Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

விஜய்

பட மூலாதாரம்,AGS

2 பிப்ரவரி 2024, 08:03 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :

"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

"தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. "

"ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. "

"மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்."

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

'2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு'

"இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

'சினிமாவிலிருந்து விலகுகிறேன்'

அந்த அறிக்கையில் மேலும், "இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்." என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
விஜய்

பட மூலாதாரம்,PIB ARCHIVE

நடிகர் விஜய் பற்றிய அரசியல் பிம்பம் எப்போது தொடங்கியது?

2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.

நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

சர்ச்சையில் சிக்கிய விஜயின் திரைப்படங்கள்

2011ல் விஜயின் 'காவலன்' திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.

பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.

விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM

கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.

அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.

விஜய்

பட மூலாதாரம்,YOUTUBE/SONY MUSIC INDIA

தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாடு

2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51w53dx1lno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு நாமல் வாழ்த்து

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கும் அவர் ஆரம்பித்துள்ள புதிய அத்தியாயத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார். இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/290370

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

வாழ்த்துக்கள் தலீவரே.

எல்லோரும் ஏறிய குதிரையில் தம்பி விஜேயும் ஏறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் சவாரியை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு காலை வைக்க தைரியம் இல்லை. 

TMK

TVK

கட்சி ஆரம்பித்தமையால் இனி படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அது முழு தமிழ் சமுதாயத்துக்கும் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய்: தமிழக வெற்றிக் கழகம் பற்றி மக்கள், அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகர் விஜய் அறிவித்தார்.

மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதை உறுதி செய்யும் வகையில் சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கட்சியின் பெயரோடு அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விஜய். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

 

அரசியல் தலைவர்களின் எதிர்வினை என்ன?

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம்,X/@RATHNAKUMAR

"இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. நடிகர் விஜயின் முடிவுக்குப் பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்," என்று கூறியுள்ளார் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், "மண்ணை ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை, 'வா தம்பி' என தட்டிக் கொடுத்துதான் வரவேற்க வேண்டும். இந்த அரசியல் களத்தில் கூடுதலாக ஒருவர் வந்து வேலை செய்வது வலிமைதான். நான் ஒரு வகையில் உதவுகிறேன் என்றால் அவர் ஒருவகையில் உதவ வருகிறார்," என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பிற நடிகர்கள், முதல்வரிடமும், உதயநிதியிடமும் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள். ஆனால் விஜய் களத்தில் நின்று உதவினார். இதெல்லாம் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல். நூலகம் திறக்கிறார், புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார், நான் சொல்வதைவிட ஒரு புகழ் பெற்ற நடிகர் வந்து சொல்வது நல்லதுதானே. இது வரவேற்கத்தக்கது," என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆனால் "நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது. தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும், நம்மை இந்தியாவை ஆள விடமாட்டார்கள். பெருந்தலைவர் காமராஜரால்கூட முடியவில்லையே! அதனால் சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தட்டும்," என்றார்.

"ஏற்கெனவே ஒருமுறை இதுகுறித்துக் கேட்கப்பட்ட போது, அதை வரவேற்றிருந்தேன். இப்போதும் அதேதான். அவரிடம் முற்போக்குப் பார்வை, சிந்தனை இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்," எனக் கூறினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, "விஜய் கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால் சினிமாவில் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

 

'விஜய் அரசியலில் கரை சேர்வாரா என பார்ப்போம்'

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம்,VIJAY/X

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். 10 பேர் சேர்ந்துகூட கட்சியை ஆரம்பிக்கலாம். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அரசியல் என்பது ஒரு பெருங்கடல், ஒரு சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் நீந்திக் கரை சேரும் நபர்களும் உண்டு, மூழ்கிப் போகும் நபர்களும் உண்டு. எனவே, இப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் நீந்திக் கரை சேர்கிறாரா அல்லது மூழ்கிப் போகிறாரா என்பதைத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்," என்றார்.

