

 

ஒரு சகோதரனாக, பெற்றோராக, ஒரு குடும்ப உறுப்பினராக இருக்கும் ஒருவர் தன் சகோதரியின், மகளின் சிதைக்கப்பட்ட நிர்வாணப் படத்தினை  திரும்ப திரும்ப மீடியாக்களின் வாயிலாக வர்ணணைகளுடன் பார்க்க கிடைக்கும் அவலத்தினை என்னவென்று சொல்வது. எவ்வளவு பெரிய வேதனை அது.  அந்த இடத்தில் தன்னை செருகி வைத்து பார்த்தாவது இக் குடும்பத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வழக்கு போடச் சொல்லிக் கேட்பதை விட புலம்பெயர் நாட்டில் வசதியாக இருக்கும் நீங்களே அந்த முயற்சிகளை செய்யலாம்.

 

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது அக்கறையா. அப்படியாயின் ஏன் கணவனை.. குழந்தையை இழந்த அந்த பெண்ணை தட்டந்தனிய விட்டு பெற்றோர் சகோதரிகள்.. போனார்கள். அதனாலும் தானே அவவுக்கு இக்கதி நேர்ந்தது...!

 

மேலும் பிழம்பு முக்கிய காலக்கட்டங்களில் செய்தி இணைக்க வருகிறார். அப்புறம்.. அந்தக் காலக்கட்டம் அடங்கியதும் ஒடுங்கிவிடுகிறார்.

 

இது செய்திகளை.. உண்மைகளை மலினப்படுத்தும் நோக்கம் கொண்டதோ என்றும் சந்தேகிக்கச் செய்கிறது.

 

இசைப்பிரியாவின் துயர் உலகின் முன் கொண்டு வரப்பட வேண்டும். அவருக்கு மட்டுமல்ல.. அவர் போன்ற ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கனும். இதுதான் அநேக ஊடகங்களின் நோக்கமும் கூட. சில தடவைகளில் ஊடக தர்மங்கள் மீறப்படுவது நடந்தாலும் பல ஊடகங்கள் அதைக் காக்கச் செய்கின்றனவே.

 

இசைப்பிரியாவின் உடல் மீது இவ்வளவு அக்கறை செய்பவர்கள்.. ஏன் அவர் மீது இவ்வளவு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் தனிய விட்டார்கள்..?????????????????????????????????????????????????!

 

அங்கு எங்கோ போனது நீதி தர்மம்.. நியாயம். அவரை ஒரு ஆபத்துக்குள் தள்ளிவிட்டு சிங்கள இனவெறி மிருகங்களுக்கு இரையாக்கியது தப்பே இல்லையா..???! :icon_idea::rolleyes:


இறந்த பெண்ணின் மானம் காக்கிறோம் என்ற போர்வையில் அவள் மானம் இழந்ததை.. அவள் மானம் பறித்தவர்களை மறைக்கவா.. காக்கவா இந்தக் கட்டுரைகள்..?????????????????????????! இதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. அக்கறையிலும்..! :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. இசைப்பிரியாவின் விவகாரத்தை வெளியே பிரபலப்படுத்தியமை ஊடகங்களின் சிறப்பான பணி.. ஆனால் படங்களை போதிய அளவு உருமறைப்பு செய்யவில்லை.. இறந்தவர்களின் உடல்களை மலினப்படுத்துவது பாரதூரமான குற்றம்.. அதை சிங்களவன் செய்தான்.. ஆனால் அச்செய்தியை தமிழ் ஊடகங்கள் எடுத்துவரும்போது கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்பதே இங்கு ஆதங்கம். எல்லா ஊடகங்களையும் குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் திருமதி தர்மினி வாகீசன் கூறியதை ஆமோதிக்கிறேன். ஏனெண்டால் நானும் இசைப்பிரியாவின் குடும்பத்தில்சார்பில் சாருமதி லோகேசுவரன் பாருங்கோ. நான் நிறையவே நெடுந்தீவை வாழ்விடமாகக் கொண்டோரவர்களில் அனேகரை நண்பர்களாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள் யாரும் இப்படிப்புலம்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதங்கம் சரியாயினுன், எழுதிய வரிகள், அனுபவம் மிக்க பத்திரிகையாளரது போலுள்ளதே என்னும் எண்ணம் வருவதால், இது அவரது குடும்பத்தில் இருந்து தான் வந்ததா என்னும் கேள்வி எழுகிறது.

குடும்பமாயின் இது இன்றல்ல, அன்றே வந்திருக்க வேண்டும்.

அரசின் இன்றைய உலகலாவிய அழுத்தம், காரணமாக, புலம் பெயர் தமிழர் வாயை, உணர்வு பூர்வமாக அடக்க, குடும்பம், இவ்வாறு எழுத, நிர்ப்பந்திக்கப் பட்டதா?

அழுத படி, நிர்வானமாக ஓடிய சிறுமியே, வியட்னாமின், தலைவிதியை மாற்றினார்.

மாண்டு போன பல்லாயிரக் கணக்காணவர்களுக்கு, இசைப்பிரியா, நீதியைப் பெற்றுத் தருவார்.

