Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23.03.2023, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது மகனின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனது மகனின் மனைவி வழி சொந்தங்களும் எங்களுடன் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்திருந்தார்கள். கதைகள் பல்வேறு விடயங்களைத் தொட்ட படி போய்க் கொண்டிருந்தன

அன்றைய தினம் நான் வசிக்கும் நகரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. “நண்பகலில்  கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர், அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்டார்என்பதே அந்தப் பரபரப்புச் சம்பவம். சம்பவத்தை யாரும் பார்த்ததாக அறிவிக்கவில்லை. இணையத்திலும், உள்ளூர் வானொலியிலும்தான் செய்தி வெளியாகியிருந்தது.

மகனின் சகலன் ஆதியும்  கட்டிட ஒப்பந்தக்கார நிறுவனமொன்றின் சொந்தக்காரன். ஆகவே அவனுக்கு அந்தச் செய்தியில அதிக நாட்டம் இருந்ததில் வியப்பில்லை. கடத்தப்பட்டவரைத் தனக்குத் தெரியுமென்றும் குறோஸியா நாட்டைச் சேர்ந்தவன், வயது 50க்குள்தான் இருக்கும்  என்றும் ஆதி சொன்னான்

கொலை, கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்துகள் என ஏகப்பட்ட செய்திகள் நாளாந்தம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் போது, வந்த இந்தச் செய்தியும் அது போல ஒரு செய்தி தான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. அதனால் எங்கள் நகரில் நடைபெற்ற அந்தக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த ஆர்வமும் ஏற்படவில்லை.

“அந்த ஒப்பந்தம் காரனின் பெயர் டாலிபோஎன்று ஆதி குறிப்பிட்ட போது, எனது மகன் என்னைப் பார்த்துக் கேட்டான், “உங்களின்ரை குளியல் அறை செய்தது ஆர்?”

“டாடோஎன்றேன்.

“அது அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை அழைக்கும் பெயராக இருக்கலாம். அவனுடைய குடும்பப் பெயர் தெரியுமோ?” என்று எனது மகன் மீண்டும் கேட்க என் தலை இல்லை என்று வலம் இடம் ஆடியது.

2020இல் எங்களை வெளியில் நடமாட விடாது வீட்டுக்குள்ளே கொரோனா அடைத்து வைத்திருந்த ஆரம்ப கால நேரம். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சந்திக்கலாம், அதுவும் நான்கு பேர்கள் மட்டும் ஒன்று கூடலாம் என்ற அறிவிப்பினால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தேன். பென்சன் எடுத்து விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறையபோர்அடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நீண்டநாள் நான் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த குளியல் அறையைத் திருத்தினால்... என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

இணையத்தில் தேடி எனது நகரில் இருக்கும் ஒரு பிளம்பர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளும் போது ஜோர்க் அறிமுகமானார். தொழிலாளிகள் யாரும் வேலைக்கு வராததால் கையைப் பிசைந்து கொண்டு வீட்டில் இருந்து பியர் குடித்து, வயிறு வளர்த்துக் கொண்டிருந்த (ஜோர்க்) முதலாளிக்கு எனது அழைப்பு உற்சாகத்தைத் தந்திருக்க வேண்டும். எனது வேண்டுகோளை உடனேயே ஏற்றுக் கொண்டார். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதற்காக தானே தனக்குத் தெரிந்த ஒரு கட்டிடக்காரரை அழைத்து வருவதாகவும் சொன்னார். அப்படி அவர் அழைத்து வந்தவன்தான் டாடோ(47). டாடோவும் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ஆக மூனாவின் குளியலறை வேலைக்கு இரண்டு மூனாக்கள் வேலைக்கு வந்தார்கள்.

உயரமான, பருத்த உடம்புவாசிதான் டாடோ. “குளியலறை என்பதால் ஜோர்க் சட்டப்படிதான் எல்லாம் செய்வார். ஏதாவது பைப் லீக்காகினாலோ, உடைந்தாலோ கொம்பனியின் உத்தரவாதம் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் பின்னால் எது நடந்தாலும் காப்புறுதி ஈடு செய்யாது. ஆனால் என்னுடைய வேலை அப்படி இல்லை. ‘கறுப்புத்தான். மணித்தியாலத்துக்கு 42 யூரோ தர வேண்டும்என்று டாடோ கேட்டுக் கொண்டான். கறுப்புத்தானே எனக்குப் பிடித்த கலர். ஒத்துக் கொண்டேன்.

