Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடைகாக்க மறுத்தவளுடனான உரையாடல்.

Featured Replies

உடற்பயிற்சி நிலையம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. மிகச் சிலரே அந்நேரம் வந்திருந்தார்கள். காதிற்குள் இளையறாஜா ஒலிக்க காடியோவில் மூழ்கியபோது, பாடல் ஒவ்வொன்றையும் சிற்றுவேசன் பாடலாக ஆக்கி, மனம் பழைய சீன்களை மனத்திரையில் ஓடவிட்டுக்கொண்டிருந்தது. காடியோ முடித்த கையோடு வெயிற்சிற்கு சென்றபோதும், இன்று ஏனோ மனமும் உடலும் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைபோல் முரண்டு பிடித்தன. ஒன்றுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் முப்பது வீதமாவது செய்தோமே என்று திருப்த்திப்படுத்திக்கொண்டு லொக்கர் நோக்கி நடந்துகொண்டிருக்கையில் கடைப்பார்வை கைப்பற்றிய, இலிப்ற்றிக்கல் உபகரணத்தில் உழன்றுகொண்டிருந்த, பெண் பரிட்சயமான முகமாகத் தெரிந்தது. எனவே மீண்டும் பார்த்தபோது மிகப் பரிட்சயமானதாகத் தெரிந்தபோதும் சரியாக ஞாபகம் வரவில்லை. உடற்பயிற்சி நிலையத்தைப் பொறுத்தவரை தெரியாத பெண்களுடன் பேசவிளைவது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு மேலால் பேசப்படும் பெண்ணிற்கான ஒரு அங்கீகாரம் என்ற அளவிற்குக் கூட ஒரு எழுதாவிதி இருக்கிறது. எனவே அவளிடம் சென்று, ஏற்றுக்கொள்ளப்பட்ட புறோட்டோகோலிற்கமைய ஆங்கிலத்தில் என் உரையாடலை ஆரம்பித்து, அவள் பரிட்சயமானவளாகத் தெரிகிறாள் ஆனால் சரியாக ஞாபகம் இல்லை என்றேன். அவள், தானும் அவ்வாறே உணர்வதாகக் கூறினாள்.  இருந்தும், மூளை முற்றாகத் தனது வளங்கள் அனைத்தையும் கோப்புப் பிரட்டலில் உபயோகித்துக்கொண்டிருந்ததால், இருவரில் எவரிற்கும் எங்கள் பெயர்களைக் கூறி அறிமுகப்படுத்தத் தோன்றவில்லை. ஒரு நிமிடம் மூளை கோப்புக்களைப் புரட்டியபின்னர் இருவரது கண்களிலும் ஏறத்தாள ஒரே நேரத்தில் ஞாபகம் வந்தமைக்கான ஒளி பிறந்தது.
 
'தேர்த்திருவிழாவில் ஹாவ் சாறியில் பத்தாம் வகுப்புச் சோதனைக்கு முந்திய பதினாறு வயதில் பார்த்தது தான் கடைசியாக ஞாபகத்தில் இருக்கிறது' என்றேன்.
 
'இருபத்து மூன்று வருடம்' என்றாள்.
 
தனக்கும் இன்று உடற்பயிற்சி முரண்டு பிடிப்பதாகக் கூறியபடி உபகரணத்தை நிறுத்தினாள்,
 
'உனக்கு ஸ்ரார்பக்சிற்குச் செல்ல நேரமிருக்கிறதா' என்றேன். அவளிற்கும் அது உடன்பாடானதாயிருக்க, இருபது நிமிடங்கள் லொக்கர் அறையில் கரைத்து இருவரும், நான் 'வென்ரி போல்ட் நோ றூம்' உடனும், அவள் எழுதுவதற்கு இருவரி தேவைப்படும் பானத்துடனும் ஸ்ரார்பக்சில் அமர்ந்தோம். மணிக்கூடு ஏழு மணி ஒன்பது நிமிடம் என்றது.
 
'சொல்லு, என்ன செய்கிறாய் ஆரோடெல்லாம் தொடர்பில் இருக்கிறாய்' என்றேன்.
 
நாங்கள் இருவரும் அப்போது உணரவில்லை, ஆனால் எங்கள் உரையாடல் 99 வீதம் ஆங்கிலத்தில் தான் இருந்தது என்பது இப்போது ஞாபகத்தில் தட்டுகிறது.
 
'ஏறத்தாள இருபது வருடங்களின் பின்னர் ஒரு தமிழருடன் உரையாடுகிறேன்' என்றாள்.
 
'அது சரி. நீ இருக்கிறது ஜெலோ நைவ் என்பதால நான் நம்பீட்டன்'; என்றேன், நகைச்சுவையோடு'
 
'நான் சீரியசாத் தான் சொல்லுறன்' என்றாள்.
 
'எப்பிடி..' என்றேன்.
 
'உனக்குத் தெரியும் நான் தனிப்பிள்ளை. அம்மா அப்பா இறந்தபிறகு, உறவுக்காரரோட தொடர்பில்லை. என்ர கணவன் பெயர் றையன். எனக்கு இரண்டு பிள்ளைகள், ஈத்தன், எமா. எனது வேலையில் தமிழர்கள் இல்லை. திட்டமிட்டு நான் தமிழர்களைத் தவிர்க்கவில்லை. என்ர வாழ்வின் ஓட்டத்தில் தமிழர்கள் தட்டுப்படவில்லை. நானும் அவர்களைத் தேடவில்லை' என்றாள்.
 
