Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?[/size]

மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள், ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள், தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என்பார்கள் ஈழத்தமிழனுக்கும் இன்று இதுதான் நிலை. ஆரம்பத்தில் இலங்கையை ஒரு கூட்டாட்சிக் குடியரசாக மாற்றி அதி;ல் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழரசை அமைக்க வேண்டுமென்ற கோட்பாட்டுடன் போராடினோம். கிழிக்கப்பட்டுப்போன பண்டாசெல்வா, டட்லிசெல்வா ஒப்பந்தங்களால்; பாடங்களைக் கற்றுக்கொண்டோம். மாகாண சபைகளோடு மாவட்ட சபைகளைக்;கூடத் தரமறுத்தார்கள். எதுவும் கிடைக்காத நிலையில் இன்னும் அதிகம் கேட்டாற்தான் ஓரளவாவது கிடைக்குமென்ற நப்பாசையில் பிரிந்து செல்லும் உரிமையுட்பட்ட சுயநிர்ணய உரிமையைத் தமிழ் மாகாணங்களுக்குத் தருமாறு கேட்டோம். அதன் தொடர்ச்சியாக தமிழீழத் தாயகத்தை ஆயுதமுனையிற் கேட்டோம். இன்று ஒன்றுமில்லாமல், எதையும் கேட்டுப் போராடக்கூடிய சக்தியுமில்லாமல் அடுத்தவர் தயவை எதிர்பார்த்து நிற்கிறோம்.

நாம் என்ன தவறு செய்தோம்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது எங்கோ எதிலோ ஓர் வரலாற்றுத் தவறை நாம் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறோமென்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இன்றைய சம்பந்தர் காலம்வரை, பண்டிதர் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் இன்றைய மன்மோகன் சிங் வரையான வடநாட்டுத் தலைவர்கள் உட்பட, பெரியார் ஈவெரா, அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலிதா போன்ற தமிழகத் தலைவர்கள் வரை எல்லோரையும் நமது தமிழ்த் தலைவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் தொடர்பான பிரச்சனைகளையிட்டு முறையிட்டே வந்திருக்கிறார்கள். ஆனாலும் அறுபது வருடங்களுக்கும் மேலான இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி இடப்படவி;லை.

பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள். இந்தியா என்னும் பெருமரத்தை நாம் சுற்றிச் சுற்றியே வந்தும் கூட இன்றைக்கு ஏறக்குறைய அழியும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படியே போனால் ஆகக் கூடியது இன்னும் பத்து ஆண்டுக் காலத்திற்குள் இலங்கைத் தீவில், குறிப்பாக வடகிழக்கில் எமது இருப்பின் சுவடு கேள்விக்குறியாகிவிடும். சிங்களத்தின் தொடர்ச்சியான திட்டமிடப்பட்ட குடியேற்;றம், ராணுவத்தின் அடக்கு முறை, அதனால் ஏற்படும் தமிழரின் இடப்பெயர்வு என்று அனைத்து வழிகளாலும் நமது பிரதேசம் தமிழரின் தாயகமென்னும் அந்தஸ்தை மிக வேகமாக இழந்து வருகின்றது.

நாம் விட்ட வரலாற்றுத் தவறுதான் என்ன?

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்கள் இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுடனான புவியியல், அரசியல் ரீதியான தொடர்பை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து கொண்டிருந்தும், இலங்கைத் தமிழர்கள், தமிழ் நாட்டிலேயே தங்கள் கலை, கலாச்சார, சமய, இலக்கியப் பாரம்பரியங்கள் அனைத்திற்கும் தங்கியிருந்தும், நாம் அனைவருமே தென் இந்தியத் திராவிட பரம்பரையினராயிருந்தும், வெள்ளைக்காரன் ஏதோ இலங்கைத் தீவைத் தனித்தேசமாக்கிச் சுதந்திரம் தந்துவிட்டானென்ற மமதையில் தமிழகத்தையும் இந்தியாவையும் ஒரு பொருட்டாக மதிக்காமலேயே போய்விட்டோம்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் சுதந்திரம் கிடைக்கவிருந்த காலத்தில் நமது தமிழ்ப் பிரதேசங்கள் இந்தியாவின் குறிப்பாகத் தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியென்பதை முன்வைத்து இந்தியாவின் ஒரு மாநிலமாக எம்மைச் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரித்தானிய அரசிடம் முன் வைக்காமல் விட்டுவிட்டோம். இன்று, இலங்கையென்னும் நாட்டிற்குள் சிங்களப் பேராண்மை வாதத்தின் இரும்புப் பிடிக்குள் அகப்பட்டு மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

சிங்களமும் இதனால் பெரிய லாபத்தை அடைந்துவிடவில்லை. தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியைப் பிடித்து விழுங்கிய கதைபோல தமிழர் பிரச்சனை சிங்களத்தின் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதால் உமிழவும் முடியாமல் விழுங்கவும் முடியாமற்தான் காணப்படுகின்றது. இலங்கையின் முன்னேற்றம் இதனால் ஒரு அரை நூற்றாண்டு பின்தள்ளியும் போய்விட்டது. கையிலெடுத்துவிட்ட பேரின வாதத்தை கைவிடமுடியாத நிலைக்குச் சிங்களம் போய்விட்டது.

வெட்டிவைத்த இளநீர்த் தேங்காயினுள் கைவிட்டுத் துழாவி வழுவலை அள்ளிய குரங்கு கையை வெளியே எடுக்கவும் முடியாமல் அள்ளிய வழுவலை கைவிடவும் விரும்பாமல் தவிப்பது போல இலங்கையரசும் தனது பேரினவாதத்தைக் கைவிட்டுத் தமிழர்களுக்கென்றோர் தனியான ஆட்சியலகைக் கொடுக்க விருப்பின்றி ஐநா, மனிதஉரிமை அமைப்புக்கள் என்று எல்லாத் தரப்பினராலும் தரக்குறைவாக நோக்கப்பட்டு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.

இந்த அனைத்துக் குழப்ப நிலைகளுக்கும் காரணம் நாம் ஆரம்பத்திலேயே இந்தியாவின் ஓர் அங்கமாக எம்மை வைத்துப் பார்க்காமல் விட்டதுதானோ! என்று எண்ணத் தோன்றுகிறது.