டாடோவும், ஜோர்க்கும் குளியலறைத் திருத்தத்துக்கான முழுப் பொருட்களையும் தாங்களே கொள்வனவு செய்து எனது சிரமத்தைக் குறைத்துக் கொண்டார்கள். நான் செய்து கொடுத்தசிக்கன் றோல்ஸ்மற்றும் அடிக்கடி நான் கொடுக்கும் கோப்பி, மதிய உணவான சோறு, கறிகள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்துப்போகமாலையில் வேலை முடியபியர் கொண்டு வாஎன்று என்னிடம் அவர்கள் உரிமையுடன் சொல்லும் அளவுக்கு நெருக்கமாகிப் போனோம். அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களை கேலிச்சித்திரமாகவும் வரைந்து கொடுத்திருந்தேன்.

 

Untitled Artwork

நான் வரைந்த சில படங்கள் எனது கைத் தொலைபேசியிலும் இருந்தன. தேடிப் பார்த்த போது டாடோவின் படமும் அங்கே இருந்தது. “டாடோ இப்படித்தான் இருப்பான்என எனது மகனுக்குக் காட்டினேன். மகன் ஆதியிடம் கொடுக்க, அதைப் பார்த்து விட்டு, “இவன்தான்... இவன்தான் டாலிபோஎன  ஆதி கூவ, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அந்தக் கொண்டாட்டத்தை என்னால் ரசிக்க முடியாமல் போயிற்று.

“மிகவும் இலாபமான முறையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரோடு ஒப்பந்தம் செய்திருக்கிறன். என்னட்டை ரூமேனியாவிலை இருந்து வந்த வேலையாட்கள் இருக்கினம். அவையள் சட்டப்படியான வேலையாட்கள் இல்லை. மணித்தியாலத்துக்கு ஏழு, எட்டு யூரோக்கள் குடுத்தால் போதும். இரவு பகல் என்று பாராமல் வேலை செய்வாங்கள். இப்ப கொரோனா வந்ததாலை எல்லாரும் தங்கடை நாட்டுக்கு திரும்பிப் போட்டாங்கள். வேலையாட்கள் இல்லை. சட்டப்படி சம்பளம் கொடுத்துச் செய்யிறதெண்டால் கட்டுப்படி ஆகாது. பயங்கர நட்டம்தான் வரும். கொரோனா  எப்ப தொலையுமோ? போனவங்கள் எப்பத்  திரும்ப வரப்போறாங்களோ? இல்லாட்டில் வராமலே இருந்திடுவாங்களோ?   என்று டாடோ என்னிடம் கவலைப் பட்டுச் சொன்னது நினைவுக்கு வந்தது.

டாடோ நல்லதொரு வேலையாள். பழகுவதற்கு இனிமையானவன். அவனுக்கு ஏன் இந்த நிலமை வந்தது? யார் டாடோவைக் கடத்தி இருப்பார்கள்? எதற்காகக் கடத்தினார்கள் என்று எனக்குக் குளப்பமாக இருந்தது.

அடுத்தநாள், தொலைக்காட்சியில் டாடோவின் செய்திகள் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக டாடோவின் செய்தியே இருந்தது.

Mann aus Schwaebisch Hall nach Brandenburg entfuehrt – mutmassliche Entfuehrer forderten Loesegeld

Zwei Maenner sollen einen 46-Jaehrigen in ein Auto gezerrt und verschleppt haben. Einer der Verdaechtigen war vergangene Woche an einer Schiesserei in Berlin beteiligt

(ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பிராண்டன்பூர்க்கிற்கு ஒருவர் கடத்தப்பட்டார் - கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கடத்தப்பட்டவரை மீட்பதற்கு ஒரு தொகை பணத்தைக் கேட்கிறார்கள். இரண்டு பேர் 46 வயதுடைய ஒருவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த வாரம் பெர்லினில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்)

கொஞ்சம் கொஞ்சமாக விபரங்கள் வெளியேவர ஆரம்பித்தன

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ கவி ஐயா.
ஐயாட்ட நாமளும் ஒரு படம் வரையக் கேட்பமோ?!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சம்பவங்கள்........நல்ல நல்ல புதினங்கள் எழுதுகிறீர்கள் படங்களுடன்.......பாராட்டுக்கள்......!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்கள் வீட்டு வேலையளுக்கு வைச்சிருக்கிற ஆக்களை பார்த்தால்.......

