Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏக்கங்களை தந்து போனவள்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்



முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால்
நிலா,
என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள்.


ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு போனால் ஆராவது இறைக்க மெசினிலை குளிச்சிட்டு வந்து வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் போக முதல் அண்ணனுக்கு தேத்தண்ணியும்,கடைக்கு விக்க அம்மா கடலையும் அவிச்சு தருவா கொண்டுபோய் அண்ணனட்டை குடுத்திட்டு ஒரு கறுவாமுட்டாசியை எடுத்து வாயுக்குள்ளை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனால் எதையாச்சும் மறந்த்இருப்பேன் இல்லை என்னிடம் இருக்காது, கலர்பென்சில் எல்லாம் கொண்டுபோவதில்லை இவளின்ரையத்தான் பறிச்சு வரைவது, சாப்பாடு கூட "காக்கா" போல தட்டி பறிச்சு சாப்பிடுவதுண்டு அதை விட பெட்டையள் ஒரு குறூப் பொடியள் ஒரு குறூப்பா பிரிஞ்சு "பூப்பறிக்க போறோம் பூப்பறிக்கப்போறோம் எந்த பூவைப்பறிப்பாய், எந்த மாதம் வருவாய்" என்று கேட்டு அதில் ஏதும் ஒரு பூவை பறிப்பது தான் எமது விளையாட்டு.

 

இப்படி அவளுடனான நெருக்கம் பள்ளி தாண்டியும் தொடரும், எங்களுடைய பொழுதுபோக்கு என்றால் தோட்டம் தான். வருசம் முழுக்க தோட்டத்திலை ஏதும் அப்பா வைப்பார். மாரிக்காய், கோடைக்காய் என்று வெங்காயம், பொயிலைக்கன்று,கத்தரி,மிளகாய் என்று தறையுக்குள்ளை கால் வைக்காத காலம் கொஞ்சமாத்தான் இருக்கும். நாங்கள் சின்னப்பொடியள் எண்டதாலை அம்மாவும்,அப்பாவும் தான் தண்ணி வாக்குறது,புல்லுப்பிடுங்கிறது எல்லாம். அண்ணா வந்து மெசினை பூட்டி இறைப்பான் நான் அக்கா தேத்தண்ணி வச்சு தர,சாப்பாடு கொண்டுபோறது, கிளிக்கு காவல் இருப்பது, மாடு வந்தால் கலைக்குறது தான் வேலை.  இவளின்ரை அப்பாவும் தோட்டம் தான் அதுவும் பக்கத்து பக்கத்து தறை அதனால் இரண்டு குடும்பமுமே நல்ல நெருக்கம்.

 

காலமும் ஓடிக்கொண்டே இருந்தது 1996 சிங்கள இனவெறி ஆமியின் யாழ்வருகை அப்போது தான் எமக்கு ஸ்கொலசிப் பரீட்சை நடந்து கொண்டிருந்து அப்போது  புரியாமல் புதினம் பார்த்துக்கொண்டிருந்தோம். அத்தோடு வேறு பள்ளிக்கூடம் மாறுவதாய் முடிவு பருத்தித்துறையில் ஆமி காம்ப் இருந்ததால் அண்ணா கூட்டிக்கொண்டு போய் வர ஏதும் பிரச்சனை வந்தாலும் என்று என்னை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்கள், அவளும் செல்லையா ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். இரண்டுமே சகோதர பாடசாலைகள் தான் இருந்தும் முன்னர் போல பேசுவதில்லை அவள் பெரிய பிள்ளை ஆனதும் எங்களுக்குள் நெருக்கம் குறைவு.

 

1997 ஊர் பிரச்சனைகளால் வெளிநாடு போக அண்ணா கொழும்பு வர அப்பா கூட்டி வந்தவர் அதனால் நான் பள்ளிக்கூடம் நடந்து தான் போய் வருவது ஆனால் என்ரை நல்ல காலம் இவளின்ரை அண்ணாவும் எங்கண்டை பள்ளிக்கூடத்திலை படிச்சதால் அவர் தான் கூட்டிக்கொண்டு போறது. காலமை அவங்கண்டை வீட்டை போனால் சாந்தன் அண்ணா வெளிக்கிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு போவார். அண்ணாவை அனுப்பிவிட்டு அப்பா கொழும்பில் இருந்து திரும்பி வந்தபின் 8ஆம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு சைக்கிள் எடுத்து தந்தவர், அதுவும் லேடி சைக்கிள் அக்கா,தங்கச்சி யும் இருக்கிறார்கள்  அவர்களும் ஓடுவார்கள் என்று.

