Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா கணவர் நடராசன் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். 

நடராசன்

 

சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதனால் நடராசனைக் காண சசிகலாவுக்கு மீண்டும் பரோல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.30 மணியளவில் நடராசன் இறந்தார் என தெரிகிறது.   அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிகிறது.

 

26_04382.jpg


நடராசன் வாழ்க்கை

தஞ்சாவூரை சேர்ந்த நடராசன் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கியவர். கலெக்டர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பால், அவர் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்கும் வேலையை தனது மனைவி நடத்தி வந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கி கொடுத்தார். இதன்மூலம் ஏற்பட்ட நட்பால் பின்னாளில் ஜெயலலிதாவுடனே சசிகலாவும், நடராசனும் தங்கினர். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அ.தி.மு.க ஜெயலலிதாவின் பக்கம் வந்தது. அ.தி.மு.க தொடர்பான அனைத்து வேலைகளையும் நடராசன் கவனித்து வந்தார். ஆனால் நாளைடைவில் ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, போயஸ்கார்டனை விட்டு வெளியேறினார். எனினும், சசிகலா அவருடன் செல்லவில்லை. போயஸ் கார்டனை   விட்டு சென்றாலும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் நடராசன் ஈடுபட்டு வந்தார். 

25_04583.jpg

சொந்த ஊரில்... 

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைத்த பிறகு அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால், தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் அவரின் ஆதரவாளர்கள், உறவினர்கள் என அவரது வீட்டில்  கூட தொடங்கியுள்ளனர்

https://www.vikatan.com/news/tamilnadu/119624-sasikalas-husband-nadarasan-passed-away.html

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சசையில்... முள்ளிவாய்க்கால்  முற்றம் அமைய உறுதுணையாக இருந்தவர்களில் இவரும்  ஒருவர். 
அதனை நிர்மாணிக்க,  பெரும் பணத்தை... நன்கொடையாக கொடுத்து உதவியவர்.

ஜெனிவாவில் நடந்த ஸ்ரீலங்காவுக்கான   போர்க்குற்றம்  சம்பந்தமான  விவாதங்கள் பலவற்றில்,
தமிழின ஆதரவாளராக,  பலமுறை பங்கு பற்றியவர். 

இவர் ஈழத்தமிழர் மேல் கொண்டிருந்த அன்பு அளப்பரியது.
கண்ணீர் அஞ்சலிகளுடன்,   ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.

Edited by தமிழ் சிறி

நடராசன் மறைவு! - நல்லக்கண்ணு, ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி

 
 

நடராசன்

சசிகலாவின் கணவர் நடராசன், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அதனால், சசிகலா இன்று பரோலில் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

நடராசன் உடலுக்கு எம்பார்மிங் முடிந்த பின், சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல், காலை 7 மணி முதல் 11 மணி வரை வைக்கப்படும். அதன்பின், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அதையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணி அளவில் காலமானார். 

நடராசன் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 'நடராசனின் மறைவு, மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்குப் பேரிழப்பு' என திருமாவளவன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நடராசன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நடராசன் இறுதிசடங்கு

இன்று காலை சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். 'புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோதே தமிழ்மொழிக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது உணர்வை வெளிப்படுத்தியவர். கலைஞர் மீது அன்பு கொண்டவராகவும், திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்க கூடிய அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கள்' என்று தெரிவித்தார்.  

வைரமுத்து

'நடராசனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்குப் பேரிழப்பு, அவரது நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்' எனத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். மேலும், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தா.பாண்டியமன்

 

https://www.vikatan.com/news/tamilnadu/119631-sasikalas-husband-nadarasan-passed-away-today-morning.html

கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு 10 நாள் பரோல்!

 

 
sasikalaa

சென்னை: உடல்நலக் குறைவால் காலமான கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. 

இந்நிலையில், அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டையும் மாற்ற வேண்டும் என்ற நிலை உருவானது. இதையடுத்து தஞ்சையில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பரோலில் வந்திருந்தார் சசிகலா. சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கி இருந்து கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார். உடல்நிலை தேறிய நிலையில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார் நடராஜன். 

இந்நிலையில், நடராஜனுக்கு கடந்த 17-ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். 

இதையடுத்து நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் சில மணிநேரங்கள் வைக்கப்படும். பின்னர் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. 

விளாரில் நடைபெறும் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் 10 நாள் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

http://www.dinamani.com/latest-news/2018/mar/20/கணவர்-நடராஜன்-இறுதிச்-சடங்கில்-பங்கேற்க-சசிகலாவுக்கு-10-நாள்-பரோல்-2884180.html

யார் இந்த நடராஜன்...? 

 

 
natarajan

சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன்(76) சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இதையடு அவரது உடல் சொந்த ஊரான விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் 1943-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தவர் நடராஜன்.

மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடராஜன், ஹிந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965-ஆம் ஆண்டிடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாக பணியாற்றினார். 

1975-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் -நடராஜனுக்கும் திருமணம் நடைபெற்றது.

1980-இல் தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் பணியாற்றினார். அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது.

பல ஆண்டுகளாக புதிய பார்வை பத்திரிகையை நடத்தி வந்த நடராஜன், பல்வேறு பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982-இல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா. ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார். 

1984-இல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார். 

1985-இல் ஜெயலலிதா நேரடி அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன். 1991-இல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார். 

இதனிடையே ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தான் அளித்து வருவதாக நடராஜன் எங்கோ சொன்னதாக தகவல் ஜெயலலிதாவின் காதுக்கு எட்ட அதுமுதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்ததால் பிரிவு ஏற்பட்டது.

இதையடுத்து கணவரா அல்லது இடையில் தோழியா? என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுத்த சசிகலா. அன்று முதல் கணவன் மனைவி உறவை விட தோழி தான் முக்கியம் என்பதை நிரூபித்து ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.

புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளிவருகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்போது வரை வெளியாகி வருகிறது. 

இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

ஆண்டுதோறும் பொங்கலையொட்டி, தமிழர் கலை இலக்கிய விழாவை அவர் நடத்தி வந்தார். அதில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஹிந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு, உயிருக்கு நேர், அண்ணாவின் சொற்பொழிவுகள், உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைப் போர் குறித்த புத்தகத்தை எழுதியுள்ள நடராஜன், அங்கு உயிரிழந்தோர் நினைவாக, முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் நினைவுமண்டபம் அமைவதற்கு பெரிதும் பாடுபட்டார்.

இந்நிலையில்  மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச்.16-ஆம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. 

இன்று செவ்வாய்கிழமை (மார்ச்.20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எம்பாமிங் செய்யப்பட்டது. அதிகாலையில், பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீட்டுக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படு இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

கணவர் நடராஜன் மரணமடைந்ததை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா பரோல் கோரி இன்று மனு அளிக்க உள்ளார். சிறை அதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்கப் புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

http://www.dinamani.com/latest-news/2018/mar/20/யார்-இந்த-நடராஜன்-2884061.html

தமிழ் ஈழ உணர்வாளர் நடராஜனின் மறைவு உள்ளத்தை உலுக்குகின்றது: வைகோ இரங்கல்

 

 
vaiko1641612fjfif

கோப்புப்படம்: வைகோ

நடராஜனின் மறைவுச் செய்தி இதயத்தில் வேலாகப் பாய்ந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் நடராஜன் இன்று (செவ்வாய் கிழமை) அதிகாலை சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் களத்தில் நின்ற நண்பர் நடராஜனின் மறைவு செய்தி என் இதயத்தில் வேலாகப் பாய்ந்தது.

மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பணிகளில் அமர்த்த அவர் துணை நின்றதையும், தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பிட, தொடக்கத்தில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து, அத்தியாகிகள் கோட்டத்திற்கான நிலத்தைப் பெற்றுத் தந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாகவும், உயிர்க்காவியமாகவும் அம்முற்றம் திகழ்ந்திட அரும்பாடுபட்டவர் நடராஜன்.

முதன்முறை அவரது உடல்நலம் பாதித்து குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அங்கே விரைந்து சென்றேன். அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் உரையாடியபோது, அவரது கண்கள் பனித்ததையும், தொடர்ந்து நான்கு முறை சென்று, அவருக்கு அறுவை மருத்துவம் நடைபெறுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும் அவர் அருகில் இருந்ததையும் மறக்க முடியுமா?  

மார்ச் 14 ஆம் நாளன்று, அவரது உடல் நலம் மேலும் குன்றியதை அறிந்து, அந்த இரவில் நான் மருத்துவமனை சென்று, அவர் படுக்கை அருகே நின்றபோது, தூக்கத்தில் இருந்தார். 

அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”

என இரங்கல் குறிப்பில் வைகோ தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23299706.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

நடராஜன்  இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையிலிருந்து பரோலில் வெளிவந்தார் சசிகலா! 

 

 
sasikala

 

பெங்களூரு: இன்று அதிகாலை மரணமடைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ராஹாரா  சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளிவந்தார்.    

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வருகிறார்

அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையைஅடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

பின்னர் ஓய்விலிருந்த நடராஜனுக்கு கடந்த 17-ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் நடராஜனது  இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான விளாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நடராஜனது இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்கிறார். எனவே நடராஜனின் இறப்பு சான்றிதழுடன் 15 நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் சசிகலா பங்கேற்பதற்காக பெங்களூரு சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் வழங்கி பெங்களூரு சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதனை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ராஹாரா  சிறையிலிருந்து சற்று முன்னதாக சசிகலா பரோலில் வெளிவந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சையை அடையும் அவர் இன்று இரவு 7 மணி அளவில் விளாறை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

http://www.dinamani.com/tamilnadu/2018/mar/20/நடராஜன்--இறுதிச்-சடங்கில்-பங்கேற்க-சிறையிலிருந்து-பரோலில்-வெளிவந்தார்-சசிகலா-2884271.html

நடராசன் வாழ்க்கை... நிழலுக்கு நேர்ந்தது, நிஜத்திலும் அரங்கேறியது!

 
 

நடராசன், சசிகலா

ஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் இது!

 

எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டுப் புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க... அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன். ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என்ற வாசகத்துடன் படத்தின் கதைச் சுருக்கம், பாட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். அப்பா மருதப்பா மண்ணையாரிடமும், தாய் மாரியம்மாளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே... படிச்சுக் கிழிச்சது போதும், படுடா!’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. நடராசன் உடல்நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலைதான் காரணம். மண்ணெண்ணெய் செலவுக்கே கணக்குப் பார்க்கும் குடும்பத்தினர், சினிமாவுக்குப் போவதற்குப் பணம் தருவார்களா? ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில்தானே இருக்கிறது. எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். காட்டுப்பகுதியில் துவண்ட நிலையில் எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே!’ என்று பாடி வருவார். திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய... பிரிந்திருந்த இருவரும் இணைவார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச... படம் முடியும். ‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்துகொண்டார்.

ஜெனோவா

‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறுவயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதாவால் பிரிந்திருந்தார். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக்கொண்டதாகப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவர்கள் அப்படிச் சந்திப்பு நடந்ததற்கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப்பட்டார். அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதிமன்றத்தில் சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார். அங்கே இருவரும் பேச முடியவில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங்கேறியது.

