Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முயல் பிடிக்கிற நாயை......

Featured Replies

அதிகாலை ஐந்துமணிக்கு ஆறு நிமிடங்கள் இருக்கையில், எங்கள் அணி தாக்குதலுக்கான நகர்வை தொடங்கி இருந்தது.

 

எங்கள் அணியில் மொத்தம் ஐந்து பேர் தான். இருட்டுக்குள் உருமறைபுக்காக கறுப்பு ரிஷேர்டும் கறுப்பு களுசானும் அணிந்திருந்தோம். நாங்கள் அவ்வளவு வெள்ளை இல்லை என்றாலும் வழக்கமான தாக்குதல் பாணிக்காக முகத்துக்கு கொஞ்சம் கரியும் தடவி இருந்தோம்.

 

மார்கழி மாத அதிகாலை பனி ஆட்களை கொல்லுமளவுக்கு குளிரும். நான் வடக்கு பக்கத்தில் இருந்து பனித்துளியுடன் கூடிய புற்களுக்கு நடுவாக  இலக்கை நோக்கி நகர்ந்து இல்லை ஊர்ந்து கொண்டிருந்தேன். எங்களுக்குள் எந்த விதமான தொடர்பாடல்களும் இல்லை அதற்கான வசதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

வயிற்றை நிலத்துடன் வைத்து முழங்கால்களினால் நகர்ந்து கொண்டிருந்தேன். கண்கள் இலக்கை நோக்கியபடியே இருந்தன. களுசானுக்கு கீழே தொடைகளை பதம்பார்த்தன மாண்டான் நுளம்புகள். ஊசியால் குத்துற மாதிரி குத்தும். அதை விட கொடுமை காதுக்குள்ளே வந்து க்நோயஈ....... என்று அது போடும் சத்தம். அந்த சத்தத்தை இப்படி எழுதுவதை தவிர வேறு எப்படி விவரிக்க முடியும் என்று எனக்கு தெரியாது.

 

இரண்டு நாட்களுக்கு முதல் நானும் கரனும்  வேவு எடுக்க வந்திருந்த போதும் அப்படி தான். கடிச்சாலும் பரவாயில்லை. காதுக்குள்ளே அது போடும் சத்தத்தை தாங்க முடியாது. கரன் சொல்லுவான், மச்சான் இந்த நுளம்பு மட்டும் ஒரு பூனை அளவு இருக்கும் என்றால் அதை பிடிச்சு கல்லாலையே குத்தி கொல்லுவேன் என்று அவ்வளவு அரியண்டம்.

 

கொஞ்சம் சேறு கலந்த இருவாட்டி மண், உடம்பெல்லாம் சேறு இலக்கு இன்னும் 25 மீட்டர் தான். மற்றவர்கள் வருவதற்கு முன் நான் போய்விட வேண்டும் என்று விரைவாக ஊர்ந்தேன். அதைவிட முக்கியம் விடிவதற்கு முன் தாக்குதலை முடிக்க வேணும். இன்னும் ஏறத்தாழ ஐம்பது  நிமிடங்களில் விடிந்துவிடும். எனக்கு தடை என்று  இன்னும் இருப்பது அந்த கறல் பிடிச்ச முள்ளுக்கம்பி வேலி தான்.

 

கையில் இருந்த குறட்டை கொண்டு என் பலம் கொண்ட மட்டும் அழுத்தி கம்பியை வெட்டினேன். அதை மடித்து ஆள் போக கூடிய அளவு ஓட்டையை உருவாக்கினேன். மெதுவாக அதனூடாக நகர்ந்தேன். இருந்தும் முதுகிலே சின்ன கீறலை அந்த கறல் பிடிச்ச கம்பி போட மறக்கவில்லை. இனி இதுக்கு பொக்கிளை சுத்தி இருபத்தி மூண்டு ஊசி போடவேணும். அப்பவே சொன்னேன் இந்த தாக்குதல் எல்லாம் எனக்கு சரி வராது என்று கேட்டால் தானே.

 

தூரத்தில் மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. ஆட்கள் எழும்பிட்டான்கள் போல. மெல்லிதான பேச்சு குரலும் கேட்டது. வேகமாக இலக்கை நோக்கி நகரத்தொடங்கினேன். நான் இலக்கை அடையும் நேரம் எங்கள் அணியை சேர்ந்த மற்ற தோழர்கள் அங்கே தங்கள் வேலையை தொடக்கி இருந்தார்கள்.

