Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

adminApril 18, 2025

Pusparani.png?fit=987%2C488&ssl=1

1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த  செயற்பாட்டாளராக  இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில்  அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர்.

1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு .

1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற இடம் பெற்றன .4 ஆம்மாடியின் இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது .

1970களின்முற்பகுதியில் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக எழுந்த தெற்கு வடக்கு இளைஞர்களின் கதை வதைகளின் கதைகளான காலமது.

பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் பல தசாப்தங்கள் கடந்து 1970களின் அனுபவத்தை புதிய புலம் பெயர் மற்றும் சமூக அனுபவ வெளிச்சத்தில் அகாலம் என்ற தலைப்பில் எழுதினார்.  பிரான்சின் ஈழ முற்போக்கு அணியின் பெண் ஆளுமை அவர். தமிழ் சிங்கள ஆளும் வர்க்க மன நிலை இந்த புத்தகத்தின் ஊடாக உணர்த்தப்படுகிறது

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூக பிரக்ஞையுடன் முன்னெடுத்த இளைஞர் இயக்க வரலாற்றில் மறைந்த புஷ்பராஜா  அவரது சகோதரிபுஸ்பராணி அவர்களின் பங்களிப்பு குறித்துரைக்கப்பட வேண்டியது இவர்கள் ஈழப் போராட்ட இளைஞர் இயக்க வரலாற்றின் முன்னோடிகள் சின்னங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

மூலம் –

Sritharan Thirunavukarsu –

Varathar Rajan Perumal

https://globaltamilnews.net/2025/214472/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8275.jpeg.29a8cd05a228b49f110e

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

49 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_8275.jpeg.29a8cd05a228b49f110e

அருமையான ஓவியம் ஒன்றும் தெரியவில்லை விசாரித்துப் பார்க்கலாம் என்று தட்டியபோது ஒவியம் தெரிகிறது ஆனால் உங்கள் பதிவில் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்போது அடிமையாயிருந்தேன்!

September 3, 2009

நேர்காணல்: புஷ்பராணி

ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஷ்பராணி. தலைமறைவுப் போராளிகளுக்குச் சோறிட்டு வீட்டுக்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியல் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி.

தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஷ்பராணி 1986ல் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார்.

ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராணியைச் சந்தித்து எதுவரை இதழுக்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.

சந்திப்பு: ஷோபாசக்தி

நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. வசதியான குடும்பம் இல்லையென்றாலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம் எங்களது.

எங்களது கிராமத்தில் கரையார்களே ஆதிக்கசாதியினர். அவர்கள் மத்தியில் நாங்கள் ஒரேயொரு தலித் குடும்பம். என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. சமூகத்திலிருந்து நாங்கள் புறமாக வைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு நாங்களே துணைவர்கள், தோழர்கள். குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் போத்தலில் தேநீர் குடிக்கவோ, கோயிலுக்கு வெளியில் நின்று சாமி கும்பிடவோ நாங்கள் தயாரில்லை. புறக்கணிப்புக்கு புறக்கணிப்பையே நாங்கள் பதிலாகக் கொடுத்தோம். எங்கள் காலத்தில் எங்கள் குடும்பம் சாதித் தொழிலிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனது தந்தையாரும் மூத்த சகோதரர்கள் இருவரும் புகையிரதத் திணைக்களத்தில் வேலை பார்த்தார்கள். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்.

ஒரு ஆடு போய் அடுத்த வீட்டு இலையைக் கடித்தால் போதும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். சண்டையின் முதலாவது கேள்வியே ‘எடியே உங்களுக்கு கரையார மாப்பிள்ளை கேக்குதோ” என்பதாகத்தானிருக்கும். ஆட்டுக்கும் கரையார மாப்பிள்ளைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் பதிலுக்கு எங்களைக் கலியாணம் கட்டத் தகுதியுள்ள கரையான் இங்கே இருக்கிறானா? எனத் திருப்பிக் கேட்போம்.

எங்கள் கிராமத்தில் நான் அறியாத காலத்தில் எங்களைத் தவிர வேறு சில தலித் குடும்பங்கள் இருந்தனவாம். அவர்கள் எல்லோரும் பிழைப்புக்காகவும் வேறுகாரணங்களிற்காவும் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்பும் கூட எனது தந்தையார் அங்கிருந்து போக விரும்பவில்லை. எங்கள் அய்யா எங்களை ராங்கியாகத்தான் வளர்த்தார். சாவது ஒருமுறைதான் எதுவந்தாலும் எதிர்ந்து நில்லுங்கள் என்று சொல்லிச் சொல்லித்தான் எங்களை வளர்த்தார். நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம். வாயால் பேச வேண்டிய இடங்களில் வாயாலும் கையால் பேச வேண்டிய இடங்களில் கைகளாலும் பேசினோம். எங்கள் குடும்பமே ஒரு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போலத்தான் இயங்கி வந்தது.

நான் பத்தாவது வரைக்கும் மயிலிட்டி கன்னியர் மடத்தில் படித்தேன். பொதுவாக இந்துக்கள் கன்னியர் மடங்களில் படிப்பதற்கு வருவதில்லை. இந்துப் பாடசாலைகளிலோ அப்போது தலித்துகள் வேண்டாப் பிள்ளைகளாக நடத்தப்பட்டார்கள். கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரிகள் பணக்காரர்களுக்குப் பல்லிளித்து ஏழை மாணவிகளைத் துரும்பாக மதித்தார்கள். நான் படிப்பில் கெட்டிக்காரியாயிருந்த போதும், உயர்கல்வியைத் தொடர இளவாலை கன்னியர் மடத்தில் எனக்கு இடம் கிடைத்தபோதிலும் குடும்பச் சூழ்நிலையால் என்னால் பத்தாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை.

அப்போது கிராமங்கள் தோறும் பெண்களிற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வண்ணம் மாதர் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. எங்கள் கிராமத்திலும் அவ்வாறான ஒரு மாதர் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென எனக்கு ஆர்வமிருந்தபோதிலும் ஆதிக்க சாதிப் பெண்கள் என்னுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால் அந்த எண்ணம் நிறைவேறவேயில்லை. நான் ‘தமிழரசுக் கட்சி’யில் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்.

  • அறுபதுகளில் தலித் மக்கள் மத்தியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள்தான் செல்வாக்கோடு திகழ்ந்தன. நீங்கள் எப்படித் ‘தமிழரசுக் கட்சி’யிடம் ஈர்க்கப்பட்டீர்கள்?