1973-ம் ஆண்டு நடராசனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி. நடராசனும் சசிகலாவும் 1990-ம் ஆண்டு வரையில் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்கள். சசிகலா போயஸ் கார்டனில் குடிபெயர்ந்த பிறகும் அங்கேதான் நடராசனும் இருந்தார். ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து 1991-ம் ஆண்டு நடராசன் வெளியேறினார். ''நடராசனுடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது'' என ஜெயலலிதா அறிவித்தார். அதனால் நடராசன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் சசிகலாவும் நடராசனும் அதன்பிறகு பிரிந்தே இருந்தார்கள்.

https://www.vikatan.com/news/coverstory/119647-incident-happened-during-natarajans-school-days.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

நடராஜன் அதிமுகவின் மூளை என்பது மட்டும் தெரிந்தவர்களுக்கு, ஜூனியர் விகடனின் நிருபர் நண்பர் ஜோ ஸ்டாலின் எழுதிய இந்த பதிவு நடராஜனின் இன்னொரு பரிமாணத்தை பதிவு செய்திருக்கிறது. 
--------------------------

திராவிடத்தை பெயரில் வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு, பார்ப்பன வகுப்பில் இருந்து வந்த ஜெயலலிதாவை தலைமை ஏற்க வைத்து, அந்த முரண்பாடன தலைமையின் கீழ், திராவிட அரசியலை கச்சிதமாகச் செய்த Abstract Power நடராசன்.

அதே நேரத்தில், ஜெயலலிதாவிடம் பார்ப்பனர்கள் நெருக்கமாவதையும்... அவர்கள் செல்வாக்குப் பெறுவதையும் ஒவ்வொரு கட்டத்திலும் தட்டிவைத்து, 'அவர்களின் இடம் போயஸ் கார்டன் அல்ல!' என்பதை அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டியவரும் நடராசனே!

69 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்தது, சங்கராச்சாரியார் கைது, அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை திட்டமிட்டுக் கொடுத்தது என்பனவற்றில் நடராசனின் பாத்திரம் என்ன? என்பதை அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் மட்டுமே அறிவார்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க என்ற கட்சி, தமிழக அரசியலில் நிலைத்து நின்ற வரலாற்றை ஜெயலலிதாவிடம் இருந்து தேடினால் வெறும் லேபிளை மட்டும் உரித்தெடுக்கலாம்; ஆனால், அதில் உள்ளடக்கம் ஒன்றும் தேறாது;

அ.தி.மு.க-வின் உள்ளடக்கத்தை விளங்கிக்கொள்ள, அதை நடராசனிடம் இருந்து தேட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அதில் தெளிவை எட்டமுடியும். இன்றைக்கு மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யும், தமிழகத்தில் இருந்து அந்தக் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் அறிவுஜீவிகளும் இடறிய இடம் - இடறும் இடம் அதுதான்!

1991-ல் ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்து, தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, அரசாங்கத்தை நடத்தத் தொடங்கினார். அதற்கு பின்னால், இருந்த போராட்டங்கள், காய் நகர்த்தல்கள், வியூகங்கள் அனைத்தையும் நடராசனிடம் இருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.

மாறாக, ஜெயலலிதா, சோ, சங்கராச்சாரியர், அன்று பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் இருந்து தேடினால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. அப்படிச் செய்தால், கதைக்கு உதவாத சில கதைகளே நமக்குக் கிடைக்கும். காரணம், அந்தக் களங்கள் நடராசன் அமைத்துக் கொடுத்தது; வியூகங்கள் அவர் வகுத்துக் கொடுத்தது; அவர் மூலமே, ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்தார்.

ஆனால், அந்தக் களங்களில் எங்கு தேடினாலும் நடராசனின் தடம் இருக்காது; ஆனால், நடராசன் இல்லாமல் அந்தக் களங்களில் ஒன்றும் நடந்திருக்காது. ஏனென்றால், Abstract power என்பதன் வடிவமாக மட்டுமே நடராசன் தன் இயக்கத்தை வார்த்துக் கொண்டார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலா, தினகரனின் சறுக்கல்கள் எங்கே தொடங்கும் என்பதையும் அந்த நடராசன் புரிந்து வைத்திருந்தார். அதைத் தடுத்துச் சமாளிப்பதற்கான வழிகளையும் நடராசன் அறிந்தே வைத்திருந்தார்.

அதனால்தான், 2017-ல் தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில் பேட்டி கொடுத்த நடராசன், “ஓ.பி.எஸ் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதனால், முதல் அமைச்சரை மாற்றவேண்டிய தேவை இல்லை” என்று அழுத்திக் கூறினார்.

அவர் கொடுத்த அந்த அழுத்தம், அந்த அழுத்தத்தில் இருந்த செய்தி, அந்த செய்திக்குள் இருந்த எச்சரிக்கை, அ.தி.மு.க தொண்டர்களுக்கானது அல்ல; தமிழக பொது ஜனங்களுக்கானதும் அல்ல. அது, முழுக்க முழுக்க மன்னார்குடி குடும்பத்துக்கு மட்டுமேயான எச்சரிக்கை! ஆனால், சசிகலாவும், தினகரனும் அதை சாதரணமாக அலட்சியம் செய்தனர். அந்த அலட்சியம்தான் அவர்களின் பாதையில் வழுக்கலானது. அதில் அவர்களின் சறுக்கல் இன்னும் நீடிக்கிறது.

கடைசியாக அவரை குளோபல்(கடந்த முறை), மருத்துவமனையில் சந்தித்தபோது, "எல்லோரும் தங்களின் தேவைகளைத் தீர்மானித்துக் கொண்டு வாழ்ந்தால், யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார். அந்த வார்த்தைகளும் மன்னார்குடி குடும்பத்துக்குச் சொல்லப்பட்டவைதான்! அதைக் கேட்பதற்குத்தான் அங்கு யாரும் இல்லை! இனி அப்படி எதையும் சுட்டிக்காட்ட அவரும் இல்லை.

இரங்கல்!

