Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகமே.... சுவாசமே.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகமே….. சுவாசமே……..

cute-photo-of-dad-holding-the-babys-feet-in-his-hands.jpg

ஆப்பிள் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தபடி இதமான தென்றல் சாளரத்தினூடாக அந்த அறைக்குள் நுழைந்துகொண்டிருந்த்து. சாளரத்தின் திரைச்சீலைகளை ஒதுக்கிய மைதிலி முகிலுக்குள் ஒளிந்தும் தெரிந்தும் விளையாடும் வெண்ணிலவை இரசித்தபடி ஆப்பிள் பூக்களின் நறுமணத்தில் சொக்கிப் போய் நின்றாள்.

மைதிலி என்னை நேசித்த ஒரே காரணத்திற்காக தனக்கான அனைத்தையும் துறந்தவள். பெற்றோர் கூடப்பிறந்தவர்கள், மதம் , அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வசதிகள் குறைந்த என்னை மட்டுமே ஏற்று இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவள். கடந்த ஆறு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மழலைச் செல்வம் இன்னும் சில மாதங்களில் எங்கள் கைகளில் தவழும்.

உப்பி மேடு கட்டிய வயிற்றைத் தடவியபடியே சாளரவெளியால் வான் நிலவை ரசித்துக் கொண்டிருந்தவளிடம் பூனைபோல பதுங்கிப் பதுங்கி எந்தச்சத்தமும் செய்யாது நெருங்கிக் கொண்டிருந்தேன். முட்டு வயிற்றோடு வழமையாக சுவாசிக்கவே அவஸ்தைப்படும் மைதிலி இன்று சாளரவெளியிடையே சீராகச் சுவாசித்துக் கொண்டிருந்தாள். எனக்கு அவளின் அந்த முட்டிய வயிற்றுக்குள் இருக்கும் என்னுடைய செல்வத்தை வருடும் அவா…… மைதிலிக்குத் தெரியாமல் பின்னால் சென்று மெல்ல மெல்ல என் கைகளால் அந்த வயிற்றை அவள் கையோடு இணைத்து தடவவேண்டும்.

சத்தமில்லாமல் அருகில் செல்வதென்றாலும் நெஞ்சின் படபடப்பும், நான் உள்ளிழுத்துவிடும் மூச்சின் நீளமும் எனக்கே பெரிய ஓசையாகக் கேட்டன. வியர்வை அரும்பியது. வினாடிப் பொழுதில் சரெலென திரும்பினாள் மைதிலி மூர்ச்சையற்றுப் போனேன். அவள் கண்களில் தெரிந்த அருவருப்பில் ஒரு கணம் தயங்கியபடியே எட்டி அணைக்கும் தூரத்தில் நின்றாலும் மெல்லத் தலையைக் குனிந்தேன். வினாடிகளின் மௌனம் வலித்த்து. திருட்டுத்தனம் செய்தபிள்ளை அம்மாவிடம் வகையாக மாட்டிக் கொண்டால் எப்படி நிற்குமோ அப்படி நின்றேன்.

ஆம் அவளுக்குப் பிடிக்காது. ஆனால் அவளுக்காக அந்நிலையிலிருந்து என்னால் விலகிக் கொள்ளமுடியாது.

தொட்டால் மைதிலியின் மைவிழிகள் கரையும். நான் விட்டால் என் வேகம் தொலையும். தீர்க்க முடியாத கணக்காக எனக்கும் அவளுக்கும் இடையில் இன்னும் நீடித்தது.

வினாடிகளின் மௌனங்கள் கரையும் பொழுதில் என் கண்களுக்குள் படுகிறது அந்த முட்டிய வயிற்றுக்குள் அசையும் என் ஜீவன். அப்படியே எட்டி முழந்தாளிட்டு மெல்ல அந்த வயிற்றைத் தடவி முத்தமிட்டேன். என் கேசத்தில் மைதிலியின் கரங்கள் படிந்தன. நான் அண்ணார்ந்து பார்த்தபோது அவளின் முகத்தில் அம்மா சிரித்தாள்.

நிலவு, தென்றல், அணைப்பில் மனதிற்குப்பிடித்தவள், அவளின் வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் அதிர்வால் அவளையும் மீறி என்னைச் சிலிர்க்கவைக்கும் என் பிள்ளை. அகத்தில் மகிழ்வோடு உறங்கிப்போனேன்.

