Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஞானியின் கதை - நிழலி (சிறுகதை)

Featured Replies

அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது.

ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது.

அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார்.

இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக அந்தக் கடைக்குச் செல்வது என் வழக்கம். அங்கிருக்கும் மரக்கறி வகைகளும் மீன் வகைகளும் ஓரளவுக்கு தரமாக இருப்பது அங்கு அடிக்கடி செல்வதற்கு காரணமாக இருப்பினும், காஷ்சியரில் நிற்கும் ஒரு பெட்டை கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பதும் இன்னொரு கூடுதல் காரணம்.அந்தக் கடையில் தான் இந்த ஆள் சி.டி.கள், டி.வி.டி.கள் விற்கும் பிரிவில் நிற்பார். அனேகமாக இவர் தான் அதற்கு பொறுப்பு என நான் நினைப்பதுண்டு. அவரிடம் ஒரு போதும் எதுவும் வாங்க நினைப்பதில்லை.

அவருக்கு உள்ளூர நான் தன்னை வெறுப்பது தெரியும் என்பது போலத்தான் அவர் பாவனைகளும் இருக்கும். ஒரு நமுட்டுச் சிரிப்பை கக்கத்துக்குள் வைத்திருந்து என்னைக் கண்டதும் தன் முகத்தில் விரித்து வைப்பார். பார்க்க எரிச்சலாக இருக்கும்.

மகளை இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன போது அவள் விரும்பிச் சுவைத்தவற்றில் ஒன்று கிரீம் சோடா. கனடாவுக்கு வந்த பின்பும் அவளுக்கு பிடித்த பானமாக அதுதான் இருக்கின்றது. இங்கு தமிழ் கடைக்கு போகும் போது வா என்று கூப்பிட்டால் இலேசில் வர மாட்டாள். ஆனால் கிரீம் சோடா வாங்கித் தருவன் என்று சொன்னால் உடனே என்னுடன் வந்து விடுவாள்.

அன்றும் அப்படி அவளையும் கூட்டிக் கொண்டு வழக்கமாக போகும் அதே தமிழ் கடைக்கு போன போது அவளைக் கண்டு அந்த மனுசன் மெலிதாக புன்னகைத்தார். புன்னகைத்த பின் என் முகத்தையும் நேராக பார்க்கும் போது என்னால் பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. போனால் போகட்டும் என்று ஒரு சிறு புன்னகையை தெளித்து விட்டன்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவர் என் கைகளை திடீர் என்று பற்றிக் கொண்டார். என்னை உற்று உற்றுப் பார்த்தார். சில கணங்கள் மெளனமாக நின்றார். பின் என்ன நினைத்தாரோ அல்லது ஏன் நினைத்தாரோ தெரியவில்லை மட மடவென கதைக்கத் தொடங்கினார்.

-----------------------------------------------------------------------
இருள் ஒரு திரவம் போல கண்களில் திடீரெனப் பரவத் தொடங்கியது. அருகில் இருந்த எல்லாம் ஒரு கணத்தில் எவையுமற்றதாகிப் போயின.மனம் ஒரு புள்ளியில் மட்டும் நிலைத்து நின்றது. எல்லையற்ற மெளனம் ஒரு சிறு குமிழாக உருவாகி பெரும் காடாக மனதில் விரிந்து சென்றது.

"அந்தக் கணத்தை எப்ப நினைத்தாலும் இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது தம்பி"

"என்னைச் சுற்றி எல்லாமே இருளாகவும் எல்லாமே இல்லாமல் போனதாகவும் தான் அந்தக் கணத்தில் எனக்கு தெரிந்தது"

"இந்த நாட்டுக்கு நான் வந்து 30 வருடங்களுக்கும் மேல் ஆகுது. பக்கத்து விட்டு சேமியோனின் குடும்பமே சிங்களம் போட்ட குண்டில் சிதறிப் போக அங்கு இருந்தால் என் குடும்பத்துக்கும் இப்படித்தான் ஆகும் என்று வெளிக்கிட்டவன் தான் தம்பி"

"மனிசியையும் மகனையும் கொழும்பில கொண்டு வந்து விட்டுட்டு ஏஜென்சி மூலம் ஏறி இங்கு வந்து சேர ஆறு மாசம் எடுத்தது தம்பி"

