Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் கவிஞர் இன்குலாப் மரணம்

Featured Replies

மக்கள் கவிஞர் இன்குலாப் மரணம்

400_12106.jpg

'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் இன்று உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.

http://www.vikatan.com/news/tamilnadu/73898-legendary-tamil-poet-inqulab-passes-away.art

  • தொடங்கியவர்

இன்குலாப் : ஒரு கவிதை பட்டறையின் அஸ்தமனம்...!

 

இன்குலாப்

மனுஷங்கடா... நாங்க மனுஷங்கடா...

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது

சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெய் ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க

எரியும் போது.... எவன் மசுரப் புடுங்கப் போனீங்க...?

வெண்மணித் துயரம் பற்றிய ஆத்திரமும் ஆவேசமும் தெறிக்கும் இந்தப் பாடல் எழுபதுகளிலிருந்துஇன்றுவரை எல்லா முற்போக்கு மேடைகளிலும் பாடப்பட்டு வருகிறது. காற்று மண்டலத்தின் செவிப்பறைகிழித்து, நரம்புகளை அதிர வைத்து, முறுக்கேற்றி, ரத்தத்தைச் சூடாக்கிப், பாதிக்கப்பட்டவனைக் களத்தில்குதிக்கவைக்கும் இந்தப் போர்ப் பரணியை இயற்றியவர் இன்குலாப். இன்குலாப் என்றாலே புரட்சி என்றுதான் அர்த்தம்.

13_15383.jpg‘எனது நிறத்திலும், மணத்திலும் நான் பூத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகும் வரை பூப்பேன்’ என்று பிரகடனப் படுத்தியவர் அப்படியே வாழ்ந்தார். இளைஞர்

விழிகளின் எரியும் சுடர்களையும் போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் கவிதையாய் மொழிபெயர்த்தவர். ‘நியாயச் சூட்டால் சிவந்த கண்கள், உரிமை கேட்டுத் துடிக்கும் உதடுகள், கொடுமைகளுக்கு எதிராக உயரும் கைகள் இவையே எனது பேனாவை இயக்கும் சக்திகள்’ என்றவர்.

விடுதலையில்லாமல் வாழ்க்கை சுவைக்காது. போராட்டம் இல்லாமல் விடுதலை வாய்க்காது என்பதிலே தெளிவாக இருந்தவர் இன்குலாப். கவிதைகளை வாத்தியக் கருவிகளுக்கு வண்ணங்களாகப் பயன்படுத்தாமல் போராளிகளின் ஆயுதங்களாக மாற்றித் தந்தவர். சமூகக் கொடுமைகள் மீது வினா தொடுக்கவும் விசாரணை செய்யவும் போலிகளின் அறிமுகத்தையும் பொய்யர்களின் நரிமுகத்தையும் தோலுரித்துக்காட்டி அம்பலப்படுத்தவும் தன் கவிதைகளைப் பயன்படுத்தியவர்.

‘ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது’ என்பார் மாசேதுங். இவரது ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உழைக்கும் வர்க்கத்தின் வியர்வை இருக்கிறது. கனவு இருக்கிறது. சமூகத்தின் மனசாட்சி இருக்கிறது. பாட்டாளி மக்களை அரவணைப்பது, ஆதிக்க சக்திகளை நிர்மூலமாக்குவது என்ற இலட்சியத்துடன் எழுதத் துவங்கியவர். அவருடைய முதற்கவிதையிலிருந்து இறுதி எழுத்துவரை எதிர்க்குரல்களாகவே ஒலிக்கின்றன. இப்படி ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தடம் மாறாமல் தடுமாறாமல் ஒரே அலைவரிசையில் எழுதியவர்கள் யாரேனும் உள்ளனரா?

inkulab1_18060.jpg

 

துவக்கத்தில் தமக்கு ஒரு இடதுசாரி அடையாளம் வேண்டுமென்பதற்காக எல்லோருமே புரட்சிகரமாக எழுதுவார்கள். ஆனால் காலப்போக்கில் சின்னத்திரை ஆசை, வண்ணத்திரை ஆசை, ஊடக விளம்பரம், புகழ், பணம், பட்டம் இவற்றிற்காகத் திசை மாறிவிடுவார்கள். ஆனால் இவர் இறுதிமூச்சுவரை வைராக்கியமுடன் வாழ்ந்தவர். எதிர்ப்புக் குரலை அழகியலோடு பதிவு செய்தவர். அவரது அரசியல் கருத்துகளின் எதிரொலியாகவே அவரது படைப்புகள் அனைத்தும் விளங்குகின்றன.

