Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனிதமலர்

Featured Replies

புனிதமலர்

"தம்பி அவசரம் ஒருக்கா இந்த வார விடுமுறை வீட்டிற்கு வா " கடிதத்தை வாசித்த பின் அதை மேசை மீது போட்ட மணிவண்ணன் அம்மா ஏன் அவசரமாக வரசொல்லி எழுதியிருகின்றார் என்ற அந்த வரி மட்டும் மனதை குடைந்துகொண்டிருந்தது .

என்னவாக இருக்கும் ?

"பெண் பார்த்திருகின்றேன் வந்து பார் என்பாரோ ,இவன் வரகுணன் படிக்கின்றான் இல்லை, உன்னை பார்க்கவேண்டும் போலிருந்தது"

அம்மா அடிக்கடி கடிதம் எழுதுவதில்லை அப்படி எழுதினாலும் சுகம் கேட்பதும் இப்படியான விடயங்களும் தான் அதில் இருக்கும் .

இரண்டு வருடங்களுக்கு முதலும் இப்படி ஒரு கடிதம் வந்தது, அடித்து பிடித்து மணிவண்ணன் வீட்டிற்கு ஓடினால்

“உன்ரை தம்பி இவன் வரகுணன் இனி ஒன்பதாம் வகுப்பு. அவனை கலைப்பிரிவில் விட்டு விட்டார்கள் வெளியில் விடயம் தெரிய வரமுதல் ஒருக்கா போய் பாடசாலை அதிபரை சந்தித்து அவனை விஞ்ஞானபிரிவிற்கு மாத்திபோட்டுவா. " என்கின்றார்

மணிவண்ணன் சட்டம் படித்துவிட்டு கொழும்பில் பிரபல வக்கீல் ராஜசூரியரிடம் உதவியாளராக இருக்கின்றான். மணிவண்ணன் நாலாம் வகுப்பு படிக்கும்போது அவனது தந்தை காலமாகிவிட்டார் .

மிக வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன் மணிவண்ணன் .யாழ்பாணத்தில் மிக பிரபலாமான வக்கீல் சிறிகாந்தா என்றால் தெரியாதவர்கள் இல்லை .பிரபல வர்த்தகர் மயில்வாகனத்தின் ஒரே மகள் நந்தினியை மணம் முடித்து கந்தர்மடத்தில் இரண்டுமாடி வீடு .கார் ,டிரைவர் ,வேலைக்காரர்கள் என்று வாழ்ந்த குடும்பம் .

சிறு வயதில் தந்தையுடன் யாழ் பொதுசன நூலகத்திற்கு அருகில் இருக்கும் டென்னிஸ் கிளப்பிற்கு போய் தந்தை டென்னிஸ் விளையாடுவதை ரசிப்பதும் ,ரீகல் தியேட்டரில் சிறுவர்களுக்கான ஆங்கில படங்கள் பார்ப்பதும் ,சுப்பிரமணியம் பூங்காவிற்கு சென்று சறுக்கீசில் விளையாடுவதும் என்று இருந்த மணிவண்ணனுக்கு தந்தையின் இழப்பு பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தயார் நந்தினி அவர்களிடம் இருந்த பண வசதியால் மணிவண்ணனை எதுவித குறையும் இல்லாமல் முடிந்தவரை வளர்த்துவந்தார். அவனை சென் ஜோன்ஸ் இல் படிக்க வைத்து டிரைவர் சண்முகத்துடன் உதவியுடன் மணிவண்ணனையும் தம்பி வரகுணனையும் பூங்கா ,சுபாஸ் கபே,கிரிக்கேட் மாட்சுகள் என்று அனுப்பி வைக்கவும் தவறவில்லை .

மணிவண்ணன் நன்றாக படித்து பல்கலைகழகம் சென்று பின்னர் தந்தையார் போல வக்கீல் ஆகவேண்டும் என்று சட்டம் படித்து வக்கீல்ஆகிவிட்டான் .மணிவண்ணனுக்கும் தம்பி வரகுணனுக்கும் எட்டு வயது வித்தியாசம் .வரகுணன் ஒரு வயதில் இருக்கும்போது தந்தை இறந்ததால் தாயிற்கும் அண்ணனுக்கும் அவன் பெரிய செல்லம் .

வரகுணன் வீட்டிற்கு அருகில் இருந்த இந்து கல்லூரியில் தான் படிக்கின்றான் .படிப்பில் அண்ணன் போல கெட்டிகாரனில்லை அதனால் எட்டாம் வகுப்பு முடிய ஒன்பதாம் வகுப்பிற்கு போகும் போது அவனை விஞ்ஞான பிரிவிற்கு அனுமதிக்காமல்
கலைப்பிரிவிற்கு பாடசாலை அனுமதித்து விட்டது .அது தாயார் நந்தினிக்கு பெருத்த அவமானமாக போய் விட்டது .உடனே அப்போது சட்டகல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மணிவண்ணனுக்கு கடிதம் எழுதி உடனே வரவழைத்து இருந்தாள் .மணிவண்ணனின் தந்தையின் நண்பர் தான் யாழ் இந்து அதிபர். அந்த உரிமையில் தான் வரகுணனை விஞ்ஞான பீடத்திற்கு மாற்றுமாறு அதிபரை போய் சந்திக்க சொல்லி கேட்டார் ஆனால் மணிவண்ணன் அதை ஒரேயடியாக மறுத்துவிட்டான் .

கலைப்பிரிவு படிப்பது ஒன்றும் குறைந்தது அல்ல அந்த பிரிவிலும் நன்றாக படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கு என்று விளங்கபடுத்தி பின்னர் சட்டம் படிக்க கூட கலைபிரிவில் படிப்பதுதான் உதவியாக இருக்கும் என்று தாயாரை ஆறுதல் படுத்திவிட்டான் .

பாடசாலை தவணை விடுமுறையில் நிற்கும் தம்பி வரகுணனை நாளை கொழும்பு செல்லும்போது தன்னுடன் கூட்டி சென்று சில இடங்களையும் காட்டி தம்பிக்கு புத்திமதி சொல்லி அனுப்புகின்றேன் அவன் இனி நன்றாக படிக்க வேண்டிய அலுவல்களை பாருங்கள் என்று தாயாரிடம் சொல்லி விட்டான்.