 

அவைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக பொறுக்கி கொண்டிருந்தார்கள்.

 

ஓ .. உங்களுக்கு சொல்ல மறந்த்திட்டேன். எங்கட தாக்குதல் திட்டத்தை.

 

கள்ள விளாம்பழம் வீட்டுக்காரனுக்கு தெரியாமல் பொறுக்கிறது தான் எங்கட இன்றைய தாக்குதல் திட்டம்.

 

என்ர முதாலவது களவு அது தான்.

 

நானும் வேகமாக பொறுக்கி என்ர பள்ளிக்கூட பையுனுள் நிரப்பினேன். நிரப்பும்போதே விளாம்பழத்துக்குள் சீனியை குழைச்சு அடிக்கிற மாதிரி கனவுகள் வேற. அதை விட வீட்டை கொண்டு போனால் தம்பி அண்ணா தங்கச்சி எண்டு பாக்க பிரிவனை செய்யும்போது பெரிய விளாம்பழம் எடுக்க வேண்டும் என்று எண்ணமும் எனக்கு ஓட தொடங்கியது.

 

வீடுக்காரனின் சுவருக்கு பக்கத்தில் நிறைய விளாம்பழங்கள் விழுந்து கிடந்தன. ஆசை ஆரைத்தான் விடும் நான் போய் அதுகளை அள்ளி நிரப்பினேன். விடியக்காலமை வேற ... நிறைய  நேரம் பதட்டம்...வேற.. முதல் களவு பயம் வேற.. அந்த நேரம் பார்த்து தான் அடக்க முடியாமல் *.த்திரம் வேற வந்தது.

சரி.. பள்ளிக்கூட பையை தள்ளிவைச்சிட்டு (தண்ணி படாமல்) வீட்டுக்காரனின் சுவரிலே கோலம் போடுவம் என்று களுசானை இறக்கி போட்டு ஒரு அருமையான சுகத்தை அனுபவிச்சு கொண்டு இருக்கேக்க...  எங்கட அணி ..ச்சே ..இனி என்ன அணி... எங்கட ஒரு பரதேசி ரொம்ப நேரமாக அடக்கி வைச்ச தும்மலை அந்த நேரம் பார்த்து விட்டான்.

 

அவன் தும்மவும் வீட்டுக்காரன் வாயிலே பிரஸ்ஸை வைச்சு கொண்டு வாசலுக்கு வரவும், என்ர உச்சக்கட்டமும் ஒரே நேரத்தில் நடக்கிறதை எங்கட ஊரிலே விதி எண்டு தான் சொல்லுவாங்கள். உங்கட ஊர்ல என்னெண்டு சொல்லுவாங்கள் என்று எனக்கு தெரியவில்லை.

 

பிறகென்ன மிச்ச சீனை... உங்களுக்கே விடுகிறேன்.

 

இப்போ விடிந்துவிட்டது. என்னை ஒரு கயிற்றினால் விளா மரத்தோடு கட்டி வைச்சிருக்கிறாங்கள். என்ர பள்ளிக்கூட பையை கவிட்டு  கொட்டி விளாம்பழங்கள் குவிச்சு கிடக்குது.

என்னை தவிர மிச்ச எல்லாரும் ஓடிட்டாங்கள்.  கிட்ட வந்து பார்த்தான் வீட்டுக்காரன். டேய் ..நீ..ரீச்சரிண்ட மகனேல்லோ...ஓம் அண்ணே.. வேற என்னத்தை நான் சொல்ல ..என்னை மாதிரி அவவுக்கும் ஒரு மகன் இருக்கு என்று சொன்னால் என்னை கட்டி வைச்சு உரிப்பான். அதைவிட அம்மாவிண்ட பேரைச்சொல்லி தப்பிவிடலாம்.

 

அவன் மன்னிச்சு விட்டுவிட்டான். ஆனால் போகும் போது ஒரு வார்த்தை சொன்னான் அதை தான் தாங்க முடியவில்லை.

 

டேய் ..களவெடுக்கிறத்துக்கும் ஒரு மூஞ்சை வேணும்டா..  என்றான்...

 

 

களவு தொடரும் ...