அழகான பெண்குழந்தை கனவில் வந்து விளையாடிச் சிரித்தது. என் கண்களைக் கட்டிவிட்டு தன்னைத் தேடச்சொல்லிவிட்டு ஓடியது. மழலையின் சிரிப்பின் ஓசையில் குறிப்பறிந்து கைகளால் துழாவித் தேடினேன்.

குழந்தையின் சிரிப்பு வீரிட்ட குரலாக மாற, கண்களின் கட்டை அவிழ்த்தெறிய முயன்றேன். முடியவில்லை….

குழந்தையின் வீரிடல் பெரிதாகிப் பெரிதாகி திக்குணர முடியாமல் குழப்புகிறது. கண்களைக்கட்டிய நிலையில் பித்துப்பிடித்தவன்போல் ஓடினேன், விழுந்தேன், அழுதேன்…. அதோ மைதிலி ஓடிவந்து கண்களின் கட்டுக்களை அவிழ்த்தாள். என் உடலெல்லாம் அதிர்ந்த்து. மைதிலி உலுப்பியபடியே “ரகு”….”ரகு” என்று அழைத்தாள். வியர்வையில் தோய்ந்தபடி அலங்க மலங்க விழித்தபடி எழுந்தேன். கண்டது கனவு என்று உணரச் சில வினாடிகள் எடுத்தன. அப்போதுதான் பார்த்தேன் மைதிலி மூச்செடுக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அது அடிக்கடி வருவதுதான். ஆஸ்மாக் குணம் இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். மூச்செடுக்கக் கஸ்ரப்பட்டால் பப்ஸ் அடிப்பதுண்டு. ஆனால் வயிற்றில் குழந்தை உருவாகியதில் இருந்து பப்ஸை நிறுத்திவிட்டு சுடு தண்ணீரைக் குடித்துவிட்டு கடதாசிப்பையால் மூக்கையும் வாயையும் சேர்த்து மூடி ஐந்து நிமிடங்களில் இருந்து பதினைந்து நிமிடங்கள் வரை மூச்சை உள்ளேயும் வெளியேயும் இழுத்து விட்டால் சுவாசம் சமநிலை அடைந்துவிடும்.

மைதிலி மிகவும் சிரமப்பட்டாள். விட்டுவிட்டு வயிற்றில் வலிக்கிறது என்றாள். குழந்தை பிறப்பதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும்போது இது என்னவாக இருக்கும் என்று மூளையைக்கசக்கி கொண்டிருந்தேன். அப்போது வோஸ்ரூம் போன மைதிலி வீரிட்டு அலறினாள். அவசரமாய் எழுந்து ஓடினேன். அவளின் ஆடையில் உதிரமும் நீருமாய்….. அணைத்து அவளைத் தூக்கிவந்து ஈஸிச்செயரில் இருத்திவிட்டு ஆன்புலன்சை அழைக்க தொலைபேசியை எடுத்தேன்.

அந்த வைத்தியசாலைக்கு வெளியே உள்ள சீமென்ட் இருக்கையில் இருந்தபடி ஒருவர் எனக்கு முன்னால் சிகரெட்டை இழுத்து சுருள்சுருளாக புகைவிட்டுக் கொண்டிருந்தார். அருகில் அடுத்த பெஞ்சில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் கைகால்கள் நடுங்கின, நா வரண்டு தாகமெடுப்பதுபோல் உணர்வு, மண்டைக்குள்ள ஏதோ பிரளயம் வந்தமாதிரி அந்தரிப்பு உடல் சோர்ந்து பலநாள் பட்டினி கிடந்தவன்போல் தொய்ந்தது.

அடக்கமுடியாமல் விழிகள் குளமாயின. வைத்தியசாலைக்கு உள்ளே சென்று மைதிலியைப் பார்க்கும் தைரியம் அற்றுப்போயிருந்தது. ஏழு மாதத்தை அண்டிய நிலையில் அவசரமாகப்பிறந்த குழந்தையை வெப்பமூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டியில் வைத்தும் பிராண வாயுவை வழங்கியும் மருத்துவர்கள் போராடித் தோற்றுப் போனார்கள்.

மெல்லிய உருவுடன் முழுமையான வளர்ச்சியற்ற அந்தக் குட்டித் தேவதை என் கண்களைக் கட்டிவிட்டு ஓடி மறைந்து விட்டாள்.

