Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கடம் - யோ. கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடம்

யோ.கர்ணன்

ண்மையில் எனது முகப் புத்தகத்திற்கு ஒரு நட்பு வேண்டுகோள் வந்திருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். அவரது பிறப்பிடமாக கிளிநொச்சியை குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அனாமதேய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன்தான் அவரை நண்பராக எற்றுக் கொண்டேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஓரிரண்டு கிளிநொச்சி ‘பொடியள்’ இப்படி பல அனாமதேய கணக்கில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள் (ஆண்,பெண் பெயர்களில்). நான் நினைத்தது சரியாகவேயிருந்தது. அவர் மிக நாகரிகமாக ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதனை ஒரு வரியில் சொன்னால் ‘நீயெல்லாம் உருப்படுவியா’ என்று வரும். உண்மைதான். எனக்கு கூட இந்த சந்தேகம் பல காலமாக இருந்து வருவதுதான். அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரண்டு வருடமாக அதிகமாகவேயிருந்து வருகிறது. அதற்கு காரணமுமிருக்கிறது.

இதற்கு முதல் பகுதியான

'குற்றஉணர்ச்சி' சொல்லப்பட்ட காலத்தில் தமிழீழம் எனப்பட்டது இரணைப்பாலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிருந்தது. இது நடக்கும் போது மேலும் சுமார் ஐந்து கிலோ மீற்றர்கள் சுருங்கி மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையெனவாகியிருந்தது. மாத்தளன் கூட பிரச்சனைக்குரிய பகுதியாகவேயிருந்தது. சந்தியிலிருந்து சாலைத்தொடுவாய் பக்கமாகப் போனால் வைத்தியசாலை மட்டுமேயிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குடியிருப்புகள் மட்டுமேயிருந்தன. மாத்தளனிலிருந்து ஆமியிடம் போவது சுலபமென்பதால் நிறைய சனம் போய்விட்டார்கள். விட்டால் பிரச்சனை என மிகுதிப் பேரை இயக்கம் வலைஞர்மடப் பக்கமாக ‘அனுப்பிக்’ கொண்டிருந்தனர்.

தமிழ்சினிமாவில் அனேக ஹீரோக்கள் ஆரம்பத்தில் மிகமிக வெட்டியாகவும் ஒன்றுக்கும் உருப்படாதவர்களாக நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு திரிபவர்களாகவே வருவார்கள். பிறகு ஹீரோயினை கண்டு, காதல் கொண்டு, போடா வெட்டிப்பயலே என பேச்சு வாங்கி -அதுவரை பெற்றோர் சொன்ன ஆயிரத்தெட்டு புத்திமதியும், இலட்சத்திலொரு திட்டும் உறைத்திருக்காது- மனம் திருந்தி, இந்த உலகையே மாற்றும் கோடிஸ்வரர்களாகுவார்கள். நானெல்லாம் கிட்டத்தட்ட அப்படித்தானிருந்தேன். ஒரேயொரு வித்தியாசம் ஹீரோயினை காணாத படியால் அந்த பேச்சை வாங்கி, உலகமகா கோடிஸ்வரனாக முடியவில்லை. மற்றும்படி, யுத்தவலயத்திலும் அப்படியே இருந்தோம். காலையில் புறப்பட்டால் மாலைவரை அந்த சிறு நிலப்பரப்பில் சுற்றி திரிந்தோம். எங்களது முக்கியமான பொழுது போக்காக இருந்தது - சீட்டாட்டம். அதுவும் அந்த நாட்களில் பழகியதுதான். யாராவது ஒரு நண்பரின் வீட்டில் ஒவ்வொரு நாளும் கூடினோம். அடாது மழையடித்தாலும் விடாது செல் அடித்தாலும். முன்னால் விழும் ஒவ்வொரு சீட்டுத் தாளுடனும் அரசியலும் விழுந்து கொண்டிருந்தது. (பக்கத்தில் எங்காவது செல் விழந்திருந்தால் அவர்களை வைத்தியசாலையில் சேர்க்கும் வேலையையும் செய்து கொண்டிருந்தோம் என முன்னெச்சரிக்கையாக ஒரு வசனத்தையும் சொல்லிவிடுகிறேன்). கண்முன்னால் வந்து கொண்டிருந்த தோல்வி தந்த தீராத மனஉளைச்சலையும், மரணங்களினால் வந்து கொண்டிருந்த மனநெருக்கடியையும் போக்கும் ஒரு ஏற்பாடாக அதனை நாங்கள் கண்டடைந்திருந்தோம். அனேகமாக எங்களது சீட்டாடும் மையம் ரஞ்சித் அண்ணை வீடுதான். எப்படியும் ஆறுபேர் சேர்ந்து விடுவோம். எப்பவாவது ஓரிருவர் குறைந்தால் கட்டாய ஆட்சேர்ப்புதான்.