அடுத்தநாள் தாயார் நந்தினியிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கொழும்பு புறப்பட்டுவிட்டனர் . ரெயின் பயணத்தின்போது அதுவரை வரகுணனை சிறுவனாக மட்டுமே பார்த்து விளையாடி வந்த மணிவண்ணன் ஒரு பொறுப்புள்ள அண்ணனாக அப்பா இறந்தது ,அம்மா தங்களை வளர்க்க பட்ட கஷ்டங்கள் ,படிப்பின் முக்கியம் ,வாழ்க்கைக்கு பணத்தின் தேவை என்று பல புத்திமதிகளை சொல்லிக்கொண்டே வந்தான் .எம்மிடம் போதுமான சொத்துக்கள் ,வீடு ,கார் ,வயல்கள் எல்லாம் இருக்கு ஆனால் நாம் அதற்காக பொறுப்பிலாமல் ஊதாரிதனாமாக நடந்தால் சில வருடங்களில் அனைத்தும் அழிந்துவிடும் .இன்னமும் மேலதிக சொத்துக்களை சேர்க்காமல் விட்டாலும் பரவாயில்லை இருப்பதை அழிக்ககூடாது . வரகுணனும் அண்ணன் சொல்வதை கேட்டு தலையை ஆட்டிக்கொண்டே வந்தாலும் அண்ணன் சொல்வது அவன் மண்டைக்குள் ஏறவில்லை அவனுக்கு அதற்கான வயதும் பக்குவமும் இன்னமும் வரவில்லை .

கொழும்பில் மிக அதி வசதி கூடிய இடங்களுக்கு வரகுணனை அழைத்து சென்று "பணம் இல்லாவிட்டால் இவைகள் எதுவும் சாத்தியமில்லை, இப்படியான இடங்களின் வாசற்படிகளே உன்னால் மிதிக்கமுடியாமல் வாழ்க்கை முடிந்துவிடும் " என்று சீரியசாக சொல்லும் அண்ணனை புரியாமல் ஒரு பார்வை பார்க்கின்றான் வரகுணன் .

அண்ணன் மிதிக்க முடியாது என்று சொன்னது HOLIDAY INN HOTEL தான். அங்குதான் இருவரும் தங்கிநிற்கின்றார்கள் .தினமும் காலை விதம் விதமான சாப்பாடுகள் .இடியப்பம் ,அப்பம் மீன் குழம்பு,சுட சுட முட்டைப்பொரியல்,மாசி சம்பல் .மாலை GYM ,SWIMING POOL .வேறு ஒரு புது உலகத்தை வரகுணனுக்கு காட்டுகின்றான் .

சட்டகல்லூரி அங்கு மணிவண்ணனின் ஆண் பெண் நண்பர்கள்அறிமுகம் ,ஒரு நாள் பொரளையில் உள்ள Oval லில் கிரிக்கெட் மாட்ச் , இரவு Savoy Theater இல்
The Good, the Bad and the Ugly ஆங்கிலப்படம் . இரவு சாப்பாடு Chinese Restaurant , அண்ணார் தனது பெண் நண்பி என்று அறிமுகம் செய்த நண்பியுடன் அவள் காரில் சென்று Abhimaan Hindi படம் .Galle Face கடற்கரையில் உலா

இப்படியே ஒரு ஐந்துநாட்கள் ஓடிவிட வரகுணனை Fort Station கொண்டுவந்து ரெயின் ஏற்றிவிட்டு

“கவனமாக போ .உன்னை சின்ன பெடியனாக நெடுகிலும் பார்த்துவிட்டேன் இனி நீ சின்ன பெடியனில்லை பொறுப்பாக நட "

ரெயின் புறப்படுகின்றது .அண்ணர் என்ன சொன்னார், இந்த ஐந்து நாட்களும் என்னத்தை சொல்ல முயன்றார் என்று வரகுணனால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை . எப்ப தான் வீட்டிற்கு போவம்,அம்மா கையால் சாப்பிடுவம், விடுமுறை முடிய யாழ் இந்து மைதானத்தில் Bat ஐ தூக்கிகொண்டி கிரிக்கெட் விளையாட போவம் என்று தான் அவன் மனதில் இருந்தது .
வரகுணனுக்கு நல்ல புத்திமதி சொல்லியாச்சு இனி அவன் கவனமாக படிப்பான் என்று மணிவண்ணன் திரும்பிவிட்டான்

இரு வருடங்களுக்கு பிறகு அதே போல அம்மாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கு . என்னவாக இருக்கும்?

.
அம்மாவை பார்த்தும் மூன்று மாதங்கள் ஆகின்றது எதற்கும் ஒருமுறை யாழ்பாணம் சென்றுவருவம் என்று முடிவு பண்ணி புறப்பட்டுவிட்டான் .

வீட்டிற்கு போய் சேர்ந்தவனுக்கு வீட்டில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் இல்லாதது பாரதூரமாக எதுவும் நடைபெறவில்லை என்றதே சந்தோசமாக இருந்தது .

பயண களைப்பு தீர கிணற்றில் குளித்துவிட்டு சாரத்தை மாற்றிக்கொண்டு வந்து குசினிக்குள் சென்றால் அம்மா தோசை சுட்டுக்கொண்டிருந்தார் .

"எங்கேம்மா தம்பி"

“அவன் சயிக்கிலை எடுத்துக்கொண்டு சந்தைக்குக்கு போய்விட்டான், உன்னோடு கொஞ்சம் தனிய கதைக்கவேண்டும் என்று நான் தான் மரக்கறி வாங்க அனுப்பினான்"

“ அப்படி என்ன விஷயம் "

"இவன் O/L Exam எடுத்தது உனக்கு தெரியும் தானே ,இன்னமும் Results வரவில்லை ,அதுவரை Repeat Class இல் இருக்க பாடசாலை போகவேண்டும் ஆனால் இவன் பள்ளிகூடம் போவதில்லை என்று கேள்விப்பட்டன் "

"அப்ப வீட்டில நிக்கிறவனோ '

“அப்படி நின்றால் பிரச்சனையில்லை அல்லோ ,எங்கேயோ பிழையான இடத்திற்கு போவதாக யாரோ சொன்னததாக எங்கட றைவர் சண்முகம் சொன்னான் "

“ குடி ,சிகரெட் என்று பழகிவிட்டானோ "

“ குடியில்லை என்று தெரியும் .ஒருநாளும் அவனை நான் அப்படி பார்க்கவில்லை ஆனால் சிகரெட் பிடிக்கிறவன் போலே இருக்கிறது சிலவேளை அவன் வரும்போது மணக்கிறது. அதை நான் பெரிதாக எடுக்கவில்லை ஆனால் இப்ப கேள்விப்படுகின்றன் பஸ் ஸ்டான்டில் நிற்கும் அடிபிடி கோஸ்டிகளுடன் சேர்ந்து திரிகின்றானாம் "

“ பெரிய சண்டியன் ஆகி விட்டானோ "

“ ஒரு நாள் முகத்தில் சிறு காயத்துடன் வந்தான்,என்னடா இது என்று கேட்க தனக்கு யாரோ அடித்தவர்கள் என்றும் திருப்பி அதற்கு மேலால கொடுத்தாச்சு " என்கின்றான் .