இச்செய்தியில் உள்நோக்கம் இருக்கிறது, அதை இங்கு இணைத்தவரும் உள்நோக்கத்துடன் இணைத்துள்ளார். :D

நேற்று / நேற்று முன்தினம் இசைப்பிரியா பற்றிய இன்னொரு திரி ஊர்ப்புதினம் பகுதியில் pinned செய்யப்பட்டிருந்தது. அதுவும் எந்தவித ஆதாரமுமற்ற பொய்யான செய்தி. இப்பொழுது அது unpinned செய்யப்பட்டு இந்த செய்தி pinned செய்யப்பட்டுள்ளது. :rolleyes:

மற்றபடி தமிழ் ஊடகங்களிடம் உடல் உறுப்புகளை மறைத்து வெளியிடுமாறு கோரிக்கை விடலாம். ஆனால் அவரது படங்களையே/வீடியோக்களையே வெளிவிட வேண்டாம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. இது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. :rolleyes:

உண்மையிலே இசைப்பிரியா குடும்பத்தினர் இவ்வாறு கூறினார்களா தெரியவில்லை. :unsure: கூறியிருந்தால் அவர்களது செய்தி திரிவுபடுத்தப்பட்டு வந்திருக்கலாம் :unsure: அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு கூற வைக்கப்பட்டுமிருக்கலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா என்பது ஒரு தனிப்பெண்ணாக பார்க்கமுடியாது அவர் ஒரு இனத்தின் மீதான இன்னொரு இனம்சார்ந்த அரச பயங்கரவாதத்தினால் ஆழமாக சிதைக்கப்பட்ட இனத்தின் குறியீடு. அவரே இன்றைய காலத்தில் எம்மினப்பெண்கள் எதிர்நோக்கும் பெருவதைகளுக்கு சாட்சியாக இருக்கிறார். இசைப்பிரியா என்பவள் தன் துயரங்களினூடாக எம்மினத்தின் காவல் தெய்வமாக உரு மாறியிருப்பதை நெருங்கிய உறவுகள் உணர்ந்து கொள்ளவேண்டும். இசைப்பிரியா வெறும் சதைப்பிண்டம் அல்ல ஒரு இனத்தின் விடுதலையை நிர்ணயிக்கப்போகும் காலக்குறியீடு. 

 

தமிழ் ஊடகங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தர்மம் அதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இசைப்பிரியாவின் வெற்றுடலை தொடர்ந்தும் உரு மறைப்புச் செய்யாமல் வெளியிடுவதை சற்று தவிர்த்தால் நன்று.

Edited by வல்வை சகாறா

இசைப்பிரியா சார்பாகவும், அவரது குடும்பத்தினர் சார்பாகவும் எனது உணர்வுபூர்வமான வேண்டுகோள் என்னவென்றால், இன்று முதல் இசைப்பிரியா தொடர்பான எந்தவொரு அசிங்கமான ஒளிப்படங்களையோ, காணொளிகளையோ, சம்பவ யூகக் கற்பனைகளையோ வெளியிடாதீர்கள். இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது.
 
இசைப்பிரியா குடும்பத்தினரே,

இந்த தகவலை வைத்து எம்மால் இந்த உலகத்தை நம்ப வைக்க முடியவில்லையே. நம்புவார்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உலக நாடுகள் அப்பொழுதே தவிர்த்திருப்பார்களே.. எப்பொழுது channel 4 காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டதோ அதன் பின்னர் தானே எம்மக்களின் அவலங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஆதாரமற்று கூறப்படும் செய்தி எவ்வளவு உண்மையாக இருப்பினும் இந்த உலகம் நம்பாது என்பதை இன்னும் புரியாதவரா நீங்கள்.

எம்மக்கள் ஒன்றும் சிங்களவர்கள் போல் காமக்கண் கொண்டு இசைப்பிரியாவின் உடலை நோக்கவில்லை. அந்த அக்காவுக்கு நடந்த கொடுமையை நினைத்து மனம் நொந்து தான் தகவல் பகிர்கிறார்கள். என்னதான் நாம் அவர் உடலை மறைத்து வெளியிட்டாலும் channel 4 ஊடகத்தில் ஏற்கனவே வந்தது வந்தது தான்.

ஆனாலும் தமிழ் ஊடகங்கள் உடலை மறைத்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது. ஆனால் "இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது." என்ற கூற்று ஏற்புடையதல்ல. :rolleyes:

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த குடும்பத்தின் முக்கிய வேண்டுகோளாக இருப்பதே கண்ணியமான முறையில் இசைப்பிரியா தொடர்பான செய்திகளை வெளியிடுமாறு என்பதே. முக்கியமாக படங்களை பிரசுரிக்கும் போது காட்டப்பட வேண்டிய அடிப்படை கண்ணியத்தினையும், கொலையை சித்திகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புணர்வினையும் அவாவி நிற்கின்றது. எல்லா ஊடகங்கள் மீதும் குற்றம் சாட்டாமல் இவ்வாறு கண்ணியமற்ற விதத்தில் அப்பட்டமாக படங்களை பிரசுரித்து, கொலையை வர்ணித்து எழுதிய ஊடகங்களைத் தான் அவர்கள்.

