Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கோர்வாட் அனுபவங்கள்..

Featured Replies

P1010570.JPG

 

 

P1010492.JPG

ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது..

 

போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது.

 

மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா :) !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.

 

முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதில் தெளிவு வேண்டும்.

 

ஐந்து நாள் பயணம் என்று முடிவு செய்தாகிவிட்டது.

 

அடுத்து எவ்வளவு பணம் தேவை?? எது எதற்கு பணம் தேவை ?

1. விமானச் சீட்டு

2. உண்ண, உறங்க மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கு (ஐந்து நாட்களுக்கு)

 

நான் விமானச் சேவை நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், நாம் பறக்க இருக்கும் தேதியில் விமானத்தில் இருக்கை காலியாக இருந்தால் போதும் பாதிப் பணம் கொடுத்துவிட்டு அவர்கள் பறக்கும் எந்த வழித் தடத்திலும் பறக்கலாம்.  ஊழியர்களுக்கான இந்தச் சலுகையை ID 50 என்று சொல்லுவார்கள். 10 சதவீதம் மட்டுமே பணம் கொடுத்துவிட்டு பறப்பதை ID 90 என்று சொல்லுவார்கள்.  ID 50 க்கு முன்னுரிமை என்பதால் அதிலேயே பதிந்து விட்டாச்சு. வார மத்தியில் ஒரு நாளில் இருக்கை காலியாக இருக்கும் என்று தெரிய வந்தது. நாள் குறித்தாகி விட்டது. போய்வர  விமானச் சீட்டுக்கு 300$ டாலர் இருந்தால் போதும்.

 

அடுத்து தங்குவதற்கான செலவு.. இரண்டு நாட்கள் இணையத்தில் மேய்ந்ததில் ஐந்து நாட்களுக்கு தோரயமாக 700$ தேவைப்படும் என்று தெரியவந்தது. மொத்தமாக 1000$ தேவை.  பணம் ரெடி இனி பறக்க வேண்டியதுதான் ...!! என்னுடன் வேலை செய்யும் நண்பனிடம் கேட்டேன்.. அவனும் அங்கோர் வாட் வருகிறேன் என்று சொன்னான். துணைக்கும் ஆள் கிடைத்து விட்டது...

 

முதலில் விசா வாங்க வேண்டும். நீங்கள் கம்போடியா சென்றவுடன் விமான நிலையத்திலே வாங்கி கொள்ளலாம்(on arrival visa). அதற்கு தேவையானவை

1. திருப்பிச் செல்வதற்கான விமானச் சீட்டு (return flight ticket)

2. தங்குவதற்கான பதிவுச் சீட்டு (hotel booking)

3. ஒரு புகைப்படம் (one passport size photo)

4. 20 $

 

ஏற்கனவே விமானச் சீட்டு வாங்கியாச்சு. தங்குவதற்கான பதிவுச் சீட்டு இணையத்திலே வாங்கியாச்சு http://www.booking.com/விமானத்திலேயே விசா விண்ணப்பம் கொடுப்பார்கள் இல்லையென்றால் இறங்கியவுடன் விசா கொடுக்குமிடதிலேயே வங்கிக் கொள்ளலாம். இறங்கியவுடன் பாஸ்போர்ட் உடன் பூர்த்தி செய்த விசா விண்ணப்பத்தையும், ஒரு புகைப்படம் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் காத்திருந்தால் உங்கள் பெயர் சொல்லி அழைப்பார்கள். 20$ கொடுத்தவுடன் உங்கள் விசா தயார். ஐந்து நிமிடத்திற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. பிறகு குடியேறுதல்(immigration) துறையினரிடம் செல்ல வேண்டியது தான்.  கைரேகை எல்லாம் வைக்கச் சொல்லி கொஞ்சம் பில்டப் அதிகமாக இருந்தது. கடைசியில் குடியேறுதல் துறை அதிகாரிகள் (immigration officers)என்னிடம் தேநீர் செலவுக்கு எதாவது டிப்ஸ் கொடு என்று கேட்டார்கள். 5$ கொடுத்தேன். பிறகுதான் தெரிந்தது 2$ அதிகம் என்று.

