Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MM001.jpg

 

விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப் போனாள்!

 

சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார்.

 

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்!

 

அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

 

சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது.  பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும்.  சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்!

 

சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில்,  வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை.

 

சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும்  போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம்.

‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார்.

 

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும்.

 

ஒரு நாள் இரவு, ஒரு ஆறு  பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம்  எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும்,  துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை.

அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார்.

 

அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான்.

 

இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள்  உருண்டோடி விட்டன

ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

மொறிஸ் மைனர்,சொமசெட்,ஏவோர்டி.....எங்கன்ட மக்களின் வருமானத்திற்கு முக்கிய பங்காற்றியவை...மீண்டும் ஒர் அருமையான பதிவை தந்த பூங்கயூரனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை வீட்டையும் முதல் ஒரு மொறிஸ் மைனரும் பிறகு மொரிஸ் ஒக்ஸ்போட்டும் நிண்டது. பொருளாதாரத்தடை நேரம் பற்றறி எல்லாம் தட்டுப்பாடு அதுக்கு "செல்" வெட்டி வைக்கிறது. உண்மையில் அவை எல்லாம் ஒரு இனியகாலம்.

 

அதை விட எங்களுக்கு பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை தமிழ் படிப்பித்த "தம்பர்" ஒரு HONDA - CD 200 மோட்டார்சைக்கிள் வைத்திருந்தவர். அதில் பொடியள் தொட்டதற்கு அவர் சொன்னது. " என்னவும் பகிடி விடுங்கோப்பா அதுக்கு மேலை மட்டும் கை வைக்காதையுங்கோ, அது என்ரை காதலி" என்று அப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆத்மார்த்தமான உணர்வு இருக்கும் போல.

 

நல்லதொரு கதை இப்படி எத்தனை பேரின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விட்ட கதைகளும் ஒன்றா, இரண்டா எல்லாவற்றையும் இழந்து வாழும் பலரை கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

ஒரு காலத்தின் பதிவு. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பழைய நினைவுகள்.  ஒவ்வொரு வாகனமும் ஒரு கதை சொல்லும். நம்ம ஊரில்  இவ் வாறு இருவர் இருந்தனர்.

ஏனோ ராஜா கையவைச்சா அ து ராங்கா போனதில்லே .........என்ற பாடல் நினைவு வருகிறது ..

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

set-of-decal-stickers.jpg

 

1958MorrisMinor1000_03_700.jpg

 

 

நல்லதொரு அருமையான கதை. ஒவ்வொரு வரியையையும்... ரசித்து வாசித்தேன். :) 
எங்கள் சித்தப்பா... ஒருவரும் "மொறிஸ் மைனர்" வைத்திருந்ததால்... அதில் தான்,  யாழ் மத்திய கல்லூரியில் படிக்கும் காலங்களில், நாலாம் வகுப்பு மட்டும்  போய் வருவேன். அதனால்... அந்தக் கார் மிகவும் பரிச்சயம். இன்றும்... அந்தக் காரை, எங்காவது அருமையாகக் கண்டால்.. அருகில் சென்று ரசிப்பது வழக்கம். புங்கை சொன்ன மாதிரி... அதன் சிக்கனல் லைற், சுவராசியமானது. 

 

அந்த சிக்னலை, கையாலை... புடுங்கி எடுத்து, சித்தப்பாவிடம் பேச்சு வாங்கினது இன்னும்.... நல்ல ஞாபகம் இருக்கு. :lol: 

 

#####

ஒரு படம், மேலதிகமாக... இணைப்பதற்காகவும், எழுதிய கருத்தில்... சிறு மாற்றம் செய்வதற்காகவும், திருத்தப் பட்டது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

 

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

 

 

இல்லை சிறி

ஆனால் புங்கையை  ( கன்னம் வைத்து அடிப்பதில் வல்லவர்)  நம்பமுடியாது.

அன்று திண்ணையில் எனது தகப்பனாரைத்தெரியும் என்று சொன்னார். :D

 

ஆனால் இறுதிப்பகுதி   எனது தகப்பனாருக்கானது அல்ல.