எழுதியவர் -ஜோ ஸ்டாலின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

தஞ்சை வந்தடைந்தது நடராஜன் உடல்..! கண்ணீருடன் வந்திறங்கிய சசிகலா

 
 

சென்னையில் இறந்த நடராஜனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார். 

e03d7d85-3211-45c2-8a51-726c30ead82e_201

 

சசிகலா கணவர் நடராஜனுக்குக் கடந்த அக்டோபர் மாதம் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா பரோலில் 5 நாள்கள் வந்திருந்து கணவரை கவனித்துக்கொண்டார். அதன் பிறகு வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் நீண்ட ஓய்விலிருந்து வந்த நடராஜனுக்குச் சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னைக் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

e1dfcd4b-5dd3-4c4c-90c5-d7438051bb37_205

அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டதோடு செயற்கை சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது. இந்த நிலையில்  சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த நடராஜன் உடல் எம்பாமிங் செய்யபட்டு பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக 1 மணி வரை வைக்கபட்டிருந்தது. பின்னர் தஞ்சாவூரில் உள்ள நடராஜன் இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவிற்கு தஞ்சாவூரை விட்டு வெளியே செல்லக் கூடாது, பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளோடு 15 நாள்கள் பரோலில் வருவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது.

0e558a75-73cb-4c23-a29f-02bf76bec745_201

இதனையடுத்து பெங்களூருவிலிருந்து கார் மூலம் தஞ்சைக்கு வந்தார் சசிகலா. வரும் போது யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தவர் நீண்ட நேரம் அழுதபடியே இருந்தாராம். இதற்கிடையில் சரியாக இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்குள்ளே கொண்டு செல்லப்பட்டது. அப்போது கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரே காரில் சசிகலா மற்றும் தினகரன் தஞ்சாவூர் சென்றனர். அப்போது தொண்டர்கள் கூட்டம் காரைச் சுற்றி நின்று கொண்டிருந்ததால் பத்து நிமிடங்களுக்கு மேல் சசிகலா காரிலேயே அமர்ந்திருந்து பின் வீட்டின் உள்ளே சென்றார். அந்த நேரத்தில் காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். 

https://www.vikatan.com/news/tamilnadu/119705-sasikala-reached-tanjore-for-participating-natarajan-funeral.html

நடராசன் குறித்து ஜெயலலிதா கூறியது என்ன?

 

1980களிலின் பிற்பகுதியிலிருந்து அ.தி.மு.கவில் செல்வாக்குச் செலுத்தத் துவங்கிய நடராசன், ஓர் அரசு அதிகாரியாக இருந்து அ.தி.மு.கவை ஆட்டிவைக்கும் சக்தியாக உயர்ந்த கதை சுவாரஸ்யமானது.

ம. நடராசன்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆர்வலர் போன்ற முகங்களும் அவருக்கு உண்டு.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) உள்ள விளார் என்ற கிராமத்தில் விவசாயியான மருதப்பா - மாரியம்மாள் தம்பதிக்கு 1942ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பிறந்தவர் நடராசன்.

எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த நடராஜன், படிப்பில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.

தஞ்சாவூரில் உள்ள தூய அந்தோணியார் பள்ளிக்கூடத்தில், பள்ளிக் கல்வியையும் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் இளமறிவியல் படிப்பும் முடித்த நடராசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் படிப்பும் படித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலகட்டத்தில்தான், 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றார் அவர்.

1966 ஜூனில் தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார் நடராஜன்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் தி.மு.கவின் அனுதாபியாக இருந்த நடராசன், தஞ்சையில் தி.மு.கவின் முக்கியப் பிரமுகராக இருந்த எல். கணேசனோடு நெருங்கிப் பழகியவர்.

சசிகலாபடத்தின் காப்புரிமைKASHIF MASOOD

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல். கணேசன் போட்டியிட்ட போது, அவருக்காகத் தேர்தல் பணியாற்றினார்.

இதற்கு நடுவில் பெருமகளூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.

"பெருமகளூர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துவந்த நடராசனை நான்தான் வேலையிலிருந்து நிற்கச்சொன்னேன். அதற்குப் பிறகு அவர் எனக்காகத் தேர்தல் பணியாற்றினார்" என பிபிசியிடம் நினைவுகூர்ந்தார் எல். கணேசன்.

முதலமைச்சராக இருந்த சி.என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கென செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணிகள் அளிக்கப்பட்டன.

மொத்தம் 59 பேர் இந்தப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களில் நடராசனும் ஒருவர். அந்தப் பட்டியலில் முதலில் இருந்தவர் நடராசன் என்கிறார் எல். கணேசன்.

இதற்குப் பிறகு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தி.மு.கவின் முக்கியப் பிரமுகராக இருந்த மன்னை நாராயணசாமியின் உறவினரான வி.கே. சசிகலாவை, 1973 அக்டோபர் 16ஆம் தேதியன்று, முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு, தஞ்சாவூர், கடலூர், ஆவின், மெட்ரோ வாட்டர் என பல இடங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார் நடராசன்.

எம்ஜிஆர், ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைதனது அரசியல் குருவான எம்ஜிஆருடன் ஜெயலலிதா

கடலூரில் மாவட்ட பி.ஆர்.ஓவாக இருந்த காலகட்டத்தில், அங்கு நடந்த ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தை வீடியோவில் பதிவுசெய்யும் ஆர்டரை, தன் மனைவி சசிகலா நடத்தி வந்த வினோத் வீடியோ விஷன் நிறுவனத்திற்குப் பெற்றார்.

இதன் மூலமாகவே, சசிகலாவும் நடராசனும் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகி, அவருடைய அன்பைப் பெற்றதோடு, அவரது அரசியல் வாழ்வின் பின்புலமாகவும் அமைந்தனர்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அடியெடுத்து வைத்து, அந்த வீட்டின் நிர்வாகத்தைப் பார்க்கத் துவங்க, கட்சிக்குள் ஜெயலலிதாவின் செல்வாக்கை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் நடராசன்.

1984ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்தபோது, கட்சிக்குள் ஜெயலலிதாவின் செல்வாக்கை வலுப்படுத்தியதில் நடராசனின் பங்கு மிக முக்கியமானது.

எம்.ஜி.ஆர். மரணமடைந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் அவரைச் சுற்றிவளைத்துப் பாதுகாத்தது தாங்களது குடும்பம்தான் என பிற்காலத்தில் ஊடகங்களில் தெரிவித்தார் நடராஜன்.