இராமநாதபுரம் கீழக்கரையில் 5.4.1944 அன்று பிறந்தவர். இயற்பெயர் சாகுல் அமீது. தாயார் ஆயிசா அம்மாள். தந்தை சீனி முகமது. 12_15021.jpgகீழக்கரை அரசினர் அமீதிய உயர்னிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்புவரை படித்தவர். புகுமுக வகுப்பு சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் நினைபுக் க்ல்லூரியிலும் பட்ட வகுப்பு மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பயின்றவர். இசைப்பாடல்கள், மரபுக்கவிதைகள்,புதுக்கவிதைகள் அடங்கிய 7 கவிதைத் தொகுதிகளும், 7 கட்டுரைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு நாடகமும் (ஔவை) தந்துள்ளார். முன்னாள் அமைச்சர் கா. காளிமுத்து இவரது பள்ளித் தோழர்.

’நாய் நாக்கைப்போல நயந்து குலையாமல் காளி நாக்கிலிருந்து கனல் எடுத்த சொல்வேண்டும். பொன்துகளுக்குள்ளே புரண்டு கிடக்காமல் மண்துகளை மின்துகளாய் மாற்றுகிற சொல்வேண்டும்’ எனக் கவிஞர் நவகவி வேண்டுவார். அத்தகைய சொற்கள் இன்குலாப்புக்கு வாய்த்திருக்கின்றன.

‘சிறகு முளைத்து விதையொன்று அலையும்... முளைக்க ஒருபிடி மண்தேடி’ என்று ஈழப் போராளிகளுக்காக அவர் எழுதிய கவிதை மறக்கமுடியாதது.

நஸ்ருல் இஸ்லாமின் தமிழக வடிவம். மெய்யான புரட்சிக் கவி. நிலப்பிரபுகளுக்கு எதிராக, பெருமுதலாளிகளுக்கு எதிராக அவர் உருவாக்கிய கவிதாயுதங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்திலாவது அவற்றைப் பயன்படுத்துவார்களா?

http://www.vikatan.com/news/tamilnadu/73941-emotional-tribute-to-writer-inkulab.art

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு வழங்கப்படட
கலைமாமணி படத்தினை நிராகரித்தவர், வாழும் வரைக்கும் வீட்டுக் கொடுக்காது வாழ்ந்தவர்

கவிஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலி

  • தொடங்கியவர்

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர்

ரவிக்குமார் துரை எழுத்தாளர், கவிஞர்
 

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப்.

கவிஞர் இன்குலாப்
 ’அரசியல் கவிதைகளை அழகியலோடு’ சொன்ன கவிஞர் இன்குலாப்

திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1965 ல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்ட மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுத் தனது கருத்தியல் பிரச்சாரத்துக்கு உவப்பான கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப்போயினர். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காமல் மௌனம் காத்தனர். ஒருசிலர் அந்த சம்பவத்தால் மார்க்சியத்தை நோக்கித் திரும்பினர். அத்தகைய சிலரில் ஒருவராக இருந்தவர் இன்குலாப்.

'இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது காலனியமும் நிலப்பிரத்துவமும் கலந்து உருவானது. இங்கே ஒரு அதிகார மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமெனில் அது பாராளுமன்ற அரசியலால் மட்டும் சாத்தியமாகாது' என்ற புரிதலோடு கிராமப் புறங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளிடையே அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை இன்குலாப் ஆதரித்தார்.

1970 களின் முற்பகுதியில் உருவெடுத்த வானம்பாடி கவிதை இயக்கத்தில் ஒருவராகத் துவக்கத்தில் அறியப்பட்ட இன்குலாப் மிகக் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டார். ஆனால் ,

" இதயம் குமுறும் நீக்ரோ - கையில்

ஏந்தும் கறுப்புத் துப்பாக்கியால்

ஆஞ்சலா டேவிஸ் புகைகின்றாள் - வெள்ளை

ஆதிக்க முகத்தில் உமிழ்கின்றாள்"

என அவரது 'வெள்ளை இருட்டு ' தொகுப்பில் இடம்பெற்ற துவக்க காலக் கவிதைகளில் வானம்பாடி இயக்கத்தின் தடம் பதிந்தே இருந்தது.

விடுபட்ட பிரச்சனைகளை எழுதியவர்

திராவிட இயக்கத்தால் உந்தப்பட்டவர் என்றாலும் அந்த இயக்கத்தின் கவனத்திலிருந்து விடுபட்டுப்போன பெண் விடுதலை, தலித் பிரச்சனை முதலானவை குறித்து ஆரம்பகாலம் தொட்டே கவிதைகளை எழுதிவந்தவர் இன்குலாப். அவரது அந்தக் கருத்தியல் சார்புதான் 'கண்மணி ராஜம்' ஸ்ரீ ராஜராஜேச்சுவரம்' முதலான கவிதைகளை அவர் எழுதக் காரணமாக அமைந்தது.