எங்களது தந்தையார் நீண்டகாலமாகவே தமிழரசுக் கட்சியின் ஆதராவாளராயிருந்தார் என்பது ஒரு காரணமாயிருந்தாலும் அன்றைய காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிமாவின் கூட்டரசாங்கத்தில் சேர்ந்திருந்ததாலும் அந்தக் கட்சிகளின் தலைமையில் சிங்களவர்களே இருந்ததாலும் எனக்குக் கொம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதுவித ஈர்ப்புமிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களைப் பார்க்கப் போவது என்றளவில்தான் முதலில் என்னுடைய அரசியல் ஈடுபாடு இருந்தது. எழுபதுகளின் தொடக்கத்தில் புஸ்பராஜா யாழ்ப்பாணத்திற்குப் படிக்கச் சென்றபோது அவருக்கு பத்மநாபா, வரதராஜப் பெருமாள், பிரான்ஸிஸ் (கி.பி.அரவிந்தன்) போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இளைஞர்கள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தனிநாடு குறித்து இவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டுமிருப்பார்கள். ‘தமிழர் கூட்டணி’யினரின் செயலற்ற தன்மையில் அதிருப்தியடைந்த இவர்களைப் போன்ற இளைஞர்கள் இணைந்து 1973ல் புஸ்பராஜாவின் தலைமையில் ‘தமிழ் இளைஞர் பேரவை’யை உருவாக்கினார்கள். தவராஜா, சரவணபவன், வரதராஜப்பெருமாள், பத்மநாபா, பிரான்ஸிஸ் (கி.பி. அரவிந்தன்) போன்றவர்கள் இளைஞர் பேரவையைத் தொடக்கியதில் முக்கியமானவர்கள்.

புஸ்பராஜாவை என்னுடைய தம்பி என்பதை விட என்னுடைய அரசியல் தோழர் என்று சொல்வதே பொருந்தும். ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்தாலோ ஒரு நாவலை வாசித்தாலோ அவர் என்னோடு அதுகுறித்துத் தீவிரமாக உரையாடுவார். அதுபோலவே அரசியல் குறித்தும் என்னோடு ஆழமாக விவாதிப்பார். புஸ்பராஜாவின் வழியாகத் தமிழ் இளைஞர் பேரவையில் நானும் இயங்கத் தொடங்கினேன்.

  • தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற நாற்காலி அரசியலுக்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் பேரவையின் அரசியல் திட்டங்களும்கூட கூட்டணியை அடியொற்றிய வெறும் தேசியவாதமாகத்தானேயிருந்தது. சாதியம், யாழ்மையவாதம் போன்ற உள்முரண்களை அவர்களும் கண்டுகொள்ளவில்லையே?

இப்போது அந்தத் தவறை நான் உணர்கிறேன. ஆனால் அப்போது எங்களுக்குத் தமிழர்கள் என்ற ஒற்றையடையாளமும் தனிநாடு என்ற இலட்சியமுமே முக்கியமானதாகப்பட்டது. அந்த இலட்சியத்தை அடைந்துவிட்டால் மற்றைய முரண்களைத் தீர்த்துவிடலாம் என்றே கருதினோம். நாங்கள் அமைக்கப்போகும் தமிழீழம் சாதிமத பேதமற்ற நாடாகவிருக்கும் என நம்பினோம். இன முரண்பாடுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம்.

  • அப்போது நீங்கள் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து ஒருபோதும் இந்த நாட்டில் வாழ முடியாது என்பதில் உறுதியாயிருந்தீர்களா?

ஆம் மிகவும் உறுதியாயிருந்தேன். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்தான் அரசின் சேவைத்துறைகளில் நிறைந்திருந்தார்கள் என்றொரு பேச்சு உண்டு. உண்மையில் காலனிய காலத்தில்தான் அரச சேவைத் துறைகளுக்குள் தமிழர்கள் நிறைந்திருந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு சிங்களத் தேசியவாதம் வீரியத்துடன் உருவாகி வந்தபோது தமிழர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். இராணுவத்திலும் பொலிஸ்துறையிலும் தமிழர்கள் அரிதாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். நடந்த இனக் கலவரங்களும் இத்தகைய புறக்கணிப்புகளும் முக்கியமாகத் தரப்படுத்தல் முறையும் எங்களை அந்த முடிவை நோக்கித் தள்ளின.

  • தரப்படுத்தல் திட்டம் ஒரு இனவாதத் திட்டம் என இப்போதும் கருதுகிறீர்களா?

இல்லை. பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை என்றவாறு தரப்படுத்தல் திட்டம் சீரமைக்கப்பட்டபோது இலங்கையின் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு முன்னுரிமைகள் கிடைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் முன்னுரிமையும் நன்மையும் பெற்றிருக்கின்றன. ஆனால் அதையும் யாழ்ப்பாணத்தான் இயன்றளவு தட்டிப்பறிக்க முயன்றதுதான் சோகம். யாழ்ப்பாணத்து மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களில் பதிவுசெய்து அங்கிருந்து பல்கலைக் கழக அனுமதியைக் குறுக்கு வழியில் பெற்றுக்கொண்டதும் நடந்தது. ஆனால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்த போரால் யாழ் மாவட்டம் வெகுவாகப் பாதிப்புற்றிருக்கிறது. சகல உள்கட்டுமானங்களும் நொறுங்கியுள்ளன. எனவே இப்போது யாழ் மாவட்டத்தையும் பின்தங்கிய பகுதியாக அறிவித்துக் கல்வியில் முன்னுரிமை வழங்குவது அவசியமானது. வெறுமனே கல்வியில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள், நாடாளுமன்ற உறுப்புரிமை போன்ற சகல துறைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் பின்தங்கியவர்களிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

  • தமிழ் இளைஞர் பேரவை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பதில் உறுதியாயிருந்தா?

ஆம். அது மேலுக்கு உண்ணாவிரதம், பேரணிகள் என்று அறப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடக்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது. ஆனால் அதற்கான நிதிவசதி அதனிடமில்லை. யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு இடம் பெறுவதிலிருந்து தபாற் செலவுகள், பயணச் செலவுகள் போன்றவற்றிற்கும் அது தமிழர் கூட்டணியையே நம்பியிருந்தது. தமிழர் கூட்டணியோ இந்தத் துடிப்பான இளைஞர்களை தங்களது பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த முயன்றுகொண்டிருந்தது. புஸ்பராஜா, பத்மநாபா, தங்கமகேந்திரன் போன்ற இளைஞர்கள் கைகளில் துருப் பிடித்த துப்பாக்கியும் ஈழக் கனவுமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள்.

  • ஒருசில இளைஞர்களையும் துருப்பிடித்த துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது கொடுத்தது?