 

அதன் பின் நாங்கள் பேசுவது, பார்ப்பது கூட குறைவு, வீட்டில் போனால் கூட ஒரு சிரிப்புடன் சரி o/L முடிந்ததும் அவள் கலைத்துறையைத் தேர்வுசெய்தாள், நான் விஞ்ஞான பிரிவு (பயோ) அதை விட அண்ணா வெளிநாடு போனபின் கடை,தோட்டம் எல்லாம் பார்க்க அப்பா தனிய கடைய விட்டிட்டு தோட்டம் தான் அதுவும் முன்னர் போல இல்லை குறைவு. அப்பாவுக்கு உதவி செய்ய எனக்கும் நேரம் இல்லை பாடசாலையில் மாணவர்தலைவராக எல்லாம் இருந்ததால் ஆசிரியர்கள் கூட போய் விடுவார்கள் நாங்கள் குழப்படி செய்த பொடியள், பிந்தி வந்த பொடியளை எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மறிச்சு வச்சு ஏதும் சிரமதானம் செய்ய வச்சிட்டு வீட்டை வந்து சாப்பிட கூட நேரம் இருக்காது திரும்ப ரியூசனுக்கு போகத்தான் சரி.. அதனாலை அவளை பார்க்கிறதும் இல்லை.

அதை விட பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை அமாவாசையட்டை ரியூசன் படிக்கும் போது ஒருத்தி மேலை ஒருதலைக்காதல் வேறை..

 

அதோடை A/L பரீட்சை முடிவுகள் வந்து நான் ஆசைப்பட்டதே எனக்கு படிக்க வாய்த்தது அவள் இரண்டாவது முறை பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்களின் பின்னர் பேசும் வாய்ப்புக்கிடைத்தது அவளுடைய தங்கையின் சாமத்திய சடங்குக்கு சாந்தன் அண்ணா வீடியோ எடுத்து தர சொன்னான். போட்டோவுக்கு ஆள் வைத்தார்கள் அண்ணா அனுப்பிய வீடியோ கமெரா இருந்ததால் நானே அதை முழுமையாக எடுத்துக்கொடுத்தேன்.

 

அன்று தான் அவளின் கண்கள் எப்போதையும் விட ஒரு மாதிரியாய் இருந்து, நிலா சூரியனை விடச் சுட்டெரித்தது, காதல் வந்த பெண்ணின் கண்களை கம்பன் கூட கவி எழுதிவிடமுடியாது..

ஆனால் அந்த கண்களின் வார்த்தைகளை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறிது காலத்திலேயே குடும்ப சூழ்நிலையால் அவள் திருமணமாகி கனடா வந்துவிட்டாள்.

அதன் பின் என்ன எப்படி என்ற தொடர்பே இல்லை நானும் அவளை மறந்திருந்தேன்.

பழைய நினைவுகள் செல்லரித்த காகிதமாய் அரிக்க அவளை நண்பர்கள் பட்டியலில் சேர்த்தேன்.

 

மறு நாள் மடல் வந்திருந்தது

எப்படி இருக்கிறாய்? என்ன செய்யுறாய்? இப்ப எங்கை இருக்கிறாய்? என்ற நலன் விசாரிப்புக்கள்,பதில்களுடன், என் தொலைபேசி இலக்கமும் வாங்கி இருந்தாள்.

 

அவள் இப்போ மூன்று பிள்ளைகளின் அம்மா முதல் பிள்ளை பெண் குட்டி நிலா, அடுத்து இரண்டு அழகான ஆண்குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள். அழகான,அன்பான குடும்பம்.

ஒருநாள்  தொலைபேசி எடுத்திருந்தால் வழமையான பேச்சுக்களோடு எதிர்பாராத ஒரு கேள்வி கேட்டாள் முந்தி உனக்கு என்னை பிடிக்குமாடா?

 

ஏன் இத்தனை நாளைக்கு பிறகு இந்த கேள்வி கேட்குறாய்?

 

பதில் சொல்லடா..

 

ஓமடி நான் யார் வீட்டையும் போறதில்லை, சாப்பிடுறதில்லை உங்க வீட்டை மட்டும் தானே சாப்பிடுவேன், என்னையும் ஒரு பிள்ளை போல தானே உன்ரை அம்மா,அப்பா பார்த்தவை அதாலை உன்னை மட்டுமில்லை உன்ரை வீட்டை எல்லாரையும் தான்டி பிடிக்கும்.