 

  • Replies 57
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முயல் பிடி க்கிற ..............சிரிச்சு ..ஒரே  வயிற்று  வலி . பச்சை முடிந்துவிட்டது அப்புறமாய்  வா ரேன். எப்படி மற்றவர்களை சிரிக்க் வைக்க முடிகி றது. நல்ல நகைச்சுவை.........நுளம்பின் சத்தத்தை ............உயிங் (uying )

ரீங்க்காரம் என்று சொல்வார்கள்.........நன்றி

நானும் பகல் ஏதோ பெட்டி அடிச்சுப்போட்டுது எண்டு வந்தால் ஒரு பிசுக்கோத்து விளாம்பழத்துக்கு இவ்வளவு பில்டப்  :lol:  :lol: .  ஏன் இந்த தேவையில்லாத வேலை  :D :D ??? வர வர சனத்தை நல்லாய் கடுப்படிக்கிறியள் :lol: .  வாழ்த்துக்கள் பகலவன் .

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் என்ன ஏதோ என்று நினைச்சிட்டன்.

காணாமல் போன ஆளாச்சே .. உண்மையா ஏதோ வேவுக்கு போன கதை என்று பார்த்தால்...... :rolleyes:

 

நகைச்சுவை தூக்கலாக இருக்கிறது. கெதியா எழுதுங்கோ ஆவலுடன் காத்திருக்கிறன். :)

  • தொடங்கியவர்

முயல் பிடி க்கிற ..............சிரிச்சு ..ஒரே  வயிற்று  வலி . பச்சை முடிந்துவிட்டது அப்புறமாய்  வா ரேன். எப்படி மற்றவர்களை சிரிக்க் வைக்க முடிகி றது. நல்ல நகைச்சுவை.........நுளம்பின் சத்தத்தை ............உயிங் (uying )

ரீங்க்காரம் என்று சொல்வார்கள்.........நன்றி

 

நன்றி நிலா அக்கா. மற்றவர்களை சிரிக்கவைப்பதிலும் ஒரு ஆத்மதிருப்தி தான் அக்கா.

 

நானும் பகல் ஏதோ பெட்டி அடிச்சுப்போட்டுது எண்டு வந்தால் ஒரு பிசுக்கோத்து விளாம்பழத்துக்கு இவ்வளவு பில்டப்  :lol:  :lol: .  ஏன் இந்த தேவையில்லாத வேலை  :D :D ??? வர வர சனத்தை நல்லாய் கடுப்படிக்கிறியள் :lol: .  வாழ்த்துக்கள் பகலவன் .

 

 

நீங்கள் எல்லாம் அப்படி நினைப்பீங்கள் என்று தெரிஞ்சு தானே பெட்டி அடிக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் நல்லவன் என்று நம்புறது  :lol: நன்றி கோ.

 

நானும் என்ன ஏதோ என்று நினைச்சிட்டன்.

காணாமல் போன ஆளாச்சே .. உண்மையா ஏதோ வேவுக்கு போன கதை என்று பார்த்தால்...... :rolleyes:

 

நகைச்சுவை தூக்கலாக இருக்கிறது. கெதியா எழுதுங்கோ ஆவலுடன் காத்திருக்கிறன். :)

 

நன்றி ஜீவா. இன்னும் இரண்டு களவு சொல்லக்கிடக்கு பார்ப்போம் நேரம் இருக்கும்போது எழுதி முடிக்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அரைவாசி வரையும், தம்பிக்கு ஒண்டும் ஆயிடக்கூடாது, எண்டு பயந்தபடி தான் வாசிச்சனான்!

 

பிறகு விளாம்பழம் எண்ட உடன 'சீ/ எண்டு போச்சு!

 

வீட்டுக்காரன் சொன்னது, சரிதான்!  :D

 

அது சரி, நாய்க்கடிக்குதான் பொக்கிளைச் சுத்தி, இருவத்தொரு ஊசி போடுறது!

 

முள்ளுக்கம்பிக்கும் 'றேபீஸ்'வருமெண்டு இப்பதான் தெரியும் பகலவன்! :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முதலே தெரியும் இது டம்மி தாக்குதல் என்று.ஆனாலும் கடைசி வரைக்கும் நான் நினைத்தது கோழித்தாக்குதல் என்று. பாத்தால் விழாம்பழம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் டம்மித் தாக்குதல் என எதிர்பார்க்கவில்லை.. :D சிறப்பான எழுத்து நடை பகலவன்..! வாழ்த்துக்கள்..! தொடருங்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

வயிற்றை நிலத்துடன் வைத்து முழங்கால்களினால் நகர்ந்து கொண்டிருந்தேன். கண்கள் இலக்கை நோக்கியபடியே இருந்தன. களுசானுக்கு கீழே தொடைகளை பதம்பார்த்தன மாண்டான் நுளம்புகள். ஊசியால் குத்துற மாதிரி குத்தும். அதை விட கொடுமை காதுக்குள்ளே வந்து க்நோயஈ....... என்று அது போடும் சத்தம். அந்த சத்தத்தை இப்படி எழுதுவதை தவிர வேறு எப்படி விவரிக்க முடியும் என்று எனக்கு தெரியாது.

