Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளி அம்மான் -கோமகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளி அம்மான்

-கோமகன்

இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூடி வெண்மையாக இருந்தது.நேர் எதிரே இரண்டு மாடிக்கோபுரங்களுக்கு இடையில் முழு நிலவு அப்பளமாக வானில் பரவியிருந்தது. சாதாரணமாக இந்தக் காட்சிகளில் நேரக்கணக்காக மயங்கி நின்று இருக்கின்றேன்.ஆனால் இன்று கிளி அண்ணையின் நினைவுகள் என் மனதை வலிக்கச்செய்தன.எனது கைகள் தன்னிச்சையாக சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தன.

0000000000000

ஏறத்தாழ இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு இதை விடக் கடுமையான குளிர் காலத்தில் தான் எனக்கு கிளி அண்ணையின் அறிமுகம் கிடைத்தது .அன்று சைபரில் இருந்து கீழே இறங்கி பத்துப் பாகையை பாதரசம் தொட்டுக்கொண்டிருந்தது.வரலாறு காணாத குளிர் என்றபடியால் அந்தக்குளிரில் எல்லோருமே அல்லாடினார்கள்.நான் வேலையை முடித்துக்கொண்டு வெளியில் வந்த பொழுது பனி பெய்துகொண்டிருந்தது.தரையில் சப்பாத்துகளை மூடி பனி கிடந்தது. நான் பாதாள ரெயில் நிலையத்தை அடைய முன்பே எனது கைகால்கள் குளிரால் குறண்டி இழுத்தன.குளிருக்கு கபே குடித்தால் சுப்பறாக இருக்கும் என்று நினைத்துகொண்டே அருகில் இருந்த கபே பாருக்குள் நான் நுழைய முயன்ற பொழுது,”தம்பி நீங்கள் தமிழோ ??”என்ற குரல் கேட்டு எனது கால்கள் நின்றன.குரல் வந்த திசையில் எனது பார்வை போன பொழுது, அங்கே ஒரு கட்டுமஸ்தான நெடிய உருவம் நின்றிருந்தது.”ஓம் வாங்கோ .உள்ளுக்கை போய் கதைப்பம்” என்றவாறே உள்ளே நுழைந்தேன்.அந்த உருவம் என்னருகே தயங்கியவாறே நின்றது.இருவருக்கும் கபே சொல்லிவிட்டு, “சொல்லுங்கோ அண்ணை.என்ன விசயம்??” என்றேன்.” தம்பி என்ரை பேர் கிளி.இப்ப எனக்கு கொஞ்ச நாளாய் இருக்க இடம் இல்லை. வெளியிலைதான் ஒரு பார்க்கிலை படுத்து எழும்பிறன்.இண்டைக்கு செரியான குளிராய் கிடக்கு.நான் உங்களோடை வந்து இருக்கலாமோ”? என்றார்.

முன் பின் தெரியாதவர் ஒருவர் என்னிடம் இப்படி கேட்டது எனக்கு திகைப்பையே ஏற்படுத்தியது.ஆனாலும் நான் அதை வெளிக்காடாமல் அவரயிட்டு விசாரிக்கத் தொடங்கினேன்.”தம்பி என்னை பற்றி பெரிசாய் ஒண்டும் சொல்ல இல்லை.நீங்கள் ஓம் எண்டு சொன்னால் நான் உங்களை என்ரை வாழ்க்கையிலை மறக்க மாட்டன்”என்றார் கிளி அண்ணை.அவருடைய தோற்றமும், கதைக்கும் முறையும் அவர் பொய் சொல்பவராகத் தெரியவில்லை.நாங்கள் எல்லோருமே ஆரம்பத்தில் வரும் பொழுது கையில் ஷொப்பிங் பாக்குடன் வந்தவர்கள் தான்,அதை நான் என்றுமே மறந்தது இல்லை.குளிரில் ஒரே நாட்டை சேர்ந்தவன் ஒருவன் விறைக்க, நான் அவரைக் காய்வெட்ட எனது இளகிய மனதுக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக,”சரி அண்ணை.என்ரை றூமிலை நாலு பேர் இருக்கிறம்.சின்ன அறை. நீங்கள் இருக்கிறது எண்டால் நிலத்திலைதான் படுக்கவேணும்.உங்களுக்கு பிரச்னை இல்லையெண்டால் சொல்லுங்கோ” என்றேன்.தான் உடனடியாகவே வருவதாக சொன்னார்.