பொக்கற்றுக்குள் கையை விட்டு சிகரெட் பெட்டியை எடுத்து திறந்து அதில் கிடந்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தேன்…… மனதில் மைதிலியின் முகம் அருவருப்புடன் நோக்குகியது. உதட்டில் பொருத்திய சிகரெட்டை எடுத்து வெறுப்புடன் பார்த்தேன். ஐந்து விரல்களாலும் பொடிபடக் கசக்கி எறிந்தேன். பொக்கற்றுக்குள் தடக்குப்பட்ட சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் அருகில் கிடந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வைத்தியசாலையின் உட்புறத்தை நோக்கி நடந்தேன்.

வைத்தியசாலையின் அறிவிப்புப் பலகையில் புகைத்தல் பற்றிய அறிவிப்போடு… பாதிப்படையும் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் என்ற வாசகம் என் கண்களை உறுத்தியது.

கண்களைக்கட்டிவிட்டு என்னைத் தேடவிட்ட என் செல்ல மழலையின் மீள் வருகைக்காக…

தலை கிறுகிறுத்தது.

கைகால்கள் நடுங்கின

நடை சோர்ந்தது.

நா வரண்டது.

மெய் தளர்ந்தது.

கடந்து நடக்கிறேன்

என் வீட்டுத் தேவதையிடம் மன்னிப்புக் கேட்க.

Edited by valvaizagara

தாய்மையின் பூரணை நிலவு மைதிலியில் . கொடுத்த ஊக்கியாக ரகு . இருவருக்கும் உள்ள தீர்க்கமுடியாத கணக்கிற்கு விபரம் போதவில்லை . குறைமாதத்தில் பிறந்து இறந்த குழந்தை . குழந்தை இறந்ததின் பூரண வலி நேரடிப் பங்காளியான மைதிலிக்கு . ரகு வெறும் பார்வையாளனே . இயற்கையின் படைப்பில் உள்ள வலியான வினோதம் . சொல்ல வந்த விடையத்தை நளினமாக சொல்லும் உத்தி ஒரு சிலருக்கே கைவரும் . நீங்களும் அதற்குள் அடங்குவது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது . மேலும் எழுதும் போது வடமொழிச் சொற்களை தவிர்த்தால் நல்லது . உதாரணமாக சாளரம் என்பதிற்குப் பதிலாக ஜன்னல் என்று போடலாம் . புத்தகங்களை வாசித்து எங்களுக்கு என்று எழுதும் முறையை கொண்டு வந்தால் கதையின் வீச்சு ஆழமாக இருக்கும் . உங்களால் முடியும் , நீங்கள் பிறந்த மண்ணுக்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கின்றது . தொடருங்கள் களம் அதிரப் பறையொலியுடன் :) :) :) .

உங்கள் வலைப்பூவில் வேங்கையின் பூங்கொடிக்கு பின்ஊட்டம் போடமுடியவிலை . வலைப்பூவில் சென்று கொமன்ஸ் பகுதியில் மாற்ரங்களை செய்யுங்கள் . இனி அது பற்ரி எனது கருத்து ..................................

நீண்ட காலத்திற்குப் பின்பு ஒரு நல்ல கவிதையினைப் படித்தேன் . ஒரு கவிஞருக்கு ஆறாக்கற்பனை மட்டும் இருந்தால் போதாது . மாறாக எதை ? எங்கு ? எப்படி ? தைக்கவேண்டும் என்ற வித்தை தெரிய வேண்டும் . அந்த வித்தையைக் கண்ணதாசனின் யேசுகாவியத்திற்குப் பிறகு உங்கள் வேங்கையின் பூங்கொடியில் கண்டேன் . இத்துடன் நிற்காது இன்னும் பலங்கூடிய வீச்சுகளைக் கொண்ட நல்ல கவிதைகளை நீங்கள் தரவண்டும் என்பது எனது ஆசை :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

Quote:"ஆம் அவளுக்குப் பிடிக்காது. ஆனால் அவளுக்காக அந்நிலையிலிருந்து என்னால் விலகிக் கொள்ளமுடியாது.

தொட்டால் மைதிலியின் மைவிழிகள் கரையும். நான் விட்டால் என் வேகம் தொலையும். தீர்க்க முடியாத கணக்காக எனக்கும் அவளுக்கும் இடையில் இன்னும் நீடித்தது."