மேலும், "அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதிமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கட்டிக்காத்து 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியாக மாற்றியவர் அம்மா ஜெயலலிதா. அதேபோல இப்போது அண்ணன் எடப்பாடி தலைமையில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியில் யாராலும் கை வைக்க முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். ஆனால், இங்கே மக்கள்தான் எஜமானர்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "பல பேர் அறிவிப்போடு நிறுத்தியதை, வாபஸ் பெற்றதை, தோல்வி அடைந்ததைச் செய்து காட்டிவிட்டார் விஜய். ஆனால், இனிமேல்தான் அவருக்கு சோதனை காலம்.

இதுவரை ஆதரித்த பத்திரிக்கையாளர்கள், அவரது கொள்கையைப் பொறுத்துதான் அவரை ஆதரிப்பார்கள். மக்களுக்கு என்ன செய்வார் என்பதை வைத்துதான் அவரது வெற்றி அமையும். திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். படத்தில் நடித்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க முடியும். எனவே ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ் சினிமாவில் பெரிய வசூல் நடிகரான விஜய் திரைத்துறையை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அரசியலுக்காக சினிமாவை விட்டு விலக வேண்டியதில்லை. ஏனென்றால், எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே 'உலகம் சுற்றும் வாலிபன்', 'இதயக்கனி' போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்தார். அதனால், விஜய் நடித்துக்கொண்டே அரசியலிலும் இயங்கலாம். அதுதான், சினிமாத்துறைக்கும் நல்லது," என்றார்.

"தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 

'தமிழ்நாடு', 'தமிழகம்' சர்ச்சை

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம்

பட மூலாதாரம்,VIJAY/X

கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படப் பணிகளை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நடிப்பதை நிறுத்திவிடக்கூடாது எனவும், அரசியலில் தொடர்ந்து கொண்டே நடிக்கவும் வேண்டுமென அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

அதேவேளையில் கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்பதைத் தவிர்த்து 'தமிழகம்' என வைத்ததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

"ஆறு மாதங்களுக்கு முன்பு “தமிழகம்” என்ற வார்த்தை தவறு "தமிழ்நாடு" என்றுதான் சொல்ல வேண்டும் என ஒட்டு மொத்த மக்களும் பாஜகவினருக்கு எதிராகப் போராடினார்கள். இன்று அதுவே ஒரு கட்சியின் பெயராகப் பதிவு செய்யப்பட்டது வியப்பளிக்கிறது" என்பது போன்ற கருத்துகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

இதுகுறித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கவிஞர் சினேகன், "தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயர் குறித்து குறை சொல்கிறார்கள். பெயரில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாடோ தமிழகமோ, பெயரைவிட கட்சியின் கொள்கை என்ன என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்," என்றார்.

"புதிதாக அரசியலுக்கு வரும் ஒரு நபரின் மீது உடனடியாக விமர்சனங்களை வைப்பது நல்லதல்ல. வரவேற்கத்தான் வேண்டும். மக்கள் நீதி மய்யத்திற்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ அவர் போட்டியில்லை. எல்லோருக்கும் தனித்தனி பாதைகள் உண்டு. சமூகத்தில் நல்லது நடக்க யார் வந்து கேள்வி கேட்டாலும் அதை வரவேற்போம்," என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cd18knrdrdpo

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்  t.va.k 

தமிழக வெற்றி கழகம் t ve k

என்றுதான் குறிப்பிடுவினம்

தேர்தல் கமிஷனுக்கு ஒரே கன்பூசன்

 

  • கருத்துக்கள உறவுகள்

newproject13-16319690471-down-1706702949

4e20e860-c1cd-11ee-ace0-c35c1b4f6d82.jpg

மேலே நீலம் நடுவில் வெள்ளை கீழே சிகப்பு இதுதான் கொடியா இருக்க போகுது உங்கள் கருத்து என்ன ரெல் மீ

கறை வேட்டிக்கு ஓடர் கொடுக்கணும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர், திராவிடர் என் கட்சியின் பெயர் இல்லை. தமிழக என கட்சியின் பெயர் தொடங்குகிறது.
இவரை பா. ஜ.க. பின்னால் இருந்து இயக்குகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

தமிழர், திராவிடர் என் கட்சியின் பெயர் இல்லை. தமிழக என கட்சியின் பெயர் தொடங்குகிறது.
இவரை பா. ஜ.க. பின்னால் இருந்து இயக்குகிறதா?