நான் பேசத்தொடங்க இனிமேல் சண்டைக்கு போகமாட்டன் என்று சத்தியம் பண்ணினான் ஆனால் இப்பவும் அந்த கோஸ்டிகளுடன் யாழ் பஸ் ஸ்டான்ட்டிற்கு முன் நிற்பதை தான் காணுவதாக சண்முகம் சொல்லுகின்றான் .

“பொலிசிலை சொல்லி அவங்களை வெருட்டி விடவோ "

“பிரச்சனை இதோட நிற்கேல, நீயே சண்முகத்திடம் என்னவென்று கேள் .எங்கட மானம் கப்பல் ஏறமுதல் ஏதாவது செய்துவிட்டுத்தான் நீ திரும்ப கொழும்பிற்கு போகவேண்டும் "

அம்மா கதைப்பதை பார்த்தால் விடயம் சற்று பாரதூரமாக இருக்கும் போல என்று மணிவண்ணனுக்கு தோன்றியது.

அப்படி என்னவாக பிரச்னை இருக்கும் ,எதுவும் பிழையான இடத்தில காதல் கீதல் என்று இறங்க்கிவிட்டானோ என்று யோசித்தபடியே வீ ட்டை விட்டு வெளியில் வர மாமரத்தின் கீழ் நின்று சண்முகம் காரை துடைத்துகொண்டு நிற்பது தெரிகின்றது .

\

“தம்பி எப்ப பயணத்தால வந்தனீர்கள் ,அம்மாநீங்கள் வருவதாக எதுவும் சொல்லவில்லை தெரிந்திருந்தால் நான் ஸ்டேசனுக்கு வந்திருப்பன் தானே "

“திடிரென்று ஒரு அவசர அலுவலாக வந்தானான் அதுதான் தந்தி ஒன்றும் அடிக்கவில்லை ,அது உனது குடும்பம் எல்லாம் எப்படி இருக்கு "

“ஐயாவின் குடும்பம் இருக்கமட்டும் எனக்கு என்ன குறை "

“சண்முகம் உன்னிடம் ஒரு விஷயம் கேட்க போறன் மறைக்காமல் எனக்கு உண்மையை சொல்லவேண்டும் "

சண்முகத்திற்கு அது வக்கீல் சிறிகாந்தாவின் குரல் போல காதில் இறங்கியது

“வரகுணனை பற்றி எனக்கு முழுவிசயமும் தெரியவேண்டும் , உனக்கு தெரியாமல் எதுவும் இருக்கபோவதில்லை .அவன்ரை நல்ல எதிர்காலத்திற்குதான் கேட்கின்றன் என்றதை மறந்து போடாதை"

“தம்பி சின்ன பெடியன் தானே ,பஸ் ஸ்டான்டில வேலை வெட்டி இல்லாமல் சும்மா நிக்கிற பிழையான ஆட்களோட கொஞ்சம் பழக்கமாகி போச்சு போல, உள்ள படம் எல்லாம் பார்ப்பதும்,பஸ் ஸ்டாண்டிற்குள் சுற்றுவதும் , அடிபிடி என்றும் திரியிற ஆட்கள் அவை , எப்படி அவர்களுடன் தொடர்பு வந்ததோ தெரியாது அதை நிப்பாட்டவேண்டும் .நான் சொல்லி தம்பி கேட்பாரோ , அம்மா வாய் திறக்க ஏதும் பொய் சொல்லி அவரின் வாயை மூடிவிடுவார் அம்மாவும் சமாதானமாகிவிடுவார் .நீங்கள் தான் ஏதாவது புத்திமதி சொல்லி மாத்தவேண்டும் "

“அம்மா வேறு ஏதோ பிரச்சனை மாதிரி சொல்லுகின்றா ,எனக்கு நீ ஒண்டும் மறைக்ககூடாது என்று அப்பவும் சொன்னான் "

“இல்லை தம்பி அது ……. அவங்களோட திரிந்து ஒரு பொம்புளையுடன் தம்பிக்கு சிநேகிதம் ஆகிவிட்டது ,இப்ப அங்கதான் எப்பவும் போய் வாறார். பஸ் ஸ்டாண்டிலும் காணக்கிடைப்பதில்லை பள்ளிகூடத்திற்கும் போறதில்லை .காலம சயிக்கில எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டா நேர அங்கதான் "

“ஆளுக்கு பொல்லாத லவ் வந்திட்டுது போல ? யார் பெட்டை ,எந்த இடம் "

“லவ் எல்லாம் இல்லை, அது ஒரு மாதிரியான இடம் . நான் அம்மாவிடமும் இன்னமும் முழு உண்மையை சொல்லவில்லை தம்பி "

“ மாதிரி இடம் என்றால் "

“இருபாலை வீதியால கோப்பாயை தாண்டி நல்லா உள்ளுக்க போக புருஷனை விட்ட ஒரு பொம்பிளை இருக்கு.பிழையான நடத்தை உள்ள ஆள் என்று கேள்வி .தம்பிக்கு எப்படியோ பழக்கம் ஏற்பட்டுவிட்டது அங்குதான் தினமும் சயிக்கில் எடுத்துக்கொண்டு போவதாக கேள்வி "

மணிவண்ணனுக்கு ஐந்தும் கேட்டு அறிவும் கெட்டுவிட்டது .இந்த சின்ன வயதில் இப்படி ஒரு பழக்கம். இதை அவனிடம் விசாரிக்ககூடாது. அம்மா

முழு உண்மையையும் அறிய முதல் ஒரு அலுவல் பார்க்கவேண்டும்.

“சண்முகம் உனக்கு வீடு தெரியுமோ "

“வீடு தெரியாது ஆனால் குறிப்பாக எந்த இடம் என்று தெரியும் தம்பி "

“வரகுணனுக்கு தெரியாமல் நான் அந்த வீட்டை போகவேண்டும், எதற்கும் நீ இப்ப உன்ரை வீட்டை போய்விட்டு பின்னேரம் நாலு மணிபோல வா. நான் அம்மாவையும் வரகுணனையும் கொழும்புத்துறையில் மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகின்றேன்"

"சரி தம்பி, கனக்க யோசிக்காதையுங்கோ ,சின்ன தம்பி நல்லவர், நீங்கள் சொன்னா கேட்பார் " என்றபடி சண்முகம் போகின்றார் .