 

தமிழ் இணையங்களில் பல தளங்கள் எந்தவிதமான தணிக்கையும் இன்றி அப்படியே பிரசுரித்து வருகின்றன. இது கண்ணியத்தினை மீறிய செயல் மட்டுமன்றி சர்வதேச ஊடக நெறிகளுக்கும் முரணானது. இசைப்பிரியாவை காவல் தெய்வம் என்று அழைக்கின்றவர்கள் கூட இந்த கண்ணியத்துக்கு எதிரான செயலை நிறுத்தக் கோரும் கோரிக்கைக்கு பின்னால் இருக்கக் கூடிய நியாயத்தன்மையை விளங்க மறுக்கின்றனர். சிங்கள காடையர்களால் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மீண்டும் மீண்டும் அப்பட்டமாக பிரசுரித்து பல்லாயிரம் தடவை மீண்டும் மீண்டும் கொலை செய்யும் தமிழ் ஊடகங்களின், அதனை முன்னிலைப் படுத்தும் தலைவர்களின் செயலை கண்டிக்க மறுக்கின்றனர்.

 

சிங்கள இராணுவப் பயங்கரவாதிகளால் போராளிகளும் பொதுமக்களும் சந்தித்த பல போர் விதிமீறல்கள் புகைப்படங்களாகவும், ஒளிநாடாக்களாகவும் அமைக்கக் கூடிய சூழல்கள் இருந்தன. பாரிய சண்டைகள் இராணுவ முன்நகர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும் வித்துடல்கள் பல மிகவும் மோசமான நிலையில் கேவலப்படுத்தப்பட்டிருக்கும்.

 

அவற்றையெல்லாம் ஒளிப்படமாக்கி அவர்கள் உயிருடன் வாழ்ந்த காட்சிகளுடன் இணைத்து வெளியிடத் தெரியாதவைகளாவா விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் இருந்தன. அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை. தமிழ் ஊடக சகோதரர்களே நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி தான் என்ன ?

 

 

இந்தக் கேள்வியின் நியாயம் எனக்கு நன்கு புரிகின்றது. விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்கள் காட்டிய கண்ணியத்தினை எல்லா ஊடகங்களிடமும் எதிர்பார்பதில் என்ன தவறு என்று புரியவில்லை.

 

 

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது அக்கறையா. அப்படியாயின் ஏன் கணவனை.. குழந்தையை இழந்த அந்த பெண்ணை தட்டந்தனிய விட்டு பெற்றோர் சகோதரிகள்.. போனார்கள். அதனாலும் தானே அவவுக்கு இக்கதி நேர்ந்தது...!

 

 

இசைப்பிரியாவின் உடல் மீது இவ்வளவு அக்கறை செய்பவர்கள்.. ஏன் அவர் மீது இவ்வளவு ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் தனிய விட்டார்கள்..?????????????????????????????????????????????????!

 

அங்கு எங்கோ போனது நீதி தர்மம்.. நியாயம். அவரை ஒரு ஆபத்துக்குள் தள்ளிவிட்டு சிங்கள இனவெறி மிருகங்களுக்கு இரையாக்கியது தப்பே இல்லையா..???! :icon_idea::rolleyes:

 

 

போரின் அவலத்தில் அள்ளுண்டு ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் கண் முன்னே பலியாகிக் கொண்டு இருக்கக் கூடிய ஒரு சூழலில் அகப்பட்டு மிஞ்சி ரணங்களுடன் வாழும் மக்களிடம் இப்படிப் பட்ட அடிப்படை மனிதாபிமானமற்ற கேள்விகளை உங்களால் மட்டுமே கேட்க முடியும். தொடர்ந்து இப்படியே எழுதுங்கள்

 

மேலும் பிழம்பு முக்கிய காலக்கட்டங்களில் செய்தி இணைக்க வருகிறார். அப்புறம்.. அந்தக் காலக்கட்டம் அடங்கியதும் ஒடுங்கிவிடுகிறார்.

 

 

நான் எப்ப எந்த நேரங்களில் செய்தி இணைக்க வேண்டும் என்பது முற்றிலும் என் தெரிவினை சார்ந்தது. எப்ப யாழில் செய்திகள் இணைக்ப்படுவது குறைகின்றதோ, இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் அவதானிக்கப்படுகின்றதோ, செய்திகள் மக்களைச் சென்றடைவதற்குரிய நேரங்களில் அவை சென்றடைவதில் தாமதம் நிகழ்கின்றதோ அந்தக் காலகட்டங்களில் செய்திகளை இணைப்பதற்கான தேவையை நான் உணர்ந்து கொள்கின்றேன். இவற்றை எல்லாவற்றையும் விட எனக்கு செய்திகளை இணைக்க நேரமும்,வேலைப் பளுவின்மையும் கிடைக்கின்றதோ அப்போது செய்திகளை / பதிவுகளை இணைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நெட்டும்

போரின் அவலத்தில் அள்ளுண்டு ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் கண் முன்னே பலியாகிக் கொண்டு இருக்கக் கூடிய ஒரு சூழலில் அகப்பட்டு மிஞ்சி ரணங்களுடன் வாழும் மக்களிடம் இப்படிப் பட்ட அடிப்படை மனிதாபிமானமற்ற கேள்விகளை உங்களால் மட்டுமே கேட்க முடியும். தொடர்ந்து இப்படியே எழுதுங்கள்

