தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது.
இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்?
இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது.
தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா?
இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா?
சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன?
பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான்.
இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை?
இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை.
உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது..
நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும்.
நன்றி.