Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் என் ஈழமும் 10: கடைமாமா

Featured Replies

DSCN0241%20copy.jpg

கடந்த ஞாயிறு சிட்னியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. வீட்டை விட்டு போக முடியாத நிலை. போக முடியாத நிலை என்பதை விட, வெளியே செல்ல மனம் இல்லை என்பதே உண்மை. காரணம் ஈழத்தில் சென்றவாரம் காலமாகியிருந்த என்னுடைய மாமா தான். இருப்பினும் தமிழனாக பிறந்துவிட்டு, பொங்குதமிழுக்கு போகாமல் இருப்பது, சொந்த அடையாளத்தை இழப்பது போன்றதல்லவா. காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை பொங்குதமிழில் பங்கெடுக்க சென்றிருந்தேன். அந்த நான்கு மணி நேரங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அதிலும் எனக்கு, மாமாவின் மறைவும் மனதில் இருக்க போக, மிகவும் வேதனையான மணித்துளிகளாக அமைந்துவிட்டது.

சென்றவாரத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமான சூழல். துக்கம் விசாரிக்க வருபவர்களும், தூர தேசங்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளும் வீட்டை மிகவும் கனக்க வைத்துவிட்டது. மாமாவின் மறைவு மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு நிச்சயம் பெரும் இழப்பு தான். என் அப்பாவின் அக்காவை மணம் முடித்து வந்தவர் தான் இந்த "கடை மாமா". மாமா ஊரில் பல பலசரக்கு கடைகள் நடத்தி வந்ததால் அவருக்கு நான் வைத்த பெயர் தான் கடைமாமா. மாமாக்கள் அதிகமாக இருப்பதால் இப்படி ஆளுக்கொரு தனித்துவமான பெயரை சொல்லி அழைக்க பழகிக்கொண்டேன்.

கடை மாமா என்றாலே கொண்டாட்டம் தான். ஊருக்கு போகும் நேரங்களில் எனக்கு மாமாவோடு அவரின் கடைகளுக்கு போவது மிகவும் பிடித்தமான ஒரு விடயம். ஒஸ்திரேலியாவில் அரிசியையோ, மாவையோ அளந்து விற்பதில்லை. ஆனால் அங்கு தராசில் போட்டு அளப்பதை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அதிலும் யாருமே இல்லாத போது மாவையும், அரிசியையும் சேர்த்து அளந்து விளையாடுவது நிறைய பிடிச்ச விடயம். என்ன, மாமாக்கு தான் அத்தை பேசுவார்கள். நான் வழமை போல் தப்பித்துக் கொள்வேன். எனக்கு பிடித்த இன்னொரு விசயம், கல்லாவில் இருந்து காசோடு விளையாடுவது. அதுக்கும் பாவம் மாமா தான் அத்தையிடம் பேச்சு வாங்குவார். ஆனால் எப்பவும் என்னை ஒரு சொல் சொல்லமாட்டார். எதை கேட்டாலும் "ஓம்" தான். என்ன செய்தாலும் "சின்ன பிள்ளையோட மல்லுக்கட்டாத மங்கை" என அத்தைக்கு சொல்வார். இதை விட, எனக்கு மாமாவை பிடிப்பதற்கு காரணம் இருக்க முடியுமா?

அத்தை, மாமாவிற்கு குழந்தைகள் கிடையாது. இன்னொரு அத்தையின் மகளை தங்கள் மகளாக நினைச்சு வளர்த்தார்கள். ராஜி என மற்றவையள் கூப்பிடுவார்கள். நான் மட்டும் புஜ்ஜி மச்சாள் என கூப்பிடுவேன். சின்ன வயதில் ஏன் அப்படி கூப்பிட்டேன் என எனக்கே தெரியாது. புஜ்ஜி மச்சாள் போராளியாகி, மாவீரராகிவிட்டார். அதோடு மாமாவின் அன்பு எனக்கே எனக்கு என்றாகிவிட்டது. சின்ன விசயத்திற்கும் பயப்படுவார். வெய்யிலில் போக விடமாட்டார், சைக்கிள் ஓட விடமாட்டார், யாரும் என்னை முறைத்து பார்த்தாலே அவர்கள் மாமாக்கு ஜென்ம விரோதியாகிவிடுவார்கள். அப்பப்பாவை பார்க்க ஒவ்வொரு வருடமும் ஊருக்கு போகும் நேரத்தில் மாமாவும் கூடவே இருப்பார். அப்பப்பாவை பார்க்க என அத்தையும் மாமாவும் அவர் கூடவே இருந்ததால், மாமாவுடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அப்பப்பாவும் காலமாகிவிட, மாமா தான் எனக்கென மிஞ்சியிருந்த ஒரே ஜீவன். அதாவது என்னை ஒரு தேவதை போல பார்ப்பதற்கு, ஒரு குழந்தை போல நடத்துவதற்கு. வாரம் ஒரு தடவை மாமாவுடன் தொலைபேசியில் உறவாடாமல் நான் இதுவரை இருந்ததில்லை. நான் கதைக்காட்டிலும், தானே ஊரிலிருந்து போனில் கூப்பிடுவார். இதற்காகவே என்ட அப்பா மாமாக்கு ஒரு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.