 

 

நான் எப்ப எந்த நேரங்களில் செய்தி இணைக்க வேண்டும் என்பது முற்றிலும் என் தெரிவினை சார்ந்தது. எப்ப யாழில் செய்திகள் இணைக்ப்படுவது குறைகின்றதோ, இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் அவதானிக்கப்படுகின்றதோ, செய்திகள் மக்களைச் சென்றடைவதற்குரிய நேரங்களில் அவை சென்றடைவதில் தாமதம் நிகழ்கின்றதோ அந்தக் காலகட்டங்களில் செய்திகளை இணைப்பதற்கான தேவையை நான் உணர்ந்து கொள்கின்றேன். இவற்றை எல்லாவற்றையும் விட எனக்கு செய்திகளை இணைக்க நேரமும்,வேலைப் பளுவின்மையும் கிடைக்கின்றதோ அப்போது செய்திகளை / பதிவுகளை இணைகின்றேன்.

 

குற்றங்களை மறைக்கத்தக்க குற்றவாளிகளை தப்ப வைக்கக் கூடிய வகையில் ஊடகங்கள் மீது (ஏனெனில் அவதானித்த அளவில் பெரும்பாலான ஊடகங்கள்.. உருமறைப்புச் செய்தும்.. காணொளிகள் பற்றிய எச்சரிக்கை வழங்கியுமே.. போர்க்களச் செய்திகளைப் பிரசுரித்துள்ளன. தமிழ் நெட்டும் கூட அப்படியே தான் செய்துள்ளது.) சகட்டு மேனிக்கு தாக்குதல் நடத்துவதில் இல்லாத மனிதாபிமானம்.. ஏப்பா உன் பிள்ளையை தனிய ஆமிக்காரனட்ட விட்டிட்டு வந்தனீ என்று கேட்கிறதில மனிதாபிமானம் தொலைஞ்சு போச்சுது என்று நீங்கள் கருதினால்.. அதுவே சிறந்த மனிதாபிமானமாக இருந்திட்டுப் போகட்டும்.

 

ஒவ்வொரு முக்கிய கட்டங்களிலும் நேரம் கிடைக்குது.. மற்ற நேரங்களில் கிடைக்குதில்லை என்றது கொஞ்சம் நம்பக் கஸ்டமாக இருக்கிறது. மேலும் இணைக்கும் செய்திகள் எல்லாம் முக்கியமானவை என்பதை விட பல்நோக்கங்களை நிரப்பும்.. நிரப்பல் தன்மை கொண்டனவாக.. உள்ளன. இது களத்தில் நாங்கள் அவதானித்தது. உங்களுக்கு ஒட்ட உள்ள உரிமையைப் போலவே வாசகனுக்கு தனது கருத்தைச் சொல்லவும் உரிமை உள்ளது..!

 

ஒட்டுக்குழுக்களே இவ்வாறு ஊடக தர்மத்தை மீறுவது அதிகம். அவர்களின் ஊடகங்களைப் பார்த்தால் இவை புரியும். அவர்கள் தான் இப்படியான போட்டாக்களை முகநூலிலும் போட்டுவிடுகிறார்கள். தேசிய தலைவர் பற்றிய படங்களும் அவர்களால் திட்டுமிட்டு போடப்படுவதை அவதானித்துள்ளோம். சிங்கள அரசின் ஏவல் நோக்கத்தோடு இப்படி அவை செய்து கொண்டு.. இவ்வாறான அறிக்கைகள் மூலம்.. அந்த அரசின் கொடூரங்கள் வெளிவந்து தந்து வரும் தாக்கங்களை குறைக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகமே இங்கு வலுப்பெறுகிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா என்பது ஒரு தனிப்பெண்ணாக பார்க்கமுடியாது அவர் ஒரு இனத்தின் மீதான இன்னொரு இனம்சார்ந்த அரச பயங்கரவாதத்தினால் ஆழமாக சிதைக்கப்பட்ட இனத்தின் குறியீடு. அவரே இன்றைய காலத்தில் எம்மினப்பெண்கள் எதிர்நோக்கும் பெருவதைகளுக்கு சாட்சியாக இருக்கிறார். இசைப்பிரியா என்பவள் தன் துயரங்களினூடாக எம்மினத்தின் காவல் தெய்வமாக உரு மாறியிருப்பதை நெருங்கிய உறவுகள் உணர்ந்து கொள்ளவேண்டும். இசைப்பிரியா வெறும் சதைப்பிண்டம் அல்ல ஒரு இனத்தின் விடுதலையை நிர்ணயிக்கப்போகும் காலக்குறியீடு. 

 

தமிழ் ஊடகங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு தர்மம் அதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இசைப்பிரியாவின் வெற்றுடலை தொடர்ந்தும் உரு மறைப்புச் செய்யாமல் வெளியிடுவதை சற்று தவிர்த்தால் நன்று.

 

நன்றி

நாம் எழுதுவதைவிட

ஒரு பெண்ணின் கருத்து பலதைச்சொல்லி  நிற்கக்கூடியது

நன்றி  கருத்துக்கும்  நேரத்திற்கும்......