'நீ சோறு கறி சாப்பிடறதில்லையா. தமிழ்க் கடைக்குப் போவதில்லையா'
 
'றையனிற்கு உறைப்பில்லை, மசாலா கூட ஒத்துவராது.  எனக்கும் என்ர அம்மா அப்பாவின் இழப்பை தாங்குவதற்கு அவர்களை ஞாபகப்படுத்திய அனைத்தில் இருந்தும் ஓட வேண்டியிருந்தது. காலப்போக்கில், அதுவே வழமையாகிவிட்டது'
 
'எனது பேச்சு ஆர்வக்கோளாறிலும், உன்னைக் கண்ட ஆர்ப்பரிப்பிலும் வரம்பு மீறியிருந்தா மன்னிச்சுக்கொள். உன்ர வாழ்வு உன்ர தெரிவு. நான் கூட எனக்கென்று நானாக எனக்குரியவகையில் பிரதி எடுத்துக்கொண்ட என்ர பிரத்தியேகப் version இல் அமைந்த தமிழ்க்கலாச்சாரத்தில் தான் வாழுகிறன். சுருக்கமாச் சொன்னா நானொரு Beef Eating Beer Drinking Hindu என்ட மாதிரி' என்றேன்.
 
'எனக்கு அடையாளம் சார்ந்த பெறுமதி அறவே இல்லை என்பதால், நீ நினைத்தாலும் என்னை இந்தவிடயத்தில் காயப்படுத்தமுடியாது' என்றாள்.
 
'நான் உன்னிடம் ஒரு academic ரைப்பான கேள்வி கேட்கலாமா?
 
'தாராளமாக் கேள்'
 
'எப்பவாச்சும் நம்ம ஒரு தமிழனைக் கட்டித் தமிழுக்குள்ள வாழ்ந்திருக்கலாமே என்று உனக்குத் தோன்றியிருக்கா'
 
ஒரு நிமிடம் நிசப்த்தம்.
 
'உனக்கு நாங்க பிடிச்ச பெரிய சண்டை ஞாபகம் இருக்கா?' என்றாள்.
 
'நல்லா ஞாபகம் இருக்கு. சிவகாமியின் சபதத்தின் கடைசிப் பாகத்தை யார் எங்கள் அன்ரி வீட்டில் இருந்து எடுத்துப்போறது என்றதில் வந்த சண்டை தானே...'
 
அன்னைக்குரிய ஒரு ஈரத்துடன் சிரித்தாள். பின்னர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
'நான் இருபத்து மூன்று வருடத்தில் தமிழே வாசித்ததில்லை தெரியுமா' என்றாள்.
 
'வாசிப்புத் தொடர்கிறதா' என்றேன்.
 
'பல்கிப் பெருகித் தொடர்கிறது. றையனும் ஒரு பேராசிரியர் என்ற வகையில் புத்தகங்கள் எங்கள் வீட்டிற்குள் குவிந்துதான் கிடக்கின்றன' என்றாள்.
 
தொட்டில் பழக்கம் சுடகாடுவரை என்று தமிழில் பழமொழி சொன்னேன். சிரித்தாள்.
 
'தமிழனைக் கட்டியிருந்தால்...என்ற எண்ணம் தோன்றவில்லையா என்று கேட்டிருந்தாய்...'
 
ஆம் என்றேன்.
 
'தமிழனை விடு, ஆண் பெண் என்றதை விடு. இரு மனிதர்கள் ஒன்றாக முடியும் என்று நினைக்கிறாயா?' என்றாள்.
 
'ஒரு நாய்க்குட்டியுடன் எம்மால் உணர்வுகளைப் பரிமாற முடிகிறது. தொட்டிக்குள் நீந்தும் மீனிற்குப் பசிக்குமா என்று எனக்குச் சில சமயம் தோன்றியுள்ளது. காட்டிற்குள் ஹைக்கிங் போகும் போது காட்டோடு, இயற்கையின் ஒரு அங்கமாக நான் ஒருமித்துக் காணாமல் போனதை உணர்ந்திருக்கிறேன். அப்படியிருக்கையில், ஒரு தமிழரோடு, என் பாரம்பரியத்தையும் பழக்கவழக்கங்களையும் தோற்றுவித்த தளத்தைப் பகிர்ந்துகொள்ளும் மனிதரோடு, ஒட்டுவது இலகுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது' என்றேன்.
 
'ஒரு மனிசியாக நானாக என்னை ஒரு தீவாக நான் உணர்வது மட்டுமன்றி என் உடலின் ஒவ்வொரு cellலும் தன்னை ஒரு தீவாகத் தான் உணருகிறது என்றே எனக்குப் படுகிறது' என்றாள்.
 
'நான் உனது பேச்சில் விரத்தியினைக் காணுகிறேனா' என்றேன்.
 
சிரித்தாள். நல்லா இன்னமும் தமிழ்ப் படம் பாக்கிறாய் போல என்றாள்.
 
'விரக்த்தி என்பதனை என் அம்மா அப்பா ஒன்றாக அந்தக் குண்டில் மறைந்தபோது கூட நான் உணரவில்லை. நான் கூறியது எனது சிந்தனையின் இப்போதைய கட்டம். இதுவும் கடந்துபோகக் கூடும்' என்றாள்.
 
'உன் குழந்தைகளிற்குத் தமது தமிழ் பிணைப்புத் தெரியுமா?'
 
'எனது கணவன் குழந்தைககள் என்று நானாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பிணைப்பு நிச்சயமாக எனக்கு மகிழ்வானது. அவர்கள் சார்ந்து பாசத்தையும் பதைபதைப்பையும் என்னால் உணர முடிகிறது. அவர்களை இழந்துவிடக்கூடாது என்பது என் பிரார்த்தனை. என் குழந்தைகளை எனது நீட்சியாக என்னால் உணரமுடிகிறது. உயிரியலைத் தாண்டிய பிணைப்பை உணர முடிகிறது. ஆனால் அடையாளம் சார்ந்த எங்கள் பார்வை வித்தியாசமானது'.
 
'அவர்கள் பார்வையில் தமிழ் என்றால் என்ன?'
 
'அவர்களைப் பொறுத்தவரை அது நான் பிறந்த பிரதேசத்தின் தார்ப்பரிய்ங்களில் ஒன்று. அவ்வளவு தான்'
 
'உனது உணவு பாரம்பரியம் சார்ந்து அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிற்கில்லையா?'
 