மாமாவீட்டிற்கு முன்னால் போராளிகளின் வீடு ஒன்று இருந்தது. நான் போகும் போதெல்லாம் அண்ணாக்கள் சொல்லுவினம் "மாமாக்கு தூயா என்டா கோவில்ல இருக்கிற அம்மன் போல". எனக்கு சரியான பெருமையா இருக்கும். "உங்களுக்கு பொறாமை அண்ணா" என நான் பதில் சொன்னால், "இருக்காத பின்ன, நாங்க கூடவே இருக்கம் ஆனால் வெளிநாட்டில இருக்கிறவைக்கு தானே முதலிடமா கிடக்கு" என என்னை பம்பலடிப்பார்கள். மச்சாள் மாவீரரானது முதல், மாமாக்கு முன் வீட்டிலிருக்கும் அண்ணாக்கள் தான் பிள்ளைகள். அதில் சிலர் மாவீரரான போது போனில் அழுவார். நானும் அழுவேன். அப்பா தான் இருவரையும் ஒரு மாதிரி சமாளிப்பார். போராளிகள் சிலருக்கு விடுமுறையில் போக வீடு இருக்காது. அவர்களுக்கெல்லாம் அப்பா வீடு என்ட மாமா வீடு தான். உழைப்பதில் தனக்கென எதுவுமே சேர்க்க மாட்டார். நான் ஒவ்வொரு முறை போகும் போதும் எனக்கு புது புது நகையாக செய்து வைத்திருப்பார். மிச்சம் எல்லாமே ஈழத்திற்கு தான். இடம்பெயர்ந்து ஊருக்கு வரும் மற்ற ஊராட்களுக்கு எல்லாம் மாமா தான் அடைக்கலம் குடுப்பது. வீட்டில எப்பவும் நிறைய பேருக்கு தான் சமையல் நடக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஒஸ்திரேலியாவில் இருக்கும் முதன்மையான currency management centre இல் முகமையாளர் வேலை கிடைத்த போது, உடனே மாமாக்கு தான் சொன்னேன். சின்ன வயதில் நீங்க கல்லாவில் பணத்தோடு விளையாட விட்டிங்க, இப்ப பாருங்க மாமா எனக்கு எங்க வேலை கிடைத்திருக்கென நான் சொன்ன போது, "உனக்கென்னடா ராசாத்தி, உன்ட குணத்திற்கு எல்லாமே உன் காலுக்கு கீழ கிடக்கும்" என சொல்லி மகிழ்ந்தார். இரண்டு வாரத்திற்கு முன்னர் எனக்கு வேலையில் பதவியுயர்வு கிடைத்தது. உடனே மாமாக்கு சொல்லலாம் என போன் செய்த போது கூட என்னோட நல்லாத்தான் பேசினார். "முருகா இனி நீ தான் என்ட பிள்ளைய பார்க்கணும்" என சொன்னார். மாமாவுக்கும் முருகன் பெயர் தான். பதிலுக்கு நான் "ஏன் மாமா நீங்க இருக்க, என்னை பார்க்க இன்னொரு முருகன்?" என சொன்னேன். அதை கேட்டு சிரித்தார்.