அது அரசியல் சித்தந்தப் பலமற்ற ஒரு வீரதீர மனநிலையும் பொறுப்பற்ற முட்டாள்தனமும் என்பதை நான் இப்போது ஒப்புக்கொள்வேன். ஆனால் அன்றைய நிலையில் வெகு சுலபமாகத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் தமிழர்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். 1975ல் நான் ஹட்டன் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது எப்போது தமிழீழத்தை அடைவீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ‘இன்னும் அய்ந்து வருடங்களில் நாங்கள் ஈழத்தை வென்று விடுவோம்’ எனப் பதில் கூறினேன். அது உண்மையென்றும் நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் என்னிடம் இன்னொரு கேள்வியும் கூட்டணியின் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சியாலும் பின்பு தமிழர் கூட்டணியாலும் வளர்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டணியினருக்கு எதிராகவே திரும்புவது என்ன நியாயம் எனக் கேட்டார்கள். ‘நல்லாசிரியன் எல்லாக்காலமும் தவறிழையான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போது கூட்டணியினர் பாராளுமன்றப் பதவிகளிற்காகத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்றேன் நான். இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டணியினர் தமது அப்புக்காத்து மேட்டுக்குடிக் குணங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தார்களில்லை. கூட்டணித் தலைவர்களில் பலர் மேட்டுக்குடிச் செருக்கும் திமிரும் கொண்டவர்கள் என்பதே எனது அனுபவம்.

  • ஆனால் தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் ஒரு பிரிவுபோல, அடியாட்கள் போல செயற்பட்டதாக ஒரு கருத்துள்ளதே?

இல்லை. அது தவறான கருத்து. தமிழ் இளைஞர் பேரவை எக்காலத்திலும் கூட்டணிக்குக் கட்டுப்பட்டதாக இருக்கவில்லை. இந்த உண்மையை புஸ்பராஜா தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். சொல்லப்போனால் மாணவர்களினதும் இளைஞர்களினதும் தன்னெழுச்சியானதும் அமைப்புரீதியானதுமான போராட்டங்களின் முன்பு கூட்டணிதான் தனது செல்வாக்கை மக்களிடம் மெதுமெதுவாக இழந்துகொண்டிருந்தது. இளைஞர்களின் நிழல்களில் நின்றுதான் கூட்டணி அதற்குப் பின்பு தனது அரசியலைத் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் அய்ம்பது இடங்களில் நடத்திய தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களில் கூட்டணியினர் தங்களை வலியப் புகுத்த வேண்டியிருந்தது.

  • நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அனர்த்தங்களின்போது நீங்கள் அங்கிருந்தீர்களா?

ஆம். நான் அங்குதானிருந்தேன். மேடையில் நயினார் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ‘உலகத் தமிழர் இளைஞர் பேரவை’த் தலைவர் இரா. ஜனார்த்தனன் மேடையில் தோன்றி மக்களைப் பார்த்துக் கையசைத்தார். அப்போது, பொலிசார் மாநாட்டைக் குழப்பினார்கள். துப்பாக்கிச் சூடுகளும் கண்ணீர்புகை வீச்சுகளும் நடந்தன. மக்கள் கலைந்து ஓடத்தொடங்கினார்கள். துப்பாக்கிச் சூட்டால் மின்சாரக் கம்பிகள் அறுந்து சனங்கள்மீது விழுந்தன. அன்று ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே துப்பாக்கி வெடிச்சத்தமும் ஓலக்குரல்களுமாய் தமிழராய்ச்சி மாநாடு சீர்குலைந்தது. அப்போது பொன். சிவக்குமாரன் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொண்டர்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த அனர்த்தம் எங்கள் எல்லோரையும் விட சிவக்குமாரனைத்தான் அதிகம் பாதித்திருந்தது. அவருடைய போராட்ட முனைப்புகள் அதிதீவிரம் பெற்றன. ஆறு மாதங்களிற்குள்ளாகவே, தோல்வியில் முடிந்த கோப்பாய் வங்கிக் கொள்ளையின்போது தப்பிக்க முடியாமல் எப்போதும் சிரித்த முகத்தோடும் எள்ளளவும் சுயநலமுமில்லாத உள்ளத்தோடும் இயங்கிய சிவக்குமாரன் சயனைட் அருந்தி இறந்துபோனார்.

  • அரசியற் பிரச்சினைகளைத் தனிநபர்களை அழித்தொழிப்பு செய்வதன் மூலம் அணுகும் கொலைக் கலாச்சாரத்தை சிவக்குமாரன் தொடக்க முயன்றாலும் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்ததன் மூலம் பிரபாகரன் தொடக்கி வைத்தார். துரையப்பாவின் கொலையை நீங்கள் எவ்விதமாகப் பார்த்தீர்கள்?

நாங்கள் அந்தக் கொலைச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ந்தோம். நான் குலமக்கா வீட்டுக்குச் சென்றபோது எனது சக இயக்கத்தோழி கல்யாணி என்னைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துரையப்பா ஒன்றும் இலேசுப்பட்ட ஆளல்ல. தமிழர் கூட்டணியின் ஆதரவாளர்களைத் தேடித் தேடித் தனது நகரபிதா பதவியின் முலம் அவர் தொல்லைகள் கொடுத்தார். குலமக்காவின் வீட்டு மதிற்சுவர் கூட துரையப்பாவின் உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டது. ஆனால் இன்று சிந்திக்கும்போது அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்க்கும் அந்தக் கலாச்சாரம் இன்று தனது சொந்த இனத்துக்குள்ளேயே துரையப்பாவில் தொடங்கி சபாலிங்கம் வரைக்கும் ஆயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டதையும் என்னால் உணர முடிகிறது.

  • இந்தப் பதற்றமான காலகட்டத்தில் உங்களின் அரசியற் செயற்பாடுகள் எதுவாயிருந்தன?

துரையப்பா கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தமிழ் இளைஞர் பேரவை பிளவுபட்டுப் போயிற்று. அப்போது மக்கள் மத்தியில் வேகமாகச் செல்வாக்குப் பெற்றுவந்த இளைஞர் பேரவையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூட்டணியினர் முயன்றனர். மங்கையயற்கரசி அமிர்தலிங்கம் மேடைக்கு மேடை இது மாவை சோனாதிராசாவால் தொடங்கப்பட்ட அமைப்பு என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் உண்மையில் மாவை சேனாதிராசா தமிழ் இளைஞர் பேரவையில் இருக்கவேயில்லை. இளைஞர் பேரவைக்குள்ளும் கனக மனோகரன், மண்டூர் மகேந்திரன், மதிமுகராஜா, மன்னார் ஜெயராஜா போன்ற கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பங்களைத் தொடங்கினர். இறுதியில் இளைஞர் பேரவை பிளவுற்று தங்கமகேந்திரன், சந்திரமோகன், புஸ்பராஜா, பிரான்ஸிஸ், வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தைத் (T.L.O) தொடங்கினார்கள். துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து புஸ்பராஜா உட்பட பெரும்பாலான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். புலோலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து நானும் கைதுசெய்யப்பட்டேன்.

  • புலோலி வங்கிக் கொள்ளையில் உங்கள் பங்கு என்ன? இயக்கம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தீர்களா?

