33 பந்துகளில் சதம்: புதுமை மற்றும் பலத்துடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஃபின் ஆலன்
கட்டுரை தகவல்
பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழ்
5 மார்ச் 2026, 01:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஒட்டுமொத்த இந்தியாவும் பல்வேறு வண்ணங்கள் பூசி ஹோலி கொண்டாடிக்கொண்டிருக்க கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானம் முழுவதும் கருப்பின் ராஜ்ஜியமாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் எளிதாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 'பிளாக் கேப்ஸ்' என்று அழைக்கப்படும் நியூசிலாந்து அணி.
தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அந்தக் கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஃபின் ஆலன். 33 பந்துகளில் சதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார் அவர்.
சாதனைகள் படைத்தது மட்டுமல்லாமல், கொல்கத்தா ரசிகர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டி நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்.
சாதனை சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் 170 என்ற இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. டிம் செய்ஃபர்ட் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வெற்றிக்கான பவுண்டரியோடு 33 பந்துகளில் தன் சதத்தை நிறைவு செய்தார் ஃபின் ஆலன்.
ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் பவுண்டரி அடித்து தன் ஆட்டத்தைத் தொடங்கியவர், மொத்தம் 10 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார்.
ஃபின் ஆலன் இன்னிங்ஸ்: 4, 1, 1, 6, 1, 1, 0, 6, 1, 6, 4, 4, 4, 4, 0, 1, 1, 4, 1, 6, 0, 2, 0, 1, 6, 4, 6, 1, 4, 4, 6, 6, 4
ஒவ்வொரு பௌலருக்கு எதிராகவும் ஆலன்:
vs ககிஸோ ரபாடா - 7 (5)
vs மார்கோ யான்சன் - 31 (7)
vs லுங்கி இங்கிடி - 8 (4)
vs கார்பின் பாஷ் - 29 (8)
vs கேஷவ் மஹராஜ் - 25 (9)
இப்படியாக வலது கை வேகம், இடது கை வேகம், சுழல் என தான் சந்தித்த அனைத்து வகையான பந்துவீச்சையும் அடித்து ஆடினார் ஆலன். சில ஷாட்களின் மூலம் தன் தைரியத்தையும் வெளிப்படுத்தினார்.
ரபாடாவின் பந்தை நிதானமாக தேர்ட் மேன் திசையில் தொட்டுவிட்டு பவுண்டரி ஆக்கினார். ஒரு ஸ்லிப்பும், கல்லியும் இருந்தபோதிலும் தைரியமாக அந்த ஷாட்டை அடித்தார். அதேபோல், இங்கிடி பந்துவீச்சில் ஒரு பந்தை ஸ்கூப் ஆடி சிக்ஸர் அடிப்பார். இங்கிடி 'ஸ்லோயர் பால்' வீசுவதில் தேர்ந்தவர். ஆலனுக்கு அப்படியான பந்துகள் தான் முன்பு வீசிக்கொண்டிருந்தார். வேகம் குறைவான பந்துகளை ஸ்கூப் ஆடுவது ஆபத்தானது. ஏனெனில், பந்து அதிக தூரம் போகாது. அப்படியிருக்கும்போது இங்கிடியின் பந்தில் ஸ்கூப் ஆடியது மிகவும் தைரியமான முடிவு. அவர் அடித்த பந்து வேகமாக வந்தது அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 10 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடித்தார் ஃபின் ஆலன்
ஆலனின் ஆட்டம் இன்றைய காலகட்டத்தின் ஒரு டி20 வீரரின் ஆட்டமாகவே இருந்தது. ஸ்கூப், பேடில் ஸ்வீப், ஃபிளிக், புல் என டி20 ஃபார்மட் ஷாட்களை நிறையவே ஆடினார். ஆனால், பெரும்பாலும் டிரைவ்கள் ஏதும் ஆடவில்லை. அவருடைய சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பெரும்பாலும் விக்கெட்டுக்குப் பின்னாலும், முன்னாலுமே வந்தன. கவர் திசையில் பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடிக்கவில்லை. அதேபோல், ஸ்கொயர் லெக் முதல் மிடிவிக்கெட் வரையுமான இடங்களிலும் அவர் பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடிக்கவில்லை.
முழுக்க முழுக்க பலம், புதுமை மற்றும் தைரியம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலன் 303.03 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தன் சதத்தை நிறைவு செய்தார்.
இந்தப் போட்டியில் ஃபின் ஆலன் படைத்த ஒருசில சாதனைகள்
டி20 உலகக் கோப்பை வரலாற்றின் அதிவேக சதம்
சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது (இணைந்து) அதிவேக சதம்
இரு முழுநேர ஐசிசி உறுப்பினர் நாடுகள் ஆடிய போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக டி20 சதம்
டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதல் சதம்
ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக பவுண்டரிகள் + சிக்ஸர்கள் அடித்த வீரர் - 18
ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர் - 88
ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 20
தொடர்ந்து ஜொலிக்கும் செய்ஃபர்ட் - ஆலன் கூட்டணி
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஆலன் & செய்ஃபர்ட் இணைந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் 463 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதில் ஆலன் மட்டுமல்ல செய்ஃபர்ட்டின் பங்களிப்புமே முக்கியமானது. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து அந்த அதிரடியைத் தொடங்கியவர் செய்ஃபர்ட் தான். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பார்ட்னர்ஷிப்பாக செய்ததை, அவர்கள் இருவரும் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார்கள்.
இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும்போது பல தொடக்க ஜோடிகளின் மீது கவனம் இருந்தது. அபிஷேக் ஷர்மா & இஷன் கிஷன், ஜாஸ் பட்லர் & ஃபில் சால்ட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் போன்ற இணைகள் பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைப் போல் இருக்கவில்லை.
அபிஷேக் ஷர்மா தொடர்ந்து 3 போட்டிகள் டக் அவுட் ஆனார். பட்லர், ஃபில் சால்ட் இருவரும் எடுத்த ஸ்கோரை சேர்த்தாலும் அது 200 ரன்களைத் தொடவில்லை. மார்ஷ் காயத்தால் அவதிப்பட, டிராவிஸ் ஹெட் கூட ஒரு போட்டியில் மட்டுமே சோபித்தார்.
மற்ற அணிகளில் ஒரு ஓப்பனர் சிறப்பாக ஆட, இன்னொரு ஓப்பனரிடம் இருந்து பங்களிப்பு வராமல் இருந்தது. உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளைச் சொல்லலாம்.
இப்படியிருக்கையில் நியூசிலாந்தின் இரு ஓப்பனர்களுமே தொடர்ச்சியாக இந்த உலகக் கோப்பையில் பெரிய ஸ்கோர்கள் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடரின் டாப் 5 பேட்டர்களில் இவர்கள் இருவரின் பெயருமே இருக்கிறது.
ஆலன் 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே 7 இன்னிங்ஸ்களில் செய்ஃபர்ட் 274 ரன்கள் எடுத்திருக்கிறார். இருவருமே 160+ ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்திருக்கிறார்கள். ஃபின் ஆலன் 203.52 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த 139 வீரர்களில் 200+ ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் 'ஒரே வீரர்' ஃபின் ஆலன் மட்டுமே!
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பை தொடரில் 3 அரைசதங்கள் அடித்திருக்கிறார் டிம் செய்ஃபர்ட்
மேலும், ஆலன் & செய்ஃபர்ட் இணைந்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் 463 ரன்கள் (கிரிக்பஸ் தரவுகளின்படி) எடுத்திருக்கிறார்கள். அதை 10.63 என்ற ரன்ரேட்டில் எடுத்திருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பார்ட்னர்ஷிப் அடித்த அதிக ரன்கள் இதுதான்.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு இவர்கள் அடித்த 117 ரன்கள் தான் ஒரு டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் ஒரு பார்ட்னர்ஷிப் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.
'ஹோம் கிரவுண்ட்' கொல்கத்தாவில்
ஃபின் ஆலன், டிம் செய்ஃபர்ட் இருவருமே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்கள். ஃபின் ஆலன் 2 கோடி ரூபாய்க்கும், செய்ஃபர்ட் 1.5 கோடி ரூபாய்க்கும் தங்களின் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டார்கள்.
2024 சீசனில் அவர்கள் ஐபிஎல் கோப்பை வென்றதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர்களுள் ஒருவரான ஃபில் சால்ட் இடத்தை அந்த அணியால் கடந்த ஆண்டு நிரப்ப முடியவில்லை. நல்ல அதிரடி தொடக்கம் கொடுக்ககூடிய கீப்பராக அவர்கள் டி காக்கை வாங்கினார்கள். ஆனால், அவர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால், இந்த சீசனுக்கான ஏலத்தில் அப்படியான இரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர்களை அவர்கள் வாங்கினார்கள் - ஆலன் & செய்ஃபர்ட்.
சுனில் நரைன், கேமரூன் கிரீன், மதீஷா பதிரானா (ஃபிட்டாக இருக்கும்பட்சத்தில்) ஆகிய வெளிநாட்டு வீரர்கள் கொல்கத்தாவின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அந்த மீதமொரு இடத்துக்கு ஆலன் மற்றும் செயஃபர்ட் இருவருக்குமே போட்டியிருக்கும் என்று கருதப்பட்டது. அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது அவர்களின் ஐபிஎல் ஹோம் கிரவுண்டான ஈடன் கார்டனிலும் இருவரும் சிறப்பானதொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்கள். வரப்போகும் ஐபிஎல் சீசன் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அந்த ஊர் மக்களுக்குக் காட்டி ஹோலியோடு சேர்த்து இரட்டிப்பு கொண்டாட்டத்தை கொல்கத்தாவுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
33 பந்துகளில் சதம்: புதுமை மற்றும் பலத்துடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன்
By
ஏராளன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.