சுதந்திரத்திற்கு முன்னர் கொத்தடிமைகளாகக் கூலிகளாக இந்தியத் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டபோது அந்தத் தொழிலாள வர்க்கத்தை அசூயையுடன் நோக்கி நம்மிலும் குறைந்தவர்களாக இலங்கையின் வம்சாவழி மேற்தட்டு வர்க்கம் கருதியதால் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவுடன் தங்களது தொடர்புகளை அரசியல் ரீதியில் மேம்படுத்திக்கொள்ள ஆர்வமில்லாமற் போய்விட்டது. அப்போதெல்லாம் அரிஸ்ரோக்கிரட்டிக் சொசைட்டியாகவிருந்த ஆளும் வர்க்கத்தில்; (மேற்தட்டு வர்க்கம்) சிங்களவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழர்களும் குலாவிக் கொண்டிருந்ததால் எமது இனநலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தமிழகத்துடன் இணைந்து விடவேண்டுமென்னும் கோட்பாடு எம்மிடத்தில் உருவாகவேயில்லை.

அன்றே காந்திஜீயிடத்திலோ நேருவிடத்திலோ நாங்களும் இந்தியாவின் குழந்தைகளே எங்களைக் கைவிட்டு விடாதீர்கள் என்று நம்மில் யாராவது வேண்டுகோள் விடுத்திருந்தால் சரித்திரம் வேறு திசையில் போயிருந்திருக்கும். ஆனால் யாரும் அத்தகைய சிந்தனையுடன் செயற்படவில்லை. அப்போது எமக்கு அந்தத் தூரதிருஷ்டி இல்லாமற் போனது எமது துரதிஸ்டமே.

சோல்பரி வந்து எம்மைப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் விழுத்திவிட்ட பின்னரும்கூட நாம் விழிப்படையவில்லை. ஏனென்றால் வறிய இந்தியாவின் தமிழர்களோடு எம்மைச் சேர்த்துப் பார்க்க எம்மில் யாருக்கும் விருப்பமிருக்கவில்லை. அந்த அகந்தையின் விளைவை நாம் இன்று அறுவடைசெய்து கொண்டிருக்கிறோம்.

சரி, போனது போகட்டும். இனி நடந்தவைகளைப் பேசிப்பயனில்லை. மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதையாவது சற்று நிதானத்துடன் ஆராய்ந்தாலென்ன? அதையிட்டுத்தான் இனி நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பாக்கு நீரிணையின் இருபுறத்திலுமுள்ள தமிழ்த் தேசியத்தினை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத ஒரே அலகாக உலகின்முன் வைத்து இந்தியாவுடன் ஐக்கியப்பட்டதோர் மாநிலமாகத் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினாலென்ன?

சில வேளைகளில் இத்தகைய அணுகுமுறைகள் நகைப்புக்கிடமானதாக எம்மவர்களின் மத்தியில் கருதப்படவும் கூடும். அதற்கான விசேடித்த காரணங்களெதுவும் இருக்கமுடியாது. தங்கள் தலைமைத்துவத்தை இழக்க நேரிடுமோ! என்ற ஐயத்தில் சில தமிழ் அரசியற் தலைமைகள் இதனை ஏற்க மறுத்தாலும் இப்போது தலைக்கு மேலாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் நமது தாயகத்தைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி ஏற்படக்கூடுமாவெனத் தெரியவில்லை.

ஒரு புறத்தில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற அதேவேளை, தமிழீழத்தின்மீதான முழுமையான உரிமை பாராட்டலுக்குத் தமிழகத்தைத் தூண்டிவிடுவதும், இந்திய மத்திய அரசின் நிர்வாகப் பரப்பினுக்குள் தமிழீழம் கொண்டுவரப்படவேண்டுமென்று போராட்டங்களை முன்னெடுப்பதும் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்குமென்பதில் சந்தேகமேயில்லை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் கையை ஈழத்தமிழர்கள் பலப்படுத்தவும், எமக்கான மொழிவாரி நிர்வாக அலகொன்றை இந்திய மத்திய அரசின்கீழ்ப் பெற்றுக்கொள்ளவும் நாம் தொடங்கும் போரட்டம் வழிகோலுமானால் அதையிட்டு இந்திய நடுவண் அரசு நிச்சயம் உள்ள10ர மகிழ்ச்சியடையவே செய்யும். எந்தவொரு நாட்டிலும் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வாழப்போகிறோமென்ற கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டங்களுக்குச் சட்டரீதியான தடைகள் உருவாகப் போவதில்லை. மாறாக வடமாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கைகளுக்கான ஆதரவு வலுவடையவே செய்யும்.

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போன்றோரின் தற்போதைய தமிழீழத்திற்கான ஆதரவுக்குரலையும், ஏனைய தரப்பினரின் அனுதாபத்தினையும் தக்கமுறையில் வழிப்படுத்தி இந்திய யூனியனுடன் எமது தமிழீழத்தாயகத்தை இணைக்கும் முயற்சியில் இறங்கினாலன்றி இன்னும் பத்தாண்டுக்காலத்தினுள் உருவழிந்து போய்விடக்கூடிய தமிழீழ தேசத்தினை நாம் மீட்டெடுப்பது இயலாத காரியமாகவே போய்விடக்கூடும்.

இது ஒரு பேப்பரில் வெளிவந்தவோர் கட்டுரை. உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து தர முடியுமா?

  • Replies 72
  • Views 5.8k
  • Created
  • Last Reply

சீனாவுடன் இணைந்தால் என்ன என்றும் சிந்தித்து எழுதுங்கள் அதன் பின்னர் கருத்துக்களை சொல்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலுக்கு முன்பு, இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால். நன்றாக இருந்திருக்கும்!

தமிழ் நாட்டுத் தமிழனே, மூச்சு விட முடியாமல் முக்குகிறான்!

இவ்வளது சொந்தங்களை, இழந்த பின், அதற்குக் காரணமானவனுடன், இணைந்து கொள்வது, செருப்பு மாலையை அணிந்து கொள்வது போல உள்ளது!

செருப்பு, விலையுள்ளது தான்!