ஜெயலலிதா பிரசாரம்படத்தின் காப்புரிமைIMRAN QURESHI

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் போன்ற மூத்த அமைச்சர்களை அதனை ஏற்கச் செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அதைச் சாதித்தார் நடராசன்.

இதற்குப் பிறகு, ஆளுநர் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா தன் தலைமையில் அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க முயன்றுகொண்டிருந்தபோது, அந்த அணியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்தார் நடராசன்.

அந்த காலகட்டத்தில் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, ஜெயலலிதா கட்சியின் ஒரே தலைமையாக உருவெடுத்ததில் நடராசனின் பங்கு மிக முக்கியமானது.

இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் ஜெயலலிதா அணிக்குள் நிலவிய குழப்பத்திற்கு நடராசனே காரணம் என திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு அந்த காலகட்டத்தில் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்தினார் நடராசன்.

இந்தத் தருணத்தில், 1988 ஜூலை 2ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஜெயலலிதா. அந்த அறிக்கையில்தான் முதல் முறையாக நடராசன் குடும்பம் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட்டார் அவர்.

"நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை... நடராசனும் சசிகலாவும் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அவருடைய பூரண ஆதரவுடன் எனக்கு உதவியாக இருந்தவர்கள்." என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதுவே, ஜெயலலிதாவிடம் நடராசனின் செல்வாக்கை காட்டும் வகையில் இருந்தது. அந்த காலகட்டத்தில் துவங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை வெளியிட்ட ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா தவிர, சசிகலா, திவாகரன், தினகரன் என நடராசனின் குடும்பத்தினர் மட்டுமே பங்குதாரர்களாக இருந்ததும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அரசுப் பணியில் இருந்த நடராசன், அ.தி.மு.கவின் வேலைகளைப் பார்த்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தனது அரசு ஊழியர் பதவியை 1988ல் ராஜினாமா செய்தார்.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைIMRAN QURESHI

இதற்குப் பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்த நடராசனுக்கும் ஜெயலலிதாவுக்குமான நல்லுறவு வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

1991லேயே போயஸ் கார்டனைவிட்டு வெளியேறினார் நடராசன். இருந்தபோதும் அ.தி.மு.கவில் அவருக்கு அழிக்க முடியாத செல்வாக்கு இருந்தது என அக்கட்சியினர் வெகுவாக நம்பினார்கள்.

ஆனால், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜெயலலிதாவோடு பல கட்டங்களில் முரண்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் நடராசனும் அவருக்கு நெருக்கமானவர்களும் கைது செய்யப்பட்டனர்.

2011 டிசம்பர் 19ஆம் தேதியன்று சசிகலா, அவரது கணவர் நடராசன் உள்பட 13 பேரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா.

இதற்குப் பிறகு, 2012ல் நடராசன் கைதுசெய்யப்பட்டார். ஜெயலலிதாவின் மரணம்வரை நடராசன் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.

இதற்குப் பிறகு, போயஸ் கார்டன் வீட்டின் பக்கம் செல்லாமல் இருந்த நடராசன், அவர் உயிரிழந்த பிறகுதான் அங்கு சென்றார்.

அதற்குப் பிறகு முதலமைச்சரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலும் தென்பட்டார், நடராசன். ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, சில தொலைக்காட்சி ஊடகங்களிடம் பேசிய நடராசன், தங்கள் குடும்பம் ஆட்சிக்கு வருவதில் என்ன தவறு என்று கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பிறகு, 2017 பொங்கல் விழாவில் பேசிய, நடராஜன் "ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். குடும்ப அரசியல் செய்வதாக கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவை எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது" என்று கூறினார்.

அரசியலில் நடராசனின் இடம் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில், அவர் தன்னை ஓர் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் வெளிப்படுத்திக்கொண்டார்.

1990களில் ‘புதிய பார்வை‘ என்ற இதழை பாவை சந்திரனை ஆசிரியராக வைத்துத் துவங்கினார். நடுவில் நின்றுபோன அந்த இதழ் 2006வாக்கில் மீண்டும் மணாவை ஆசிரியராக வைத்து வெளியானது.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைIMRAN QURESHI

"சமூக, அரசியல் இதழாக நடத்தப்பட்ட இந்த இதழின் சுதந்திரத்தில் நடராசன் தலையிடவே மாட்டார். அவர் எழுதும் கட்டுரை வெளிவரும்.

மற்றபடி முழுக்க முழுக்க ஒரு சீரியஸான இதழாக அதனை வெளிவர அனுமதித்தார் அவர்" என்கிறார் பத்திரிகையாளர் மணா.

அவருடைய ‘தமிழ் அரசி‘ பதிப்பகத்தின் மூலம் அண்ணாவின் படைப்புகள், தன்னுடைய சுயசரிதையான நெஞ்சம் சுமக்கும் நினைவுகள், முள்ளிவாய்க்கால்: ரத்தம் தோய்ந்த குறிப்புகள், மொழிப்போராட்டம் குறித்த உயிருக்கு நேர் ஆகிய புத்தகங்களை அவர் வெளியிட்டார்.

புதிய பார்வை தவிர, தமிழ் அரசி என்ற இதழையும் அவர் சில காலம் நடத்தியிருக்கிறார்.

2009ல் ஈழப்போர் முடிவடைந்த பிறகு, அந்தப் போரில் மடிந்த வீரர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் ஒரு நினைவிடத்தை அமைப்பதில் மிக முக்கியப் பங்குவகித்தார் நடராசன்.

மேலும் தஞ்சாவூரில், பொங்கல் திருநாளை ஒட்டி தமிழர் கலை இலக்கியத் திருவிழாவை வருடாவருடம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்களை அழைத்துப் பேசவைப்பது, கௌரவிப்பது ஆகியவற்றின் மூலமும் தீவிர தமிழ் ஆர்வலர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி, தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானதும் கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நடராசனின் உடல் நலம் குன்றியது.

சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை செயலிலழந்த நிலையில், அவருக்கு மாற்று உறுப்புகள் பொறுத்தப்பட்டன. இதற்குப் பிறகு, எந்த விவகாரத்திலும் தலையிடாமல் இருந்துவந்த நடராசன், தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில்தான், அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மார்ச் 16ஆம் தேதி குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

http://www.bbc.com/tamil/india-43470197

ம.நடராசன்: நிழல் மனிதரின் நிஜம்!

 

 
natarajan-1PNG

“இ

ருப்பதிலேயே கஷ்டமான விஷயம் - நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது ஏற்படுகிற வேதனைதான். அப்படிப்பட்ட வேதனையை வாழ்நாள் முழுக்க நான் அனுபவித்திருக்கிறேன் என்பதுதான் கொடுமை’’ - சில மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையிலிருந்து வந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது ம.நடராசன் சொன்ன வார்த்தைகள் இவை.

மருதப்பா நடராசன் என்கிற நடராசன், நண்பர்களால் ‘எம்.என்’ என்று அழைக்கப்பட்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள விளார் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம். பிறந்தது 1942 அக்டோபர் 23-ல். பள்ளிப் படிப்பின்போதே தமிழ் மீது பிடிப்பு ஏற்பட்டது. தஞ்சை சரபோஜி கல்லூரியில் அவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, திராவிட இயக்கப் பின்னணியில் உருவாகியிருந்த மாணவர் சங்கத்தின் சார்பில், மொழிப் போராட்டம் உத்வேகத்துடன் இருந்தது. அதில், தஞ்சையில் முன்வரிசையில் இருந்தவர் நடராசன்.

திமுக ஆட்சி அமைந்ததும் மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தகுதியான மாணவர்களுக்குச் செய்தித் துறையில் வேலை கிடைத்தது. அவர்களில் ஒருவர் நடராசன். மக்கள் தொடர்பு அதிகாரி ஆனார். நடராசனுக்கும் சசிகலாவுக்கும் நடந்த திருமணத்தை நடத்திவைத்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். எம்ஜிஆர் மறைவுக்கு முன்பே உறவினர்கள் மீது நம்பிக்கை இழந்து, ஜெயலலிதா சலிப்புற்றிருந்த நேரத்தில் அவருக்கு அறிமுகமானார் சசிகலா. நடராசனும் அவருக்குப் பழக்கமானார். விரைவில், ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற நடராசன், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்விலும் உடனிருந்தார்.

எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது ஜெயலலிதா பீரங்கி வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டு, அவமானப் படுத்தப்பட்ட நேரத்தில் அவருக்கு அனுசரணையாகத் துணை நின்றவர்கள் சசிகலாவும் நடராசனும். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா தனித்து அணி அமைத்துப் போட்டியிட்டபோது அவருக்குப் பக்கபலமாக நடராசனும் சசிகலாவும் நின்றார்கள். அந்நாட்களில் மத்தியில் இருந்த காங்கிரஸுடனும் ஏனைய மாநிலக் கட்சிகளுடனும் ஜெயலலிதாவுக்கு நல்ல பிணைப்பு உருவான பின்னணியிலும் நடராசனின் உழைப்பு இருந்தது. ராஜீவ், நரசிம்ம ராவ், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, கன்ஷிராம், மாயாவதி என்று பல தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார் நடராசன்.

திமுகவை எதிர்த்து இயங்கினாலும், திமுக தலைவரை ‘கலைஞர்’ என்றே அழைப்பார். ஒருகட்டத்தில் ஜெய லலிதா அரசியலைவிட்டே விலகுவதாக எழுதிக்கொடுத்த கடிதம், திமுக அரசால் கைப்பற்றப்பட்டது இவருடைய வீட்டிலிருந்துதான். அவர் கைதுசெய்யப்பட்டதும் நடந்தது.

அதிமுகவின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டபோது, அதை மீட்டுக் கொண்டுவந்ததில் நடராசனின் பங்கு என்ன என்பது அதிமுகவில் அப்போது இருந்தவர் களுக்குத் தெரியும். போடி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கேயே தங்கி அவருக்குத் தேர்தல் பணியாற்றினார் நடராசன். பின் ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றி, முதல்வராக அமர்வதற்கும் முக்கியப் பங்காற்றினார். 1991-ல் போயஸ் கார்டனிலிருந்து அவர் வெளியேறும்வரை, அதிமுகவின் மிக முக்கியமான அங்கமாக அவர் இருந்தார். பிறகு, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் பெரும் இடைவெளி உருவானது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும், மிக முக்கியமான தருணங்களில் அதிமுகவின் நகர்வுகளில் அவருக்கும் பங்கிருக்கவேசெய்தது. கட்சி எப்போதெல்லாம் நெருக்கடி யைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அவர் பெயர் இரண்டுவிதமாகவும் அடிபடும். குறிப்பாக, கூட்டணிகள் உருவாகும் சமயத்தில்!

ஈழப் பிரச்சினையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அலட்டிக்கொள்ளாமல், தொடர்ந்து புலிகள் ஆதரவுக் கூட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார் நடராசன். குறிப்பாக, ஈழப் போரின் இறுதிச் சமயத்தில் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார். தஞ்சையில் அவர் உருவாக்கிய முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றுக்கு ஒரு சான்று என்று சொல்லலாம். மொழிப் போராட்டம் பற்றியும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பைப் பற்றியும் இரண்டு தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்தார். சில ஆவணப்படங்களைத் தயாரித்து, உலகின் கவனத்துக்குத் தமிழர் துயரத்தைக் கொண்டுபோனார்.

‘புதிய பார்வை’ இதழில் ‘நெஞ்சம் சுமக்கும் நினைவுகள்’ என்ற தலைப்பில் தன்னுடைய அரசியல் அனுபவங்களை எழுதினார். ஜெயலலிதா மறைவதற்கு முன்பே, அந்திமக் காலத் தனிமையை ஆழ்ந்து அனுபவித்த உணர்வுடன் ஒரு நாள் சொன்னார், “சசிகலாவை இப்பவாவது போயஸ் கார்டனை விட்டு வெளியே வரச்சொல்லி, நாங்க இரண்டு பேரும் தனியா வாழணும்னு நினைக்கிறேன்… பார்ப்போம்.” ஜெயலலிதா மறைந்த அன்று ராஜாஜி ஹாலின் உள்ளரங்கில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போதும் அதையே சொன்னார்.