ஆனால் வாகனம்  வைத்திருந்த பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இப்படியான நிகழ்வுகளே எம்மை நல்லதை தெரிவு செய்ய  உதவி  செய்தன. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சிறி

ஆனால் புங்கையை  ( கன்னம் வைத்து அடிப்பதில் வல்லவர்)  நம்பமுடியாது.

அன்று திண்ணையில் எனது தகப்பனாரைத்தெரியும் என்று சொன்னார். :D

 

ஆனால் இறுதிப்பகுதி   எனது தகப்பனாருக்கானது அல்ல.

ஆனால் வாகனம்  வைத்திருந்த பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

இப்படியான நிகழ்வுகளே எம்மை நல்லதை தெரிவு செய்ய  உதவி  செய்தன. :icon_idea:

 

புங்கையூரானின்... பதிலையும் பார்த்து விட்டு, எனது கருத்தை சொல்கிறேன் விசுகு. :D

அருமையான கதை புங்கை.

 

நாம் செலுத்தும் வாகனங்கள் மீது எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உருவாகுவது பற்றி இயல்பான நடையுன் கூறியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol: வாழ்த்துக்கள்.எவ்வளவு வாசிச்சும் எனக்கு எழுத வருதேல்ல :(
 
புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் .

நானும் ஒரு மொரிஸ் மைனர் வைத்திருந்தேனே!

என்ன ராசியோ தெரியாது பொறுத்த பொறுத்த இடத்தில நிற்கும். சென் பற்றிக்ஸ்க்கு முன்னாலே ஒருவர் இருந்தவர், அவர்தான் பிழையை கண்டு பிடித்தவர்..திச்ற்றிபுட்டர் சூடாகுவதோ/ எதோ  என்று  கண்டு பிடித்தவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது அயலவரும் இப்படி ஒரு கார் வைத்திருந்தவர். ஆனால் அவர் காருக்கு கேட்கும் காசுக்கு இன்னொரு கார் வாங்கலாம் என மக்கள் திட்டுவதை கேட்டிருக்கிறேன். :lol: இயக்கம் ஒரு போதும் அவரிடம் கார் கேட்டதில்லை. ஏனோ தெரியவில்லை.

 



கதை எழுதிய விதம் அருமை. புங்கையூரான் வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

------

புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:

 

 

செங்கல்லு கட்டிடத்தையும், அந்த வெள்ளை வேலியையும் பார்க்கும் போது....

எனக்கு, அது லண்டன் மாதிரித்தான் தெரியுது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொறிஸ் மைனர்,சொமசெட்,ஏவோர்டி.....எங்கன்ட மக்களின் வருமானத்திற்கு முக்கிய பங்காற்றியவை...மீண்டும் ஒர் அருமையான பதிவை தந்த பூங்கயூரனுக்கு நன்றிகள்

நன்றிகள், புத்தன்!

 

அனுபவங்களை இரை மீட்பதே புலத்துத் தமிழனின் வாழ்வாகி விட்டது!

 

எல்லாம், உங்களிடமிருந்து கிறுக்கப் பழகியது தான்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டையும் முதல் ஒரு மொறிஸ் மைனரும் பிறகு மொரிஸ் ஒக்ஸ்போட்டும் நிண்டது. பொருளாதாரத்தடை நேரம் பற்றறி எல்லாம் தட்டுப்பாடு அதுக்கு "செல்" வெட்டி வைக்கிறது. உண்மையில் அவை எல்லாம் ஒரு இனியகாலம்.

 

அதை விட எங்களுக்கு பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை தமிழ் படிப்பித்த "தம்பர்" ஒரு HONDA - CD 200 மோட்டார்சைக்கிள் வைத்திருந்தவர். அதில் பொடியள் தொட்டதற்கு அவர் சொன்னது. " என்னவும் பகிடி விடுங்கோப்பா அதுக்கு மேலை மட்டும் கை வைக்காதையுங்கோ, அது என்ரை காதலி" என்று அப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆத்மார்த்தமான உணர்வு இருக்கும் போல.