 

மீதி பேச கூட விடாமல் மறிச்சவள், தீனிபண்டாரம் தின்னுறதிலையே இருக்கிறியேடா என்று திட்டினாள்...

 

என்னாச்சடி உனக்கு எதுக்கடி என்னை பேசுறாய் சின்ன பிள்ளையிலை உன்னோடை  படிச்சதிலை இருந்து மயூரியோடை சாமத்திய வீட்டுக்கு நீ போட்டு வந்த செவ்விளநி கலர் பஞ்சாபிவரை ஞாபகம் இருக்கு, அன்றைக்கு பார்த்த உன்னோடை கண் கூட மறக்க முடியாதடி..

 

ஆமா ஏன் கேட்கிறாய்?

 

எதிர்முனையில் மௌனம்..  அழுதாள்..

உண்மையில் எனக்கு போனை கட்பண்ணவா.. பாவம் அழும் போது விட்டுபோவது நல்லாவா இருக்கும்.. புரியாத உணர்வுகள் எனக்கு..

 

மௌனம் கலைத்து ..அப்ப ஏன்டா சொல்லவில்லை?

 

எதை? என்ன சொல்லவில்லை? எனக்கு புரியவில்லை  !!

 

உனக்கு பிடிக்கும் என்பதை..!

 

நான் தான் அதிகம் உன்ரை வீட்டை வாறனான் தானே நீயாவது சொல்லியிருக்கலாம் தானே..

 

நான் எப்படி சொல்ல?

 

அதை மாதிரித்தான் நானும் எப்படி சொல்ல?

 

நான் உன் வீட்டை சாப்பிட்டிருக்கிறேன். உன் வீட்டை என் கால் படாத இடமே இல்லை.

அதை விட உன் அண்ணா அவங்களோடை தான் தினமும் விளையாடுறது, நாளைக்கு இரண்டு வீட்டுக்காறரும் முகத்தை பார்க்கணும், உனக்கு தெரியும் தானே உன் அப்பாவும் எங்க அப்பாவும் எப்படி என்று எங்கை கண்டாலும் அண்ணை,அண்ணை என்று பழகுபவர்கள் அதை விட எல்லாருக்கும் என்னை தெரியும் இப்படி பழகிட்டு இப்படி செய்திட்டான் என்று நான் கெட்ட பெயர்வாங்க முடியாது.. மனதிலிருந்த அத்தனையும் கொட்டி தீர்த்துவிட்டேன்..

 

மறுபடியும் எதிர்முனையில் அழுகை, காரணம் தெரியவில்லை அந்த நொடி கொதிநீரின் வெப்பத்தையும் தாண்டி என்கண்களிலும் கண்ணீர் துளி..

 

இதுக்கு தான் கேட்டேன் நன்றியடா..

 

மௌனம் மட்டுமே பதிலாய் நான்.

 

ஜ மிஸ் யு டா..

 

நான் பிள்ளைய கூட்டிட்டு வர போறேன்.

 

சரி .. நானும் ஒருக்கா கடை பூட்டி போட்டு போஸ்ட் ஒஃபிஸ் பூட்ட முதல் ஆத்துக்காரிக்கு பாசல் அனுப்பிட்டு வாறேன்.

 

........................முற்றும்.....................

 

ஜீவா

30.12.2012

 

 

  • Replies 66
  • Views 7.2k
  • Created
  • Last Reply

ஜீவா நீங்கள் எழுதிய கதை வாழ்த்துக்கள் ..........நேரம் கிடைக்கும் பொது ஆறுதலாக வாசிப்பேன் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஜீவா சூப்பர்

செம touching

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை மீட்டும் போது மெளனமாய் ஒரு காதல்.........நல்லாய் இருக்கு . :)

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே, ஜீவாத் தம்பி, உங்களில தான் பிழை போலக்கிடக்கு! :D

என்ன இருந்தாலும், நீங்க ஆம்பிளைப்பிள்ளை தானே!

சாடை மாடையாக எண்டாலும், சொல்லிப் பார்த்திருக்கலாம்!

நல்ல அனுபவப் பகிர்வு, ஜீவா! 

மிச்சங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்! :o

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா இது அனுபவப் பகிர்வோ.. ஜீவா.