சகாரா உங்கள் கதையை மூன்று தரம் வாசித்துவிட்டேன், இப்பதான் உங்கள் கதையின் ஆழத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திச்சு, நன்றி பகிர்வுக்கு,

கிட்டத்தட்ட இதே மதிரி கதை, அவன் கனவு காண்கிறான் தன் பிள்ளையை கருவில் அழிக்கிற மாதிரி, மனைவிக்கு விருப்பமில்லை, கனவில் தன் மூத்த மகள் அவசர சிகிச்சை பிரவில், இவன் கனவில் பிதற்றுவரை கண்ட மனைவி தட்டி எழுப்பதான் தெரியும் தான் கண்டது கனவு என்று, சிசுவை கருவில் கலைப்பது என்பது மாக குற்றம் கொலைக்கு சமனானது,

கதைக்கேற்ற படம்

அருமையான எழுத்துக்கள் சகாரா அக்கா.

எனக்கும் உடையார் மாதிரித்தான். முதலில் அந்த வசனங்களின்

அர்த்தம் புரியவில்லை. திறமையான எழுத்து உத்தி.

கோமகன் - ஜன்னல் எப்படி தமிழாகும். தமிழில் "ஜ" இல்லையே?

சாளரம் தமிழ் இல்லையா?

Edited by Eas

கண்ணில் கண்ணீரை வரவைத்த கதை......... நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இந்த கதையின் மூலமாக ஒருவராவது தன் குழந்தைக்காக, குடும்பத்திற்காக புகைப்பிடித்தலை நிறுத்தினால் அது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி. நன்றி.

நல்லதொரு கருவை சிறுகதைக்கான தன்மைகளுடன் இசைத்து வாசிப்பைத் தூண்டும் எழுத்து நடையில் எழுதிய கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! புகலிடத்தில் சிறுகதைகளுக்குத்தான் மிகவும் பஞ்சம்.. அதனால பேசாம இந்தத் துறையிலேயே அதிக கவனத்தை செலுத்துங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

சகாரக்காவின் கவிதைகள் தான் படிச்சு இருக்கிறன்..உங்களின் சிறுகதை படிப்பது இது தான் முதல்..மிகவும் நன்றாக இருக்கிறது..அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதவேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

  • தொடங்கியவர்

நன்றி கோமகன்.

மைதிலியாக நின்று இக்கதையை நான் எழுதவில்லை ஆதலால் மைதிலியின் பக்கங்கள் எதுவும் இங்கு வெளிப்பட வாய்ப்பில்லை. ரகுவை வெறும் பார்வையாளனாக இக்கதை உங்களுக்கு புரிபட்டிருப்பின் இக்கதைக்கு அது மிகப்பெரிய தோல்வியே. கதையை நளினமாக நகர்த்தும் உத்திகளுக்கு அப்பால் வாசிப்பாளனிடம் அக்கதை சொல்லும் விடயம் சென்றடையவில்லை என்றால் நளினமான உத்தி பயனற்று போய்விடும். கோமகன் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். சாளரம் என்பது வடமொழிச் சொல் என்று கூறியிருக்கிறீர்கள் யன்னல் அல்லது சன்னல் என்பது தூய தமிழ் சொல்லா? தூய தமிழ்சொற்களின் அகராதி என்னிடம் இல்லை. எங்கள் பாவனையில் இருக்கும் கதிரை, மேசை, குசினி, அலவாங்கு இப்படி நிறையச் சொற்கள் போர்த்துகீசிய சொற்கள் எங்களுடைய நாளாந்தப்பாவனையில் பிற மொழியின் கலப்பு இலகுவாக இணைந்து நிற்கிறது. முடிந்தவரை கவனமெடுக்கின்றேன்.

புத்தகங்களை வாசித்து எங்களுக்கு என்று எழுதும் முறையை என்று நீங்கள் கூறுவது யாப்புக்குள் நின்று எழுதும் பாக்கள் போன்றது. நாட்டார் பாடல்கள் ஒரு காலமும் யாப்பு இலக்கணத்திற்குள் கட்டுப்படாது. அதுபோலத்தான் என்னுடைய எழுத்தும் இருக்கும். இப்படித்தான் எழுதவேண்டும் இதுதான் நியதி என்று முட்டுக்கட்டைகளை எனக்கு நானே போட்டுக் கொள்வதை தவிர்க்கவே விரும்புகிறேன்.