இயக்கத்தை வளர்ப்பதற்கான நிதியாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கொள்ளைகள் அவசியம் என்றுதான் நான் கருதினேன். தங்கமகேந்திரன், சந்திரமோகன், வே. பாலகுமாரன் (முன்னைய ஈரோஸ் தலைவர்), கோவை நந்தன் போன்றவர்களின் திட்டமிடலிற்தான் புலோலி வங்கி கொள்ளையிடப்பட்டது. கொள்ளைப் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இரகசியமாக் கடத்திச் செல்வதற்கு அவர்களிற்கு நானும் கல்யாணியும் உதவி செய்தோம். வங்கிக் கொள்ளையைத் துப்புத் துலக்கிக்கொண்டிருந்த பொலிஸாருக்கு பிரதீபன் என்றொருவர் துப்புகளை வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். பிரதீபன் அப்போது இயக்க ஆதரவாளராக நடித்து தங்கமகேந்திரனின் நட்பைப் பெற்றிருந்தார். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் துரையப்பா கொலையைத் தொடர்ந்து சிறைப்பட்டிருந்த நிலையில் தங்கமகேந்திரனும் சந்திரமோகனும்தான் இயக்கத்தை தலைமைதாங்கி வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.

அந்த உளவாளி பிரதீபன் தன்னை தங்கமகேந்திரனின் நண்பர் என்று அறிமுகப்டுத்திக்கொண்டு என்னிடம் வந்தார். தங்கமகேந்திரனும் அவர் தனது நண்பரென்றும் இயக்க ஆதரவாளரென்றும் என்னிடம் உறுதிப்படுத்தினார். முடிவில் அந்த உளவாளி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்தபோது நான் வீட்டின் பின்புறத்தால் ஓடித் தப்பித்துக்கொண்டேன். பொலிஸார் எனது பெற்றோர்களையும் எனது தம்பி, தங்கைகளையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். எனது பெற்றோர்களும் சகோதரனும் சகோதரிகளும் பொலிஸ்நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எனது தம்பி வரதன் அனுராதபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டார். தங்கை ஜீவரட்ணராணி வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்க நான் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்ற தலைமைத் தோழர்களைத் தேடிப் போனேன். அவர்கள் குருநகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார்கள். பொலிஸார் என்னை வேறுகாரணங்களிற்காகத் தேடியிருக்கலாம் எனவும் வங்கிக் கொள்ளை குறித்துப் பொலிஸாருக்குத் துப்புத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் கூறி அந்த அதிபுத்திசாலித் தோழர்கள் என்னைப் பொலிஸாரிடம் சரணடையுமாறு சொன்னார்கள். நான் ஒரு வழக்கறிஞர் மூலம் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன். நான் பொலிஸ் நிலையத்திற்குள் கால் வைத்ததுமே பொலிஸார் கேட்ட கேள்விகளிலிருந்து புலோலி வங்கிக்கொள்ளை குறித்து எல்லாத் தகவல்களையும் பொலிஸார் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். நான் எனது வழக்கறிஞரிடம் இரகசியமாகச் சொன்னேன்: “தங்கமகேந்திரனிடம் போய்ச் சொல்லுங்கள், அவர்கள் என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள்” .

விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.

குறிப்பாக எங்கள் இயக்கத்தோடு தொடர்புடைய பெண்கள் குறித்தே என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். வங்கிக்கொள்ளை குறித்த தகவல்கள் எதுவும் அவர்களிற்குத் தேவையாயிருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை எனது தோழர்கள் முன்னமே படம் போட்டுப் பொலிஸாருக்கு விபரித்திருந்தார்கள்.

  • உங்கள்மீதான விசாரணைக்குப் பொறுப்பாயிருந்தவர் சித்திரவதைகளிற்கு பேர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்று அப்போது செய்திகள் வந்தன. அவர்தானா உங்களை விசாரணை செய்தார்?

இல்லை. என்னை இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையிலான குழுவே விசாரணை செய்தது. அந்த பஸ்தியாம்பிள்ளையும் இந்தப் பத்மநாதனும் பின்னர் புலிகளால் கொலைசெய்யப்பட்டனர். என்னை சித்தரவதை செய்ததில் சண்முகநாதன், கருணாநிதி, ஜெயக்குமார் போன்ற அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கிருந்தது. இவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் கொல்லப்பட்டனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் விசாரணை அதிகாரிகள் எல்லோரும் வெள்ளாளர்களாகவேயிருந்தனர். அவர்களிடம் சிக்கிய நானும் கல்யாணியும் தலித்துகளாகயிருந்தோம். நாங்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பள்ளி, நளத்தி என்று எங்கள் சாதிப்பெயர்களால் இழிவு செய்யப்பட்டே தாக்கப்பட்டோம். பத்மநாதனைப் பொறுத்தவரை இந்த வழக்கை முடித்துவைத்து பதவி உயர்வு பெறவேண்டும் என்ற அதீத துடிப்பு அவரிடம் காணப்பட்டது. ஆனாலும் நானும் கல்யாணியும் பெண்கள் என்ற வகையில் அவர் எங்களை ஓரளவு கண்ணியமாகவே நடத்தினார். மற்றைய பொலிஸாரிடமிருந்து பாலியல்ரீதியான தொந்தரவுகள் வந்தபோது அவரே எங்களை அவற்றிலிருந்து காப்பாற்றினார். ஆனால் சித்திரவதைகளில் அவர் குறை வைக்கவில்லை. என்னைக் குப்புறப்படுக்கப் போட்டுவிட்டு அவர்கள் பொல்லுகளால் என்னைத் தாக்கியபோது நான் ‘அடியுங்கடா என்னை! கொல்லுங்கடா என்னை” என்று அலறினேன். அந்தச் சத்தம் முழு யாழ்ப்பாணத்திற்கும் கேட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வரத்தினம் என்ற பொலிஸ்காரர் கண்ணீர்விட்டு அழுததை என்னால் மறக்க முடியாது. செல்வரத்தினம் இப்போது பிரான்ஸில்தான் வாழ்கிறார். எனது போராட்ட அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் நான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். எனது நூலை செல்வரத்தினத்தைக் கொண்டுதான் நான் வெளியிடுவேன்.

  • எப்போது வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்?

யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு முதலில் யாழ் கோட்டைக்குள்ளிருந்த கிங் ஹவுஸில் அடைத்து வைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களில் அங்கிருந்து வெலிகடைச் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். வெலிகடைச் சிறையில்தான் நான் ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்டு தெனியாயச் சண்டையில் தலைமை வகித்துப் போராடிய தோழிகளான புத்த கோறளையையும் சந்திரா பெரேராவையும் சந்தித்தேன்.

  • அவர்களுக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படியிருந்தன?

