Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேப்பங் காய்கள் - சிறுகதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் இடம் எங்கும் வெண்பனி ஓவியங்கள் வரைந்திருந்தது. குளிரும் இம்முறை அதிகம். பனிப்பொழிவைப் பார்ப்பதும் இரசிப்பதும் மட்டுமே போதுமாக இருந்தது சந்தியாவுக்கு. கணவனும் மகளும் வெளியே நின்று பனித்துகள்களை அள்ளி விளையாடி மகிழ இவள் ஜன்னலூடாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வீட்டினுள் கீற்றர் போட்டு வெப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே பார்க்க வீடும் குளிர்வதாய் எண்ணம் தோன்ற, யன்னலை விட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள் சந்தியா.

சிறிது நேரத்தில் கணவனும் மகளும் உள்ளே வர ஈரமாக்கிப் போன மகளின் உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடை அணிந்துவிட்டு நிமிர கணவனும் உடைமாற்றிவிட்டு வந்தமர்ந்தான். "எதையும் உமக்கு ரசிக்கத்தெரியாது. எங்களோட வெளியில வந்திருக்கலாம் தானே. ரசனை கெட்ட ஜென்மம்" என்றபடி நக்கலாய் இவளைப் பார்க்கும் கணவனை கன்னத்தில் அறையலாம் போல் வந்த கோபத்தை மனதுள்ளேயே அடக்கியபடி, "அது என்ர விருப்பம். உங்களை நான் போகவேண்டாம் என்று சொன்னனானே. உங்களுக்காக நான் ஏன் குளிருக்குள்ள வரவேணும்" என்று கூறியபடி சமையல் அறைக்குள் போனவளுக்கு மனதுள் கொஞ்சம் சந்தோசமும் பயமும் எட்டிப்பார்த்தது.

நான் எதிர்த்துக் கதைச்சது உவருக்குப் பிடிச்சிருக்காது. அதுக்காக உவர் சொல்லுறதை எல்லாம் கேட்டுக்கொண்டு எத்தினை நாள்த்தான் பேசாமல் இருக்கிறது. நான் கதைக்கத் தொடங்கினால்த்தான் உவர் என்னைத் தாக்கிக் கதைக்கிறதைக் குறைப்பார். என எண்ணியபடி தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு வந்து கணவனுக்குப் பக்கத்தில் வைத்தாள். "நான் உன்னட்டைத் தேத்தண்ணி  கேட்டனானே" என்று முறைக்கும் கணவனை நிமிர்ந்து பார்க்காமலே "நீங்கள் கேட்டே மற்றும்படி தேத்தண்ணி கொண்டுவாறனான். விரும்பினாக் குடியுங்கோ அல்லது நானே குடிச்சுக்கொள்ளுறன்" என்றபடி சோபாவில் அமர்ந்தாள். அவளுக்குத் தெரியும் தான் திரும்பக் கதைத்ததன் விளைவுதான் தேநீர் மறுப்பு என்று. ஆனாலும் இம்முறை அவள் முன்புபோல் அமைதியாக இருந்தோ அல்லது மன்னிப்புக் கேட்கவோ போவதில்லை என முடிவெடுத்தபடி தொலைக்காட்சி பார்க்கத்  தொடங்கினாள்.

"உதென்ன விசர்ப் புரோக்கிராம் பாக்கிறாய். கொண்டா இங்க ரிமோட்டை" என்றபடி கையை நீட்டிய கணவனுக்கு ரிமோட்டைக் கொடுக்காது "ஏன் இது நல்லாத்தானே இருக்கு. உங்களுக்குப் பிடிக்காட்டிப் பார்க்காதைங்கோ. இன்னும் பத்து நிமிடத்தில முடிஞ்சிடும்" என்றபடி பார்வையை டிவியில் பதிக்க, கோபமாகக் கணவன் எழுவது கடைக்கண்ணில் தெரிய ஒருவித அச்சம் எழத்தான் செய்தது. ஆனால் கணவன் படுக்கை அறைக்குள் செல்ல இவள் நின்மதியாய் தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினாள்.

*********************************************************************************************************

கதிரவேலருக்கு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும். லோயராக இருந்து இப்ப யாழ்ப்பாண நீதவான். எக்கச்சக்கமான சொத்து. எல்லாப் பிள்ளையளுக்கும் வீடு வளவு கட்டியாச்சு. பிள்ளையள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான். யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வரும்போது மற்றவர்கள் எல்லாரும் செற்றிலாகிவிட  மனைவியும் கடைசி மகளும் தான் இவரோடு யாழ்ப்பாணம் வந்தது. மனைவிக்கு பெரிசா விருப்பம் இல்லைத்தான் கொழும்பை விட்டு வர. அஸ்மா நோயில் துன்பப்பட்ட சகுந்தலாவுக்கு யாழ்ப்பாணத் தூசியள் என்ன செய்யுமோ என்ற பயம் இருந்தது. அனாலும் இங்கு அவருக்குக் கிடைச்ச மரியாதையும் வசதிகளும் வாயடைக்க வைத்துவிட்டன. ஒரு வேலையாள் வைத்து வீட்டை தினமும் கழுவித் துடைத்ததில்  மனம் சமாதானமடந்ததுதான் எனினும் கணவனின் உதாசீனமும் கவலையைக் கொடுத்தது. பதவியும் பணமும் இருந்தால் என்னவும் கதைக்கலாமோ? இத்தனைநாள் இவரோடு வாழ்ந்ததுக்கு என்ன பயன் என மனம் சலிப்புற அழுகையும் எட்டிப்பார்த்தது. 

கலியாணங் கட்டி நாற்பது ஆண்டுகளில் வாழ்வு எதோ ஒருவகையில் மகிழ்வாக ஓடிக்கொண்டு இருந்தாலும் கொழும்பில் ஒரு பெண்ணுக்கும் கதிரவேலருக்கும் தொடுப்பு என்று யாரோ ஒருநாள் கூறியதில் இருந்து நம்புவதா விடுவதா என்ற போராட்டம் தினமும் மனத்தில் எழுந்து சோர்வுற வைத்தது. ஆனாலும் பெரிய வளர்ந்த பிள்ளைகள் இருக்கினம் அந்தாள் அப்பிடிச் செய்ய மாட்டார் என்ற ஒரு நம்பிக்கையும் இல்லாது இல்லை. எங்களுக்கு ஒரு குறையும் அந்தாள் வைக்கேல்லைத்தான். என்னிலையும் பிழை இருக்குத்தானே என மனம் சமாதானம் சொன்னது.

அஸ்மா வருத்தத்தோட மூட்டுவலியும் மெனப்போசும் ஏற்பட்டத்தில் உடலுறவில் ஆர்வமே இல்லாது எந்த நேரமும் பதட்டமும் சினமுமாக இருக்க, சகுந்தலா மகளின் அறையில் போய் படுக்க ஆரம்பித்தாள். மகளுக்கு என்ன சந்தேகம் எழுந்ததோ "என்னம்மா பிரச்சனை"? என்று கேட்க, கொப்பாவின்ர குறட்டைச் சத்தம் தாங்க முடியேல்லை. நித்திரை கொள்ளேலாமல் கிடக்கு என்னும் பதிலில் மகளும் வாய் மூடிக்கொண்டாள். இப்ப யாழ்ப்பான மாற்றலில் அவள் இங்க வரமாட்டாள் என்ற எண்ணமும் மகிழ்வைக்கொடுக்க மனம் நின்மதியானது.