பேசி அடுத்த நாளே சித்தப்பா போன் எடுத்து, மாமா காலமாகிவிட்ட செய்தியை சொன்னார். இயற்கை மரணம் தானாம். எப்படி சொல்வது என தெரியாமல் எங்க வீட்டில கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் என்னட்ட சொல்லவேயில்லை. செய்தி தெரிந்த போது எப்படியிருந்தது என எழுத எனக்கு தெரியவில்லை. கத்தி கத்தி மயக்கம் போட்டது தான் மிச்சம். அத்தை போனில் கூப்பிட்ட போது தான் கூட கஸ்டமா இருந்தது. என்னோடு தான் மாமா கடைசியா கதைச்சாராம். "என்ட அம்மன்ட குரலை கேட்டாச்சு. இது போதும்" என சொல்லிட்டு, தூங்கினவர் எழும்பவே இல்லையாம். அத்தை போனில் அழுது கத்தும் போது, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் பிள்ளைகளாக பார்த்த மச்சாளோ மாவீரராகிவிட்டார், போராளிகளோ வன்னியில், நானோ இங்கு....ஏதோ ஒரு உணர்ச்சி என்னோட மனச அமைதியாகவிடுதில்லை. எங்களில் ஒருத்தர் கூட மாமாவோட இருக்கலையே. போனில குரல் கேட்டதே அவருக்கு போதுமாயிருந்திருக்கே! அப்படி ஒரு அன்பா! எங்களுக்காக மட்டுமே வாழ்ந்த மாமாவும் எனக்கு ஒரு போராளி தான். ஒரு மாவீரன் தான்.

ஈழத்தில் என் அனுபவம் தனியே போராளிகளுடனும், குண்டுவீச்சுகளுடனும் கிடைக்கவில்லை. நிறைய நல்ல உறவுகள் இருந்தார்கள். நல்ல பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்கு ஒரு சின்ன ஆதாரம் தான் "கடைமாமா". இங்கிருப்பதால் நிறையத்தான் இழந்துகொண்டிருக்கின்றோம்..

தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பினை வாசிக்கும் போது கவலையாக இருக்கிறது. இங்கு சிட்னியில் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொங்குதமிழில் கலந்து கொண்டவர்கள் 3000 பேர் தான். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வுக்கு மத்தியில், தமிழர்கள் தலை நிமிரவேண்டும் என்ற உண்ணத உணர்வோடு பொங்குதமிழில் கலந்து கொண்ட தூயாவை நினைக்கப் பெறுமையாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

எனக்கும் இன்னும் கொஞ்ச பேர் வந்திருக்கலாமோ என தோன்றியது..

நெஞ்சை கனக்க வைத்தது சம்பவம்.உங்கள் மாமாவின் இழபிட்கு மத்திஜிலும் தமிழர்கள் தலை நிமிர வேண்டும் என்ற உணர்வுடன் கலந்துகொண்ட உங்களைபோன்ற புலம்பெயர் தமிழர்கள் என்றும் பெருமைக்கு உரியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயா

உங்கள் கடைமாமாவின் இழப்பிற்கு எம் ஆழ்ந்த அநுகாபங்கள்.கதையை எடுத்துச் சென்ற விதம் நன்றாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தூயா சொன்னவிதம் நெகிழ வைத்துவிட்டது உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் எழுத்திலாவது சில மரத்தமிழர்களிற்கு உணர்வு வந்தால் மகிழ்ச்சியே

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் தூயாவிற்கு ...

கள உறவுகளை உங்கள் உறவுகளாக பாவித்து

சோகத்தை பகிர்ந்து கொண்ட உங்கள் சோகத்தில் நானும் பங்கு

கொள்கிறேன் .அவர் ஆன்மசாந்திகு என் வேண்டுதல்கள் .

நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் மாமா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கவலையின் மத்தியிலும் பொங்கு தமிழில் பங்கு பற்றியதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தூயாவுக்கும் அவர் மாமா குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்."தமிழன் எண்டு சொல்லி தலை நிமிரு" எண்டதுக்கு நீங்கள் நல்ல உதாரணம்.

கதை மனதைத் தொட்டது.....தூயவிற்கும்... அவரது உறவினருக்கும்.. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா!ஒரு கதையில் பல விடயங்களை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

உங்கள் கடை மாமாவின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தூயா. :wub:

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பினை வாசிக்கும் போது கவலையாக இருக்கிறது. இங்கு சிட்னியில் பல தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொங்குதமிழில் கலந்து கொண்டவர்கள் 3000 பேர் தான். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வுக்கு மத்தியில், தமிழர்கள் தலை நிமிரவேண்டும் என்ற உண்ணத உணர்வோடு பொங்குதமிழில் கலந்து கொண்ட தூயாவை நினைக்கப் பெறுமையாக இருக்கிறது.