நாங்கள் இருவரும் பாதாள ரயில் நிலையத்தில் இறங்கினோம்.எனது பெயரில் அறை இருப்பதால் அறை நண்பர்கள் பெரிதாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றே நம்பினேன்.கிளி அண்ணை இறுக்கமாகவேSort Story - Kili Amman (2) இருந்தார்.நாலு கேள்வி கேட்டால் ஒரு பதில் வந்தது. நாங்கள் அறைக்குப் போன பொழுது இரவு பன்னிரெண்டு மணியாகி விட்டிருந்தது.அறை நண்பர்களான ரகு,குணா,சுகு வேலையால் வந்து ரெஸ்லிங் கொப்பி போட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.குசினியில் சமைத்து இருந்தது .அனேகமாக ரகுதான் சமைத்து இருப்பான்.ஆட்டு இறைச்சி கறி வாசம் மூக்கைத் துளைத்தது.நான் அவர்களுக்கு கிளி அண்ணையை அறிமுகப்படுத்தினேன்.சுகு என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்.நாங்கள் சமைத்ததில் கிளி அண்ணைக்கும் பகிர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்தோம்.நான் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே இருந்த கட்டிலில் இருந்த சுகு,” உது ஆர் மச்சான் “?? என்று என்னை நோண்டினான்.சுகுவுக்கு எல்லாம் விலாவாரியாக சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அவனுக்கு தலை வெடித்து விடும்.நான் அவனுக்கு விடிய சொல்வதாக சொல்லி விட்டுப் படுத்து விட்டேன்.

மறுநாள் காலையில் “புஸ்… புஸ் ” என்று சத்தம் எனது நித்திரையை குலைத்தது.நான் கட்டிலில் இருந்து இறங்க மனமில்லாது,கட்டிலின் கரைக்கு உருண்டு வந்து கீழே எட்டிப்பார்த்தேன்.கிளி அண்ணை தான் படுத்திருந்த படுக்கையை மடித்து வைத்து விட்டு “புஷ் அப்” எடுத்துக் கொண்டிருந்தார்.சுகு அவருக்கு அருகே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.கிளி அண்ணையின் கட்டான உடல் கீழும் மேலுமாக நடனமாடியது.நான் நித்திரை குலைந்த எரிச்சலில் “என்னண்ணை விடியக்காத்தாலை ??” என்றேன். “தம்பி உமக்குத் தெரியாது.விடியப்பறம் எக்ஸ்சயிஸ் செய்யிறது உடம்புக்கு நல்லது.எழும்பும்.நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்”.என்று குசினிக்குள் போனார் கிளி அண்ணை.என்னிலும் பார்க்க வயது மூத்தவரை என்னால் எதிர்த்துக் கதைக்க முடியாமல் இருந்தது. நான் ,எனக்குள் புறுபுறுத்தவாறு படுக்கையை மடித்து வைத்தேன். படுக்கையை மடித்து வைக்காத சுகு, கிளியண்ணையிடம் செப்பல் பேச்சு வாங்கினான். நானும் சுகுவும் வேலைக்கு வெளிக்கிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் இருவருக்கும் கிளி அண்ணை தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்து தந்தார் ……..

000000000

அறையில் வந்த உடனேயே எதுவும் பாராது தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் கிளி அண்ணையை எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு நிம்மதியாக இருந்தது.ஆனாலும் சுகு உடனடியாக அவருடன் சேராது முரண்டு பிடித்தான்.சுகுவின் சோம்பல்த்தனத்தை கிளி அண்ணை கண்டித்ததால் அவன் அவர்மேல் கடுப்பாக இருந்தான்.

