Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது.
அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம்.
அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது.
29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான்.


பார்த்திக்குட்டி...,


அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது.
எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ?
நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ?
இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ?


ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது.
அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது.

அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான்.
அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ?

பிள்ளைகள் கொண்டு வந்து  தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம்.

அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது.
எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன்.

கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி.

நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக.

நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ?

இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம்.
இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம்.
நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான்.

என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன்.

தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன்.  கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன்.

ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான்.

என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது.

அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது.
எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன்.

பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான்.
ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான்.

அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது.

மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான்.
எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி.

2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது.

அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும்.

ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ?
அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா.

என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன்.

ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது.

எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது.
கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில்  இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன்.

என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47.

அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான்.
இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான்.

கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை.

08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம்.

காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன்.

அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன்.
02.05.2020

சாந்தி நேசக்கரம்

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது? தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள்.  துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவே முடியவில்லை எப்போதிருந்து இந்த சாந்தி இப்படி பலவீனமாக மாறினாள் என்று புரியவில்லை. இப்போதெல்லாம் எழுத்துகளில் பழைய சாந்தியை காணவே முடியவில்லை. காலம் நிறையவே பிணிகளை தந்திருக்கிறது என்பதை எழுத்துகள் உணர்த்துகின்றன. பழைய துடிப்பான சாந்தியை மீளப்பார்க்கமாட்டோமா என்று மனம் அங்கலாய்க்கிறது. பிள்ளைகள் என்று வந்துவிட்டால் ஒரு தாய்க்கு எதுவும் தேவையில்லை என்பதை மீள மீள உணர்த்துகிறது நம்பிக்கைகளை விதைத்து நதியாக ஓடும் தாய்மையின் எழுத்து. மனவலிமை  கொள் தோழி.

  • கருத்துக்கள உறவுகள்

கனமான பதிவு, கவலைப்படாதீர்கள் இதுவும் கடந்து போய் விரைவில் ஒன்றாக இருப்பீர்கள், கொரோணாவால் எத்தனை பல பாதிப்புக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ தெரிந்தவருக்கு கொரோனா என்றாலே துடித்துப் போகிறோம்.
அதே எமது வீட்டுக்குள் அதுவும் பிள்ளைகளுக்கென்றால் எப்படி தாங்குவது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பதே ஒரு தொடர் போராட்டம்தான். அதிலும் குடும்பத்தில் மாறி மாறி ஓயாமல் வரும் சவால்களுக்கிடையில் கொரோனாவும் வந்து ஆட்டிப்படைக்கும்போது சோர்வும் பயமும் வரத்தான் செய்யும். ஆனால் எத்தகைய இடர்களையும் தாண்டி எதிர்நீச்சல் போடும் மன தைரியத்தை மட்டும் இழக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள் சகோதரி......எல்லாம் கடந்து போகும்..... பொறுப்பான பிள்ளைகள் பாசமுள்ள தாய் வேறென்ன வேண்டும்.....மனசைத் தளர விடாதீர்கள்......!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கடந்து போகும். இதுதான் மனித வாழ்க்கை. மனத்தைரியம் மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்  அடிகள் விழலாம்

வாழ்க்கையே அடி  வாங்கினால்???

உங்களது வாழ்க்கையும் அதிலிருந்து  நீங்கள் ஒவ்வொரு  முறை மீள்வதும்

வாழ்வில் மீளாத  துன்பத்திலிருப்போருக்கு ஒரு வழி காட்டும்

எத்தனை  முறை  வீழ்ந்தோம் என்பதல்ல கணக்கு

அத்தனை  தரமும் எழுந்த  நின்றோமா என்பதே வரலாறாகிறது

வாழ்க நலமுடன்

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை போராட்டமா அல்லது போராட்டமா வாழ்க்கை எனும் கேள்வி எழும் போது போராடித்தான் வாழவேண்டிய கட்டாயம் எழுகிறது சூழலாலும் சுற்றத்தாருடனும் இதில் கொரோனாவும் சேர்ந்து கொடுமப்படுத்துகிறது மீண்டு வருவார்கள் பிள்ளைகள் கவலை வேண்டாம் உங்கள் குழதைகள் ஆச்சே 

மனதை  தளரவிடாதீர்கள் அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள் அக்கா இதுவும் கடந்து போகும்

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமய நம்பிக்கைகளில் மிக முக்கியமானது ஒன்றைக் கூறுகின்றேன், சாந்தி...!

மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மனதின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதே அதுவாகும்!
மனம் தளர்ந்து போகாத வரையில்....நீங்கள் எவ்வளவு துன்பங்களையும்...கடந்து  மீண்டு வரலாம்! பார்த்திபன் பழைய நிலைக்குத் திரும்பியதற்கும் இதுவே, காரணமாக இருந்திருக்க வேண்டும்!

வாழ்க்கையின் அதிக சோதனைகள் வரும்போது,  ஆண்டவன் சோதிக்கின்றான் என்று கூறுவார்கள்!
நல்லவர்களைத் தான் அவன் அதிகம் சோதிக்கிறான் .....!

இவையும் கடந்து போகட்டும்....!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பையும் ஆற்றுதல் வார்த்தைகளையும் தந்த காவலூர் கண்மணி, சகாரா, உடையார், நிலாமதி, ஈழப்பிரியன், சுவியண்ணா, குமாரசாமி, விசுகு, தனிக்காட்டு ராஜா, வாதவூரான், புங்கையூரான் அனைவருக்கும் நன்றி. 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

அன்பையும் ஆற்றுதல் வார்த்தைகளையும் தந்த காவலூர் கண்மணி, சகாரா, உடையார், நிலாமதி, ஈழப்பிரியன், சுவியண்ணா, குமாரசாமி, விசுகு, தனிக்காட்டு ராஜா, வாதவூரான், புங்கையூரான் அனைவருக்கும் நன்றி. 

Hi👋🤭

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் விருப்புக்களை வழங்கிய உறவுகள் பெயர்களை கவனித்தேன். உங்களுக்கும் நன்றி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.