சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06
அத்தியாயம் 6 - கண்டி மற்றும் நுவரெலியா
கண்டியை அடைந்தபோது காற்று குளிர்ந்தது; கோவில்மலர்கள் வாசம் வீசியது. தலதா மாளிகை அல்லது பல் அவையம் ஒளியில் மிதந்தது; ஏரியில் விளக்குகள் பிரதிபலித்தன. தலதா மாளிகையில் பூஜையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள்: விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் ஆகும். அப்பொழுது நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக உள் அறையைத் திறப்பது மற்றும் பக்தர்களால் பூக்கள் காணிக்கை செலுத்துதல் நடைபெறும். ஆரனும் அனலியும் அப்படியான ஒரு சூழலில், வெளிவீதியால், ஆலயத்தை நோக்கி நடக்கும் பொழுது, [hevisi drums] ஹெவிசி பறை கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே நிறைய பூக்கடைகள் இருந்தன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்வதை இருவரும் கவனித்தார்கள். அவர்களும் பூக்களை வாங்கினர். ஹெவிசி மேளம் வெறும் இசை நிகழ்ச்சி அல்ல. இது இலங்கையின் பௌத்த மரபுகள் மற்றும் கோயில் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு புனிதமான கலை வடிவமாகும்.
தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பி, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்துவர முயற்சி செய்தான். சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் [கண்ணகி] முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தான், பெரகரா விழாவில் பல் நினைவுச் சின்னம் முக்கியத்துவம் பெற்றது என்ற நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனலி எடுத்துரைத்தாள்.
தலதா மாளிகையில் உள்ள ஓவியங்கள் கண்டி காலத்து ஓவியங்கள் ஆகும். இவை மாளிகையின் பல இடங்களில், குறிப்பாக மேல் மாடி உட்கூரையில் உள்ள நிரல்களிலும், தலதா மண்டபம், எண்கோண மண்டபம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பல பெண்ணுருவங்கள் அடங்கிய நுட்பமான இரதங்களும், சதுர்நாரி பல்லக்குகளும் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் ரசித்து இருவரும் பார்த்தார்கள்.
தர்மத்தின் தானமே எல்லா தானங்களையும் மிஞ்சும்.
தர்மத்தின் ருசி எல்லா ரசனைகளையும் மிஞ்சும்.
தர்மத்தில் உள்ள இன்பம் எல்லா இன்பங்களையும் மிஞ்சும்.
ஆசையை அழிப்பது எல்லா துன்பங்களையும் வெல்லும்.
ஆரனும் அனலியும், தலதா மாளிகைக்கு சென்றபின், அதன் முன் இருந்த, 1807 ஆம் ஆண்டு மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கரால் கட்டப்பட்ட கண்டி ஏரியை சுற்றி பொழுதுபோக்காக நடைப் பயணம் செய்து, கோயில் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர்.
“வரலாறு நம்மைப் பிரித்தது,” என்று ஆரன் கூறினான், “ஆனால் பக்தி இன்னும் நம்மைப் பிணைக்கிறது.” அனலி சிரித்தாள். அப்பொழுது அவர்கள் இரவில் காலடி எடுத்து வைத்தனர். அமைதியான ஏரியின் குறுக்கே கண்டியின் விளக்குகள் பிரதிபலித்தன. அங்கே பொதுவான கெண்டை மீன் மற்றும் திலாப்பியா மீன்கள் அங்கும் இங்கும் கூட்டமாக ஓடுவது தெரிந்தது, அவைக்கு மேலே நீர்க்காகம் அல்லது பெரிய நெட்டைக்காலி [Great Cormorants], மீன்கொத்தி, மற்றும் அவை போன்ற பறவைகள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. அக்காவின் மகள் அதை பார்ப்பதில், தனது நேரத்தை செலவழித்தாள். அது அவர்களுக்கு தங்களுக்குள் தனிப்பட பேசவும் பழகவும் இடமளித்தது. 'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்று யாரோ சொன்னது அவனுக்கு சிரிப்புக்கு வந்தது. ஏன் என்றால், அது அவளின் கன்னக்குழியில் தான் விழுத்தும் என்று இப்ப அவனின் அனுபவம்.