 

நல்ல கதையாக்கம். :)

 

ஆனாலும் ஒரு நெருடல்.. 3 பிள்ளை பெத்த பிறகும்.. ஒரு பெண் அழுகிறாவா..?????! அப்படின்னா.. அந்த கணவனோட உள்ள வாழ்க்கை... பொய்யான வாழ்க்கையா..?????! என்னமோ ஏதோ நடக்குது இந்த உலகத்தில. ஒன்னுமே புரியுதில்ல..! :lol:



உங்களின் கதை என்ற படியால் ஒருக்கா வாசிச்சுப் பார்த்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நினைவுப்பதிவு ஜீவா...தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்கள் உண்மைக் கதை நன்றாக இருக்கிறது. இப்படி எத்தனையோ பேருடைய வாழ்க்கை திசைமாறிப் போய்விடுவதுண்டு. ஆனாலும் நினைவு இழக்கும் வரை நினைவோடு கலந்துமிருக்கும். நன்றி.

ஜீவா அண்ணா, போன தடவை எழுதியதை விட இந்த முறை உங்கள் அனுபவ பகிர்வை மிக மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். நல்ல முன்னேற்றம். வாழ்த்துகள். தொடர்ந்தும் எழுதுங்கள். :)

வாசிக்கும் போது முடிவில் கவலையாக உள்ளது. மனதில் மிகுந்த பாசமுள்ளவர்கள் சேராமல் விட்டது கவலை.

உங்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டிலும் ஒரு தடவை நீங்கள் பேசி பார்த்திருக்கலாம். சிலவேளை நன்றாக பழகிய பையன், நல்ல பையன் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உங்கள் இருவரையும் சேர்த்து வைத்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும்.
 

ஆனாலும் ஒரு நெருடல்.. 3 பிள்ளை பெத்த பிறகும்.. ஒரு பெண் அழுகிறாவா..?????! அப்படின்னா.. அந்த கணவனோட உள்ள வாழ்க்கை... பொய்யான வாழ்க்கையா..?????! என்னமோ ஏதோ நடக்குது இந்த உலகத்தில. ஒன்னுமே புரியுதில்ல..! :lol:

 

எனக்கும் இந்த விடயத்தில் நெருடலாக இருந்தது. ஆனால் அதற்காக அந்த பெண் கணவனுடன் வாழும் வாழ்க்கை பொய்யானது என்று என்னால் கருத முடியவில்லை. யாரை திருமணம் செய்திருந்தாலும் முதல் காதல் முதல் காதல் தான் (காதலை சொல்லியிருக்காவிட்டாலும்).

 

முதல் காதலையும், அதன் நினைவுகளையும் மறக்க முடியாது.

ஆனாலும் திருமணம் ஆகிவிட்டதால் இருவர் குடும்பங்களிலும் பிரச்சினை வராத முறையில் இனி பழகுங்கள் ஜீவா அண்ணா. அவர் தவறாக கதைக்க முற்பட்டாலும் நீங்கள் தகுந்த ஆலோசனை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதற்காக அப்படி கதைப்பார் என்று சொல்லவில்லை. ஆனாலும் ஓர் முன் யோசனை. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த விடயத்தில் நெருடலாக இருந்தது. ஆனால் அதற்காக அந்த பெண் கணவனுடன் வாழும் வாழ்க்கை பொய்யானது என்று என்னால் கருத முடியவில்லை. யாரை திருமணம் செய்திருந்தாலும் முதல் காதல் முதல் காதல் தான் (காதலை சொல்லியிருக்காவிட்டாலும்).

 

முதல் காதலையும், அதன் நினைவுகளையும் மறக்க முடியாது.

ஆனாலும் திருமணம் ஆகிவிட்டதால் இருவர் குடும்பங்களிலும் பிரச்சினை வராத முறையில் இனி பழகுங்கள் ஜீவா அண்ணா. அவர் தவறாக கதைக்க முற்பட்டாலும் நீங்கள் தகுந்த ஆலோசனை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதற்காக அப்படி கதைப்பார் என்று சொல்லவில்லை. ஆனாலும் ஓர் முன் யோசனை. :)

 

வெளிப்படாத எண்ணங்கள். உள்ளத்துக்குள்ளேயே அமுங்கிப் போன காதல். அதைக் கடந்து ஒரு இல்வாழ்க்கை. அதில் கணவன் என்ற ஒரு உறவு. அவனோடு ஒரு வாழ்க்கை. அதைக் கடந்து மீண்டும் ஒரு சந்திப்பு.. அதில்.. சிலவற்றை சிலாகிக்கலாம்.. அது தப்பும் இல்ல தவறும் அல்ல. ஆனால்.. ஒரு பெண் கண்ணீர் சிந்திறான்னா...????! அதற்கு அர்த்தம் என்ன.. அதிலும்.. கதையின் போக்கு.. என்னவோ.. அவா இன்னும் இவரை காதலிப்பது போல ஒரு அழுத்தத்தோடு போவதாகப் பட்டது.! அதுதான் இந்த நெருடல் வரக் காரணமாக இருந்தது. மற்றும்படி.. உலகத்தில இதெல்லாம் சகஜம் என்று சொல்லிட்டுப் போயிடலாம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவா! பின்னீட்டியள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. என்னத்தை சொல்லுறது.. :D ஆண்களில் பலர் ரியூப் லைட்கள்தான்.. வழக்கமா வாழ்க்கை இப்பிடியேதான் போகும்.. :D