 

 

வழமைபோல் நகைச்சுவை  ததும்பும் கதை. இதைவிட நுளம்பின் சத்தத்தை வடிவாச் சொல்ல முடியாது பகலவன். :D

அதென்ன மாண்டான் நுளம்பு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

...

டேய் ..களவெடுக்கிறத்துக்கும் ஒரு மூஞ்சை வேணும்டா..  என்றான்...

 

 

களவு தொடரும் ...

 

தம்பி டோய் இதத்தான் சொல்றது  பிளான் பண்ணி களவெடுக்க வேணுமெண்டு. (வடிவேல் சொன்னமாதிரியிருந்தா சரி)

இம்முறை கதையின் கடைசிப் பந்தியை வாசிச்சிட்டுத்தான் திரும்ப தொடக்கத்திலயிருந்து வாசிச்சேன். நிச்சயம் பொடியன் ஏதாவது எடக்கு முடக்கா மாட்டின கதையாயத்தானிருக்குமெண்டு ஊகம் சரியாப் போட்டுது. :lol:

 

அங்காலை காதல் தொடருமெண்டு பாதியில விட்ட தொடரையும் ஒருக்கா ஞாபகம் வையுங்கோ. காதல் தொடர்போல களவு தொடரும் பாதியில நிற்காமலிருக்கக் கடவுக.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி டோய் இதத்தான் சொல்றது  பிளான் பண்ணி களவெடுக்க வேணுமெண்டு. (வடிவேல் சொன்னமாதிரியிருந்தா சரி)

இம்முறை கதையின் கடைசிப் பந்தியை வாசிச்சிட்டுத்தான் திரும்ப தொடக்கத்திலயிருந்து வாசிச்சேன். நிச்சயம் பொடியன் ஏதாவது எடக்கு முடக்கா மாட்டின கதையாயத்தானிருக்குமெண்டு ஊகம் சரியாப் போட்டுது. :lol:

 

அங்காலை காதல் தொடருமெண்டு பாதியில விட்ட தொடரையும் ஒருக்கா ஞாபகம் வையுங்கோ. காதல் தொடர்போல களவு தொடரும் பாதியில நிற்காமலிருக்கக் கடவுக.... :icon_idea:

 

விடுப்புக் கேக்கிறதில என்னா ஒரு வில்லத்தனம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்புக் கேக்கிறதில என்னா ஒரு வில்லத்தனம்  :D

 

இந்த விடுப்பை ஒளிச்சு நிண்டு ரசிக்கிறீங்களே இதை என்ன சொல்ல ? :icon_idea:

 

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த வயசில தொடங்கின களவு இப்ப இந்த வயசிலும் தொடருதோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கோழி பிடிக்க எல்லாம் குரூப் ஆ போய் பிடிக்க முடியாதிண்ணை....,:D

பகலவன் அண்ணா சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கோழி பிடிக்க எல்லாம் குரூப் ஆ போய் பிடிக்க முடியாதிண்ணை...., :D

பகலவன் அண்ணா சூப்பர்

கும்பலா  சிங்கிளா  ஈசி  ஜி  :D

சூப்பர் பகல் மிகவும் ரசித்தேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டாலும் விளாம்பழத்துக்கு இவ்வளவு வில்டப் கூடாது . நாங்கள் காய் உப்பு தூள் போட்டு சாப்பிடுவம் . கதை நல்லாய் இருக்கு தொடருங்கோ .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கருத்துகளை பதிந்து ஊக்கமளித்த  புங்கை அண்ணா, சுவைப்பிரியன், இசை, நந்தன், சாந்தி அக்கா, சுண்டல், ரதி, சுமே அக்கா,மைத்திரேயி அனைவருக்கும் நன்றிகள்.

 

உங்கள் விருப்புகளை அளித்த உறவுகளுக்கும் மிக்க நன்றி. தொடர் சுமைகளால் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

எனக்கு அப்போ பதின்மூன்று வயசுதான் இருக்கும்.

மீன் வளர்க்கிறது என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். மீனுக்கு முதல்ல நான் முயல்  லவ்பேர்ட்ஸ் கிளி புறா எல்லாம் வளர்த்து இருக்கிறேன்.