அவன் தோளில் சாய்ந்து இருந்தவள், கொஞ்சம் எட்டி, அவன் காதில், "நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன். அவள் கன்னத்தை கிள்ளியபடி, "வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றான் ஆரன். பின் அவன், அவள் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, "அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றான்.
"ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள் செல்லச் சிரிப்புடன். பிறகு எனோ, " சும்மா தான்!!!" என்றுக் கூறி அவன் நெஞ்சத்தில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவள், தான் என்ன பேசுகிறேன் என்று ஒரு தொடர்பு இல்லாமல், எதோ ஒரு மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது.
"சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டு, ஆரன், " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றான். "ம்ம்ம்!!!" என்றாள்.
"நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றான். நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! தன் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு அவன் இருக்கும் போதே, "அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.
"என்ன கேள்வி" என்றான். "உண்மையிலேயே வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து காதல் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்கள் பேசின. அது சொல்லாமல் சொன்னது.
உள்நாடு வெளிநாடு
காதலுக்கு ஏது பாகுபாடு
உறங்கும் போது கனவிலும்
விடிந்தவுடன் நினைவிலும்
வாழும் வரை உயிரிலும்
காற்றை கண்ட உடன்
நடனமாடும் மரங்களைப் போல
ஒருவரை ஒருவர் கண்டவுடன்
ஆசை அன்பு, பாசம், காமம்
துளியாய் மனதில் எழும்
உணர்வே காதல் காதல்
ஏரிக்கரை கொஞ்சம் அமைதியாய் அப்பொழுது இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் அவர்கள் இருவருக்கும் பல கதைகளைப் பேசிக் கொண்டு சென்றது. ஏனோ அவள் முகம் திடீரென வாடிப் போனது . "ஏய் என்னாச்சி?" என்றான் ஆரன். பதில் வரவில்லை. "எதாவது பிரச்சனையா...?" ஆரன் தொடர்ந்தான். "இல்லை..." என்றாள் அனலி. பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். எனவே, அவன் திருப்பி பின்னால் பார்த்தான். அக்காவின் மகள், பறவைகளை, மீன்களை எண்ணுவதை விட்டு விட்டு, சித்தியை எண்ணுவது போல அங்கு நின்றாள். ஆரன், அக்காவின் மகளை கூப்பிட்டு, எப்படி ஏரி, தலதாமாளிகை என்று கேட்டு நிலைமையைச் சமாளித்தான்.
பின் அடுத்த நாள், கண்டி நகரத்தை விட்டு, நுவரெலியாவிற்கு போகும் பொழுது, வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பூந்தோட்டம், பேராதனை பல்கலைக் கழகம், என பலவற்றை இருவரும் ரசித்துப் பார்த்தார்கள். அதன் பின், கண்டி மற்றும் பேராதனையின் பரபரப்பான தெருக்களிலிருந்து, ஆரனும் அனலியும் மத்திய மலைப்பகுதிகளுக்கு மேலும் தெற்கே பயணிக்கத் தொடங்கினர். அங்கு மூடுபனி மூடிய மலைகளும் பச்சை பசேலென தேயிலைத் தோட்டங்களும் அவர்களுக்காகக் காத்திருந்தன. மேகங்கள் நனைந்த மலைகள் மற்றும் மரகதப் பள்ளத்தாக்குகள் வழியாக அவர்களின் வாகனம் மெதுவாக மேலே ஏறியது.
அக்காவின் மகள், "ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! அதோ சிறிய ஓடைகள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சித்தி" என்றாள். "ஆமாம், கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன" என்று அனலி, கை நீட்டிக் காட்டி தொடர்ந்தாள்.
திடீரென அக்காவின் மகள், ஆரனைப் பார்த்து "இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர்ந்து இருக்குமா?" என்று கேட்டாள்.
