Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்து வாலிபர் சங்கத்தின் வாசிகசாலை மண்டபம், பல சமூகநலன்தரும் நிகழ்ச்சிகளை நடாத்தி சமூகவிழிப்பை ஏற்படுத்துவதுண்டு. நாடகத்துறையில் புகழ்பெற்ற எங்கள் விதானையாரும், எங்களையும் அத்துறையில் ஈடுபடுத்தி நடிகர்களாக்கி மேடை ஏற்றுவதும் உண்டு. நடிகர்களான எங்களைக் கண்டதும் தலைகுனிந்து செல்லும் எங்கள் ஊர் மங்கையரும், தலை நிமிர்ந்து, முகமலரைக் காட்டுவார்கள். அது நக்கலோ.! நளினமோ.!  அறியாமலே நாங்கள் சிவாஜி, எம். ஜீ. ஆர், றேஞ்சுக்குப் போய்விடுவோம். நல்லூர்க்கந்தன் திருவிழாவையொட்டி, நாங்கள் பங்குபற்றி நடித்த, விதானையாரின் நாடகமொன்று ஊர்மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த வெற்றிப் பூரிப்பில் திகழ்ந்த விதானையாரும் நாடகம் நடந்த மறுநாள் மாலை எங்களைக் கண்டதும், "வாங்கோடா தம்பியள்.! எல்லோரும் முருகன் கபேக்குப் போய் போண்டா வடை சாப்பிடுவம், செலவு என்னுடைய பொறுப்பு" என்றார். . 
 
தீண்டாமை ஒழிப்பில் ஒன்றுபட்ட நாங்கள், தண்ணீர்ப் பந்தலில் தீண்டப்படாதவர்களுக்கு என்று வேறாக மூக்குப்பேணி வைக்கக்கூடாது எனப் போராடுவதும், கபேயில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து 'ரீ' குடிப்பதும் வழக்கம். அது விதானையாருக்கும் தெரியும். அதுபற்றி அறிவுரையும் வழங்கியுள்ளார். இன்றும் வழங்கினார். "தம்பியவை இளரத்தம்! இப்ப உங்களுக்குத் தெரியாது..! நீங்களும், பெரியவர்கள் ஆனாதுக்கு அப்புறம், உங்களுக்கு உள்ளேயே, யாரைத் தீண்டலாம்! யாரைத் தீண்டக்கூடாது! என்று நீங்கள் ஆற்றப்போகும் தொழிலின் தகுதி கொண்டிருக்கும் தராதரம், உங்களை யோசிக்க வைக்கும்.! சரி, சரி அது வரும்போது வரட்டும்.! இப்ப கிடைக்கும் சந்தோசத்தை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்..!!" என்று அவரும் எங்களுடன் சேர்ந்து அமர்ந்ததை கபே முதலாளி ஆறுமுகம் ஆச்சரியத்துடன் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சும் விட்டதற்குக் காரணமும் இருந்தது!!. 
 
தென்னிந்திய உறவுகள் பலர், பொருள் தேடுவதற்குப் பின்வாசல் வழியாக வந்து இலங்கையில் பொருள்தேடிய காலமது. கடவுச் சீட்டும், வதிவிட வசதியுமற்ற அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்து வந்ததில், இப்படியான கபேகளுக்கு அதிகம் பங்குண்டு. முருகன் கபேயில் அடைக்கலமாக இருந்தவர்களுக்கு ஆபத்து வரும் வேளைகளில் அவர்களை எங்கள் வீடுகளிலும் வைத்துப் பாதுகாப்புக் கொடுத்து உதவியது, ஆறுமுகத்திற்கு எங்களிடம் தனிப்பட்ட அன்பையும் பாசத்தையும் வளர்த்திருந்தது. ஆனாலும் தீண்டாமை ஒழிப்பில் காட்டிய எங்கள் தீவிரம் தனக்குக் கேடாக அமைந்துவிடுமோ? என்ற பயம் அவரின் வயிற்றைக் கலங்கடிப்பதுண்டு. நாங்கள் தீண்டப் படாதவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்வது ஊர்ப் பெரிசுகளின் கண்களைக் கனல் கக்க வைக்கும். சாதிகள் இல்லையடி பாப்பா! என்று பாரதியார் பாடலை எங்களுக்கு ஊட்டிவளர்த்த அவர்களே! இப்போ சாதிகளே எங்கள் வேதமடி என்றால் முடியுமா...?? இளமையில் கற்று எங்கள் இதயச் சிலையில் எழுத்தாகிப் போனதை எப்படிப் பெயர்த்து எடுக்க முடியும்...!!! 
 