  • கருத்துக்கள உறவுகள்

மானம், கற்பு என்பவற்றை, வெறும் உடலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கின்ற 'பார்வை' மிகவும் தவறானது என்பது எனது கருத்து! இப்படியான 'சமுதாயப் பார்வை' யினால், எத்தனையோ குற்றங்கள் வெளியே வருவதில்லை! இத்தகைய பார்வை 'குற்றவாளிகளைப்' பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவுமே உதவும்! இசைப்பிரியா, அக்கிரமங்களைக் காணப்பொறுக்காத ஒரு போராளியாகவே, தன்னைப் பல தருணங்களில் வெளிக்காட்டியுள்ளார்! ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பெண்களே, மாறிக்கொண்டு வருகின்ற காலத்தில், வெறும் பெண்ணுடலின் ;நிர்வாணம்; மட்டும் ஒருவரது மானத்தைக் காப்பாற்றி விடாது! பண்பிலாமல், இசைப்பிரியாவின் படங்களை இணையங்களில் வெளியிடுபவர்கள், தங்களைத் தாங்களே தால்திக்கொள்ளுகின்றார்களேயன்றி, இசைப்பிரியாவின் 'மானத்துக்கு' எந்த விதமான பங்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!  

திலீபன் போன்ற போராளிகளைப் போன்று, தாங்கள் இறந்த பின்னும் தங்கள் 'வித்துடல்' மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாக இருந்திருக்கும்!

இந்த வகையில், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு, இந்தப்புகைப்படங்கள் உதவுமெனில், இன்னும் பல வல்லுறவுகளை இந்தப் படங்கள் தவிர்க்குமெனில், இசைப்பிரியாவுக்கு எந்த விதமான, மானபிரச்சனையும் வந்து விடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்! அப்படி ஏதாவது வருமெனின், அது எப்போதோ வந்திருக்க வேண்டும்! இனிமேல் தான் வரவேண்டும் என்று இல்லை!

அந்த 'வியட்நாமிய சிறுமியைப்போல', இசைப்பிரியா என்ற சகோதரி தமிழ் மக்களின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் 'முத்திரையாக' அமைகிறாள்!

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமையை காணொளியில் பார்த்தபோது ஒரு தமிழ்த் தாயை சிங்கள மிருகங்கள் சீரழிக்கும் காட்சி ஆத்திரத்தையும், எதையும் செய்ய முடியவில்லையே என ஆற்றாமையும், பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்ற எண்ணத்தையுமே ஏற்படுத்தியது. ஏதாவது செய்யவேண்டுமென்ற ஆவேசம் எழுந்ததே தவிர ஒரு பெண்ணை அம்மணமாகப் பார்க்கிறேன், ஆபாசமாகக் காட்டுகிறார்களே என்ற நினைவோ, உணர்வுகூட தோன்றியதில்லை. ஆனால் இத்திரியில் வந்த செய்தியைப் படித்தபின்னரே அப்படத்திலுள்ள தாயின் அம்மணக்காட்சி எண்ணத்திற்கு வந்து அதனைப் பார்த்த என்னையும் குற்றவாளியாக்கி வதைக்கிறது. நாதமுனி அவர்கள் தெரிவித்ததுபோல், ''அரசின் இன்றைய உலகலாவிய அழுத்தம், காரணமாக, புலம் பெயர் தமிழர் வாயை, உணர்வு பூர்வமாக அடக்க, குடும்பம், இவ்வாறு எழுத, நிர்ப்பந்திக்கப் பட்டதா?'' என்பதுபோல் எண்ணவே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது அக்கறையா. அப்படியாயின் ஏன் கணவனை.. குழந்தையை இழந்த அந்த பெண்ணை தட்டந்தனிய விட்டு பெற்றோர் சகோதரிகள்.. போனார்கள். அதனாலும் தானே அவவுக்கு இக்கதி நேர்ந்தது...!

 

முள்ளிவாய்க்காலில் குடும்பங்களாக இருந்தவர்களுக்கு இப்படியான சாவு வரவில்லை என்று உங்கள் கருத்து மறைமுகமாக கூறுகிறது. இப்படியான பெரிய பொய்யை எப்படி மனம் வந்து நீங்கள் எழுதினீர்கள்?

 

பாதிக்கபப்ட்டவர்களை குற்றவாளிகளாக காட்டுவதில் ஆர்வமுள்ள உங்களுடைய கருத்துகளிலும் பார்க்க ஸ்ரீலங்கா இராணுவ பேச்சாளரின் கருத்துகள் நாகரிகமாக தெரிகின்றன.

 

 

 

 
இசைப்பிரியா குடும்பத்தினரே,

இந்த தகவலை வைத்து எம்மால் இந்த உலகத்தை நம்ப வைக்க முடியவில்லையே. நம்புவார்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உலக நாடுகள் அப்பொழுதே தவிர்த்திருப்பார்களே.. 

 

துளசி,

 

உலக நாடுகளுக்கு இலங்கையில் நடப்பது தெரியவில்லை என்றும் அதனாலேயே  முள்ளிவாய்க்கால் பேரவலத்தை இந்த நாடுகள் தவிர்க்கவில்லை என்றவாறாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இது முற்றிலும் தவறானது.