"வந்த அடுத்த நாளில் இருந்து ஒரு மெஷின் மாதிரி ஓடிக்கொண்டே இருந்தனான். முதலில் மனிசியையும் மகனையும் இங்கு எடுக்க மூன்று வேலைகள் செய்யத் தொடங்கினன் தம்பி. அவர்கள் வந்த பின் மேலும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்க இந்த மெஷின் அதுகளுக்காக இன்னும் இன்னும் ஓடத் தொடங்கிச்சு தம்பி"

"வாரத்தில் ஏழு நாளும் வேலை. ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டும். வருசம் கூட கூட வேலையிலும் பொறுப்புகள் கூட இந்த மெஷின் இன்னும் இன்னும் ஓடிச்சுது தம்பி"

"வெளியில போன பிள்ளைகள் வீட்ட வரும் போது அம்மாக்காரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவவை நான் வேலைக்கு விட வில்லை தம்பி"

"பிறகு பிள்ளைகளும் வேலைக்கு போகத் தொடங்கி இருப்பினமே அண்ணா" நான் அவரிடம் கேட்டேன்.

"ஓம் தம்பி ..ஆனால் நிலையான ஒரு இடத்துக்கு வரும் வரைக்கும் நானும் வேலை செய்தால் தான் அவர்களுக்கு வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று நான் என்ர வேலையை விடேல்ல தம்பி"

"அப்படி ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போதுதான் எனக்கு அப்படி எல்லாமே ஒரு நொடியில் இருளத் தொடங்கிட்டு. பிரமை பிடிச்ச மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரே ஒரு புள்ளியை பார்த்துக் கொண்டு...."

"எனக்குள் ஏதோ உடைந்து போன மாதிரி ஆயிட்டுது... அவ்வளவு நாளும் நான் சேர்த்து சேர்த்து வைச்சு இருந்த எல்லா நினைவுகளும் ஒரு வினாடியில் எனக்குள் இருந்து வெளியே போயிட்டுது தம்பி"

" ஒரு அழி றபரால எல்லாவற்றையும் அழிச்ச மாதிரி என் பெயர் தொட்டு நான் ஆர் என்ற வரைக்கும் மறந்து போச்சுது தம்பி"

"எதுவுமே ஞாபம் இல்லை. பெயர் ஊர் நான் ஆர், எங்க வீடு, மனிசி பிள்ளைகள் - எல்லாமே மறந்து போச்சு தம்பி"

"நான் ஒரு செத்த சவம் போல ஆகிட்டன் தம்பி"

"அதுக்கு பிறகு நடந்தது எனக்கு நினைவில் இல்லை. வேலையில் எனக்கு இப்படி நடந்ததால் கம்பெனியே பொறுப்பெடுத்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தது. 8 மாதங்கள் ஆஸ்பத்திரி வீடு என்று என்னை உருட்டி எடுத்தது வாழ்க்கை"

"உங்களுக்கு நினைவுகள் வரத் தொடங்கவில்லையா அண்ணா" நான் அவரது கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டு கேட்கின்றேன்.

"8 மாதங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் வரத் தொடங்கிட்டு"

"ஆனால் எனக்கு அப்படி வராமல், நினைவுகள் எதுவுமே இல்லாமல் ஒரு விசரனாக செத்து போயிக்க வேண்டு தம்பி"

"ஏன் அண்ணா...." என்னால் அவரது பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை"

"ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும், ஒவ்வொருவரும் யார் என்று நினைவு வரும்போதுதான் எனக்கு இந்த வாழ்க்கை மேல அப்படி ஒரு வெறுப்பு தம்பி"


"வீட்டை கொண்டு வந்த பிறகு வந்த நாட்களில் ரிவி போட்டால் ஓப் பண்ணவோ அல்லது மற்ற சனலுக்கு மாற்றவோ தெரியாது.. படிகளில் ஏறத் தெரியும் ஆனால் இறங்க பயமாக இருக்கும். 24 மணித்தியால மணிக்கூட்டை புரிய முடியவில்லை. ஆராவது வெளியே போனால் வீட்ட வர மட்டும் தனிய இருக்க செரியான பயமாக இருக்கும்"

"சப்பாடு எல்லாம் கரண்டியால சாப்பிட முடியவில்லை. கைகளால் சாப்பிட்டாலும் இடது கையால தான் சாப்பிட தொடங்கினன்"

"ஏன் அண்ணா... உங்கள் குடும்பம் ... உங்களை...." எனக்கு மெலிதாக ஏதோ புரிய உணர்வுகள் தழம்பத் தொடங்கின

அவரின் கண்கள் தீர்க்கமாக எதையோ தேடின. அவரது மனவேகத்துக்கு சொற்கள் இசையவில்லை என நினைக்கின்றேன். இதயக் கூடு மேலே எழும்பி எழும்பி தணிந்தது அவருக்கு.