"பொடியன்கள் அங்கு இருந்தால் சப்பிளை பண்ணக் கூடாது! பண்ணினால் உன்னைக் கோவணத்தோடு பழனியாண்டி ஆக்கிவிடுவோம்!" என்று ஆறுமுகத்தை வெருட்டுவார்கள். எங்களை வெருட்ட அவர்களுக்குத் தயக்கம்! ஏன் என்றால்..! அவர்களுக்கும் பாடமெடுத்துக்  களைப்படைந்து இளைப்பாறும் மூத்த பெரிசுகளின் செல்லப் பேரன்களும், பாட்டன்மாரின் ஆதரவுடன் எங்கள் குழுவில் இருந்ததால், ஏதும் செய்ய முடியாது மனதுக்குள்ளே பொங்கிக் குமுறவே அவர்களால் முடிந்தது. இன்று விதானையாரும் எங்களுடன் சேர்ந்து அந்த இடத்தில் அமர்ந்தது! கபே முதலாளி ஆறுமுகத்திற்கு ஒரு தெம்பை அளித்தது. பெரிசுகள் புகார்செய்தாலும், அது விதானையார் மூலமாகத்தானே பொலீசுக்குப் போகமுடியும்..! அப்படி மீறிப் போனாலும் விதானையார் சாமாளித்து விடுவார் என்ற நம்பிக்கைதான் அது!
 
வடை போண்டா சாப்பிட்டு, பால்ரீயும் குடித்த உற்சாகத்துடன் வெளிவந்தபோது.... முட்டைக்கண்ணன் வாத்தியாரின் ஓட்டோ சயிக்கிள் சத்தம் காதைத் துளைத்தது. எங்களோடு விதானையாரையும் சேர்த்துக் கண்டதும், சயிக்கிளை நிறுத்திவிட்டு, "பிள்ளைகள் நல்லபேர் வாங்கித் தந்துவிட்டாங்கள் போல் கிடக்குது, நல்ல அருமையான நாடகம்..!" என்று பாராட்டவும் செய்தார். "உங்களிடம் படிக்கிற மாணவர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?" என்று விதானையாரும் முகத்துதி செய்யவே! முட்டைக்கண் பானைக் கண்ணாக விரிந்து மலர்ந்தது. "அதுசரி வாத்தியார்! உதென்ன சட்டையிலை எண்ணை?" "அதொண்டுமில்லை விதானையார், இண்டைக்கு எங்கடை மரத்துப் பலாப்பழம் சாப்பிடேக்கை, பால் ஒட்டாமல் இருக்க கைக்குப் பூசின எண்ணை சட்டையில பட்டிட்டுது போல, நான் கவனிக்கவில்லை. கழுவினால் போய்விடும்...." 
 
மறுநாள் காலை நல்லூர்க் கந்தனுக்காகப் போடப்பட்டிருந்த தண்ணீர்ப்பந்தல் பெருக்கித் தண்ணீர் தெளித்து, சர்க்கரை, மோர், ஊறுகாய்த் தண்ணீருக்கு வேண்டிய ஒழுங்குகளும் மேற்கொண்டு இருந்தபோது... மகிழுந்து ஓட்டி கணேசண்ணை ஓடிவந்து... "தம்பியவை! கேட்டியளே..! உங்கடை கணக்குவாத்தியார் கைகால்முறிந்து, இப்ப பெரியாசுப்பத்திரியில் கிடக்கிறாராம்!" என்னதான் வாத்தியார் காதில் கிள்ளும் கோபம் இருந்தாலும், வாத்தியாரின் கற்பித்தல் எங்களைக் கணக்கிலே புலிகளாக வைத்திருந்ததை மறந்தால் நாங்கள் நன்றி மறந்தவர்களாவோம்.! தவித்துவிட்டோம்.! அந்தத் தவிப்பில் எழுந்த உருக்கமான உணர்வு! ராசுகடையில் கார்லிக்சும், தோடம்பழமும் வாத்தியாருக்கு வாங்கவைத்தது. "தம்பியவை கேள்விப்பட்டதும் கவலையாய்த்தான் இருக்கு, இருந்தாலும் உந்த வாத்தியார் எப்படி உங்களுக்கு கணக்குப் படிப்பிக்கிறார்..?? உப்பிலை அரைச்சதம் மிச்சம்பிடிக்க பெரியகடைக்குப் போனவர். அங்கை போய்வர பெற்றோலுக்கு ஐம்பது சதமாவது செலவாகும் என்று கணக்குப்பாக்கத் தெரியல்லையே..! இப்போ சைக்கிளும் போய்..! காலும் முறிஞ்சு..!!  ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ராசு அண்ணையிடம் பொருளியல் பாடத்திற்கு ரியூசன் எடுக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. "என்னண்ணை நடந்தது" என்று கேட்டோம்.
 
