Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகள்

(குறுங்கதை)

 

girl_on_fire_by_marinshe-d7cq851.jpg

 

 

 

 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி  நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த  எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட  யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து  கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்கும் என்ற எண்ணமே ஏற்பட மறுத்தது.

            அம்மா, அப்பாவின் காதல் திருமணம் எவ்வளவு பெரிய பிரளயத்தை உருவாக்கி களையப்படாத சோகமாக இன்றளவும்…..பாவம் அம்மா காதலை மறுத்த பெற்றோரை விட்டு அப்பாவை நம்பி வீட்டை விட்டு வெளியேறியபோது கனவில் கூட தனக்கு இப்படிப்பட்ட சாபம் வந்து சேரும் என்று நினைத்திருக்க மாட்டாள். அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு.

ஒரு புறம் அழுகை ஒப்பாரி, மறுபுறம்திருமண நாதஸ்வரம் காதலுக்குக் கிடைத்த பரிசு

ஏற்கமுடியாத பெற்றவள் பிணமானாள்.

முதல் அடி எடுத்து வைத்த திருமண வாழ்வு அன்னையின் பெருஞ்சாபம் சூழ… அடுத்தடுத்து ,

பெற்றவளின் கடைசிப்பயணத்தில் கூட ஒற்றைப்பிள்ளைக்கு முகங்காட்ட மறுத்து துரத்திய உறவுகளுக்கு முன்னால்…… இன்று பெருமிதத்தோடு அவள் தலை நிமிர்வாக நடந்தாள். அம்மா அப்பாவின் காதல் வாழ்வின் சாட்சியும் பொக்கிசமும் நான் மட்டுமே. உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு பெற்றவள் சாபம் முறியடித்து வெற்றிக் கனி பறிக்கும் சமயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் அவள்……

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.  அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்

Edited by வல்வை சகாறா

உண்மை; கற்பனை; உண்மையும் கற்பனையும் கலந்த கதை??

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகளின் ஆதங்கம் தீர்ந்து விட்டது. அவள் ஏற்றிவைத்த சிலுவையை சுமக்கப்போகும் தன்  மகளின் ஏக்கத்தை தீர்த்து வைக்க யார் வருவார்?

  • கருத்துக்கள உறவுகள்

மனதினுள்ளே  வலி இருக்கும் அது தெரியாது அது போல் இருக்கிறது இந்த சிறு கதை 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி ரொம்ப ரொம்ப குக்கிராமம் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2018 at 11:45 AM, கலைஞன் said:

உண்மை; கற்பனை; உண்மையும் கற்பனையும் கலந்த கதை??

மூன்று தலைமுறைக் கதையை இக்குட்டிக்கதைக்குள் பதுக்கி வைத்தேன்... உண்மை கற்பனை, கற்பனை உண்மை கற்பனையும் உண்மையும்..ஐயா கலைஞரே பதில் சொல்லத் தெரியவில்லை

confused-mom.jpg

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2018 at 5:54 PM, Kavallur Kanmani said:

அம்மாச்சி மகளின் ஆதங்கம் தீர்ந்து விட்டது. அவள் ஏற்றிவைத்த சிலுவையை சுமக்கப்போகும் தன்  மகளின் ஏக்கத்தை தீர்த்து வைக்க யார் வருவார்?

அம்மா என்பவள் மகளுக்கு அம்மாச்சி மகளாகவே தெரிந்தாள் என்பதுதானே கதை... அதனால் சிலுவையை அவள் தைரியமாகச் சுமப்பாள் என்று கொள்வோம் தோழி

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

On 2/10/2018 at 9:11 AM, வல்வை சகாறா said:

அம்மாச்சி மகள்

(குறுங்கதை)

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மனதினுள்ளே  வலி இருக்கும் அது தெரியாது அது போல் இருக்கிறது இந்த சிறு கதை 

சில வரிகளுக்குள் ஒரு பெருங்கதை ஒளிந்திருக்கிறது தனிக்காட்டுராஜா சட்டென்று கண்டு பிடிப்பது கடினம்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

அம்மாச்சி ரொம்ப ரொம்ப குக்கிராமம் போல.

ஈழப்பிரியன் அண்ணா ஐம்பது வருடங்களுக்கு முந்திய தகவல் கதையாக..... இப்போது இப்படியெல்லாம் கிடையாது.

5 minutes ago, நிழலி said:

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

அம்மாச்சி என்றால் அம்மம்மா அல்லது தாய்வழிப்பாட்டி என்று கொள்க.

அப்பாச்சி என்றால் அப்பம்மா அல்லது தந்தை வழிப்பாட்டி

இது சில ஊர்களில் மட்டுமே பாவிக்கப்படும் சொல் சரியாக புரியவேண்டும் என்றால் அம்மம்மா மகள் என்று வாசித்துப்பாருங்கள் கதை இலகுவாகப் புரியும்

  • கருத்துக்கள உறவுகள்

'"உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு.."