நான் அன்று மாலை வேலையால் வரும்பொழுது கிளி அண்ணை போடுவதற்கு நான்கைந்து சேர்ட்டுக்களும் கால்சட்டையும் வாங்கி வந்தேன்.முதலில் கடுமையாக வாங்க மறுத்த அவர்,எனது அழுங்குப்பிடியினால் அவற்றை வாங்கிக் கொண்டார்.எதிலும் யாரிடமும் கடமைப்படாத அவரின் குணம் என்னை வெகுவாகவே கவர்ந்தது .அவர் அறைக்கு வந்ததின் பின்பு எல்லோரும் ரெஸ்லிங் பார்ப்பது நின்றது.”வெறும் நடிப்புக்காக யாரோ சண்டை பிடிப்பதை ஏன் நீங்கள் காசுகளை குடுத்து பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள்?” என்பது அவரின் வாதம்.அவரது விளக்கம் ரகு ,சுகு, குணாவைக் கவர்ந்தாலும்,”உப்புடியே எல்லாத்துக்கும் கதை சொன்னால் நாங்கள் பொழுது போக்கிறதுக்கு என்ன செய்யிறது?” என்று கிளி அண்ணையைப் பார்த்து இடக்காகவே சுகு கேட்டான். அவனது கேள்விக்கு கிளி அண்ணை கோபப்படாது “உங்களுக்கு பொழுது தானே போகேலை?நான் உங்களுக்கு செஸ் விளையாட சொல்லித்தாறன் “என்று அதை செயலிலும் காட்டினார்.செஸ் விளையாடுவதில் கிளி அண்ணையை யாருமே வெல்ல முடியவில்லை.எல்லோரையும் உள்ளே வரவிட்டு பெட்டி அடித்து செக் வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்.அவர் செஸ் விளையாடும் பொழுது கைகளும் கண்களும் செஸ் போர்டை ஒருவிதமான குறுகுறுப்புடன் பார்த்தபடியே இருக்கும்.எப்பொழுது செக் வைப்பார் என்று யாருக்குமே தெரியாது.எனக்கு முதலில் இந்த விளையாட்டில் ஆர்வம் இல்லாது போனாலும் காலப்போக்கில் அவரின் விளையாட்டு ரசிகனானேன்.அவர் விளையாடும் பொழுது சுகு வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பான்.ஒருநாள் அவன் அடக்க மாட்டாதவனாய் “அண்ணை நீங்கள் இயக்கத்திலை இருந்தியளோ ?ஏனென்டால் அங்கை இருந்தவைதான் உப்பிடி கட்டுசெட்டாய் இருப்பினம்” என்றான். அவர் ஓம் என்றும் சொல்லாது, இல்லை என்றும் சொல்லாது சிரித்தபடியே, ” உமக்கு எப்பவும் பகிடிதான் சுகு” என்றார்.என்னால் அவரை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.இருக்க இடம் இல்லாமல் நடு றோட்டில் குளிருக்குள் விறைத்துக் கொண்டு நின்ற ஒரு சக தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றேன் என்ற எல்லைக் கோட்டிலேயே நான் நின்று கொண்டேன்.

0000000

அமைதியாக சென்று கொண்டிருந்த கிளி அண்ணையின் வாழ்வில் தாயகத்தில் இருந்தும்,இங்கிருந்தும் இரு புயல்கள் ஒரேநேரத்தில் தாக்கின.தாயகத்தில் பலாலியில் நடந்த ஒரு குண்டு வீச்சில் அவரது அப்பா ,அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பலியான செய்தி அவருக்கு வந்தது.இங்கோ அவருடைய அகதி அந்தஸ்துக் கோரிக்கையை உள்துறை அமைச்சு நிராகரித்து இருந்தது .கிளி அண்ணை இடிந்தே போய் விட்டார்.நானும் குணாவும் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தோம்.அவரால் அந்த இரு சம்பவங்களிலும் இருந்து மீளமுடியவில்லை.நாளடைவில் கிளி அண்ணையின் போக்கில் மெதுமெதுவாக மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.முதலில் பியரில் ஆரம்பித்த அவரின் தண்ணி அடிக்கும் பழக்கம்,இப்பொழுது விஸ்கி வரைக்கும் முன்னேறி இருந்தது .எவ்வளவோ மனக்கட்டுப்பாடாகவும், மற்றயவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்த கிளி அண்ணையின் போக்கு எனக்கு கவலையையே தந்தது.அவரின் திடீர் பழக்கங்கள் சுகுவை எரிச்சல் ஊட்டின.அவன் அடிக்கடி காரணமில்லாது அவருடன் கொழுவ ஆரம்பித்தான்.சில வேலைகளில் கிளி அண்ணை இரவில் நித்திரை கொள்ளும் பொழுது இருந்தாற்போல் கடும் தூசணத்தில் , “அடியடா…… அடியடா……. அந்தா…. அந்தா…. அந்த பத்தையுக்கை நிக்கிறான். இந்தா இங்கை பின்னாலை வாறான். விடாதை……… செவிள் அடி குடு. அடியடா….. அடியடா ……. ” என்று கத்துவார்.அப்பொழுது அவருக்குப் பக்கத்தில் படுத்து இருக்கும் சுகு பயந்து போய் அவரை தட்டி எழுப்பி ” என்னண்ணை செய்யிது? ” என்று கேட்டு குடிக்கத் தண்ணி கொடுப்பான் .அந்த நேரம் கிளி அண்ணை வியர்த்து விறு விறுத்து அலங்க மலங்க முழித்தபடி இருப்பார். கிளி அண்ணை கனவில் கத்துவது தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒருநாள், நான் மாலை வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பிய பொழுது கிளி அண்ணையை வீட்டில் காணவில்லை. அவருடைய உடுப்புகள் வைக்கும் இடம் வெறுமையாக இருந்தது. எனது உதவிக்கு நன்றி சொல்லி தன்னை யாருமே தேடவேண்டாம் என்ற கடிதமே எனக்கு மிஞ்சியிருந்தது.சுகு தன்னால்தான் கிளி அண்ணை கோபித்துக்கொண்டு போய் விட்டார் என்று மறுகினான். நாங்கள் எல்லோருமே அவரைத் தேடினோம்.அது அவ்வளவு சுலபமாக எங்களுக்கு இருக்கவில்லை.ஏனெனில் அவர் தன்னையிட்டு பெரிதாக எதுவுமே எங்களுக்கு சொல்லியிருக்கவில்லை.நாங்கள் அவரைத் தேடிக்கொண்டே இருந்தோம்.இறுதியில் அவர் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. கிளி அண்ணை சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தலைமறைவானதால் எங்கள் அறையில் இருந்த சந்தோசம் பறிபோய் விட்டது.