"அதடா..! தம்பியவை..! நேற்றுப் பின்னேரம் வாத்தியார் உப்பு வாங்க வந்தவர். இரண்டு இறாத்தல் எண்டால் 15 சதம், ஒரு இறாத்தல் எண்டால் 8 சதம் எண்டுதான் நான் விக்கிறனான். அந்தாளுக்கு என்ன வந்துதோ தெரியல்லை, மனிசியோடை பிரச்சனையோ தெரியாது..! மக்களை உப்படி ஏமாத்திக் கொள்ளையடிக்கக் கூடாதுபாரும், இரண்டு இறாத்தல் உப்பு பதினைந்து சதமென்றால்..! ஒரு இறாத்தல் ஏழரைச்சதம்தானே, அதற்கு ஏன் எட்டுச்சதம் வாங்குகிறீர்..! அரைச்சதம் புழக்கத்தில் இல்லைத்தான், சரி... ஏழுசதம் வாங்கலாமே..! பெரியகடையில் ஒரு இறாத்தல் ஏழுசதம்தானே விக்கிறாங்கள்" என்று  என்னைத் திட்டிவிட்டு அவற்ரை ஓட்டோ சைக்கிள்ளையும் எடுத்துக்கொண்டு பெரியகடைப்பக்கம் உப்பு மலிவெண்டு போனவர். கந்தர்மடத்துச்  சந்தியிலை லொறியோடை அடிபட்டு மோட்டச்  சயிக்கிள் உதவாதாம்!. ஆசுப்பத்திரியிலை வேலைசெய்கிற பெரியண்ணை இரவுவந்து சொல்லித்தான் எனக்கும் தெரியும்" என்று ராசு அண்ணை சொல்லிய பின்புதான், அரைச்சதம் மிச்சம் பிடிக்கிறதுக்கு, உப்புவாங்கப் பெரியகடைக்குப் போனபோதுதான் வாத்தியாருக்கு விபத்து நடந்தது என்ற விபரம் எங்களுக்குத் தெரியவந்து. விசயம் நிமிடத்தில் ஊருக்கெல்லாம் பரவியும் விட்டது. நாங்கள் எஙகளுக்குத் தெரிந்தவர்களுக்குத்தான் சொன்னோம். தெரியதவைக்கு யார் சொன்னார்களோ..! எங்களுக்கென்ன தெரியும்..!! 
 
பெரிய ஆசுப்பத்திரிக் கேற்றில் காவலுக்கு நின்ற கந்தசாமி எங்கடை ஊர்தான். ஆனாலும் கடமையே கண்ணானவர். நெஞ்சு நிமிர்த்தி நின்றார். முன்னுக்கு நின்ற மூன்று பற்கள்கூட நம்ம ஊர்ப்பையன்கள் என்ற முறுவலைக் காட்டவில்லை.! கெஞ்சலும், கொஞ்சலும்கூட அடிபட்டுப்போனது.! 12 மணிக்குத்தான் உள்ளே போகலாம். வேறுவழியில்லை... ஆனால் 12 மணிக்குள் நாங்கள் தண்ணீர்ப்பந்தலுக்கு போகவேண்டும். சர்க்கரை, மோர், ஊறுகாய் இருக்கும் அறைத்திறப்பு எங்களிடத்தில். கொதிக்கும் வெயிலில் நடந்துவரும் நல்லூர்க் கந்தன் பக்தகோடிகள் தாகத்தால் தவித்துப் போவார்கள். நல்லூர்க் கந்தா.! என நாங்கள் வேண்டியபோது, கந்தன் உடனே விதானையாரை எங்கோ தேடிப்பித்து ஆசுப்பத்திரிக் கேற்றடிக்கே அனுப்பிவிட்டார்.!!! 
 