'நீ உணர்ச்சிநிலையில் உரையாடுகிறாய். தமிழ் உணவின் சுவைகள், தமிழ் இலக்கியங்கள் கையாண்ட கோணங்கள் இவை அந்தத் தளம் சார்ந்து தான் பூரணமாக உணரப்படக்கூடியன. ஆனால், அதே கோணங்களையும் சுவைகளையும் மருவிய வடிவில் எங்கும் அடையாளங்காண முடியும். மனிதன் மட்டுப்படுத்தப்பட்ட வீச்சோடு தான் முப்பதாயிரம் வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறான். மொழி, கலாச்சாரம் முதலிய ஏகப்பட்ட விடயங்கள் பேசுபவர் நலன் சார்ந்து பெருப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த cocoonனை உடைச்ப் பார்கத் தொடங்கினால் அடையளாம் என்பது அலுப்படிப்பதாய்ப் படுகிறது' என்றாள்.  
 
 
'இப்ப நேரக்குடுவைக்குள் உன்னைப் போட்டு, இதே அறிவோட இருபது வருடத்திற்கு முன்னர் கொண்டு சென்று நிறுத்தினாலும் நீ ஒரு தமிழரை மணம் முடிக்கணும் என்று நினைக்கமாட்டாயா' என்றேன்.
 
சில நிமிட நிசப்த்தம்.
 
'ஆண் பெண் என்ற இருவரும் மனிதராக இருப்பினும் நிச்சயமாக ஒருவரால் மற்றையரின் உணர்வுகளைப் புரியமுடியாது. இந்தப் பாரிய வித்தியாசத்தின் முன் குறித்த ஆணும் பெண்ணும் என்ன பாரம்பரியத்தவர் என்பது அடிபட்டுப்போகும்.. உனக்கு ஏன் அது ஒரு பேசுபொருளாகிறது என்று கூட உண்மையில் எனக்கு விளங்கவில்லை.' என்றாள்.
 
'தேர்த்திருவிழாவில் ஹாவ் சாறி கட்டி நீ நின்ற அந்த நாட்கள் சார்ந்து உனக்குள் எந்த ஏக்கமும் உண்மையில் இல்லையா' என்றேன்.
 
'அது தானே சொன்னேன், எந்த உணர்வும் எந்தச்சுவையும் அதன் மருவிய வடிவங்களில் எங்கும் காணப்படக்கூடியன. பிறகெதற்கு ஏக்கம்' என்றாள்.
 
'உனது அம்மா அப்பா மீது விழுந்த குண்டில் உனக்கு ஆத்திரம் இல்லையா?' என்றேன்.
 
'எனது அம்மாஅப்பாவின் இழப்பின் வலி இன்னமும் எனக்குள் முற்றாக மறையவில்லை. ஆனால், அந்தக் குண்டினை தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மனவமைப்பிற்குள் மட்டும் வைத்துப் பார்க்கவில்லை. குண்டிலும் கொடிய கொடூரங்களைத் தழிழர்கள் தமிழர்களிற்குச் செய்தார்கள் இனியும் செய்வார்கள். உயிர் வாழும் போது தானே ஏனைய அனைத்தும். அந்தவகையில் உயிர் என்பது எமது உளவியலில் அதியுச்சத்தில் இருக்கிறது. அது புரிந்து கொள்ளப்படக்கூடியது. ஆனால், கொடூரங்களை உலகின் அனைத்துப் பாகங்களிலும் மனிதன் செய்த வண்ணம் தான் இருக்கிறான். சுவை மட்டுமல்ல வலி கூட மருவிய வடிவில் உலகில் எங்கும் காணப்படக்கூடியதாகவே எனக்குப்படுகிறது. அதனால் தான் நான் ஒரு தீவு என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெறுகிறது. என் கணவர், குழந்தைகள் நண்பர்கள் எனது தீவிற்குள் வரும்போது மகிழுகிறேன், பல வருகைள் பயப்படுத்துகின்றன. என்னைப் பொறுத்தவரை நான் தான் எனது ஈழம். ஈழம் என்பது ஒவ்வொருவருருக்குமான பிரத்தியேக தீவுகளாகத் தான் அதன் உண்மையான அர்த்தத்தில் சாத்தியப்பட முடியும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அந்த வகையில் தான் அனைத்தையும் இப்போது என்னால் பார்க்க முடிகிறது' என்றாள்.
 
'என்னை இன்று கண்டதை உண்மையில் நீ எவ்வாறு பார்க்கிறாய். காணாதிருந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா. ஜிம் இனை மாத்த வேண்டும் என்று நினைக்கிறாயா. உண்மையினை மட்டும் கூறு. நான் வழர்ந்த பையன். அழமாட்டேன்.' என்றேன்.
 
'சந்தோசமா இருக்கிறது. உண்மையில் மிகச் சந்தோசம். ஜிம் இனை மாத்துறதுக்குப் பதில் பஞ்சிப்படாமல் வரலாம் என்று தோன்றுகின்றது. ஆனால், நீ கூறியது போல தேர்த்திருவிழாவில் நின்ற ஹாவ் சாறிப் பதினாறு வயது என்னுடைய படத்தைத் தாங்கி வந்த அல்பமாக உன்னை நான் பார்க்கவில்லை. பழையதில் வாழ்வதில் எனக்கு உடன்பாடுமில்லை அது சாத்தியமுமில்லை. எனது தீவிற்குள் மகிழ்ச்சிகொண்டுவரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தான் எனது மகிழ்விற்கான உண்மையான காரணம்' என்றாள்.
 
'அப்ப உன்னுடைய தீவினை விஸ்த்தீரிப்பதில் உனக்கு இஸ்டம் உண்டு' என்றேன்.
 
'தக்கன பிழைக்கும் என்ற அடிப்படையோடு ஒத்திசைவது தானே விஸ்த்தீரிப்பு ஆசை. அது அனைத்து மனிதனிற்கும் இருப்பது தானே' என்றாள்.
 
'நீ இப்ப சொன்னது உன்ர தனித்தீவுப் புரிதலோட முரண்படுவதாக நீ உணரவில்லையா?' என்றேன்.
 
'அடிப்படையில் தனித்தீவுகள் தான். அதில மாற்றம் இல்லை. ஆனால் நேசதீவுகள் பரஸ்பரம் இணைந்து பயணிப்பதில் கெடுதல் இல்லை.'
 