இவள் கடைசிக்குத்தான் இன்னும் சரிவருதில்லை. நல்ல ஒரு மாப்பிளை வந்தால் அதன் பிறகு நான் நின்மதியாக் கண்ணை மூடுவன். அவளுக்கு செவ்வாய்க் குற்றம். அதுதான் இப்பிடி இழுபடுது. ஆண்டவனே கெதியில அவளுக்கு ஒரு வழியைக் காட்டு என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

இவ்வளவு சொத்து கதிரவேலருக்கு இருந்தாலும் எதையும் மனைவி பெயரில் வாங்கவில்லை. சகுந்தலா அதுபற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை. அவளின் சீதன வீடு சகுந்தலாவின் பெயரில்தான் இருக்கு. ஒருநாள் பேச்சுவாக்கில் பிள்ளைகளிடம் இதைச் சொன்னபோது மூத்தவள் கயல் அப்பாவிடம் கேட்க்கத்தன் செய்தாள். அதற்கு அவர் சொன்ன பதில் இப்போதும் சகுந்தலாவுக்கு நெஞ்சை அடைக்க வைக்கிறது. கொம்மா வருத்தக்காரி. எப்பிடியும் வேளைக்குச் செத்திடுவா. அதுக்குப் பிறகு சொத்தை மாத்திறதில அவைக்குப் பங்கு இவைக்குப் பங்கெண்டு நான் இழுபடேலாது. என்ர பேரிலேயே இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றதுடன் மகளும் கதைக்கவில்லை. சகுந்தலாவுக்குத்தான் இப்பவே செத்திட மாட்டமா என்று இருந்தது. எனக்கு முன்னாலயே நான் சாகிறதைப் பற்றி கதைக்க என்ன கொடூர மனம் வேண்டும் என்ன எண்ணி தனக்குள் அழத்தான் முடிந்தது. இவர் மட்டும் சாகாமல்தானே இருக்கப்போறார் என எண்ணிய நினைவில் மனதில் குற்ற உணர்வு எழ  கடவுளே இவர் நீண்டாயுளோட இருக்கவேணும் என்றும் கடவுளிடம் வேண்டிக்கொண்ட பின்னர்தான் மனம் நின்மதியானது.

 

வரும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், சுமே!

ஒவ்வொரு வருடமும்...யாழின் பிறந்த நாள் வரும்போது...ஏனோ...நாம் இழந்து போனவை..பல நினைவுக்கு வந்து போகும்! 

எனினும்...அதில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் உறவுகளையும், அவர்களது படைப்புக்களையும் பார்க்கும் போது....நமது இழப்புக்கள் நிரந்தரமானவையல்ல என்னும் ஆறுதலும் வந்து போகும்!

அதே வேளை...யாழ் தனது பிறந்த நாளை...ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொண்டாடினால் என்ன...என்னும் ஆதங்கமும்..இல்லாமல் இல்லை!

அரிவரி படிக்கும் போது...அருகிலிருக்கும் பணக்காரப் பிள்ளை...போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து ஆசைப்படுவது போல...அது நடக்காது என்று தெரிந்தாலும்....ஆசைப் படுவதில் தவறில்லைத் தானே!

உங்கள் கதையைப் போல ..ஒரு உண்மைக்கதை ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்திருக்கின்றது!

ஒரு மிகப் பிரபலமான வழக்கறிஞர்....கொடி கட்டிப் பறந்தவர்......எல்லா வழக்கறிஞர்களைப் போலவே...தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு..காண வெளிக்கிட்டுத் தனது குடும்பப் பிரச்சனைகள்...அனைத்துக்கும் தீர்வு கண்டவர்! ஒரு பிரபலமான...சிங்களப் பெண் நீதிபதி ஒருவர்...நடத்தும் வழக்குகளில்...இந்த வழக்கறிஞர் ஆஜராகினால்.....வழக்குகளின் தீர்ப்பு...எப்பவுமே...இவருக்குச் சாதகமாகவே அமையும்! அதனால்...கொலை காரர்கள்....கள்வர்கள்...காடையர்கள்....காமுகர்கள்..எல்லாரும்...இவரைத் தங்கள் வழக்கறிஞராக அமர்த்துவதற்கு...என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்!

இந்தியாவில் இருந்து....ஆரியர்களால் துரத்தப்பட்டு....தென் திசை நோக்கித் தப்பியோடி வந்து...இனி ஓட இடமில்லை...கீழே கடல் தான் உள்ளது என்னும் நிலையில்....வறண்ட நிலமொன்றில் குடியமர்ந்த...ஒரு இனத்தின் மன நிலை....சொத்துக்களை... உறவுகளின் மன உணர்வுகளை விடவும்...அதிகம் மதிப்பதையிட்டு...நான் ஆச்சரியப் படவில்லை!

எதை எடுத்தாலும்....சொத்து மட்டுமே...முன்னிலைப்படுத்தப் படுகின்றது! சில....சில...மாயைகள்...குடும்பம்....கெளரவம்....படிப்பு...ஒழுக்கம் என்று கண்களை மறைத்தாலும்....இறுதி இலக்கு...பணமாகத் தானே ...எப்போதும் உள்ளது! கள்ளக் கடத்தல் செய்பவன்...தனது லாபத்தில்..ஒரு பங்கை...நல்லூர் உண்டியலில் போட்டு விட்டால்...அவனையும்...வெள்ளை வேட்டிக்காரர்களில்..ஒருவராக....அங்கீகரிப்பது தானே ..எமது சமூகம்?

சரி...சரி....ஆறப்போடாமல்....அடுத்த பாகத்தையும் எழுதுங்கள்.!

மிச்சக் கருத்தையும் ...எழுதுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

லோயர் என்றால் எக்கச்சக்கமா சொத்து சேர்பபார்கள்தான். அவர்களுக்கு ‘லையர்’ என்கிற சொல்லும் பொருந்தும்.

சுமேரியர் எழுதுங்கள் இன்னும் என்ன என்ன வருகிறதென்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரார் வீட்டுக் கதை மாதிரிப் போகின்றது. எங்க முடிச்சு வருகின்றதென்று பார்ப்போம்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

ஒவ்வொரு வருடமும்...யாழின் பிறந்த நாள் வரும்போது...ஏனோ...நாம் இழந்து போனவை..பல நினைவுக்கு வந்து போகும்! 

.

யாழில் எப்போதாவது தாயகம்பற்றி வரும், உங்கள் கவிதைகள்போலவே ...வலி!

  • கருத்துக்கள உறவுகள்

  சுய ஆக்கங்கள் பற்றிய ஒரு தலைப்பில் தொடர்கதை எழுதுவது சரியா இருக்குமோ இல்லையோ தெரியவில்லை சுமே அக்கா!   ஆனால் அனுபவம்மிக்க நாவலாசிரியர்கள்போல , குடும்ப உறவுகளின் உறவுகள் / சிக்கல்களை பற்றி  ஒரே பகுதியில் பேசி முடிக்க முடியாது , எனும் உங்கள் எடுகோளூம் சரியாக இருக்கலாம்.. வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போல் சுமேயின் யாழ்ப்பாணத் தமிழ் மணக்கும் கதை தொடர்கிறது. கதை நன்றாகப் போகின்றது. இன்னும் முக்கிய திருப்பத்தைச் சந்திக்கவில்லை என நினைக்கிறேன். எமக்கும் புங்கை சொன்னதுபோல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடிலால் எப்படி இருக்கும்?