வீட்டிற்கு உள்ளே போன மணிவண்ணன் தாயிடம்

“ நான் சண்முகத்திடம் கதைத்துவிட்டன் வரகுணனுக்கு எதுவும் தெரியவேண்டாம் .பின்னேரம் அவனையும் கூட்டிக்கொண்டு நாங்கள் மாமா வீட்டிற்கு போவம் .பிறகு நான் சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு போய் பிரச்சனையை தீர்த்துவிட்டுவாறன் .இந்த சின்ன விசயத்தை கூட தீர்க்க தெரியாட்டி நான் வக்கீலாக இருந்து என்ன பிரயோசனம் .”

வரகுணன் சயிக்கிள் நிற்பாட்டும் சத்தம் கேட்க மணிவண்ணன் எழுந்து வெளியே போகிறான் .

"அண்ணை எப்ப வந்தனி " மரக்கறி கூடையுடன் வரகுணன் உள்ளே வருகின்றான்

“ டேய் எப்படி இருகின்றாய் ,பரீட்சை எல்லாம் எப்படி எழுதினாய் "

“ சும்மா பரவாயில்லை ,எப்படியும் பாஸ் பண்ணிவிடுவன் "

"அம்மா தோசை சுடுகின்றார் போய் சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் "

இருவரும் உள்ளே போய் தாயுடன் பேசிக்கொண்டு தோசை சாப்பிடுகின்றார்கள். குழந்தை பிள்ளை போல தாயிடம் பழகும் வரகுணனை பார்க்க மணிவண்ணனுக்கு இவனா நடத்தை கெட்ட ஒருத்தியுடம் போய்வருகின்றான் என்று நம்பமுடியாமல் இருக்கு .

பின்னேரம் கொழும்புத்துறைக்கு போய் தாயையும் தம்பியையும் மாமா வீட்டில் இறக்கிவிட்டு பின்னர் சண்முகம் வீடு போய் அவரையும் ஏற்றிக்கொண்டு கார் பருத்தித்துறை வீதியில் கோப்பாயை நோக்கிபோகுது.

மணிவண்ணனுக்கு தான் அங்கு போய் என்ன கதைப்பது என்ற யோசனையே ஆட்கொண்டிருக்கு .

போலிசை வைத்து உன்னை கைது செய்வம் என்று மிரட்டவா ?

என்னால் கேஸ் போட்டு உள்ளே தள்ள முடியும் அல்லது சும்மா பேசியே வெருட்டிவிடவா ?

இருபாலை வீதியில் கார் திரும்பி தோட்ட வெளிகளுக்குள்ளால் கார் போகுது .ஒரு நாளும் மணிவண்ணன் வந்திராத இடம் . பச்சை பசேல் என்று சுற்றவர எங்கும் புகையிலை ,வெங்காயம் ,கத்தரி தோட்டங்களாக இருக்கு .அப்படியே சற்று நேரம் பயணிக்க தோட்டவெளிகள் மறைந்து தென்னம்தோப்புகள் தெரிகின்றது .சிவப்புமண் போய் மணலாக நிலம் தென்படுகின்றது .கார் ஒரு ஒற்றையடி பாதையில் இறங்குகின்றது .சில நிமிட ஓடியிருக்கும்

“தம்பி குறுக்க பனம்குத்தி போட்டிருக்கு ,இதற்கு மேல கார் போகாது. சயிக்கில் அல்லது நடைதான் .இப்படியே இந்த ஒற்றையடி பாதையிலே ஐந்து நிமிடங்கள் நடக்க இடப்பக்கம் ஒரு பாதி கல்வீடு பாதி ஓலையால் வேய்ந்த ஒரு வீடு வரும் "

"அதுதான் புனிதமலரின் வீடு "

அப்ப சண்முகத்திற்கு எல்லாம் தெரியும் என்று மனதிற்குள் நினைத்தபடியே மணல் பாதையில் நடக்கின்றான் மணிவண்ணன் .அங்காங்கே தென்னம்தோப்புகளுக்கு இடையில் குடிசைகள் தெரிகின்றன .வெய்யில் இன்னமும் எறித்துகொண்டிருந்ததாலோ என்னவோ சுற்று முற்றும் சனங்கள் எவரையும் காணவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் .

அந்தா தெரியுது சண்முகம் சொன்ன வீடு .அரைகுறையாக கட்டபட்ட சிறிய கல்வீடு அதனுடன்ஒரு குடிசையும் சேர்ந்திருக்கு . குசினியாக இருக்கலாம் .அட இது எனக்கு இப்ப ரொம்ப முக்கியம் என்று சிரிப்பும் வருகின்றது. இவன் பாவி எப்படி இங்கு வந்து தொலைத்தான் என்ற வியப்பே இப்போ மணிவண்ணனுக்கு மேலோங்கி நின்றது.

வேலி எதுவும் இல்லை நேரே வீட்டிற்கு முன்னுக்கு போகின்றான் .

" யாரது "

உள்ளேயிருந்து ஒரு குரல் பின்னால் ஒரு பெண் வருவது தெரிகின்றது .

புனிதமலர் ?

 
 
 
 
 
 

Edited by arjun

இந்தக் கதை  வித்தியாசமாய் இருக்கு...கதையை நகர்த்திய விதம் அருமை சகோதரம்!! வாழ்த்துக்கள்!!!  கதையை முடிக்காமல் விட்டிட்டியள்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான கதை நகர்வு அர்ஜுன்.
ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். கதை வாசிக்கும் போது சம்பவங்கள் , இடங்கள் மனதில் படம் இட்டுச் சென்றது.
தொடருங்கள்....
   

Edited by Sasi_varnam

யார் அங்கே?

செருப்பை எடுத்து அர்ஜுனை நாலு சாத்து சாத்துங்கோ.:D::D::D:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப மணிவண்ணன் யாராய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறன்...! சம்பவங்கள் அந்தமாதிரி அயலைச் சுத்தியே நடக்குது....!  :)

  • கருத்துக்கள உறவுகள்

tw_tounge_wink:விஞ்ஞானம்,கணிதப்பிரிவுகளில் தம்பி வரகுணன் படித்திருந்தால் ,நிச்சயம் புனிதமலரிடம் சென்றிருக்க மாட்டான் கொழும்பில் மெனிக்கேயிடம் சென்றிருப்பான்....tw_tounge_wink:

Edited by putthan

12 hours ago, ஜீவன் சிவா said:

யார் அங்கே?