பனையிலே ஏறி பொந்துக்குள்ளே கையை விட்டு கிளிக்குஞ்சு பிடிச்சு செட்டை வெட்டி அதுக்கு பெற்றம்மா என்று எல்லாரும் வைக்கிறமாதிரி பேர் வைச்சு, உண்மையை சொல்லப்போனால் எனக்கு அது ஆண் கிளியா அல்லது பெண் கிளியா என்றே கடைசி மட்டும் தெரியாது.

கிளி கதைக்கும் கதைக்கும் என்று கடைசி மட்டும் இலவு காத்த கிளி மாதிரி நான் அதுக்கு "எங்கே அம்மா சொல்லு ..அ ...ம் ... மா " என்று அரிவரி பிள்ளைக்கு பாடம் எடுக்கிறமாதிரி எடுக்க அது என்னை ஒரு பாவி மாதிரி பார்க்கும். கொஞ்ச காலத்திலே எனக்கே சந்தேகம் இந்த கிளிக்கு காது கேட்குமோ என்று.

உண்மையாத்தான் நான் சொல்லி கொடுத்த அரிவரி பாடத்திலே கிளி கதைக்க முதலே பக்கத்து வீட்டு ஊமை மனுசியிண்ட பிள்ளை கதைக்க தொடங்கிட்டான்.

கிளி கடைசி மட்டும் அ..ம்..மா சொல்லவே இல்லை. பேந்தென்ன கிளி எங்கட பாசை பேசவில்லை என்றால் நாங்கள் கிளிப்பாசை பேச வேண்டி வந்திட்டுது.

அதை பெற்றம்மா என்று காட்டு காத்து கத்தினாலும் வராது, கீ ..கீ ... என்று ஒருக்கா கூப்பிட்டால் காலடியிலே வந்து நிக்கும். பள்ளிக்கூடத்தாலே வந்தால்  உடனையே காலடியிலே வந்து நிக்கும். சப்பாத்து லேசை கழட்டுறமாதிரி கொத்தும். நான் கொவ்வைப்பழம், தக்காளிப்பழம் எடுத்து கொண்டு வந்து போடுவேன். மொத்தத்திலே வீட்டிலே இன்னொரு உயிராக பழக தொடங்கிட்டு. செட்டை வளரும் பொது மட்டும் கொஞ்சம் வெட்டி விடுவேன். அது பறந்து போயிடும் என்ற பயம். அதுக்கு பிறகு என்னாலை எல்லாம் கௌரவம் சிவாஜி மாதிரி பாட்டெல்லாம் பாட இயலாது.

ஒரு நாள் பள்ளிக்கூடம் போயிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் யென்னல் ஓரமாக கிளி செட்டைகளும் இரத்தமும். இரத்த தடத்தை பின்பற்றி போனால் பக்கத்து வீட்டுப்பூனை எங்கள் ஆசை கிளியை தன் பசிக்கு இரையாக்கி இருந்தது. அப்போது எனக்கு பூனை கூட இன்னொரு உயிர் என்று தோணவே இல்லை, வந்த கோபத்துக்கு மதில் கட்ட அரிஞ்சு வைச்சிருந்த கல்லை எடுத்து ஒரே போடு பூனையும் கிளிக்காக தனது உயிரை விட்டிருந்தது. ஒரு வாரம் வீட்டுக்கு வாற ஆட்களுக்கு கிளியின் பெருமையும் சாவையும் பேசியே என் நாட்கள் சோகமாக கழிந்தன. அதோட என் கிளி கனவும் போயிட்டுது.

பிறகு புறா வளர்ப்பும் என்று மருத்துவ பீட மாடியில் ஏறி கூடு கட்டி இருந்த புறாக்கள் 4 பிடிச்சு கொண்டு வந்தேன். 2 சாம்பல் அது சாதாரண புறாக்கள், மற்றது பிரவுன் கொண்டை புறா. அதை ஏவி விட்டு மற்ற ஆட்களின்ட புறாக்களை பிடிக்கலாம். அம்மா அடிக்கடி சொல்லுவா புறா வீட்டை விட்டு போனால் தரித்திரம் என்று ஆனால் என்ற கொண்டையனோ எத்தனையோ புறாக்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறான். பொம்மர்களுக்கு பிறகு நான் வானத்தை அண்ணாந்து பார்க்கிறது என்றால் புறாக்களுக்கு தான். எனக்கு என்ர கொண்டையன்ல அளவு கடந்த நம்பிக்கை. சில நேரங்களில் காலையிலே போனால் பின்னேரம் தான் வருவான் ஆனால் எனக்கு ஆட்களை கூட்ட்டி கொண்டு வருவான். நான் கொண்டையன் கொண்டுவாற புறாக்களை வித்து அவைக்கு நல்ல கூடு எல்லாம் வாங்கி இருந்தேன்.