 வேப்பங்காய் பழுக்கும் வரை கத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதி என்னை உற்சாகமூட்டுவதர்க்கு யாழ் இணைய உறவுகளை மிஞ்ச யாருமில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பெரிதாக நான் எழுதவில்லை. மீண்டும் யாழ் இணையம் தான் என்னை எழுதத் தூண்டியிருக்கு.

புங்கை எனக்கும் மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆசை தான். பாழாய்ப்போன முகநூலை விட்டு நகர முடியவில்லை.

எனக்கு இதை ஒரேடியாக எழுதிவிட்டுப் போடவேண்டும் என்ற எண்ணம் இல் இருந்தது. ஆனாலும் கடைசியில் எழுதாமலேயே விட்டுவிடுவேனோ என்ற பயத்தில் எழுதியவரை போட்டுள்ளேன்.

வளவன் தொடர் இரவல் ஆக்கம் இல்லைத்தானே. விரைவில் மிகுதியையும் போட்டுவிடுகிறேன்.

கண்மணி அக்கா நீங்கள் சொல்வதுபோல் ஆறுமாதத்துக்கு ஒருதடவை கொட்டாடலாம் தான்.

எனக்குப் பச்சை வழங்கிய உறவுகளுக்கும் கருத்தைப் பகிர்ந்தவர்களுக்கும் மிக்க நன்றி.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரமாக வீட்டில் மௌனவிரதம். இங்கு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியையாக வேலைசெய்யும் சந்தியாவுக்கு மாதம் சுளையாக £1800 கையில் வரும். அதில் ஒரு சதமும் அவள் எடுத்துச் செலவழிக்காமல் வங்கியில் போட்டுவிடவேண்டும். பின்னர் கணவன் தான் எல்லாவற்றுக்கும் காசு கொடுப்பார். அவரும் வேலை செய்கிறார் தான். திருமணமான புதிதில் ஆண்டில் ஒருமுறை விடுமுறையைக் கழிக்க இந்தியா அல்லது இலங்கை போய் வருவதுதான். பின் அதுவும் குறைந்து இப்ப மூன்று ஆண்டுகள் எங்கும் போகாமல் லண்டனுக்குள் தான் திரிவது. ஆனால் அவர் மட்டும் ஓரிரு  வாரங்கள் நண்பர்களுடன் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் வருவார். அந்த நாட்களில் சந்தியாவும் மகளும் மட்டும் அந்தத் தனிமையை அனுபவிப்பார்கள். மகளும் அப்பாஅப்பா என்று அவரோடுதான் அதிக வாரப்பாடு. ஆனாலும் அப்பா இல்லாதபோது வேறு வழியின்றி அம்மாவுடன் ஒண்டினாலும் எப்போதும் அப்பா புராணம் தான்.

சந்தியாவின் பள்ளியில் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு ஒருவாரம் பாரிசுக்குப் போகிறார்கள். இவளின் வகுப்பு மாணவர்களும் செல்கிறபடியால் இவளும் போகவேண்டும் என்றதற்குத் தான் "நீ போக வேண்டாம்" என எதிர்ப்பு. இப்பிடி ஏதாவது என்றால் கணவனின் விருப்பத்துக்கு ஏற்ப ஏதோவொரு சாட்டைக் கூறி அவள் போகாமல் நின்றுவிடுவாள். இம்முறை ஏன் போகாமல் விடவேண்டும் என்ற கேள்வி மனதில் எழ, "ஏனப்பா போகவேண்டாம் எண்டுறியள். என்ர வகுப்பு எண்டதாலை நான் கட்டாயம் போகவேணும் எண்டு கெட்டீச்சர் சொல்லுறா" என்ற பின்னும் "வேண்டாம் எண்டால் விடன் பேந்தென்ன கதை" என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டு செல்லும் அவனை எப்படிச் சம்மதிக்க வைக்கிறது என்று யோசனையாக இருந்தது. அதன் விளைவுதான் இந்த மௌனவிரதம்.

"நீங்கள் மட்டும் ஒவ்வொரு வருசமும் பிரென்ஸ்சோட  போகேக்குள்ள நான் ஏதும் சொல்லுறநானே என்றதற்கு நான் ஆம்பிளை என்னவும் செய்யலாம். நீர் கண்டபடி திரியேலாது" என்று சொல்ல சந்தியாவுக்குக் கடும் சினம் தான் வந்தது. "இதில ஆம்பிளை பொம்பிளை என்ன. இது என்ர வேலையோட சம்பந்தப்பட்டது. எனக்காக என்ர வகுப்புப் பிள்ளையள் ஒருத்தரும் போகாதைங்கோ எண்டுறதோ?  என்ர புருசன் என்னைப் போகவேண்டாம் எண்டுறார் எண்டால் மற்ற டீச்சர்மார் சிரிப்பினம். அதோட எல்லாரும் பொம்பிளை ஆசிரியர்கள் தான் போறம். எதுக்கு வேண்டாம் எண்டுறியள். நியாயமா ஏதும் காரணம் இருந்தால் சொல்லுங்கோ நான் நிக்கிறன்" என்றவுடன் "எனக்கு நீ போறது பிடிக்கேல்லை. அவ்வளவுதான்" என்றுவிட்டு எழுந்து போனவனிடம் என்ன சொல்லிச் சமாதானம்செய்வது என்று தெரியாது சந்தியா குழம்பித்தான் போனாள்.

ஒருவாரம் இப்பிடியே ஓடிப்போக இவளுக்குக் கோபம் தான் வந்தது. காலையில் எழுந்து மதியத்துக்குச் சமைத்துத் தானும் சாப்பாடு கொண்டு போவது சந்தியாவின் வழமை.கணவன் காலில் ஒரு விபத்து நடந்து அதிக நேரம் நிற்க முடியாமையால் நான்கு மணிநேர வேலை செய்ய இவள் முழுநேர வேலை செய்தபடி வீட்டு வேலைகளும் செய்கிறாள்தான். கணவனை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. சனிக்கிழமை எல்லா உடைகளும் தோய்த்து அத்தனை உடைகளையும் ஞாயிறு அயன் பண்ணி வைக்க முதுகு முறியும். நல்ல காலம் ஒரே ஒரு பிள்ளை. இதுவே மூன்று நான்கு என்றால் என்ர நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. இவர் என்னோட கதைகாட்டி எனக்கு ஒண்டும் இல்லை. சமைச்சு வைக்கிறதை மட்டும் வடிவாச் சாப்பிடுறவருக்கு கொழுப்புத்தான்.  எதோ நான் தப்புச் செய்த மாதிரி எல்லோ நடத்திறார். இதோட இவர் திருந்தவேணும் என எண்ணியபடி தன் வேலையில் ஆழ்ந்து போனாள்.