கருத்துக்களை வாசித்த பின் தான் கதை புரிந்தது . நன்றி 

அம்மாச்சி மகள்- வெளிப்படுத்த முடியாத ஒரு கனதியான உணர்வு. 

இந்த கதை மிக சின்னதாக உள்ளதுபோல் தோன்றுகின்றது. சற்று நீண்டிருக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

கதை குறுங்கதை என்றாலும் அம்மாச்சி தனது மகளின் திருமணத்திற்கு காட்டிய எதிர்ப்புக்கான காரணத்தை கோடிட்டு காட்டியிருக்கலாம். அதே போல் அம்மாச்சி மகளின் மகளின் திருமணத்திற்கான எதிர்ப்புக்கான காரணத்தையும் காணவில்லை. காதல் திருமணங்களுக்கு தலைமுறை தலைமுறையாக எதிரானவர்கள் பெற்றோர் என்ற அடிநாதம் கதையில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

 

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

வெட்டுக்கிளி இது ஒரு காலாவதியான கதை. புலம் பெயர்ந்த வாழ்வில் இக்கதை சாத்தியமற்றது. அம்மாச்சியின் முரட்டுப்பிடிவாதத்தால் பெருஞ்சாபத்தை தனதாக்கியவள் அதை ஜெயிக்க நினைத்தாளேயன்றி அதையும் அம்மாச்சி வழியில் ஜெயித்ததுதான் அம்மாச்சி மகளின் சிறப்பு. அம்மாச்சியின் பேத்திதான் பாவம் மனதில் தோன்றிய பட்டாம்பூச்சியை அம்மாச்சி மகள் மீதான அதீத பாசத்தால்  திருமண அக்கினியில் இரையாக்கி விட்டாள் என்று எழுதியுள்ளேன்tw_cry:

10 hours ago, நிலாமதி said:

'"உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில்  இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு.."

கருத்துக்களை வாசித்த பின் தான் கதை புரிந்தது . நன்றி 

உண்மைதான் நிலாமதியக்கா இந்தக் கதையை சட்டெனப் புரிதல் கடினம். ஒற்றை வரிகளுக்குள் பெரும் பெரும் விடயங்கள் அடங்கிப் போனதால் ஓர் வாசிப்பில் கதையின் கருவை கண்டுகொள்ளமுடியாது. ஒரு வாசிப்பில் ஏற்படும் கதை பற்றிய கருத்து மறு வாசிப்பில் நிச்சயம் மாறுபடும். நன்றி நிலாமதியக்கா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2018 at 11:56 PM, சண்டமாருதன் said:

அம்மாச்சி மகள்- வெளிப்படுத்த முடியாத ஒரு கனதியான உணர்வு. 

இந்த கதை மிக சின்னதாக உள்ளதுபோல் தோன்றுகின்றது. சற்று நீண்டிருக்கலாம் ...

உண்மைதான் சண்டமாருதன் கதையை நீட்டி எழுதி இருக்கலாம்  என்ன செய்ய இப்போதெல்லாம் எழுதுவதென்றால் பஞ்சி பிடித்து விட்டது.

On 2/13/2018 at 2:39 AM, கிருபன் said:

கதை குறுங்கதை என்றாலும் அம்மாச்சி தனது மகளின் திருமணத்திற்கு காட்டிய எதிர்ப்புக்கான காரணத்தை கோடிட்டு காட்டியிருக்கலாம். அதே போல் அம்மாச்சி மகளின் மகளின் திருமணத்திற்கான எதிர்ப்புக்கான காரணத்தையும் காணவில்லை. காதல் திருமணங்களுக்கு தலைமுறை தலைமுறையாக எதிரானவர்கள் பெற்றோர் என்ற அடிநாதம் கதையில் உள்ளது.

அந்தக்காலத்தில் காதல் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தை போல நினைத்த சனமும் உண்டு. சாதி மதம் என்பது ஒருபக்கம் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் காதலுக்கு முட்டுக்கட்டைகள் ஆகிவிடுவதுண்டு. இன்றைய காலத்தில் நம் பிள்ளைகள் காதலித்து தம் துணைகளைத் தேடிக்கொள்ளமாட்டார்களா என்று பெற்றோர் அங்கலாய்க்கிற நிலைக்கு மிக வேகமாக நகர்ந்து விட்டோம்  இருப்பினும் சில சாபக்கேடுகள் பெற்றோரோடு இணைந்து வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதாயினியின் கதையை....அது பதியப் பட்டே அன்றே...வாசித்துவிட்டேன் எனினும்...கருத்தை உடனேயே பகிர இயலவில்லை!