 

ஒரு நாள் வானத்திலே நல்ல வெள்ளை புறா கூட்டம், வீட்டுக்கு ஓடியந்து கொண்டையனை ஏவி விட்டேன். அன்றைக்கு போனவன் தான் இந்த கதையை எழுதுமட்டும் அவனை திரும்ப எண்ட கண்ணாலே பார்க்கவே இல்ல. கொண்டையனோட என் புறா கனவும் போயிட்டுது.

இனி என்னை விட்டு ஓடாத ஒண்டைத்தான் வளர்க்கவேண்டும் என்று நான் எடுத்த முடிவு தான் மீன்.

வீடுக்குள்ளே கிரிக்கெட் விளையாடி உடைஞ்ச சோக்கேஸ் கண்ணாடி, மதில் கட்ட பொருளாதார தடையிலும் வாங்கின கொஞ்ச சீமெந்து. பிறகென்ன மீன்தொட்டி ரெடி. அதுக்கு ஐதரில்லா தாவரம்  எல்லாம் வாங்கி போட்டாச்சு. பப்பா, சாண் என்று விளையாடி சேர்த்த மபிளுகள் எல்லாம் போட்டு கலாதியா இருந்தது. என்ன இன்னும் மீன்தான் கிடைக்கவில்லை.

நான், தம்பி, என்ர ஒண்டைவிட்ட தம்பிமார் இரண்டு பேர் சம்பியன் லேனால போய் நந்தாவிலுக்கு திரும்பிற மூலை வீட்டு கிணத்திலே கண் வைச்சோம். நிறைய ரெட் மொரிஸ், ஊசி வால், ப்ளக் மொரிஸ், சீ வால், பான்டில் எல்லாம் அந்த கிணத்துக்கே மேலே இருந்து பார்க்கவே தெரிஞ்சுது. பக்கத்திலே இருந்த வெறும் காணிக்குள்ளே கிரிக்கெட் விளையாடுறமாதிரி பந்தை கிணத்து கிட்டே எறிஞ்சிட்டு வந்து எடிப்பார்த்து வேவு எல்லாம் எடுத்தாச்சு.

ஒரு நாள் நந்தாவில் திருவிழா என்று வீடுக்காரர் எல்லாரும் வெளிக்கிட்டுப் போக, இது தான் தருணம் என்று ஜாம் போத்திலுக்கை அம்மா அப்பத்தான் அவிச்சு கொண்டிருந்த சோத்தை கை சுட சுட அள்ளி போட்டு கொண்டுவந்து, நூல் கட்டி இறக்கினோம். இரண்டு மணித்தியாலம் எங்களை போலவே மீன்களுக்கும் எங்கட அம்மாவின் சமையல் பிடிக்காது போல. பாண்டில் மட்டும் தான் மாட்டிச்சு. கோயிலுக்கு போற வீட்டுக்காரர் வேற வரப்போறாங்கள். இனி இப்படி ஒரு தருணம் கிடைக்காது.

ஒரு முடிவு எடுத்தோம். எண்ட தம்பிமார் காவலுக்கு நிக்க நான் இறங்கினேன் கிணத்துக்குள்ளே. கடைசி படிக்கும் தண்ணிக்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும் கண்ணை மூடி கொண்டு பாய்ஞ்சேன். தண்ணி கொஞ்சம் கலங்கினாலும் சேட்டை கழட்டி வாரினேன். முதல் வாரலிலெயெ ரெட் மொரிஸ், சீ வால் எல்லாம் மாடிச்சு. பிடிச்சு அவங்கள் இறக்கி விட்ட ஜாம் போத்தலுக்குள் விட்டேன். காணும் என்று மனம் சொன்னாலும் ஆசை விடவில்லை. சுழண்டு சுழண்டு பிடிச்சேன்.

சின்ண்ணா... வீட்டுக்காரன் வந்திட்டான் என்று கத்தி கேட்டது. நான் படியை எட்டிபிடிச்சேன் கொஞ்சம் தான் முட்டினது. என்ர கை வேற பாசி அலம்பினது, படி வேற ஈரம் பிடிக்க வழுக்கி கொண்டே இருந்திச்சு. எட்டுதும் இல்லை. பிறகு என்ன வழமை போலத்தான்.