அவர்கள் அற்புதமான தோழிகள். அவர்கள் எங்களிடம் தமிழ் படித்தார்கள். நான் அவர்களிடம் சிங்களம் படித்தேன். நாங்கள் அரசியல் விவாதங்களையும் உரையாடல்களையும் மனம்விட்டுச் செய்தோம். அந்தச் சிங்களத் தோழிகள் என்னையும் கல்யாணியையும் சிறைக்குள் தாய் மாதிரிப் பாதுகாத்தார்கள். அப்போது சிறைக் கண்காணிப்பளாராயிருந்த சைமன் சில்வாவும் அருமையான மனிதர். அவரின் நற்பண்புகள் குறித்து அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசி. ஆனந்தன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். எனவே சிறை வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. நான் சிறையிலிருந்த காலங்களில் நிறையவே வாசித்தேன். சிறை நூலகத்திலிருந்து புத்தகங்கள் கிடைக்கும். அந்த நூல்கள் ஆண்கள் சிறையிலிருந்த எங்களது இயக்கத் தோழர்களுடன் நாங்கள் இரகசியமாகத் தகவல்களைப் பரிமாறவும் எங்களுக்கு உதவின. நாங்கள் நூலகத்திற்குத் திருப்பியனுப்பும் புத்தகங்களை அவர்களும் அவர்கள் அனுப்பும் புத்தகங்களை நாங்களும் பெற்றுக்கொள்வோம். புத்தகங்களின் பக்கங்களில் மெல்லிய கோடுகளிட்டும் ஓரங்களில் எழுதியும் சங்கேதங்களாய் நாங்கள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம்.

  • புகழ்பெற்ற வழக்கறிஞர்களால் நிரம்பியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களின் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்ததா?

அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த என். நவரத்தினம் நாடாளுமன்றத்தில் நான் கைது செய்யப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பியிருந்தார். அப்போது பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் “நீங்களும் ஒரு பெண். அந்தத் தாயுள்ளத்துடன் நீங்கள் புஷ்பராணியை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கேட்டபோது சிறிமாவோ “நான் பெண் என்பதிலும்விட நான் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு முக்கியமானது” என்றார். ஆறுமாதச் சிறைவாசத்திற்குப் பின்பு நான் விடுதலையானேன். வழக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 1980ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, கோவை நந்தன், நல்லையா ஆகியோருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நான் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே நந்தனும் நல்லையாவும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த தங்கமகேந்திரனும் ஜெயக்கொடியும் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் சென்றார்கள்.

  • அதற்குப் பின்னான உங்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறிருந்தன?

சிறையிலிருந்து வெளியில் வரும்போதே நான் இயக்கத்தின்மீது வெறுப்புற்றுத்தான் வெளியே வந்தேன். ஈழவிடுதலைக்காக உயிரையும் தருவார்கள், பொலிஸில் அகப்படும் நிலைவரின் சயனைட் தின்று வீரச்சாவடைவார்கள் என நான் நம்பியிருந்த தோழர்கள் என் கண்முன்னாலேயே பொலிசாரின் முன் மண்டியிட்டு அழுததையும் என்னைக் காட்டிக்கொடுத்ததையும் என்னால் சீரணிக்க முடியவில்லை. தம்மைச் சுற்றி வீரதீரப் படிமங்களைக் கட்டியெழுப்பி வைத்திருந்தவர்கள் அந்தப் படிமங்கள் சிதறிவிழ எதிராளியிடம் மண்டியிட்டார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் இந்த அவலம் திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நமது விடுதலை இயக்கங்களின் ஆரம்பநிலைகளிலேயே இளைஞர்களிடையே அதிகார விருப்பும் பதவிப் போட்டிகளும் தோன்றிவிட்டதையும் நான் கவனித்து வெறுப்புற்றிருந்தேன். இயக்கத்தில் என்னுடன் கல்யாணி, டொறத்தி, பத்மினி போன்றவர்கள் தீவிரமாக இயங்கினாலும் பெண்கள் என்றரீதியல் நாங்கள் இயக்கத்திற்குள் இளைஞர்களால் அலட்சியமாகவே நடத்தப்பட்டதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். சிறையிலிருந்து வெளிவந்த என்னைச் சமூகமும் கொடூரமாகத்தான் எதிர்கொண்டது. பொலிஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவள் என நான் ஒதுக்கப்படலானேன். அப்போது இயக்கம், விடுதலைப் போராட்டம் பற்றியெல்லாம் பொதுப்புத்தி மட்டத்தில் எந்த அறிவுமிருக்கவில்லை. எனக்கு கொள்ளைக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டது. அப்போது இருபத்தாறு வயதேயான இளம்பெண்ணாயிருந்த நான் மனதால் உடைந்துபோனேன். விடுதலை அரசியலில் எனக்கு ஈடுபாடு இருந்தபோதிலும் அந்த ஈடுபாடு இன்றுவரை தொடரும்போதும் நான் இயக்கத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் என்னை இயக்க அரசியலுக்கு அழைத்தபோதும், தோழர் பத்மநாபா போன்றவர்கள் என்னை இயக்க அரசியலுக்குத் தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தபோதும் நான் இயக்க அரசியலில் ஈடுபட மறுத்துவிட்டேன்.

  • எப்போது பிரான்சுக்கு வந்தீர்கள்?

1986ல் வந்தேன். இடையில் 1981ல் எனக்குக் கல்யாணம் நடந்தது. நான் மணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. சிறையில் இருந்தவள், கொள்ளைக்காரி என்று எனக்குக் குத்தப்பட்ட முத்திரையால் எனது முப்பத்தொரு வயது வரையிலும் எனக்குத் திருமணம் அமையவில்லை. கடைசியில் புஸ்பராஜாவின் நண்பர் ஒருவருடன் எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்குத் திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தபோதும் இந்தச் சமூகத்தில் திருமணமாகாத ஒரு பெண்ணாய் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளாலும் என் பெற்றோரின் விருப்பத்திற்காவும் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன். அந்தச் சம்மதம் என் வாழ்க்கையைத் துன்பத்திற்குள் தள்ளியது. என் திருமண வாழ்வு மகிழ்ச்சியாய் அமையவில்லை. பிரான்ஸ் வந்ததன் பின்பாக நான் விவாகரத்துச் செய்துகொண்டேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு வாழ்ந்துவருகிறேன். பிரான்சுக்கு வந்ததன் பின்னாகப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் தொடர்ச்சியாக் கலந்து வருகிறேன். இங்கேயும் பல்வேறு தமிழ் அரசியல் இயக்கங்கள் இயங்கிவந்த போதிலும் எவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் இயக்க வேலைகளில் நான் என்னை ஈடுபடுத்தவில்லை. தனிப்பட்ட பல தோழர்கள் மீது எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருந்தபோதும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் வேலைத்திட்டங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேராதவளாயிருந்போதிலும் மறைந்த தோழர் பத்மாநாபாவின் மீது எனக்கு அளப்பெரிய தோழமை உணர்வும் மரியாதையும் உள்ளது என்பதை இந்த நேர்காணலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • நீங்கள் ஒரு தீவிரமான இலக்கிய வாசகி என்பது எனக்குத் தெரியும், அது குறித்து?