0000000

காலம் தன் கடமையை செவ்வனே செய்து மூன்று வருடங்களை முன்னகர்த்தியது. குணாவுக்கும் சுகுவுக்கும், ரகுவுக்கும் “கலியாணம்” என்ற வசந்தம் வீசியது.அவர்கள் “பச்சிலர் வாழ்க்கையை விட்டு குடும்ப வாழ்வுக்குள் நுழைந்து கொண்டனர்.ஆனாலும் இடைக்கிடை அவர்கள் குடும்பத்துடன் வந்து போனவர்கள் பின்பு படிப்படியாக தங்கள் தொடர்புகளை குறைக்கத் தொடங்கினார்கள். நான் தனித்து விடப்பட்டேன். மறந்திருந்த கிளி அண்ணையின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன. நான் தான் அவரை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேனோ என்றே இப்பொழுது அதிகமாகக் கவலைப்பட்டேன்.

ஒருநாள் மாலை வேலை முடிந்து லாச்சப்பலுக்கு சாமான்கள் வாங்கப்போனேன்.அப்பொழுது லாச்சப்பலில் ஒரிரண்டு கடைகளும் ,எனக்கு தெரிந்த இரண்டு நண்பர்களது உணவகங்களுமே இருந்தன. ஆனால் லாச்சப்பல் பின்னேரங்களில் எப்பொழுதுமே எங்கள் சனங்களால் திமிறும்.வட்டிக்கு குடுப்பவர்களும், சீட்டு கட்டுபவர்களும், உணவகங்களில் வேலை செய்வோரின் இடை நேரப் பொழுது போக்க வந்தவர்களும் தான் இங்கு கூடுதலாக கூடுவார்கள்.அன்றும் அப்படித்தான் சனம் அலை மோதியது.நான் சனங்களின் ஊடாக முன்னேறினேன்.தூரத்தே நடு றோட்டில் ஒரு உருவம் லெப்ட். ரைட்… லெப்ட் … ரைட் … என்று கைகளை விசுக்கியவாறு மார்ச் பண்ணியவாறு வெறும் காலுடன் நடந்து வந்தது.இடையிடையே புழுத்த தூசணத்தில் அடியடா…….. அடியடா ……..அங்கை நிக்கிறான். பின்னாலை நிக்கிறான். செப்பல் அடி குடடா ……….. என்றவாறே கையை துவக்கு மாதிரி வைத்துக்கொண்டு டப் டப் என்று வாயால் அபினயித்தபடி ஓடிக்கொண்டிருந்தது.