 

கோயிலாலே வந்த வீடுக்கார கிழவி கால் அலம்பிறதுக்கு கப்பியிலே வாளியை விட்டுவிட்டு எட்டிப்பார்த்தால் உள்ளே நான்.. மீட்பரை எதிர்பார்க்கும் ஆடு போல. பிறகென்ன கிழவி வாளியையும் கிணத்துக்கை விட்டிட்டு பேயை கண்டதுபோல ஒரு கத்தல்.

 

கையோட பிடிபடுகிறது என்று கேள்வி பட்டிருப்பீன்கள் தானே.

அதே பேச்சு..வசனங்கள்..போதாகுறைக்கு கிழவி வேற வந்து பேசினா.. கிணத்தை இப்படி கலக்கி போட்டானே.. நான் எப்படி தண்ணி குடிப்பேன்...என்று ஒரே அலம்பல் வேற. ச்சே..இரண்டாவது களவு அதுவும் இப்படி மாட்டிடேனே..மனசுக்குள்ளே ஒரு நெருடல்.

இந்த முறையும் வீட்டுக்காரன்  எங்கட அம்மா டீச்சர் என்ற ஒரே காரணத்துக்காக விட்டான்.

எண்ட நிலைமையை பார்த்து ஒரு சோடி ரெட் மொரிஸ் தந்து விட்டான். போகும்போது சொன்னான்.

அப்படி ஒரு டீச்சருக்கு இப்படி ஒரு மகனா ..

அவன் மட்டும் இல்லை அவன் தந்த மீனும் என்னை  ஏளனமாக பார்த்து கேட்பது போல இருந்தது.

உன்ர மூஞ்சிக்கு எல்லாம் களவு ஒரு கேடா ....???
 

 

 

 

களவு தொடரும் ..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜாம் போத்தில்லை நானும் மீன் வளத்தனான். மாமி வீட்டுக் கிணத்துக்குள்ளை சீ வாலும், ஜப்பான் மீனும் தான் இருந்தது.

ஜப்பான் மீன் குஞ்சிலை கொஞ்சம் பழுப்புக் கலரிலை கறுத்த பொட்டு பொட்டா இருக்கும் நான் அதை மொறிஸ் என்று சொல்லி

பள்ளிக்கூடத்ட்திலை படிச்ச பொடியளைக் கூட்டிக் கொண்டுவந்து காட்ட "காறித் துப்பாத குறையா உலகத்திலை உள்ள கெட்ட வார்த்தை" எல்லாம் சொல்லி திட்டிட்டுப் போனாங்கள். அதெல்லாம் ஒரு காலம்.

பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விட்டிருக்கிறிங்கள்.

 

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா. :)

 

  • கருத்துக்கள உறவுகள்
முதல் கதையில் உள்ள திரில் இதில் இல்லை என்டாலும் உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுணர்வு எட்டிப் பார்க்கிறது...தொடருங்கள்...கதையின் அடுத்த பகுதியை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் :)
  • தொடங்கியவர்

ஜாம் போத்தில்லை நானும் மீன் வளத்தனான். மாமி வீட்டுக் கிணத்துக்குள்ளை சீ வாலும், ஜப்பான் மீனும் தான் இருந்தது.

ஜப்பான் மீன் குஞ்சிலை கொஞ்சம் பழுப்புக் கலரிலை கறுத்த பொட்டு பொட்டா இருக்கும் நான் அதை மொறிஸ் என்று சொல்லி

பள்ளிக்கூடத்ட்திலை படிச்ச பொடியளைக் கூட்டிக் கொண்டுவந்து காட்ட "காறித் துப்பாத குறையா உலகத்திலை உள்ள கெட்ட வார்த்தை" எல்லாம் சொல்லி திட்டிட்டுப் போனாங்கள். அதெல்லாம் ஒரு காலம்.

பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விட்டிருக்கிறிங்கள்.

 

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா. :)

 

நன்றி ஜீவா. இளமைக்கால நினைவுகள் ஒரு சுகமான கனவுகள்.