நாம் எல்லோரும் ஒரே நீரோட்டத்தில் உள்ளவர்கள்.

சட்டப்படியான தொழில் நுட்பத்தில் கறுப்பாய் இருந்து செவ்வனே செய்து தருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நாம் எல்லோரும் ஒரே நீரோட்டத்தில் உள்ளவர்கள்.

உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கோரோனாவின் பின்னர் விலைவாசிகள் ஏறிக் கொண்டே இருந்தன. கூடவே பல பொருட்களுக்குத் தட்டுப்பாடுகளும் இருந்தன. அதிலும் முக்கியமாக கட்டிடப் பொருட்களை பெரும் விலைகள் கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இந்த நிலையால் பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் காணத் தொடங்கிய போது, சின்னச் சின்ன நிறுவனங்கள் தள்ளாடி விழுந்து கொண்டிருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

டாடோவினால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைத்துக் கட்ட முடியாத நிலை உருவாகி இருந்தது. அவனுடன் ஒப்பந்தம் செய்தவர்கள்வீட்டு வேலை எப்போது முடியும்?” என்று அவனை நெருக்க ஆரம்பித்தார்கள். தனியாக இருந்து தவிப்பதை விட வேறு சில கட்டிட ஒப்பந்தக்காரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால், இந்தக் குழிக்குள் இருந்து வெளியே வந்து விடலாம் என்று டாடோ கணக்குப் போட்டுக் கொண்டான். பலரைத் தொடர்பு கொண்ட போது பேர்லின், பிராண்டன்பூர்க் நகரத்தில் இருந்து சேர்பியா நாட்டைச் சேர்ந்த முகமுது(28), டாடோவுடன் துணை ஒப்பந்தக்காரராக இணைய விருப்பம் தெரிவித்தான். இங்கேதான் தவறு நடக்கப் போகிறது. அது தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை டாடோ அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அப்பொழுதே தனது நிறுவனம் திவால் ஆகிப் போய்விட்டது என்று டாடோ அறிவித்திருந்தால் தப்பித்திருப்பான். கொரோனா காலம் முடிந்ததன் பின்னர் பல நிறுவனங்கள் தாங்கள் திவாலாகிவிட்டன என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டன. ஆனால் ஏனோ டாடோ அதைப் பற்றி அப்பொழுது சிந்திக்கவில்லை.

புதிதாக இணைந்த துணை ஒப்பந்தக்காரன் முகமதுவின் உதவியுடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் டாடோ ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பித்தான். புத்துணர்ச்சி வந்ததால் பழைய, புதிய  ஒப்பந்தங்களுக்கான கட்டிட வேலைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முடுக்கி விட்டான். வரும் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிக்கத் தொடங்கினான்

டாடோ கேட்கும் பொழுதெல்லாம் முகமது பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி முகமது, தனது பங்குக்காக, டாடோவிடம் கொடுத்த பணம் இப்பொழுது இரு நூறு ஆயிரங்களைத் தாண்டி விட்டிருந்தது. ஆனால் இலாபத்தின் பங்கோ அல்லது கொடுத்த பணத்துக்கான கணக்கோ முகமதுவுக்குக் கிடைக்கவில்லை. பல தடவைகள் நச்சரித்தும் வெறும் பத்தாயிரம் யூரோக்கள் மட்டுமே டாடோவிடம் இருந்து முகமதுவுக்கு திரும்பக் கிடைத்திருந்தது. அதே நேரம் டாடோவிடம் முதலீடு செய்யவென கடனாகப் பெற்ற பணத்தை,  திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் முகமதுவுக்கு வந்திருந்தது

முகமதுவுக்கு  பணம் தந்தவன் குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவன். ஒரு மாபியா குழுவாக பேர்லீனில் செயற்பட்டுக் கொண்டிருப்பவன். தமிழ்ச்சினிமாவில் வரும் கந்து வட்டி வில்லன்களை இப்பொழுது கற்பனை செய்து பார்த்தீர்களானால் குர்தீஸ் இன மாபியாவை ஓரளவுக்கு நீங்கள் வடிவமைத்துக் கொள்வீர்கள்.  