 

வெளியே வந்தவுடன் முதலில் ஒரு சிம் கார்டு வாங்கிக் கொண்டேன். 5$ கொடுக்க வேண்டும். 2 GB டேட்டா தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கம்போடியாவில்  உணவு விடுதி, தங்கும் விடுதி என்று எல்லா இடத்திலும் இலவசமாக இணைய வசதி உண்டு (free wi-fi). தங்கும் விடுதியில் இருந்து உங்களை அழைக்க வண்டி வரவில்லையெனில் நீங்கள் 12$ கொடுத்து வாடகை வண்டி அமர்த்திக் கொள்ள வேண்டியதுதான். என்னடா இவன் எல்லாமே $ என்று சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா ?? ஆம். உள்ளூர் நாணயத்திற்கு இங்கு மதிப்பே கிடையாது. எல்லாமே USD தான்.

 

 

 

மாலை 4.30.. அப்பாடா!! ஒருவழியாக வண்டியில் சாய்ந்தாகி விட்டது...

 

P1010476.JPG
 

மயக்கும் மாலை
மாந்தளிர்நிற அழகிகள்
கதிரவனின் ஒளி பட்டதோ - இல்லை
கன்னிகளின் விழி பட்டதோ !
சாலையெங்கும் மஞ்சள் மழை...!!

 

P1010887.JPG

 

அங்கோர் வாட் இருக்குமிடம் ஷியாம் ரீப்(Siem Reap). எனது விமானம் கம்போடியா தலைநகர் பினாம் பென்(Phnom Penh) வரைதான் செல்லும். அங்கிருந்து ஷியாம் ரீப் செல்ல வேண்டும். விமானத்தில் சென்றால் 100$ ஆகும் ஆதலால் 15$ கொடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்தாகி விட்டது. பேருந்தில் 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அடுத்த நாள் மதியம் 2 மணிக்குதான் பயணம்.  அதுவரைக்கும் பினாம் பென்னையே சுத்திப் பாக்கலாம் என்று ஆற்றுப் படுகை பக்கம் சென்றுவிட்டு ஒரு இந்திய உணவு விடுதியில் போய் சேந்தாச்சு. ஒரே ஆச்சரியம் !! அங்கோர் பீர் 0.5$. தண்ணீர் 1$.. அப்புறம் என்ன ??!!

 

முதல் நாள் மாலை  பெரிசாக ஒன்றுமில்லை. அடுத்த நாள் ராயல் பேலஸ் சென்றால் இன்றைக்கு மூடி விட்டாச்சு என்று சொல்லிவிட்டார்கள். மதியம் ஷியாம் ரீப் பயணம்.. சாலை குண்டும் குழியுமாக எலும்பு எல்லாம் இடம்பெயர்ந்து விட்டது. இரவு ஓய்வுதான்.!!
 

கம்போடியா வரலாறு
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நாகர் இன மக்கள் கடலுக்கடியில் இருந்த ஒரு நாட்டில் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த ஓர் இளவரசன் நாக இளவரசி மீது காதல் கொண்டு அவளை மணக்க விரும்பினான்.  அவளும் ஒப்புக் கொண்டு அவனை மணந்து தனது தந்தையிடம் அழைத்துச் செல்ல எண்ணினால். இளவரசன் எப்படி கடலுக்கடியில் செல்வது? அப்பொழுது நாக இளவரசி தனது கூந்தலை பற்றிக் கொண்டு தன்னுடன் வருமாறு கூறினாள். இதையறிந்த நாக அரசன் தனது மகளின் மணவாளனை ஆச்சரியப்படுத்த வேண்டும் என எண்ணி அவனை வரவேற்க ஒரு புது வழி செய்தான். அதன்படி இளவரசன் வரும் வழியெல்லாம் நாக போர்வீரர்கள் தண்ணீரை அருந்தி அவனை நடக்க வழி செய்தனர். இந்திய இளவரசனுக்கும் நாக இளவரசிக்கும் பிறந்த மக்களே கம்போடியர்கள் என்பது  கம்போடியர்களின் நம்பிக்கை. இதை என்னுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி சொன்னார்.