உலகநாடுகளில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்கும் பலத்தை கொண்டிருந்த அமேரிக்கா எல்லாவற்றையும் அறிந்தே இருந்தது. விடுதலைபுலிகள் வெல்லமுடியாது என்பதை முன்கூட்டியே அவர்களுக்கே எரிக சொல்ஹெய்ம் ஊடாக தெரியப்படுத்தியும் இருந்தது. மக்களை போர்க்களத்துக்கு அப்பால் வெளியேற அனுமதிக்குமாறு பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கோரி இருந்ததன. இதற்கு மேலே அமெரிக்கா செய்யக்கூடியாதாக ஒன்றே ஒன்றுதான் இருந்தது - அது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை. இந்தியாஅதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைக்கு ஏற்படும் செலவுக்கும் அமெரிக்க உயிரிழப்புகளுக்கும் அமெரிக்க மக்களுக்கு பதிலளிக்கும் நிலையில் அமெரிக்க அரசு இல்லாத காரணத்தால் அமேரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையை இசைபிரியவின் மனதை புண்படுத்தும் படங்கள் மாற்றமுடியாது.

 

 

 

திருமதி தர்மினி வாகீசன் அவர்களுக்கு,

 

நீங்கள் குறிப்பிட்டபடி, ஒரு சில ஊடகங்களுக்காவது, அவர்களது நடவடிக்கைகளால் ஏற்பட்ட

மனவேதனைக்காவும் ஏனைய  பாதிப்புகளுக்காவவும் நட்ட ஈடு கோரி உங்கள் வழக்கறிஞர்   ஊடாக கடிதம் அனுப்புங்கள். இந்த பிரசுரத்தை எழுதுவதற்கும் உங்கள் வழக்கறிரே உதவி இருப்பது போல தெரிகிறது. அவரது உதவி மூலமே இதனை நீங்கள் தடுக்க முடியும். 

இசைப்பிரியாவின் போராட்டப்பங்களிப்பை போன்று அவர்களது குடும்ப வேறு அங்கத்தினரின் போராட்ட பங்களிப்பும் மதிப்பிற்குரியது.அது போராட்ட பகுதிகளில் இருந்தவர்களுக்கு தெரியும். 
போராளிகள் / மாவீரர்கள் இனத்தை பிரதிநிதி படுத்துபவர்கள் .போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அவர்கள் பயன்படுத்தபடுவதில் தவறு இருக்காது என்று நினைக்கிறேன்.

 

துளசி,

 

உலக நாடுகளுக்கு இலங்கையில் நடப்பது தெரியவில்லை என்றும் அதனாலேயே  முள்ளிவாய்க்கால் பேரவலத்தை இந்த நாடுகள் தவிர்க்கவில்லை என்றவாறாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இது முற்றிலும் தவறானது.

உலகநாடுகளில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்கும் பலத்தை கொண்டிருந்த அமேரிக்கா எல்லாவற்றையும் அறிந்தே இருந்தது. விடுதலைபுலிகள் வெல்லமுடியாது என்பதை முன்கூட்டியே அவர்களுக்கே எரிக சொல்ஹெய்ம் ஊடாக தெரியப்படுத்தியும் இருந்தது. மக்களை போர்க்களத்துக்கு அப்பால் வெளியேற அனுமதிக்குமாறு பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கோரி இருந்ததன. இதற்கு மேலே அமெரிக்கா செய்யக்கூடியாதாக ஒன்றே ஒன்றுதான் இருந்தது - அது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை. இந்தியாஅதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைக்கு ஏற்படும் செலவுக்கும் அமெரிக்க உயிரிழப்புகளுக்கும் அமெரிக்க மக்களுக்கு பதிலளிக்கும் நிலையில் அமெரிக்க அரசு இல்லாத காரணத்தால் அமேரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையை இசைபிரியவின் மனதை புண்படுத்தும் படங்கள் மாற்றமுடியாது.

 

 

உலக நாடுகளுக்கு எதுவுமே தெரியாது என்று நான் கூற வரவில்லை. அவர்களுக்கு தெரிந்தே தமது சுயநலத்துக்காக இலங்கைக்கு உதவி செய்தார்கள். ஆனால் இவ்வளவு கொடுமை நடந்திருக்கும் என அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அத்துடன், ஆதாரமற்று நாங்கள் சுட்டிக்காட்டும் போது அது உண்மையாக இருப்பினும், அது உண்மை என தெரிந்தாலும் அதை உலகநாடுகள் தட்டிக்கழித்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் ஆதாரங்கள் வைக்கப்பட்ட பின்னரும் அவர்கள் அதையே செய்தால் அவர்கள் மீதான மதிப்பு உலகளாவிய ரீதியில் குறையும் என்பதுடன் இலகுவில் நீண்ட காலத்துக்கு தட்டிக்கழிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும்.

 

இந்த நிலையை இசைபிரியவின் மனதை புண்படுத்தும் படங்கள் மாற்றமுடியாது.