'ஈழத்தைக் கூட அப்பிடிப் பாக்கலாமோ?..' என்றேன்.
 
மணிக்கூடு 9 மணி ஏழு நிமிடம் காட்டியது. தொலைபேசி இலக்கப் பரிமாற்றங்களோ, வீட்டிற்கான அழைப்புக்களோ இதர சம்பிரதாயங்களோ இன்றி எழுந்து சென்றோம். 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் சந்தோஷமாக, கெளரவமாக தமது வாழ்க்கையை வாழ்வதற்கு சமூக அடையாளம் தேவையா என்பதை இக்கதையில் இருந்து கேள்வியாக நான் பார்க்கின்றேன். ஒருவருக்கு உறவினர், நண்பர்கள் கூடிய சமூகம் அவர் துன்பத்தில், நோய்களினால் பாதிக்கப்பட்டு அல்லது வேறு சிக்கல்களினால் திண்டாடப்படும்போதுதான் தேவைப்படுகின்றது என்பது நினைவுக்கு வரும்.

 

அதே போன்றுதான் ஒருவர் தான் புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக, தேவைகளைப் பூரணப்படுத்தக்கூடிய சூழலில் வாழும்போது பழையவற்றில் இருந்து விட்டு விடுதலையாகியதாக உணர்கின்றார். ஆனால் அந்த விடுதலை உணர்வு தற்காலிகமானதா, நிரந்தமரமானதா என்பது அவர் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இன்னொருவன் அண்ணா,

எனது பார்வையில் பழைய எழுத்துக்களில் இருந்து சிறிது மாறுபட்ட எழுத்து, இலகுவில் புரியாத தேர்ந்த எழுத்துநடையில் எழுதுவதை இயன்றளவு தவிர்த்து இலகுவில் அனைத்துத்தரப்பு வாசகர்களாலும் புரிந்துகொள்ளக்கூடியவாறு எழுதியுள்ளீர்கள் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அண்ணா. :)

  • தொடங்கியவர்
கிருபன் மற்றும் ஜீவா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
 
கதைகதையாம் பகுதி தான் கிட்டத்தட்டச் சரிவரும் என்றதுபோல் தெரிந்ததால் இங்கு பதிந்தேன். மற்றம் படி ஒரு இரைமீட்புத்தான். அடையாளம் பற்றிய பதிவிற்கு அடையாளப் பிரச்சினை வந்ததால் :D  சரியாக வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். நன்றி ஜீவா.
 
கிருபன், உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

 

'எனது அம்மாஅப்பாவின் இழப்பின் வலி இன்னமும் எனக்குள் முற்றாக மறையவில்லை. ஆனால், அந்தக் குண்டினை தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மனவமைப்பிற்குள் மட்டும் வைத்துப் பார்க்கவில்லை. குண்டிலும் கொடிய கொடூரங்களைத் தழிழர்கள் தமிழர்களிற்குச் செய்தார்கள் இனியும் செய்வார்கள். உயிர் வாழும் போது தானே ஏனைய அனைத்தும். அந்தவகையில் உயிர் என்பது எமது உளவியலில் அதியுச்சத்தில் இருக்கிறது. அது புரிந்து கொள்ளப்படக்கூடியது. ஆனால், கொடூரங்களை உலகின் அனைத்துப் பாகங்களிலும் மனிதன் செய்த வண்ணம் தான் இருக்கிறான். சுவை மட்டுமல்ல வலி கூட மருவிய வடிவில் உலகில் எங்கும் காணப்படக்கூடியதாகவே எனக்குப்படுகிறது. அதனால் தான் நான் ஒரு தீவு என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெறுகிறது. என் கணவர், குழந்தைகள் நண்பர்கள் எனது தீவிற்குள் வரும்போது மகிழுகிறேன், பல வருகைள் பயப்படுத்துகின்றன. என்னைப் பொறுத்தவரை நான் தான் எனது ஈழம். ஈழம் என்பது ஒவ்வொருவருருக்குமான பிரத்தியேக தீவுகளாகத் தான் அதன் உண்மையான அர்த்தத்தில் சாத்தியப்பட முடியும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அந்த வகையில் தான் அனைத்தையும் இப்போது என்னால் பார்க்க முடிகிறது' என்றாள்.
 
'என்னை இன்று கண்டதை உண்மையில் நீ எவ்வாறு பார்க்கிறாய். காணாதிருந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா. ஜிம் இனை மாத்த வேண்டும் என்று நினைக்கிறாயா. உண்மையினை மட்டும் கூறு. நான் வழர்ந்த பையன். அழமாட்டேன்.' என்றேன்.
 
'சந்தோசமா இருக்கிறது. உண்மையில் மிகச் சந்தோசம். ஜிம் இனை மாத்துறதுக்குப் பதில் பஞ்சிப்படாமல் வரலாம் என்று தோன்றுகின்றது. ஆனால், நீ கூறியது போல தேர்த்திருவிழாவில் நின்ற ஹாவ் சாறிப் பதினாறு வயது என்னுடைய படத்தைத் தாங்கி வந்த அல்பமாக உன்னை நான் பார்க்கவில்லை. பழையதில் வாழ்வதில் எனக்கு உடன்பாடுமில்லை அது சாத்தியமுமில்லை. எனது தீவிற்குள் மகிழ்ச்சிகொண்டுவரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை தான் எனது மகிழ்விற்கான உண்மையான காரணம்' என்றாள்.
 
'அப்ப உன்னுடைய தீவினை விஸ்த்தீரிப்பதில் உனக்கு இஸ்டம் உண்டு' என்றேன்.
 
'தக்கன பிழைக்கும் என்ற அடிப்படையோடு ஒத்திசைவது தானே விஸ்த்தீரிப்பு ஆசை. அது அனைத்து மனிதனிற்கும் இருப்பது தானே' என்றாள்.