அருமையான எழுத்து நடையில்....இடைக்கிடை...கவிதை...தன்னையறியாமலே தன்னைப் புகுத்திக் கொள்வது...கதையின் ஓட்டத்தைத் தொய்ந்து விடாதவாறு கொண்டு செல்கின்றது! குறிப்பாகப் பின்வரும் வரிகளை வாசித்த போது...மனது நீண்ட நேரம் சஞ்சலப் படுவதைத் தவிர்க்க முடியவில்லை!

அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு.

இப்போதெல்லாம்.....வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் உள்ளதால்.....அம்மாச்சி மகளின் துணிவையும்...மனத் திடத்தையும் ...ஒரு சாதனையாக மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது!

காதல் என்பது தெய்வீகமானது என்று ஒரு காலத்தில் திடமாக நம்பியவன் நான்! எனினும்..இப்போதெல்லாம்...காதல் என்பதில் ஒரு தெய்வீகம் இருப்பதாக நினைக்க முடியவில்லை! வெறும் மனித உணர்வுகள்...தங்களுடன்...இசைந்து போகக் கூடிய..உணர்வுள்ள இன்னுமொரு மனிதத்துடன்...ஒத்துப் போவது தான் காதல் என நினைக்கிறேன்! கவர்ச்சி...கல்வி...பணம்...இரக்கம்...போன்ற பல காரணங்களினால்..இது ஏற்படலாம்!

எனது காதல்....எனது தாயைப் பலி வாங்கும் ..எனில்....நிச்சயமாக எனது காதலை...நான்  துறந்திருப்பேன் என்றே நினைக்கிறேன்!

ஏனோ...நடந்து போகும் வழியை விடவும்....அடையப் போகும் இலக்குத் தான் ...இபோதெல்லாம்...பெரிதாகத் தெரிகின்றது!

இதைத் தான்....கவுடில்யா..என்பவர் சொல்லியிருக்கிறார்! அதையே தான்....சிங்களமும்..இந்தியாவும்..முள்ளி வாய்க்காலில் செய்து முடித்தன!

இடையில்...நடந்த அர்ப்பணிப்புகள்...தியாகங்கள்...உயிர் இழப்புகள்....தர்ம சிந்தனை..அனைத்துமே மறக்கப்பட்டு விட்டன!

இறுதி முடிவு மட்டும்....தமிழர் போராட்டை...வேரோடு அழிப்பது...மட்டுமே...இலக்காக இருந்தது!

இது போலத் தான்....அம்மாச்சியின் மகளின் ... பிடிவாதமும்..எனக்குத் தெரிகின்றது!

எனது கருத்து...தவறானதாகவும் இருக்கக் கூடும்! எனினும்...காலம்...என்னைக் கரைத்து விட்டது போல உள்ளது!

கதைக்குப் பாராட்டுக்கள்...வல்வை!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/02/2018 at 6:22 AM, நிழலி said:

ஏனோ தெரியவில்லை, எனக்கு கதை சரியாக புரியவில்லை. அம்மாச்சி மகள் என்றால் என்ன அர்த்தம்?

....அப்படி என்னில் அம்மா மகளின் காதலை நிராகரித்து விட்டு மகளுக்கு சம்மதம் இல்லாத ஒருவரை மணமுடித்து விட்டாரா? அத்துடன் கதை நிகழும் களம் புலமா புலம்பெயர்ந்த இடமா?

ஐயோ ரொம்ப வெகிளி பிள்ளையாக இருக்கிறார் நிழலி...

ஒன்றும் புரியாமல் தான் நான் சைலன்டா எஸ் ஆயிட்டேன்...

தெரியவில்லை புரியவில்லை என்றால் நம்ம கெத்து என்னாவது... 

15 hours ago, வல்வை சகாறா said:

. இன்றைய காலத்தில் நம் பிள்ளைகள் காதலித்து தம் துணைகளைத் தேடிக்கொள்ளமாட்டார்களா என்று பெற்றோர் அங்கலாய்க்கிற நிலைக்கு மிக வேகமாக நகர்ந்து விட்டோம்  இருப்பினும் சில சாபக்கேடுகள் பெற்றோரோடு இணைந்து வருவதையும் தவிர்க்க முடிவதில்லை.