 

நல்லதொரு கதை இப்படி எத்தனை பேரின் வாழ்வாதாரங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விட்ட கதைகளும் ஒன்றா, இரண்டா எல்லாவற்றையும் இழந்து வாழும் பலரை கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

ஒரு காலத்தின் பதிவு. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள்.. :)

நன்றிகள் ஜீவா!

 

சிறுகதைகள், உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் போதே, அவை உயிர் பெறுகின்றன என்பது எனது கருத்தாகும்!

 

எனது முதலாவது கார், ஒரு டற்சன் செர்றி. மாணவனாக இருந்த காலத்தில், அதற்கு எண்ணெய் மாற்றுவது, பில்ரர் மாத்துவது, எங்காவது உரஞ்சுப்பட்டால், நெளிவெடுப்பது, கறல் உரஞ்சுவது, பெயின்ட் அடிப்பது போன்ற சகல வேலையும் நானே செய்தேன். அதன் பின்னர் எத்தனையோ கார்கள் என்னிடம் வந்து போய் விட்டன. ஆனால், நீங்கள் சொல்வது போல, அந்த முதலாவது காதலி, சில இரவுகளில், என் நினைவில் வந்து போகின்றாள்! :D     

  • கருத்துக்கள உறவுகள்

 

எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol:

அக்கா பகிடி விடுறியள் எண்டு நினைக்கிறன்... புலிக்குட்டிக்கு பாய்ச்சல் கத்துக்கணுமா..? புங்கை அண்ணாவின் எழுத்துகளில் தீராக்காதல் கொண்டவர்கள் நாங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய பழைய நினைவுகள்.  ஒவ்வொரு வாகனமும் ஒரு கதை சொல்லும். நம்ம ஊரில்  இவ் வாறு இருவர் இருந்தனர்.

ஏனோ ராஜா கையவைச்சா அ து ராங்கா போனதில்லே .........என்ற பாடல் நினைவு வருகிறது ..

வணக்கம், நிலாக்கா! நலம் தானா?

 

அந்த நினைவுகளை எவ்வாறு மறக்க முடியும்?

 

இரவும், பகலும் எல்லா இடத்திலும் வரும் தான்! ஆனால், அந்த மண்ணின் வாசனை மட்டும், எனது மண்ணிலிருந்து மட்டும் தான் வரும்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர  அப்பற்ற கதையல்லோ

கொப்பிக்கு காசு தரணும் புங்கையர்

 

எனது தகப்பனாருடைய  தொழில்  இது தான்

 மொறிஸ் மைனர் தான் முதல்ல வைத்திருந்தவர்

அதில மக்காட்டில மட்டும் 4 பேரை  ஏத்துவாராம்

பின்னர் ஆமட் கார்,சொமசெற்ஏபோர்டி..

 

அப்புறம்  அவருக்கு வயசு போக

அவை வீட்டில் நின்றபோது ரயர்கள்  சில்லுகள்  ரியூப்புக்கள் என்று ஒவ்வொன்றாக பிச்செடுத்து நாங்கள் கார் ஓட்டியது வேறு கதை......

 

அப்பரை   ஊரை மறுபடியும்  நினைக்க வைத்துவிட்டீர்கள்.

நன்றி  ஐயா..

நன்றிகள், விசுகர்!

 

உங்கடை அப்பா, நல்லாய்ப் பாடக்கூடியவர் என்று, எனது மாமியார் அடிக்கடி கூறுவார்! ஆனால், அவர் கார் வைச்சிருந்தது எனக்குச் சத்தியமாத் தெரியாது! நிச்சயம் அவருடைய காரிலை, ஆராவது ஒரு மனுசியின்ர மடியிலையிருந்து, நிச்சயம் பயணம் செய்திருப்பேன். சில முகங்கள், நினைவுக்கு வருகின்றன! :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்பினால்... நம்புங்கள்,
அந்த நாளில், புதுக் கார்... சிலோன் காசு, பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.
இப்ப, ஸ்ரீலங்காவில்... அதன் மதிப்பு, என்ன?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் புங்கையூரன்.உங்கள் கதை அழகு......
 
