Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனங்கொட்டை பொறுக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கொட்டை பொறுக்கி

 
பனங்கொட்டை பொறுக்கி

குரு அரவிந்தன்

(குரு அரவிந்தன்)

Panai-6.jpg

உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்த அந்தப் பசுக்கன்றுதான் என் மனதில் சொல்லெனா வேதனையைக் கிளப்பிவிட்டது. நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்பதுபோல ஆயுதவிற்பனைக்காக மனிதனே தேடிக்கொண்ட வினையில் மாட்டிக் கொண்ட அப்பாவி இரைகள்தான் இவைகள். பாவம் இந்தப் பசுக்கன்று, வாயற்ற இந்த ஜீவன்களால் தங்களுக்கு நடந்த கொடுமைகளை யாரிடம் சொல்லி அழமுடியும். வண்டிச் சத்தம் கேட்கவே, மிரட்சியோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புல்லுக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டது. அதன் பசி அதற்கு. ஆனையிறவு அருகே எரிந்து கருகிப்போன கவசவாகனம் ஒன்று என் கண்ணில் பட்டு வேகமாக மறைந்து போனது. திரும்பிய பக்கங்கள் எல்லாம் யுத்தம் தின்ற எச்சங்கள் காட்சிப் பொருளாய் எங்களுக்குத் தரிசனம் தருவதற்கென்றே காத்திருப்பது போலிருந்தது.

பிரதான பாதையில் இருந்து விலகி வண்டி உள்ளே சென்றபோது, சாலையின் இரண்டு பக்கமும் பனை மரங்கள்; வளர்ந்து நிமிர்ந்து நின்று எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தன. சில பனைமரங்கள் தலையிழந்து மொட்டையடித்த மனிதர்போல சோகத்தில் மூழ்கியிருந்தன. யுத்த முனையில் முன்னின்று எதிரியைத் தடுக்கும் போர் வீரர்களைப்போல அவை நிரையாய் காட்சி தந்தபோது எனக்குப் போராளிகளின் ஞாபகம்தான் சட்டென்று வந்தது. தலையிழந்து நிற்பதற்கு அதுவும் ஒரு காரணம்தான். யுத்த காலத்தில் எறிகணைகள் வந்து குடியிருப்புகள் மீது விழாமல் காப்பதில் இந்தப் பனைமரங்களின் பங்கும் அதிகமாக இருந்திருக்கலாம். எத்தனையோ குடிமனைகளை, குடிமக்களை இந்தப் பனை மரங்கள் காப்பாற்றி இருக்கின்றன. ஏனைய இடங்களில் உள்ள எரிந்து கருகிப்போன, கூரையை இழந்த வீடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தப் பகுதியில் இருந்த பனைமரங்களை, அவை ஜடமாக இருந்தாலும் அவற்றின் யுத்தகால சேவைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Palmyra-2.JPG

நான் சிறுவனாக இருந்தபோது தோப்பிலே இருந்த இந்தப் பனை மரங்களைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து கற்பகதரு என்று இந்தப் பனை மரங்களைச் சொல்வார்கள். சில பனைமரங்கள், அல்லது தென்னை மரங்களின் அடிப்பக்கத்தில் பாம்பு போல படம் வரைந்திருப்பார்கள். அது ஏன் என்று தொடக்கத்தில் எனக்குப் புரியவில்லை. தாத்தாவிடம் அதுபற்றி விசாரித்தேன். அணில்கள் மரத்தில் ஏறிப் பாளைகளில் வரும் பூக்களைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் அப்படிப் படங்கள் வரைவதாக தாத்தா சொல்லி அறிந்து கொண்டேன். பாம்புப் படத்தைப்பார்த்தே மிரளக்கூடிய அணில்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். அணில்கள் மரத்தில் ஏறிக் கள்ளைக் குடித்துவிட்டு வெறியில் முட்டியையும் தட்டி விழுத்திவிடும் என்பதால்தான் அப்படம் வரைவதாக நண்பன் சொன்னான். அது எந்தளவிற்கு உண்மை என்பதும் எனக்குப் புரியவில்லை.