 

 

 

முதல் கதையில் உள்ள திரில் இதில் இல்லை என்டாலும் உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுணர்வு எட்டிப் பார்க்கிறது...தொடருங்கள்...கதையின் அடுத்த பகுதியை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் :)

 

 

நன்றி ரதி. எல்லா நேரமும் எல்லாரையும் திரில்லில் வைச்சிருக்க முடியாது தானே 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிசன், ஒருக்காச் சறுக்கலாம், அல்லது இரண்டுதரம் சறுக்கலாம்!

 

நெடுகவும் சறுக்கிறது எண்டால்.............

 

பகலவன், உங்களுக்கு, அந்த 'அது' இல்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

..........உண்மையாத்தான் நான் சொல்லி கொடுத்த அரிவரி பாடத்திலே கிளி கதைக்க முதலே பக்கத்து வீட்டு ஊமை மனுசியிண்ட பிள்ளை கதைக்க தொடங்கிட்டான்.

.........அதுக்கு பிறகு என்னாலை எல்லாம் கௌரவம் சிவாஜி மாதிரி பாட்டெல்லாம் பாட இயலாது.

........ பொம்மர்களுக்கு பிறகு நான் வானத்தை அண்ணாந்து பார்க்கிறது என்றால் புறாக்களுக்கு தான்.

.........பக்கத்திலே இருந்த வெறும் காணிக்குள்ளே கிரிக்கெட் விளையாடுறமாதிரி பந்தை கிணத்து கிட்டே எறிஞ்சிட்டு வந்து எடிப்பார்த்து வேவு எல்லாம் எடுத்தாச்சு.

....... காணும் என்று மனம் சொன்னாலும் ஆசை விடவில்லை. சுழண்டு சுழண்டு பிடிச்சேன்.

.......அவன் மட்டும் இல்லை அவன் தந்த மீனும் என்னை  ஏளனமாக பார்த்து கேட்பது போல இருந்தது.

.......உன்ர மூஞ்சிக்கு எல்லாம் களவு ஒரு கேடா ....???

 

மேலேயுள்ள வரிகளை படித்தவுடன், சிறு வயதில் அனுபவித்த அந்த நாட்களை எண்ணி என்னையுமறியாமல் புன்முறுவல்...

 

நல்ல கற்பனையும், எழுத்து நடையும்...வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முழு மனதோடு கதையை எழுதவில்லை என்று தெரிகிறது.

:D

  • தொடங்கியவர்

ஒரு மனிசன், ஒருக்காச் சறுக்கலாம், அல்லது இரண்டுதரம் சறுக்கலாம்!

 

நெடுகவும் சறுக்கிறது எண்டால்.............

 

பகலவன், உங்களுக்கு, அந்த 'அது' இல்லை! :o

 

புங்கை அண்ணா, எவ்வளவு தரம் சறுக்கிறம் என்பது அல்ல பெருமை அத்தனை தரமும் எழும்பிறம் அங்கை தான் நாங்க நிக்கிறம்  :D 

 

நீங்கள் சொன்னப்பிறகு தான் யோசிச்சு பார்த்து கண்ணாடிக்கு முன்னாலே போயும் பார்த்தேன். உண்மையிலே எனக்கு அந்த 'அது' இல்லைத்தானோ  :o 

 

மேலேயுள்ள வரிகளை படித்தவுடன், சிறு வயதில் அனுபவித்த அந்த நாட்களை எண்ணி என்னையுமறியாமல் புன்முறுவல்...

 

நல்ல கற்பனையும், எழுத்து நடையும்...வாழ்த்துக்கள்.

 

நன்றிகள் ராஜவன்னியன் அண்ணா. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும். சின்ன வயசில் எவ்வளவோ பண்ணினோம். எல்லாமே சிலவேளைகளில் ஞாபகம் வருவதில்லை. ஆனால் சிலவற்றை படிக்கும்போதோ, எழுதும்போதோ இன்னும் சில ஞாபகங்கள் வந்து சேர்கின்றன.

 

 

நீங்கள் முழு மனதோடு கதையை எழுதவில்லை என்று தெரிகிறது.

:D

 

நன்றி சுமே அக்கா. உண்மையில் அப்படி இல்லை. கதைகள் எழுதும்போது ஏனோ தெரிவதில்லை அன்றைய நாளின் மனநிலை கதைகளில் பிரதிபலிப்பதை தடுக்க முடிவதில்லை. இதை நீங்களும் கதைகள் எழுதும்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

 

நான் எல்லாம் உண்மையில் ஒரு எழுத்தாளனே இல்லை. நான் எழுதும்போது என் என் எண்ணங்களை என் அன்றைய மனநிலை பெரிதும் பாதிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.