மிகச் சிறிய வயதிலேயே நான் வாசிப்புக்கு அடிமையாகிவிட்டேன். இன்றுவரை ஏதாவது ஒன்றைப் படிக்காமல் நான் உறங்கச் செல்வது கிடையாது. எனது சிறுவயதில்; ‘படிக்கிற பிள்ளை கதைப் புத்தகம் வாசிக்கக் கூடாது” என வீட்டில் கண்டிப்பு இருந்தது. நான் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப் புத்தகம் படிப்பேன். துப்பறியும் கதைகள், சாண்டில்யன், அகிலன் என வாசிப்புத் தொடங்கியது. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை வாசித்து அரவிந்தன் இறந்தபோது இரவிரவாகக் தனிமையிலிருந்து கண்ணீர் வடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் ஜெயகாந்தனால் முற்றாக ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அந்தக் காலத்தில்தான் எழுதவும் தொடங்கினேன். இலங்கை வானொலியிலும் ‘லண்டன் முரசு’ என்ற பத்திரிகைக்காவும் நிறைய எழுதினேன். அப்பொழுது சதானந்தனை ஆசிரியராகக்கொண்டு லண்டனிலிருந்து அந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. நான் இலங்கையிலிருந்து அந்தப் பத்திரிகைக்கு சம்பளமில்லாத நிருபராக வேலைபார்த்தேன். அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த கி. பி. அரவிந்தன் எங்களுடைய வீட்டில் ஏறக்குறைய ஒரு வருடமளவில் தலைமறைவாக ஒளிந்திருந்தார். நாங்கள் கவிதைகள் குறித்து விவாதிப்போம், பேசுவோம். நானும் அவரும் இணைந்து புஸ்பமனோ என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறோம். அரவிந்தனிற்கு மனோகரன் என்ற பெயருமுண்டு. என் திருமண வாழ்க்கையும் அதனால் எற்பட்ட மனச்சிதைவுகளும் என்னை எழுதுவதைக் கைவிட வைத்தன. ஆனால் இன்றுவரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். வார இதழ்களிலிருந்து நவீன இலக்கியம்வரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறேன். பிரபஞ்சனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் என்னை மிகவும் ஈர்த்த இலக்கிய ஆளுமைகளாகயிருக்கிறார்கள்.

  • புஸ்பராஜாவின் ஈழப் போராடத்தில் எனது சாட்சியம் நூல் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் மறுப்புகளையும் உருவாக்கியிருந்தது. அந்த நூல் குறித்து உங்களின் பார்வை என்ன?

புஸ்பராஜா இலங்கையிலிருந்தபோதும் சரி, பிரான்ஸிலிருந்தபோதும் சரி எப்போதும் என்னோடு தொடர்ச்சியான அரசியல் உரையாடல்களை நடத்திக்கொண்டேயிருந்தார். அவரின் தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, போராட்ட வாழ்வானாலும் சரி நான் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை மிக நேர்மையாக புஸ்பராஜா தனது சாட்சியத்தைப் பதிவு செய்திருக்கிறார். புஸ்பராஜா ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மகாணசபை ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்பும் அந்த இயக்கத்திற்காக வேலை செய்தது எனக்கு பிடிக்கவில்லையென்றபோதும் அந்த அனுபவங்களையும் பாரபட்சமில்லாமல் தனது நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றே கருதுகிறேன். அந்த நூலில் புஸ்பராஜா அளவுக்கு அதிகமாகத் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்றொரு விமர்சனத்தைக் கூட நீங்கள் ‘சத்தியக்கடதாசி’ இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். ஆனால் உண்மையிலேயே புஸ்பராஜா எல்லா விசயங்களிலும் முன்னுக்குப் போகிற ஆளாகவும் விறைப்பான ஆளாகவுமேயிருந்தார். அதுதான் நூலிலும் பதிவாகியிருக்கிறது. சோதிலிங்கம், வசீகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்களின் போராட்டத்திற்கான பங்களிப்புகள் நூலில் போதியளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதிவாகவில்லை என்றொரு குறை எனக்கிருக்கிறது. என்நூலில் அவர்கள் குறித்து விரிவாக எழுதுவேன். குறிப்பாக பேபி சுப்பிரமணியம் தினந்தோறும் எங்கள் மயிலிட்டி வீட்டுக்கு வருவார். மிகுந்த அமைதியான குணமும் அன்புள்ளமும் கொண்ட அவர் எப்படி இவ்வளவு காலமாகப் புலிகள் இயக்கத்திலிருக்கிறார் என்பதுதான் எனக்கு விளங்கவேயில்லை.

  • வெளிநாட்டு வாழ்வை எப்படி உணர்கிறீர்கள்? குறிப்பாக ஆணாதிக்கம், சாதியம் போன்ற அடிமைத்தளைகளிலிருந்து ஓரளவாவது விடுதலையை இந்தச் சூழல் உங்களிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

நான் எப்போது அடிமையாயிருந்தேன் இப்போது விடுதலை பெறுவதற்கு! சமூகத் தளைகளை எதிர்கொண்டபோது எந்த இடத்திலும் நான் பணிந்துபோனதில்லை. உறுதியாக எதிர்த்தே நின்றிருக்கிறேன். எதிர்ப்பு என்பதே என்னைப் பொறுத்தளவில் விடுதலைதான். புகலிடத்திலும் நான் சார்ந்த தலித் சமூகம் ஆதிக்கசாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனது மகள் இரவு பன்னிரெண்டுமணிக்கும் தனியாக வீடுவரும் போது நமது தமிழர்களால் ‘கறுவல்கள்’ எனப் பழிக்கப்படும் ஆபிரிக்கர்களோ ‘அடையார்’ எனப் பழிக்கப்படும் அரபுக்களோ என் மகளைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் என் மகளால் தனியாக லா சப்பல் (பாரிஸில் ஈழத் தமிழர்களின் கடைத்தெரு) போக முடியாமலிருக்கிறது. அவளை ஒரு கும்பல் தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்து ‘எடியே நீ தமிழாடி? நில்லடி!” எனச் சேட்டை செய்கிறார்கள். மோசமான கெட்டவார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பண்பாடு என்றெல்லாம் எழுபதுகளில் மேடைமேடையாய் நான் தொண்டைத்தண்ணி வற்றக் கத்தியதை நினைத்தால் இப்போது சிரிப்பாயிருக்கிறது. சிரிப்புக்குப் பின்னால் விரக்தியிருக்கிறது.

  • தமிழீழப் போராட்டம் தோல்வியைத் தழுவியதற்கு முதன்மையான காரணம் எதுவென நினைக்கறீர்கள்?