செருப்பை எடுத்து அர்ஜுனை நாலு சாத்து சாத்துங்கோ.:D::D::D:

கதையை பாதியில் நிறுத்தி எம்மை சஸ்பென்சில் வைத்திருந்தமையால்தான் நானும் இப்படி காரணமே இல்லாமல் எழுதி உங்களை கொஞ்சம் குழப்பினேன் - மன்னிக்கவும்.

கதை நன்றாக உள்ளது தொடரவும். எனக்கு தொடர்கதை, சீரியல்கள் என்றால் ரொம்ப கடுப்பு வரும்.

  • தொடங்கியவர்

புனிதமலர் -2

புனிதமலர் ..............

மணிவண்ணன் கொஞ்சம் திகைத்துத்தான் விட்டான். தனது கற்பனையில் இருந்த ஒரு விபச்சாரியின் உருவம் மறைந்து அழகான புன்னகையுடன் சீராக வாரப்பட்ட தலைமயிருடன் நெற்றி நிறைய பொட்டு வைத்து முப்பது வயது மதிக்க தக்க செழிப்பான உடல்வாகுடன் செதுக்கி வைத்த சிலை போல அவன் கண்களில் அவள் தெரிந்தாள் .

“ஐயா யாரை தேடி வந்தனீங்கள் "

“ புனிதமலர் என்று யாரும் இருக்கினமோ "

“ஓஒ நான்தான் அது என்ன விஷயம் "

“வரகுணனை தெரியுமா "

அவளிடம் இருந்து பதில் இல்லை , முகத்தில் சற்று கலக்கமும் பயமும் தெரியுது .

"நான் வரகுணனின் அண்ணை .கொழும்பில் இருந்து உன்னை தேடி வந்திருக்கின்றேன் .உன்னை பிடித்து போலீசில் கொடுத்து ஜெயிலில் போடுவது எனக்கு பெரிய அலுவல் இல்லை ஆனால் நான் அப்படி செய்யமாட்டன் .உனக்கு ஒரு குடும்பம் இருக்கு போலிருக்கு "

அவள் முகம் பேயறைந்தது போலாகி தேகம் சற்று நடுங்குவதை மணிவண்ணன் அவதானித்தான் .இனி வந்த வேலை சுகமாக முடிந்துவிடும் என்று வக்கீல் மனது சொல்லுது .

“ தம்பி பாடசாலைக்கு செல்லாமல் தினமும் உன்னிடம் வருவதாக அறிந்தன் .படிக்கும் சின்ன பெடியன் அவன் " மணிவண்ணன் குரலை சற்று உயர்த்த தலையை குனிந்து கொண்டு மௌனமாக நின்ற புனிதமலர்

"தம்பி பரீட்சை முடிவு வரமாட்டன் என்று சொன்னவர் "

“இஞ்ச பார் , நான் இங்கு என்ன நடந்தது என்று கேட்க வரவில்லை .நடந்தது நடந்ததாக இருக்கட்டும் ,இனி அவன் இங்கு வரக்கூடாது அதை நீ தான் செய்யவேண்டும் .அவனுக்கு அறியாத வயது அதை பயன்படுத்தி பணத்திற்காக தானே இவ்வளவும் செய்தனி ,இந்தா ஐயாயிரம் ரூபா .இனி இங்கு அவன் வந்ததாக கேள்விப்பட்டால் நீ இங்கு இருக்கமாட்டாய் "

அவள் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை ஆனால் அவள் முகத்தில் இப்போ பயம் மறைந்து கோபம் தெரிந்தது .தனது இயலாமையால் அதை அவள் வார்த்தையால் வெளிக்காட்டாமல் முகத்தில் காட்டினாள் .

தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பாள் என்று நினைத்த மணிவண்ணனுக்கு தன்னை கோபத்துடன் பார்க்கும் அவளை பார்க்க வியப்பாக இருந்தது. இவளுக்குள்ளும் ஒரு கர்வம் இருக்கு போலிருக்கு.

"கடைசியாக சொல்லுகின்றன் , திரும்ப என்னை இங்கு வர வைத்து விடவேண்டாம், அப்போ நான் இப்படி இருக்கமாட்டன் , விளங்கும் என்று நினைக்கின்றன் .உனக்கு நாங்கள் யார் என்றும் உனக்கு தெரியும் தானே " 
மணிவண்ணன் ஐயாயிரம் ரூபாவை திண்ணையில் வைத்துவிட்டு,

" இது தம்பி விட்ட பிழைக்கு "

என்ற படி காரை நோக்கி நடக்கின்றான் ..


இனி ஒரு பிரச்சனையும் வராது என்று அம்மாவிற்கு ஆறுதல் கூறி வரகுணனுக்கும் எதிர்காலம் பற்றி சில புத்திமதிகளுடனும் மணிவண்ணன் கொழும்பு திரும்பிவிட்டான் .

சில மாதங்களின் பின் அம்மாவிடம் இருந்து கடிதம் வந்தது .வரகுணன் O/L பாஸ் பண்ணிவிட்டதாகவும் இப்போ ஒழுங்காக பாடாசலை சென்று படிப்பதாகவும் அதில் இருந்தது . வரகுணனின் மனமாற்றம் எப்படி நடந்தது என்று மணிவண்ணனுக்கு வியப்பாக இருந்தது .புனிதமலருக்கு சொன்னது மாதிரி ரிசல்ட் வர அவளிடம் போவதை நிறுத்திவிட்டானா அல்லது தனக்கு பயந்து புனிதமலர் அவன் தன்னிடம் வருவதை நிறுத்திவிட்டாளா ? எதுவாக இருந்தாலும் வரகுணன் திருந்தியதே மிகப்பெரியவிடயம் .

இப்போது அவன் திருந்திய மாதிரி இருந்தாலும் அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற ஒரு பயமும் மணிவண்ணன் மனதில் எழுந்துகொண்டே இருந்தது .வரகுணனை வெளிநாடு அனுப்பினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற முடிவிற்கு வந்தவனாக லண்டன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டான் .

சில மாதங்களில் வரகுணன் லண்டனுக்கு மேற்படிப்பிற்கு சென்றுவிட்டான். தாயார் நந்தினிக்கு மகனை பிரிந்திருப்பதற்கு சற்றும் விருப்பம் இல்லை ஆனால் அவனின் எதிர்காலம் குறித்து பயந்திருந்தவருக்கு வேறு 
வழியில்லாமல் அவனை வழியனுப்பிவைத்துவிட்டார் .