அந்த வீடு வலைஞர்மடம் தேவாலயத்திற்குப் பக்கத்திலிருந்தது. வலைஞர்மடம் தேவாலயம் எங்கிருந்ததெனில், மாத்தளனிலிருந்து முள்ளிவாய்க்கால் செல்லும் வீதியில் குருசடிச் சந்தியில் இருந்து இடதுபக்கம் திரும்பிக் கடற்கரை நோக்கிச் செல்லும் வீதியிலிருந்தது. வலது பக்கம் திரும்பிச் சென்றால் ஆனந்தபுரம். வலைஞர்மடம் தேவாலயம்தான் அந்த பகுதியிலிருந்த ஒரேயொரு பெரிய தேவாலயம். கடற்கரையை பார்த்தபடியிருந்த அழகிய தேவாலயம். சாதாரண பொழுதெனில் அருமையான பொழுதுபோக்கு மையம். பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருந்த பாதிரிகள் - ஜேம்ஸ்பத்திநாதர், வசந்தரூபன், அன்ரன்றொக். எரிக் முதலானவர்களும் சில கன்னியாஸ்திரிகளும் தங்கியிருந்தனர்.

தேவாலயத்திற்குப் பக்கமாகயிருந்த பாதிரிகளிற்கான பகுதி பெரிய வளாகமாக மாற்றப் பட்டிருந்தது. பாதுகாப்பு வலயத்திலிருந்த வைத்தியர்கள், செஞ்சிலுவைக் குழுவின் உள்ளூர்ப் பிரதிநிதிகள் என்போரும் அங்கு தங்கியிருந்தனர். சிறிய உணவுக் களஞ்சியம் ஒன்றும் அருகில் இருந்திருக்க வேண்டும்.தேவாலயத்தில் வேறு ஒரு தரப்பினரும் தஞ்சம் புகுந்திருந்தனர். கிட்டத்தட்ட அரசியல் தஞ்சம் மாதிரி. சுமார் எழுநூற்றைம்பது வரையான இளம் ஆண்களும், பெண்களும் அங்கேயிருந்தனர். அவர்களது வரலாறு சோகமானது. அவர்களில் ஒரு பகுதியினர் பயிற்சி முகாம்களிலிருந்து ஓடி வந்தவர்கள். மிகுதியானவர்கள், பயிற்சி முகாம்களிற்குக் கொண்டு போகப்படுவதிலிருந்து தப்பிக்க அங்கு தஞ்சம் புகுந்திருந்தனர்.

ஒரு ஐயர் பொடியனையும் அங்கு சந்தித்தேன். வாழ்நாளில் முதன்மறையாக அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருந்தார் - உலகில் இந்து சமயத்தை விட கிறிஸ்தவம் செல்வாக்கானதுதானென ஏற்றுக் கொள்வதாக. கிறிஸ்தவப் பாதிரிகளிற்கு அஞ்சி ‘போராட வலுவுள்ள’ எழுநூற்றைம்பது வரையானவர்களை புலிகள் எதற்காக விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற தீராத குழப்பம் எனக்கிருந்து வந்து கொண்டேயிருந்தது. (முன்னரும் தனது உதவியாளர் பிடிக்கப்பட்ட போது, பாதர் கருணாரட்ணம் தமிழ்செல்வனின் வாகனத்தை போகவிடாமல் தனது வாகனத்தை குறுக்காக விட்டு ‘போராட்டம்’ நடத்தி உதவியாளரை மீட்டிருந்தார்) வளாகத்திலிருந்தவர்கள் எந்தக் காரணத்தை கொண்டும் வாசல் கடக்க முடியாமலிருந்தனர். வாசல் கடந்தால் உடனே பிடிக்கப் படுவார்கள். பெற்றோர் உணவு முதலான அவர்களது தேவைகளை நிறைவேற்ற வந்து போய்க் கொண்டிருந்தனர்.

வளாகம் எப்போதும் நல்லூரை விட அதிக சன நெரிசலுடனிருந்தது. பெரும்பாலான பெண்கள் தேவாலயத்தின் உள்ளே தங்க ஆண்கள் வெளியில் தங்கியிருந்தனர். பெண்களில் பலர் தலைக்கு முக்காடு போட்டிருந்தனர். ஆரம்பத்தில் எனக்கு விசயம் விளங்கவில்லை. வெட்கத்தில் அப்படியிருக்கலாம் என நினைத்திருந்தேன். எனக்கு தெரிந்தவர்கள் சிலரும் அங்கிருந்தனர். முன்னர் எழுதிய ‘சடகோபனின் விசாரணைக் குறிப்புகள்’ என்ற கதையில் வரும் சடகோபனும் அங்கிருந்தான். அவனிற்கு இங்கு உறவினர்கள் யாருமில்லை. சந்தேகக் கைதியாக மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின், இரணைப்பாலையும் இராணுவத்திடம் வீழ்ச்சியடையும் தறுவாயில்தான் விடுதலை செய்யப்பட்டிருந்தான். நாங்கள் சில நண்பர்கள் அவனை இந்த தேவாலயத்தில்ச் சேர்த்திருந்தோம். தினமும் மாலையில் அவனிடம் செல்வதை வழமையாக கொண்டிருந்தேன்.