முதன்மையான காரணமும் கடைசிக் காரணமும் விடுதலை இயக்கங்களின் அராஜகங்கள்தான். எதிரியைக் கொல்கிறோம் எனப் புறப்பட்டவர்கள் எமது சமூகத்தின் போராளிகளையும் அறிவுஜீவிகளையும் ஒழித்துக்கட்டினார்கள். முஸ்லீம் மக்களை விரட்டியது, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற தலைவர்களைக் கொன்றது, பத்மநாபா போன்ற நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றது என எத்தனை அராஜகங்கள். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தப் புகலிடத் தேசங்களிலும் இன்று ஒவ்வொரு தமிழனும் வாயைத் திறக்கவே பயப்படுகிறான். அங்கே ஆரம்பிக்கிறது தமிழீழப் போராட்டத்தின் தோல்வி.

https://www.shobasakthi.com/shobasakthi/2009/09/03/நான்-எப்போது-அடிமையாயிரு/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR4ehBKeFAWjafNGE3fCXpXSN8VUuogY59wi8GkZz5lsKkCF2-6agZjZAPJbPw_aem_5a_csAzdwS3IqgTWA6hGWA

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் வாழ்நாள் முழுவதும் விடுதலைப்புலிகளை எதிர்த்தும் விமர்சித்தும் எழுதியவர்.. புலி எதிர்ப்பையே தமது பிரதான இலக்கிய எழுத்தின் மூலமாக எடுத்து எழுதியவர்.. அவர் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் மனிதராக மிக நல்லவர்.. பழக அன்பானவர்.. முக நூலில் ஓரிரு தடவை உரையாடி இருக்கிறேன்... கண்ணீர் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2025 at 11:19, கிருபன் said:

தலித் எனும் பதம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எப்போது பிரயோகத்திற்கு வந்தது?

இப்படியொரு பெண் முன்னோடி பற்றி இப்போதுதான் அறிகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

தலித் எனும் பதம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எப்போது பிரயோகத்திற்கு வந்தது?

இப்படியொரு பெண் முன்னோடி பற்றி இப்போதுதான் அறிகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

தலித் என்ற பதம்.... கடந்த 10 வருடத்திற்குள் தான், இலங்கைக்கு வந்தது என் நினைக்கின்றேன்.

புலிகள் காலத்தில் கூட இந்தச் சொல் பாவனையில் இருக்கவில்லை.

வடமாகாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சொல்லை ஈழமக்கள் மத்தியில் பரப்ப பின் நின்று ஊக்கம் கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.

சில வேளை @goshan_che க்கு இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

தலித் என்ற பதம்.... கடந்த 10 வருடத்திற்குள் தான், இலங்கைக்கு வந்தது என் நினைக்கின்றேன்.

புலிகள் காலத்தில் கூட இந்தச் சொல் பாவனையில் இருக்கவில்லை.

இலங்கை பத்திரிகைகளில் இந்திய செய்தியாக தலித் பற்றிய செய்திகள் வரும். அது தாழ்த்தப்பட்ட இனம் என பள்ளிக்காலங்களில் அறிந்து கொண்டேன். ஆனால் இலங்கையில் தலித் என்ற சொல் கிராமிய மட்டத்திலும் சரி நகர புறங்களிலும் சரி பேசப்பட்டதாக தெரியவில்லை.

சாதிகள் என குறிப்பிடும் போது கரையார்,வெள்ளாளர் என விளிக்கின்றார்.ஏனைய சாதிகளை தலித்துக்குள் அடக்குகின்றாரா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

தலித் எனும் பதம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எப்போது பிரயோகத்திற்கு வந்தது?

“தலித்” என்ற பதம் அதாவது இந்த பெயர்சொல் இலங்கையில் பாவனையில் இல்லை. ஆனால், அந்த சொல்லால் வட இந்தியாவில் வகைப்படுத்தப்படும் செயலான சாதி ஒடுக்கு முறைகள் நிறையவே இலங்கையில் நீண்ட காலமாக உள்ளது. இன்றும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தலித் என்ற பதம்.... கடந்த 10 வருடத்திற்குள் தான், இலங்கைக்கு வந்தது என் நினைக்கின்றேன்.

புலிகள் காலத்தில் கூட இந்தச் சொல் பாவனையில் இருக்கவில்லை.

வடமாகாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சொல்லை ஈழமக்கள் மத்தியில் பரப்ப பின் நின்று ஊக்கம் கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.

சில வேளை @goshan_che க்கு இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கலாம்.

இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை.

டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை.

தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன்.

எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு.

அதன் ஒரு வெளிப்பாடே இது.

இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை.

மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சாதிகள் என குறிப்பிடும் போது கரையார்,வெள்ளாளர் என விளிக்கின்றார்.ஏனைய சாதிகளை தலித்துக்குள் அடக்குகின்றாரா தெரியவில்லை.

தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள்.

இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர்.

இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது.

இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார்.

கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது.

நிற்க,

இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது.

அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்).

ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள்.

ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது.

ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது.

இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார்.

அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது.

இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல.

உதாரணம் மூலம் சொல்வதாயின்,

திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி.

பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி.

இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை.

இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல்.

வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2025 at 18:28, பாலபத்ர ஓணாண்டி said:

தன் வாழ்நாள் முழுவதும் விடுதலைப்புலிகளை எதிர்த்தும் விமர்சித்தும் எழுதியவர்.. புலி எதிர்ப்பையே தமது பிரதான இலக்கிய எழுத்தின் மூலமாக எடுத்து எழுதியவர்.. அவர் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் மனிதராக மிக நல்லவர்.. பழக அன்பானவர்.. முக நூலில் ஓரிரு தடவை உரையாடி இருக்கிறேன்... கண்ணீர் அஞ்சலிகள்..

வாழ்க்கை முடிவில் எம்மை சூழ இருப்பவர்கள், வரும் வரலாறு எம்மை கூட்டி கழித்து பிளஸ் சா? அல்லது மைனசா என ஒரு அறுதி கணிப்பை எழுதும்.

முன்னோடி போராளி, சமரசமில்லாத சாதிய எதிர்பாளர் என்ற மிக பெரிய பிளஸ்.

போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்த போது அதை வெளியே இருந்து பலவீனபடுத்த தன்னாலான சகலதையும் செய்த ஒருவர், அதன் மூலம் முள்ளிவாய்க்கால் அவலம் உட்பட்ட அவலங்களில் மறைமுக பங்கெடுத்தவர் என்ற மிக பெரிய மைனஸ்.

எனது பார்வையில் மைனசே விஞ்சி நிற்கிறது.

சார்ந்தோருக்கு அனுதாபங்கள்.

4 hours ago, island said:

“தலித்” என்ற பதம் அதாவது இந்த பெயர்சொல் இலங்கையில் பாவனையில் இல்லை. ஆனால், அந்த சொல்லால் வட இந்தியாவில் வகைப்படுத்தப்படும் செயலான சாதி ஒடுக்கு முறைகள் நிறையவே இலங்கையில் நீண்ட காலமாக உள்ளது. இன்றும் உள்ளது.

"What's in a name? That which we call a rose by any other word would smell as sweet."

பெயரில் என்ன இருக்கிறது, நாம் ரோசா என அழைப்பதை வேறு எந்த பெயரில் அழைத்தாலும், அது அதே நறுமணத்தையே தரும்.

-ஷேக்ஸ்பியர்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நிற்க,

இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது.

அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்).

ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள்.