நாலு வருடங்களின் பின் மணிவண்ணனின் திருமணத்திற்கு லண்டனில் இருந்து வரகுணன் வந்திருந்தான் .முன்னர் சற்று ஒல்லியாக நீண்ட மயிருடன் இருந்தவன் தலைமயிரை சுருட்டி உடம்பும் சற்று பெருத்து புது மெருகுடன் வந்திருந்தான் .பலருக்கு அவனை அடையாளம் காணவே கஷ்டமாக இருந்தது . 
மணிவண்ணன் இப்போ யாழ்பாணத்தில் பிரபல வக்கீல் .கலியாணம் மிக சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடந்துமுடிந்தது. மணிவண்ணனும் வரகுணனும் ஒன்றாக இருந்து சந்தோசமாக கதைப்பதும் , காரில் வலம் வருவதும்,உறவினர்களுடன் அன்பாக பழகுவதையும் பார்க்க நந்தினிக்கு தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு பலன் கிடைத்ததை நினைத்து பெருமைபட்டாள்

கலியாணம் முடிந்து வரகுணன் லண்டன் பயணமாகும் நாள் .உறவினர்கள் அனைவரும் அவர்கள் வீட்டில் குவிந்திருகின்றார்கள் . மணிவண்ணன் கலியாணம் செய்ததால் பெண் வீட்டு புது உறவுகள் வேறு வந்திருந்தார்கள் எல்லோருரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டு கலங்கிய கண்களுடன் அம்மாவிற்கு நெற்றியில் முற்றமிட்டு அண்ணனை கட்டி தழுவி விடைபெறுகின்றான் .வரகுணனின் உருவத்திலும் செயலிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தாயையும் தமையனையும் வியக்க வைக்கின்றது.

ட்ரைவர் சண்முகம் காரில் சூட்கேசுகளை ஏற்ற எல்லோருக்கும் கை காட்டியபடியே காரில் ஏறுகின்றான் வரகுணன் .

கார் பலாலி வீதியில் திரும்ப ,

"லண்டன் வாழ்க்கை எப்படி தம்பி ,தம்பியை பார்க்க எனக்கு பெரிய வியப்பா இருக்கு .சரியா மாறீட்டீங்க . உங்கட உடம்பும் முகமும் ஏன் மயிரும் கூட வித்தியாசமாக கிடக்கு "

“சண்முகம் நான் ஒன்றும் மாறவில்லை , நாட்டிற்கு திரும்ப வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று மயிரை சுருட்டி விட்டு வந்தன் . வயசிற்கு ஏற்ப உடம்பு மாறுது ஆனால் மனம் மாறாது .லண்டன் வாழ்க்கை சந்தோசம் இல்லை ஆனால் எனக்கு வேறு தெரிவும் இல்லை .இப்ப நான் ஒரே படிப்பு .சட்டம் படித்து பாரிஸ்டர் ஆகவேண்டும் என்பது மட்டுமே மனதில் நிரம்பியிருக்கு வேறு எதிலும் நாட்டம் இல்லை .”

“நல்லது தானே தம்பி .அண்ணைதான் இப்ப யாழ்பாணத்தில் பெரிய வக்கீல் . நல்லா உழைகின்றார் "

“இதுவெல்லாம் நடந்தது எனக்கு ஒரு கனவாக இருக்கு .உங்களுக்கு மட்டும் அல்ல சண்முகம் எங்கட குடும்பத்திலும் ஒருவருக்கும் என்னை பற்றி சிலவிடயங்கள் தெரியாதது. நான் கொஞ்ச காலம் ஆடிய ஆட்டம். அது கனவாகவே நான் மறந்துவிட்டன் .லண்டனில் இருந்து நாடு திரும்பும்போது முன்பு பழகிய ஒரு சிலரை சந்திக்கவேண்டும் வேண்டும் என்ற நினைப்பில் தான் வந்தேன் பிறகு போனது போனதாகவே இருக்கட்டும், இனி வேண்டாம் என்று விட்டுவிட்டேன் .”

“ சிறு வயதில் எல்லோரும் குழப்படி விடுவதுதானே தம்பி ,அதையெல்லாம் மறந்துவிடவேண்டும் .


“சண்முகம் நீ நினைப்பது மாதிரி குழப்படி இல்லை இது . லண்டனால் நாடு திரும்பும்போது அம்மா ,அண்ணா இவர்களை விட இன்னொரு ஆளையும் கட்டாயம் சந்திக வேண்டும் என்றுதான் வந்தனான். உங்கள் எவருக்கும் தெரியாது இந்த விடயம் .அவள் பெயர் புனிதமலர். O/L சோதனை எடுத்தபின் ஒருநாள் போன உறவு தினமும் என்று மாறி ஆறு மாதங்களுக்கு மேல் அவளுடன் தான் கழித்தேன் .பிழையான நடத்தையில் இருந்தவளை எனக்கு மட்டும் என்று மாற்றி தாரளமாக பணமும் கொடுத்து தினமும் போய் வந்தேன் .இந்த உறவு எவ்வளவு காலமும் நீடிக்கும் என்று எனக்கே தெரியாது ஆனால் மிக சந்தோசமாக இருந்தோம் . ஆனால் நம்ப முடியாமல் ஒருநாள் தன்னை விட்டு விட்டு போன கணவன் திரும்பி வந்துவிட்டான் என்று என்னை இனிமேல் வரக்கூடாது என்று சொல்லிவிட்டாள் . அதன் பிறகு நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல .பின்னர் நான் ஒழுங்காக படித்ததும் லண்டன் போனதும் அந்த புனிதமலரை மறக்கத்தான். இப்பவும் ஒருக்கா போய் அவளை பார்க்கவேண்டும் போல மனம் ஏங்குது ஆனால் கணவனுடன் சந்தோஷமாக இருக்கும் அவளை போய் பார்க்க மனம் பயப்பிடுது .”

" பழசை மறந்து படித்து முடித்து உங்கள் எதிர்காலத்தை பாருங்கோ, அப்பா இறந்தபின் மிகவும் மனம் நொந்துபோன அம்மா இப்போதுதான் மிக சந்தோசமாக இருக்கின்றார்"

சண்முகம் காரை யாழ்பாண ஸ்டேசனில் நிறுத்திவிட்டு ரெயினில் ஏறிய வரகுணனிடம் புனிதமலரை பற்றி அவன் அறிய படும் ஆவலை பார்த்து நடந்தவற்றை சொல்லுவமோ விடுவமோ என்று தடுமாறி ஒருவாறு சுதாகரித்தவாறு கையை காட்டி அனுப்பிவைக்கின்றான்.