சில வினாடிகள் மெளனமாக இருந்தார்.பின்

"என்னை ஹோலில் வைத்து விட்டு என்னைச் சுற்றி இருந்து என்னைப் பற்றி கதைப்பார்கள் தம்பி."

"சனியன் செத்து போயிருந்தால் கூட பரவாயில்லை... இப்படி இருந்து உசிரை எடுக்குது" என்று சொல்லிவினம் தம்பி

"பேஸ்மண்டில் கொண்டு போய் தள்ளி விட்டாலும் இதுக்கு மேலே வரத் தெரியாது...கிடந்து உழலுது என்று சொல்லுவினம் தம்பி"

"எனக்கு நினைவுகள் சரியாக வராவிட்டாலும் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள ஏலும் என்றது அவையளுக்கும் தெரியும் தம்பி. ஆனாலும் என்னை குத்தி காயப்படுத்தி பார்க்க அப்படி ஒரு ஆசை அவர்களுக்கு"

"ஏன் அண்ணா... உங்கள் மனைவி...?"

"அவா என்ன செய்வா.... நானும் இப்படி ஒரே அடியாக வீழ்ந்து விட்டதால் பிள்ளைகள் சொல்லுக்கு தானே கட்டுப்பட வேண்டும் தம்பி"

"ஆனாலும் பிள்ளைகளுடன் சேர்ந்து அவவும் என்னை திட்டுவதைத்தான் என்னால் கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை தம்பி"

"30 வருடம் ஓடியதால் களைத்துப் போன இந்த மெஷினை எப்படா ஒரே அடியாக தூக்கி எறியலாம் என்று தான் எல்லாரும் யோசிச்சினமே ஒழிய இந்த மெஷினுக்கு இன்னும் உசிரும் உணர்வும் இருக்கு என்று விளங்கிக் கொள்ளவில்லை "

"நினைவுகள் முழுசா வர வர வேதனைகள் தான் கூடிச்சு "

"வருத்தம் வந்தாலும் வயசு போனாலும் இந்த மனசுக்கு அது தெரிவதில்லை தம்பி. அது எப்பவும் போல அடி மனசுக்குள் அன்பை எதிர்பார்த்து யாராவது அரவணைப்பார்களா என ஏங்கும் தம்பி"

எனக்குள் ஏதோ அறுந்து போய் கொண்டு இருந்தது. கண்களின் ஓரம் மெலிசாக ஓடத் தொடங்கி சில நிமிடங்கள் ஆயிருந்தன.

"சரி அண்ணா.. ஆனால் இப்ப நீங்கள் சரியாகத்தானே ஆகிட்டீர்கள். தனியாக கடையின் ஒரு பகுதியை பொறுப்பெடுத்து நடத்துகின்றீர்கள்..." நான் கேட்டேன்

"ஓம் தம்பி... எனக்கு இப்ப முழுக்க சரியாகிட்டுது. 3 வருசங்கள் ஆச்சுது சரியாக தம்பி"

"போன நினைவுகள் சுனாமி மாதிரி திரும்ப வரும் போது மறந்த விடயங்களையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது. என்னால சின்ன வயதில நடந்த எல்லா விடயங்களையும் திகதி வாரியாக சொல்ல முடியும் தம்பி"

"இப்பவும் குடும்பத்துடனா இருக்கின்றியள்?" நான் கேட்டன்

ஒரு மெலிதான... ஏளனமான அந்த சிரிப்பு அவரின் முகத்தில் பரவியது. அவர் குரலில் தொற்றிக் கொண்டது உற்சாகமா அல்லது இவ் உலகைப் பார்த்து செய்யும் நையாண்டியின் மொழியா என தெரியவில்லை.

