சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.