எனக்கு இந்த வசனத்தை கேட்டதும் மண்டையில் பொறி தட்டியது. “கிளி அண்ணையாய் இருக்குமோ” என்று நினைத்தவாறே சனங்களை விலத்தியவாறே அந்த உருவத்துக்கு கிட்ட போனேன். எனக்கு உலகமே இருண்டது .அது கிளி அண்ணையேதான். நான் கிட்டப் போய் கிளி அண்ணையை பிடித்து உலுக்கினேன்.அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை.புத்தி பேதலித்தவராகவே அவர் காணப்பட்டார். நான் அவரை பிடித்து இழுத்து றோட்டுக்கரைக்கு கூட்டிவந்தேன். அவரின் முகம் கன நாட்களாக ஷேவ் எடுக்காமல் தாடி புதர் போல் மண்டி இருந்தது.ரவுசரரின் ஒரு பக்கம் முழங்காலுக்கு கீழே இல்லாமல் இருந்தது.கால்களில் சப்பாத்து இல்லை.அவரின் உடலில் இருந்து புளித்த வைனின் வாசம் மூக்கைத் துளைத்தது.கண்கள் இரண்டும் உள்ளுக்குப் போய் பூஞ்சையாக இருந்தது.எனக்கு அவரின் கோலத்தைப் பார்க்க அழுகை அழுகையாக வந்தது.” இதென்னண்ணை கோலம் ?? ஏன் என்னை விட்டுப் போனியள்? வாங்கோ வீட்டை போவம் “என்று அவரை அழைத்தேன். அவர் கையை மேலே காட்டினார். அவரின் பிடிவாதம் எனக்கு தெரிந்ததுதான். “எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்க காசு தா “என்று வாயை கோணியவாறே கேட்டார்.எனக்கு அவர் இருந்த நிலையில் காசு கொடுக்க மனம் வரவில்லை.கொடுத்தால் மீண்டும் “விஸ்க்கி ” அடித்து விட்டு இருப்பார் என்றே நினைத்தேன் .” சரி வாங்கோ சாப்பிடுவோம் ” என்றவாறே எனது நண்பனின் உணவகத்தில் நுழைந்தேன்.” வா மச்சான். என்ன வைன் கோஸ்ரியளோடை தொடுசல் வைச்சிருக்கிறாய்”? என்று ஒருமாதிரியாக வரவேற்றான் நண்பன். “மச்சான் இவர் முந்தி என்ரை அறையிலை இருந்தவர்.இருந்தால் போலை காணாமல் போட்டார். எவ்வளவுகாலமாய் இவர் இங்கை இருக்கிறார் எண்டு உனக்கு தெரியுமே?”என்றேன்.”அதை ஏன் கேக்கிறாய். உந்தாளாலை இங்கை நெடுக பிரச்சனைதான் .ஊத்தை குடி.மண்டையும் தட்டி போட்டுது. றோட்டிலை நிண்டு மார்ச் பாஸ்ற் செய்து கொண்டு போறவாற சனத்தை தூசணத்தால பேசிக்கொண்டு இருக்கும்.ஒருத்தரும் அண்டிறேல .உந்தாள் திருந்தாத கேஸ் மச்சான். நான் பாவம் பாத்து இடைக்கிடை சாப்பாடு குடுப்பன். நீ றோட்டிலை போற ஓணானை தூக்கி கழுத்துக்கை விடுறாய் ” என்றான்.எனக்கு நண்பனது பேச்சு கோபத்தை வரவழைத்தது.” மச்சான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்காதை. இவர் எனக்கு தெரிஞ்சவர். ஒவ்வரு நாளும் இவருக்கு சாப்பாடு குடு.உனக்கு நான் காசு தாறன்” என்றேன் .” இல்லை மச்சான் என்ரை வியாபாரமேல்லோ கேட்டு போடும்? என்ற நண்பனை இடை மறித்து,” மச்சான் எங்கடை முதல் சீவியத்தை ஒருக்கால் யோசிச்சு பார்.இவருக்கு ஒரு சாப்பாடு குடுக்கிறதால உன்ரை வருமானம் ஒண்டும் கெட்டு போகாது.எனக்காக செய்யடாப்பா “என்றேன். “சரி மச்சான் நீ எனக்கு எவ்வளவு செய்தனி உனக்காக செயிறன்” என்றான் நண்பன்.நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல கிளி அண்ணை தனது உடம்பை சொறிந்து கொண்டிருந்தார்.நான் ஓடர் பண்ணிய மரக்கறி சாப்பாடு வந்தது.கிளி அண்ணை ஒருவித கெலிப்புடன் சோற்றை அள்ளி அள்ளி வாயினுள் அடைந்தார்.அதில் அவரின் பசி அப்பட்டமாகவே தெரிந்தது.