ஆனால், அதற்கு உரிய இடம், பாதங்கள்!

[size=4]எமது மக்கள் வாழ்வியல் இன்று பின்னடைவில் இருந்தாலும் தாயக மக்கள் இந்திய யூனியனில் சேர்வதை விட இந்த நிலை[/size]யில் இருந்து மீண்டு ஒரு நியாயமான அரசியல்தீர்வை பெறுவதையே விரும்புவார்கள் என எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய யூனியனில் சேருவதை விட சிங்களவனோடு ஒன்றாக இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஆராவமுதன் அவர்களே!

சீனாவுடன் இணைந்தாலென்ன என்ற உங்களது கூற்று கருத்தற்ற வெறும் எழுந்தமானமான விதண்டாவாதக் கருத்தாயிருப்பதால் அதற்கு விடைகூற வேண்டியதில்லை.

நண்பர் அகூதா!

தாயக மக்கள் நிச்சயமாக அதை விரும்பக்கூடும். விரும்புகிற படியால்த்தான் அத்தகைய கருத்தே உருவாகியிருக்கிறது. மக்கள் கணிப்பொன்று நடத்தப்படும்போது இதற்கான விடை கிடைக்கும்.

நண்பர் புங்கையூரான்!

முள்ளிவாய்க்கால் எம்மை அவ்வளவுக்குப் புண்படுத்தியிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் அதற்காக அந்தப் பெரிய இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அதுவும் செருப்பாகக் கணிக்குமளவுக்கு நாம் இந்த உலகப்பந்தில் பெரியதோர் சமூகமென்ற அந்தஸ்துடன் இல்லை. இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பிற்குள்; ஆக இருபது வீதத்திற்கும் குறைவானவர்களாய், எண்பது வீத சிங்களவர்களின் பிடிக்குள் இருந்துகொண்டு தேசிய இன அந்தஸ்தைப் பெறப் போராடுகிறோம். எமது தேசிய இன அந்தஸ்தினை உலகம் அங்கீகரிக்கவேயில்லை.

அந்த நோக்கத்தை அடைவதற்கான பாதையில் ஓர் தங்கு மையமாக ஏன் இந்திய யூனியனுடன் நாம் இணைந்து கொள்ளக் கூடாது என்பதே கேள்வி. இது வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையலன்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டியதோர் அரசியல் பாதை.

நாம் தோற்றுப்போனவர்களாய் சிங்கள இஸ்லாமிய சமூகங்களின் அடக்கு முறைக்கு ஆட்பட்டு முற்றாக அமிழ்ந்து அழிந்து போகுமுன் திமிறிக்கொண்டு வெளியேற இதுவே தற்போதைக்கு ஒரேயொரு ஒரு பற்றுக்கோடு. ஏனெனில் இந்தியாவில் எமது உறவுகள் வாழும் சமூகம் புவியியல், மொழி, கலாச்சாரத் தொடர்புகளோடு (இன்றைய உலகில் கடல் எம்மைப் பிரிப்பது ஓர் பொருட்டல்ல) எமக்கு மிக அருகிலிருக்கிறது.

Edited by karu

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும், மலையகத்தையும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும்

பாண்டிச்சேரி மாதிரி தனியாக இயங்கலாம் அல்லது தமிழ்நாட்டுடன் இணையலாம் :)

இந்திய/தமிழ்நாட்டு தமிழர்கள் தொப்புள் கோடி உறவுகள் தானே - அவர்களுடன் சேர என்ன பகை?

இந்த பாதை சிங்களத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவில் பெரிய ஆப்பை இறக்கலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய யூனியனில் சேருவதை விட சிங்களவனோடு ஒன்றாக இருக்கலாம்.

உ;ம்; ஏனென்றால் எண்ணை சட்டியில் இருந்து அடுப்புக்க விழுந்த கதையாகக்கூடாது அல்லது இப்படியும் சொல்லலாம் தெரியாத பேய்க்கு வாழ்க்கை படுவதை விட .... தெரிந்த பேயுடன் வாழ்வதே மேல் என்பதுபோல ....

மே 19 இற்கு முன், புலிகள் அழிந்தால் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு இந்தியா எடுத்துக் கொடுக்கும் என இந்திய விசுவாசிகளால் நீண்ட காலத்திற்கு பல மட்டங்களிலும் பரப்புரை செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவுடன் சேர்வதைப் பற்றி மேற்கொண்டு யோசிக்கலாம். அதையே செய்து முடிக்காத நிலையில் புதிய கேள்விகள் உருவாகியுள்ளன.

Dangling a carrot on a stick.

பலம் பொருந்திய சீனாவை பின்னணியாகக் கொண்டு இயங்கும் சிறிலங்காவின்

எந்த ஒரு சிறு துண்டு நிலத்தையும் இந்தியாவால் கூறு போட முடியாதென்பதே நிஜம். சில வருடங்களின் முன்பு இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருந்த ஆதிக்கம் இன்று இல்லை. இன்றைய நிலையில் இந்தியாவால் வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு பஞ்சாயத்து சபை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

[size=4]அதற்குப் பதிலாக தமிழ் நாட்டை இலங்கை உடன் இணைத்தல் என்ன?[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நாம் அங்கீகரிக்கப்பட்டவோர் தேசிய இனம் ஆகவே இந்திய யூனியனெல்லாம் நமக்கு ஓர் தூசு என்று சில நண்பர்கள் கனவு காண்பதுபோலத் தெரிகிறது. அதனாற்தான் இந்தக் கருத்திற்கு சில பதில்கள் மிகவும் காட்டமாக வருகின்றன. இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஆகக்கூடியது இன்னும் பத்தாண்டுகள்தான். அதற்குள் நாம் இருந்த இடம் தெரியாமற் போய்விடுவோம். எங்களுக்கு தேசிய இன அந்தஸ்தென்ன ஓர் பிராந்தியத்தில் செறிந்து வாழும் மக்களென்ற தகுதியைக் கூட யாரும் தரவில்லை.