************************************************************************************************

சகுந்தலாவுக்கு இப்ப கொஞ்ச நாட்களாக சரியான மூச்சிழுப்பு. மழைக் காலம் எண்டாலே அஸ்மா அதிகமாவதுதான் எல்லாருக்கும். ஆனாலும் இம்முறை ஒருவாரமாகக் கட்டிலை விட்டு எழும்ப முடியாத நிலை. கடைசி மகள் பல்கலைக் கழகத் தேர்வு முடிந்து வீட்டில் நிர்ப்பதால் அவளே எல்லாம் செய்கிறாள். இருந்தாலும் சகுந்தலாவுக்கு பெரிய மனக்குறை தான். கணவன் இந்த நேரம் பார்த்துத்தானா வெளிநாடு போகவேணும். அந்த ஆட்டக்காரியையும் கூட்டிக்கொண்டுதான் போறாரோ என்ற கவலையை விட தான் படுத்தபடுக்கையாய் இருக்கேக்குள்ள ஒரு குமர்ப் பிள்ளையையும் விட்டுட்டு உவருக்கென்ன வெளிநாட்டுப் பயணம் வேண்டிக்கிடக்கு. அவளுக்குக் கலியாணத்தைக் கட்டிக் குடுத்துப்போட்டு தன்ரை எண்ணத்துக்குஆடட்டுமன் என மனதுள் எண்ணினாலும் வெளியே சொல்லும் துணிவு வரவில்லை.

இரண்டு கிழமைக்கு முதல் மூச்சு விட முடியாமல் யாழ்பாணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் நாலுநாட்கள் அங்கேதான் இருந்தது. பிறகு வீட்டுக்கு வந்தாலும் கணவனின் அலட்சியமே இன்னும் இயலாமலாக்கியது. மற்றப் பிள்ளையள் கொழும்பிலிருந்து வந்து நின்டதில கொஞ்சம் மனம் அமைதியானாலும் கணவன் எதோ விசேசத்துக்கு வந்த பிள்ளையளோட கதைக்கிறமாதிரி கதைச்சுச் சிரித்ததும் இவளை ஒருக்கா எட்டிப் பாக்கிறதோட எதோ கடமையாகச் செய்ததும் இன்னும் வருத்தியது. கொம்மாக்கு ஒண்டுமில்லை உங்களைப் பாக்கிற ஆசையில வருத்தம் எண்டு மிகைப்படுத்திறா என்றதும் எந்தப் பிள்ளையும் தகப்பனை எதிர்த்துக் கதைக்காமல் பேசாமலே நிண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்னப் பிள்ளையளாய் இருக்கேக்கை தான் உந்தாளின்ர வெருட்டுக்குப் பயந்தினம் எண்டால் இப்ப கலியாணம்கட்டி சுய காலில நிக்கேக்குள்ளையும் பயமே என மனதில் எழுந்த கேள்விக்கு நான் தானே உந்தாளின்ர கோபத்துக்குப் பயந்து பிள்ளையளையும் பயப்பிடுத்தி வளத்துப்போட்டன். அதுகள் என்ன செய்யுங்கள் பாவம் என்னும் பச்சாதாபமும் எழுந்தது. உந்தாளின்ர பேர்ல இருக்கிற சொத்துக்காகவும் பெடியள் பேசாமல் தான் இருக்க வேணும். முதல் ஒருக்கா மூத்தவன் எதிர்த்துக் கதைக்க, என்னை ஆரும் எதிக்கக் கூடாது. எதிர்த்தா கோயிலுக்குச் சொத்தை எழுதிவச்சிடுவன் என்றதன் பின் உன்தாள் வீம்புக்குச் செய்தாலும் செய்யக் கூடியது என்று இனிமேல் அப்பாவை எதிர்த்து ஒண்டும் கதைக்காதைங்கோ எண்டதும் இவள்தானே.

பிள்ளைகள் எல்லோரும் நிக்கேக்குள்ளதான் கதிர்வேல் தான் ஒருமாதம் ஐரோப்பா எல்லாம் போய்வரப் போவதாகச் சொன்னார். லண்டனில நடக்கிற ஒரு மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு வந்திருக்கெண்டும் அதைத் தான் தவறவிடப் போவதில்லை எண்டும் சொன்னார். மூத்த மகள் தான் அம்மா இப்பிடிக் கிடக்கேக்குள்ள நீங்கள் போனா ஆக்கள் என்ன கதைப்பினம் என்று துணிந்து கேட்டாள்.  ஆக்களைப் பற்றி எனக்கென்ன? நான் என்ர காசில்தான் போறன். இங்க நான் இருந்து போற கொம்மாவின்ர உயிரை இழுத்தா பிடிக்கப்போறன்? அப்பிடிக் கொம்மாவுக்கு ஒண்டு நடக்கிறது என்று இருந்தால் நடந்துதான் தீரும். உடன எனக்கு போன்செய்யுங்கோ. நான் வந்திடுவன் என்று இரக்கமில்லாமல் கூறும் தந்தையை வெறுப்பாய் பிள்ளைகள் பார்த்தபடி நிக்கத்தான் முடிந்தது. கடைசிமகள் மட்டும் சத்தம் வராமல் அழுதது இவளுக்கு உணவு கொண்டுவரும்போது என்றுமில்லாமல் சிவந்திருந்த அவளின் கண்கள் சொல்லியது.

பிள்ளையளும் திரும்பிப் போய் கணவனும் லண்டன் போய் இன்றுடன் இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டன. என்னதான் கணவன் தன்மேல் வெறுப்பாக இருந்தாலும் சகுந்தலாவுக்கு கணவன் இல்லாத வீடு வெறிச்சோடியது போல் தான் இருந்தது. திட்டினாலும் கொட்டினாலும் ஒரு ஆம்பிளை வீடுக்கு வேணும் என அவள் மனம் எண்ணியது. இரண்டு வாரங்கள் ஆகும் கணவன் வர என எண்ணியவள் சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறாள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
சிறிய எழுத்தாக இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2018 at 2:00 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அஸ்மா வருத்தத்தோட மூட்டுவலியும் மெனப்போசும் ஏற்பட்டத்தில் உடலுறவில் ஆர்வமே இல்லாது எந்த நேரமும் பதட்டமும் சினமுமாக இருக்க, சகுந்தலா மகளின் அறையில் போய் படுக்க ஆரம்பித்தாள்.

சுமே இது கதையல்ல உண்மை போலவே தெரிகிறது.

ஒரே வயதுடைய அல்லது மனைவி வயது கூடினவர் என்றால் நிச்சயம் இப்படியான பிரச்சனைகள வர சந்தர்ப்பம் இருக்கிறது.

இதுக்கு தான் பழைய காலத்தில் திருமணம் செய்யும் போது மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு 5, 6 வயது குறைந்தவராக செய்து வைப்பார்கள்.

மனைவி மகளுடன் போய் படுத்தால் ஒரு கிழமை ஒரு மாதம் கழிய கணவன் கடைச் சாப்பாடு தேடி அலைவார்.

இது பல இடங்களில் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளையளும் திரும்பிப் போய் கணவனும் லண்டன் போய் இன்றுடன் இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டன. என்னதான் கணவன் தன்மேல் வெறுப்பாக இருந்தாலும் சகுந்தலாவுக்கு கணவன் இல்லாத வீடு வெறிச்சோடியது போல் தான் இருந்தது. திட்டினாலும் கொட்டினாலும் ஒரு ஆம்பிளை வீடுக்கு வேணும் என அவள் மனம் எண்ணியது. இரண்டு வாரங்கள் ஆகும் கணவன் வர என எண்ணியவள் சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறாள்.

இது தொண்டையில் குற்றிய முள்ளு தான் துப்புவதா? விழுங்குவதா?

  • கருத்துக்கள உறவுகள்

கோடு போட்டு, ஒரு காட்சியில் இரண்டு  படங்கள்.