நாங்கள் மாணவப் பருவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தபோது, பனம் விதைகளைப் பெறுக்கிக் கொண்டு வந்து பாடசாலை வளவில் குவித்திருக்கிறோம். யார் அதிகம் சேகரிப்பது என்பதில் எங்களுக்குள் போட்டியிருந்தது. இரவிலே படுத்திருந்தாலும் அருகிலே இருக்கும் பனந்தோப்பில் இருந்து கேட்கும் தொம் தொம் என்ற சத்தத்தைக் காது கிரகித்துக் கொண்டிருக்கும். அதுவே பக்கத்துப் பனந்தோப்பிலே எத்தனை பனம்பழம் விழுந்தது என்ற கணக்கை மனதில் பதிய வைத்திருக்கும். அதிகாலையில் எழுந்து அந்தப் பனம் விதைகளைச் சேகரித்துப் பள்ளிக்குக் கொண்டு செல்லும்வரை முழுக் கவனமும் அங்கேயே இருக்கும். அதிக பனை விதைகளைச் சேகரித்துக் கொடுத்ததற்காக எங்களில் மூவருக்குப் பாடசாலையில் பாராட்டிப் பரிசு தந்தார்கள். வேறு ஒருநாள் டிராக்டர் வண்டியில் அவற்றை ஏற்றி, எங்களையும் அழைத்துச் சென்றார்கள். வீதி ஓரமெல்லாம் நாங்கள் சிறு குழிகள் தோண்டி அதில் விதைகளைப் போட்டு மூடினோம். இரண்டு மூன்று வாரங்களாக அங்கு சென்று நிரைநிரையாய் நடப்பட்டிருந்த விதைகளுக்குத் தண்ணீர் ஊற்றினோம். அதன்பின் மழைக்காலம் ஆரம்பித்ததால் விதைகள் தானாகவே முளைத்து வளரத் தொடங்கி வடலிகளாகிக் காலப்போக்கில் பனைகளாகிவிட்டன. இப்படித்தான் மரம் நடும் திட்டத்தை அவர் ஏனைய பாடசாலைகளிலும் அறிமுகம் செய்திருக்கலாம். குடா நாடு முழுவதும் மாணவர்களைக் கொண்டே பனம் விதைகளை நட்டிருக்கலாம். அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரி;ய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.

இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்துவிட்டது. காலம் மறந்துவிட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்க இப்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய பெயர் கனகராஜா என்று அறிந்து கொண்டேன். அவரைப்பற்றி அறிமுகம் செய்த போது அவர் ஒரு தொழில் அதிபர் என்றும், மில்க்வைற்சோப் அதிபர் கனகராஜா என்றுதான் எங்கள் பாடசாலை அதிபர் அறிமுகம் செய்து வைத்தார். மில்க்வைட் சோப் என்பது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பிரபலமான நீலநிறத்தில் இருந்த சவர்க்காரம். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதால் மிகவும் பிரபலமாக இருந்தது. அதுமட்டுமல்ல வெள்ளைநிற பாடசாலை சீருடை அணியும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் அத்யாவசியமான நீலநிறம் கொண்ட சவர்க்காரமாகவும் இது இருந்தது. நாங்கள் அப்போது மணவ தன்னார்வத் தொண்டர்களாக இருந்தோம். பாடசாலைக்கு வெள்ளைநிற சீருடையே அணிந்தோம். சீருடையைப் பளீச்சென்று அணிவதற்கு இந்த சோப்பே எங்களுக்கு உதவியாக இருந்தது.

அவர் எங்களிடம் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

அது என்னவென்றால் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’

எங்களுக்கு அவரது வேண்டுகோள் வியப்பாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எந்தப் பெரிய தொழில் அதிபர், அவரைச் சுற்றி எத்தனை தொழிலாளர்கள். அப்படி இருந்தும் இங்கே வந்து மாணவர்களாகிய எங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கித் தருவீர்களா?’ என்று கேட்கிறாரே என்று நினைத்தோம். ஆனாலும் எங்கள் பாடசாலை அதிபரும் அருகே நின்றதால் எந்த மறுப்பும் சொல்லாது சம்மதித்தோம். நாங்கள் சம்மதத்தின் பெயரில் தலையசைத்தோம். ஆனால் ராஜமாணிக்கம் மட்டும் மௌனமாகவே நின்றான். அவன் கையிலே அழுக்குப்படாத பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவன். தப்பித் தவறி அழுக்குப் பட்டாலும் முகத்தைச் சுழித்துவிட்டு உடனே கையலம்ப ஓடிவிடுவான். நாங்கள் எல்லோரும் டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளோடுதான் படித்தோம். நாட்டுச் சூழ்நிலையால், நாங்கள் நினைத்தது போல எங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. அவன் எப்படியோ டாக்டராக வெளிவர, நான் கணக்காளரானேன். ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவன் உள்ளுரிலேயே தொழில் பார்க்க, நான் வெளிநாடு சென்றேன். உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து விட்டதாக அறிவித்ததால், இப்போது விடுமுறையில் அவனைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்.