சசிகலா கைதாகி பெங்களூரு சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அன்று அவரைச் சந்தித்ததைச் சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. “எத்தனையோ முறை நான் சொல்லியிருக்கேன்.. கேக்கலை. இப்போ பழி யார் மேலே விழுந்திருக்கு? சசிகலா சிறைக்குப் போகும்போது அழுதாங்க.. என்னாலயும் கண்ணீரை அடக்க முடியலை. அதை நினைக் கிறப்போ என்னால் நிம்மதியாத் தூங்க முடியறதில்லை’’ என்றவர், மனைவிக்கு இருக்கிற பலவிதமான உடல் உபாதைகளைக் குரல் கமறச் சொன்னார்.

ஜெயலலிதா மறைவை ஒட்டி உருவான சந்தேக நிழல், தன்னுடைய குடும்பத்தினர் மீது படிகிற சூழல் உருவானதைச் சொல்லி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார். “அந்தம்மாவை சசிகலா மாதிரி யாரும் கவனிச்சிருக்க முடியாது. அந்தம்மாவுக்குச் சர்க்கரை கூடியிருக்கு.. பல தொந்தரவுகள்.. தன்னோட உடல் நலனில் அந்தம்மாவுக்கே அக்கறை இல்லாமப் போச்சுங்கிறதுதான் உண்மை. பிடிவாதமா டாக்டர் சொன்னதை மீறிச் சாப்பிடுவாங்க. யாரும் தடுக்க முடியாது. சுகர் லெவல் அதனால தான் 600-க்கு மேலே போச்சு. என்ன வைத்தியம் பண்ணலை அவங்களுக்கு? எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர்களுக்குத் தெரியும். அவங்க மூலமா பிரதமர் மோடிக்குத் தெரியும். இங்கே இருந்த அமைச்சர் கள் எல்லோருக்கும் தெரியும். ஆனா, இப்போ பழி மட்டும் எங்க குடும்பத்து மேலன்னா என்னங்க நியாயம்?” என்றார், தனக்கு கல்லீரல் ஆபரேஷன் நடப்பதற்கு முன்னால் படுக்கையில் இருந்தபடி.

தன் குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தபோது நடராசன் டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜகவைச் சேர்ந்த சிலரைச் சந்தித்திருக்கிறார். “எங்க குடும்பத்து மேல அடுத்தடுத்து வழக்குப் போடுறீங்க.. நாங்க பொறுத்துக்கிட்டே இருக்கோம். திருப்பி தமிழ்நாட்டில் நீங்க யாருக்கு, என்னென்ன வாங்கினீங்கன்னு, எதில் எதில் தலையிட்டீங்கங்கிற விஷயத்தை நாங்க சொன்னா என்ன ஆகும்?” என்றார். டெல்லியிலிருந்து திரும்பிய பின் அவரே சொன்னதுதான் இது. கூடவே, “திராவிடத்தை ஒழிச்சுருவோம்னு பேசுறாங்களே.. திராவிட இயக்கங்கள் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாமப் பிரிஞ்சு கிடக்கிறதனாலதானே இப்படிப் பேசுறாங்க.. நாம எல்லாம் ஒற்றுமையா செயல்பட்டா என்னவாகும்? ஸ்டாலின்கிட்டே பேசணும்னா நானே பேசுவேன்..’’ என்றார்.

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறியவர், சமீபத்தில் சட்டென்று மஞ்சள்காமாலை பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் நம்பிக்கை குலையாமல் இருந்தார். இரவு நேரத் தூக்கம் குலைந்துபோயிருந்தது. மனைவியைப் பற்றிய வருத்தம் மன அழுத்தத்தைக் கூட்டியிருந்தது. அவரை நேரில் பார்க்கும் பிரயாசையுடன் இருந்தார். அரை மயக்கத்திலும் மனைவி பெயரை அவர் உச்சரிப்பதாகச் சொன்னார்கள், உடனிருந்து கவனித்துக் கொண்ட மருத்துவப் பணியாளர்கள். தனிமை ஒரு கரும் நிழலைப் போல அவருக்கு அருகில் இருந்தது.

“நான் பேச வேண்டிய நேரம் வந்துடுச்சு. சீக்கிரமே எல்லாத்தையும் சொல்லிடணும்” - மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு, அவரைச் சந்தித்த நாட்களில் அவர் சொன்னது இது. இறுதி நேரத்திலும், தன் இறுதிக் காலத்தைப் பற்றியும் என்ன பகிர்ந்து கொள்ள விரும்பினார்? எதைப் பேச, எழுத பிரயாசைப்பட்டார்? தெரியவில்லை.

- மணா, பத்திரிகையாளர்,

தொடர்புக்கு: manaanatpu@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/article23308851.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த நடராஜன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராசன் உடல் நல்லடக்கம்..!

 
 

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ம.நடராசனின் உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

a496b870-cd19-40c1-ac53-2446dab5750c_213

 

சசிகலா கணவர் நடராசன், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு  உயிரிழந்தார். பின்னர் நடராசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது.

19ded8c0-0a62-45fa-a83b-9c8651d5d216_211

அதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள பரிசுத்தம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வருவதற்காக எடுத்துவரப்பட்டது. முன்னதாக அவரது மனைவி சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து 15 நாள் பரோலில் வந்தார். திருச்சி அருகே சசிகலாவிற்காக நடராசன் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலென்ஸ் காத்திருந்தது.