இதை வாசிக்கும் போது “குடும்பம் ஒரு கதம்பம் பல வர்ணம் ..” என்ற பாடல். நினைவுக்கு வந்தது.

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிள்ளையளும் திரும்பிப் போய் கணவனும் லண்டன் போய் இன்றுடன் இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டன. என்னதான் கணவன் தன்மேல் வெறுப்பாக இருந்தாலும் சகுந்தலாவுக்கு கணவன் இல்லாத வீடு வெறிச்சோடியது போல் தான் இருந்தது. திட்டினாலும் கொட்டினாலும் ஒரு ஆம்பிளை வீடுக்கு வேணும் என அவள் மனம் எண்ணியது. இரண்டு வாரங்கள் ஆகும் கணவன் வர என எண்ணியவள் சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறாள்.

 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்தப் பிள்ளையும் தகப்பனை எதிர்த்துக் கதைக்காமல் பேசாமலே நிண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனிமேல் அப்பாவை எதிர்த்து ஒண்டும் கதைக்காதைங்கோ எண்டதும் இவள்தானே.

கலாலானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற பழமொழிக்கேற்ற பெண். கணவனின் அலட்சியத்தை நொந்துகொள்வதா மனைவியின் இயலாமை என்பதா பிற்போக்குத்தனம் என்பதா தனது பிற்போக்குத்தனத்தை தனது பிள்ளைகளுக்கும் கடத்திவிட்டவர் என்பதா , மேலாக  சமூகத்தின் சாபக்கேடு என்பதா என்ற எண்ணங்களே ஏற்படுகின்றது. ஆக்கத்திற்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த ஈழப்பிரியன், கவி அருணாச்சலம்,சண்டமாருதன்  ஆகிய உறவுகளுக்கும் புங்கைக்கும் குமாரசாமிக்கும் நன்றி. 

ஈழப்பிரியன் இந்து உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான். கற்பனை அல்ல.

8 hours ago, ஈழப்பிரியன் said:

இது தொண்டையில் குற்றிய முள்ளு தான் துப்புவதா? விழுங்குவதா?

எமது சந்ததிவரை இது தொடரும். அடுத்த சந்ததி இப்படி இருக்க மாட்டார்கள்.

 

2 hours ago, சண்டமாருதன் said:

 

 

கலாலானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற பழமொழிக்கேற்ற பெண். கணவனின் அலட்சியத்தை நொந்துகொள்வதா மனைவியின் இயலாமை என்பதா பிற்போக்குத்தனம் என்பதா தனது பிற்போக்குத்தனத்தை தனது பிள்ளைகளுக்கும் கடத்திவிட்டவர் என்பதா , மேலாக  சமூகத்தின் சாபக்கேடு என்பதா என்ற எண்ணங்களே ஏற்படுகின்றது. ஆக்கத்திற்கு நன்றிகள்.

இது எம் சமூகத்தில் ஊறிப்போன சாபக்கேடான பிற்போக்குத்தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தியாவுக்குத் திருமணமாகி நான்காம் நாளே தாயார் கூறியது இப்பவும் நன்றாக நினைவிருக்கிறது. உந்த மாப்பிளையை என்ர தம்பி எங்க தான் தேடிப் பிடிச்சானோ என்றது. மாப்பிளை லண்டனில் சிவில் இஞ்சினியர். வீடுவளவும் இருபது லட்சம் காசும் சீதனமாகக் கேட்க, இரண்டு சாதகமும் நல்ல பொருத்தம் என்று புரோக்கர் சொன்னவர். அதனால இதை முடிப்பம் என்று தாய் கூற எதுக்கு வெளிநாட்டு மாப்பிளை. நாங்கள் இங்கதானே இருக்கிறம். இங்கையே பேசுங்கோ என்ற மூத்த மகளை இதில் நீ தலையிடாதை, வந்திருக்கிறது நல்ல சம்மந்தம். அதுக்கென்ன அவள் வெளிநாடு பார்க்கட்டுமன் என்று வாயடைக்க வைத்தால், எதுக்கம்மா இத்தனை லட்சம் சீதனம். அக்காவுக்குப் பத்து லட்சம் தானே குடுத்தது. இவளுக்கும் அப்பிடிப் பார்ப்பம் என்ற மூத்த மகனின் சின்னத்தனம்புரிய, நீ உன்ர காசையே தரப்போறாய். அப்பா உழைச்காகாசு. இதில ஒருத்தரும் தலையிடாதைங்கோ என்றவளுக்கு சின்னவள் லண்டன் போனால் இவர்களுடன் தான் தான் இருக்கவேண்டிவரும் என்ற உண்மையும் உறைக்க, தம்பி அவள் ஏழிச்செவ்வாய்க்காறி. பொருந்துறது கஸ்ரம். வயதும் இருவத்தெட்டப் போச்சு. நீங்கள் எல்லாரும் சேர்ந்துதான் இதை வடிவா நடத்தி முடிக்க வேணும் என்று கூறிய பின் யாரும் எதுவும் கதைக்கவில்லை.

மாப்பிளை முகுந்தன் பார்க்க நல்ல வடிவாத்தான் இருகிறார். இரண்டுபேருக்கும் நல்ல பொருத்தம் என மனம் எல்லாம் நிறைந்து போனது தாய்க்கு. மகளும் மாப்பிளையும் இன்னும் இரண்டு வாரத்தில் லண்டன் திரும்பவேணும். மாப்பிளை எல்லா ஒழுங்கும் அங்கேயே செய்துகொண்டு வந்தபடியால் விசாவும் உடனேயே குடுத்துவிட்டார்கள். தாய்க்கு மகள் தன்னை விட்டுச் செல்வது மிகப் பெரிய கவலையும் இழப்பும் தான் என்றாலும் மகளின் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிட்டதே என்னும் மகிழ்ச்சியும் தான்.

இடியப்ப உரல் இடியப்பத் தட்டுக்கள், பிட்டுக்குழல் இட்டலித் தட்டு என எல்லாம் தான் வாங்கி அடுக்கினார். மகளும் விதவிதமாக ஆடை அணிகள் அணிபவள் தானே என அவளுடன் கடைகளுக்குச் சென்று பாவாடை சட்டைகள், விதவித ஆபரணங்கள் பொட்டுகள் கிரீம்கள் என எந்தக்குறையும் வரக் கூடாது என்று வாங்கிக் கொடுத்தாள். அப்போதெல்லாம் fair and lovly கிரீம் தான் சந்தியா பூசுவது. லண்டனில் இருக்குமோ என்னவோ என ஒரு ஆறு கிரீம்களை வாங்கி கொண்டு போகச்சொல்லிக் கொடுக்கும் தாயை விட்டுவிட்டுப் போகப் போகிறோமே என்ற கவலை சந்தியாவுக்கு எழுந்தது.