உங்கள் ஆதங்கம் புரிகிறது என்ன செய்வது எங்களின்ட வீடுகளிளேயே இன்னொரு தலையை கூப்பிட்டு கொண்டு போறதே கஷ்டமா இருக்கு உதுகுள்ள ஊர்சனங்களை நாங்க கூப்பிட ஏலுமே கந்தப்பு,ஏன் நாங்கள் போறதிற்கே எவ்வளவு திட்டு வாங்க வேண்டி கிடக்கு.உங்க போற நேரம் தசவாதாரம் படம் பார்க்க போயிருக்கலாம்.

பிறகு பாரும் நான் அங்க ஒரு அரைமணித்தியாலம் தான் நின்றனான்,அந்த அரைமணித்தியாலமும் நின்ற பெருசுகளுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி நான் வந்ததை எல்லாருக்கும் காட்டி போட்டு நான் வந்துட்டன் ஏன் என்றா டெனிஸ் விளையாட போக வேண்டும் தானே. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,

உங்கள் ஒவ்வொரு பதிவுகளுமே பெரும்பாலும் "நானும் ஈழமும்" என்ற பதிவுகளை வாசித்து முடித்தவுடனேயே மனசைகனக்க வைக்கின்றன..

பொய்யே கலக்காது உண்மையாய் எழுதும் எழுத்துகளுக்கு உள்ள வலிமை அது.

இப்படியான அருமையான உறவுகள் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கோணும் தூயா,,ஏனோ அந்த விதத்தில் நீங்கள் நிறையக்கொடுத்து வைச்சிருக்கீங்கள்.

எமக்கு அப்பேர்ப்பட்ட உன்னத உறவுகளின் உணர்வுகள் கிடைத்ததில்லை...உங்களால் அந்த உணர்வினை நாமும் பெறுகின்றோம்.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

உங்கள் ஆதங்கம் புரிகிறது என்ன செய்வது எங்களின்ட வீடுகளிளேயே இன்னொரு தலையை கூப்பிட்டு கொண்டு போறதே கஷ்டமா இருக்கு உதுகுள்ள ஊர்சனங்களை நாங்க கூப்பிட ஏலுமே கந்தப்பு,ஏன் நாங்கள் போறதிற்கே எவ்வளவு திட்டு வாங்க வேண்டி கிடக்கு.உங்க போற நேரம் தசவாதாரம் படம் பார்க்க போயிருக்கலாம்.

பிறகு பாரும் நான் அங்க ஒரு அரைமணித்தியாலம் தான் நின்றனான்,அந்த அரைமணித்தியாலமும் நின்ற பெருசுகளுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி நான் வந்ததை எல்லாருக்கும் காட்டி போட்டு நான் வந்துட்டன் ஏன் என்றா டெனிஸ் விளையாட போக வேண்டும் தானே. :lol:

இது தான் பல வீடுகளில் நடக்கின்றது..

ஏன் இங்கு வந்தோம் என்பதே பலருக்கு நினைவில் இருப்பதில்லை என்பது தான் கொடுமையான உண்மை..

துயர்வில் பங்கெடுத்த என் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டு துயரை எம் கள உறவீனூடாக தெரிவித்து ஆறுதலடையும் தூயாவிற்கு

உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்

இத்துயர நிகழ்விலும் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள்

உங்களின் நாட்டு பற்றை பாராட்டவேண்டியதே கள உறவுகள் அனைவரதும்

சார்பிலும் நன்றி சகோதரியே

நன்றி சகோதரியே

  • கருத்துக்கள உறவுகள்

தூயா , உங்கள் மிது மிகுந்த பாசம் வைத்திருந்த கடை மாமாவின் இழப்பை வாசித்த போது நெஞ்சு கனத்தது .

கடைமாமாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதோடு , உங்கள் துக்கத்திலும் பங்கு கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கனக்கிறது மனம்

என்னிடம் வார்த்தையில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள் தூயா!

நீங்கள் அதை சொல்லிய விதம் கல்லையும் லேசாய் கரைத்துவிட்டது.

தூயா

உங்கள் மனதை கள்ளங்கபடமற்று வைத்துள்ளீர்கள்

இது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடயம்.

கள்ளங்கபடமற்ற உங்களுடன் ஆண்டவன் என்றும் துணையிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.