யாழ்ப்பாணத்திற்கு என்று சில குறிப்பிட்ட குறியீட்டுச் சொற்கள் இருந்தன. இலங்கையின் தென் பகுதிக்குச் சென்றால் அவர்கள் தங்கள் மொழியில் இந்தக் குறியீட்டுச் சொற்களை அடிக்கடி பாவித்துத் தமிழர்களைக் கிண்டல் அடிப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். பனங்கொட்டை, கறுத்தக் கொழும்பு, பொயிலைச்சுருட்டு, நல்லெண்ணெய் இப்பெயர்கள் யாழ்ப்பாணத்திற்கே உரிய குறியீட்டுப் பெயர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இவை கேலிப் பொருளாகத் தெரிந்தன. யாழ்ப்பாணத்துக் கற்பகவிருட்சம் என்று பெருமைப்படுகின்ற பனை மரத்தின் விதையைத்தான் பனங்கொட்டை என்று அவர்கள் கேலிசெய்தார்கள். கறுத்தக் கொழும்பு என்பது ஒரு வகை ருசியான மாம்பழம், பொயிலைச்சுருட்டு என்பது யாழ்ப்பாணத்துப் புகையிலையில் செய்யப்படும் சுருட்டு. கோடா என்று சொல்லப்படும் பாணியை இதன்மேல் தடவி போறணையில் பதனிடுவார்கள். பின் அதிலிருந்துதான் சுருட்டுச் செய்வார்கள். சுருட்டுச் சுற்றுவது என்பது யாழ்ப்பாணத்து குடிசைக் கைத்தொழிலாக இருந்து மட்டுமல்ல, அவர்களுக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக நல்லெண்ணெய், எள்ளைச் செக்கில் போட்டு அரைத்து அதில் இருந்து பெறப்படுவதுதான் நல்லெண்ணெய். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதிலே வேடிக்கை என்னவென்றால் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய்யைத்தான் முடியில் தேய்ப்பார்கள். தென் பகுதிப் பெண்களின் முடி அடர்ந்து நீண்டு வளர்வதற்கு தேங்காய் எண்ணெய்யும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். விடுமுறையைக் களிப்பதற்காக தென்பகுதிப் பெண்கள் வடபகுதியில் உள்ள கீரிமலைக்கு வந்து நீராடிவிட்டு அழகான நீண்ட தலைமுடியை விரித்து வெய்யிலில் உலரவிடும் காட்சி கண்ணுக்குக் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கும். குறுக்குக் கட்டோடு அவர்கள் நிற்கும் அந்தக் காட்சி இளவட்டங்களைக் கவர்ந்திழுக்கும். இதற்காகவே சாக்குப் போக்குச் சொல்லி அங்கு சென்று காத்திருக்கும் மாணவர்களும் உண்டு. அப்போதெல்லாம், மாணவர்கள் அவர்களைப் பார்த்து ‘சிங்களத்தி சிவத்தப் பெண்ணே தேங்காய் எண்ணெய் மணக்குதெடி..!’ என்று கிண்டல் செய்து கோரஸ் பாடுவார்கள். அந்தப் பெண்களுக்கு மொழி புரியுமோ இல்லையோ, பதிலுக்கு ஒரு கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்து விட்டுப் போய்விடுவார்கள்.

யுத்தகால பாதிப்பு எதுவும் இல்லாமல் நண்பன் ராஜமாணிக்கத்தின் வீடு பளீச்சென்று இருந்தது. நன்றாக உபசரித்து என்னைத் தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான். யுத்த காலத்தில் தாங்கள் பட்ட அவலங்களைப் பற்றிக் கதைகதையாய் சொன்னான். வெளிநாட்டில் எனது வேலைபற்றி குடும்பம் பற்றி நிறையவே விசாரித்தான். விருந்து சாப்பிட்டு, விடை பெற்று வரும்போது அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டான்.