நாயும் நாய்போட்ட குட்டிகளும் போல பக்கத்துத் தமிழ் நாட்டு உறவுகள் மட்டுமே எமக்காகக் குரல் கொடுக்கின்றனர். அதனால் இந்தியா மட்டும் தமிழ்நாட்டின் நெருக்குவாரங்களுக்கு மதிப்பளித்து எங்களது நலனில் தன்னாலான அக்கறையைச் செலுத்துகின்றது. நாங்கள் தமிழ்நாட்டின் பிரிக்க முடியாத பகுதியினர், பாக்கு நீரிணையின் இருபகுதியிலும் நிலத்தொடர்புகளோடும், மொழி கலை, சமய, கலாச்சார உறவுகளோடும் வாழ்கின்ற இனத்தவர். நாம் இந்தியாவின் பகுதியாகவே வாழ விரும்புகிறோமென்ற என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்திலும், ஈழத்திலும் முடுக்கிவிடப்படும் போராட்டங்களும், பிரச்சாரங்களுமே எம்மை நோக்கி உலகின் பார்வையைத் திரும்ப வைக்கும்.

இன்னுமொரு ஈழப்போராட்டக் கனவில் மிதக்க விரும்புபவர்கள் மிதந்துவிட்டுப் போனாலும். ஈழத்தில் நமது எதிர்கால சந்ததியின் இருப்புக்காகவும் நலத்திற்காகவும் நாம் அவசரமாகவும் அவசியமாகவும் எடுக்கவேண்டிய முடிவுகளில் இதுவுமொன்றாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய யூனியனை நாம் எப்பாடு பட்டாவது, கஸ்மீரியர்கள்,அசாமிகள்,சீக்கியர்கள்,பாக்கிஸ்தானியர்ள், சீனர்களுடன் இணைந்து உடைத்தால், தமிழருக்கு இரண்டு நாடுகள் வர வாய்ப்பு இருக்கிறது, நாமும் விடுதலை அடைவதுடன், எமக்காக உயிரையும் கொடுத்து, தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக சொந்தங்களும் விடுதலை பெறுவர்.

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக முற்பட்ட கதைபோல இத்தினூண்டு சிறிங்காவுடன் மோதி எமது ஈழத்தாயகத்தில் ஓர் நிர்வாக அலகையே பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள் காஷ்மீரத்தையும், அசாமையும், காலிஸ்தானையும் அத்தோடு தமிழ்நாட்டையும் பிரித்து ஈழத்தையும் பிரித்து தமிழனுக்கென்று இரண்டு நாடுகளையுருவாக்கி............

அப்பப்பா இப்போதுதான் புரிகிறது எம்மவர்கள் எத்தகைய கனவுலகில் வாழ்கிறார்களென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக முற்பட்ட கதைபோல இத்தினூண்டு சிறிங்காவுடன் மோதி எமது ஈழத்தாயகத்தில் ஓர் நிர்வாக அலகையே பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள் காஷ்மீரத்தையும், அசாமையும், காலிஸ்தானையும் அத்தோடு தமிழ்நாட்டையும் பிரித்து ஈழத்தையும் பிரித்து தமிழனுக்கென்று இரண்டு நாடுகளையுருவாக்கி............

அப்பப்பா இப்போதுதான் புரிகிறது எம்மவர்கள் எத்தகைய கனவுலகில் வாழ்கிறார்களென்று.

காஸ்மீரையும், அசாமையும்,காலிஸ்தானையும் நாம் பிரிப்பதில்லை, அவர்களுடன் இணைந்து, இந்திய யூனியனை உடைக்கும் முயறிசியில் ஈடுபட வேண்டும், காஸ்மீர் பிரச்சினை ஏலவே ஜநாவுக்கு சென்று விட்டது, அங்கே ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜக்கிய நாடுகள் சபை அறிவித்து இருக்கிறது, அதை நாம் ஊக்குவிக்க வேண்டும், மற்றயது, காஸ்மீரிய ,அசாமிய பிரச்சினைகளை எமது பிச்சினைபோல் உலகம்பூர கொண்டு போக அவர்களால் முடியவில்லை, உலகம்பூர பரந்திருக்கும் நாம் அவர்களுக்கு உதவிசெய்யலாம்,அங்கே நடக்கும் கொலைகளை நாம் பரப்ப முன்வரவேண்டும், பரப்புரை முக்கியமான ஒன்று, எமது பிரச்சினை பேசப்படுவது போன்று அவர்களது பிராசினை பேசப்படுவது இல்லை, இன்றைய தேதியில் சீனாவுடன் இந்தியாவால் ஆயுத ரீதியாக வெல்லவே முடியாது, இந்தியாவை உடைப்பது என்றால், அவர்கள் மாட்டோம் என்றா சொல்ல போகுறார்கள், சிந்திப்போம் செயல்படுவோம்.

இது ஒருநாள் இருநாள் வேலை இல்லை எமது அடுத்த சந்ததிக்கான எமது ஆயுட்கால வேலைத்திட்டம்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதியில் வந்து ஐக்கியமாகணும்... என்று முடிவு பண்ணி விட்டீர்கள்... சீக்கரம் வந்து ஐக்கியம் ஆகுங்கப்பா..(ஏதோ தமிழர் பண்பாடு என்றால் ஈழ தமிழர்களை பார்த்து கற்று கொள்ளணும் என்று இங்கிட்டு உள்ளவர்கள் சொல்கிறார்கள்)

டிஸ்கி:

இங்கிட்டு வந்துட்டா யாரும் உழைக்கவே தேவை கிடையாது.. பிறந்ததில் இருந்து பாடையில் போவது வரை பீரிதான்... :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களே இந்தியாவில் இருந்து பிரிய நினைக்கும் போது நாம் அவர்களுடன் ஏன் சேர வேண்டும்? முதலாவது எம்மை புலிகள் என்று இன்றும் அழைப்பதோடு பழையவற்றை (இந்திய இராணுவத்துடனான போர்)மறக்கக்கூடியவர்கள் இல்லை.எம்மை அவர்கள் சேர்ப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.இந்தியாவின் பழைய குடிகளில் தமிழ் நாட்டு தமிழர்களும் அடங்குவர்.அவர்கள் மத்திய அரசுடன் படும் பாட்டை பார்க்கும் போது நாம் ஏன் போய் தலையை கொடுக்க வேண்டும்??. தமிழ் நாட்டில் அகதிகள் முகாமில் இருக்கும் எம்மவர்கள் படும் பாட்டை பார்க்கும் போது இந்தியாவின் பக்கம் நினைத்து கூட பார்க்க முடியுமா??