இயல்பில் விஜய் பிஜேபி சித்தாந்தத்துக்கு ஒத்துப்போக்காதவர் என்றே நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சாரை புதிய மற்றும் இளைம் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக களமிறக்கியுள்ளது.  அதாவது இந்த வாக்குகள் திமுகவுக்கு போகாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மண்ட்.  ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்கமுடியாது. ஸ்டாலினுக்கு பிற்பட்ட காலத்தில் விஜய் சாரை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பாஜகவின் வியூகம்.

ஆனால் ஒன்று நாம் தமிழரை விட அதிக வாக்குகளை விஜய் கட்சி பெறும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகிடி said:

இயல்பில் விஜய் பிஜேபி சித்தாந்தத்துக்கு ஒத்துப்போக்காதவர் என்றே நினைக்கிறன் 

தி. மு.க தமிழ்நாடு என கூற பி.ஜே. பி தமிழகம் என கூறி பலத்த வாக்குவாதங்கள் சில காலத்துக்கு முன் நடந்தது. அதனால் தான் எனக்கு விஜய்  பி. ஜே. பி சார்பானவரோ என சந்தேகம் வந்தது. பார்க்கலாம்.
விஜய் 3 தொடக்கம் 4 வீத வாக்குகளை பெறலாம்
சிவாஜி, எம் ஜி ஆர் விஜயகாந் , ஜெயலலிதா வரிசையில் விஜய். 

  • கருத்துக்கள உறவுகள்

கடசி தொடங்குதல் பலவற்றுக்கும் நல்லதுதான்........எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்றத்துக்குள்ளேயே  வந்து கர்ஜித்த விஜயகாந்தையும் தலைகுப்புற கவிழ்த்து குதறி எறிந்த குள்ளநரிகள் இன்னமும் வெளியேதான் இருக்கின்றன ......அவைகளை கிட்ட நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாலே பாதி வெற்றிதான்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

தி. மு.க தமிழ்நாடு என கூற பி.ஜே. பி தமிழகம் என கூறி பலத்த வாக்குவாதங்கள் சில காலத்துக்கு முன் நடந்தது. அதனால் தான் எனக்கு விஜய்  பி. ஜே. பி சார்பானவரோ என சந்தேகம் வந்தது. பார்க்கலாம்.
விஜய் 3 தொடக்கம் 4 வீத வாக்குகளை பெறலாம்
சிவாஜி, எம் ஜி ஆர் விஜயகாந் , ஜெயலலிதா வரிசையில் விஜய். 

இன்னும் குறைந்தது 4 - 8 ஆண்டுகளுக்கு இந்தியாவில் இந்த மத அரசியல் நன்கு ஓடும், பின்பு சலிப்புத் தட்டி விடும்.ஆகவே 2029 இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர சாத்தியம் உண்டும். விஜய் குடும்பம் அடிப்படையில் காங்கிரஸ் (மற்றும் திமுக) சார்பானது .  ஒரு தடவை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கேட்டதாக ஞாபகம். எதிர்காலத்தில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரலாம். தீவிர தமிழ்த் தேசியவாதியாக இருந்தால் இந்தியா என்கிற நாட்டை நேசிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது போய் விடும் என்பதன் காரணமாக தமிழ் நாடு என்ற பெயர் தவிர்க்கப்பட்டு தமிழகம் சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

எதுவாக இருப்பினும் ரஜனி போல் விஜய் அங்கொரு கால் இங்கோர் கால் என்று இல்லாமல் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்தது நல்லது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய், சீமான்  போன்ற தனிநபர்களின் பெயர்களைத் தவிர்த்து புதிய கட்சிகளின் வரவு அல்லது அதற்கான தேவை ஏன் தமிழகத்தில் ஏற்படுகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் கதறத் தொடங்கிவிட்டனர்.  தமிழக முதல்வர் பதவி திமுகவின் குடும்பச் சொத்து அல்ல.  சின்னக் கலைஞர் உதய்ணாவை முதல்வராக வரலாம் என்றால் விஜய் ஏன் முதல்வராகக் கூடாது!  பாவம் செந்தமிழன் அண்ணா!😞

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகிடி said:

இயல்பில் விஜய் பிஜேபி சித்தாந்தத்துக்கு ஒத்துப்போக்காதவர் என்றே நினைக்கிறன் 

நீங்கள்சொல்வது சரி. இருந்தாலும் அரசியலில் எதுவும்சொல்ல முடியாது. இப்போது விஜய்  குறித்து சங்கிகள் பெரிதாக  கதைப்பதில்லை. அடக்கி வாசிக்கிறார்கள்.