அப்படி சென்று வருகையில் க.பொ.த உயர்தரம் படிக்கும் புதுக்குடியிருப்பு மாணவன் ஒருவன் அறிமுகமாகினான். சில நாள் பழக்கத்தின் பின் என்னை நம்பிக்கையானவனாக கருதியிருக்க வேண்டும். ஒரு மிகப் பெரிய இராணுவ ரகசியத்தை சொன்னான். அதாவது தம்மை இங்கு யாராலும் பிடிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் முழுப் படையணியும் வந்தாலே சாத்தியம். அப்போது கூட இரு தரப்பிலும் சில தலைகள் உருளலாம் என்றான். அதற்கான காரணத்தையும் சொன்னான். தேவாலயத்தைச் சூழ பொல்லு, வாள், சைக்கிள், செயின், முதலான சினிமாவில் வரும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப் பட்டுள்ளதாம். அதனை உபயோகிப்போம் என்றான். அந்த ஆயுதங்களை நீ பார்த்தாயா எனக் கேட்டேன். தான் பார்க்கவில்லை எனவும் தாங்கள் புதைத்து வைத்திருப்பதாகச் சிலர் சொன்னதாக சொன்னான். எனக்கென்றால் பாலஸ்தீனக் காட்சிகள்தான் நினைவுக்கு வந்த போனது. தவிரவும் வேறொரு எற்பாடும் செய்து வைத்திருந்தனர். தேவாயத்தில் மாலை பூசை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து மணியொலித்தால் அதொரு சமிக்ஞையாக வைத்திருந்தார்கள். யாராவது தம்மைப் பிடிக்க வந்தால் அந்த மணியை ஒலிப்பார்களாம். அந்த பகுதியில் இருக்கும் அவர்களின் பெற்றோர் உடனே வந்து சூழ்ந்து கொள்வார்களாம். அப்படி குறைந்தது ஐயாயிரம் மக்களாவது தேவாலயத்தை முற்றுகையிடுவார்கள் என நம்பினான்.

இதற்கு சில வாரங்களின் பின் எனக்கு தெரிந்த போராளி நண்பர்கள் பலரிடமிருந்தும் ஒரே விதமான கருத்து வந்து கொண்டிருந்தது. அதாவது தேவாலயத்தில் கடுமையான கலாசார சீரழிவு நடக்கிறது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என. அது மிகுந்த நெரிசலான இடமென்பதால் அதற்கு வாய்ப்புகள் குறைவென்றும், இப்போது உங்களது அவசியமான பணி அதுவல்லத்தானேயெனவும் கூறிய போது, தங்களிற்கு இது பற்றிய அக்கறையில்லை எனவும் அண்மையில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இந்த சாரப்பட பேசப் பட்டதாகவும் கூறினார்கள். அது ஏதோ நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கிருந்து கொண்டேயிருந்தது.

பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து வெளியேறுவதென்பது சாதாரண மக்களிற்கு நிறைவேறாத கனவு. அரசியல், சமூக. மத செல்வாக்குடையவர்கள் சிலர் வெளியேறிக் கொண்டிருந்தனர் தான். இப்படித்தான் ஒரு நாள் அங்கிருந்த பாதிரிகள் பலர் - அன்றன்றொக் முதலானவர்கள்- வெளியேறி விட்டதாக கதைவந்தது. அது ஒரு ஞாயிறாக இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வழமைபோல் ரஞ்சித் அண்ணை வீட்டில் கூடத் தொடங்கி விட்டோம். காலை ஒன்பது மணியளவில் இருக்க வேண்டும். தேவாலய மணி ஒலிக்கத் தொடங்கியது. எப்போதும் பிரார்த்தனை ஆரம்பத்தைச் சொல்லி மக்களை அழைத்த அந்த மணியோசை இப்போது மக்களையழைத்தது தம்மைக் காப்பாற்றுமாறு அந்த இளையவர்களிற்காக. அந்த ஒலியிலிருந்த அவலத்தை, கையாலாகாத்தனத்தை நான் உணர்ந்தேன். அது அவர்கள் ஆபத்திலிருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. காப்பாற்றும் படையணியில் எல்லாம் நாம் இருக்கவில்லை. ஆனால் அங்கு நடப்பதை பார்ப்பவர்களாகவாவது இருப்பொம் என அங்கு போனோம்.

தேவாலயத்திலிருந்து குருசடி செல்லும் வீதியின் இரு கரையிலும் அணைபோல மக்கள் திரண்டிருந்தனர். எங்கும் கத்தலும் கதறலும் சாபஒலியும்தான். இவையெல்லாம் திரண்டு ஒரு பேரிரைச்சலாக எழுந்து கொண்டிருந்தது. சனக் கூட்டத்தை எட்டி பார்த்தால் வீதியில் ஒரு சனம் கூட இறங்கமுடியவில்லை.

ஐந்தடிக்கு ஒருவராகச் சனத்தை வீதிக்கு இறங்க விடாது ஆயுதத்தை நீட்டியபடி காவல்த் துறையும் அரசியல்த் துறை போராளிகளினால் எதுவும் செய்ய முடியாதவர்களாக பைத்தியக்காரர்களைப் போல அரற்றிக் கொண்டிருக்கின்றனர். தேவாலயத்திலிருந்த வாகனங்கள் ஆனந்தபுரத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. அனேகமாக பிக்கப் வாகனங்கள் தான். பின் பகுதியில் பிடிக்கப்பட்டவர்களை இருத்தி நான்கு மூலையிலும் பெரிய பொல்லுகளுடன் நால்வர் நின்றனர். யாரும் எழுந்தால் அடி தான். வாகனம் சற்று வேகத்தைக் குறைக்கும் போது சில ஆண்கள் குதித்தோடினார்கள். ‘சடகோபனும்’ இப்படி குதித்து தப்பியோடிவிட்டான். பெண்கள் தான் பாவம். அவர்கள் எப்போதும் போல எதுவும் செய்ய வழியற்றவர்களாக அழுது கொண்டிருந்தனர். அப்போது தான் கவனித்தேன். பலருக்குத் தலைமயிர் இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பிடிக்கப் பட்டு தப்பியோடியிருக்கிறார்கள். அவர்கள் தான் முக்காட்டுக் கோஸ்டிகள். அரசின் பல்வேறு கொலைகளின் போதோ அல்லது அக்கிரமங்களின் போதோ எழும் வார்த்தைகளிற்கு அப்பாற்பட்ட ஒரு பொழுது போலவே அதுவும் இருந்தது.