 

சரி வரலாற்றுக்கு வருவோம் !
கம்போடியாவில் உள்ள பிரசித்தப் பெற்ற கோவில்கள் எல்லாம் கேமர் பேரரசு காலத்தில்தான் கட்டப்பட்டது. கேமர் பேரரசை உருவாக்கியவர் மகேந்திரவர்மன். அவரது வழித்தோன்றல்களே அங்கோர் வாட் கட்டிய சூரியவர்மன் மற்றும் அனைவரும். "மகேந்திரவர்மன்" என்ற பெயரைக் கேட்டதும் பல்லவர்கள் ஞாபகம் வந்து ஆக வேண்டுமே!! கேமர் எழுத்து இரண்டாம் நூற்றாண்டு பல்லவர்கள் எழுத்துக்களை(pallava script) ஒத்தது என்பது கம்போடிய வரலாற்றுக் கண்காட்சியத்தில் காணலாம். வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் கூட.  ஆக கேமர் பேரரசை நிறுவியவர்கள் பல்லவர்கள்தான் என்பது என் அனுமானம். தமிழ் எழுத்தின் முற்பட்ட வடிவம் "தமிழ் பிராமி" அதற்கடுத்து கொஞ்சம் வளர்ச்சியடைந்து நிலை "வட்டெழுத்து" என்று அழைக்கப்பட்டது. வட்டெழுத்துக்கு அடுத்த நிலைதான் "பல்லவ எழுத்துக்கள்". இது கொஞ்சம் வட்டெழுத்தும் சமஸ்கிருதமும் கலந்த கலவை எனபது நானறிந்தது.

 

இப்பொழுது இன்னொரு இலக்கிய தகவலையும் காண்போம்.

 

கரிகாலன் பீலிவளை என்னும் நாகர் இனப் பெண்ணை மணந்து பெற்றவன் இளந்திரையன். இந்த இளந்திரையன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு மணிபல்லவம் எனும் தீவை அடைந்து அங்கு ஆட்சி செய்தான். இளந்திரையனே முதல் பல்லவன் என்பது மனிமேகளை வழியாக நாம் அறியும் செய்தி. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இவ்வாறு பல்லவர்கள் தமிழர்கள் என்று ஒரு தரப்பும் இல்லை இவர்கள் தெலுங்கர்கள் என்று ஒரு தரப்பும் கூறுகிறது.

 

இன்னும் காண்போம் !!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அங்கோர்வாட் போன ஆளை காணவில்லையே? என பார்த்தேன்..

கோயில் பற்றிய விலாவாரியான புகைப்படங்கள் இருந்தால் இணையுங்கள்.

நன்றி

  • தொடங்கியவர்

எங்கே அங்கோர்வாட் போன ஆளை காணவில்லையே? என பார்த்தேன்..

கோயில் பற்றிய விலாவாரியான புகைப்படங்கள் இருந்தால் இணையுங்கள்.

நன்றி

 

 

கண்டிப்பாக கோவில் பற்றி விளக்கமாக எழுதுகிறேன்.

 

படங்கள் தரவேற்றம் செய்து கொண்டிருக்கிறேன்.  இன்னும் நிறைய இருக்கிறது. இதுவரை இணைத்த படங்களை  இங்கு காணலாம்..

https://www.flickr.com/photos/126493845@N04/sets/72157646042982846/

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கட்டுரைக்கு நன்றி இளம்பிறையன். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம். கெமர் மக்கள் சூர்யவர்மனின் ஆட்கள் இல்லை என்று இணையத்தில் அடிபடுகிறார்களே.. இதுபற்றி வேறு தகவல்கள் உண்டா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்ய இளம்பிறையன்,  உங்களது  பயணக்  கட்டுரையின் முதலில் சிறு பகுதியை... வாசித்தேன்.
எழுத்து நடை, நன்றாக உள்ளது. நிச்சயம் மிகுதியையும் கட்டாயம், நேரம்  கிடைக்கும் போது வாசிப்பேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் நன்பரே...!

 

படங்களும் நன்றாக உள்ளது...!!

  • கருத்துக்கள உறவுகள்
ஆதித்ய இளம்பிறையன் அவர்களே! 
அடுத்து எவ்வளவு பணம் தேவை?? எது எதற்கு பணம் தேவை ?
1. விமானச் சீட்டு
2. உண்ண, உறங்க மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கு (ஐந்து நாட்களுக்கு) என்று நீங்கள் கணக்குப் போட்டீர்கள். நான் எந்தக் கணக்கும் போடாமலே இலவசமாக உங்களூடாக அங்கோர்வாட் சென்று அனுபவங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். தொடருங்கள்... மிக்கநன்றி!!. 
 