பணக் கொடுக்கல் வாங்கல்களினால், 18.03.2023 இல் பேர்லின் வீதியில் இரு குழுக்களுக்கிடையே ஒரு கை கலப்பு நடந்திருக்கிறது. அந்தக் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கியும் இருக்கிறார்கள். இந்தக் கைகலப்பில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடனும் அடிபட்ட காயங்களுடனும் 26 மற்றும் 28 வயதுடைய இருவரை பொலிஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கைகலப்பில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்அந்தக் கைகலப்பில் முகமதுவும் இருந்திருக்கிறான் என்பதை விசாரணையில் பொலிஸார் தெரிந்து கொண்டார்கள். முகமது ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரனாக இருந்து கொண்டு யேர்மன் நாட்டின் கராட்டி சம்பியனாகவும் இருந்தவன். ஆகவே அவனுக்கும் அடிதடி கைவந்திருந்தது.

இன்னும் பணம் இருந்தால்தான் டாடோவினால் தனது கட்டிட வேலைகளைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகி விட்டிருந்ததுமேற்கொண்டு பணம் வரும் வழிகள் எதுவும் இனி இல்லை என்று டாடோவுக்குத் தெரியத் தொடங்கியது. ஒரு பக்கம் கொடுத்த பணத்தை முகமது திருப்பிக் கேட்டு அவசரப் படுத்திக் கொண்டிருந்தான். மறு பக்கம்வீடு எப்போ முடியும்?” என ஒப்பந்தக்காரர்கள் நெருக்க ஆரம்பித்திருந்தார்கள்.

டாடோ பயணித்த இரு குதிரைகளும் ஒன்றாகத் தரையில் வீழ்ந்திருந்தன. வேறு வழியில்லை எனத் தீர்மானித்த டாடோ, தான் திவாலாகி விட்டதாக அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டான். விடயத்தை அறிந்து தொலைபேசியில் அழைத்து தான் கொடுத்த பணத்தை  முகமது  கேட்ட போது அரசாங்கத்துக்கு அறிவித்ததிவால்என்ற வார்த்தையையே டாடோ, முகமதுவுக்கும் சொன்னான்.

பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்ட மனவுளைச்சல், பணத்தைக் கடனாகத்  தந்தவனிடம் இருந்து வந்த அச்சுறுத்தல் இரண்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட முகமது தூக்கம் இன்றித் தவித்தான். முகமதுவால் ஓடி ஒளிய முடியாது. காரணம் அவனது தாயும் சகோதரியும் பேர்லினில்தான் வசிக்கிறார்கள். தன்னால் அவர்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் அவனை ஒரு புறம் பயமுறுத்தியது.

முகமது தனது வேலையாளான லூக்காவை தொலைபேசியில் அழைத்தான்.  “காரை எடுத்துக் கொண்டு வா ஸ்வேபிஸ்ஹாலுக்குப்  போகவேணும்என்றான். லூக்காவும் வேலை நிமித்தம் சேர்பியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவன்தான். லூக்கா, முதலாளி முகமதுவுக்கு மிகவும் பிடித்தவன், நம்பிக்கையானவன். சாலை விதிகளைச் சரியாகக் கடைப் பிடிக்காமல்  தனது சாரதி பத்திரத்தை இழந்திருந்த முகமதுவுக்கு லூக்காதான் இப்பொழுது சாரதி.

VW UP காரில் பேர்லினில் இருந்து இருவரும் அதிகாலை புறப்பட்டு மதியம் ஸ்வேபிஸ்ஹாலை வந்தடைந்தார்கள். டாடோ வீட்டில் ஒன்று கூடிப் பேசினார்கள். இனிமையாக, கோபமாக, அதட்டி என்று எந்தவகையில் கேட்டாலும், டாடோ திரும்பத் திரும்பச் சொன்னது ,”என்னிடம் பணம் இல்லை. நான் திவாலாகிப் போயிட்டன்என்பதுதான்.