ஏதாவது செய்ய வேண்டும் மாதிரி மனதும் கையும் பரபரத்தபடியிருந்தது. அந்த இடத்திலிருந்து சற்று பின்னுக்குப் போய் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தேன். இன்னும் சில நண்பர்கள் அங்கிருந்தனர். அவர்களது பாடு என்ன என்பதை அறிய வேண்டும் போலிருந்தது. தேவாலய வாசலிற்குச் செல்வது என முடிவெடுத்தோம்.

வீதியில் இறங்க முடியாது. பிடிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்குப் போராளிகளிற்கு மட்டும் பாவனையிலிருக்கிறது - வன்னி வாழ்வாசிகளிற்குத் தெரியும் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளின் பெறுமதி. அப்படி ஒன்றில்த் திரிந்தால் இயக்க பொடியன் தான். நான் சென்றதும் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில். தவிரவும் எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் போராளிகளாகவேயிருந்ததினால் இறுதிவரைப் பலர் - அவர்களில் வேறு பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளும் அடக்கம் - என்னையும் ஒரு போராளியாகவே கருதினர். நான் அடித்து சத்தியம் செய்த போதும் “சும்மா சொல்லாதேங்கோ. நீங்கள் அம்மானின்ர ஆளோ” என்று கேட்டுக் கடுப்பேத்துவார்கள்.

நான் சனத்தை விலத்திக் கொண்டு வீதிக்குள் மோட்டார் சைக்கிளை இறக்க ஒரு காவல்துறையினன் மறித்தான். இருவருக்கமிடையிலான உரையாடல் இப்படியிருந்தது.

“எங்க போறியள்’

“பேசிற்கு”

“எங்க பேசிருக்குது?”

“சேர்ச்சுக்கு பக்கத்தில”

“ம்.. பார்த்து கவனமாக போங்கோ”

நான் அறிந்தேதான் பொய் சொன்னேன்.

வீதியில் ஏறிச் சில மீற்றர்கள் செல்ல ஒரு அரசியல்துறைக் காரன் மறித்தான். அவனிற்கும் அதே பதிலையே சொன்னேன். அவன் கேட்டான் “அம்மானின்ர ஆளோ?” என (இப்போது கேட்டதற்கும் முந்தி கேட்பதற்கும் சம்பந்தமில்லை. இப்போது தேவாலயத்திற்குப் பக்கத்தில் அவர்களது முகாமிருந்தது). நான் தலையாட்டினேன். சனம் கொந்தளிப்பாக இருப்பதால் சில வேளைகளில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வரலாம் எனவும், அப்படி ஏதாவது நடக்கும் போது இடையில் அகப்பட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்றான். நான் சம்மதித்தேன். தவிரவும், ஆட்களை ஏற்றியபடி வாகனங்கள் வேகமாக வருவதால் அவற்றிற்கு இடையூறு தராமல் போகச் சொன்னான்.

நான் மெதுவாக புறப்பட்டேன். உண்மையில் புறப்படும் போது யோசிக்கவில்லை. வீதியில் வரும்போதுதான் பெரிய சங்கடமாயிருந்தது. இரண்டு கரையிலும் ஒப்பாரி வைக்கும் சனத்தின் நடுவில்ச் செல்வதற்கு. அந்த சனம் நினைத்திருக்கும் இந்த ‘ஒப்ரேசனில்’ எனக்கும் பங்கிருப்பதாக. அவர்களது சாபங்கள் என்னை நோக்கியும் வந்திருக்கக் கூடும். தேவாலயத்திற்குத் திரும்பும் வளைவு வரும் போது எதிரே ஆட்களை ஏற்றி அடைந்தபடி ஒரு கூலர் வாகனம் வேகமாக வந்து திரும்பியது. அதனது வேகம் அச்சுறுத்துவதாக இருந்தது. நான் வீதிக்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். புழுதி கிளப்பியபடி அது போனது.

அது போனதன் பின்பு மோட்டர் சைக்கிளை இயக்கி வீதிக்கு ஏறும்போதுதான் கவனித்தேன். எனக்கு எதிரில் - அந்த வளைவில் ஒரு பெண்மணி நிலத்தில் புரண்டு அழுது கொண்டிருந்தார். புழுதியை எடுத்துத் தலையில் அடித்து அடித்து அழுது கொண்டிருந்தார். எல்லோரும் அழுது கொண்டும் அரற்றிக் கொண்டும் இருந்தார்கள் தான்.