இரண்டு வாரத்தில் சூட்கேசில் எல்லாவற்றையும் அடுக்கும் போது முகுந்தனும் அருகில் இருந்தான். அவளின் நகைப் பெட்டியைப் பார்த்துவிட்டு உதேன் உது அங்கை. பவுண் நகைகள் மட்டும் போதும். மிச்சத்தை அக்காக்குக் குடுத்திட்டுவாரும் என்றதற்கு சந்தியாவும் உடனே தலையாட்டினாள். பஞ்சாபி உடைகளையும் சீலைகளையும் கொண்டுவாரும் உந்தப் பாவாடை சட்டையள் வேண்டாம் என்றதற்கும் அவளொன்றும் சொல்லவில்லை. எதுக்கு உத்தனை கிரீம். நீர் என்ன கறுப்பே உதுகளைப் போட. பவுடர் மட்டும் போடும் காணும் நீர் அழகாய்த்தான் இருப்பீர் என்றவுடன் மனம் குளிர அவற்றையும் வெளியே வைத்தாள். அரசல்புரசலாய் இவற்றைத் தெரிந்துகொண்ட தாயாருக்குத்தான் சினம் ஏற்பட்டது. எங்க தான் உந்த மாப்பிளையை என்ர தம்பி தேடிப் பிடிச்சானோ என்று மகளின் காதுபடக் கூறினாலும் மறுகணமே சுதாகரித்துக்கொண்டு அந்த நாட்டுக்குத் தேவையில்லையாக்கும் என சந்தியாவுக்குச் சமாதானம் செய்வதுபோல் கூறினாள். இளைய மகள் எதையும் சமாளிப்பாள் என்னும் நம்பிக்கையில் மனம் அமைதியுற்றது.

*********************************************************************************************************

வெளிநாடு போன கணவன் வரும் நாளை எதிர் பார்த்துக் காத்திருந்த சகுந்தலா, மாரடைப்பு ஏற்பட்டு  கணவன் வெளிநாட்டில் இறந்த  செய்தி கேட்டு முழுவதும் உடைந்துதான் போனாள். நீ சாகப்போறாய் சாகப்போறாய் என்று என் மனதைச் சாகடிச்சதுக்கு கடவுள் குடுத்த தண்டனைதான் இது என்று மனதுள் எண்ணினாலும் கணவனின் இழப்பை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. கணவன் இறந்ததைவிட அவர்பெயரில் இருந்த சொத்து உனக்கு எனக்கு என மற்றப் பிள்ளைகள் சண்டையிட அப்பா செத்து ஒரு வருஷம் ஆகேல்லை. அதுக்குள்ளை சொத்துக்கு அடிபடுறியளோ? ஒரு வருசத்துக்கு உந்தக்கதை ஒன்டும் கதைக்கக் கூடாது என்று அவள் கண்டிப்புடன் எப்பிடிக் குரல் உயர்த்திச் சொன்னாள் என்று தெரியவில்லை எல்லாரும் முணுமுணுத்து அடங்கிதான் போயினர்.

நல்லகாலம் இவளுக்காவது எண்குணம் வந்ததே. மற்ற நால்வரும் அப்பாவின் குணத்தோடுதான் பிறந்திருக்குதுகள் என்று எண்ணியபடி மகளின் திருமணம் பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள் சகுந்தலா. கணவன் இறந்தபின் அவளது ஆஸ்மாவும் கூடக் குறைந்துவிட்டது. தான்தானே இனி எல்லாம் செய்யவேணும் என்ற பொறுப்பு வீம்பாக அவளை எழுந்து நடமாடவும் வைத்துவிட்டது. மீண்டும் கொழும்புக்கே போய்விடுவோமா என எண்ணியவள் வேண்டாம் சொந்த இடத்தில சொந்த வீட்டில இருக்கிறதுபோல வருமோ என்று எண்ணி இங்கேயே இருக்க முடிவெடுத்து விட்டாள். மகளுக்கும் மானிப்பாய் லேடிஸ் கொலிச்சில் வேலையும் கிடைத்துவிட மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இவர்களால் வாழமுடிந்தது.

கணவன் பெயரில் இருந்த பணம் முழுவதும் இவள் பெயருக்கு மாற்றியாகிவிட்டது. தகப்பனின் செத்த வீட்டுக்கு வந்த நாலு பிள்ளைகளும் ஏதாவது கிடைத்தால் முதலில் சுருட்டலாம் என்பதுபோல் அலுமாரிகளில் தேடிப்பார்த்தார்கள். இவள் கடைக்குட்டிக்கு அந்த நேரத்திலும் மூளை வேலை செய்திருக்கு. முக்கியமான பத்திரங்கள் பணம் எல்லாம் எடுத்து பாதுகாப்பா வச்சிட்டு செத்தவீட்டுக்குத் தேவையான காசை  மட்டும் சகோதரங்களிடம் காட்ட அவர்களும் தங்களைக் காசு கேக்காட்டில் சரி என்று என்பதுபோல் பேசாமல் இருந்துவிட்டார்கள். என்றாலும் சகுந்தலாவுக்கு அப்பாவின் செத்தவீட்டுக்குச் சிலவழிக்கிறன் எண்டு சாட்டுக்குக் கூடக் மூத்தவன் கேட்கவில்லை என்று கவலைதான்.

பிள்ளைகளை எல்லாம் நல்லாப் படிப்பிச்சுத்தான் விட்டவர். அவையும் நல்ல வசதியோடை தான் வாழீனம். ஆனாலும் வந்த மருமக்கள் சும்மா விட்டுவினமே. மற்றப்படி என்ர பிள்ளையள் நல்லவைதான் என்று நொண்டிச் சமாதானத்தை மனம் சொன்னாலும், இவளும் கலியாணம் கட்டிப் போனால் நான் தனிச்சிடுவன் என்ற ஏக்கமும் எழாமல் இல்லை. இருந்தாலும் அவளை வெள்ளனக் கட்டிக் குடுத்திட வேணும். வயது கூடினாலும் கஷ்டம் என எண்ணியபடி யோசனையில் ஆழ்ந்தாள் சகுந்தலா.

*********************************************************************************************************

சந்தியா கலியாணம் கட்டி வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு குழந்தைகூட இல்லை.  பிறக்கும் பிறக்கும் என்று ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து ஏமாந்து இருவருக்குமே ஒருவித விரக்தி தோன்றிவிட்டது. மெடிகல் செக்கப் செய்வம் என்று கேட்டும் கணவன் பல நாள்வரை சம்மதிக்கவில்லை. கடந்த ஆண்டுதான் ஒருவாறு அவனைச் சம்மதிக்க வைத்துக் கூட்டிக்கொண்டு போனால் அவனின் விந்துக்களில் தான் குறைபாடு என்று வைத்தியர்கள் கூறினர். சோதனைக்குளாய்க் குழந்தையைப் பற்றிக் கூறி அதற்கும் கணவன் மறுத்து அடம்பிடிக்க ஒருவழியாய் நான்கு தடவைகள் லண்டனில் முயன்றும் சரிவரவில்லை. சந்தியா கோவிலுக்குச் செல்லும்போது அறிமுகமான ஒரு பெண் இந்தியாவில் கட்டாயம் உங்களுக்குக் குழந்தை கிடைக்கப் பண்ணுவினம். ஒருக்காப் போட்டு வாங்கோ என்று விபரம் எல்லாம் கூறிய பிறகு இவளின் கரைச்சல்  தாங்காமல் முகுந்தனும் சம்மதிச்சு ஒரு வருட துன்பத்தின்பின் குழந்தையும் கிடைத்தது.