ரெயின் புறப்பட காரை எடுத்துக்கொண்டு திரும்பும் சண்முகம் மனதில் மணிவண்ணன் முதன்முதல் புனிதமலரை பார்க்க போனது நினைவு வருகின்றது.

புனிதமலரை தம்பியுடனான உறவை நிறுத்தாவிட்டால் ஜெயிலிற்குள் போடுவன் என்று வெருட்டியது,

ஐயாயிரம் ரூபா கொடுத்து விட்டு திரும்பும் போது ஒரு குழந்தை அம்மா காரில் வந்த மாமா யார் என்று தாயை கேட்டது ,
அதன்பின் சில மாதங்களில் கொழும்பால் திரும்பி வந்த மணிவண்ணன் மறுபடியும் தன்னை அழைத்துக்கொண்டு புனிதமலரை பார்க்க சென்றது , 
வரகுணனிடம் கணவன் திரும்பி வந்துவிட்டான் என்று புனிதமலர் பொய் சொல்லி அவனை தன்னிடம்வராமல் நிறுத்தியது, 
மீண்டும் அவள் பாவம் என்று தான் ஐயாயிரம் ரூபா புனிதமலருக்கு கொடுத்தது,

இவைஅனைத்தும் மணிவண்ணனே சண்முகத்திற்கு சொன்ன விடயங்கள் .

ஆனால் தொடர்ந்து மணிவண்ணன் புனிதமலரிடம் போவது சண்முகத்திற்கு தெரியும் ஆனால் அது மணிவண்ணன் சண்முகத்திடம் சொல்லாதது.

 
Parathan Navaratnam's photo.
 
 

Edited by arjun
எழுத்து திருத்தம் .

அடடா நல்லா இருக்கே கதை. பச்சைதான் முடிந்து விட்டது. தொடர்ந்து எழுதுங்கள் முழுமையாக (தொடராக வேண்டாம் - இந்த வயதில் சஸ்பன்ஸ் வேண்டாம் என்று டாக்டரும் சொல்கிறார்).

கதையை நகர்த்திய விதம் அருமை... கதையையும் வித்தியாசமாக முடித்து விட்டீர்கள்!.... தொடர்ந்து எழுதுங்கள் சகோதரம்!!! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா,
கதை அருமையிலும் அருமை... ஆச்சரியமாய் இருக்கிறது எப்படி எல்லாம் திருப்பத்துடன் வசீகரமாய் கதை சொல்கிறீர்கள் !!

தொடர்ந்தும் இப்படி குட்டி குட்டியாய் கதை எழுதுங்கள். இது உங்களுக்கும் ஒரு மன நிறைவை தரும். உங்கள் எழுத்து வன்மையையும் மேருகேற்றும். வெறும் அலட்டல் அரசியலில் மன உளைச்சல் தானே அதிகம்.

இதில் எனக்கு பிடித்த இடம் முதன் முதலில் மணிவண்ணன் புனித மலரை பார்த்தபோது அளவுக்கு அதிகமாக அவள் அழகை வருணிப்பதில் நிக்காது சாதாரணமாக மனதில் தோன்றும் விடயங்களை எழுதி...
அதை கடைசியில் கதை முடிவில் மணிவண்ணன் நினைத்ததை (சபலத்தை) காட்டி முடித்திருப்பது.

"இவைஅனைத்தும் மணிவண்ணனே சண்முகத்திற்கு சொன்ன விடயங்கள் .

ஆனால் தொடர்ந்து மணிவண்ணன் புனிதமலரிடம் போவது ... சண்முகத்திற்கு தெரியும் ஆனால் அது மணிவண்ணன் சண்முகத்திடம் சொல்லாதது." :shocked: tw_lol:

Bravo !!!

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
44 minutes ago, Sasi_varnam said:

அர்ஜுன் அண்ணா,
கதை அருமையிலும் அருமை... ஆச்சரியமாய் இருக்கிறது எப்படி எல்லாம் திருப்பத்துடன் வசீகரமாய் கதை சொல்கிறீர்கள் !!

தொடர்ந்தும் இப்படி குட்டி குட்டியாய் கதை எழுதுங்கள். இது உங்களுக்கும் ஒரு மன நிறைவை தரும். உங்கள் எழுத்து வன்மையையும் மேருகேற்றும். வெறும் அலட்டல் அரசியலில் மன உளைச்சல் தானே அதிகம்.

இதில் எனக்கு பிடித்த இடம் முதன் முதலில் மணிவண்ணன் புனித மலரை பார்த்தபோது அளவுக்கு அதிகமாக அவள் அழகை வருணிப்பதில் நிக்காது சாதாரணமாக மனதில் தோன்றும் விடயங்களை எழுதி...
அதை கடைசியில் கதை முடிவில் மணிவண்ணன் நினைத்ததை (சபலத்தை) காட்டி முடித்திருப்பது.

"இவைஅனைத்தும் மணிவண்ணனே சண்முகத்திற்கு சொன்ன விடயங்கள் .

ஆனால் தொடர்ந்து மணிவண்ணன் புனிதமலரிடம் போவது ... சண்முகத்திற்கு தெரியும் ஆனால் அது மணிவண்ணன் சண்முகத்திடம் சொல்லாதது." :shocked: tw_lol:

Bravo !!!

நன்றி சசி ,

எழுதி முடித்தபின் திருப்பி வாசிக்க எனக்கே சில விடயங்கள் விளங்காத மாதிரி இருக்கும் .உங்களுக்கு விளங்கியதில் சந்தோசம் .

இதுவெல்லாம் முக்கால்வாசி உண்மை சம்பவங்கள் தான் .இப்படி பல இன்னும் மனதில் இருக்கு அரசியலை வைத்து அடிபடுவதை விட்டு சற்று  ஒதுங்கி  விட்டு இனி  எனக்கு தெரிந்ததை எழுத நினைகின்றேன் .

வெறுமன பச்சை குத்தாமல் ஒரு சின்ன பின்னோட்டங்கள் தான் எமக்கான உற்சாகமும் ஊக்கமும் .நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

நன்றி சசி ,

எழுதி முடித்தபின் திருப்பி வாசிக்க எனக்கே சில விடயங்கள் விளங்காத மாதிரி இருக்கும் .உங்களுக்கு விளங்கியதில் சந்தோசம் .

இதுவெல்லாம் முக்கால்வாசி உண்மை சம்பவங்கள் தான் .இப்படி பல இன்னும் மனதில் இருக்கு அரசியலை வைத்து அடிபடுவதை விட்டு சற்று  ஒதுங்கி  விட்டு இனி  எனக்கு தெரிந்ததை எழுத நினைகின்றேன் .