இவரை மிக நிதானமாகப் பார்த்ததினாலோ என்னவோ மனம் கனத்துப் போனது. இயல்பாகவே மோட்டார் சைக்கிள் மெதுவானது. அந்த பெண்மணியை விட்டுப் பார்வையை எடுக்க முடியாமலிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது. அவர் மிக நிதானமாக என்னைப் பார்த்தார். அந்த கண்களில் என்ன இருந்தது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அழுதழுது மிகக் களைத்திருந்தார். கைகளை ஊன்றி மெதுவாக எழுந்தார். எழும்போது இரண்டு கைநிறையவும் அந்த கிறவல் மண்ணை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து ஓரடி முன்னால் வந்து “நாசமாய்ப் போங்கோடா” என என் மீது வீசியெறிந்தார். இப்போது இவ்வளவு காலமான பின்பும் அந்த பெண்மணியின் பார்வை என்னைத் தொடர்ந்து கொண்டிருப்பது போலவும், அந்த நிலத்துப் புழுதி போகாமல் என் மீது ஒட்டியிருப்பது போன்றதான உணர்வும் இன்னுமிருக்கிறது.

http://yokarnan.blog.../blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இவருடைய எழுத்துக்கள் திட்டமிட்டே எழுதப்பட்டுவரும் ஒரு எழுத்துப்பிரச்சாரம் என்பதை இவருடைய எழுத்துக்கள் நன்குணர்த்துகின்றன. நீண்டகாலமாக சிங்கள அரசால்... இந்திய அரசால் தமிழீழ மக்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து வந்திருக்கினறன.... இன்றுவரை நிகழ்ந்த வண்ணமே உள்ளன. அவற்றைப்பற்றி இவர் எங்காவது எழுதியிருந்தால் அவற்றை இங்கு கொண்டு வந்து பதிவிடுங்கள். அவற்றையும் வாசித்துவிட்டு இவரின் எழுத்துகளைப்பற்றிப் பேசுவோம்.

கிருபன் இவருடைய எழுத்துக்கள் திட்டமிட்டே எழுதப்பட்டுவரும் ஒரு எழுத்துப்பிரச்சாரம் என்பதை இவருடைய எழுத்துக்கள் நன்குணர்த்துகின்றன. நீண்டகாலமாக சிங்கள அரசால்... இந்திய அரசால் தமிழீழ மக்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து வந்திருக்கினறன.... இன்றுவரை நிகழ்ந்த வண்ணமே உள்ளன. அவற்றைப்பற்றி இவர் எங்காவது எழுதியிருந்தால் அவற்றை இங்கு கொண்டு வந்து பதிவிடுங்கள். அவற்றையும் வாசித்துவிட்டு இவரின் எழுத்துகளைப்பற்றிப் பேசுவோம்.

பாதுகாப்பு வலையம், திருவிளையாடல் போன்ற சிறுகதைகளை வாசித்து பாருங்கள் (தே,தீ.து தொகுப்பில் இருக்கு; வேண்டுமென்றால் வீட்டை கொண்டு வந்து தாரன்)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... உங்களிடம் இருக்கிறதா நிழலி..

அப்படியானால் திங்கள் நான் வேலைமுடிந்து பெற்றுக்கொள்கிறேன். எனது வேலையிடம் உங்கள் அருகில்தானே இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இவருடைய எழுத்துக்கள் திட்டமிட்டே எழுதப்பட்டுவரும் ஒரு எழுத்துப்பிரச்சாரம் என்பதை இவருடைய எழுத்துக்கள் நன்குணர்த்துகின்றன. நீண்டகாலமாக சிங்கள அரசால்... இந்திய அரசால் தமிழீழ மக்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து வந்திருக்கினறன.... இன்றுவரை நிகழ்ந்த வண்ணமே உள்ளன. அவற்றைப்பற்றி இவர் எங்காவது எழுதியிருந்தால் அவற்றை இங்கு கொண்டு வந்து பதிவிடுங்கள். அவற்றையும் வாசித்துவிட்டு இவரின் எழுத்துகளைப்பற்றிப் பேசுவோம்.

யோ.கர்ணனின் சிறுகதைத் தொகுதியில் சில கதைகள் சிங்கள அரசால் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களைத் தொட்டுச் செல்கின்றன.

இறுதிக் கால யுத்தத்தில் சிங்கள இராணுவத்தாலும், அதனோடு சேர்ந்தியங்கிய தமிழ்க்குழுக்களாலும் மக்களுக்கு உண்டான அவலங்கள் அதிகம்தான். எனினும் மக்கள் கனவிலும் எதிர்பார்த்திராத அடக்குமுறைகளை முள்ளிவாய்க்காலில் சந்தித்தும் உள்ளனர். அவற்றை மூடி மறைத்து தமிழ்த்தேசிய அரசியலை முன்நகர்த்துவதும் முடியாத காரியமே..

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணண் இர‌ண்டு கதை ஆமிக்கு,அர‌சுக்கு எதிராக எழுதினால் பத்துக் கதை புலிக் எதிராக எழுதியுள்ளார்...ஆமியிலும் பார்க்க புலி அவ்வளவு அக்கிர‌மம் செய்து உள்ளதா?...எல்லோரையும் பிடித்த புலிகள் ஏன் இவரைப் பிடிக்கவில்லை? இவர் அந்த யுத்த காலத்திலும் சீட்டாடித் தானே பொழுதைப் போக்குகிறார்?...ஊரில் இருந்து கொண்டு கதைகள் எழுதுகின்றார் என்டால் யாருடைய பின்புலமோ இவருக்கு கட்டாயம் இருக்கத் தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெளிவா தெரியுது...........

இவர் சனல் நாலு வீடியோ பார்த்திட்டார். அதில் ஐ நா காரரின் வீடியோ முடிவை அப்படியே கொப்பி அடித்து வழமையான புலி வந்தி எடித்துவிட்டார்.