"ஓம் தம்பி. ஆனால் முன்னை மாதிரி இல்லை. நானே ராஜா நானே மந்திரி ... மாசம் காசு கொண்டு வருதால் எனக்கு அங்கு இப்ப திருப்பி நடப்பு இருக்கு..வீடும் என்ற பெயரில் தான் இருக்கு. ஆனாலும் நானே எனக்கு உரிய சாப்பாட்டை சமைச்சு, நானே என்னை முழுக்க கவனிச்சு... எனக்கு பிடிச்ச எல்லாவற்றையும் நானே செய்றன் தம்பி"

"இப்பதான் தம்பி என்ற வாழ்க்கையை நான் வாழ்றன்"

சில வினாடிகள் மெளனமாக இருந்தார். பின்னர்

"கெதியன இவர்கள் எல்லாரையும் விட்டுட்டு ஒரு நாள் நான் வெளியே போய் விடுவன் "

"எங்கே அண்ணா போவீர்கள்..."

அவர் பற்றியிருந்த கைகளை விடுவித்துக் கொண்டு "சரி தம்பி பிள்ளை கன நேரமாக எங்களையே பார்த்துக் கொண்டு நிற்குது" என்று சொல்லி மகளின் கன்னத்தில் தடவி விட்டு கடைக்கு வெளியே சென்றார்'

"அப்பா ஏன் அவர் உங்களிட்ட இப்படி தன் பிரைவேட் கதையை சொன்னார்" என்று மகள் கேட்டாள். என்னிடம் பதில் இருக்கவில்லை. மனம் முழுசும் மனிதர்கள்  மீதான வெறுப்பு படந்து இருந்தது.


* ***************************************************************

அடுத்த கிழமை கடைக்கு போய்அவரை உள்ளே சென்று தேடிப்பார்க்கும் போது அண்ணா இருக்கவில்லை. கடைக்கு போனால் ஆரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவ்வளவு காலமும் தவிர்த்தேனோ அவரை தேடி தேடி கடைக்குள் சுற்றி வந்தேன். அவரை காண முடியவில்லை.

சாமான்கள் வாங்கி காசும் கொடுத்து வெளியே வந்து காரை ஸ்ராட் பண்ணும் போது தான் எதேச்சையாக கடையின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு இருந்த அந்த நோட்டீஸ் கண்களில் பட்டது.

"காணவில்லை" எனும் தலைப்பிட்டு அந்த அண்ணாவின் படம் போட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

மனம் பதபதைக்க காரை விட்டு இறங்கிச் சென்று காணாமல் போன திகதியை பார்க்கின்றேன்.

அதே திகதி....தன் கதையை எனக்கு சொன்ன அதே திகதி!

(யாவும் கற்பனை அல்ல)

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நிறைய முதியவர்களின் நிலைமை இப்படித்தான் போகின்றது..... வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு.பெரும்பாலும் பெண்கள் நாணல்போல் சமாளித்து கொண்டு போய் விடுவார்கள், ஆண்கள்தான் பனைமரம் மாதிரி நிண்டால் நேரே, விழுந்தால் வேருடன்......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

அடுத்த கிழமை கடைக்கு போய்அவரை உள்ளே சென்று தேடிப்பார்க்கும் போது அண்ணா இருக்கவில்லை. கடைக்கு போனால் ஆரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவ்வளவு காலமும் தவிர்த்தேனோ அவரை தேடி தேடி கடைக்குள் சுற்றி வந்தேன். அவரை காண முடியவில்லை.

அவர் பட்ட வேதனையை விட அவரைக் காணாதது ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கும்.

கனடாவில் குடும்பத்துக்காக இரண்டு மூன்று வேலை செய்து குடும்பமே இல்லாமல் வீதிக்கு வந்தோர் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும், சோகம் நிறைந்த கண்ணீர்  கதை. 😢
இப்படி ஒரு நிலைமை... எவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எம்மையும் தயார் படுத்தச் சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாக எழுதப்பட்ட மோசமான கதை. ஆனாலும் எல்லோரும்  இப்படியானவர்கள் அல்ல என்னும் உண்மை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது. மனைவிகூட இவரை ஒதுக்குகிறார் என்பதை நம்பமுடியாதுள்ளது. அது உண்மையாயின் அவர் மனைவியுடன் நல்ல வாழ்வு வாழாது பணம் பணம் என்று ஓடியுள்ளார். இவரிலும் தப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அழுத்தமான கதை...என்றாலும் ஒருக்கா --------- லான்ட் கடைக்கும் போகச்சொல்லுது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ,பெண்களது மனதை புரிந்து கொள்ளாமல் பணம் ,பணம் என்று ஓடினால் இந்த நிலைமை தான் 😞