உங்கள் வலைப்பூவில் வேங்கையின் பூங்கொடிக்கு பின்ஊட்டம் போடமுடியவிலை . வலைப்பூவில் சென்று கொமன்ஸ் பகுதியில் மாற்ரங்களை செய்யுங்கள் . இனி அது பற்ரி எனது கருத்து ..................................

நீண்ட காலத்திற்குப் பின்பு ஒரு நல்ல கவிதையினைப் படித்தேன் . ஒரு கவிஞருக்கு ஆறாக்கற்பனை மட்டும் இருந்தால் போதாது . மாறாக எதை ? எங்கு ? எப்படி ? தைக்கவேண்டும் என்ற வித்தை தெரிய வேண்டும் . அந்த வித்தையைக் கண்ணதாசனின் யேசுகாவியத்திற்குப் பிறகு உங்கள் வேங்கையின் பூங்கொடியில் கண்டேன் . இத்துடன் நிற்காது இன்னும் பலங்கூடிய வீச்சுகளைக் கொண்ட நல்ல கவிதைகளை நீங்கள் தரவண்டும் என்பது எனது ஆசை :) :) :) .

உங்கள் கருத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி கோமகன். காலம் கைகூடின் எதிர் காலத்தில் எழுத முயற்சிக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Quote:"ஆம் அவளுக்குப் பிடிக்காது. ஆனால் அவளுக்காக அந்நிலையிலிருந்து என்னால் விலகிக் கொள்ளமுடியாது.

தொட்டால் மைதிலியின் மைவிழிகள் கரையும். நான் விட்டால் என் வேகம் தொலையும். தீர்க்க முடியாத கணக்காக எனக்கும் அவளுக்கும் இடையில் இன்னும் நீடித்தது."

சகாரா உங்கள் கதையை மூன்று தரம் வாசித்துவிட்டேன், இப்பதான் உங்கள் கதையின் ஆழத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திச்சு, நன்றி பகிர்வுக்கு,

கிட்டத்தட்ட இதே மதிரி கதை, அவன் கனவு காண்கிறான் தன் பிள்ளையை கருவில் அழிக்கிற மாதிரி, மனைவிக்கு விருப்பமில்லை, கனவில் தன் மூத்த மகள் அவசர சிகிச்சை பிரவில், இவன் கனவில் பிதற்றுவரை கண்ட மனைவி தட்டி எழுப்பதான் தெரியும் தான் கண்டது கனவு என்று, சிசுவை கருவில் கலைப்பது என்பது மாக குற்றம் கொலைக்கு சமனானது,

கதைக்கேற்ற படம்

அப்பாடி ஒருவர் மூன்று முறை எனது இக்கதையை வாசித்து புரிந்திருக்கிறார்......

இந்த வரிதான் கோமகனை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதுபோல் இருக்கிறது. ஒருமுறை வாசிப்பில் உடனடியாக புரிபடாது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த வரிகளுக்கு உரிய பொருள் காணவேண்டும் என்றால் கதையின் கடைசிவரை வாசித்தால்தான் புரிபடும். நுனிப்புல் மேய்ந்தால் பொருள் அகப்படாது.

நன்றி உடையார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:(

வாத்தியார் எதற்காக இந்த சோகம் கதைக்காகவா? அல்லது பிறமொழிக்கலப்பிற்காகவா? நீங்கள் வாத்தியார் அல்லவா.... அதுதான் நீங்கள் எதற்காக வருத்தப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. :unsure:

அருமையான எழுத்துக்கள் சகாரா அக்கா.

எனக்கும் உடையார் மாதிரித்தான். முதலில் அந்த வசனங்களின்

அர்த்தம் புரியவில்லை. திறமையான எழுத்து உத்தி.

கோமகன் - ஜன்னல் எப்படி தமிழாகும். தமிழில் "ஜ" இல்லையே?

சாளரம் தமிழ் இல்லையா?

நன்றி ஈஸ்...

ஓ... உங்களையுமா?.... கடைசியில் அர்த்தம் புரிந்து கொண்டுவிட்டீர்கள்தானே... :)

நல்ல காலம் இந்தசிறுகதைக்கும் பொழிப்புரை எழுதச் சொல்லி ஒருத்தரும் கேட்கவில்லை.