வெறுமன பச்சை குத்தாமல் ஒரு சின்ன பின்னோட்டங்கள் தான் எமக்கான உற்சாகமும் ஊக்கமும் .நன்றி 

நன்றி அர்ஜுன், நான் இப்போது தான் பையன்களை குளிக்க வார்த்து நித்திரையாக்கி விட்டு வந்தேன்.
அந்த நேரத்தில் கூட உங்கள் கதை என்னவோ மனதில் திரும்பவும் வந்து நிழலாடாடியது, அப்போது நினைத்தேன் கதை எழுதிய விதம், குறிப்புகள்  ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையின்  பின்னணிதான் என்று.
தொடருங்கள்....

6 hours ago, arjun said:

எழுதி முடித்தபின் திருப்பி வாசிக்க எனக்கே சில விடயங்கள் விளங்காத மாதிரி இருக்கும் .உங்களுக்கு விளங்கியதில் சந்தோசம் .

இல்லை அர்ஜுன், கதையோட்டம் தெளிந்த நீரோடை போல அழகாகவும் இயல்பாகவும் இருந்தது. சிறுகதை எழுதுவதில் கைதேர்ந்த ஒருவர் போல் எழுதியிரு்ந்தீர்கள். தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள். இக்கதையை வாசித்து முடித்ததும் மனம் சந்தேகங்களற்று முழுமையாக இருந்தது. ஆனால் மரணதேவன் அப்படியிருக்கவில்லை. பதிலில்லாத பல கேள்விகள் எழுந்தன.

இவ்வளவு எழுத்தாளுமையை வைத்துக்கொண்டு எழுதாமல் இருக்கும் உங்களை (நான் பகடிக்கு எழுதியிருந்தாலும்) செருப்பால் அடித்தாலும் தப்பில்லை என்றுதான் இப்ப தோன்றுது. தொடர்ந்து எழுதுங்கள். மனம் இலகுவாகும்.

அப்புறம் அந்த வரகுணன் நீங்கள் இல்லைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ...நல்ல கதை தொட‌ர்ந்து கதை எழுதுங்கோ அதற்காக அரசியலிருந்து ஒதுங்க வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்

நான் மணியைப் பற்றி நினைத்தது சரிதான்....!

நன்றாக எழுதுகின்றீர்கள் அர்ஜுன். உண்மைச் சம்பவங்கள் இல்லாமல் எந்த ஒரு கற்பனைக் கதையும் எங்கும் கிடையாது. சண்முகம் ஒரு நல்ல சாரதி. சாரதி வேலை மட்டுமே பார்க்கின்றார்....!

மீனாவுக்குதான் நன்றி சொல்ல வேணும். அவர்தான் இவரை இழுத்து வந்து எழுத வைக்கின்றார்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

லாவகமாக கதையை நடத்திச் செல்லும் பாங்கு மிக அருமை. எவ்வளவு சம்பவங்கள் எமக்குள் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக எடுத்து வாருங்கள். பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடர்ந்தும் எழுதுங்கள் அண்ணா...அது சரி யார் அந்த பிரபல வக்கில்?

 

சுவாரசியமாக இருக்கிறது அர்யுன். ஒருவேளை சிறீகாந்தா பற்றியும் சண்முகத்திற்கும் ஒருவேளை மணிவண்ணனிற்கும் கூடத் தெரிந்த விடயங்களும் இருக்குமோ?

சற்று நீட்சியினைக் குறைத்து ஆழத்தை அதிகரித்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது-- உங்கள் கதையில் ஆழத்திற்கான களம் நிறையவே இருக்கிறது. 

சோபாசக்த்தியின் Box இன்னமும் கிடைக்கவில்லை, அதில் காலியில் இருக்கும் 'அடிமைப்புலி' விடுதி பற்றி இடம்பெற்றிருக்கும் செய்தியினைப் படித்தபோது அதன் பரிமாணம் புல்லரித்தது. எப்போது கையில் புத்தகம் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோரு கதை, பாரட்டுக்கள் அர்ஜுன்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக் கிராமங்களின் சந்திகளில் அமைந்திருக்கும் குறி காட்டும் கல்லுகளில்  குந்தியிருந்து கதை சொல்லும்... கதை கேட்கும் உணர்வு வந்து போகின்றது! கதை சொல்பவர்..கதை கேட்பவர் என்ற வித்தியாசமில்லாமல்.. கதையை நகர்த்தும் பாங்கு அருமை!

சந்தர்ப்ப சூழ்நிலைகள்.. மனித மனங்களில் உதிக்கும் உணர்வுகளை எவ்வாறு திசை திருப்பி விடுகின்றன என்பதை கதை அழகாக எடுத்துச் சொல்லுகின்றது!

எல்லோரது வாழ்க்கையிலும்... மற்றவர்களுடன் இலகுவில் பகிர்ந்து கொள்ளவியலாத.. கல்லறை வரை சுமந்து செல்ல வேண்டிய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பபதை ... அர்ஜுனின் கதை அழகாகச் சொல்லிச் செல்கின்றது!

உங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கள் வீண் போகவில்லை எனபதை உங்களது எழுத்து நடை சொல்லி நிற்கின்றது!

தொடர்ந்து படைப்புக்களைத் தாருங்கள், அர்ஜுன்...!

  • கருத்துக்கள உறவுகள்

பாரட்டுக்கள் அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொன்னவிதம் நன்றாக இருந்தது. மணிவண்ணன் தம்பியின் இடத்தைப் பிடிப்பார் என்பதை எப்படியோ ஊகித்துவிட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொன்னவிதம் சூப்பர். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் இருந்தது.  தொடர்ந்தும் எழுதுங்கள்!

கதையின் இறுதியில் மணிவண்ணன் புனிதமலரிடம் போவது சண்முகத்துக்கு மணிவண்ணன் சொல்லாமலே தெரிந்திருக்கிறது. அதே போன்று முன்னரும் புனிதமலரின் வீடு தெரியாது என்று சண்முகம் சொல்லிவிட்டு வீட்டின் அமைவிடத்தை குறிப்பாகச் சொல்கின்றார். எனக்கென்னவோ சண்முகத்தின் செயற்பாடுகள் புதிராகவே இருக்கின்றது...........

14 minutes ago, வாலி said:

எனக்கென்னவோ சண்முகத்தின் செயற்பாடுகள் புதிராகவே இருக்கின்றது...........

எனக்கும்தான்
இதற்குத்தன் லைக் போட்டன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.