 

தடித்த எழுத்தில் சுட்டிக்காட்ட முனைந்தது ஒரு தலையங்கம். அது ஒரு கதையின் இடையில் வந்துவிடுகின்றது என்றே எனக்குத் தோன்றுகின்றது. கோடிட்ட வரிகளே நானுணரும் கதையின் முடிவுகள்.

 

சமூக முரண்பாடுகளுக்கான தீர்வு என்பது சமூக அடயாளங்களில் இருந்து விடுபடுதல் என்ற நிலையிலே தனது இறுதி எல்லையை கொண்டுள்ளது. இந்த எல்லையில் தான் சமூக முரண்பாட்டில் இருந்து தன்னை விடுவிக்க மறுக்கும் இனத்தின் சனநாயகம் புத்திசாலித்தனம் ஆழுமை எல்லாம் அம்மணமாக்கப்பட்டு இனம் நிர்வாணமாக்கப்படுகின்றது.

 

தன்னை தனித்தீவாகவேனும் உணரும் இந்த தலைமுறையின் உணர்தல் அடுத்தடுத்த தலைமுறையில் மாற்றத்தைச் சந்திக்கும்.

 

கடந்த வருடம் உக்கிரைனில் இருந்து இங்கு குடியேறிய நாலாவத தலைமுறைப் பெண்நண்பர் உக்கிரைன் சென்று வந்தார். அவரும் எதையோ தேடுகின்றார். தற்போது கெங்கொங் நாட்டில் இருந்து வந்த இரண்டாம் தலமுறை ஆணுக்கும் இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கின்றது. உக்கிரைனில் இவருக்கு யாரும் இருக்கவில்லை ஆனால் உக்கிரைன் இருக்கின்றது. எமது அடுத்த தலைமுறைகளுக்கு என்ன இருக்கும் என்று சொல்லத்தெரியாது.

 

அடயாளங்களை கடந்த வாழ்வும் அடயாளங்களுக்குள்ளே எமக்கு துயரம் தரும் சாத்தான்களும் என தொடரும் இந்த சமூகத்தின் கதையை எம்மால் தொடரவும் முடிக்கவும் முடியாது.

 

பதிவுக்கு நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொருவன் முக்கிய கருவை கருப்பொருளாக எடுத்து எழுதியுள்ளீர்கள்...எனக்குத் தெரிந்த பல ஆண்கள்[பெண்கள் ஒருத்தரையும் தெரியவில்லை] வேற்று மொழி பேசும் பெண்களை கட்டி விட்டு கஸ்ப்படுகிறார்கள்...இத்தனைக்கும் அந்த வெள்ளைக்கார‌ பெண்களில் சிலர் புட்டும் அவிப்பார்கள்[சாப்பாடு மட்டும் தான் வாழ்க்கையா என கேட்க வேண்டாம :D ]...அப்படியிருந்தும் அந்த ஆண்களால் வேற்றினப் பெண்களோடு ஒத்துப் போகவில்லை...மனம் விட்டு தங்கள் பாசையில் கதைக்க முடியாது என்பதில் தொட‌ங்கி பல கார‌ணங்களை சொல்வார்கள்...எங்கட‌ பெண்கள் என்டால் கணவன் அடித்தாலோ,திட்டினாலோ திருப்பி கத்தி போட்டு பேசாமல் இருப்பினம் மற்ற நாட்டுப் பெண்கள் அப்படி இருக்க மாட்டார்கள் உட‌னே பொலிசுக்கு அடித்து போடுவார்கள் இப்படி பல கார‌ணங்கள் சொல்வார்கள்.
 
இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் ஓர‌ளவுக்கு வேற்று மொழி பேசுபவர்களை கல்யாணம் கட்டலாம்...ஒரே மொழி பேசுகிறார்கள்,அவர்களது சாப்பாடு,சம்பிர‌தாயங்கள்,பழக்கவழக்கங்கள் எல்லாம் இங்கத்தைய நாட்டுக்கு ஏற்ற மாதிரித் தான் இருக்கும்...ஆகவே அவர்கள் மணம் முடிப்பதில் பெரிதாக பிர‌ச்ச‌னை வராது என்று நினைக்கிறேன்...ஆனாலும் எங்கள் எதிர் காலப் பர‌ம்பரை எப்படிப் போகும் என்று ஒரு கேள்விக்குறியும் மனதில் தோன்றுகிறது
 
 
 
 
 
 

என்னைப் பொறுத்தவையில் புதுமை அல்லது முற்போக்கு சிந்தனைகள் என்கின்ற சித்தாந்தங்களில் கவரப்படும் இவர்கள் போன்றவர்கள்தான் எதிர்காலத்து ஜிப்சிகளை உருவாக்குபவர்கள் . அந்த ஜிப்சிகள் ஒருகாலத்தில் இவர்களைப் போற்றுவார்கள் என்று நினைக்கின்றீர்களா ?? இன்னும் ஒருவகையில் , ஒவ்வொரு இனக்குழுமங்களும் தங்கள் சுயம் காக்க எமது இனக்குழுமம் மட்டும் சமரசங்களில் ஈர்கப்படுவது எம்மை ஆண்ட காலனித்துவத்தின் எதிர்வினையோ ?? உங்கள் சிந்தனைக் கதைக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள் இன்னொமொருவன் :) :) .

  • தொடங்கியவர்
சுகன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நான் புதிதாக எதையும் இதில் சொல்ல முனையவில்லை. கருத்துக்களாக அணுகக் கூடிய விடயங்கள் கால் முளைத்துக் கண்ணெதிரே நடந்து வருகையில் கருத்து நிலை தாண்டி ஏதோ ஒரு ஆர்ப்பரிப்பு ஒன்று உள்ளுர உணரவே படுகிறது. அந்த ஆர்ப்பரிப்பின் ஆதிக்கத்தில் அவகாசம் கொடுக்காது கொட்டியதால் இரைமீட்புச் சரியாக வரவில்லை. பின்னூட்டங்கள் செப்பனிடுகின்றன. நன்றி.
 