விஜயும்கூட விஜய் ஜோசெப் என்பதில் ஜோசப்பை அகற்றி விடடார். மேலும் தமிழ் நாடு என்பதை விட்டு சங்கிகள் கூறுவது போல தமிழகம் என்றுதான் பெயரும் வைத்திருக்கிறார்.

எனவே வரும் காலம்தான் இதட்கு பதில் சொல்லும். இருந்தாலும் இவரால் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2024 at 10:58, ஏராளன் said:

தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

IMG-5742.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2024 at 13:11, Kapithan said:

விஜய், சீமான்  போன்ற தனிநபர்களின் பெயர்களைத் தவிர்த்து புதிய கட்சிகளின் வரவு அல்லது அதற்கான தேவை ஏன் தமிழகத்தில் ஏற்படுகிறது? 

அரசியல் படுத்தப்படாத ஒரு 50 வீத மக்கள் தமிழ் நாட்டில் உண்டு. அந்த ஐம்பது வீதத்தில் முக்கால் வாசி அதிமுகவிடம் உள்ளது. அது ஆர் எஸ் எஸ் சித்தாந்ததை நோக்கி இலகுவில் திருப்பப்படலாம். அதை தடுப்பது முக்கியம். இல்லாவிட்டால் தமிழ் மொழியும் இனமும் வாழ்வியலும் நிலமும் போய்விடும். விஜய்க்கு பின்னால் அடுத்த 50  ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்காக யோசிக்கும் தீவிர திராவிட  சித்தாந்தவாதிகள் இருக்கலாம்.  ஏன் ஸ்டாலின் கூட இருக்கலாம். விஜய் vs உதை என்று வருவது திமுகவுக்கும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அரசியலுக்கு பின்னணியில் பாஜகவா?

தமிழக வெற்றிக் கழகமாம்! கட்சியின் பெயரிலேயே ஒரு செய்தி இருக்க வேண்டாமா?  விஜய் அரசியலில் இறங்குகிறாரா? அல்லது இறக்கப்படுகிறாரா? ஆனால், அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் விஜய்க்கு இருக்கிறதா?  அவருடைய வருகையால் பயன் யாருக்கு? பாதிப்புகள் யாருக்கு?

அதென்ன தமிழகம்? தமிழ்நாடு என ஏன் குறிப்பிட முடியவில்லை..? குறிப்பிட்டால் உங்க பின்னணியில் இருப்பவர்களுக்கு பிடிக்காதோ..?

ஆனால், ஒன்று! இது சரியான தருணம் தான்! அவரே குறிப்பிடுவதைப் போல மக்கள் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு காத்திருக்கின்றனர் என்பது உண்மை தான்!

விஜய் தன் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.’’ எனக் கூறியுள்ளார்!

ஐயா விஜய் அவர்களே, உங்களால் இப்படி எல்லாம் சிந்திக்க முடிகிறதா? அல்லது யாரேனும் இதை எழுதி தந்தார்களா? ஏனென்றால், இது வரையிலான உங்கள் கனத்த மெளனம் அல்லது கள்ள மெளனம் சொல்லிய செய்திகள் வேறல்லவா?

விஜய் தன் அறிக்கையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.என்கிறார். ஆனால், தன் தாய், தகப்பனிடம் இருந்தே அண்மை காலமாக அவர் விலகி உள்ளார்! சாதராணமான பேச்சுவார்த்தை கூட இல்லாத நிலை! அவருடைய அரசியல் அவரது குடும்பத்தையே பிளந்துள்ளது.

1192744.jpg

அரசியலில் ஈடுபட சில அடிப்படை பண்புகள் வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா விஜய் அவர்களே?

# முதலாவது துணிச்சல்! 

# இரண்டாவது யார் எதிரி? யார் நண்பன் என்ற தெளிவு!

# மூன்றாவது வெளிப்படைத் தன்மை! இது தான் பாதை! இது தான் பயணம் எனச் சொல்ல வேண்டும்.

# நான்காவது நாட்டு நிலவரங்களில் ஒரு தொடர்ச்சியான அக்கறையும், அதனை ஒட்டி அபிப்ராயமும் வெளிப்பட வேண்டும்.

# ஐந்தாவது மக்கள் செல்வாக்கு!

மேற்படி ஐந்து அம்சங்களில் கடைசி ஒன்றில் மட்டும் தான் அபரிதமான மதிப்பெண் பெறுகிறார்! மற்ற நான்கிலும் அவருக்கு என்ன மதிபெண் போடலாம் என பார்க்கலாமா..?