2a

கிளி அண்ணை எப்பொழுதுமே நிதானமாக உள்ளங்கையில் சாப்பாடு படாமல் சாப்பிடுபவர்.அவர் சாப்பிட்டதன் பின்பு கோப்பை துடைத்த மாதிரி இருக்கும்.அவ்வளவு தூரத்துக்கு சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்தவர்.இன்று அவர் சாப்பிடுவதைப் பார்க்க எனக்கு விசரே பிடித்தது .அவர் வாயிலும் உடலிலும் சோற்றுப்பருக்கைகள் பரவி இருந்தன.நான் பொறுமையாக ரிஸ்யூ பேப்பரால் அவற்றைத் துடைத்து விட்டேன்.நான் இறுதியாக அவரை வீட்டிற்கு வரும்படி மன்றாடினேன். அவரோ வேறு உலகில் இருந்தார்.கையை மேலே மேலே தூக்கிக் காட்டிக்கொண்டிருந்தார்.நான் மனம் கேட் காமல் அவர் பொக்கற்றினுள் நானூறு பிராங்குகளை வைத்து விட்டுக் கனத்த மனத்துடன் அறைக்குத் திரும்பினேன்.

காலம் மூன்று மாதங்களை விழுங்கி எப்பமிட்டவாறே என்னைப் பார்த்து இழித்தது .காலத்துக்கும் எனது வேலைக்கும் சண்டையே நடந்து நான் அதனுள் அமிழ்ந்து போனேன்.கிளி அண்ணையின் நினைவுகளும் அதனுள் அமிழ்ந்துபோனது.குளிர்காலம் மொட்டவிழ்க்கின்ற மாதத்தின் தொடக்கப்பகுதி ஒன்றின் ஒருநாள் இரவு வேலை முடிந்து அலுத்துக்களைத்து அறைக்குத் திரும்பினேன். தொடர் வேலை உடம்பு இறைச்சியாக நொந்தது.சமைப்பதை நினைக்க கடுப்படித்தது.எனது கைத்தொலைபேசி சிணுங்கல் வேறு எரிசலூட்டியது.வேண்டா வெறுப்பாக அழைப்பை எடுத்தேன். தொலைபேசியில் குணா பரபரத்தான்,” மச்சான் விசையம் கேள்விப்பட்டியோ?? எங்களோடை இருந்த கிளி அண்ணை ரெயிலுக்கை விழுந்து செத்துப்போனாராடா. இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன.

என்னால் கிளி அண்ணையின் அவலச்சாவை தாங்க முடியவில்லை.கிளி அண்ணையின் உடலத்தை பொறுப்பெடுக்க வைத்தியசாலை நோக்கி விரைந்தேன்.வைத்தியசாலையில் குணா எனக்காகக் காத்திருந்தான் .சுகுவும், ரகுவும் ,வந்திருந்தார்கள்.சுகு அழுது கொண்டு நின்றான்.நாங்களே செத்தவீட்டை செய்வதாக முடிவெடுத்தோம்.செத்தவீட்டுக்கு ஓர் மலர்ச்சாலையை பதிவு செய்தோம்.எங்கடை சனங்களுக்காகக் களமாடி தன் வாழ்வையே தொலைத்த கிளி அம்மானுடைய செத்த வீட்டுக்கு எந்தச் சனமுமே வரவில்லை,நோட்டிஸ் ஒட்டியவர்கள் உட்பட. நான் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு மின்சார அடுப்பின் பொத்தானை தட்ட, கிளி அண்ணை என்ற கிளி அம்மானின் உடலம் மெதுவாக மின்சார அடுப்பினுள் நகர ஆரம்பித்தது.

000000

http://eathuvarai.net/?p=4401

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பாணியில மஜிகல் ரியலிசம் இல்லாத உள்குத்துத் தொடங்கி இருக்கிறேர் கோ! மார்க்கெற்றிங் ஸ்ட்ரடஜி! :D

கதையும் கதை எழுதிய விதமும் நன்றாக இருக்கின்றது. கோமகனின் எழுத்து நடையும் மாறியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அருமயான கதை. கோமகனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி பாணியில மஜிகல் ரியலிசம் இல்லாத உள்குத்துத் தொடங்கி இருக்கிறேர் கோ! மார்க்கெற்றிங் ஸ்ட்ரடஜி! :D

 

ஜஸ்டின் கதையை கதையாகப் பார்ப்பதைத் தவிர்த்து  ஒரு தனிமனிதர் மேல் தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவதையே உங்கள் கருத்துக் காட்டி நிற்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது , பகிர்வுக்கு நன்றி கிருபன்...!

