இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,சுருட்டை விரியன்
கட்டுரை தகவல்
க.சுபகுணம்
பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன.
"தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.
"நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன்.
இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.
நாகப் பாம்பை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,நாகப் பாம்பு
நாகம் என்றவுடன் அது படமெடுத்து நிற்கும் என்பதைப் பலரும் நன்கு அறிந்திருப்போம்.
அச்சம் அல்லது கோபத்தின் வெளிப்பாடாக அவை அப்படி படமெடுத்து நிற்கும்போது, "முன்பகுதியில் இரண்டு பெரிய கரும்புள்ளிகள் இருக்கும். பின்பக்கத்தில் அதேபோன்ற கரும்புள்ளிகளுடன் வெந்நிறத்திலான 'V' போன்ற ஒரு வடிவமும் இருக்கும்," என்று சாம்சன் விவரித்தார்.
இது மட்டுமின்றி, "நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ்.
பெரும்பாலும், சாரைப் பாம்பினை நாகம் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. அப்படிக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அவற்றின் கண்களைப் பற்றி அறிந்துகொள்வது உதவும் என்கிறார் அவர்.
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன்
"சாரைப் பாம்பின் கண்ணில் இரண்டு நிறங்கள் இருக்கும். கருவிழி கருப்பாகவும், சுற்றியுள்ள பகுதி தங்க நிறத்திலும் இருக்கும். ஆனால், நாகத்தின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும்."
அதோடு, "நாகப் பாம்பின் தலை, கழுத்து என உடல் முழுக்க ஒரே தடிமனாக இருக்கும். ஆனால் சாரைப் பாம்புக்கு தலை பெரிதாகவும், கழுத்து சிறிதாகவும், உடல் தடிமனாகவும் இருக்கும். நிறமும் நாகத்தின் உடல் முழுக்க பழுப்பு நிறத்திலும், சாரை மஞ்சள், பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன. இதை வைத்து அவற்றை வேறுபடுத்திக் கொள்ள முடியும்," என்று விவரித்தார் சாம்சன்.
இதுபோக, ஓலைப் பாம்பு என்ற நஞ்சற்ற வகையும் நாகத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம், ஓலைப் பாம்பின் தலையிலும் வேல்கம்பு போன்ற வடிவம் இருக்கும் என்பதுதான். ஆனால், அந்த வடிவம் நாகத்தில் இருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் சாம்சன்.
கட்டு வரியன் பாம்பை அடையாளம் காண்பது எப்படி?
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,கட்டு வரியன்
கட்டு வரியனை பொறுத்தவரை, பொதுவாக பிற பாம்புகளின் நாக்கு கருமையாக இருக்கும்போது, இவற்றுக்கு மட்டும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.
பிற பாம்புகளைப் போலன்றி, இது சற்று தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்டது என்கிறார் சாம்சன். "கட்டு வரியனின் உடல் முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில், மினுமினுப்பாக இருக்கும்."
இந்த மினுமினுப்பு இவற்றுக்கே தனித்துவமானது எனக் கூறிய மனோஜ், "அவற்றின் உடலில் '=' போல இரட்டை இரட்டையாக வெந்நிறத்தில் மெல்லிய கோடுகள் இணையாக இருக்கும். அதுவும் தலையில் இருந்து கழுத்து வரைக்கும் இருக்காது, கழுத்தில் தொடங்கி வால் வரைக்கும் இருக்கும்," என்று விளக்கினார்.
சில நேரங்களில் தோலுரிக்கும் கட்டத்தில் பாம்பு இருந்தால் இந்தக் கோடுகள் தெளிவாகத் தெரியாது எனக் கூறிய சாம்சன், அத்தகைய சூழ்நிலையில் "இவற்றின் அடர் கருப்பு நிறத்தை வைத்து அடையாளம் காணலாம்" என்றார்.
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,நஞ்சில்லாத வெள்ளிக்கோல் வரையன், அதன் உடலிலுள்ள பட்டையான கோடுகளின் காரணமாகச் சில நேரங்களில் கட்டு வரியன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
பொதுவாக, வெள்ளிக்கோல் வரையன் போன்ற பாம்பினங்களுடன் மக்கள் இவற்றைக் குழப்பிக் கொள்வதாகக் கூறிய சாம்சன், "கட்டு வரியன் போலன்றி, இந்த நஞ்சில்லாத பாம்புகளுக்குத் தலையில் இருந்தே பட்டையான கோடுகள் தொடங்கிவிடும்" என்றார்.