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் ஜீவா.. :rolleyes:

நீங்கள் கொண்டுவர நினைத்த உணர்வுகள் அப்படியே தத்ரூபமாக வெளிவந்துள்ளன. பாராட்டுக்கள் ஜீவா
 
அனேகமாக இவ்வாறான ஒரு அத்தியாயம் அனேகரின் வாழ்வில் வந்துபோயிருக்கும். அத்தோடு காலாதிகாலமாக இத்தகைய அத்தியாயங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன. இருப்பினும் புலப்பெயர்வைத் தொhடர்ந்து இந்த அத்தியாயம் எங்களிற்குள் சற்று அபரிமிதமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்கு வெளிப்படையான காரணங்களாக, முன்னர் பேசாப்பொருளாக இருந்த பல முனைகளைப் பேசுவதற்குரியதாய் எமது சமூகம் மாறியதையும், பேஸ்புக் முதலான இணையத்தள முனைகளையும், இதர கலாச்சாரங்களோடான பரிட்சயத்தையும், வேலை முதலான மாற்றங்களையும் கூறலாம். எனினும், எங்களிற்குள் மேற்படி அத்தியாயம் அபரிமிதமாக வெளிப்படுவதற்கு இந்த வெளிப்படைக் காரணங்களின் பங்கு சொற்பமானதென்றே எனக்குப் படுகிறது. வேறு ஒரு காரணம் இந்த வெளிப்பாட்டில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது என்று எனக்குத் தோன்றுகின்றது.
 
காதல் கற்பனை என்று இருந்த கனவு ஆவர்த்தனத்தில் இருந்து கலியாணம் குடும்பம் என்ற நடைமுறை ஆவர்த்தனத்திற்குள் வாழ்வு மாறி;, அதைத்தொடர்ந்து வாழ்வின் சுமைகள், பொறுப்புக்கள், கனவிற்கு நேரமற்ற சராசரி ஓட்டங்கள் என்றாகிப்போகும் நிலையில் மனம் ஒரு கனவிற்காக அல்லது போதைக்காக ஏங்குவது மனித இயல்பு. இது இன்று நேற்று வந்ததில்லை. ஊரில் சிறுவனாக, எங்கள் அம்மம்மா வயதொத்த ஆச்சிமார் விட்ட பெருமூச்சுக்களையும் அழகியல் நிறைந்த வர்ணிப்புக்களையும் நிறையவே கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள். ஆனால் புலப்பெயர்வு இதில் ஒரு புதிய குணகத்தை உள்நுழைக்கிறது. நான் நினைக்கிறேன் இந்தக் குணகமே புலம்பெயர்வாழ்வில் எங்களிற்குள் மேற்படி அத்தியாயம் அபரிமித உணர்வுகளோடு வெளிப்பட்டுக்கொண்டிருப்பதன் காணரம்;.
 