  • கருத்துக்கள உறவுகள்

என் ஆசை எப்போதுதான் நிறைவேறப் போகிறதோ??? உங்கள் படங்களைப் பார்த்து கொஞ்சம் மனதை அமைதிப் அடுத்தலாம் என்றால் ...விரைவில் படங்களை இணையுங்கள். அங்கு தனியாகச் சென்று வருவது பாதுகாப்பானதா அல்லது சில நாடுகளைப் போல ஆபத்தானதா ???? அது பற்றிக் கொஞ்சம் கூறுங்கள்.

 

ஆதித்தன் படங்களுக்கும் பயணக் கட்டுரைக்கும் நன்றிகள். சிறுவர்களைக் கொண்டு செல்லக் கூடிய இடமா என்றும் சொல்லவும். நானும் அங்கு செல்ல எண்ணி உள்ளேன், இப்போது அல்ல சில வருடங்களில் , உங்கள் தகவல்கள் உபயோகமாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

விபரமான தகவல்களுடன் அங்கோர்வாட் பயண அனுபவம் ஆரம்பித்துள்ளது. மிகுதியையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

கட்டுரையை வாசித்த இசை, தமிழ் சிறி, சுவி, பாஞ், சுமேரியர், நாரதர் மற்றும் கிருபன் அனைவருக்கும் நன்றி. பயணக் கட்டுரைக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எண்ணவில்லை :)  உங்கள் கேள்விகளுக்கு ஆங்காங்கே பதில் சொல்ல முயன்றுள்ளேன்.

இங்கிருந்து செல்லும்போது திருடர்கள் இருப்பார்கள் பார்த்துச் செல்லுங்கள் என்றார்கள். ஆனால் நாங்கள் இருந்த 5 நாட்களும் அந்த மாதிரி ஏதும் கேள்விப்படவும் இல்லை எதிர் கொள்ளவும் இல்லை. உண்மையில் கம்போடியர்கள் மிகவும் அமைதியானவர்கள். முதல் நாள் இரவே ஊரை எல்லாம் சுற்றிவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் தங்கும் விடுதி சென்றோம். ஆனால் விடுதியில் வேலை பார்ப்பவர்கள் விலை உயர்ந்த பொருட்களை(iPad, mobile phone) கைகளில் வைத்துக் கொண்டு சுற்றாதீர்கள் என்று எச்சரித்தார்கள். சில நேரம் திருடர்கள் பறித்துக் கொண்டு ஓடவும் கூடும் என்று சொன்னார்கள்.

நான் தங்கியிருந்த விடுதியில் ஒருநாள் வாடகை 27$ (காலைச் சிற்றுண்டியையும் சேர்த்து). நாங்கள் இரண்டு பேர் சென்றாதால் இரண்டு படுக்கைகள் கொண்ட ஒரு அறையை தேர்ந்தெடுத்தோம். கொஞ்சம் விசாரித்து பார்த்ததில் இரண்டு படுக்கைகள் கொண்ட ஒரு அறை 13$ க்கும் இருக்கிறது என்று தெரிய வந்தது(guest house). எல்லா விடுதிகளிலும் குளிரூட்டி இருக்கிறது. தங்கும் விடுதியில் ஒரு துண்டு, பல்விளக்க தேவையானவை, சீப்பு, சோப்பு எல்லாம் தாமாகவே வந்துவிடும். ஒரு அறை ஒரு படுக்கை 20$க்கும் ஒரு அறை மூன்று படுக்கை 35$க்கும் வாடகை வசூலிக்கிறார்கள்.

பெரும்பாலும் விடுதியிலே காலை சிற்றுண்டி தருகிறார்கள். இரண்டு வகையான உணவுகள்
1. மேற்கித்திய உணவு (bread, butter, tea /coffee and omelette)
2. ஆசிய உணவு (Noodles with rice)
 
காலைச் சிற்றுண்டிக்கு மேற்கித்திய உணவுகள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். உங்களுக்கு இட்லி  தோசை வேண்டுமேன்றாலும் பப் தெருவில்(Pub Street) ஒரு தெற்கிந்திய உணவகம் இருக்கிறது(Indian Cusine). அங்கு இட்லி, தோசை, சட்னி, சாம்பார் எல்லாம் கிடைக்கும். நாங்கள் கடைசி நாள் தான் இந்த தெற்கிந்திய உணவகத்தை கண்டுபிடித்தோம். காய்ந்து போன பிரட்டையும் ஜாமையும் பார்த்து பார்த்து வெறுத்த கண்களுக்கு சாம்பார் இட்லி எவ்வளவு திவ்யம்!!