அதேபோல, எண்ணெய்ப் பனையன் என்ற பாம்பு வகையுடனும் மக்கள் இதைக் குழப்பிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், எண்ணெய்ப் பனையன் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதும் உடலில் கோடுகள் இருப்பதும்தான். ஆனால், இந்த நஞ்சற்ற பாம்புக்கு கருப்பு நிறத்திலான கோடுகள்தான் இருக்கும்.
அதேபோல முனைவர் மனோஜின் கூற்றுப்படி, வெள்ளிக்கோல் வரையனின் உடல் உருண்டையாக இருக்கும். "ஆனால், கட்டு வரியனின் உடல் முக்கோண வடிவில், முதுகுப்பகுதி மேல்நோக்கிய வகையில் இருக்கும்."
அடர்த்தியான கருநீல நிறத்தில், மினுமினுப்பாக இருப்பது இவற்றை அடையாளம் காண்பதற்கான தனித்துவமான பண்புகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,கண்ணாடி விரியன்
பொதுவாக விரியன் வகைப் பாம்புகள் என எடுத்துக்கொண்டால், அவற்றின் தலைப் பகுதி முக்கோண வடிவத்திலும் கழுத்து சிறியதாக, தடிமன் குறைவாகவும் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.
கண்ணாடி விரியனை பொறுத்தவரை, தலை முக்கோண வடிவில் காணப்படும் என்கிறார் மனோஜ்.
அதோடு, "அதன் உடல் முழுக்க முதுகின் மேற்புறத்தில் கருப்பு நிற எல்லைகளைக் கொண்ட பாதாம் பருப்பு போன்ற நீள்வட்ட வடிவிலான வட்டங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போல நீண்டிருக்கும்," என்று அவர் விவரித்தார்.
இந்த நீள்வட்டங்களின் சங்கிலித் தொடர் தலை முதல் வால் வரைக்கும் ஒரே சீராக இருக்கும் எனவும், அதுவே பக்கவாட்டில் அதேபோன்ற நீள்வட்டங்கள் அளவில் சிறிதாக இருக்கும் எனவும் விளக்கினார் சாம்சன் கிருபாகரன்.
படக்குறிப்பு,யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்
மற்றுமொரு தனித்துவமான அம்சமாக முனைவர் மனோஜ், கண்ணாடி விரியனின் மூக்கு துவாரம் இருபுறமும் நன்கு பெரியதாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்.
முனைவர் மனோஜின் கூற்றுப்படி, அனைத்து கண்ணாடி விரியன்களுக்குமே இந்த வடிவம்தான் பொதுவாக இருக்கும் என்றாலும், மிக அரிதாக இவை எதுவுமே இல்லாமல் கோதுமை நிறத்தில் மட்டும் காணப்படுவதும் உண்டு. ஆனால், அத்தகைய கண்ணாடி விரியனை பார்ப்பது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைப் பார்த்துப் பல நேரங்களில் மலைப் பாம்பு என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தீங்கற்றது எனக் கருதி அணுகுவதால் பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறுகிறார் சாம்சன்.
"மலைப் பாம்பு போலவே, இதன் உடல் நன்கு தடிமனாக இருப்பதால் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்வது நடக்கிறது. ஆனால், மலைப்பாம்பின் உடலில் இருக்கும் வடிவங்கள் சீரற்றதாக இருக்கும்." என்றும் அவர் விவரித்தார்.
சுருட்டை விரியனை அடையாளம் காண்பது எப்படி?
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் (+) வடிவிலான குறியீடு இருக்கும்
சுருட்டை விரியன் வறண்ட பகுதிகளில் வாழக்கூடியது. கிராமப்புறங்களில் இவற்றால் பாம்புக்கடி அவ்வப்போது நிகழ்கிறது.
சுருட்டை விரியனின் தலை முதல் வால் வரைக்கும், "பக்கவாட்டில் இருபுறமும் ரம்பத்தின் கூர்முனை எப்படி வளைந்து வளைந்து இருக்குமோ அப்படி இருக்கும்" என்றார் மனோஜ்.
அதுவே அதன் முதுகின் மேற்புறம் பார்க்கையில் 'X' வடிவத்தில் கோடுகள் தென்படும் என்கிறார் சாம்சன்.