‘உனக்கு ஞாபகம் இருக்கா படிக்கிற நாட்களில் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பக்கத்துப் பனந்தோப்புகளிலே பனங்கொட்டை பொறுக்கியது’ என்றான்.

‘ஆமா, உன்னைத் தவிர..!’ என்றேன் சட்டென்று.

‘உண்மைதான், அப்போ எனக்கு அதில் ஈடுபாடு இருக்கவில்லை. என்னுடைய கனவெல்லாம் டாக்டர் ஆகவேண்டும் என்பதிலேயே இருந்தது. பூமியைப் பசுமையாய் வைத்திருக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும் என்ற அந்த விடயம்கூட அந்த நேரம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யுத்தம் ஆரம்பமாகி எறிகணைகள் வந்து ஏனைய குடியிருப்புகள் மீது விழுந்த போதுதான் ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன்.’

‘என்ன உண்மை?’

‘இந்த மரங்களின் அவசியத்தைப் பற்றிய உண்மை. என்னுடைய அறியாமையால் அன்று நான் உங்களை எல்லாம் ‘பனங்கொட்டை பொறுக்கிகள்’ என்று கேலி செய்தேன். அதற்காகத்தான் இப்போ உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.’ என்றான்.

‘என்னிடம் மன்னிப்பா, எதற்கு?’

‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’

‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும். பள்ளியில் படிக்கிற பிள்ளைகளைப் பனக்கொட்டை பெறுக்கச் சொல்கிறாரே என்று அவரை அன்று திட்டிய பெற்றோரும் இருக்கிறார்கள்.’ என்றேன்.

‘அன்று பனம்விதைகளைச் சேகரித்து பெரியதொரு திட்டமாக நீங்கள் எல்லாம் இந்த இடங்களில் நட்டபடியால்தான் இன்று அந்த மரங்கள் வானுயர்ந்து வளர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றன. அப்போ நாங்கள் உங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கி’ என்று ஏளனம் செய்தோம். அன்றைய தீர்க்க தரிசனத்தின் அருமை இன்றுதான் புரிகிறது. இந்தப் பனை மரங்கள் இல்லாவிட்டால் எங்கள் குடியிருப்புகளில் செல்குண்டுகள் விழுந்து இன்று நாங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போயிருப்போம். எங்கள் குடிமனைகளைப் பாதுகாத்தது மட்டுமல்ல, பதுங்குகுழிகள் தோண்டி அதற்கு மேல் பாதுகாப்பாக போடுவதற்கும் இந்தப் பனங்குற்றிகளே பலவிதத்திலும் உதவியாய் இருந்தன. விமானக் குண்டு வீச்சில் இருந்து அவைதான் எங்களைப் பல தடவைகள் காப்பாற்றின. உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தை அன்று நடைமுறைப் படுத்தியவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும். அவர்களால்தான் இன்று நாங்கள் உயிரோடு இருக்கின்றோம்.’ என்றான் டாக்டர் ராஜமாணிக்கம்.

சின்ன வயதில் தன்னலம் பாராது நாங்கள் செய்த தன்னார்வத் தொண்டு, பிற்காலத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது என்பதை அறிந்தபோது என்மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. வெளிநாட்டில் நான் நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், என்னால் டாக்டராக முடியாமற் போனதற்கு அந்த நாட்களில் பனங்கொட்டை பொறுக்கித் திரிந்து எங்கள் படிப்பை வீணாக்கியது ஒரு காரணமாய் இருக்குமோ என்று இதுவரை நான் எனக்குள் எண்ணிக் குமைந்து கொண்டு இருந்ததற்கு, ஆறுதல் தருவதுபோல இருந்தன அவனது வார்த்தைகள்;. பனங்கொட்டை பொறுக்கி என்று பாடசாலை நாட்களில் அவன் என் காதுபடச் சுட்டசொல் இத்தனை நாளாய் என் மனதை அரித்துக் கொண்டு இருந்திருக்கிறது என்பது விடைபெற்றுச் செல்லும் போதுதான் எனக்குப் புரிந்தது.

 

http://tamilaram.blogspot.com.au/2012_07_01_archive.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு உருவாக்கம்.

கிராமிய வாழ்க்கையை நினைவு மீட்டிச் சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உடையார்...!