அதவாது, காதல் கவர்ச்சி என்ற நிலையில் இருந்து முறிக்கப்பட்டு வேறெவருடனேனும் சோடி சேர்க்கப்படுவது ஊரிலும் நடந்தது தான். ஆனால், அவ்வாறு சோடி மாறியவர்களின் வாழ்வு பெரும்பாலும் ஒரே தளத்தில் அருகருகாக ஒன்றாகத் தான் வழர்ந்தது நகர்;ந்தது. அதிக பட்சம் வேறு ஊர் கொழும்பு என்று சென்று சென்றவர்கள் கூட கோவில்த் திருவிழா மற்றும் குடும்ப விசேடங்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தார்கள். தங்கள் இளம்பராயக் கவர்ச்சிகளும் தங்களைப் போலவே குடும்பம் வயதென்று வழர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஆனால் எங்கள் தலைமுறைக்கு என்ன நடந்தது என்றால், நாங்கள் காதலித்தவர்களை, எங்களைக் கவர்ந்தவர்களை இடையில் விட்டுவிட்டு ஒவ்வொரு நாடுகளிற்கு நாங்கள் புலம்பெயர்ந்தோம். ஒரே நாட்டிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் கூட சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கவில்லை.  இந்நிலையில், எங்கள் கவர்ச்சிகள் வளராது, எங்கள் மனங்கள் சிருஸ்ட்டித்த அழகின் உச்சத்தில் அவை அப்படியே சட்டத்திற்குள் மாட்டப்பட்ட புகைப்படம்போல் நின்று கொண்டன. எங்கள் வயதின் வாழ்வின் தடங்களை நாங்கள்; கண்ணாடியில் பார்க்கும் போதும், வாழ்வு சுமையாகும் போதும், மனதின் ஏதோ ஒரு மூலையில் சட்டத்திற்குள் தொங்கிக் கொண்டிருந்த பால்யக் கவர்ச்சிகள் ஒரு எஸ்கேப்பிசம் நோக்கிய வேட்கையினை எங்களிற்குள் தோற்றுவிக்கின்றன. நடைமுறையின் நோவுகள், விபரங்கள்;, சுமைகள் எல்லாவற்றையும் தாண்டி, சட்டத்திற்குள் தொங்கும் கவர்ச்சி ஒரு அப்ஸ்ற்றாக்ற்றாக, எங்களிடம் இருந்து எந்த முனைதலையும் கோராததாக, மயிலிறகால் வருடிக்கொண்டு நீல நிறப் புடைவையில் (பெண்கள் உங்களிற்கேற்றபடி மாற்றிக்கொள்ளுங்கள்) ஆடும் இளையவளாய் எங்களிற்கு ஒரு இளைப்பாற்றத்தைத் தருகிறது. வாழ்வு மூச்சிரைக்கப்பண்ணும் போதெல்லம் நீலநிறச் சேலை சீன் மனதிற்குள் வந்துவிடுகிறது. எமது கையிருப்பு வாழ்வினை விட அந்த வாழ்வு தேவலோகம் போன்று இருந்திருக்குமு; என்று எமது மனம் எம்மை நம்பப்பண்ணுகிறது. நான்நினைக்கிறேன் புலத்தில் ஓட்டோகிறாப் அத்தியாயம் அடிக்கடி பலம்பெற்று மீ;ட்டப்படுவதற்கு இதுவே காரணம்.
 
இங்கு மனத்தின் ஆழத்தில்  ஆர்ப்பரிக்கும் அந்த ஆசை அல்லது ஏக்கம் என்பது உண்மையில் குறித்த ஒரு நபர் நோக்கியது அல்ல. மாறாக, கடந்து வந்துவிட்ட ஒரு காலம் சார்ந்தது. வாழ்வதற்கான முனைதல்களின் கழைப்பில், முனைதல் தேவையற்ற ஒரு கடந்தகாலம் பற்றியது.
 
இந்த உணர்வை நாங்கள் இனம்புறித்து நாடிபிடித்து அறிந்துகொள்வது அவசியம். அல்லாதுபோயின், இருக்கிற வாழ்வினை எறிந்துவிட்டு எதையேனும் நோக்கி ஓட வேண்டிய கூச்சல் உள்ரூரக்கேட்டபடி இருக்கும். அவ்வாறு அந்தக் கூச்சலிற்குச் செவிசாய்த்து நாங்கள் ஓடிப்போய் கடந்து வந்ததைத் திருப்பப் பற்றிக்கொண்டால் சொற்ப நாட்களில் சலிப்பு மீண்டும் தொற்றிக்கொள்ளும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஏனெனில் நாங்கள் ஏங்குவது குறித்த நபர்களிற்காக அல்ல, கடந்து வந்துவிட்ட காலத்திற்காக.
 
வாழ்வில் போதையிருப்பதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், அந்தப் போதை எமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டுமாயின், எம்மையும் எமது போதையினையும் நாம் புரிந்துகொள்வது அவசியம் என்பது எனது அபிப்பிராயம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஜுவா

வெளிப்படாத எண்ணங்கள். உள்ளத்துக்குள்ளேயே அமுங்கிப் போன காதல். அதைக் கடந்து ஒரு இல்வாழ்க்கை. அதில் கணவன் என்ற ஒரு உறவு. அவனோடு ஒரு வாழ்க்கை. அதைக் கடந்து மீண்டும் ஒரு சந்திப்பு.. அதில்.. சிலவற்றை சிலாகிக்கலாம்.. அது தப்பும் இல்ல தவறும் அல்ல. ஆனால்.. ஒரு பெண் கண்ணீர் சிந்திறான்னா...????! அதற்கு அர்த்தம் என்ன.. அதிலும்.. கதையின் போக்கு.. என்னவோ.. அவா இன்னும் இவரை காதலிப்பது போல ஒரு அழுத்தத்தோடு போவதாகப் பட்டது.! அதுதான் இந்த நெருடல் வரக் காரணமாக இருந்தது. மற்றும்படி.. உலகத்தில இதெல்லாம் சகஜம் என்று சொல்லிட்டுப் போயிடலாம். :)