ஐ.நாவின் உதவியுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தினால் ஓரளவு தீர்வு வர வாய்ப்பு உள்ளது.அதற்கு கூட நாம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.என்றாலும் தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருநாள் இருநாள் வேலை இல்லை எமது அடுத்த சந்ததிக்கான எமது ஆயுட்கால வேலைத்திட்டம்.

அடுத்த சந்ததியிடம் ஈழத்தை அதாவது நமது தாயகத்தைக் கட்டிக்காத்து நம்மால் கையளிக்க முடியுமா? என்பதே இன்றுள்ள கேள்வி. சிங்களவர்கள் தங்களது தீவிரமான குடியேற்றத்தினால் ஈழத்தைக் கரைத்துவிட முழுமூச்சோடு பாடுபடுகிறார்கள். ஏற்கனவே காங்கேசன் துறையிலிருந்து கூமுனைவரை தொடர்ச்சியாக நீண்டிருந்த எமது தரைத்தொடர்பு பல இடங்களில் சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களால் உடைக்கப்பட்டு விட்டது. நாம் இன்னும் ஒரு பத்து வருடங்கள்தான் ஆகக்கூடியது தாக்குப் பிடிக்க முடியும். இதற்குள் தான்போக வழிகாணாத எலி விளக்கு மாற்றையும் காவிச் செல்ல முயல்வதைப்போல அல்லவா இருக்கிறது அசாமையும், காஷ்மீரத்தையும் மற்றவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட நினைப்பது.

உலகப்பந்தில் அதுவும் வங்காள விரிகுடாவில் நமது அளவென்ன, மக்கட் தொகையைப்பொறுத்த தகுதியென்ன என்பதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? இது ஹிட்லர் ஏதோதனக்குக் கிடைத்த ஆட்சியதிகாரத்தால் தலைகால் தெரியாமல் முழு ஐரோப்பாவையும், ரஷ்யாவையும் பிடித்து ஆள வெளிக்கிட்ட கதைபோல அல்லவா இருக்கிறது. அவராவது இறைமையுள்ள ஒரு நாட்டை ஆண்ட தலைவர். நமக்கு ஒரு பஞ்சாயத்துத்தானும் உண்டா?

கற்பனைகளை நீளவிடலாம் அதில் தவறில்லை ஆனால் கையிலிருக்கும் ஒற்றைக் குருவியை விட்டுவிட்டு புதருக்குள் இருக்கும் சோடிப் பறவைகளைப் பிடித்தால் முட்டைவிட்டுக் குஞ்சு பொரிக்கும் என்று எண்ணுவது போல எம்மைநோக்கி கைகளை நீட்டியபடி வரவேற்கக் காத்திருக்கும் தமிழகத்து உறவுகளின் கைகளைப் பற்றிக்கொள்வதை விட்டு விட்டு ஏதேதோ அதீதக் கற்பனைகளில் வாழமுற்படுவது நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவதாகத்தான் முடியப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

அண்மைக்காலத்தில் வெளிப்படுத்த்ப்படாத ஒரு வித்தியாசமான சிந்தனை. இது சாணக்கியமான அணுகுமுறைகளில் ஒன்றாக கருதப்படக்கூடியது. ஆனாலும் இதற்கான பதிலும் இதே ஆக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. அது வருமாறு:

பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள். இந்தியா என்னும் பெருமரத்தை நாம் சுற்றிச் சுற்றியே வந்தும் கூட இன்றைக்கு ஏறக்குறைய அழியும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படியே போனால் ஆகக் கூடியது இன்னும் பத்து ஆண்டுக் காலத்திற்குள் இலங்கைத் தீவில், குறிப்பாக வடகிழக்கில் எமது இருப்பின் சுவடு கேள்விக்குறியாகிவிடும்.

இந்தியா இலங்கையையோ அல்லது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களையோ தன்னுடன் இணைத்துக்கொள்ளும் சக்தியை கொண்டிராத ஒரு பலவீனமான நாடாக இன்று இருக்கிறது. சீனாவின் ஆதரவுடன் செயற்படும் சிறிலங்காவின் மீது இந்தியா தனது செல்வாக்கையும் பலத்தையும் இழந்துவிட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழீழத் தாயகத்தை ஆயுதமுனையிற் கேட்டோம். இன்று ஒன்றுமில்லாமல், எதையும் கேட்டுப் போராடக்கூடிய சக்தியுமில்லாமல் அடுத்தவர் தயவை எதிர்பார்த்து நிற்கிறோம்.

நாம் என்ன தவறு செய்தோம்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது எங்கோ எதிலோ ஓர் வரலாற்றுத் தவறை நாம் தொடர்ச்சியாக விட்டு வந்திருக்கிறோமென்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் விட்ட வரலாற்றுத் தவறுதான் என்ன?

இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இன்று நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் முக்கியமான கவனம் செலுத்த வேண்டிய கேள்வி இது. தமது நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இந்த கேள்விக்கான சரியான பதிலை கண்டுபிடிப்பதற்கே மேற்படி இரு அமைப்புகளும் முக்கியமாக செலவிட வேண்டும்.

இலங்கை தமிழர் தமது பிரச்சினையை சிங்களவரின் பேரினவாதமாகவும், தமது தேசிய இனப்பிரச்சினையாகவும், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாகவும் பார்க்கிறார்கள். இதுதான் கடந்த 60 வருட நிலைப்பாடு.

உண்மையில் இலங்கை தமிழர் பிரச்சினை அதற்கு அப்பாற்பட்டது. இது ஒரு சர்வதேச புவியியல் அரசியற்பல போட்டியின் ஒரு அங்கம்.

இந்த போட்டியில் பிரதான எதிரிகளாக அன்றும் இன்றும் இருப்பவர்கள் சீனாவும், அமெரிக்காவும்.