துணிச்சல்:

எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி ஆரம்பிச்ச போது கருணாநிதி தான் தன் பிரதான எதிரி என ஒரு பலமான எதிரியோடு மோதினார்! அவருடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை திரையிடவிடாமல் தடுத்தனர். பிலிம் ரோலை எரிக்கப் பார்த்தனர். எம்.ஜி.ஆர் தொண்டர்கள் ஆங்காங்கே திமுகவினரால் தாக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர், ‘மலையாளி’ என்றும், ‘அறிவில்லாதவர்’ எனவும் அவமானப்படுத்தப்பட்டார். எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் எம்.ஜி.ஆர் முன்னேறினார்!

ஆனா, விஜய்யின் துணிச்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்ட போது அமைதி காத்தீர்கள்.  2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்து, அதிமுக வெற்றி பெற்ற பின், ”அந்த வெற்றியில் அணிலாய் என் பங்களிப்பும் இருந்தது” என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதி காத்தீர்!

vijay-64159751.jpg

தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தீர்கள்! படத்தை திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. தியேட்டர்காரர்கள் பயந்தனர்! நீங்க கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு போட்டு ஜெயலலிதா காலில் விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாத நிலையில் அவமானப்பட்டு திரும்பி வந்து அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, பேனரில் உள்ள வாசகத்தை அகற்றி படத்தை வெளியிட்டீர்கள்! உங்கள் கருத்து சுதந்திரத்தை காக்கவே நீங்கள் போராடவில்லையே!

சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி துணிச்சலாக வசனம் பேசினீர்கள்! பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! ஹெச்.ராஜா போன்றவர்கள் உங்களின் கிறிஸ்த்துவ குடும்ப பின்னணியை இழிவுபடுத்தி பேசினர். ரெய்டுகள் நடத்தப்பட்டன! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்கள். அதன் பிறகு கப்சிப் தான்!

மோடியிடம் பேசப்பட்டது என்ன? அதன் பிறகு பாஜக தரப்பில் உங்களுக்கு இணக்கம் ஏற்பட்டது எவ்வாறு? தினமலர் உள்ளிட்ட இந்துத்துவ பத்திரிகைகள் உங்களை மிக மென்மையாக கையாளுவதன் ரகசியம் என்ன? உங்கள் தந்தையை விலக்கி வைக்கச் சொல்லி உங்களை நிர்பந்தித்தது யார்?

Vijay-Facing-Music-for-Criticising-Modi-

யார் எதிரி? யார் நண்பன்?

மோடியும் நண்பர், ஸ்டாலினும் நண்பர், எடப்பாடியும் எதிரியல்ல..என்கிற ரீதியான அரசியல் தான் விஜய் அரசியலாக உள்ளது! காரணம், தெளிவான கொள்கை இல்லை!

மதவெறி அரசியல் கூடாது என்றால், பாஜக தான் எதிரி!

ஊழல், குடும்ப அரசியல் கூடாது என்றால் திமுக எதிரி! அதிமுகவும் ஊழல் கட்சி என்பதால் எதிரி தான்!

சாதி அரசியல் கூடாது என்றால், பாமக, கொ.ம.க ஆகியவை எதிரி!

எதிரியைத் தீர்மானிக்காமல் அரசியல் செய்ய முடியாது.

நாட்டு நிலவரங்களில் அக்கறை;

2009 லேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டீர்கள். எனவே, மக்களை பாதிக்கும் விவகாரங்களில் உங்கள் கருத்தை நீங்கள் தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் இது வரை உங்கள் எதிரி யார் எனச் சொல்லவேயில்லை.

maxresdefault-6.jpg

தமிழ் நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது! இளைஞர்கள், பிஞ்சு மாணவர்கள் கூட மது பழக்கத்தில் சீரழிகின்றனர்! தமிழக ஆட்சியாளர்களின் பேராசை இதற்கு பின்புலம். நீங்கள் இது வரை இது குறித்து கவலைப்பட்டு உள்ளீர்களா?