"ஏன் தம்பியவை நிக்கிறியள்.! அது எங்கடை கந்தசாமிதான். நீங்கள் உள்ளுக்குப் போங்கோ." விதானையாரைக் கண்டதும் கந்சாமியின் மூன்று பற்களுடன், மேலும் இருபத்து ஒன்பது பற்களும் சேர்ந்து முறுவலித்தன. மாலையில் புளிச்ச கள்ளடித்த மப்பிலை கந்தசாமி செய்யும் சேட்டைகளோடு. கூப்பன் களவு, அடையாள அட்டை, அது, இது என்று! விதானையார் இல்லையென்றால்..! கம்பிஎண்ணத்தான் கந்தசாமி லாயக்கு என்று, கிராமக்கோடே தீர்ப்பு வழங்கியிருக்கும்.  ஆனாலும் கம்பிக் கேற்றுத்தான் கந்தசாமி குடும்பத்துக்கு இன்றுவரை சோறுபோடுது என்பதையும் விதானையார் மறக்கவில்லை. "பெரியடாக்டர் வேலும் மயிலும் வந்துவிட்டார்தானே.! நான் சொல்லிக்கொள்ளுறன், நீ கவலைப்படாதை.!"  "ஓம்! ஓம்! விதானையார்." கந்தசாமி முதுகு வளைய, நாங்கள் நெஞ்சு நிமிர்த்தி ஓடையில் நடக்க, எதிர்ப்பட்ட ஓடலிகள், நர்சுமார்கள் கண்களில் என்ன? இந்தநேரம்??.. என்ற கேள்வி எழுந்தாலும், அது வாயால் வெளிவரவில்லை! நாங்கள் யாரோ.! பெரிசுகளுக்கு வேண்டப்பட்டதுகள், என அவர்கள் மனம் எண்ணியிருக்க வேண்டும். அதுவும் கந்தசாமியைக் கடந்து வந்தவர்கள்..! பழைய சில அனுபவங்கள் அவர்களை வாய்திறக்க விடவில்லைப் போலுள்ளது...     
 
மரக்குத்திக்குப் பந்தம் சுற்றியதுபோல் சுற்றப்பட்டு வாத்தியாரின் வலதுகால் சிறிய தூளியில் தூங்கி ஆடிக்கொண்டிருந்தது. ஒரு கை பத்துப்போட்டபடி அவர் நெஞ்சில் படுத்துத் தூங்கியது. எங்களைக் கண்டதும் அசையமுயன்ற அவரை விதானையார் அசைய விடவில்லை. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆனாலும் அரைச் சதக் கஞ்சனை வேடிக்கை பார்க்கப் பொடியள் வந்திருக்கிறாங்களோ! என்ற கேள்விக்குறி அவர் முகத்தில் தெரிந்ததுபோல் இருந்தது. இனி எந்த முகத்தைவைத்து ராசுகடைக்கு போவேன் என்று எண்ணினாரோ..! அல்லது அரைச்சதம் கால்சதம் பற்றி கணக்குப்பாடத்தில் இனிக் கதைக்கவே முடியாதென்று கலங்கினாரோ..! தோடம்பழம் கார்லிக்சை நாங்கள் வாத்தியாருடன் நின்ற அவர் துணைவியாரிடம் கொடுத்தபோது அவர் முகம் சிறிது மலர்ந்தது. விதானையார் பகிடியாகப் பேச்சுக்களைத் தொடங்கினார் அங்கு பத்துகளோடு கிடந்தவர்களைச் சுட்டிக் காட்டி எல்லோருமே ஓட்டோ சைக்கிள் ஓட்டியவர்களோ? என்று கேட்டார். வாத்தியாரும் புன்முறுவல் பூத்து, இல்லை விதானையார், அது கொண்டா வாட்,. அடுத்தது யமகா வாட்., அடுத்தது றையம்,  இது ஓட்டோ சைக்கிள், அடுத்தது சைக்கிள்வாட்டாம் என்று சொல்லி வாய்விட்டுச் சிரிக்கவே.! அவர் துணைவியார், "நீங்கள் வந்தது அவருக்கு எவ்வளவு ஆறுதல்..! அடிக்கடி வாருங்கள்!" என்று அடிமனதிலிருந்து  வேண்டுதல் விடுத்தார்.      
 