நல்ல தமிழ் இலக்கியம் பூட்டி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் போர் என்று எதாவது நாட்டில் வந்தால் அடுத்தவனை கரும்புலியாக அனுப்பி சாகடித்துவிட்டு . அவன் பெற்றெடுத்த சுதந்திர பூமியில் சுகமாக வாழ்வமைத்துவிட்டு . போராட்டம் கொஞ்சாம் சறுக்கும் இடத்து தமது பிள்ளைகளை பெற்றோர் கவனமாக மூடி வைக்கவேண்டும் என்ற உறுதியான கதைகளை இது சொல்வதால். இது அடுத்த அடுத்த ஆயிரம் காலம் தாண்டியும் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ் இலக்கிய சொத்து.

பெண்களை எப்படி கற்பழிப்பது என்ற அறிய சொத்தை அல்லது தமிழ் இலக்கியத்தை இவர்கள் அடுத்த முறை எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறேன். ஏனெனில் ஏற்கனவே தனது கற்பை இழந்த ஒருவருடைய கற்பை மீண்டும் அழிக்க முடியாது ................ அகவே தமிழரின் அடுத்த எதிரிகள் வந்து தமிழ் பெண்களை கெடுக்காமல் பாதுகாக்க.............. முன்கூட்டியே.

(இந்த கருத்து அவர் அவர் அறிவை பொறுத்தே விளங்கும். விளங்காவிடின் உங்களை விளக்குங்கள் எனது கருத்து விளக்கமாகவே உள்ளது) ஒன்றை படைப்பவனுக்கும்............. சும்மா இருந்து அழிப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் அது.

முப்பது வருட தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போயிருந்தாலும்,

அது நல்ல இலக்கிய வியாபாரிகளை உருவாக்கியதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருட தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போயிருந்தாலும்,

அது நல்ல இலக்கிய வியாபாரிகளை உருவாக்கியதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

எத்தனை சர்வதேச அரசியல் ஆராய்ச்சி யாளர்களை தமிழர்களுக்கு கொடுத்துள்ளது...........

தமிழனாக பிறந்ததற்கு இந்த பெருமையே போதும்!

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணண் இர‌ண்டு கதை ஆமிக்கு,அர‌சுக்கு எதிராக எழுதினால் பத்துக் கதை புலிக் எதிராக எழுதியுள்ளார்...ஆமியிலும் பார்க்க புலி அவ்வளவு அக்கிர‌மம் செய்து உள்ளதா?...எல்லோரையும் பிடித்த புலிகள் ஏன் இவரைப் பிடிக்கவில்லை? இவர் அந்த யுத்த காலத்திலும் சீட்டாடித் தானே பொழுதைப் போக்குகிறார்?...ஊரில் இருந்து கொண்டு கதைகள் எழுதுகின்றார் என்டால் யாருடைய பின்புலமோ இவருக்கு கட்டாயம் இருக்கத் தான் வேண்டும்

100%. பாலை ஊற்றி பாம்பை வளர்க்க பலர் இருக்கிறார்கள்.

எத்தனை சர்வதேச அரசியல் ஆராய்ச்சி யாளர்களை தமிழர்களுக்கு கொடுத்துள்ளது...........

தமிழனாக பிறந்ததற்கு இந்த பெருமையே போதும்!

இனத்துக்காக அடிபட்டது நாலு பேர்தான். அதைக்காட்டி நாட்டை விட்டு ஒடி வந்தவர்கள் நானூறு பேர்.

அந்த நாலு பேரும் அடிபட, அதை வைத்து இந்த நானூறு பேரும் ஆய்வுக்கட்டுரைகள், கவிதை, கதை எழுதி இலக்கியம் வளர்ப்பது பெருமையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே யோ.கர்ணனின் பதிவின் கீழ் "யாவும் கற்பனை" என்று இருக்கவில்லை. இருந்திருக்கவேண்டும் என்ற அவா எங்கள் பலரிடம் உள்ளது உண்மைதான்.

தேசம் உருவாக்குதல் என்ற கருத்தியலுக்கும் அதற்கான முயற்சிக்குமான பெரும் இடைவெளியை புரிந்துகொள்ளுதலே அவசியமாகின்றது. சில அடிப்படை உண்மைகள் இருக்கினறது. சிங்களப் பேரினவாதப்படைகளின் ஆக்கிரமிப்புப் பிடி இறுகிக்கொண்டிருக்கின்றது. அதற்கெதிரான போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். இது ஏன் என்ற கேள்விக்கான விடைகளாக எல்லோரும் இருக்கின்றார்கள். இந்த எழுத்தாளர் உட்பட.

இந்த கதையில் வரும் மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் இருந்து நழுவியவர்களாக நாங்களும் என்னும் என்னும் பெரும்பான்மை மக்களும் இருக்கின்றோம். ஆனால் தேசம் உருவாக்குதல் என்ற கருத்தியலுடன் இருக்கின்றோம். அதற்கு மிக ஆதரவாக இருக்கின்றோம். அதே நேரம் இந்த இரண்டு நெருக்கடிகளில் இருந்தும் விடுபட்டு கருத்தியலுடன் இருக்க முடியும் என்று ஒரு வழியை காட்டிக்கொண்டும் இருக்கின்றோம். இந்த வழிகாட்டுதல் என்பது தேசம் உருவாக்குதல் என்ற கருத்தியலுக்கும் முயற்சிக்குமான இடைவெளியை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. எழுத்தில் பதிவு செய்யப்படும் காட்சிகள் இந்த முரண்பாட்டு இடைவெளியில் நடந்தேறுகின்றது. இங்கே எது குற்றம் யார் குற்றவாளிகள் யாரைச் சுட்டிக்காட்டுவது என்ற நோக்கில் எதையும் நிறுவமுடியாது. மாறாக இத் துர்பாக்கிய நிலைகளை கடந்து செல்ல முடியுமா என்ற நோக்கில் சிந்திக்க முற்படவேண்டும்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

மேலே யோ.கர்ணனின் பதிவின் கீழ் "யாவும் கற்பனை" என்று இருக்கவில்லை. இருந்திருக்கவேண்டும் என்ற அவா எங்கள் பலரிடம் உள்ளது உண்மைதான்.