கண்ணில் கண்ணீரை வரவைத்த கதை......... நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இந்த கதையின் மூலமாக ஒருவராவது தன் குழந்தைக்காக, குடும்பத்திற்காக புகைப்பிடித்தலை நிறுத்தினால் அது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி. நன்றி.

இனி எழுதி எழுதி ஒருவரையும் அழ வைக்கக்கூடாது என்று நினைத்தேன் ஆனால் கடைப்பிடிக்க முடியவில்லை. நன்றி தமிழினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை சிறுகதைக்கான தன்மைகளுடன் இசைத்து வாசிப்பைத் தூண்டும் எழுத்து நடையில் எழுதிய கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! புகலிடத்தில் சிறுகதைகளுக்குத்தான் மிகவும் பஞ்சம்.. அதனால பேசாம இந்தத் துறையிலேயே அதிக கவனத்தை செலுத்துங்க. :)

சோலியண்ணா, சரியா சொன்னீங்க. கவனத்தைச் செலுத்துவோம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். கிடைக்கக்கூடிய பொழுதுகளை வீணாக்கக்கூடாது என்று மனதில் தோன்றுகிறது. எங்கள் இருப்பிற்குப் பின்னால் நாங்கள் பேசப்படுவதைக்காட்டிலும் எங்கள் இறப்பிற்குப்பின்னால் எங்கள் இருப்புப்பற்றி பேசப்படவேண்டும். அதற்கு எந்தத்துறையிலாவது எதையாவது சாதிக்க வேண்டும். :rolleyes:

நமக்கு கிடைச்சது எழுதுகோல். அதன் வழியே கவனத்தைச் செலுத்தி அரசியலை அரைக்கப் போகிறேன்... (சும்மா) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரக்காவின் கவிதைகள் தான் படிச்சு இருக்கிறன்..உங்களின் சிறுகதை படிப்பது இது தான் முதல்..மிகவும் நன்றாக இருக்கிறது..அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதவேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

நன்றி யாயினி.

இனி நிறைய எழுதப் போகிறேன் யாயினி. அலுக்காமல் தொடர்ந்து வாசியுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

.

இனி நிறைய எழுதப் போகிறேன் யாயினி. அலுக்காமல் தொடர்ந்து வாசியுங்கள். :rolleyes:

நீங்களும் அலுக்காமல் எழுதுங்கோ நாங்களும் அலுக்காமல் வாசிப்போம்.......

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அலுக்காமல் எழுதுங்கோ நாங்களும் அலுக்காமல் வாசிப்போம்.......

:rolleyes:

நன்றி புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு..! :rolleyes:

நெடுக்ஸ் பரீட்சைக்குப் படிக்கிறார் போலை.. :unsure: ஆள் இந்தப்பக்கம் கொஞ்சம் தலையைக் காட்டினால் நல்லாயிருக்கும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா சொல்ல வந்த விடயமும் சொல்லிய விதமும் அழகு ஆனால்.......கருவிலிருக்கும் குழந்தைக்கு அருகில் இருப்பவர்கள் பிடிக்கும் புகையை விட கருத் தரித்திருப்பவர் தாயார் புகைப்பிடிப்பதாலேயே அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனைத்தான் ஆய்வுகளும் கூறுகின்றது. குழந்தை பிறந்த பின்னர் அதனருகில் யார் புகைப்பிடித்தாலும் கூடாதுததான். கதையில் அவள் புகைப்பிடிப்பதாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கலாச்சார மாயை உங்களை தடுத்திருக்கலாம். தொடருங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் கதையின் கருவும். மிகவும் நன்று....... சகாராவில் பிழைபிடிக்க எனக்கு அருகதை இல்லை. .

வோஸ்ரூம் = கழிவறை ,பேச்சுவழக்கில் வந்துவிட்டது போலும்.

பாராட்டுக்கள். மேலும் படிக்கும் ஆவலுடன். .............நிலாமதி

சகாரா அக்கா, உங்கள் கதையின் கருப் பொருளும், அதனைக் நகர்த்திச் சென்ற வடிவமும் அருமை, பாராட்டுகளாக ஒரு பச்சை மட்டுமே போட முடிந்தது!