முகமது பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவன் பழகிய கராத்தே வெளியேவரத் தொடங்கியது. வன்முறைக்கும் டாடோ அசைந்து கொடுக்கவில்லை. டாடோவை இழுத்துக் கொண்டு வந்து காருக்குள் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். நடந்ததை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த டாடோவின் மனைவிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் குறேஸியாவில் இருந்து யேர்மனிக்கு வந்தவள். மொழி அவளுக்கு இன்னும் பரிட்சயம் ஆகவில்லை. திகைத்துப் போய் பல்கணியில் அவள் நின்றாலும் தனது கணவனை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்ட வாகனத்தின் இலக்கத்தை எழுதி வைத்துக் கொண்டாள்.

காரின் வலது பக்க இருக்கையில் டாடோ இருந்தான். பின் இருக்கையில் முகமது இருந்தான். அவன் கையில் ஒரு சுத்தியல் இருந்தது. வாகனத்தில் பயணிக்கும் போது முன் இருக்கை இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தைக் காட்டிஇங்கே உன் வலது கையை வைஎன்று டாடோவிடம் முகமது சொல்ல அவனும் அந்த இடத்தில் கையை வைத்தான். முகமதுவின் கையில் இருந்த சுத்தியல் வேகமாக டாடோவின் கையில் இறங்கியது. டாடோ அலற ஆரம்பித்தான். சிறிது நேரப் பயணத்துக்குப்பின்,  “டாடோ உன் இடது கையை வைஎன முகமது திரும்பவும் கட்டளையிட்டான். முகமதுவின் கையில் இருக்கும் சுத்தியல் தன் தலையில் இறங்கினால்..? டாடோவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. காரை ஓட்டிக் கொண்டிருந்த லூக்காவும் இடையிடையே டாடோவுக்கு ஏதாவது செய்து கொண்டிருந்தான். தலைக்கு வர இருப்பது கையோடு போகட்டும் என்று  டாடோ இடது கையை வைத்தான். மீண்டும் சுத்தியலால் முகமது டாடோவின் கையில் அடித்தான். பேர்லினுக்கான பயணம் ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது.  அந்த ஆறு மணித்தியாலங்களும் தமக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் டாடோவை சுத்தியலாலும் கைகளாலும் முகமதுவும் லூக்காவும் தாக்கிக் கொண்டே  பயணித்தார்கள்.

பயணத்தின் போது தனது இன்னுமொரு வேலையாளான எல்விஸ்ஸை முகமது அலைபேசியில்  அழைத்து, சில வேலைகளைச் செய்யும்படி சொன்னான். எல்விஸ்ம் சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன் .

அவனது அடுத்த தொலைபேசி டாடோவின் வீட்டுக்குப் போனது. வீட்டுத் தொலைபேசி அழைப்பை டாடோவின் மனைவியே எடுத்தாள்.

உன்னுடைய புருசன் உனக்குத் திரும்பத் தேவை என்றால், முதற்கட்டமாக இருபத்தைந்தாயிரம் யூரோக்களை தருவதற்கு ஏற்பாடு செய்முகமதுவின் குரல் அவளுக்கு எச்சரித்தது.

ஹலோசொல்லிவிட்டு புன்னகையுடன் டாடோவின் மனைவியைப் பார்த்த வங்கி ஊழியர் என்ன வேண்டும் என்ற பார்வையுடன் நின்றார்.

பணம். இருபத்தையாயிரம்

இருபத்தையாயிரம்?” கேட்டு விட்டு டாடோவின் மனைவியைப் பார்த்தார் வங்கி ஊழியர். “அவ்வளவு பணத் தேவையா? தனியாகவா வந்தீர்கள்?” கேட்டுக் கொண்டே பணம் எடுப்பதற்கான படிவத்தை நிரப்பித் தரும்படி அவளிடம் கொடுத்தார்.

யேர்மனியில் சில காலமாக தனியாக இருப்பவர்களை வயது போனவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், வங்கிகளில் அதிகமாகப் பணத்தை எடுக்கும் போது இப்படியான கேள்விகள் கேட்பது வழக்கம். இன்றும் வங்கி ஊழியர் டாடோவின் மனைவியிடம் அப்படித்தான்  கேட்டார். அது பலனைத் தந்தது.