வெளியே வந்த நாங்கள், விதானையாருக்கு நன்றிசொல்லி விடைபெற்றபோது அவர்... "தம்பியவை உண்மையைச் சொல்லுங்கோடா.! நீங்கள்தானேடா வாத்தியாற்றை பிலாப்பழம் வெட்டினது..!!" அப்போது இருந்த மனநிலையில் நண்பன் மணி "மன்னிச்சுக்கொள்ளுங்கோ விதானையார்" என்று கூறிவிட்டான். நாங்கள் பேயறைந்ததுபோலானோம். "அதெனக்குத் தெரியுமடா தம்பியவை!.. வாத்தியின்ரை கணக்குப் பிழைச்சுப்போச்சு..! அதுதான் கேட்டன்," என்றார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. "என்ன விதானையார்  பிழைச்சது" என்று கேட்டோம். "நீங்கவெட்டின பலாப்பழம் கோட்டை முனியப்பருக்கு நேர்ந்துவிட்டதில்லை. நேற்று அவர் சாப்பிட்ட பழம்தான் முனியப்பருக்கு நேர்ந்துவிட்ட பழம் என்று நினைக்கிறன். அதுதான் முனியப்பர் ஆவேசம் கொண்டு வாத்தியாரை இங்கை முறிச்சுப் போட்டிருக்கிறார்."  அரைச் சதத்துக்காக முட்டைக்கண்ணரின் ஓட்டோ சையிக்கிள் அவரை லொறியோடு மோதவைத்ததையும், முனியப்பரின் பலாப்பழக் கதையையும், பரமேசுவராக் கல்லூரி அதிபரும்..! தனது ஆசிரியர்களுடன் பகிர்ந்து சிரிப்பதற்கு..!! அப்படி யார்தான் அவருக்குச் சொல்லியிருப்பார்கள்...????.     
 
 
பி.கு
இக்கதையை வாசிக்கும் வாசகர்கள் யாராவது இப்பொழுது யாழ் பல்கலைக் கழகமாக இருக்கும் அன்றைய பரமேசுவராக் கல்லூரியில் படித்தவர்களாக இருப்பார்களேயானால்.. சில சதங்களை இலாபம் பெறுவதற்கு திருநெல்வேலிச் சந்தியிவிருந்து பெரியகடைக்குப் போகும்வழியில் கந்தர்மடச் சந்தியில் ஓட்டோ சையிக்கிளுடன் விபத்துக்குள்ளான வாத்தியாரை  நிச்சயம் தெரிந்திருப்பார்கள்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு பாஞ்சு.

 

'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.

களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)

இது நடந்த வருடம், எப்போ? :o

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எவ்வழவு அழகான கதைகள்,நினைவுகள்....படிக்கும்போதே நமக்குள்ளே தூங்கிக்கிடந்த பல ஞாபகங்களயும் அசைபோடவைத்துவிட்டது.. பகிடியாக எழுதிக்கொண்டிருந்த பாஞ் மனசை பறித்துவிட்ட பதிவையும் தருவார் என்று இன்றுதான் தெரிந்தது... தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா... மனசு முழுக்க பழைய நினைவுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நினைவுகளை மீட்கிறது பாஞ்ச்... தொடருங்கள்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

இளமைக்காலத்தை  அசைபோடவைக்கும் உங்ககள் பதிவுஅருமை.   மிகவும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம்தந்த ராசவன்னியன், சுபேஸ், சுவி, நிலாமதி.அவர்களுக்கு நன்றிகள்!! :)
 

 

கதை நல்லா இருக்கு பாஞ்சு.
 