விடுதியிலே சுற்றிப் பார்ப்பதற்கு(போக்குவரத்துக்கு) எல்லாம் ஏற்பாடும் செய்து தருவார்கள். ஆனால் கொஞ்சம் அதிகமாக இருந்தது. நாங்கள் "குருப் டூர்" என்ற ஒரு ஏஜென்சியிடம் பதிந்து கொண்டோம். அவர்கள் பாதி விலையில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து தந்தார்கள். அவர்கள் நம்மை மாதிரி நாலைந்து பயணிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அழைத்துச் செல்வார்கள்.

அடுத்து கம்போடியாவில் தெருவுக்கு தெரு இருப்பது மசாஜ் சென்டர்கள். தாய்லாந்து மாதிரி ஆக்க முயற்சி செய்கிறார்கள் போலும். உங்களுக்கு எந்த வகையான மசாஜ் வேண்டுமோ அதை விடுதியிலே ஏற்பாடு செய்து தருவார்கள்(Only professional massage). ஒரு மணி நேரம் கால் மசாஜ் செய்ய சாதாரணக் கடையில் 3$ வசூலிக்கிறார்கள். கொஞ்சம் தரமாக செய்பவர்கள் 15$ வரை வசூலிக்கிறார்கள்.

நான் தங்கியிருந்த விடுதி அறை (Passaggio Boutique Hotel) இதுதான்
passaggio-room.jpg
 
உணவு உண்ணும் இடம்
P1050094.jpg

அங்கோர் வாட்டில் மட்டும் ஏழு தமிழ் குழுமங்களை பார்க்க முடிந்தது. அதில் ஒரு குழுவில் இருந்தவர்கள் அங்கோர்வாட் சுவற்றில் இருந்த மகாபாரத சித்திரத்தைப் பற்றி சுற்றுலா வழிகாட்டிக்கே விளக்கி கொண்டிருந்தார்கள். டென்மார்க்கிலிருந்து ஒரு தம்பதிகள் கைக்குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு சென்றதை காண முடிந்தது. நிறைய மேலை நாட்டுப் பெண்களை காண முடிந்தது. பெண்கள் தனியாகச் செல்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் எல்லாக் கோவில்களும் காட்டுக்குள் தான் இருக்கிறது. நிறைய நடக்க வேண்டி இருந்தது. பேண்ட் அணிந்து கொண்டு செல்வது கோவில்களில் ஏற இறங்க மிகக் கடினமாக இருக்கும். ஷார்ட்ஸ் தான் உங்களுக்கு இலகுவாக இருக்கும். நீங்கள் அங்கோர்வாட் செல்வதாக இருந்தால் 2 ஷார்ட்ஸ் ஒரு ஸ்போர்ட்ஸ் சூ எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே சலவை நிலையம் உள்ளது. 3 மணி நேரத்தில் உங்களுக்கு சலவை செய்து கொடுத்து விடுவார்கள். ஒரு கிலோ துணிக்கு 1$.

நான் அங்கிருந்த 5 நாட்களிலும் தினமும் மாலையில் மழை பெய்தது. மழைக் காலமாக இருந்தாலும் கூட கடுமையாக வியர்த்து. 1$ க்கு சுவையான இளநீர் ஆங்காங்கே கிடைக்கும். எந்தப் பொருளை வாங்கினாலும் தாரளமாக பேரம் பேசுங்கள்.  அங்கு பொருள் விற்பனை செய்பவர்கள் அனைவரும் நல்ல ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். படிக்காத குழந்தை கூட நல்ல ஆங்கிலம் பேசுகிறது.... எல்லாம் சுற்றுலா சென்றவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது போல..

மூன்றாவது நாள்..