ஒரு எட்டு மாதங்கள் கட்டிலிலேயே இருந்து அங்காலை இங்காலை அரக்கினால் பிள்ளை கலைந்துவிடுமோ என்று பாதுகாத்துப் பெத்த பிள்ளை. தாயாரும் இவளுடன் இந்தியாவில் வந்திருக்கச் சம்மதித்த பின்னர்தான் முகுந்தன் இவளை விட்டுவிட்டுவரச் சம்மதித்தான். தாய் பக்கத்தில் இருந்தாலும் கணவன் இல்லையே என்ற குறைதான். அவன் இடையில் ஒருவாரம் வந்துவிட்டுப்போனான் தான். ஆனாலும் அவனும் வேலை செய்தால் தானே இந்தச் செலவுகளைச் சமாளிக்கலாம் என்பதனால் சந்தியாவினாலும் ஒன்றும் கூற முடியவில்லை.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்களின் பின் தான் தாயாரை இலங்கைக்கு அனுப்பிவிட்டு இவள் லண்டன் வந்தாள். குழந்தையின் வரவு மீண்டும் இருவரின் வாழ்விலும் மகிழ்வையும் நெருக்கத்தையும் கொண்டு வந்தது. வேலை நேரம் போக மகளை தன் நெஞ்சில் தாங்கினான் முகுந்தன். பிள்ளைக்குத் தனித் தொட்டில் வாங்கவேண்டும் என்று இவள் கேட்டதற்கு அருவி பக்கத்து வீட்டுக் குழந்தையே. எங்கட பிள்ளை எங்களோட படுக்கட்டும் என்று கூறுவதைக்கேட்க இவளும் மகிழ்ந்து போனாள்.

மகளுக்குப் பத்து வயது. பொத்திப் பொத்தித்தான் வளர்க்கிறார்கள்.  மகளின் ஐந்து வயதுவரை இவள் வேலைக்குப் போகாமால் மக்களுடனேயே இருந்தாள். அதன்பின் அருவி பள்ளிகூடம் போகவாரம்பிக்க இவளும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள். கணவன் காலை ஒன்பது தொடக்கம் ஒரு மணிவரை வேலை. காலையில் அவனே மகளைப் பள்ளியில் விடுவான். மாலையிலும் அவனே கூட்டிவருவான். சந்தியா வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தரிப்பிடத்தில் பஸ் எடுத்து பள்ளிக்குச் சென்று வருபவள். காரில் செல்ல ஆசைதான். ஆனாலும் பக்கத்தில  பஸ் எடுத்து பக்கத்தில போய் இறங்கிற உனக்கு கார் என்னத்துக்கு என்று லைசென்ஸ் கூட எடுக்க விடவில்லை முகுந்தன். அவளுக்கும் பஸ் பயணம் பழகிவிட்டது.

இப்ப புதிதாக   ஒரு பிரச்சனை. மகளைத் தனி அறையில படுக்கவிடு என்று இவளுக்குக் கரைச்சல். உவள் சாமம் சாமமா நித்திரை கொள்ளாமல் இருக்கிறாள் . எனக்கு ஒண்டும் செய்ய எலாமல் கிடக்கு என்ற புலம்பல். நீங்கள் தானே அவளைத் தொட்டிலுக்கை போட விடாமல் வச்சிருந்தியள். இப்ப மட்டும் அவள் எங்கடை பிள்ளை இல்லையே? எங்களோட படுத்துப் பழகி அவள் தனிய படுக்கிறாள் இல்லை.என்னில குற்றம் சொல்லாதேங்கோ எல்லாம் உங்கடை பிழை. பிள்ளையிட்டை என்னைக் கெட்டவள் ஆக்கலாம் என்று பாக்கிறியளோ என்ற சந்தியாவைப் பார்த்து நீ இப்ப நல்லாக் கெட்டுப் போனாய். தொட்டதுக்கும் பதில் சொல்லிக்கொண்டு நிக்கிறாய். பள்ளிக்கூடத்தில ஆரோ உனக்கு நல்லாச் சொல்லித்தரீனம் போல என்றவனை இடைமறித்து நான் என்ன பள்ளிக்கூடம் போகாத ஆளே. நான் ஒரு பட்டதாரி ஆசிரியர். உங்களளவு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சுய புத்தி இருக்கும் தானே என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது முகுந்தன் முழிக்க கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்ந்தாள் சந்தியா.

இப்ப கொஞ்ச நாட்களாக மீண்டும் அவள் கிரீம் எல்லாம் வாங்கிப் பூசத் தொடங்கிவிட்டாள். பள்ளிக்குச் செல்லும்போதும் அளவோடு தன்னை அலங்கரிக்க மறப்பதில்லை. முன்னர் திருமணமாகி வந்த காலத்தில் யாரினதும் திருமண வீடுகளுக்குச் செல்லும்போது இவள் சேலையை அழகாக மடித்து உடுப்பாள். அப்படி உடுக்கும் போது இன்னும் அழகாகவும் தெரிவாள். அங்கு காணும் யாராவது ஒருவர் நல்ல ஆழகாய் இருக்கிறீர்கள் என்றால் இவள் கண்களில் மகிழ்ச்சியும் முகுந்தனின் கண்களில் சினமும் தான் தெரியும். எல்லாருக்கும் உந்த இடுப்பைக் காட்ட வேணுமே. இனிமேல் உப்பிடி உடுக்காதையும் என்பதற்கு ஆரப்பா என்ர  இடுப்பைப் பாத்தது. அப்பிடி ஆரும் பார்த்தமாதிரித் தெரியேல்லையே என்று இவள் பகிடியாகச் சொன்னாலும் என்ர மனிசியை மற்றவை பார்த்து ரசிக்கிறது எனக்குப் பிடிக்கேல்லை. உம்மடை அழகு நான் ரசிக்க மட்டும் தான் என்று கூறியதன் அர்த்தம் அவளுக்கு விளங்கிவிட அதன் பின் சேலையைச் சொரியவிட்டே கட்ட ஆரம்பித்தாள். அவளுக்கே அவளைப் பார்க்க ஐந்து வயது கூடியவளாய்த் தெரிந்தது.

கொழும்பில்  இருந்த போது தலைமுடி அலங்காரம் பயின்றது இப்போது உதவுகிறது என எண்ணிக்கொண்டு ஒரு திருமணத்துக்கு அழகிய அலங்காரத்துடன் வெளிக்கிட்டவள், அவன் நிட்சயமாய்ப் பாராட்டுவான் என்று எண்ணியபடி பார்க்க அவனோ உமக்கு நிறையத் தலைமயிர் தானே. சும்மா பின்னிக்கொண்டு வாரும் என்றதும் மனதுள் எதோ அழுத்துவதுபோல் எழுந்த வலியத் தாங்கியபடி முடியை அவிழ்த்து சாதாரனமாகப் பின்னல் இட்டபடி வந்தவளைப் பார்த்து இப்பதான் நீர் எனக்கு வடிவாய் இருக்கிறீர் என்று சொல்பவனை எந்தவித உணர்வுமற்றுப் பார்த்தாள் சந்தியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது யாரும் கதையை வாசிக்கவில்லையா ????

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் படித்தும் கதையின் திருப்பத்தை இன்னும் அறியவில்லை. இன்னும் வருமா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது யாரும் கதையை வாசிக்கவில்லையா ????