வாழ்த்துக்கள் ....எழுத எழுத எழுத்து மெருகேறும்  என்பதற்கு நீங்கள் சாட்சி..வீறு நடை தொடர்ந்து போட

ட்டும் எழுத்துக்களுடன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் கதையை கதையாகப் பார்ப்பதைத் தவிர்த்து  ஒரு தனிமனிதர் மேல் தனிப்பட்ட எதிர்ப்பைக் காட்டுவதையே உங்கள் கருத்துக் காட்டி நிற்கிறது.

 

 

கதை பற்றித் தான் கருத்து வைத்தேன்! தனி நபர் தாக்குதல் எண்டால் "ரிப்போர்ட்டை" அழுத்தித் தெரிவிக்கலாமே? ஏன் தயக்கம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது... கோமகன்!

 

கருத்து முரண்பாடுகளைத் தனிநபர் முரண்பாடுகளாக நினைக்காமல் யாழில் இந்தக் கதை உங்களால் நேரடியாகப் பகிரப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்! 

 

இன்னும் காலம் கடந்துவிடவில்லை!

 

வாழ்த்துக்கள் கோமகன்!

 

இணைப்புக்கு நன்றிகள் கிருபன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

----

கருத்து முரண்பாடுகளைத் தனிநபர் முரண்பாடுகளாக நினைக்காமல் யாழில் இந்தக் கதை உங்களால் நேரடியாகப் பகிரப்பட்டிருந்தால், இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்! 

-------

 

கோமகன் எங்களுடன், கோவித்துக் கொண்டு சென்ற படியால்....

அவரால், இக் கதையை... நேரடியாக பதிய முடியாது புங்கையூரான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்....

"இயக்கம் வேறை “மேஜர் கிளி அம்மான்” க்கு வீரவணக்கம் எண்டு லாச்சப்பலிலை நோட்டிஸ் அடிச்சு ஓட்டியிருக்கிறாங்கள் .நான் ஆஸ்பத்திரிக்குப் போறன். நீ அங்கை வா. என்று குணா சொல்லி முடிக்க எனக்கு உலகம் இருண்டது.கிளி அண்ணை இயக்கத்திலை பெரிய ஆளாய் இருந்தவரா?? அப்படியெண்டால் ஏன் இயக்கம் அவர் கெட்டு நொந்த நேரம் அவரை பொறுப்படுக்கவில்லை?? இப்ப என்ன மசிருக்கு நோட்டிஸ் அடிச்சு ஓட்டுறாங்கள்?? என்று கேள்விகள் என்மனதை குடைந்தன."  இது எனக்கு விளங்கவில்லை.முன்பு இயக்கம் இருக்கும்போது இப்படி சம்பவங்கள் நடந்ததா? 

சும்மா வாசிக்கலாம் ஒழிய பெரிதாக சொல்ல எதுவும் இல்லை கோ .

 

இப்படி சம்பவங்கள் நடந்ததாக நான் அறியவும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

 90 களுக்கு முன்பாகவே தாயக மக்களுக்காகக் களமாடிய  கிளி அம்மான்

கடைசியில் கோமகனின் கையால் சீதை மூட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டது மிகவும் அவலம் தான்

இணைப்பிற்கு நன்றி  கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அரிப்புக்கு ஏற்றவாறு இப்போது எவரும் எதுவும் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அரிப்புக்கு ஏற்றவாறு இப்போது எவரும் எதுவும் எழுதலாம்.

 

மிகச் சரியான கருத்து நந்தன்.

பச்சை முடிந்து விட்டது. நாளை நிச்சயம் போட்டு விடுகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
கதை கற்பனையாக எழுதப்பட்டுள்ளது. வளமையான கோப்பி சிகரெட் குளிர்காலம் கோமகனின் மனிதாபிமானம் என  தனது இலக்கிய ஆழுமையை வெளிப்படுத்தியுள்ளது. 
 