சகாரா சொல்ல வந்த விடயமும் சொல்லிய விதமும் அழகு ஆனால்.......கருவிலிருக்கும் குழந்தைக்கு அருகில் இருப்பவர்கள் பிடிக்கும் புகையை விட கருத் தரித்திருப்பவர் தாயார் புகைப்பிடிப்பதாலேயே அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனைத்தான் ஆய்வுகளும் கூறுகின்றது. குழந்தை பிறந்த பின்னர் அதனருகில் யார் புகைப்பிடித்தாலும் கூடாதுததான். கதையில் அவள் புகைப்பிடிப்பதாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கலாச்சார மாயை உங்களை தடுத்திருக்கலாம். தொடருங்கள். நன்றி

அப்படி என்று முழுதாகச் சொல்ல முடியாது சாத்திரி!

வீட்டில் ஒருவர் புகைப் பிடித்தாலே போதும் அந்தப் புகையச் சுவாசிப்பதால் கர்ப்பிணிகளுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்து நேரிட பல காரணிகள் உள்ளது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் புகைப் பிடிக்காமல் அருகில் இருப்பவர் புகைப் பிடிப்பதால் கூட பல ஆபத்துக்கள் கர்ப்பிணிப் பெண்களால் எதிர் நோக்கப் படுகிறது, இதைப் பலர் அலட்சியப் படுத்துவது தவிர்க்க வேண்டிய ஒன்று. இல்லையேல் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.

Harm starts in the womb

Your unborn child is already at risk from passive smoking. If you're exposed to cigarette smoke while pregnant then there's an increased risk of:

  • miscarriage
  • ectopic pregnancy
  • premature birth
  • bleeding and placental problems
  • your child being born underweight, which in turn increases the risk of a variety of conditions, from infection to feeding problems
  • your baby having a small head circumference

http://www.bbc.co.uk...e_smoking.shtml

(அதோடு சகாரா அக்காவின் கதையில் கர்ப்பம் தரித்திருக்கும் மைதிலிக்கு ஆஸ்த்துமா இருப்பதாகவும் குறிப்பிடு இருக்கிறார், அதனால் குழந்தை தாயின் வயிற்றினுள் மரணித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளது என்றே நினைக்கிறன்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு..! :rolleyes:

நெடுக்ஸ் பரீட்சைக்குப் படிக்கிறார் போலை.. :unsure: ஆள் இந்தப்பக்கம் கொஞ்சம் தலையைக் காட்டினால் நல்லாயிருக்கும்..! :wub:

இசை,...... ஏற்கனவே பல்லி என்ற சொல்லை நிரூபிக்க பல்லியின் சகோதரத்தின் படத்தைப்போட்டு அந்த இனங்களுக்கு பல்லில்லை என்று சொன்னவர். நாங்களும் பல்லியின் படத்தில் அதன் வாயைப்பிளந்து காட்டினால்த்தான் நம்புவோம் என்று அழாப்பி ஆளை அமத்திப் போட்டம்..... :icon_mrgreen: இப்ப எதுக்கு தம்பியை இங்கு கூப்பிடுகிறீர்கள்? :huh:

நன்றி இசை..... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா சொல்ல வந்த விடயமும் சொல்லிய விதமும் அழகு ஆனால்.......கருவிலிருக்கும் குழந்தைக்கு அருகில் இருப்பவர்கள் பிடிக்கும் புகையை விட கருத் தரித்திருப்பவர் தாயார் புகைப்பிடிப்பதாலேயே அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. இதனைத்தான் ஆய்வுகளும் கூறுகின்றது. குழந்தை பிறந்த பின்னர் அதனருகில் யார் புகைப்பிடித்தாலும் கூடாதுததான். கதையில் அவள் புகைப்பிடிப்பதாக எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் கலாச்சார மாயை உங்களை தடுத்திருக்கலாம். தொடருங்கள். நன்றி

நன்றி சாத்திரியார் :rolleyes:

சாத்திரியார் புகைப்பிடிக்காத தாயாரின் கருவில் வளரும் குழந்தைக்கு நாளாந்தம் தாய் சுவாசிக்கும் காற்றில் மிக அருகாமையில் சிகரெட் புகை அதிகமாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை கண்டிப்பாக பாதிக்கப்பட்டே தீரும்.