உங்கள் நீண்ட கருத்திற்கு மிக்க நன்றி.

சாதிகள் இல்லை என்பது என் வாதமாக நீண்டகாலமாகவே இருந்துள்ளது. இதை யாழ்களத்திலும் பலமுறை எழுதியுளேன்.வலியுறுத்தியுள்ளேன்.

எனது கேள்வி?

இலங்கையில் சாதி ஒழிப்பு ஏன் வெள்ளாளரை நோக்கி மட்டும் இருக்கின்றது? பிராமணர்களை குறி வைத்து எதுவும் பிரச்சனையாக்குவதில்லை?

எனது கருத்து:- ஒரு இனத்தை ஒருங்கிணைக்க இன எழுச்சி அவசியம். அது மொழி சார்ந்து மட்டுமே இருக்க முடியும். இங்கே சாதி சமயங்கள் எடுபடாது. மொழி அது தன் வலியது.வலுமை மிக்கது.அங்கே சாதி அது சார்ந்த கட்சிகளுக்கு இடமேயில்லை. இந்த விடயத்தில் இலங்கை தமிழர்கள் இன்று வரைக்கும் புத்திசாலிகள். அப்படி சாதி சார்பு கட்சிகளை உருவாக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.

சாதிகள் சம்பந்தமாக இயக்கங்கள் உருவாகியதென அறிந்தேன். அது உண்மையன நான் நம்பவில்லை.

தமிழ் பேசி தமிழராய் ஒன்றிணைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை

3 hours ago, goshan_che said:

எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு.

சீமானிடம் ஏமாந்து இன்பமாக கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழ தமிழர்கள் போல் தானேஅவர்கள் இருவரும் 😂

இப்போது விளங்குகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை.

டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை.

தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன்.

எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு.

அதன் ஒரு வெளிப்பாடே இது.

இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை.

மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.

12 hours ago, goshan_che said:

தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள்.

இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர்.

இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது.

இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார்.

கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது.

நிற்க,

இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது.

அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்).

ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள்.

ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது.

ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது.

இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார்.

அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது.

இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல.

உதாரணம் மூலம் சொல்வதாயின்,

திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி.

பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி.

இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை.

இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல்.

வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.

விரிவான பதிலுக்கு நன்றி கோசான். 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை

தோழர் ஷோபாசக்தியை சகதி என்று @goshan_che தான் சொன்னார்.

தோழர் ஷோபாசக்தியின் தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருக்கின்றார் என்பதை நான் ஆராய்வதில்லை. அவரின் எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும் பல திறப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால் அவர் எனக்குப் பிடித்த கதைசொல்லி.

புஷ்பராணி அக்காவின் “அகாலம்” புத்தகம் மூலமாகவே அவரைத் தெரியும். போராட்டம் முளைவிட்ட காலத்தில் ஓர்மத்துடன் செயற்பட்டவர் சிறைவாசத்திற்குப் பின்னர் ஒதுங்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி?

இலங்கையில் சாதி ஒழிப்பு ஏன் வெள்ளாளரை நோக்கி மட்டும் இருக்கின்றது? பிராமணர்களை குறி வைத்து எதுவும் பிரச்சனையாக்குவதில்லை?

அது அந்தந்த சமூகத்தில் யார் அடக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது.

இந்திய தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் மிக அதீத, அளவுக்கு மீறிய வலுவை, அதிகாரத்தை கொண்டிருந்தனர். இன்றும் அரச ஒதுக்கீடு இல்லாத, சினிமா, கிரிகெட், போன்ற துறைகளில் இது தொடர்வதை காணலாம்.

இப்படி ஒரு நிலையை ஏது செய்வது சாதிய படி கட்டமைப்பு. பிராமணர்களை, உயர தூக்கி வைப்பது வேறு யாரும் அல்ல அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தேவரும், நாயக்கரும், பிள்ளைமாரும் தான்.

இதே சாதிய படி கட்டமைப்பு வட-கிழக்கு இலங்கை தமி சமூகத்திலும் உண்டு.

ஆனால் ஒரு மிக முக்கியமான மாறுதல்.

இலங்கையில் இந்த படிக்கட்டின் உயரத்தில் இருந்து - செல்வாக்கு மிக்க தொழில்களை, பதவிகளை கைவசப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோர்/செலுத்தியோர் பிராமணர்கள் அல்ல. மாறாக வெள்ளாளர்.

இலங்கை பிராமணர்கள் கோவில், அது சார்ந்த தொழில்களோடு மட்டு படுகிறார்கள். ஏனைய துறைகளில் மிளிர்ந்தோர் கூட தனி மனிதராகவே மிளிர்ந்தனர்.

ஆனால் ஒரு காலத்தில், கன்னங்கர இலவச கல்வியை தர முன்னர், ஒட்டு மொத்த இலங்கையின் நிர்வாக சேவையை சுவீகரித்து, வியாபாரம், மருத்துவம், கல்வி என பலதில் கோலோச்சிய சமுகம், வெள்ளாளர். குறிப்பாக யாழ்ப்பாண வெள்ளாள சமூகம்.

எப்போதும் மட்டற்ற அதிகாரம், அடக்குமுறைக்கு வழிவகுக்கும்.

அப்படி இலங்கையில் இந்திய-பிராமணர்கள் போல், அடக்குமுறை சாதியாக இருந்தவர்கள் வெள்ளாளர்கள்.

ஆகவே இலங்கையில் சாதி எதிர்ப்பு அவர்களை நோக்கியே அமைந்தது.

நிற்க,

இந்தியா போல், ஏன் இலங்கையில் சாதிய படி கட்டமைப்பின் உச்சியில் பிராமணர் இல்லை?

இது ஒரு பி எச் டி ஆய்வுக்குரிய கேள்வி. யாரும் இதுவரை ஆராய்ந்ததாக தெரியவில்லை.

பெளத்த-சிங்கள அடையாளம் ஒரு காராணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அவர்களின் புத்தகங்களில் தமிழருக்கு நிகராக, அவர்களின் மதகுருக்களாக அனுராதபுர, பொலநறுவை காலங்களில் இருந்த பிராமணர் மீது வெறுப்பு கக்கபடுவதை காணலாம்.

கடந்த 1000-500 வருடத்தில் தமிழர் பகுதிகள் சிங்கள மன்னர்களின் நேரடி அல்லது மறைமுக ஆளுகையில் பல காலம் இருந்தபோது, பிராமணர்களின் வகிபாகம் திட்டமிட்டு குறைக்கப்பட்டிருக்கலாம்.

அதே போல் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகாரம் செலுத்த போதுமானதாக இல்லாதிருந்திருக்கலாம்.

அல்லது நீங்கள் சொல்வது போல் யாழ்பாண மன்னர்கள் புத்திசாலிகளாக இருந்திருக்கலாம்.

அல்லது இந்த, வேறு காரணங்களின் கூட்டு விளைவாக இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.