இன்றுதான் அங்கோர்வாட் செல்ல திட்டமிட்டோம். நம்ம ஊர் ஆடோரிக்சா மாதிரி இங்கு மூளைக்கு மூளை "டுக் டுக்" என்று ஒரு வண்டி இருக்கும், நாங்கள் எந்த பயண அலுவலகத்தையும் நாடாமல் "டுக் டுக்" பிடித்து அங்கோர்வாட் செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டோம். ஒரு நாளைக்கு 15$ கொடுத்தால் காலை முதல் மாலை வரை எல்லாம் இடத்தையும் "டுக் டுக்" லே சென்று பார்த்து விடலாம். நாங்கள் முழு நாளையும் அங்கோர்வாட்டிலே செல்ல திட்டமிட்டதால் 3$ கொடுத்து இறங்கி கொண்டோம். போகும் வழியிலே நுழைவுச் சீட்டு வாங்கி கொள்ள வேண்டும். ஒரு நாள் சுற்றிப் பார்க்க 20$(அருகில் உள்ள எல்லாக் கோவில்களையும் சேர்த்து). நாங்கள் 40$ கொடுத்து மூன்று நாள்  நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டோம். 40$ கொஞ்சம் அதிகம் தான்.

14614368520_d43b9295b2_b.jpgடுக் டுக் by aavai_murali, on Flickr

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் நன்பரே...

  • கருத்துக்கள உறவுகள்

தேவையா

போதுமான தகவல்களுடன் அங்கோர்வாட் பயண அனுபவம் ஆரம்பித்துள்ளது.

இவற்றை  வாசித்தபடி  நாமும் முடிச்சைக்கட்டிக்கொண்டு புறப்படலாம் போலிருக்கு கட்டுரை.

தொடருங்கள்

மிகுதியையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றால அருவியிலே குளித்ததுபோல் ஒரு கிளு கிளுப்பு. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி..அனேகமாக போய் பார்க்க வேண்டும் என்று ஆவலோடு இருப்பவர்களுக்கு சந்தர்ப்பம் சூழ் நிலை காரணமாக போக முடியாத நிலையும் இருக்கலாம்..அதை எல்லாம் நிவர்த்தி செய்வது போல் உங்கள் எழுத்தாற்றல் இருக்கிறது..இனிமேல் சில இடங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்காது..காரணம் அந்தளவுக்கு நீங்கள் விபரமாக எழுதுகிறீர்கள்..மேலும் விபரங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வர்னனையும் அழகாண படங்களும் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், ஆதி!

 

அன்கொவாட் பற்றி நிறையவே வாசித்திருக்கிறேன்!

 

உங்கள் படங்களும், விபரங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன!

 

ஒரு நாளில் நேரில் பார்க்கவேண்டும் 'அவா'  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது!

 

நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் ....தொடர்ந்து பதிவிடுங்கள்

  • தொடங்கியவர்

இந்தப் பயணப் பதிவை பார்வையிட்டு கருத்துக்களையும் பதிந்த பெருமாள், விசுகு, பாஞ், யாயினி, சுவைப்பிரியன், புங்கை மற்றும் புத்தன்  உங்களுக்கு எனது நன்றிகள்.

அங்கோர்வாட்டை சுற்றியுள்ள இடங்களையும் கோவில்களையும் கண்டிப்பாக ஓர் நாளில் காண இயலாது. ஆகையால் மூன்று நாளுக்கான நுழைவுச் சீட்டை வாங்கிக்கொள்ளவும். சீட்டு கொடுத்த நாளிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்குள் ஏதாவது மூன்று நாட்கள் நீங்கள் சென்று வரலாம்.

ஆகா !! அடுத்து அங்கோர்வாட் தான். நெடுநாளைய ஆசை நிறைவேறும் தருணம்..!!

கார்கால காற்று காதை மெல்ல வருடி நாசித் துவாரங்களில் நுழைந்து நரம்பு மண்டலங்களை நாட்டியமாடச் செய்து கொண்டிருந்தது. எந்திரங்களின் இரைச்சல் கூட கானகத்தின் நடுவே கானமாக ஒலிக்கிறது. ஆசை கூடாது என்று சொன்ன புத்தனை நினைத்துக் கொண்டேன். நான் ஆசை கொண்டிராவிட்டால் அங்கோர்வாட்டை அடைந்திருக்க முடியுமா !! எனக்குள் சொல்லிக் கொண்டேன்..."அர்த்தமுள்ள ஆசைகளை அடைகாத்து வை மனமே!! " என்னை மறந்து எண்ண அலைகளில் நீந்திக் கொண்டிருக்கும்போது மானுட கூச்சல் காட்டின் அமைதியையும் மீறி காதை கிள்ளியது. நெடிய நீர்த்தேக்கம் ஒன்றின் நுழைவாயிலில் கூட்டம் அலைமோதியது. ஆம். அங்கோர்வாட்டில் நானும் என் பாதச் சுவடுகளை பதித்து விட்டேன்.