02aa9053-c19e-4e45-aebf-9140278d5d25_210

திருச்சி வந்தடைந்த சசிகலா, ஆம்புலன்ஸில் இருந்த நடராசன் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினார். பின்னர், ஆம்புலன்ஸ் புறப்பட்டு தஞ்சாவூருக்கு வந்து அங்கு நடராசனுக்குச் சொந்தமான இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த சசிகலா, கணவர் நடராசன் உடல் அருகே சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் மாடிக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து தினகரன், திவாகரன், விவேக், வெங்கடேஷ், ஜெயானந்த் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இன்று மாலை 4.30 மணிக்கு நடராசன் உடல் சொந்தஊரான விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் எதிரே நல்லடக்கம் செய்வதற்காக  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது சடங்குகள் செய்வதற்கு அருகிலிருந்து சசிகலா சில ஆலோசனைகளை வழங்கியபடி இருந்தார். அப்போது அவர் கண்களில் நீர் வழிந்தது. நடராசன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றித்திற்கு உள்ளே சில நிமிடங்கள் வைக்கபட்டு அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து 8 அடி ஆழம், 6 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழியில் நடராசன் உடல் இறக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ஜெயலலிதாவிற்கு செய்த தேவாதி தீக்ஷுதர் மந்திரங்கள் ஓத நடராசன் தம்பி ராமச்சந்திரன் மகன் ராஜீ சடங்குகளைச் செய்தார். திவாகரன், தினகரன், பாஸ்கரன், நடராஜன் தம்பிகள் உடனிருந்தனர். அந்த இடத்தில் மணிமண்படம் கட்டுவதற்கு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/119818-natarajan-body-buried-in-near-tanjore-mullivaikkal-muttram.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

L’image contient peut-être : 1 personne, lunettes_soleil
MaThi Sutha
10 h · 
 

நடராஜனுக்கு நான் ஏன் அஞ்சலி செலுத்தினேன்.....

2013 இன் நடுப்பகுதியிருக்கும். சட்டங்களுக்குள் எத்தனை நெளிவு சுளிவுகள் ஓட்டைகள் இருந்தாலும் புகுந்து போகும் வரை நமக்கு அதைப் பற்றித் தெரிவதில்லைத் தானே. 22 வருடங்களாக சிறையில் இருந்த அண்ணாவை இரத்த உறவில் இருந்து யாருமே சென்று பார்த்ததில்லை. ஆனால் எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தது மைத்துனரான ரஜி தான்.

வீட்டுக்கு தெரிந்தால் நிச்சயம் விடமாட்டார்கள். எந்த அம்மா தான் தன் அடுத்த பிள்ளையையும் சிறைக்குள் தள்ள தயாராக இருப்பார். ஆனால் வழமை போல சாதாரண இந்தியப் பயணம் போல் தான் அழைத்துச் சென்றார். அங்கு மதுரையைச் சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் சிறைக்குள் அழைத்துச் செல்ல முன் வந்தார்கள். ஆனால் சட்டரீதியான உதவிக்கு எமக்கு கை கொடுத்தது திரு நடராஜன் அவர்கள் தான்.
போய் அவர் அருகே கதிரையில் அமரும் வரை என் மனதிலும் அரசியல்ரீதியான ஒரு வெறுப்பே இருந்தது. ஆனால் பேசிக் கொண்டு போகையில் தான் மறைமுகமாகச் செய்யும் ஆதரவுகளும் உதவிகளும் தெரிந்தது. கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் ஈழம் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக பேசினார். இந்த நேரத்துக்குள் எமக்கு அளித்து தானும் உண்ட மதிய உணவும் அடங்கும்.
(அவர் பேசிய தமிழக ஈழ அரசியல் பேச்சுக்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை அது இன்று அரசியல் செய்யும் சிலரின் மறைக்கப்பட்ட கேவலப் பக்கங்களாகும் அதைச் சொல்லி எம்மைப் பற்றி தமிழ்நாட்டில் பேசும் அந்த ஒரு சிலரையும் இழக்க விரும்பவில்லை)

அன்று அவர் ஏற்படுத்திக் கொடுத்த விசாரணைகளற்ற அந்த சிறை நுழைவு தான் இன்று வரை வருடா வருடம் செல்ல உதவுகிறது. ஆனால் அவர் சொன்ன சட்ட ஆலோசனையில் மிக முக்கியமானது "பார்த்து விட்டு வந்து பேட்டி கொடுத்து விடாதே ஏனென்றால் எந்த அரசும் உறவுத் தொடர்பை மதிக்கும் ஆனால் நீ அளிக்கப் போகும் பதில்களுக்குள் ஈழம் தொடர்பான அரசியல் இல்லாமல் ஒரு பதில் அளிக்க முடியாது அதையும் அதன் தூர நோக்கத்தையும் எந்த அரசும் விரும்பாது" இது தான் இது மட்டுமல்ல உதாரணத்திற்கு அவர் சொன்னது பார்வதியம்மாவுக்கு நடந்த சம்பவமாகும். சத்தமில்லாமல் வந்திருந்தால் அரசுக்கு அதனால் எந்த அழுத்தமும் இல்லை. ஆனால் வைகோ கொடியுடன் வரவேற்கப் போனது தான் சிக்கல், இந்த ஆரம்பத்தை அனுமதித்தால் அந்த அம்மாவை வைத்து இங்கு பெரும் அரசியல் ஆரம்பமாகும் என அரசு நினைத்திருக்கலாம் என்றார்.

ஏதோ நான் இதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

குறிப்பு - அங்கு எந்தளவு தான் ஈழ ஆதரவு இருந்தாலும் சிலரால் வெளிக்காட்ட முடியாத அளவுக்கு வேறொங்கோ ஒரு இடத்தில் பிடிமானத்தை இழந்திருப்பார்கள். பழநெடுமாறன் ஐயாவுக்கு தன் சொந்த காணியைத் தான் கொடுத்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறக்கக் கூட அவரால் போக முடியாத அளவுக்கு அவருக்கு அரசியல் இருந்திருக்காலாம்.

 

https://www.facebook.com/mathisutha?hc_ref=ARTUn12AUGCKNpO-_J1JK6o-z2jU8h_qsBFj3Cdgio2ESiYZ9CzSX_Phc9uiMI2Nm7E&fref=nf&pnref=story

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.