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இங்கு ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கிறது. ”பணத்தை வாங்காதீர்கள்…” என்று உரத்து உங்கள் குரல் ஒலித்திருக்க வேண்டாமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில்,மக்கள் அமைதி போராட்டம் நடத்தும் போது குருவி போல் சுட்டுக் கொல்ல்லப்பட்டனர். நீங்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்?

சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?

மெர்சல் படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!

Vijay.jpg

மேற்படி விவகாரங்களில் ஏன் உங்களால் கருத்து சொல்ல முடியவில்லை. காரணம், உங்கள் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம்,இரண்டாயிரம் என சட்டத்திற்கு புறம்பாக விலை வைத்து விற்பதில் ஆட்சியாளர்கள் மெளனம் காட்டுகிறார்கள்! பதிலுக்கு நீங்களும் அமைதி காக்கிறீர்கள் என புரிந்து கொள்ளலாமா..?

வெளிப்படைத் தன்மை:

மக்கள் இயக்கம் கண்ட பிறகு இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எந்த ஒரு பொது விஷயத்திற்கும் வாய் திறப்பதில்லை. உங்கள் சம்பாத்தியம் என்ன? சொத்து மதிப்பு என்ன? பொதுச் சேவைக்கு உங்கள் சம்பாத்தியத்தில் எத்தனை சதவிகிதம் தருகிறீர்கள்..எதிலாவது வெளிப்படைத் தன்மை இருக்கிறதா?

1017306.jpg

பாருங்கள்! கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.இனிமேலாவது துணிந்து அநீதியை எதிர்ப்பீர்களா? எனில், உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொண்டால் தான் அப்படி எதிர்க்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள்!

2026-க்கு தான் தேர்தலில் பங்கு பெறுவீர்கள் என்றால், அதற்கு இந்த தேர்தலையே ஒரு டிரைலராக  நீங்க பார்க்கணும்! எடுத்த எடுப்பில் பெரிய வெற்றியை ஈட்டி நேரடியாக முதல்வராக முடியாது! இனியும் காலம் தாழ்த்தாது களத்திற்கு வாங்க. நீங்க என்ன பேசுறீங்க, என்ன செய்யிறீங்க என்பதைக் கொண்டு தான் உங்கள் பின்னணியில் பாஜக இருக்குதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். ஏனென்றால், விஜய்க்கு தானாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் துணிச்சல் கிடையாது என்பதே உண்மை!

இரண்டு திராவிட இயங்கங்கள் இங்கு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலையில், ‘அவர்களின் வாக்கு வங்கியை தான் ஒரு போதும் அள்ள முடியாது’ என்ற நிலையில் உங்களை இறக்கி ஆழம் பார்க்கிறதா பாஜக? என்ற சந்தேகத்திற்கு விரைவில் விடை கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் விஜய் வருகையால் இரு திராவிடக் கட்சிகளுக்கு சற்று வாக்கு வங்கி பலவீனப்படும். விஜய் பாஜகவின் நிழலாக இயங்க நினைத்தால், அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை!

சாவித்திரி கண்ணன்

 

https://aramonline.in/16521/actor-vijay-politics/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சாவித்திரி கண்ணன்

நல்வதொரு கட்டுரை.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1816.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது நல்ல திரைப்படங்களை மகிழ்சசியாக பார்தது ரசிக்க விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  இனிப்பான செய்தி.

 திரைப்படங்களில் ஹீரோ என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி  Ganster Rowdy  யாகவும்  விளையாட்டாக சற்று பொறுக்கித்தனம் பண்ணுவதாகவும் இருப்பதே உண்மையான ஹீரோ என்று இளம் சமுதாயத்தை நினைக்க வைத்த புரட்சியை செய்த விஜய் ஒரு புரட்சி ஹீரோ தான். அரசியலில் ஆரம்ப கால விஜய்யாக மாற்றம் பெற்று வந்தால்  வந்தால் நல்லது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழகம் என்று வரணுமாம்.

https://www.facebook.com/100001870809982/posts/24651579967821022/?mibextid=VI5BsZ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம்?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கட்சியின் சின்னம் குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கட்சியின் சின்னம் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/290682

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.