 

அன்று கண்டன அறிக்கை விடாத உலகின் முக்கிய பிரமுகர்கள் இன்று கண்டன அறிக்கை விடுகிறார்கள். அந்த நிலைக்கு மாற்றியது இவ்வாறான படங்களும், காணொளிகளும் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் குடும்பங்களாக இருந்தவர்களுக்கு இப்படியான சாவு வரவில்லை என்று உங்கள் கருத்து மறைமுகமாக கூறுகிறது. இப்படியான பெரிய பொய்யை எப்படி மனம் வந்து நீங்கள் எழுதினீர்கள்?

 

பொய் என்பது களத்திற்கு அப்பால் நிற்கும் உங்களுக்கு.

 

எங்கள் உறவினர்களில் ஒருவர். முக்கிய போராளியின் துணைவியார். அந்தப் போராளி இறுதிக் கட்டத்தில்.. அவாவை பெற்றோருடன் போகச் சொல்லி சென்று விட்டார். அந்தத் தாய் தன் மகளை எல்லாச் சிரமங்கள் மத்தியிலும் துணை இருந்து காத்து வந்து.. இறுதியில்.. வெளியில் இருந்தோரின் உதவியோடு பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிருக்கிறா. இப்படியான சம்பவங்களும் உள்ளன. இதனை எல்லாம் நீங்கள் பொய் என்று தான் பார்ப்பீர்கள். எந்த இடத்தில் இசைப்பிரியா தனித்துவிடப்பட்டா.. ஏன் அப்படி விட்டார்கள் என்பதும் அன்று அப்படி விட்டவர்கள் இன்று சீரழிக்கப்பட்ட உடலின் மானத்துக்காக வருந்துவதும் உண்மை தானா..??! அல்லது வேசமா..??! நடந்த அநியாயத்துக்கு நீதி தேடுகிறார்களா அல்லது நீதியே தேவையில்லை... மானத்தைக் காட்டி எதிரியை காப்பாற்றி இன்னும் தமிழர்களைக் கொல்ல நினைக்கிறார்களா என்பதுதான் இங்கு வினவல்..???!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கான எம் பெண்களை நிர்வாணமாக்கி முள்ளி வாய்க்கால் அழிவு நடைபெற்ற அடுத்த வாரங்களில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு நூற்றுக்கணக்கான படங்கள், கால்களைப் பிடித்து தரதரவென இழுத்துவரும் படங்கள் என்பன  வந்தன. நானும் உள் குழுவில் இருந்ததனால் எனக்கும் கூட அவை வந்தன. அதைப் பார்த்துவிட்டு நானே அந்நிலையில் இருப்பதுபோல் உணர்ந்து ஓலமிட்டு அழுதேன். என்னிடம் இப்போதும் அப்படங்கள் உள்ளன. பிரித்தானியத் தமிழர் பேரவை அவற்றில் ஒன்றைக் கூட ஊடகங்களுக்குக் கொடுக்கவில்லை. அனால் மனித உரிமை தொடர்பான சாட்சிகளாக எமக்காக வேலை செய்யும் சில பெண்கள் அமைப்பிதாமோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ காட்டலாம். மிக முக்கிய ஆவணங்களாக இருக்கும் படங்கள் மனதுக்கு வருத்தத்தைத் தந்தாலும் ஒரு இனத்தில் ஒட்டுமொத்த விடியலுக்கு உதவும் எனில் அதை காண்பிப்பதில் தவறில்லை. ஆனால் தணிக்கை செய்து காட்டுவதே சிறந்தது.

பிளம்பு யாழில் செய்திகள் இணைப்பவர்களுள் பிரானமானவர்களில் ஒருவர். எனவேதான் இப்படியான் செய்தியொன்றில் அவர் விட்ட தவறு சுட்டிக்காட்டபடவேண்டுமென்று அதை சொல்லியிருந்தேன். 

 

காலையின் நாந் செய்திகள் தேடிக்கொண்டிருந்த போது இது சம்பந்தமான ஒரு செய்தி Channel-4லும் கண்டேன். அவர்களின் படி குடும்பம் தங்கள் மூலம்த்தான் இசைப்ப்ரியாவின் உண்மைகளை தெரிய வந்தார்கள் என்று இருந்தது. அந்த ஆரிக்கை மற்ற்வர்கள் தெரிந்திருக்க கூடிய உண்மைகளை மறுக்கிறது. அந்த குடும்பம் தங்கள் அக்கறையை பெருந்தன்மையாக Chennel-4 மூலம் வெளியிட்டிருந்தால் அரசாங்கத்துக்கு அது இரண்டாவது அடியாக இருந்திருக்கும். 

 

தமிழ் ஊடகங்கள் வாலும் தலையும் வைத்து எழுதுவது ஒன்றும் புதியதல்ல. யாழில் பின் பண்ணப்படிருக்கும் செய்தி ஒன்று கூட இப்படி  எனக்கு பிடிக்காத பாணியில் எழுதபட்டிருக்கிறது. அது பின் பண்ணப்படிருப்பத்தால் நான் அதில் எனது கவலையை தெரிவிக்க போகவில்லை. 