 

பொலிஸாரின் கேள்விகளுக்கு டாடோவின் மனைவி பதில் சொல்ல, அவளுக்கு  அப்பொழுது  மொழி  பிரச்சனையாக இருக்கவில்லை. அவளது இரண்டு மகள்மாரும் பாடசாலை முடித்து வீடு திரும்பி இருந்ததால், தாயின் பதிலை அவர்கள் மொழிபெயர்த்தார்கள்.

ஒரு குற்றம் நடந்த இடத்தில் அதைச் செய்தவன் பதட்டத்தில் ஏதாவது சிறிய தடயத்தையாவது விட்டுச் செல்வான் என்று சொல்வார்கள். முகமது தனது சொந்தக் காரில் வந்து பெரிய தடயத்தையே விட்டுச் சென்றிருந்தான்.

பொலிஸாருக்கு அதிக பிரச்சனைகள் இருக்கவில்லை. வாகன இலக்கத்தை வைத்தே ஆளை அடையாளம் கண்டு விட்டார்கள். ஸ்வேபிஸ்ஹால் பொலிஸாரிடம் இருந்து பேர்லின் பொலிஸாருக்கு தகவல்கள் போனாலும் அவர்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுத்தார்கள். முகமதுவின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே அவதானித்து இருந்ததால், சிறப்பு அதிரடிப்படையை வரவழைத்தார்கள்.

Edited by Kavi arunasalam
எழுத்தின் அளவு மாற்றம் செய்யப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

டாடோ உயிரோடு மீள்வாரா?!
தொடருங்கோ கவி ஐயா.

ஐயா எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

மாற்றியிருக்கிறேன் எராளன்😌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

மாற்றியிருக்கிறேன் எராளன்😌

நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டட வேலை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி போலவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மர்மக் கதை வாசிப்பது போல், சுவராசியமாக எழுதுகின்றீர்கள் கவி அருணாசலம். 👍
உண்மையில்  கதிரையின் நுனியில் இருந்து இவற்றை வாசித்தேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை சந்திக்க வேண்டும் ....என்னுடைய படத்தையும் உங்களை  கொண்டு வரைய வேண்டும் என்பது என் ஆசை 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகமதுவின் கார் பேர்லினை அடையும் போது இருட்டி விட்டிருந்தது. கார் முகமதுவின் இருப்பிடத்துக்கு வந்தவுடன்,  முகமதுவும், லூக்காவுமாக டாடோவின் முகத்தை மூடி,  வாகனத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்குள் இழுத்துப் போனார்கள்.

முகம் மூடப்பட்டிருந்தாலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை டாடோவால் ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது.

வீட்டின் முதல் மாடியில் இருந்த அறை முழுவதும் பொலித்தீன் விரிக்கப் பட்டிருந்ததுஅதன் மேலே மரம் வெட்டும் வாள், சுத்தியல், துளையிடும் இயந்திரம், கத்தி, பேஸ்போல் துடுப்பு... போன்ற பல பொருட்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. அதை எல்லாம் ஒழுங்கு செய்து வைத்தது எல்விஸ். தொலைபேசியில் அழைத்து முகமது அவனுக்குச் சொன்ன வேலைகள் அவை.

முகமூடி அகற்றப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு உள்ளாடை மட்டும் அணிந்திருந்த டாடோ பொலித்தீன் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தான். பார்ப்பதற்கு மரண பயம் தரும் வகையில் அவன் முன்னால் தாக்குதலுக்குத் தேவையான பல வகையான ஆயுதங்கள்.

டாடோ அணிந்திருந்த ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்ததால் அவற்றை அழித்து விடும்படி முகமது, எல்விஸ்ஸிடம் சொன்னான். எல்விஸ் அவற்றை எல்லாம் ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கட்டி காட்டுக்குள் எறிந்து விட்டு வந்தான்.