சிறிலங்காவும், இந்தியாவும் இந்த போட்டியில் விருப்பமின்றி, ஆனால் தமது பாதுகாப்பு கருதி களம் இறங்கியவர்கள். இலங்கை தமிழர்களும், சிங்களவர்களும் இந்த போட்டியில் அழித்தொழிக்கப்படக்கூடிய வலுவற்ற வெறும் பகடைக்காய்கள்.

இலங்கை தமிழர் தமது பிரச்சினையின் உண்மையான விசாலத்தையும் அதன் முக்கியமான சக்திகளையும் சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கு தக்க வகையில் தமது அரசியல் நகர்வுகளை செய்ய தவறியது, இலங்கை தமிழர்களின் முதன்மையான வரலாற்று தவறாக அமையும் என கருதலாம்.

எதிரி யார்?

இலங்கை தமிழர்கள் தமது எதிரியாக சிங்களவர்களை கருதி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க அளவிலான இலங்கை தமிழர்கள் இந்தியாவையும் தமது எதிரியாக கருதி வருகிறார்கள். இன்னும் சில இலங்கை தமிழர்கள் அமெரிக்காவையும் தமது எதிரியாக கருதி வருகிறார்கள்.

சீனாவின் பங்கு இந்த அழிவில் ஆரம்பத்திலிருந்தே முதன்மையானதாக இருந்து வருகின்ற போதிலும் சீனாவை இலங்கை தமிழர்கள் தமது எதிரிகள் வரிசையில் முதன்மை படுத்தவில்லை.

உண்மையில் இலங்கை தமிழர்களின் எதிரி இந்த நாடுகளோ அல்லது சிங்களவரோ அல்ல. இந்த நாடுகள் சம்பந்தப்பட்ட புவியல் அரசியற்பல போட்டியே இலங்கை தமிழர்களின் எதிரியாகும். இந்த அரசியற்பல போட்டியில் தமக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை ஏனையவர்களை பாதிக்காத வகையில் ஏற்படுத்திக் கொள்ள இலங்கை தமிழர்கள் வழிகாண வேண்டும். இந்த வழியை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. பரந்த அரசியல் அறிவும், சர்வதேச நிலைப்பாடுகள் பற்றிய தெளிவும், சர்வதேச தளத்தில் அறிவும், ஆற்றலும், தொடர்புகளும் இந்த வழியை கண்டுகொள்ள தேவையானவையாகும்.

ஆகவே இலங்கை தமிழர்கள் தனித்து நின்று தமக்கான பாதுகாப்பு வலையத்துக்கு வழிகாணுவது கடினமானதாக அமையும். இலங்கை தமிழர்களுக்கு அண்மையான அயலவராக சிங்களவர்களே இருக்கிறார்கள். அயல்நாடாக இந்தியா இருக்கிறது. இந்த புவியியல்சார் அரசியற்பல போட்டியில் சிங்களவர்களும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 60,000 சிங்கள இளைஞர்களும், பாடசாலை மாணவ மாணவிகளும் 70களிலும் 90களிலும் ஜேவிபி கிளர்ச்சியின் போது குரூரமாக கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றும் ஊடகவியலாளர்களும், மனித உரிமைகளுக்காக போராடுபவர்களும் கொல்லப்படுகிறார்கள். இலங்கையில் சம்பூரில் சீன ஆதரவுடனும் பாகிஸ்தானின் நேரடி ஆதரவுடனும் அணுசக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இவையெல்லாம் இந்த தீவில் வாழும் மக்களை நீண்டகாலத்துக்கு மோசமான பாதிப்புக்குள் கொண்டு செல்ல போகின்றன. ஆகவே இந்த சீன - அமெரிக்க புவியியல் அரசியல் போட்டியில் இந்திய அரசு, சிங்கள மக்கள், சிறி லங்கா அரசு ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை தமிழர்கள் தம்மையும் பாதுகாத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தனித்து நின்று பாரிய வல்லரசுகளின் பலப்பரிட்சைக்குள் இலங்கை தமிழர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள முயற்சிப்பது தற்கொலையானது என்பதை முள்ளிவாய்க்கால் ஏற்கனவே காட்டியிருக்கிறது.

[size=4]நல்ல ஆய்வு. நிச்சயம் நாம் முன்னர் விட்ட பிழைகளை மீள் ஆய்வு செய்யவேண்டும் ஆனாலும் எனது பார்வையில் எமது பலம் (எண்பது மில்லியன்கள் தமிழர்கள்) இன்றை அரசியல் / பொருளாதார நலன்களுக்கு அமைய இணைக்கப்பட வேண்டும் என்பது. அதாவது தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் பலமான தலைமை இருக்கவேண்டும். [/size]

இவையெல்லாம் இந்த தீவில் வாழும் மக்களை நீண்டகாலத்துக்கு மோசமான பாதிப்புக்குள் கொண்டு செல்ல போகின்றன. ஆகவே இந்த சீன - அமெரிக்க புவியியல் அரசியல் போட்டியில் இந்திய அரசு, சிங்கள மக்கள், சிறி லங்கா அரசு ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை தமிழர்கள் தம்மையும் பாதுகாத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தனித்து நின்று பாரிய வல்லரசுகளின் பலப்பரிட்சைக்குள் இலங்கை தமிழர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள முயற்சிப்பது தற்கொலையானது என்பதை முள்ளிவாய்க்கால் ஏற்கனவே காட்டியிருக்கிறது.

[size=4]ஆம், இந்தக்கூற்று கொள்கை அளவில் சரியானது. நீங்கள் கூறுவது போன்று நடக்கவேண்டும் என்றால் முதலில் தமிழர் தரப்பு ஒப்பீட்டளவில் பலமாக இருந்துகொண்டே இதை செய்ய முற்பட வேண்டும். தலைவர் பிரபாகரன் காலத்தில் இது நடந்தது, ஆனால், இந்தியாவோ / சிங்களமோ அதை உணராமல் எம்மை அழிக்கவே முடிவுகட்டின. சிங்கள மற்றும் இந்திய தலைமைகள் சீன - அமெரிக்க திட்டங்களை உணராமல் இருக்கும்வரை எமது தலைமைகளால் எதுவுமே செய்யமுடியாது. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூகோளத்துடன் கூடிய அரசியல் ஆய்வு இது. Jude உங்கள் வருகைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் போய் இணைவது இருக்கட்டும், முதலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறதென்பதாவது இந்தக் கட்டுரை எழுதிய அல்லது இணைத்த கற்பனையாளர்களுக்குத் தெரியுமா??