அந்த சேர்ச்சில் இருந்து பிடித்து சென்றவர்களில் எனது உறவினரும் ஒருவர். துரதிர்சடமாக அவர் இறந்தும் போய்விட்டார் இதில் எது கற்பனை எது நிஜம் என்பது சாதாரண ஈழதமிழனுக்கு தெரியும். சோபா சுத்தியின் காமலீலைக்குள் ஈழ போராட்டம் தேடினால்? இலக்கியம் (யாராவது சுவரிலே தூசனம் எழுதினாலும் இப்ப அப்படிதான் சொல்கிறார்கள் எல்லாத்தையும் படித்துவிட்டு பேசுங்கள் என்று. இன்னமும் சொல்லாதது மனைவி பிள்ளைகளோடு சென்று குடும்ம்பபக படியுங்கள் என்பதைத்தான்) இருக்கலாம்............. விடுதலை போரின் கொடுமையும் அதில் சவாரி செய்த கூட்டமும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் அண்மையில் எழுதியிருந்தது ஞாபத்துக்கு வருகிறது..

புலிகளை அவர்களுக்கான விமர்சனங்களுடனேயே ஏற்றுக்கொள்கிறோம்..!

எவ்வளவு விடயஞானமுள்ள வரிகள்..!

புலிகளும் மனிதர்கள்தான். தவறுகள் பல செய்திருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் கத்தி மாதிரி. காய்கறியும் நறுக்கலாம். விரலையும் வெட்டலாம். ஐயோ கத்தி விரலையும் வெட்டும் என்று ஒரு கதை எழுதப்பட்டு அதுவும் விற்கப்பட்டால் எழுதியவன் மட்டுமே இங்கு புத்திசாலி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிரங்கை தோண்டவென்றே சிலர் கங்கணம் கட்டி அலைகிறார்கள் மாறாக அதனை மாற்றுவதற்கு பதிலாக.

  • கருத்துக்கள உறவுகள்

சிரங்கை தோண்டவென்றே சிலர் கங்கணம் கட்டி அலைகிறார்கள் மாறாக அதனை மாற்றுவதற்கு பதிலாக.

அப்ப தமிழ் இலக்கியத்தை நீங்க வளர்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் இலக்கியத்தை நீங்க வளர்பீர்களா?

அது உங்களுக்காக எழுதப்பட்ட பதில் அல்ல.தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ் இலக்கியத்தை நீங்க வளர்பீர்களா?

:lol: :lol: :lol:

அது உங்களுக்காக எழுதப்பட்ட பதில் அல்ல.தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்வார்கள்.

நுணா.. மருதங்கேணி எழுதியதும் உங்களுக்கில்லை..! :rolleyes:

யோ.கர்ணன் எழுதுவது,

நடக்கவில்லை என சொல்லுகின்றிர்களா?

அல்லது உண்மையில் அப்படி நடந்திருந்தாலும் அதை எழுதக்கஊடாது என சொல்லுகின்றிர்களா ?

இயக்கத்தை விட்டு திரும்ப லண்டன் வந்து புளொட் அலுவலகதிற்கு போய் கதைக்க அங்கு ஒருவரும் முகம் கொடுத்து கதைகின்றார்களில்லை,பிடிக்காமல் விட்டு விட்டு வந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதானே பிறகேன் இங்கு வந்து புறணி கதைக்கின்றார் என புறுபுறுத்தார்களாம்.

எனக்கு அந்த நேரம் எதிரியை விட நம்மவைத்து ஏமாற்றிய அவர்கள் மேலேயே கோவம் அதிகம் இருந்தது.இயக்கங்களில் இருந்த பலர் அரசை ,மாற்று இயக்கங்களை திட்டுவதை விட தான் இருந்த இயக்கங்களைத்தான் திட்டி தீர்கின்றார்கள் .இயலாமல் போன ஆதங்கம் தான் காரணம் .

யோ.கர்ணன் எழுதுவது,

நடக்கவில்லை என சொல்லுகின்றிர்களா?

அல்லது உண்மையில் அப்படி நடந்திருந்தாலும் அதை எழுதக்கஊடாது என சொல்லுகின்றிர்களா ?

யோ கர்ணன் எழுதியது நடக்கவில்லை என்றோ அல்லது எழுதக் கூடாது என்றோ கூறவில்லை. புலி இயக்கத்திற்குள் இருக்கும் பொழுது விமர்சித்திருக்க வேண்டும். புலிகள் பலமாக இருக்கும் மட்டும் அவர்களுக்கு சல்லாரி அடித்து விட்டு, இப்பொழுது காற்றடிக்கும் பக்கம் தூற்றி வியாபாரம் செய்வதுதான் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணன் எழுதுவது,

நடக்கவில்லை என சொல்லுகின்றிர்களா?