கோவிலைப் பற்றி கொஞ்சம் விரிவாக காணுமுன் கொஞ்சம் பழைய வரலாறையும் புரட்டுவோம். கிட்டத்தட்ட 8 ஆம் நூற்றாண்டு வரை கம்போடியா ஜாவாவுடன் (தற்போதைய இந்தோனேசியா) இணைந்திருந்தது. இரண்டாம் ஜெயவர்மன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட்டோ அல்லது அகதியாகவோ அப்போதைய ஜாவாவுக்கோ இல்லை சைலேந்திர அரசாட்சிக்குட்பட்ட பகுதிக்கோ சென்றிருக்கிறான். பின்னர் பருவம் எய்தியதும் எப்படியும் தனது சொந்த நாட்டு சிம்மாசனத்தில் ஏறிவிட வேண்டும் என்ற அவாவின் காரணமாக கம்போடியா நோக்கி பயணப்பட்டு வரும் வழியில் உள்ள சின்ன சின்ன அரசுகளை போரில் வெல்கிறான். கடைசியாக  குலன் மலைக்கு வந்து, குலன் மலையையும்(kulen mountain)  அதனைச் சுற்றியிருந்த பகுதியையும் சேர்த்து ஒரு தனி நாடாக "கம்பூஜ தேசா" என்று அருவித்து கொண்டதுடன் தன்னைச் சக்கரவர்த்தி என்று பிரகடனப்படுத்தியும் கொண்டான். முதலில் அவன் தந்து தலைநகரத்தை இந்திர்புரத்திற்கும் பின் கரிகரலாயத்திற்க்கும் அதற்குபின் மகேந்திரபர்வதத்திர்க்கும் மாற்றி கடைசியில் இப்பொழுது உள்ள அங்கோர்வாட் பகுதிக்கு மாற்றியுள்ளான். இந்தப் பகுதிதான் அடுத்த 600 வருடங்களுக்கு கேமர் பேரரசின் தலைநகராக இருந்தது.

இதுவரைக்கும் இங்கு சிவ வழிபாடுதான் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இந்த மலையை கம்போடியர்கள் புனித மலை என்று கூறுகிறார்கள். இந்த மலையில் ஒரு அருவி ஓடுகிறது. அந்த அருவி ஓடும் பாதையில் நீருக்கு அடியில் கிட்டத்தட்ட ஆயிரம் லிங்கங்கள் உள்ளதாக கூறுகின்றனர். என்னால் பல லிங்கங்களை காண முடிந்தது. சில யோனி வடிவ சிலையும் காணப்பட்டது. இந்த மலையில்தான் கேமர் பேரரசு தோன்றியது.

14821017353_38040b7365_b.jpgநீருக்கடியில் ஆயிரம் லிங்கம் by aavai_murali, on Flickr

  • தொடங்கியவர்

14837594822_694d8fee07_o.pngஅங்கோர்வாட் அமைப்பு by aavai_murali, on Flickr

14835592214_4f6dde9def_o.jpgஆகாயத்திலிருந்து அங்கோர்வாட் by aavai_murali, on Flickr

14651309089_2b47a3c3ab_o.pngஅமைப்பு by aavai_murali, on Flickr

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்

14651435739_32f0419248_b.jpgகுருஷேத்திரப் போர் 1 by aavai_murali, on Flickr

14651375330_b7fcd87a28_b.jpgகுருஷேத்திரப் போர் 2 by aavai_murali, on Flickr

14837737262_7c705487e9_b.jpgசூர்யவர்மன் போர்க்களத்தில் by aavai_murali, on Flickr

14651364500_cab73886fc_b.jpgP1010525 by aavai_murali, on Flickr

ஒவ்வொரு முகப்புத் தூணிலும் உள்ள தேவதைகள்.

14614471500_1798122dc6_b.jpgஅப்சரா by aavai_murali, on Flickr

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.