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/22/2020 at 9:59 AM, suvy said:

புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நிறைய முதியவர்களின் நிலைமை இப்படித்தான் போகின்றது..... வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு.பெரும்பாலும் பெண்கள் நாணல்போல் சமாளித்து கொண்டு போய் விடுவார்கள், ஆண்கள்தான் பனைமரம் மாதிரி நிண்டால் நேரே, விழுந்தால் வேருடன்......!   🤔

தகப்பன் தனித்து விடப்படும் நிலை பல இடங்களில் நடந்தேறியுள்ளது.நடந்து கொண்டும் இருக்கின்றது. இதனால் தான் நான் முன்பொருதடவை யாழ்களத்தில் ஒரு கருத்து எழுதியிருந்தேன். அதாவது மனைவி உயிருடன் இருக்கும் போதே நான் இறந்துவிட வேண்டும் என.இதில் எனது சுயநலம் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தையும் சூழ்நிலைகளையும் நான்  நம்ப தயாரில்லை. நீங்கள்  கூறியது போல்  பெண்கள் நாணல் போன்றவர்கள்.ஒரு வயதிற்கு பின் அவர்கள் பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து கணவனுக்கும் தாயாக இருப்பவர்கள்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிக நன்றாக எழுதப்பட்ட மோசமான கதை. ஆனாலும் எல்லோரும்  இப்படியானவர்கள் அல்ல என்னும் உண்மை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது. மனைவிகூட இவரை ஒதுக்குகிறார் என்பதை நம்பமுடியாதுள்ளது. அது உண்மையாயின் அவர் மனைவியுடன் நல்ல வாழ்வு வாழாது பணம் பணம் என்று ஓடியுள்ளார். இவரிலும் தப்பு உள்ளது.

பல வருடங்களிற்கு முன் உங்களைப்போல் தான் நானும் நம்ப முடியவில்லை. ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்த போதுதான் நிலமைகளை காண முடிந்தது. 
முதலாவது கனடாவில்....வயது முதிர்ந்த இரு பெண்பிள்ளைகள். அவர்களுடன் தாயர் பிரிந்து சென்றுவிட்டார்.தகப்பன் நோய்கள் வந்து கஷ்டப்படும் போது கூட அவர்கள் எட்டியும் பார்க்கவில்லை. ஆனால் கணவன் மூலம் கிடைக்கும் வாழ்வாதார உதவிப்பணம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்.கணவர் கொஞ்சம் கண்டிப்பானவர். பிள்ளைகளின் போக்கு அவருக்கு பிடிக்கவில்லை.காரணம் இந்திய சீக்கியர்களுடனான பழக்கவழக்கங்கள்.தவிர்க்குமாறு கண்டித்தார். மனைவியோ ஆதரவளித்தார். முடிவு தந்தையை/கணவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இரண்டாவது நிழலியின் கதை.......
மூன்றாவது இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்தேறியிருக்கின்றது
ஜேர்மனியில் கூட இரு தந்தையர் மனவேதனையால் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

பல வருடங்களிற்கு முன் உங்களைப்போல் தான் நானும் நம்ப முடியவில்லை. ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்த போதுதான் நிலமைகளை காண முடிந்தது. 
முதலாவது கனடாவில்....வயது முதிர்ந்த இரு பெண்பிள்ளைகள். அவர்களுடன் தாயர் பிரிந்து சென்றுவிட்டார்.தகப்பன் நோய்கள் வந்து கஷ்டப்படும் போது கூட அவர்கள் எட்டியும் பார்க்கவில்லை. ஆனால் கணவன் மூலம் கிடைக்கும் வாழ்வாதார உதவிப்பணம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்.கணவர் கொஞ்சம் கண்டிப்பானவர். பிள்ளைகளின் போக்கு அவருக்கு பிடிக்கவில்லை.காரணம் இந்திய சீக்கியர்களுடனான பழக்கவழக்கங்கள்.தவிர்க்குமாறு கண்டித்தார். மனைவியோ ஆதரவளித்தார். முடிவு தந்தையை/கணவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இரண்டாவது நிழலியின் கதை.......
மூன்றாவது இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்தேறியிருக்கின்றது
ஜேர்மனியில் கூட இரு தந்தையர் மனவேதனையால் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

கடவுளே என்னை நல்ல குடும்பத்தில் பிறக்க வத்ததுக்கும்  நல்ல கணவன் குழந்தைகளைத் தந்ததுக்கும் கோடி நன்றி. ஆனால் மறதி வருத்தம் எனக்கு வராமல் என் கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.😧

  • தொடங்கியவர்

பின்னூட்டம் இட்ட, ஊக்குவிப்பு புள்ளிகளை இட்ட அனைவருக்கும் நன்றி.