ரதி,
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பலர் வேற்றினத்தவரை மணம் முடித்து வாழ்கின்றனர். ஐரோப்பா பற்றி அனுபவமில்லை, வட அமெரிக்காவைப் பொறுத்தவரை, 'மொசெயிக்' மற்றும் 'மெல்லிற்றிங் பொட்' என்ற இரு நம்பிக்கைகள் பல்லினங்களின் ஒருமித்த வாழ்வு சார்ந்து நிலவுகிறது. இதில் கனடா முன்னையதன் உதாரணமாகவும் அமெரிக்கா பின்னையதனாகவும் பொதுவாகப் பேசப்படுகிறது. இருப்பினும், என்னதான் மொசெயிக் பக்கம் முயன்றாலும், காலப்போக்கில், ஒரு புதுக்கலாச்சாரம், அனைத்து விசைகளினதும் விழைவாகப் பாதை அமைக்கிறது. அந்தவகையில், இங்கு கணிசமான காலம் வாழ்ந்து, கோப்பறேட் உலகில் ஏணியின் படிகளைச் சற்று ஏறிய எவரிற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து துணை தேடுவது கூட இலகுவாக இருக்கப்போவதில்லை. தம்மை ஒத்த வகையான இதே நாட்டில் வாழும் நம்மவர்கள் மட்டும் தான் ஒரே வகையாகத் தெரியும். அந்த வகையில் உண்மையில் ஒரு புது அடையாளம் உருவாகிவிட்டது அது இன்னமும் மாறிக்கொண்டு தான் இருக்கும்.  பலரிற்கு ஊரில் சென்று மணம் முடித்து வருவதைக் காட்டிலும் புலத்தின் கலாச்சாரத்தில் வாழும் வேற்றினத்தவர்கள் சரியான சோடியாக அமையக் கூடிய சாத்தியம் உள்ளது. அதே நேரம் நீங்கள் கூறுவதைப் போன்று மாற்று இன மணங்களால் நொந்து நூலாகிக் கொண்டிருப்போரும் இல்லாது இல்லை. நேரம் ஓடிக்கொண்டு தானே இருக்கிறது. நாம் அறிந்தோ அறியாதோ மாற்றங்கள் நிகழ்ந்தபடி தான் உள்ளன.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையைக் கிளறி விட்ட ஒரு பதிவு, இன்னுமொருவன்!

நானும் இப்போதெல்லாம், பிட்டு, இடியப்பம், தோசை என்ற நிலையிலிருந்து விலகி விட்டேன் போலத் தான் உள்ளது!

இலங்கைப் பொருட்களை வாங்கக் கூடாது என்று முடிவெடுத்ததில் இருந்து, மிகவும் தூர விலகிப் போய் விட்டேனோ, என்று கவலைப் படுவதும் உண்டு. ஆனால், மிளகாய்த்தூள் மட்டும், எனக்கு நிலாக் காட்டுகின்றது, விட முடியாமல் உள்ளது!!

மொழியை விட்டு, இனத்தை விட்டுத் துணையைத் தேடுவதில், எனக்கு உடன்பாடு இல்லை!

உணர்ச்சிகளை, ஒருவன் தனது தாய் மொழியில் வெளிப்படுத்துவதை விட, வேறு எந்த மொழியிலும் வெளிப்படுத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

ஒருத்தியைப் பார்த்து, Come here, Darling  என்பதை விடவும், வாடி இங்கை, என்று அழைப்பதில், அதிக நெருக்கம் வெளிப்படுத்தப் படுவதாக உணர்கின்றேன்!

ஒரு வேளை, நான் இன்னும் கூர்ப்படையாமல் இருக்கும் சாத்தியங்களும், இல்லாமல் இல்லை! 

 

 

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் மற்றும் புங்கையூரான் உங்கள் கருத்துக்களிற்கு. அடையாளம் என்பது எத்தினையோ கோணங்களில் பேச்படக்கூடியது. கருத்துநிலை தாண்டி நேரடியாக வாழ்வில் இந்தக் கேள்வியினைச் சந்திக்கும்போதெல்லாம் புதிய பரிமாணங்கள் தெரிந்துகொண்டே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரை இப்படிப் பட்டவர்கள் சுயம் இன்றி வாழ்பவர்கள். தம் அனைத்தையும் புலம்பெயர் தேசத்திலும் அதன் கலாச்சாரத்தோடும் புதைத்தவர்கள். இவர்கள் போன்றவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். 

நல்லதொரு பதிவு.

 

 அந்தப் பெண் கூறிய வார்த்தைகள் அவரின் உண்மையான மன வெளிக்காட்டலா என்று தெரியவில்லை. மனித மனம் வாழ்ந்த சூழலை மறப்பதற்கு ஒன்றும் இயந்திரமல்ல என நினைக்கிறேன். உதாரணத்திற்கு 'பிரையன்' உம்  இந்தப் பெண்ணும் தங்கள் வாழ்வின் ஞாபகங்களை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொள்ள இயலாது.

 

இதை வாசிக்கும் பொழுது, நான்கு ஐந்து  வருடங்களிற்கு முன் உடற்பயிற்சி நிலையத்தில் சந்தித்த, மலையாள ஆணை கைப்பிடித்த ஒரு இலங்கை பெண்ணுடனான  உரையாடல்தான் கண்முன் வந்தது. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும், சமூகப் பின்னணிகள், மொழி பரிமாற்றம் தங்களுக்குள் பெரிய இடைவெளியை உருவாக்கிப் பிரிந்து விட்டதாகச் சொன்னார்.

 

வேற்று இனத்தாரை கைப்பிடித்த பல மற்றைய இன நண்பர்களும் (அரபு, மொரீசியஸ், ஆப்பிரிக்க) பின்னாளில் பிரிந்து போனார்கள்.