'கண்மணி ராஜம்' கவிதை பாடநூல் ஒன்றிலிருந்து நீக்கப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அதுபோலவே ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தபோது அதை விமர்சித்து இன்குலாப் எழுதிய ’ராஜராஜேச்சுவரம்’ கவிதையும் போராட்டங்களுக்குத் தூண்டுகோலானது. அக்காலங்களில் திமுக ஆட்சியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இன்குலாப் அறியப்பட்டார்.

ஈழப் பிரச்சனையும் இன்குலாப்பும்

1980 களின் முற்பகுதியில் ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. 'கறுப்பு ஜூலை' என ஈழத் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் 1983 ஆம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொதித்தெழச் செய்தன.

அந்த நேரத்தில் சிங்களப் பேரினவாத வன்முறையைக் கண்டித்த தமிழகத்து மரபான இடதுசாரிக் கட்சிகள் அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிவதாக ஈழத் தமிழரிடையே முகிழ்த்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க மறுத்தன.

அதனால் தமிழ்த் தேசியத்துக்கு இடதுசாரிகள் எதிரானவர்கள் என்பதுபோன்ற கருத்து பரவியது.

அந்த அவப்பெயரை மாற்றும் விதமாக தேசிய சுய நிர்ணய உரிமை குறித்த மார்க்சிய லெனினிய கருத்தாக்கங்களை முன்வைத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆதரவான நிலைபாட்டை எடுத்த இடதுசாரிகள் மிகச்சிலரில் இன்குலாப்பும் ஒருவர்.

இட ஒதுக்கீடும் இன்குலாப்பும்

ஈழப் பிரச்சனைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டு இடதுசாரிகளின் கருத்தியலை சோதிப்பதாக 'மண்டல் பரிந்துரை அமலாக்கம்' அமைந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என வலதுசாரி சக்திகள் பெரும் கலவரங்களில் இறங்கின. அந்த நேரத்திலும்கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே மைய நீரோட்ட இடதுசாரிகள் மேற்கொண்டனர்.

ஆனால் மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக்கொண்ட இன்குலாப் முதலான சில இடதுசாரி அறிவுஜீவிகள்தான் மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்பட்டத்தை ஆதரித்துக் களமிறங்கினர்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கப் பற்றாளர்களும் இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு நிற்பதற்கு வழிவகுத்த அபூர்வமான தருணம் அது. அந்தப் பிணைப்பு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் வேரூன்ற இடம் தராமல் இன்றளவும் தடுத்துக்கொண்டிருப்பது அந்தப் பிணைப்புதான்.

இன்குலாப் செவ்வியல் இலக்கியம் முதல் நவீனத் தமிழ் இலக்கியம்வரை ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.

ஆனால் தமிழுக்கு உரிமை கொண்டாடிய புலவர் மரபைச் சேர்ந்தவர்களைப்போல மொழியின் வழிபாட்டாளாரக இல்லாமல் தமிழ் மொழியையும், இலக்கிய மரபுகளையும், பண்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிற விமர்சன குணம் அவரிடம் இருந்தது.

1980 களின் பிற்பகுதியில் ஈழத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் கவிதைகளை அழகியலோடு எழுத முடியும் என அவை உணர்த்தின.

அதற்கு முன்னதாகவே வானம்பாடிக் கவிஞர்களின் 'ரொமாண்ட்டிக்' பாணியிலிருந்து விடுபட்டு அரசியல் கவிதைகளை அழகியலோடு சொல்ல முற்பட்டவர் இன்குலாப்.

மத அடையாளம் தவிர்த்த பகுத்தறிவாளர்

அது மட்டுமின்றி ஒரு படைப்பாளி அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் போராளியாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

இஸ்லாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் மத அடையாளத்தைத் தவிர்த்து ஒரு பகுத்தறிவாளராகவே வாழ்ந்தவர். அதனால்தான் ,

" சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளி தோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!"

என்று அவரால் பாட முடிந்தது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பென்ணுரிமை, தலித் பிரச்சனை - ஆகிய இரணடையும் தொடர்ந்து முக்கியத்துவம் தந்து பேசிவந்தவர் இன்குலாப். அவர் எழுதி கே.ஏ.குணசேகரன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட 'மனுசங்கடா' என்ற பாடல் இப்போது தலித்துகளின் புரட்சி கீதமாக போற்றப்படுகிறது. அவரால் எழுதப்பட்டு மங்கை அவர்களால் மேடையேற்றப்பட்ட ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் பெண்ணியப் பிரச்சனையை மிகவும் நுட்பமாகப் பேசுபவை.