"அதுமட்டுமின்றி, சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் குறியீடு '+' போன்றதொரு வடிவம் இருக்கும். கண்களைப் பொருத்தவரை, சுருட்டை விரியனுக்கு பூனைக் கண்களைப் போல நீள்வட்ட வடிவில், ஒரு மெல்லிய கோடு போன்ற வடிவிலான கருவிழியுடன் காணப்படும்."
படக்குறிப்பு,சாம்சன் கிருபாகரன், பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்
பொதுவாக பாம்புகள் நேராக முன்னோக்கி ஊர்ந்து செல்பவை. ஆனால், சுருட்டை விரியனை பொருத்தவரை, பக்கவாட்டில் செல்லக்கூடியவை. அதாவது, நேராக ஊர்ந்து செல்லாமல், உடலை வளைத்து, பக்கவாட்டில் நகர்ந்து செல்பவை" என்று விவரித்தார் மனோஜ்.
தமிழ்நாட்டில் காணப்படும் பாம்புகளில் சுருட்டை விரியன் மட்டுமே இவ்வாறாக பக்கவாட்டில் செல்லக்கூடியது என்று விளக்கிய அவர், மிக மெதுவாக நகரும் நேரங்களில் மட்டும் அவை நேராகச் செல்லும் என்றும் கூறினார்.
இதேபோல, வறண்ட நிலப்பரப்புகளிலேயே வாழக்கூடிய பூனைக்கண் பாம்புடன் இதைக் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடப்பதாகக் கூறும் சாம்சன், சுருட்டை விரியன் அதிகபட்சம் ஒரு அடி வரைதான் வளரும் என்றும் உடல் சற்று தடிமனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN
படக்குறிப்பு,பூனைக்கண் பாம்பு
ஆனால், பூனைக்கண் பாம்பைப் பொருத்தவரை, ஒன்றரை அடி வரைக்கும்கூட வளரும் எனவும் உடல் ஒல்லியாக நீளமாக இருக்கும் என்றும் இரு பாம்புகள் இடையிலான வேறுபாட்டை சாம்சன் விளக்கினார்.
சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறியீடு இருப்பதைப் போலவே, பூனைக்கண் பாம்பின் தலையில் 'Y' வடிவக் குறியீடு காணப்படும்.
பாம்புக்கடி காயத்தை வைத்து எந்த பாம்பு என்று அடையாளம் காண முடியுமா?
ஒரு குறிப்பிட்ட அளவு வரைக்கும் பாம்புக்கடியால் ஏற்படும் காயத்தை வைத்து, கடித்தது நச்சுப் பாம்பாக இருக்கலாம் என்பதைக் கூற முடியும் என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என்கிறார் முனைவர் மனோஜ்.
அனைத்து நச்சுப் பாம்புகளுமே கடிக்கும்போது பதியும் நச்சுப் பற்களின் தடம் இரண்டாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் அவர்.
எனவே, "ஒரு பல் உடைந்திருக்கும் நேரத்தில் அதன் அருகிலேயே மூன்றாவதாகப் புதிய பல் முளைத்துக் கொண்டிருக்கலாம். அதனால் இரண்டு பல் தடங்களுக்குப் பதிலாக மூன்று பல் தடங்கள் பதிந்திருக்கலாம்."
அவரது கூற்றுப்படி, பாம்புகளுக்கு ஆயுள் முழுவதுமே பல் மீண்டும் வளரக்கூடியது. இதனால், "அவை கடித்த இடத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு பற்கள் கூடப் பதிந்திருக்கலாம். இல்லையெனில் ஒரேயொரு பல் கூடப் பதியலாம். சில நேரங்களில் ஒரு கீறல் மட்டுமே இருக்கலாம். நஞ்சு உடலுக்குள் செல்வதற்கு அதுவே போதுமானது."
அதோடு, "ஒரு சில பாம்புகளில், அதாவது, விரியன் வகைப் பாம்புகள் கடித்தால், கடித்த இடத்தில், வீக்கம், ரத்தக் கசிவு போன்ற வெளிப்புற அடையாளங்களே நன்கு தெரியும். அவற்றின் மூலம் கடித்தது நச்சுப் பாம்புதான் என்பதைக் கண்டறிய முடியும்" என்று விளக்கினார் மனோஜ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c8dyv9g1y78o
By
ஏராளன் ·