ஒருவரின் படைப்பு விமர்சனத்துக்கு உள்ளானால் அதுவே தனது வெற்றியென பல எழுத்துலகச் செம்மல்கள் பெருமைப்படுவதுண்டு. மக்களால் ஏற்கப்படாத உண்மைக்கு பறம்பான எழுத்துக்களையும் மக்கள் விமர்சனத்துக்கு உட்படுத்துவார்கள் என்பதனையும் எழுத்தாளர் கோமகன் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
 
கோ கற்பனை செய்து உருவாக்கிய கிளியம்மான் சோபா அம்மானை ஏனோ சுட்டுப்போட்டமாதிரி இருக்கு.  கோவின் கற்பனையான கிளியம்மான் இனிமேல் பிரான்சில் உருவாகுவார். அந்த செம்மலுக்கு கோவின் கையால் சிதை மூட்டப்பட்டு தியாகம் கௌரவிக்கப்படும். 
 
மேஜர் பட்டமில்லாமல் கோவின் கருணையால் மார்ஸல் பட்டத்தi கொடுத்து கௌரவித்தால் பிரான்சில் அலையப்போகும் கிளியம்மான்(''''') பெருமைகொள்ளலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் யாழ்களத்துக்கு வாங்கோ பதிவிடுங்கோ கதைக்கு நன்றிகள்......இனத்துக்காக போராடிய பொன்சேக்காவுக்கும் இந்தநிலைதான் மதத்திற்காக போராடிய சதாம்,பின்லாடன்,கடாபி இன்னும் பலர்.......உண்டு....எவன் ஒருவனுக்கு சமுதாயத்தை சுழிக்க தெரியுமோ அவன் தப்பி பிழைப்பான்.....

கோவின் இக்கதைகள் குறித்து என் கருத்து  சாந்தியக்காவின் கருத்தினைப் போன்றதே. அத்தோடு,

இக்கதை குறித்தான 'ரொம்பவும் காரசாரமான' விமர்சனத்தினை கோமகனின் காதுகுளிர   தொலைபேசி வாயிலாக கொடுத்த திருப்தி எனக்குள்ளது. :lol::wub::D 

 

அதுதவிர எனக்கு ஒரு சந்தேகம்.... ,

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

நிர்வாகத்த்திடம் அவரா போனார..? அல்லது தடை செய்தீங்களா??? என்று டவுட்டு கேட்டு ஒரு நாலைஞ்சு  தனிமடல் போட்டு கேட்டுட்டன்... இந்த நிமிஷம் வரைக்கும் பதிலில்லை. நித்திரை போல.... ! :lol:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

கோ தன்னால் தானே வெளியேறினார் கவிதை ? யார் இங்கே துரத்தினார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

கோவின் இக்கதைகள் குறித்து என் கருத்து  சாந்தியக்காவின் கருத்தினைப் போன்றதே. அத்தோடு,

இக்கதை குறித்தான 'ரொம்பவும் காரசாரமான' விமர்சனத்தினை கோமகனின் காதுகுளிர   தொலைபேசி வாயிலாக கொடுத்த திருப்தி எனக்குள்ளது. :lol::wub::D

 

அதுதவிர எனக்கு ஒரு சந்தேகம்.... ,

கோ... வா! கோ... போ! என்று சொல்லுறவையளுக்கு கோவை யாழைவிட்டு துரத்திய கதை தெரியாதோ ???

 

நிர்வாகத்த்திடம் அவரா போனார..? அல்லது தடை செய்தீங்களா??? என்று டவுட்டு கேட்டு ஒரு நாலைஞ்சு  தனிமடல் போட்டு கேட்டுட்டன்... இந்த நிமிஷம் வரைக்கும் பதிலில்லை. நித்திரை போல.... ! :lol:

 

கவிதை....

கோமகனுக்கு.... நிர்வாகம், அவர்  யாழ்களத்தில் தொடர்ந்து இணைந்திருக்க விருப்பமா? இல்லையா?

என்று...... மூன்று தெரிவுகளை, கொடுத்திருந்தது நல்ல ஞாபகம்.

 

அதில்... ஒரு தெரிவு தானாகவே விலகிச் செல்வது.

அதனைத்தான்... அவர், விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

 

அதனை... விடுத்து, மற்றவர்கள் மேல், பழி சுமத்துவது நியாயம் அல்ல.

இதனைப் பற்றி.... அக்கு வேறாக, ஆணி வேறாக விவாதிக்க வேண்டும் என்றால்......

புது திரியை.... ஆரம்பியுங்கள். இங்கு வேண்டாம்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.