நான் வாசிச்சனான் எண்டு சொன்னால் நம்பவே போறியள்? tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சகுந்தலா ஆன்டி போன்றவர்கள்.... ஆண்களின் அதிகாரமும் அடக்குமுறையும் கையோங்கி நிற்கின்றது. கையிலே எந்தப்பிடியும் இல்லாமல் வாழும் பெண்களுக்கு ஒரு அறிவுறுத்தலாக எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானே இன்று வந்தனான் ஒரே மூச்சில் வாசிச்சிட்டன், மற்றவர்கள் வாசிக்காமல் இருப்பினமே... நீங்கள் விடுகதையை அவிட்டால்தான் கருத்துக்கள் வரும் போல....! எழுதுங்கோ நல்லாய் இருக்கு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எவ்வளவு படித்தாலும் முன்னேறினாலும்  வெளி நாட்டில்  வாழ்ந்தாலும் பெண் விடுதலை எனக் கூவினாலும்  , மேடைப்பேச்சுக்களில் முழங்கினாலும் .. ஆணாதிக்கம் இப்பவும் இருக்கிறது . அடக்குமுறையும் இருக்கிறது  வேறுயாராவது தன்பெண்டாடியை கொண்டுபோய்விடுவாரோ என்று ஏக்கம் தான் போலும்tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 9:22 AM, கிருபன் said:

எல்லாம் படித்தும் கதையின் திருப்பத்தை இன்னும் அறியவில்லை. இன்னும் வருமா!

முடிந்தது என்று போட்டேனா என்ன ?

On 19/02/2018 at 10:44 AM, குமாரசாமி said:

நான் வாசிச்சனான் எண்டு சொன்னால் நம்பவே போறியள்? tw_glasses:

நம்புறன் எண்டு சொன்னாலும் நம்பவா போரியள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 11:30 AM, வாத்தியார் said:

பாவம் சகுந்தலா ஆன்டி போன்றவர்கள்.... ஆண்களின் அதிகாரமும் அடக்குமுறையும் கையோங்கி நிற்கின்றது. கையிலே எந்தப்பிடியும் இல்லாமல் வாழும் பெண்களுக்கு ஒரு அறிவுறுத்தலாக எடுக்கலாம்.

பலர் இன்னும் அப்பிடித்தானே. புலத்திலும் புலம்பெயர் நாடுகளிலும்.

On 19/02/2018 at 3:57 PM, suvy said:

நானே இன்று வந்தனான் ஒரே மூச்சில் வாசிச்சிட்டன், மற்றவர்கள் வாசிக்காமல் இருப்பினமே... நீங்கள் விடுகதையை அவிட்டால்தான் கருத்துக்கள் வரும் போல....! எழுதுங்கோ நல்லாய் இருக்கு....!  tw_blush:

எழுதாமல் ???

On 19/02/2018 at 4:59 PM, நிலாமதி said:

பெண்கள் எவ்வளவு படித்தாலும் முன்னேறினாலும்  வெளி நாட்டில்  வாழ்ந்தாலும் பெண் விடுதலை எனக் கூவினாலும்  , மேடைப்பேச்சுக்களில் முழங்கினாலும் .. ஆணாதிக்கம் இப்பவும் இருக்கிறது . அடக்குமுறையும் இருக்கிறது  வேறுயாராவது தன்பெண்டாடியை கொண்டுபோய்விடுவாரோ என்று ஏக்கம் தான் போலும்tw_blush:

ஆண்களுக்கு தம்மீது உள்ள நம்பிக்கையின்மையைத்தான் இது காட்டுது அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சனிக்கிழமை அநேகமாக நேரம் செல்லத்தான் எல்லாரும் கட்டிலை விட்டு எழுவது. எப்பிடியும் ஒரு ஒன்பது மணி ஆகும். விழிப்பு வந்தாலும்கூட கதைத்துக்கொண்டு படுத்திருப்பார்கள். இடையில் இவள் போய் மூவருக்குமாகக் கோப்பி போட்டுக்கொண்டு வருவாள்.

இன்று முகுந்தனுக்கு முழிப்பு வந்து பார்த்தபோது நேரம் ஒன்பதாகிவிட்டிருந்தது. இரவிரவாக சந்தியாவை என்ன செய்து நிப்பாட்டலாம் என்று யோசித்துக்கொண்டு இரவிரவாப் புரண்டு படுத்ததில காலமை ஒரேயடியாய் அமுக்கிப் போட்டுதுபோல என எண்ணியபடி படுக்கை அறையை விட்டு வழியே வந்த முகுந்தன் குளியலறைக்குச் சென்று பல்தீட்டி முகம் கழுவிவிட்டு வந்தால் வீட்டில் எந்தச் சலனமும் இல்லை. குசிநிக்குள்ளும் சென்று எட்டிப் பார்த்தவன், மகளையும் காணவில்லை என்றதும் பதட்டமானான்.

எனக்கும் சொல்லாமல் எங்க போட்டினம் என எண்ணியவன் கண்களில் உணவு மேசைமேல் இருந்த பேப்பரும் அதன்மேல் வைத்திருந்த சிறிய பொம்மையும்கண்ணில் பட அதைச் சென்று எடுத்தான்.

அன்புள்ள முகுந்தன்,

நான் மகளையும் கூட்டிக்கொண்டு பள்ளிச் சுற்றுலாவுக்குப் போறன். உங்களுக்குச் சொல்லாமல் போனது தவறுதான் எனினும் காலையில் சொன்னால் மகளின் முன்னால்  நீங்கள் என்ன கூத்து எல்லாம் ஆடி என்னை நிப்பாட்ட முயல்வீர்கள் என்று தெரியும். நானும் நன்றாகப் படித்தவளாய் இருந்தும் இத்தனைநாள் படிப்பறிவற்ற பெண் எப்படிக் கணவனுக்குப் பயந்து இருப்பாளோ அப்பிடி இருந்துவிட்டேன். அதற்குக் காரணம் உண்மையில் பயம் அல்ல. ஒன்று உங்கள் மேல் உள்ள அன்பு. மற்றது குடும்பம் நின்மதியாகப் போகவேணும் என்பதும்தான். உங்களை நான் இதுவரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியதேல்லை. உங்களைத் திருமணம் செய்ததன் பின் என் விருப்பத்துக்குச் செய்தது என்று ஒரு விடயமாவது இருக்கா சொல்லுங்கள்? எனக்கும் விருப்பு வெறுப்புக்கள் ஆசைகள் என்று எத்தனையோ இருக்கு. இனிமேல் என் நியாயமான ஆசைகளை நான் நிறைவேற்றிக் கொள்ளத்தான் போகிறேன். நானும் மகளும் திரும்பிவர நான்கே நான்கு நாட்கள் தான். அதற்குள் தனியாக இருந்து நீங்கள் சரி பிழைகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இப்ப மட்டுமல்ல எப்போதும் எனக்கு உங்களிடம் உள்ள அன்பும் நம்பிக்கையும் குறைந்துவிடாது.  என் அம்மா சகுந்தலாவையும் நான் என்னுடன் அழைத்து வைத்திருக்கப் போகிறேன். அப்பாவும் உங்களைப் போலத்தான். அம்மாவை சுதந்திரமாக இருக்க விடாது அடிமையாகவே நடத்தினார். அம்மா இருக்கப்போகும் கொஞ்ச நாட்களாவது என்னுடன் அவரை சுதந்திரமாக வைத்திருக்கப்போகிறேன். வேறு ஒன்றில்லை.

அன்புடன் மனைவி

சந்தியா   

 

தொடராது இனி

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...! ஒரு பூ புயலாகி விட்டது. அத்தான் இனி அடக்கித்தான் வாசிக்கணும்.....!  tw_blush: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.