 

இது எனது தனிப்பட்ட கணிப்பு மாத்திரமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ல தன்னோட பிள்ளைங்க வெள்ளையல கட்டினா அத பெருமையா சொல்லிட்டு திரினம்

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியா ல தன்னோட பிள்ளைங்க வெள்ளையல கட்டினா அத பெருமையா சொல்லிட்டு திரினம்

 

ஊரில, அல்சேசன் நாய் வளர்த்த ஆக்களா இருக்கும், சுண்டு! :D

  • கருத்துக்கள உறவுகள்

அதே அண்ணா அது அவர்களுடைய அந்தஸ்துக்கு பெருமை என்று நினைக்கிறாங்க :D

ஆஸ்திரேலியா ல தன்னோட பிள்ளைங்க வெள்ளையல கட்டினா அத பெருமையா சொல்லிட்டு திரினம்

 

'கீழ் சாதிக்காரனைக் கட்டுறதை விட வெள்ளையனைக் கட்டுவது நல்லது' என்று எங்கள் குலத் தங்கங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

  • தொடங்கியவர்
என்னைப் பொருத்தவரை இப்படிப் பட்டவர்கள் சுயம் இன்றி வாழ்பவர்கள். தம் அனைத்தையும் புலம்பெயர் தேசத்திலும் அதன் கலாச்சாரத்தோடும் புதைத்தவர்கள். இவர்கள் போன்றவர்கள் இப்படியேதான் இருப்பார்கள். 

 

 

சுயம் என்பதே அவரவர் சார்ந்தது தானே. ஒரு தாயின் குழந்தைகள், ஒரே வீட்டில் ஒரே வளங்களோடும் பெறுமதிகளோடும் வளர்க்கப்பட்டவர்கள் கூட, பெரியவர்களானதும் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருப்பதைப் பார்க்கிறோமே. அவ்வாறு இருக்கும் போது ஒரு நாட்டில் பிறந்து விட்டதால் மட்டும் ஒருவரது சுயம் இன்னதாகத் தான் இருக்கமுடியும் என்று நாம் வரைவிலக்கணப்படுத்துவது சாத்தியமா? 
 
உலகின் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் பல்வேறு காரணங்களைக் காட்டி சுயத்தைத் தொலைத்து வாழ நிர்ப்பந்திப்பது நடந்து கொண்டு தானே இருக்கின்றது. அப்படி இருக்கையில் சுயங்கள் தமக்கான அதியுச்ச ஏதுநிலையினைத் தேடித் தெரிவது எதிர்பார்க்கப்படவெண்டியது தானே?
 
இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், ஒரு கலாச்சாரத்தில் பிறந்தவர்களிற்கான சுயம் ஒரே வாறு தான் இருக்கமுடியும் (தாங்கள் பிறந்த கலாச்சாரத்தைத் தமது சுயமாக வெளிப்படுத்துவதாக மட்டுமே இருக்கமுடியும் )என்று ஒரு பேச்சிற்குக் கூறின், அக்கூற்றுச் சுயத்தை மறுப்பதாகவல்லவா இருக்கும். ஏனெனில் சுயம் என்பது தனிநபர் சார்ந்தது, அப்படியிருக்க, தனிநபர் சார்ந்த தன்மையின் வரைவிலக்கணத்தைப் பொதுமை கொண்டு தான் அனுமதிக்க முடியும் என்றால், சுயத்தின் வரைவிலக்கணம் சுயத்தை மறுப்பதாக இருப்பது முரண்நகையாகாதா? வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சுயங்களைக் கொண்டு கட்டமைக்கும் ஒரு பொதுமை தானே தேசியம். அப்படி ஒரு பொதுமை கட்டமைக்கப்பட்ட நொடியில் சுயம் சிறைப்படவேண்டுமாயின், தேசியத்தை மட்டுமே தனது சுயமாகக் கருதவேண்டுமாயின், சுயங்களிற்காகத் தேசியமா? தேசியத்திற்காகச் சுயங்களா?
 
சுயங்கள் தமக்கான உச்ச ஏதுநிலையுடைய ஒரு சமூகமாக எமது தேசியத்தைத் தாமாகக் கண்டறியும் வகை கட்டமைப்பதா, அல்லது தமிழ் பொதுமையில் அச்சுப்பிசகாது  ஐக்கியமாகாது வாழ்பவர்களைச் சுயத்தை இழந்தவர்களாக வர்ணிப்பதா உங்கள் பார்வையில் ஆரோக்கியமானது? 
 
இவை உங்கள் கருத்துச் சார்ந்த எனது கேள்விகள் மட்டுமே. இப்பதிவில் வரும் பெண் எமது பொதுமை மீது எந்தக் காழ்ப்புணர்வையோ சினத்தையோ, இழக்காரத்தையோ வெளிப்படுத்தவில்லையே. அவரது சுயத்தை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்று மட்டும் தானே கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் எதனால் அவர் மீது கோபம் எழுகிறது? அவர் கூறும் சுயம் எமது வரைவிலக்கணத்தோடு ஒத்துப்போகவில்லை என்றவுடன் அவரிற்குச் சுயமில்லை என்பது சரியானதா?
 
எனக்கு இந்தப் பெண் சார்ந்து அருவருப்போ ஆத்திரமோ அறவே வரவில்லை. பரிட்சயமானதாக நான் நினைத்திருந்த ஒரு முனையினை மீளத் திறக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்தது.
 
--
 
நன்றி தப்பிலி மற்றும் சுண்டல் உங்கள் கருத்திற்கு. 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமது தமிழ் கலாச்சாரம், உணவு, பழைய வாழ்வு போன்றவற்றை தனது குழந்தைகள்,ஒரு வேளை கனவருடன் தற்போது கழிப்பதால் உணராவிட்டாலும் வயது செல்லும் போது ஒரு வெறுமையை உணர்வார். தற்போதைக்கு அவருக்கு ஒரு தற்காலிகமான  மன நின்மதி, சந்தோசம் கிடைக்கிறது. அது அவரின்  வாழ்நாளின் இறுதிக்காலதில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு திருமணங்கள் இப்ப பெருகிவிட்டன புலம்பெயர்நாடுகளில். எப்படி எம் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி, அவர்களை எம்மவரை செய்து வைப்பது என்பதே எம் முன்னால் இருக்கும் சவால்.

 

தற்காலிகமாகதான் அவ தமிழைவிட்டு விலத்தியுள்ளா, இதுவும் ஒருவித மனநோயே

 

நல்லதொரு கருவை வைத்து கதையை நகர்த்தியுள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு.