நாங்கள்  ஏவோர்டி, மொறிஸ்மைனர், சோமசெற் எல்லாம் பாத்திருக்கிறம்.....ஆனால் ஏறேல்லை......ஏறி இறங்கினது முழுக்க வண்டில் மாடுதான்..அயிக்..அயிக்...அய்..அயிக்...சந்தோசம்...சிக்கனம்.....சுகாதாரம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், விசுகர்!

 

உங்கடை அப்பா, நல்லாய்ப் பாடக்கூடியவர் என்று, எனது மாமியார் அடிக்கடி கூறுவார்!

ஆனால், அவர் கார் வைச்சிருந்தது எனக்குச் சத்தியமாத் தெரியாது!

நிச்சயம் அவருடைய காரிலை, ஆராவது ஒரு மனுசியின்ர மடியிலையிருந்து, நிச்சயம் பயணம் செய்திருப்பேன். சில முகங்கள், நினைவுக்கு வருகின்றன! :D

 

பாட்டு அவரது பொழுது போக்கு.

தொழில் யாழ்ப்பாணத்துக்கு கார் ஓடுவதுதான்.

(பாட்டுக்காற.....................

கார்க்காற................. இது ரெண்டும் ஒருவர் தான்)

 

ஊரில் முதல் முதல் கார் வைத்திருந்தவர்களில் ஒருவர்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்துக்கு Taxi வந்தபோது அதை ஓடியவர் எனது தகப்பனாரே.

ஏனெனில் அவரிடம் மட்டுமே அதற்கான அனுமதிப்பத்திரம் இருந்ததாம்.

 

உங்களது கதை பொதுவாக யாழ்- ஊர் வாகன ஓட்டிகளைச்சொல்லி  நிற்கிறது.

அந்த காலமே ஒரு சுகம் தான்

(முக்கியமாக மடியிலிருந்து    போகுதல்.  அனேகமாக எல்லாக்கார்க்காறர்களும் பாவிக்கும் வசனம்.

உங்களால்  ஏறி  வரமுடியுமாக இருந்தால் நான் கொண்டு போய் விடுகின்றேன் என்பது தான். எத்தனை  பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெல்லாம் பார்ப்பது கிடையாது. :D )

  • கருத்துக்கள உறவுகள்

புரட்டாசிச் சனியன்று  அம்மா காகத்துக்கு சோறு வைப்பார்.  பிறகு சொல்லுவார் நான் வச்ச உடனே  அந்தக் காகம் மட்டும் பறந்து வந்து வாய் நிறைய சோறு அள்ளிக் கொண்டு போய்விடும் என்று. இப்படியே அக்கம் பக்கம் ஒவ்வொரு அம்மாக்களும், மாமிகளும்,சின்னம்மாகக்ளும் பின்னேரம் திண்ணையில் இருந்து கதைப்பினம் . ஒருவர் அப்பளத்தை தூக்கிச்சுது எண்டும் ,மற்றவர் வடகத்தை எண்டும் சொல்லுவார்கள்.

 

அது போன்றதுதான் உங்கள் அழகான கதையும் .பலருடைய நெஞ்சுக்குள்ளும் இருந்ததை உங்கள் வலிமையான எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளீர்கள் .

 

எங்களிடமும் மைனர், மற்றும் வோக்ஸ் வேகன் டாக்சிகள் இருந்தன. முன்னுக்கு பூ  வைத்தல் , கோவிலுக்குப் போனால் போனட்டில் அழகாக திருநீறும்,பொட்டும்  இடுதல் , யாரும் சில்லில் கால் வைத்தாலோ, அல்லது காரில் சாய்ந்து நின்றால் போலிசின் குலோத்தால் அடித்தல் என்று பல நினைவுகள்......

 

நன்றி புங்கை ! :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கதை, அதை சொல்லிய விதம் அழகு உங்களை போன்ற எழுத்தாளர்கள் Sydney மண்ணில் இருப்பது அதைவிட பெருமை வாழ்த்துக்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.