எம் சமூகத்தில் பொதுவாக குடும்ப வன்முறை என்பது பெண்களுக்கு எதிராக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றது எனும் எண்ணம் உள்ளது. அதேயளவுக்கு இல்லையெனிலும், ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. இதில் Verbal abuse எனப்படும் வார்த்தைகளின் மூலம் காயப்படுத்துவது, senior abuse எனப்படும் முதியவர்களை கவனியாது விடப்படுவது போன்றன தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இங்கு கனடாவில் பெண் ஒருவர் பொலிசுக்கு தொலைபேசி அடித்து கணவனால் வன்முறைக்குள்ளாகின்றார் என சொல்லி தனக்கான பாதுகாப்பை கோருவது அடிக்கடி இடம்பெறும். ஆனால் இதே போன்று ஒரு ஆண் பொலிசுக்கு தொலைபேசி எடுத்து சொல்வதில்லை. இதில் ஆண் எனும் கர்வமும் அப்படி சொன்னால் தன் மானம் போய்விடும் என்ற எண்ணமும் பிரதானமாக பங்கு பகிக்கின்றது. எனவே தான் பிரச்சனை முற்றி வெடிக்கும் போது கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தக் கதையில் வருபவர் போன்று தான் என் மாமாவும் இருந்தார். வாரம் முழுதும் நாளொன்றுக்கு பல மணி நேர வேலை. ஈற்றில் நீரிழவு நோய் முற்றி அவரது கால்களில் பிரச்சனை வந்து நடக்க முடியாமல் போனபோது குடும்பம் பெரியளவுக்கு கவனிக்கவில்லை. அம்புலன்சிற்கு அடித்து சொன்னதுடன் விட்டு விட்டார்கள். ஆனால் கொஞ்சம் ஆழமாக இறங்கி நோக்கும் போது மாமா தன் வேலை வேலை என்று ஓடியமையால் நல்லதொரு ஆரோக்கியமான குடும்ப உறவை ஏற்படுத்துவதில் தவறி விட்டார். Emotional Feelings எதுவும் இல்லாத ஒரு உறவு நிலை (அதே மாமா பின் ஊருக்கு திரும்பி சென்று இன்னொரு திருமணம் முடித்து இறுதி 12 வருடங்களையும் புது மனிதனாக வாழ்ந்து இறந்தது தனிக் கதை). இந்த நிலையை இங்கு பல குடும்பங்களில் காண கூடியதாக இருக்கின்றது.

இப்படியான விடயங்களின் அடிப்படைக் காரணமாக இங்கு இருப்பது பேராசை ஆகும். அளவுக்கு மீறி / சக்திக்கு மீறி சொத்துகளையும் செல்வத்தையும் தேடும் போதுதான் எல்லா பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புற்றுநோய் போன்று இங்கு எம்மிடம் பரவி கிடக்குது.


குடும்பம் பிள்ளைகள் என்பன முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை. அதே நேரம் எமக்கான முக்கியத்துவத்தையும் நாம் எமக்கும் கொடுக்க வேண்டும். இந்த வாழ்வு ஒரு முறை மட்டுமே வாழக் கூடியது. பிள்ளைகள் வளரும் காலம் தான் நாமும் வயதாகாமல் ஆரோக்கியமாக வாழும் காலமும் ஆகும். இதில் எம்மை நாம் கவனிக்காமல் விட்டால் எஞ்சிய காலத்தில் எம்மை எவரும் கவனிக்க மாட்டார்கள் எனும் நிலை வரலாம் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். எமக்காகவும் நாம் வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனைக் காணாமலேயே வாரத்தில் 6 நாட்கள் (சிலவேளை 7 நாட்களும்) வேலை வேலை என்று தும்படித்து தமது குடும்பம், சொந்தம் என்று உதவிக்கொண்டு வாழ்பவர்களை புலம்பெயர் நாடுகளில் காணலாம். பிள்ளைகளுடன் நெருக்கமாக இளவயதில் இருக்காவிட்டால், அவர்களுக்கு எமது பூர்வீகத்தையும் வரலாறுகளையும் சொல்லாவிட்டால் அந்நியத்தன்மை வந்துவிடும். வயது போய் நோய்வாய்ப்படும்போது புறக்கணிப்பது எதுவித குற்றவுணர்வையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிள்ளைகளைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோமோ எம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அதுவே எமக்கும் பரிசாகக் கிடைக்கிறது.அத்தோடு பிள்ளைகளே எம்மைக் கடைசிகாலத் தில் பார்க்கவேண்டும் என்னும் மடைத்தனமான பேராசையுடன் தானறிவைப் பயன்படுத்த்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பல தமிழர்களுக்கு முடியாததனாலேயே இப்படியான நிலை ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 