ஆரன் சிரித்தான் "வரும் பொழுது குளிர்ந்து இருக்க வேண்டும், அது தான் போகும் போது வாலில் நெருப்புடன் பறந்தானோ ?" என்ற கேள்வியுடன் பதில் அளித்தான்.
அனலி ஜன்னலுக்கு எதிராக முகத்தை அழுத்திக் கொண்டு, சிவப்பு நிற புடவைகளில் தேயிலை பறிப்பவர்கள் எறும்புகள் போல துடிப்பான பச்சை சரிவுகளில் நகர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாம் வேறொரு உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தது போல் இருக்கிறது," என்று அவள் கிசுகிசுத்தாள். "பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்ட ஒரு உலகம் போல் இருக்கிறது" என்றாள்.
ஆரன் சிரித்தான். "இது நினைவுகளைச் சுமந்து செல்லும் உலகம் - காலனித்துவ தோட்டங்கள், இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக உழைப்பு மற்றும் ஏமாற்றம். அவர்களின் சோகக் கதைகள் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் மூழ்கியுள்ளன." என்றான்.
நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில், ஒரு பழங்கால கடையில் இறங்கி, பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அங்கிருந்து ரம்போதா அருவிகளைப் [The Most Majestic Ramboda Falls In Sri Lanka] பார்த்தார்கள். பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. அப்பொழுது சட்டென்று மழை தூறியது. அந்த தூறலில், இருவரும் நன்றாக நனைந்து விடடார்கள். அந்த ஈரத்தில், அவளின் உடல், ஒரு கவிதை போல மிதந்தது அவனுக்கு, அவன் வாய் அவனை அறியாமலே;
மலையின் உச்சி
மனம் நொந்து
விழுந்து சாவதற்கு அல்ல
மனம் மகிழ்ந்து மேலும்
பறந்து உயர்வதற்கு
தாய்நாட்டின் தாலாட்டில்
மலை உச்சியின் விளிம்பில்
வாழ்வதை நினைப்போமே அனலி!
என்று முணுமுணுத்தது. வழியில் தம்ரோ டீ [Damro Tea] தொழிற்சாலைக்கு ஒரு விசிட் [visit] அடித்தார்கள்! ஆனால் அவர்கள் சொல்லும் டெக்னாலஜி [technology] எல்லாம் கேட்கும் நிலையில் ஆரனும் அனலியும் இல்லை! அவர்களின் எண்ணம் எல்லாம் சிகிரியா சித்திரம் போல், முகிலில் மிதந்து கொண்டு இருந்தன.
அதன் பின், இலங்கையின் "சிறிய இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் நுவரெலியாவை அடைந்த அவர்கள், பைன் மரம் மற்றும் ஈரமான மண்ணின் நறுமணத்தைச் சுமந்து செல்லும் மிருதுவான மலைக் காற்றில் கிரிகோரி ஏரியின் (Lake Gregory) வழியாக நடந்து சென்றனர். காலனித்துவ கால பங்களாக்கள் தெருக்களில் வரிசையாக இருந்தன, குதிரை வண்டிகள் கற்களின் மீது மெதுவாகச் சத்தமிட்டன.
நுவரெலியாவில் அப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருந்தது. ஆனால் ஆரனுக்கு இவை ஒன்றும் பெரிய குளிரல்ல. ஆனால் அனலிக்கு பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்ந்தது. அவள் ஆரனை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அக்காவின் மகளையே மறந்து விட்டாள் அந்த குளிரில். அனலியின் இந்த புத்துணர்ச்சியான முகம், அவளின் தங்க மாலை மின்னிய சங்கு கழுத்து, ஒட்டிய உடையில் அவளின் அழகு, அவனை அப்படியே பிரமிக்க வைத்தது. என்றாலும் அவன், அவள் கைகளை உதறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான்.
அதன் பின் அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள்.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 07 தொடரும்
துளி/DROP: 1953 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06
https://www.facebook.com/groups/978753388866632/posts/32974794075502481/?
By
kandiah Thillaivinayagalingam ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.