 

முன்பெல்லாம் 'பனங்கொட்டை பொறுக்கி' அல்லது 'பனங்கொட்டை சூப்பி' என்று எவராவது சொன்னால் பொல்லாத கோபம் வரும்!

 

இப்போதெல்லாம் எவராவது அப்படிக்கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கம் தான் மிஞ்சிக்கிடக்கிறது! 

  • கருத்துக்கள உறவுகள்

-----

‘அன்று பனம்விதைகளைச் சேகரித்து பெரியதொரு திட்டமாக நீங்கள் எல்லாம் இந்த இடங்களில் நட்டபடியால்தான் இன்று அந்த மரங்கள் வானுயர்ந்து வளர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றன. அப்போ நாங்கள் உங்களைப் பார்த்துப் ‘பனங்கொட்டை பொறுக்கி’ என்று ஏளனம் செய்தோம். அன்றைய தீர்க்க தரிசனத்தின் அருமை இன்றுதான் புரிகிறது. இந்தப் பனை மரங்கள் இல்லாவிட்டால் எங்கள் குடியிருப்புகளில் செல்குண்டுகள் விழுந்து இன்று நாங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போயிருப்போம். எங்கள் குடிமனைகளைப் பாதுகாத்தது மட்டுமல்ல, பதுங்குகுழிகள் தோண்டி அதற்கு மேல் பாதுகாப்பாக போடுவதற்கும் இந்தப் பனங்குற்றிகளே பலவிதத்திலும் உதவியாய் இருந்தன. விமானக் குண்டு வீச்சில் இருந்து அவைதான் எங்களைப் பல தடவைகள் காப்பாற்றின. உண்மையிலேயே மரம் வளர்க்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தை அன்று நடைமுறைப் படுத்தியவர்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும். அவர்களால்தான் இன்று நாங்கள் உயிரோடு இருக்கின்றோம்.’ என்றான் டாக்டர் ராஜமாணிக்கம்.

------

 

உண்மை தான்.... உடையார். இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்னர் பனங்கொட்டையைப் பொறுக்கியிருந்தேன் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110625

  • கருத்துக்கள உறவுகள்

நானும் "பனங்கொட்டை பொறுக்கி" முதலில் வாசிச்சிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பின் தங்கிய  கிராமத்தை???  சேர்ந்தவன்

 

கொழும்பில் படித்தபோது

சிங்களவரால்  பனக்கொட்டை சூப்பி  என்றும்

சக தமிழ் மாணவர்களால் தீவான் என்றும் அழைக்கப்பட்டேன்...... :( 

 

எனக்கு இரண்டும் சுடவில்லை

காரணம்  ஏதோவகையில்  அவர்களை  நான்  சுடுகின்றேன் என்பதை  புரிந்து கொண்டதால்......

 

யாழிலும் சிலர் எனக்கு ஊர்ப்பத்தி  இருப்பதாக   குறிப்பிட்டார்கள்

பாவங்கள்

மரத்தின் கிளையிலிருந்தபடி

அடியைத்தறிக்கிறார்கள்  என்று தான் நினைத்துக்கொள்வேன்....... :(

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தம்பியும் சிறுவயதில் பனங்கொட்டை பொறுக்கியிருக்கிறோம்.பனை வளத்தை அதிகரிக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.https://www.youtube.com/watch?v=egiybK1tGmo

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் சக யாழ்பாண மாணவர்களை, "பனங்கொட்டை சூப்பி" என கேலி செய்வதுண்டு, இப்பொழுது அதற்க்காக வெட்கப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான பனம்பழம் உள்ள மரமாக பாத்து..பொறுக்கி காவோலை போட்டு கொழுத்தி (ஏமலாந்தி கருகவிடாமல் ) அளவான அவியலோட எடுத்து.தோலை பல்லால கடிச்சு உரிச்சுப்போட்டு.சூப்பி சாப்பிடத்தொடங்கினா மாடும் தோத்துப்போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பொறுக்கினான் .ஆனால் சூப்ப மட்டும் தான் நட அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவித மனித முயற்சியுமில்லாமல் வானுயரவளர்ந்து யாழ்மக்களுக்கு உணவழித்தது இந்த பனைமரங்கள்.

இது போன்று தன்னிகரல்லா கொடைதரும் இயற்கையின் பரிசுகள் யாழ்ப்பாணத்தானுக்கு இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.