 

திருமணத்தின் பின்னர் இவ்வாறு கதைத்து கண்ணீர் விட்டது எனக்கும் தவறாக தான் படுகிறது. ஒருவேளை கணவன் ஏதும் கொடுமை புரிபவராக இருந்து அந்த நேரம் இவரை திருமணம் செய்திருந்திருந்தால் தான் நன்றாக இருந்திருப்பேனோ என்று நினைத்திருப்பாரோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் இருவரும் திருமணம் செய்தவர்களாக உள்ளபடியால் இக்கேள்வியை தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் ஊகங்கள் அடிப்படையில் நான் கதைக்க கூடாது. வேறு காரணங்களும் இருக்கலாம். அல்லது காரணங்கள் எதுவும் இல்லாமல் அப்பாவி தனமாக கேட்டும் இருக்கலாம். தெரியவில்லை. அந்த பெண் ஜீவா அண்ணாவுக்கு சொன்னால் தான் தெரிய வரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தின் பின்னர் இவ்வாறு கதைத்து கண்ணீர் விட்டது எனக்கும் தவறாக தான் படுகிறது. ஒருவேளை கணவன் ஏதும் கொடுமை புரிபவராக இருந்து அந்த நேரம் இவரை திருமணம் செய்திருந்திருந்தால் தான் நன்றாக இருந்திருப்பேனோ என்று நினைத்திருப்பாரோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் இருவரும் திருமணம் செய்தவர்களாக உள்ளபடியால் இக்கேள்வியை தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் ஊகங்கள் அடிப்படையில் நான் கதைக்க கூடாது. வேறு காரணங்களும் இருக்கலாம். அல்லது காரணங்கள் எதுவும் இல்லாமல் அப்பாவி தனமாக கேட்டும் இருக்கலாம். தெரியவில்லை. அந்த பெண் ஜீவா அண்ணாவுக்கு சொன்னால் தான் தெரிய வரும். :)

 

அந்த நீண்ட அழுகையின் அர்த்தமும்.. நீ என்னை விரும்பினியாடா.. மிஸ் யூ டா.. போன்ற பதங்களின் அழுத்தம் திருத்தமும்.. கொஞ்சம் நெருடலுக்கான பாதையை வகுக்கின்றன. இருந்தாலும்.. இவரைத் திருமணம் செய்தாப் போல.. இவர் அந்தக் கணவனை விட நல்லா வைச்சிருந்திருப்பார் என்பது கற்பனை மட்டுமே. இவர் அவரை விடக் கொடுமையா இருந்திட்டா..???! ஒரு திருமணம் ஆன.. பிள்ளைகள் உள்ள.. குடும்பப் பெண்ணிடம்.. அப்படியான எண்ணத் தூடலும் தவறே. ஒருவேளை அதற்கான காரணங்கள் இருப்பின் அதனையும் ஏன் மறைப்பான். ஏற்கனவே காதலை மறைச்சு... அழுகிறதை விட.. விடயங்களை நேரிடை பகிர்ந்து ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறப்பு.

 

சந்தேகங்கள்.. ஒப்பீடுகள்.. நிஜத்துக்கு அப்பாலான கற்பனைகள்.. வாழ்கையின் வாழ்க்கைக் காலத்துள்ளான சீரான வாழ்வியல் நீரோட்டத்தில் சலசலப்பையும் தேவையற்ற குழப்பங்களையும்.. அமைதியின்மைகளையும்... மகிழ்ச்சி இன்மைகளையும் தோற்றுவிக்கும். மன அழுத்தத்திற்கும் இட்டுச் செல்லும்.

 

ஜீவா.. நிறைய பக்குவப்பட்ட ஒருவர். அதுவும் ஒரு முன்னாள் மருத்துவ மாணவன்... என்ற வகையில் நிச்சயம் இவ்வாறான விடயங்களை உளவியல் கொண்டு.. பக்குவமாகக் கையாள்வார் என்றே நினைக்கிறேன். இது உண்மைக் கதையென்றால் மட்டும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
இவர் அந்தக் கணவனை விட நல்லா வைச்சிருந்திருப்பார் என்பது கற்பனை மட்டுமே. இவர் அவரை விடக் கொடுமையா இருந்திட்டா..???!