87369101_131414795047650_571636004656932

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/23/2020 at 11:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடவுளே என்னை நல்ல குடும்பத்தில் பிறக்க வத்ததுக்கும்  நல்ல கணவன் குழந்தைகளைத் தந்ததுக்கும் கோடி நன்றி. ஆனால் மறதி வருத்தம் எனக்கு வராமல் என் கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.😧

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் பிள்ளைகளைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோமோ எம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அதுவே எமக்கும் பரிசாகக் கிடைக்கிறது.அத்தோடு பிள்ளைகளே எம்மைக் கடைசிகாலத் தில் பார்க்கவேண்டும் என்னும் மடைத்தனமான பேராசையுடன் தானறிவைப் பயன்படுத்த்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பல தமிழர்களுக்கு முடியாததனாலேயே இப்படியான நிலை ஏற்படுகின்றது.

 

நல்லாய்தான் கதைக்கிறியள். 
இப்பிடியான பிரச்சனையளுக்கு  தாயின்ரை பங்கு மிக முக்கியம் கண்டியளோ? தகப்பன் பிசியாய் வேலை வேலை எண்டு திரியேக்கை தாய்  பிள்ளையளுக்கு சொல்லி  காரணங்களை சொல்லி வளர்க்க வேணும். தகப்பன் என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்யுறார் எண்டு...தாய் முதலில் கணவனுக்கு மரியாதை குடுக்க வேணும். அதை பார்த்து பிள்ளையளும் பார்த்து மரியாதை குடுப்பினம்.அதே மாதிரித்தான் தகப்பனும் தாய்க்கு மரியாதை குடுக்க வேணும். ஒரு நேரமாவது குடும்பமாய் கூடியிருந்து கதைத்து பேசி உணவு உண்ண வேண்டும்.கூடுதலான குடும்பங்களிலை தாய் கணவனுக்கு மரியாதை குடுப்பதேயில்லை.

பிள்ளையள் விடயத்தில் தாயே எல்லா இடத்திலும் முடிவெடுக்கிறார்.இந்த இடத்தில் அப்பாவையும் கேட்க வேணும் என்று தாய் பிள்ளைகளுக்கு சொல்லுவதேயில்லை.இதனால் தகப்பனின் முக்கியத்துவம் பிள்ளைகளுக்கு தெரியாமலே போகின்றது.சில இடங்களில் பிள்ளைகளுக்கு தகப்பன் வீட்டுக்கு வீட்டுக்கு வருவதும் தெரியாது.போவதும் தெரியாது.ஏன் சில தாய்மாருக்கும் தெரியாது.
இன்னுமொரு முக்கியமான விடயம் வீட்டுக்குள் ஆன்மீகம் முக்கியம்.

Bildergebnis für தகப்பனின்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பிள்ளைகளுக்கு தகப்பன் வீட்டுக்கு வீட்டுக்கு வருவதும் தெரியாது.போவதும் தெரியாது

பணம் வருவது மட்டும் அவர்களுக்குத் தெரிகிறது

  • 2 weeks later...

ஆதி இந்தத் திரியில மௌனமா நிண்டுட்டு போறன். கதைக்க முடியேல்லை😭

  • கருத்துக்கள உறவுகள்

சே என்ன ஆளையா நீர் நிழலி. வேலை முடிஞ்சு சந்தோசமா யாழை திறந்தேன், மனசை பிசைகிறது உங்கள் கதை.

அதிலும் அந்த யாவும் கற்பனை இல்லை என்ற வசனம் 😢  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.