மரபான இடதுசாரிகளால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலைபாட்டை மேற்கொண்டிருந்தவர் அவர். தமிழ்த் தேசியவாதிகளில் ஒருவராக அடையாளம் காணப்படக்கூடிய அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியவர். ஆனால் இப்போது அடிப்படைவாதமாக சுருக்கப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை. அவர் எழுதிய ' என் பெயர் மருதாயி ' என்ற கவிதையைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

"அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!

உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த

காலகாலமாய் நானும் நடக்கிறேன்

கற்புத் தோன்றிய அன்றைக்கே

நானும் தோன்றிவிட்டேன் -

தாய்மொழி - தமிழ்

பெயர் - மருதாயி

தொழில் - பரத்தை"

என்று முடியும் அக்கவிதையைப் பண்பாட்டுக் காவலர்களால் எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?.

தமிழ்நாட்டில் அரசவைக் கவிஞர்கள் இருக்கிறார்கள், தன் முன்னேற்றக் கவிஞர்கள் இருக்கிறார்கள், இலக்கியமே எமது குறி என்று அரசியல் வாடைபடாத புனிதக் கவிஞர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே அரசாங்கத்தால் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் இன்குலாப் எந்தவொரு அரசு அங்கீகாரத்தையும் பெறவில்லை.

" வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை"

அரசு அங்கீகரிக்கும் என பாரதியை நோக்கி எழுதுவதுபோல ஒரு கவிதையில் இன்குலாப் எழுதினார். அரசு அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதன் பொருள் அவர் பிணமாக வாழவில்லை என்பதுதான். அந்த மகத்தான மக்கள் கலைஞனுக்கு என் அஞ்சலி

(* கட்டுரையாளர் கவிஞர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்)

http://www.bbc.com/tamil/arts-and-culture-38174561

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für கவிஞர் இன்குலாப்

 

ஈழத் தமிழரை நேசித்த...  கவிஞர்  இன்குலாப் அவர்களின் மறைவுக்கு,  ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலிகள்.

கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்....!

 முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி எனப்பாடிய கவிஞர் இன்குலாப் காலமானார்!

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி எனப்பாடியவர்  தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும்  மக்கள் கவிஞர் என சிறப்பிக்கப்படுபவருமான கவிஞர் இன்குலாப் இன்று காலமானார்.

தமிழகத்தின் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட இன்குலாப் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

எஸ். கே. எஸ். சாகுல் அமீது என்னும் இயற்பெயர் கொண்ட இன்குலாப் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தவர். பாடசாலைப் படிப்பைக் கீழக்கரையில் முடித்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்தார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்

முதலில் மார்க்சிய கம்யூனிஸ இயக்க ஆதரவாளரான அவர், பிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார்.

தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதினார். ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு,  கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி, அவ்வை மற்றும் மணிமேகலை ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட மொத்த கவிதைகளின் தொகுப்பு , ‘ஒவ்வொரு புல்லையும்’ என்னும் பெயரில் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்தது.

மார்க்சிய ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலையம் வெளியிட்டுள்ளார். இவரது ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா’ என்னும் புகழ் பெற்ற பாட்டு இன்று வரை எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது.

சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளாராக இருந்த போதிலும் பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்வு இன்குலாப்பை மார்க்சியம் நோக்கி போகச் செய்தது.

மார்க்சிய கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று. கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ‘மார்க்சு முதல் மாசேதுங் வரை’ என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.

மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது என்று சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கவிஞர் இன்குலாப் எழுதிய ஈழம் குறித்த கவிதை

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி:

நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை

வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?

ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?

எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?

கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!

உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்மௌன மொழிகளில்!;

– – – – –

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இவை
விடை வேண்டும் கேள்விகள்

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்

விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….

கவிஞர் இன்குலாப்

http://thuliyam.com/?p=50082

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்குக் காணிக்கையாகக் கண்ணீர்பூக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலிகள்

அவர் எழுதிய கவிதை தொகுப்பு 1993ம் ஆண்டு லண்டனில் வேண்டினேன்

அதிலிருந்து ஒரு கவிதை, இது பாடல் ஆகவும் வெளி வந்தது 

 

15203352_1307175952655563_2799435939650323162_n.jpg?oh=d11bcc7a4d88097e7856df0c29a1269f&oe=58BC6935

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பற்ற கவிஞனுக்கு...எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அஞ்சலிகள்.

 
  • கருத்துக்கள உறவுகள்

Kavignar_Ingulab.jpgbilder kostenlos hochladen

Kavignar_Ingulabb.jpgbilder upload

 

விடுதலைப் பேரொளிக்காக் கவிஞரவர்கள் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

CymochaWQAEyjyq.jpg

"முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி"

-பாவலர் இன்குலாப்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.