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட காஷ்மீரத்து மக்களுக்கு இன்றுவரை நடந்துவரும் அநியாயம் தெரியுமா உங்களுக்கு. "எங்களுக்குப் பாக்கிஸ்த்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம், எங்களைத் தனியாக விட்டு விடுங்கள்" என்று காஷ்மீரிகள் 1948 இலிருந்து போராடி வருகிறார்கள். ஆனால் இந்தியாவோ 2009 முள்ளிவாய்க்காலில் தான் பரீட்சித்துப் பார்த்த இனக்கொலை யுத்த மாதிரியை அங்கே இரகசியமாகப் பாவித்துக்கொண்டிருக்கிறது. இன்றுவரை அங்கே கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களினதும் கூட்டுப் பாலியல் வண்புணர்விற்குப் பின் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களினதும் சோகம் தெரியுமா உங்களுக்கு.ணைன்றுவரை உலகின் மிகவும் இராணூவமயமாக்கப்பட்ட ஒரு பிரதேசம் என்றால் அது ஈழத்தின் யாழ்ப்பாணத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஆக்கிரமிற்பிற்குட்பட்ட காஷ்மீர்தான் என்பதாவது தெரியுமா?? இவை தெரியாதென்றால், எந்த லட்சணத்தில் ஜோதியில் ஐக்கியமாவது பற்றிக் கனவு காண்கிறீர்கள்?

சரி, இன்னொரு மாநிலத்தைப் பார்ப்போமே. ஆந்திர எல்லையை ஒட்டிய சட்டிஷ்கர் மாநிலத்தில் இன்று நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை பற்றித் தெரியுமா உங்களுக்கு. ஆதிவாசிகளின் வளங்களையும் அவர்கள் ஆயிரமாண்டுகளாக வாந்துவரும் நிலங்களையும் பல்தேசியக் கம்பெனிகளுக்கு விற்கத்துடிக்கும் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்த ஆதிவாசிகளுக்கு இந்திய அர்சு கொடுத்துள்ள பெயர் என்ன தெரியுமா??? நக்சலைட்டுக்கள். பயங்கரவாதிகள். நக்சலைட்டுக்களை அழிக்கிறோம் என்று இந்திய மத்திய அரசின் துணை இராணுவப் படைகளும், நக்சலைட் எதிர்ப்புப் படைகளும் அக்காட்டுப் பிரதேசம் எங்கும் இறக்கி விடப்பட்டிருக்கின்றன. 90 களின் ஆரம்பத்திலிருந்து நடந்துவரும் இந்த நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகள் நக்சலைட்டுக்கள் என்கிற பெயரில் பல்தேசியக் கம்பெனிகளுக்காகப் பலியிடப்பட்டிருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்கு முன்னர் கூட, ஆதிவாசிகளின் வைபவமொன்றிற்குள் அத்துமீறிப் புகுந்த இந்தியப் பேய்ப்படை நடத்திய வெறியாட்டத்தில் 10 வயதுச் சிறுமி உற்பட 21 பொதுமக்கள் பலியிடப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலை" நக்சலைட்டுகளுக்கெதிரான வெற்றிகரமான தாக்குதல் - 21 பயங்கரவாதிகள் பலி" என்று இந்திய மத்திய அரசு அறிவித்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவக் குழுவிற்கு வீரப் பதக்கங்களும் கிடைக்க ஏற்பாடு செய்துவந்தது. ஆனால் உண்மையைக் கண்டறிந்த சில மனிதவுரிமை அமைப்புகளின் அழுத்தத்தினை அடுத்து இப்போது அடக்கி வாசிக்கிறது. உங்களுக்கு இந்தச் சம்பவம் பற்றிய முழுத் தகவலும் வேண்டுமென்றால் நான் தருகிறேன். ஆங்கில மூலத்துடன் இருக்கிறது. அதை முதலில் படியுங்கள், பின்னர் ஜோதியில் ஐக்கியமாவது பற்றிச் சிந்திக்கலாம்.

சீனா இப்போது வேண்டும் என்றால் உலக அரங்கில் ஒரு பலமான நாடாக இருக்கலாம்

ஆனால் 60 களின் போது ஒரு உலக அரசியலை நிர்ணயிக்கும் நாடாக இருக்கவில்லை..

எமது பிரச்சினை 60 - 70 களிலேயே தொடங்கிவிட்டதே ..அப்போது எப்படி சீனாவும் ஒரு பங்காளி ஆகும்?

ஆரம்பம் இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையில் ஆடிய விளையாட்டு என்று வேண்டுமானால் சொல்லலாம்..(பங்களாதேஷ் போரில்

அமெரிக்காவால் எதையும் கட்டுபடுத்த முடியாத படியால் ..இந்தியாவை கட்டுபடுத்த இலங்கையில் நுழைய பார்த்திருக்கலாம்..

அப்போது இலங்கையை கட்டுபடுத்த இந்தியா எங்களை பகடைக்காய்களாகியிருக்கலாம்)

சீனாவின் வரவு 90 களின் பின்னேயே தான் இருக்கும்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜுட் நன்றி

ஆக்க பூர்வமான சிந்தனையுடன் கட்டுரையை அணுகியிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் இனியும் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே பாக்கு நீரிணைக்கு இருபுறத்திலுமிருக்கும் தமிழர் தேசியத்தை ஒன்றுபடுத்தி அதேவேளை இந்திய நலன்களுக்கும் பங்கமேற்படாத வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தீவிற்குள் சீனாவினதும் பாகிஸ்தானினதும் உள் நுழைவால் தனது செல்வாக்கை இழந்து போய்க்கொண்டிருக்கும் இந்தியாவினது கைகளைப் பலப்படுத்துவதற்கு ஈழத்தமிழர்களின் இந்தியா சார்ந்த நிலைப்பாடே மிக முக்கியமானது. அதாவது இலங்கையில் இந்தியாவினது மக்கட்தொகையொன்று உள்ளது என்ற தோற்றப்பாட்டை உலகின்முன் வைக்கவேண்டிய கடமை ஈழத்தமிழர்களுக்கே உள்ளது. அத்தோற்றப்பாட்டை உருவாக்குதலில் தமிழகம் எமக்கு மிக ஆர்வத்துடன் துணைநிற்கும். இந்திய மாநிலங்களிலும் எமது இணைவுப் போராட்டத்திற்கு வலுச்சேரும்.