 

இதிலை டவுட் வேறையா? :D

அந்த நீண்ட அழுகையின் அர்த்தமும்.. நீ என்னை விரும்பினியாடா.. மிஸ் யூ டா.. போன்ற பதங்களின் அழுத்தம் திருத்தமும்.. கொஞ்சம் நெருடலுக்கான பாதையை வகுக்கின்றன. இருந்தாலும்.. இவரைத் திருமணம் செய்தாப் போல.. இவர் அந்தக் கணவனை விட நல்லா வைச்சிருந்திருப்பார் என்பது கற்பனை மட்டுமே. இவர் அவரை விடக் கொடுமையா இருந்திட்டா..???! ஒரு திருமணம் ஆன.. பிள்ளைகள் உள்ள.. குடும்பப் பெண்ணிடம்.. அப்படியான எண்ணத் தூடலும் தவறே. ஒருவேளை அதற்கான காரணங்கள் இருப்பின் அதனையும் ஏன் மறைப்பான். ஏற்கனவே காதலை மறைச்சு... அழுகிறதை விட.. விடயங்களை நேரிடை பகிர்ந்து ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறப்பு.

 

சந்தேகங்கள்.. ஒப்பீடுகள்.. நிஜத்துக்கு அப்பாலான கற்பனைகள்.. வாழ்கையின் வாழ்க்கைக் காலத்துள்ளான சீரான வாழ்வியல் நீரோட்டத்தில் சலசலப்பையும் தேவையற்ற குழப்பங்களையும்.. அமைதியின்மைகளையும்... மகிழ்ச்சி இன்மைகளையும் தோற்றுவிக்கும். மன அழுத்தத்திற்கும் இட்டுச் செல்லும்.

 

ஜீவா.. நிறைய பக்குவப்பட்ட ஒருவர். அதுவும் ஒரு முன்னாள் மருத்துவ மாணவன்... என்ற வகையில் நிச்சயம் இவ்வாறான விடயங்களை உளவியல் கொண்டு.. பக்குவமாகக் கையாள்வார் என்றே நினைக்கிறேன். இது உண்மைக் கதையென்றால் மட்டும்..! :)

 

ஆம். இவ்விடயத்தை ஜீவா அண்ணா நிதானமாக யோசித்து கையாள வேண்டும். அதை தான் நானும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

 

எதிர்கால உரையாடல்கள் தவறாக அமையும் பட்சத்தில் அதை உடனே கண்டு கொண்டு விலத்த வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்திற்குள் பிரச்சினை வந்து விடும். வெள்ளம் வருமுன் அணை கட்டுவதே சிறந்தது.

ஜீவா - நல்லதரமான கதை.

 

அந்த பெண்ணிற்க்கு உங்களை பார்க்க பச்சையாக தெரிகின்றது

 

வாழ்க்கையை அனுபவிக்க முதலே கட்டிவைத்துவிட்டார்கள்,  23-26 வயதில் 3 பிள்ளைகள்? படித்திருக்கவுமாட்டா

 

போன இடத்தில் மற்றவர்களுடனான உறவுகள் எப்படியோ? இதனால் அவரின் மனமும் பாதிக்கப்பட்டிருக்கும்.

 

மனித மனங்கள் எதற்க்கும் திருப்திப்பட்டது கிடையது

 

அவரின் தொடர்பை துண்டியுங்கள், அப்பதான் உங்கள் வாழ்க்கை சந்தேகமின்றி சந்தோஷமாக இருக்கும். இப்படிப்பட்ட தொடர்பு இன்றில்லாவிடிலும் என்றோ ஓருநாள் உங்கள் கழுத்தை நெரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா...ஏன்டா இதற்குள் வந்தேன் என்று இருக்கு...

ஆண்டவா...ஏன்டா இதற்குள் வந்தேன் என்று இருக்கு...

 

கள்ளத்தொடர்பை எழுதின மாதிரியல்லவா நீங்கள் பதைபதைக்கின்றீர்கள் :rolleyes: .

  • கருத்துக்கள உறவுகள்

நானா இருந்திருந்தா கனடாக்கு டிக்கெட் போட்டு இருப்பன் :(:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பா மச்சி அந்த பொண்ணுக்கு நல்ல ஒரு நண்பனா இருக்கலாம் இருப்பாய் all the best

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.