பயணக் களைப்புத் தீர்ந்ததன் பிற்பாடு தரையில் இருந்த டாடோவின் முன்னால் முகமது வந்து நின்றான். முதலில் அவன் கையில் எடுத்த ஆயுதம் துளையிடும் இயந்திரம். டாடோவின் பின்புறம் போய் நின்ற முகமது ஒன்றி்ல் இருந்து எண்ணும்படி டாடோவுக்குச் சொன்னான். துளையிடும் இயந்திரத்தின் சத்தம், கட்டளையிடும் முகமதுவின் அதிகாரக் குரல். டாடோ எண்ண ஆரம்பித்தான். ஒன்று, இரண்டு…. டாடோ இருபது என்று சொல்லும் போது, அவனின் பிடரியை அண்டிய முதுகில் முகமது ஒரு துளை போட்டான். வலி தாங்காமல் துடித்த டாடோவிடம்சத்தம் போடாமல் தொடர்ந்து எண்ணுஎன்று சத்தமாகச் சொன்னான். வலியுடன் டாடோ தொடர்ந்து எண்ணினான். முகமது என்ன கணக்குப் போட்டானோ தெரியாது 20,40,60,.. என ஒவ்வொரு இருபதுக்கும் டாடோ முதுகில் ஒவ்வொரு துளையாகப் போட்டுக் கொண்டிருந்தான். மொத்தமாக ஆறு துளைகள். 120க்கு மேலே எண்ண டாடோவால் முடியவில்லை

முகமது ஓய்வெடுக்கும் போதெல்லாம், தன் பங்குக்கு லூக்காவும் டாடோவைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தான். டாடோவின் மேலான தாக்குதல்கள் அடுத்த நாளும் தொடர்ந்தன. தனக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை அழைத்து வரும்படி முகமது எல்விஸ்ஸிடம் சொன்னான். வந்த வைத்தியர், அறையில் இருந்த நிலைமையைப் பார்த்து உறைந்து போய் நின்றார்.

டொக்டர் எந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டால் ஒரு மனிதன் உடனடியாக இறக்கமாட்டான்?” கையில் துப்பாக்கியுடன் நின்ற முகமதுவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் டொக்டரால் அங்கே நிற்க முடியாது.

 “தொடையில் சுட்டால்…”

எல்விஸ், டொக்டருக்கு காசு குடுத்து அனுப்பி விடு

கனரக வாகனங்களுடன் முகமதுவின் வீடு இருந்த பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நின்றனர். வழமைபோல் யாரோ சிரியா நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியைக் கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் பொது மக்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள்.

உள்ளே என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பு படை அணியினரால் அவதானிக்க முடியவில்லை. தங்களது அதிகாரியின் கட்டளைக்காக அவர்கள் ஆயத்தமாக நின்றார்கள்.

முகமது துப்பாக்கியால் சுட்ட குண்டுகள் இரண்டு இலக்குத் தவறாமல் டாடோவின் தொடையில் போய்த் தங்கின.

துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டதும், “இது உயிரைப் பறிக்கும் வேலை. இனியும் தாமதிக்க முடியாது. நிலமை தீவீரமாக இருக்கிறது. உள்ளே செல்லவும்”  அதிகாரியின் கட்டளை கேட்டு சிறப்பு அதிரடிப்படை முகமதுவின் வீட்டுக்குள்ளே நுளைந்தது.

பேர்லின் அரச சட்டத்தரணி முன்னால் முகமது, லூக்கா,எல்விஸ் மற்றும் அறுபது வயதான முகமதுவின் இன்னுமொரு தொழிலாளியும் நின்றார்கள். முகமது, லூக்கா இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு இருவரையும் தடுப்புக் காவலில் வைக்கும்படியும் எல்விஸின் மேல் வழக்குப் பதியும் படியும், மற்ற ஊழியரில் ஒரு குற்றமும் இல்லாததால் அவரை விட்டுவிடும்படியும் அரச சட்டத்தரணி உத்தரவிட்டு, கையெழுத்திட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டாடோ உயிர் தப்பிவிட்டாரா? இல்லை காயங்களால் மரணித்துவிட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அப்ப டாடோ உயிர் தப்பிவிட்டாரா? இல்லை காயங்களால் மரணித்துவிட்டாரா?