அல்லது உண்மையில் அப்படி நடந்திருந்தாலும் அதை எழுதக்கஊடாது என சொல்லுகின்றிர்களா ?

இயக்கத்தை விட்டு திரும்ப லண்டன் வந்து புளொட் அலுவலகதிற்கு போய் கதைக்க அங்கு ஒருவரும் முகம் கொடுத்து கதைகின்றார்களில்லை,பிடிக்காமல் விட்டு விட்டு வந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதானே பிறகேன் இங்கு வந்து புறணி கதைக்கின்றார் என புறுபுறுத்தார்களாம்.

எனக்கு அந்த நேரம் எதிரியை விட நம்மவைத்து ஏமாற்றிய அவர்கள் மேலேயே கோவம் அதிகம் இருந்தது.இயக்கங்களில் இருந்த பலர் அரசை ,மாற்று இயக்கங்களை திட்டுவதை விட தான் இருந்த இயக்கங்களைத்தான் திட்டி தீர்கின்றார்கள் .இயலாமல் போன ஆதங்கம் தான் காரணம் .

கிளிநொச்சியில் என்ன நடந்தது என்பதை யோ கர்ணன் காவி வந்தா உங்களுக்கு தெரியவேண்டும்?

இதை தமிழாலே தமிழனுக்கு ஏன் எழுதவேண்டும்?

கட்டாய ஆள் சேர்ப்பால் உங்களுக்கு எந்த உறவும் சாகவில்லையா ? எங்கள் வீட்டில் மரணம் வரவில்லையா?

மில்லேர் கரும்புலியாக சென்று நெல்லியடியிலே வெடித்தபோது ........... தங்களது முந்தானைக்குள் பொத்தி வைத்திருந்த எங்கள் அம்மாக்களால் எங்களை வெளியில் விட முடிந்தது. லிபெரசன் ஒபெரசொன் ஒரு தளர்நிலையை கண்டது. எல்லோரும் புன்னகைத்தார் ..............

மில்லர் வீட்டு கண்ணீரை எத்தனை யோக்கியர்கள் எழுதினீர்கள்?

முளுவல்லரசும் சேர்ந்து அட்டிக்கும் போது தனித்து நின்று ஓடித்திரிந்த புலியை பற்றி எத்தனை பேர் எழுதிவிட்டீர்கள்?

அடுத்தவீடில் மரணம் வந்தபோது விடுதலை போர் புரியவில்லை. எமதுவீடுக்கு வந்தபின்புதான் புலியை தெரிகிறதா?

யோ கர்ணன் எழுதியது நடக்கவில்லை என்றோ அல்லது எழுதக் கூடாது என்றோ கூறவில்லை. புலி இயக்கத்திற்குள் இருக்கும் பொழுது விமர்சித்திருக்க வேண்டும். புலிகள் பலமாக இருக்கும் மட்டும் அவர்களுக்கு சல்லாரி அடித்து விட்டு, இப்பொழுது காற்றடிக்கும் பக்கம் தூற்றி வியாபாரம் செய்வதுதான் பிழை.

இயக்கங்களுக்குள் இருக்கும் போது விமர்ச்சனம் செய்வதென்பது முடியவே முடியாதது ,சுட்டாலும் பரவாயில்லை துரோகியாக்கி ஆயுள் புரா அடைத்துவைத்து நடக்கும் சித்திரவதைகளை பார்ப்பவன் ஆயுளுக்கு வாய் திறக்கமாட்டான் .

யோகியின் மிக உற்ற நண்பன் சொன்னவை எழுதமுடியாதவை .

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்களுக்குள் இருக்கும் போது விமர்ச்சனம் செய்வதென்பது முடியவே முடியாதது ,சுட்டாலும் பரவாயில்லை துரோகியாக்கி ஆயுள் புரா அடைத்துவைத்து நடக்கும் சித்திரவதைகளை பார்ப்பவன் ஆயுளுக்கு வாய் திறக்கமாட்டான் .

யோகியின் மிக உற்ற நண்பன் சொன்னவை எழுதமுடியாதவை .

யோகி அண்ணா காலத்துக் கதை என்றால் மாத்தையா விவகாரம்தானே??! ம்ம்ம்.. நடந்திருக்கும்.. நடந்திருக்கும்.. நடக்கவேண்டியவைதான்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

100%. பாலை ஊற்றி பாம்பை வளர்க்க பலர் இருக்கிறார்கள்.

இங்கு புதிதாக கதை எழுத தொடங்கியிருப்பவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இவர்களது மனது முழுக்க என்ன இருக்கு என்பதை புரிந்து இது போன்ற நச்சுச்செடிகளை ஊக்குவிப்பதை நாம் முதலில் நிறுத்தவேண்டும். ஏற்கனவே எம்மை அரிக்கும் நச்சுச்செடிகளை நாமே எமது மேடைகளுடாக வளர்த்துவிட்டோம் என்பதனையும் மறக்கவேண்டாம்.

அவை தருணம் பார்த்து தமது குணங்களை வெளிக்கொண்டுவரும் என்பதனையும் அப்போது அவை எம்மைவிட இலக்கியத்திலும் சனங்களின் கணக்கெடுப்பிலும் வளர்ந்து போய் இருப்பதால் நாம் கைகட்டி சேவகம் செய்யவேண்டிவரும் என்பதனையும் இங்கு எச்சரிக்கையாகவே முன் வைக்கின்றேன். நன்றி.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.