 

குடும்பம் ஒன்றை கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட இசைப்பிரியாவின் எல்லாப்படங்களும் Chennel-4 இருந்து வந்திருக்கு. அதாவது பெரும்பாலான ஊடகங்கள் அவர்களின் படங்களைத்தான் மீளப்பிரசுரித்தார்கள். அறிக்கை தமிழ் ஊடகங்கள் மீதுதான் தனது எச்சரிக்கையை விட்டிருக்கிறது என்றாலும்,  Channel-4யை தொடர்புகொண்டு தங்கள் எச்சரிக்கைக்காண விளக்கத்தை கொடுத்திருந்திருக்கலாம்.

 

அரசு யாரையும் விலைக்கு வாங்கி Channel-4 தாக்கக்கூடியது. உதயனாக இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் இன்னொரு முள்ளி வாய்க்காலை அரசு கொண்டுவந்திருக்கும். தங்கள் ஒரு பிள்ளை இசைப்பிரியா என்று நடந்து கொள்ளாமல் எல்லா நிர்வாணமாக்கப்பட்டு வதைக்கபட்ட பெண்களுக்கும் சாட்டிசியாக இசைப்பிரியா இருப்பதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் நல்லது.  அதற்கு தயாரக்க அவர்கள் இருந்தால் முதலில் சுமந்திரன் மாதிரி ஒரு வக்கீலை அணுகி அரசுக்கெதிராக ஒரு வழக்கை ஆரபிக்க வேண்டும். 

 

இது தனிப்பட்ட கருத்து. இதை நிறுவ நான் முயற்சிக்க மாட்டேன். ஏற்பதும், தள்ளிவிடுவதும் உங்கள் விருப்பம். எல்லா கதைகளும் சொல்லப்பட்டு, எல்லா கதைகளும் கேடப்ப்ட்ட பின்னர் இசைபிரியாவை கொலைசெய்தவர்களுக்கு ஒரு வ்ழக்கை கொண்டுவரமால், தமிழ் பத்திரிகைகளை சுட்டு பொசுக்கு பணம் பெறலாம் என்று மிரட்டினால் அது உண்மையில் குடும்பத்திடமிருந்து வருகிறதா அல்லது வாங்கப்பட்டுவிட்ட ஒருஅங்கத்தவரிடமிருந்து வருகிறதா என்ற சந்தேகதை இல்லாமல் செய்வது அவர்களின் பொறுப்பு.  

 

எனது பக்கத்தை, எனது அரசியல் என்று பிளம்பு ஒதுக்கிவைத்தால் அதில் ஆபத்து ஒன்றும் இல்லை. ஆனால் அதை யாராவது சன்னெல்-4 மீது காட்ட முயலாமல் இருந்தால் அவர்களுக்கு நன்றியாக இருப்பேன். அது மட்டும்தான் இப்படி வதைத்து கொல்லப்பட்டோ, அல்லது குண்டுமாரியில் கொல்லப்பட்டோ இறந்த ஆண், பெண் இருபாலாருக்கும் நீதியை பெறத்தக்க வழியை திறந்து வைத்திருக்கும்.

 

இந்த விடையத்தில் அந்த குடும்பமோ அல்லது பிரந்திகளோ ஊடகங்களை அழைத்து தங்கள் கரிசனைகளை கூறி அவர்களுடன் ஒரு உடன் படிக்கைக்கு வருவது அவசியம். அவர்களை அதி விரைவில் ஒரு ஊடக மகாநாடுக்கு ஊடகங்களை அழைக்கும் படி கோரிக்கை விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சனல் 4 இசைப்பிரியாவின் தாயினதும் சகோதரிகளினதும் பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி காணொளியில் காட்டப்பட்டது இசைப்பிரியா தான் என்று உறுதி செய்கின்றார்கள். இது மிக முக்கியமானது. சிறிலங்கா அரசு அதனை இசைப்பிரியா அல்ல என்று வாதிடும் போது தாயும் சகோதரிகளும் தங்கள் முகம் காட்டி அது 'இசைப்பிரியா' தான் என்று உறுதியளிப்பது முக்கியான ஒரு prove. போர்க்குற்ற விசாரணைகளுக்கு மிகவும் வலிமையான ஒரு சான்று இது.

 

சிறிலங்கா அரசின் அழுத்தங்களாலோ அல்லது வேறு எவரது அழுத்தங்களாலோ இவர்கள் ஊடகங்களின் போக்குக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளார்கள் என்ற வாதமே இதில் அடிபட்டு போகின்றது.

 

அதே நேரத்தில் இவ்வாறு துணிவாக தம்மை முகம் காட்டி உறுதிப்படுத்துகின்றவர்கள் தான் தம் சகோதரியின் தணிக்கை செய்யப்படாத படங்களுக்கும் வர்ணணைகளுக்கும் எதிராக கோபம் கொள்கின்றனர்.

 

ஒரு  வேளை இந்த கடிதமே, அவர்களின் பெயரால் எழுதப்பட்ட ஒரு போலிக் கடிதமாக இருந்தால் கூட அதில் சொல்லப்பட்டு இருக்கும் விடயத்தினை மீண்டும் மீண்டும் ஆதரிப்பேன்.

 

இதற்கு மேல் இந்த திரியில் வேறு எதுவும் எழுத வேண்டிய அவசியம் இனி எனக்கு இல்லை.

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.