இலங்கையின் தற்போதைய குடியேற்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க, தமிழ்நாடும் இந்திய நடுவண்ணரசும் உரிமையோடு அத்தகைய இன ஒழிப்புச் செய்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு என்னும் போர்வையின்கீழ் தமிழர்களுக்குச் செய்யும் அநீதிகளுக்கெதிராக நேரடி நடவடிக்கையில் இந்தியா இறங்குவதற்கு இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான பாத்தியதை உலக அரங்கில் வலுப்பெறவேண்டும். அப்போது சீனாவோ, பாகிஸ்தானோ அதற்கெதிராகச் செயற்படமுடியாத நிலை உருவாகும். ஆனால் இத்தகைய அணுகுமுறையின் தொடக்கப்புள்ளி நம்பக்கத்திலத்தான் இருக்கிறது.

கரு: நீங்கள் சொல்வதை யார் இப்போது முன்னெடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இன்னும் சில மாநிலங்களைப் பற்றி பார்க்கலாம்,

மணிப்பூர் நாகலாந்து மாநிலங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?? அல்லது அவை எங்கிருக்கின்றன என்பதாவது தெரியுமா??

அங்கே பல்லாண்டுகாலமாகச் சுரண்டப்பட்டு வரும் மக்களினது உரிமைப் போராட்டத்தினை "உல்பா பயங்கரவாதிகள்" என்று பெயரிட்டு இன்றுவரை இந்திய மத்திய அரசு அழித்து வருகிறது. ஈழத்தைப் போலவே கைகழுவி விடப்பட்ட இரண்டாம்தரக் குடிமக்களான இந்தியாவின் வட கிழக்கில் வாழும் இந்த மக்கள் தங்களுக்கென்று தனியான தாயகம் கேட்டுப் போராடிவருகிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் அழிவுகளும், இனக்கொலையும்தான். இதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கின்றன. உங்களுக்கு படிக்க விருப்பமிருந்தால் இணைக்கிறேன்.

சரி, காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?? 70 களின் இறுதியிலும், 80 களின் ஆரம்பத்திலும் உயிர்ப்புடன் இருந்த ஒரு தேசிய இனத்தின் போராட்டம் இன்று அழித்துத் துடைத்தெறியப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு. தனியான கலாச்சாரமும், மத வழிபாட்டு முறையும் கொண்ட பஞ்சாப்பிய தேசத்தவர்கள் தங்களின் மீது இந்திய மத்திய அரசுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சுரண்டல் மற்றும் இரண்டாம்தரக் குடிமக்கள் என்கிற பட்டமும் ஏற்படுத்திய வடுவும் சேர்ந்து ஒரு தனிநாட்டிற்கான தேவையை உணர்த்த உருவானதுதான் காலிநஸ்த்தான் விடுதலை இயக்கம். பிந்தரன் வாலே எனும் வீரனின் தலமையில் பஞ்சாப்பிய இளைஞர்கள் ஒன்றினைந்து நடத்திய இந்தத மக்களின் எழுச்சிப் போராட்டத்தினை 1984 இல் இந்திரா அம்மையார் 2009 முள்ளிவாய்க்காலில் அவரது மருமகள் நடத்தி முடித்த நரபலியாட்டத்திற்குச் சற்றும் குறையாத வகையில் ஒரு வெட்டையை நடத்தினார். சீக்கியரின் புனித வணக்கஸ்த்தலமான பொற்கோயிலுக்குள் இராணூவத் தாங்கிகள் அணிவகுக்க உள்நுழைந்த இந்திய இராணுவம் கண்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. பல சீக்கியப் பெண்கள் இந்தியப் பேய்களின் வேட்டைக்கு ஆளாகினர்.ஈறுதியில் பொற்கோயில் கொலைக்களமாக மாற ஒரு தேசிய இனத்தின் எழுச்சியை அழித்த திருப்தியில் இந்திய அரசு பொற்கோயிலை விட்டு வெளியேறியது.

சரி, இவை எல்லாவற்றையும் விட்டு விடுங்கள். எங்கள் தமிழ்நாட்டிற்கு வருவோமே. அங்கே என்ன பாலும் தேனுமா ஓடிக்கொண்டிருக்கிறது. பாத்தி வட இந்தியர்களுக்கு தமிழ்நாடென்று ஒரு மாநிலம் இந்தியாவில் இருப்பதே தெரியாது என்பது உங்களுக்குத் தெரியுமா??? "மதராசிகள்" என்று கீழ்த்தரமாக அழைக்கப்படும் எமது தமிழர்கள் அங்கே இரண்டாம்தரப் பிரஜைகள் என்பதாவது தெரியுமா??? மத்திய அரசில் குப்பை கொட்டினாலும் தமிழ்நாட்டு மந்திரிகளை வட இந்தியர்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது தெரியுமா?? இவை எல்லாவற்றிற்கும் விட இந்தியப் பல்தேசியக் கம்பெனிகளின் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் தமிழ்நாடு பற்றியோ அல்லது, அங்கே தனது வட இந்திய ஆதிக்கமான ஹிந்திய எப்படியாவது நிலை நாட்ட வட இந்தியர்கள் பாடுபடுவது தெரியுமா.

இப்படி இந்திய ஜோதியில் இருக்கும் பெரும்பாலும் எல்லாத் தேசிய இனங்களுமே ஐக்கிய ஜோதியிலிருந்து தம்மை விடுவித்து தனிநாடாக வாழ விரும்பும்போது நீங்கள் மட்டும் ஐக்கிய ஜோதியில் இணையவேண்டுமென்று ஆசைப்படுவது எதற்காக?? இப்படி ஒரு அருமையான யோசனையை ஈழத் தமிழரிடையே விதையுங்கள் என்று உங்களைக் கேட்டது யார்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.