அப்ப மட்டுமில்லை இப்பவும் அவர் உயிர் தப்பி விட்டாரா தெரியவில்லை, பொறுமை பொறுமை அவர் ஒரு கோப்பி குடித்துவிட்டு வந்து சொல்லுவார்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமாக எழுதுகின்றீர்கள் கவி அருணாசலம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அப்ப மட்டுமில்லை இப்பவும் அவர் உயிர் தப்பி விட்டாரா தெரியவில்லை, பொறுமை பொறுமை அவர் ஒரு கோப்பி குடித்துவிட்டு வந்து சொல்லுவார்.....!  😂

உங்களை மாதிரியே கவியரும் தொடர் கதை மூலம் ஒரு கொக்கியைப் போட்டு எல்லாரையும் இங்கேயே சுத்தி வர வைச்சிருக்கிறார்😂.

சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Ahasthiyan said:

சுவராசியமாக எழுதுகின்றீர்கள் கவி அருணாசலம்

ஒரு கரித்துண்டு கிடைத்தது. சுவரும் வசப்பட்டது. கிறுக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான்

19 minutes ago, Justin said:

சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!

சுவியும்,கவியும் வயதுக்கு வந்தவர்கள். ஒரு பிடி நரைத்தவரும் இருக்கிறார். அவரை விட்டு விட்டீர்களே Justin

10 hours ago, suvy said:

அவர் ஒரு கோப்பி குடித்துவிட்டு வந்து சொல்லுவார்.....!  😂

பியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது.

எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?”

ஓம், வாறன்

விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம்ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்

நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டுலொக்கரில்என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு  106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறதுஎன்று தகவலைத் தந்தார்கள்

கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள்.

 

Untitled Artwork

போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார்.

 

Untitled Artwork

லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார்.

எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லைஎன எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

 

Kidnapper2_m.jpg

“நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்என முகமது குறிப்பிட்டான்.

போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்என லூக்கா சொன்னான்.

குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்என எல்விஸ் சொன்னான்.

Untitled Artwork

அரச சட்டத்தரணியான  லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர்  கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள்ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு  முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்என முடித்தார்.

 

நீதிபதி   தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை  விதிக்கப்படுகிறது…”

நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார்

முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட  மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது

ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை  மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்

வழக்கு முடிந்து விட்டது. ஆனால்,

டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளாஅல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

Untitled Artwork

இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன?

 

Photos Thumilan Selvakumaran

 

ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். மிகவும் சுவாரசியமான எழுத்து நடை. ஒரு குட்டி குறுந்திரைப்படமே எடுக்கலாம்.

கடைசிப் படத்தில் துப்பாக்கியை உறையில் தொங்கப் போட்டபடி கையில் சிகரெட்டுடன் சிந்தனையில் இருப்பவர் யார்? டாடோ வும் முகமதுவும் இப்படி ஒய்யாரமாக இருக்க கூடிய சூழ் நிலையில் இல்லையே...?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது.

கொடிதிலும் கொடிது.

  • கருத்துக்கள உறவுகள்

 பணம் வங்கி ஊடக  கொடுக்கப்பட்டதா. ?? நல்ல கதை  ஆனால் பணம் பலராது வழ்க்கையை சிதைந்து விட்டது  

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கவர்ந்த ஒரு அனுபவப் பகிர்வு...!

தொடர்ந்து எழுதுங்கள், கவி அருணாசலம்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொடிதிலும் கொடிது.

இல்லை.

இது அவர்கள் சமுதாயத்தில் சர்வ சாதாரண விடயம். அவர்கள் அப்படித்தான்,
இது பற்றி இங்கே ஒரு கருத்தை வைத்திருந்தேன். நிர்வாகம் நீக்கி விட்டது. ஒரு இனத்தை தரக்குறைவாக எழுதியதற்காகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, புங்கையூரன் said:

மனதைக் கவர்ந்த ஒரு அனுபவப் பகிர்வு...!

தொடர்ந்து எழுதுங்கள், கவி அருணாசலம்...!

தெய்வமே!
உங்கள் எழுத்துக்களின் ரசிகன் நான், நேரம் கிடைக்கும் போது வந்து ஏதாவது கிறுக்குங்கள்.
வளர்ந்த தமிழ் இன்னும் வளரட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.