நீங்கள் கூறியதை எழுதியிருந்தால் இன்னும் கதையின் கருவிற்கு உரமாக இருந்திருக்கும். ஆனால் எங்கள் சமூகத்தில் உள்ளவற்றைத்தான் சொல்ல முடியும். அப்படிப்பார்த்தால் அதிகமாக ஆண்கள்தான் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் விகிதாசாரத்தில் பெண்கள் குறைவு... அதிகமாக உள்ளதைத் தான் சொல்லலாம். எனது கதையின் கருவிற்கு உரம் கொடுப்பதற்காக அதீதமாக சொல்ல விரும்பவில்லை. உங்கள் திறனாய்வின் வழிகாட்டலை தேவைப்படுமிடத்தில் கண்டிப்பாகப் பயன்படுத்துவேன்.

கதையோடு கதையாக சாத்திரியார் நீங்கள் புகைத்தல் பழக்கம் உடையவரா? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையும் கதையின் கருவும். மிகவும் நன்று....... சகாராவில் பிழைபிடிக்க எனக்கு அருகதை இல்லை. .

வோஸ்ரூம் = கழிவறை ,பேச்சுவழக்கில் வந்துவிட்டது போலும்.

பாராட்டுக்கள். மேலும் படிக்கும் ஆவலுடன். .............நிலாமதி

நிலாமதியக்கா ஏன் அப்படி நினைக்கிறீர்கள். என்னுடைய கதையில் இருக்கும் பிழைகளை கண்டு பிடியுங்கள் சுட்டிக்காட்டுங்கள். அது உங்களையும் வளர்க்கும் என்னையும் வளர்க்கும். :icon_idea:

ஆம் கவிதைக்கு எப்போதுமே தமிழ் அழகு சிறுகதைகளுக்கு பேச்சுத்தமிழ் கலக்கும்போது கொஞ்சம் உயிர்ப்புக் கூடுவதாக மனதிற்குப்படுகிறது. :wub:

நிலாமதியக்கா உங்கள் பாராட்டுகளுக்கும், ஆவலுக்கும் மிகவும் நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா! ஒரு பெரியவிடயத்தை உங்கள் சிறுகதையில் அழகாக...... அர்த்தத்துடன் சொல்லியிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியார் :rolleyes:

சாத்திரியார் புகைப்பிடிக்காத தாயாரின் கருவில் வளரும் குழந்தைக்கு நாளாந்தம் தாய் சுவாசிக்கும் காற்றில் மிக அருகாமையில் சிகரெட் புகை அதிகமாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை கண்டிப்பாக பாதிக்கப்பட்டே தீரும்.

நீங்கள் கூறியதை எழுதியிருந்தால் இன்னும் கதையின் கருவிற்கு உரமாக இருந்திருக்கும். ஆனால் எங்கள் சமூகத்தில் உள்ளவற்றைத்தான் சொல்ல முடியும். அப்படிப்பார்த்தால் அதிகமாக ஆண்கள்தான் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள் விகிதாசாரத்தில் பெண்கள் குறைவு... அதிகமாக உள்ளதைத் தான் சொல்லலாம். எனது கதையின் கருவிற்கு உரம் கொடுப்பதற்காக அதீதமாக சொல்ல விரும்பவில்லை. உங்கள் திறனாய்வின் வழிகாட்டலை தேவைப்படுமிடத்தில் கண்டிப்பாகப் பயன்படுத்துவேன்.

கதையோடு கதையாக சாத்திரியார் நீங்கள் புகைத்தல் பழக்கம் உடையவரா? :icon_mrgreen:

புகைத்தல் பழக்கம் இருந்தது அதுவும் ஒரு 5 வருட காலம்தான் அதை நான் நிறுத்தி 12 ஆண்டுகளாகின்றது. ஆனால் மது அருந்தும் பழக்கம் உள்ளது அதுவும் வார இறுதி லீவு நாட்களில். வாகனம் ஓடவேண்டியிருந்தால் அதுவுமில்லை. . காரணம் மது போதையில் வாகனமோடி எனது நண்பனின் குடும்பம் ஒன்று நாசமாய் போயிவிட்டது அதற்கு பிறகு அதை வாகனம் ஓடும் பொழுது குடிப்பதில்லை. உங்கள் கதையை படித்த பின்னர் அதனை கதையாய் எழுதலாம் என யோசித்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.