கலப்பு திருமணங்கள் இப்ப பெருகிவிட்டன புலம்பெயர்நாடுகளில். எப்படி எம் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தி, அவர்களை எம்மவரை செய்து வைப்பது என்பதே எம் முன்னால் இருக்கும் சவால்.

 

தற்காலிகமாகதான் அவ தமிழைவிட்டு விலத்தியுள்ளா, இதுவும் ஒருவித மனநோயே

 

நல்லதொரு கருவை வைத்து கதையை நகர்த்தியுள்ளீர்கள், நன்றி பகிர்வுக்கு.

 

தமிழொட, எங்கட ஆக்களோட யிருக்கணும் என்றது . எனக்கு ஒருவித மன நோயா தெரியுது ? என்ன செய்ய உடையார் ?

 

எங்கயோ வாசிச்சது எல்லாருமே ஒரு வித சைக்கோக்கள் தான் அதில அவரச்சான கேசை நோமலான மனிசன் எண்டு சொல்லுறம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனத்தவரை மணப்பது அதிகரித்துச் செல்லும் வேளையில்.....தொட்டுச்சென்றிருக்கும் உரையாடல்கள்......மனதினை சிந்திக்க வைக்கிறது. 

காலத்தின் போக்கில் எம்மினத்தவரையே திருமணம் செய்யும்போது கூட..... உணவு. உடை இன்னும் பல விசயங்களில்கூட,,,, மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாய் இருக்கிறது. 

அடையாளங்களை மெதுவாய் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

 

 

 

'ஆண் பெண் என்ற இருவரும் மனிதராக இருப்பினும் நிச்சயமாக ஒருவரால் மற்றையரின் உணர்வுகளைப் புரியமுடியாது. இந்தப் பாரிய வித்தியாசத்தின் முன் குறித்த ஆணும் பெண்ணும் என்ன பாரம்பரியத்தவர் என்பது அடிபட்டுப்போகும்.. உனக்கு ஏன் அது ஒரு பேசுபொருளாகிறது என்று கூட உண்மையில் எனக்கு விளங்கவில்லை.' என்றாள்.

கதையின் நடை நன்றாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

மேலும் தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் தமிழினத்தின் மீது கொண்ட வெறுப்பின் (விரக்தியின்) காரணமாக வெற்றினத்தவரை மணமுடித்தாரா? அல்லது காதல் வயப்பட்டு திருமணம் செய்தாரா? விரக்தி என்று எண்ணத் தூண்டுகிறது ...இந்த வரிகள்

எனது அம்மாஅப்பாவின் இழப்பின் வலி இன்னமும் எனக்குள் முற்றாக மறையவில்லை. ஆனால், அந்தக் குண்டினை தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மனவமைப்பிற்குள் மட்டும் வைத்துப் பார்க்கவில்லை. குண்டிலும் கொடிய கொடூரங்களைத் தழிழர்கள் தமிழர்களிற்குச் செய்தார்கள் இனியும் செய்வார்கள்.
தேசியங்களை தனிமனித உளவியல் நிர்ணயிப்பதில்லை...சர்வதேச வல்லரசுகளும்,மதவாதிகளும்,ஆயுததாரிகளும் தான் நிர்ணயிக்கின்றனர் என்பது எனது கருத்து....ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் ஈழம்,பிரித்தானிய ஆட்சிகாலத்தில் சிறிலங்கா,இந்தியா,பாகிஸ்தான்...சிங்கபூர்.... பகிர்வுக்கு நன்றிகள்
  • தொடங்கியவர்

நுணாவிலான்,உடையார், ஜோக்கர், கறுப்பி, புத்தன் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கதையை  வாசித்துக்கொண்டிருந்தபோது ...

முக்கால்வாசி முடிய  வெளியில் போகவேண்டிவந்தது.  ஒரு பச்சையைப்போட்டுவிட்டு போகலாம் என்று நினைத்தபேபாதும் இல்லை  இது இன்னுமொருவனின் கதை என்பதால் எங்காவது ஒரு குத்துதல் இருக்கும் என்று மீண்டும் பார்த்தபோது...

 

நாம  செய்ததும் அதுதான்

அவன் செய்ததும்  அது தான் என்று எல்லாத்தையும் ஒரே கூடைக்குள் போட்டிருந்தது தெரிந்தது.

 

இதை எழுதாமல் இன்னுமொருவனால் எப்படி கதையை முடிக்கமுடியாதோ

அதேபோல்

இதை சுட்டிக்காட்டாமல் என்னாலும் எழுதமுடியாது.

 

நன்றி  கதைக்கும் நேரத்திற்கும்.

  • தொடங்கியவர்
இன்னுமொருவனின் கதையை  வாசித்துக்கொண்டிருந்தபோது ...

முக்கால்வாசி முடிய  வெளியில் போகவேண்டிவந்தது.  ஒரு பச்சையைப்போட்டுவிட்டு போகலாம் என்று நினைத்தபேபாதும் இல்லை  இது இன்னுமொருவனின் கதை என்பதால் எங்காவது ஒரு குத்துதல் இருக்கும் என்று மீண்டும் பார்த்தபோது...

 

நாம  செய்ததும் அதுதான்

அவன் செய்ததும்  அது தான் என்று எல்லாத்தையும் ஒரே கூடைக்குள் போட்டிருந்தது தெரிந்தது.

 

இதை எழுதாமல் இன்னுமொருவனால் எப்படி கதையை முடிக்கமுடியாதோ

அதேபோல்

இதை சுட்டிக்காட்டாமல் என்னாலும் எழுதமுடியாது.

 

நன்றி  கதைக்கும் நேரத்திற்கும்.

 

 

இதைப் படித்தபோது எங்கிருந்தோ ஒரு புதிய ஆசை தொற்றிக்கொண்டது. ஒரு கோப்பிக் கடையில் இரண்டு மணிநேரம் உங்களோடு உரையாடி அதை வைத்து ஒரு பதிவு எழுதவேண்டும் என்று. 
 
நன்றி உங்கள் கருத்திற்கு.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.