'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.
களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)
இது நடந்த வருடம், எப்போ? :o


கிராம நிர்வாக அதிகாரிகள்தான் முன்பு 'விதானை' என்ற பெயருடன் இலங்கையில் பணிசெய்தார்கள். இவர்களைப் பேச்சுவழக்கில் தலையாரி என்றும் சொல்வதுண்டு. அரச அதிகாரிகளும் மதிப்பளிக்கும் நிலையைக் கொண்டிருந்தவர்கள். பின்னர் 'கிராம சேவகர்' என பெயர் மாற்றம் அடைந்து அரச பணியாளர்களுக்கும் இன்று எடுபிடிகளாகவும் உள்ளனர். :(

உங்கள் இளமைகால நினைவுகள் அருமையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் பாஞ்ச் நெஞ்சில் நெருப்பாய் சுடுவதாய் கேள்வி. தொடருங்கோ வாலிபவயதுக் குறும்புகளை.வாசிக்க நாங்கள் றெடி.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு முறை உங்கள் 'அனுபவப் பகிர்வு' நினைவுகளை வருடிச் செல்கின்றது!

 

சில வருடங்களின் முன்பு, நல்லூர்த் திருவிழாவின் போது, தண்ணீர்ப்பந்தல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்!

 

ஊறுகாய்த் தண்ணீர் தான் எனக்குக் கிடைத்தது!

 

அதே பழைய சுவை ! மூக்குப் பேணி மட்டும், பிளாஸ்டிக் பேணியாகி இருந்தது! அதற்கும் ஒரு 'மூக்கு' இருந்தது! :lol: 

 

உங்கள் பகிர்வு, சர்க்கரைத் தண்ணி மாதிரி! :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுது பாகம்4 வரும்?

அப்பன் கெதியிலை பாகம் நாலு ஐஞ்சு எண்டு எழுதி போட்டால்தானே எங்களுக்கும் பத்தியப்படும் :lol::D . கதைக்கு பாராட்டுக்கள் பாஞ் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் அபிமான வாசகர்களை நான் அவதிக்கு உட்பபட விடமாட்டேன். துரிதமாக எழுதத் தமிழ்தான் கொஞ்சம் முரண்டு பிடிக்குது. சந்தேகம் தீர்ப்பதற்கு வாத்தியாரையும் காணோம். சிட்னிக்குப் போனவர் போனவரேதானா.??? :o

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவுமீட்டல்...

தோடப் பழம் என்றால்?

தோடம்பழம் என்றால்  Orange  !!!

 

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

  • 4 weeks later...

தோடம்பழம் என்றால் Orange !!!

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

தோடம்பழத்திற்க்கு தமிழ் பெயரெல்லாம் இங்கு பாவிப்பதில்லை, தமிழிழும் இங்கு ஆரஞ்சு தான் !

பி.கு ஆரஞ்சிற்க்கு தமிழில் பெயர் இல்லையோ என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தே இருந்து கொண்டிருந்தது :D

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம் என்றால்  Orange  !!!

 

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

 

 

தோடம்பழத்துடன்... ஹோர்லிக்ஸ் போத்தலும், கட்டாயம் இருக்கும் புங்கை. :)

 

Horlicks-UK.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு பாஞ்சு.

 

'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.

களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)

இது நடந்த வருடம், எப்போ? :o

 

 

ஊக்கம்தந்த ராசவன்னியன், சுபேஸ், சுவி, நிலாமதி.அவர்களுக்கு நன்றிகள்!! :)

 

கிராம நிர்வாக அதிகாரிகள்தான் முன்பு 'விதானை' என்ற பெயருடன் இலங்கையில் பணிசெய்தார்கள். இவர்களைப் பேச்சுவழக்கில் தலையாரி என்றும் சொல்வதுண்டு. அரச அதிகாரிகளும் மதிப்பளிக்கும் நிலையைக் கொண்டிருந்தவர்கள். பின்னர் 'கிராம சேவகர்' என பெயர் மாற்றம் அடைந்து அரச பணியாளர்களுக்கும் இன்று எடுபிடிகளாகவும் உள்ளனர். :(

 

ஒரு காலத்தில்... உடையாரும், விதானையார் லெவலில்... இருந்தவர் தான். :D 

இவர்கள் எல்லாரையும்... குறு நில‌ மன்னர்கள், என்று சொன்னால்... மிகையாகாது. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.