என் நெருங்கிய உறவு அவர். கனடாவில் இருக்கினம்.  அவரது ஒரு மகன் முதலில் ஓரு சீன பெண்ணை காதலித்தார். அம்மாக்காரி "..ச்சீய் போயும் போயும் சப்பையை கட்ட போறியா என்றார். மகன் அதை கைவிட்டார்

பிறகு ஒரு இந்திய பெண்ணை காதலித்தார் ".. உனக்கு ஆள் கிடைக்காமல் வடக்கத்திய ஒன்றை கொண்டு வந்திருக்கிறாய்" என்று கடிந்து கொண்டார்...அவரையும் மகன் கைவிட்டார்

பிறகு யாழ்ப்பாண பெண்ணை காதலித்தார் ".. அவள் என்ன சாதி என்று உனக்கு தெரியுமா  எங்களை பார்த்தா தலை நிமிர பயப்படும் சாதியை சேர்ந்த  பெண்ணை  கட்டினா நான் நாளைக்கு எப்படி சபை சந்திக்கு போவது?  தூக்கு மாட்டி தான் சாவன்" என்றா.

சரி என்று எல்லாவற்றையும் கைவிட்டு தாயின் உறவுக்கார பெண்ணை கட்ட விரும்பினால் ......அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷமாம்.....

"இனி எனக்கு கலியாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்" என்று விட்டு இப்ப சும்மா இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

“என் தந்தை எனக்கு பிற்போக்குவாதி. என் பிள்ளைக்கு நான் பிற்போக்குவாதி”

வல்வை  சகாறா அம்மாச்சி மகள்  அழகாக இருக்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் படைப்புக்கு நன்றி  அக்கா,  அப்புறம் ‘’அம்மாச்சி மகள்’’ என்றால் என்ன அர்த்தம் இந்த கதையில்?

உண்மையாவே சொல்லுறேன்  பலமுறை படித்து பார்த்தும் தலை சுத்துது ...

ஒருவேளை இலக்கியவாதிகளின் எழுத்துக்களை  புரிந்துகொள்ள  பாமரர்களுக்கு சிரமமாய் இருக்கும் என்ற நிலையில் நானும் இருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2018 at 4:36 AM, Kavi arunasalam said:

“என் தந்தை எனக்கு பிற்போக்குவாதி. என் பிள்ளைக்கு நான் பிற்போக்குவாதி”

வல்வை  சகாறா அம்மாச்சி மகள்  அழகாக இருக்கிறாள்.

நன்றி கவி அருணாசலம் கதையை பரிந்து கொண்டதை உங்களுடைய ஒற்றைவரி விளம்பி நிற்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

முதலில் உங்கள் படைப்புக்கு நன்றி  அக்கா,  அப்புறம் ‘’அம்மாச்சி மகள்’’ என்றால் என்ன அர்த்தம் இந்த கதையில்?

உண்மையாவே சொல்லுறேன்  பலமுறை படித்து பார்த்தும் தலை சுத்துது ...

ஒருவேளை இலக்கியவாதிகளின் எழுத்துக்களை  புரிந்துகொள்ள  பாமரர்களுக்கு சிரமமாய் இருக்கும் என்ற நிலையில் நானும் இருக்கலாம்!

இப்பகுதியில் வந்ததற்கும் வாசித்ததற்கும் நன்றி வளவன்

அம்மாச்சி மகள் ஒரு பிரதேச வழமைச் சொல் அதாவது அம்மாவின் தாயை அம்மாச்சி என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் அம்மாச்சி என்று கதை சொல்லியாக வெளிப்படும் கதாப்பாத்திரத்திற்கு அம்மாச்சி என்பது அம்மாவின் தாயார் அம்மம்மா. மிகுதி கதையில் வெளிப்படையான விளக்கம் இல்லை. கதை சொல்லியாக வரும் கதாப்பாத்திரம் என்ன சொல்ல வருகிறது என்பதை உன்னிப்பாக வாசித்தாலன்றி  புரிதல் கடினம். ஏனெனில் கதை சொல்லி பாசத்தோடு அம்மாவைப்பார்க்கும்போது அம்மா என்று விளித்தும் அதே அம்மாவை மனதிற்கு உவப்பில்லாத நிலையில் அம்மாச்சி மகள் என்றும் சொல்கிறது. அங்குதான் கதையின் பொருளே அடங்கி நிற்கிறது எங்கு அம்மாச்சி மகள் வெளிப்படுகிறாளோ அங்கேயே கருப்பொருள் உணரப்படவேண்டும். என்னுடைய எழுத்து அதனை உணர்த்தவில்லைப்போலும்.

 

அடப்பாவிகளா கவிதையை எழுதினேன் அதற்கு பொழிப்புரையும் எழுதினால்தான் விளங்கிக் கொள்வோம் என்பதையும் இந்தக்களத்தில் கடந்திருக்கிறேன். இப்போது சிறு கதை எழுதினேன் அதற்கும் விளக்கம் எல்லாம் எழுதும் நிலையா? இவங்க ரொம்ப கலாய்க்கிறாங்களோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இருக்கும் இடமே சில விசயங்களைத் தீர்மானிக்கின்றன.
மற்றவர்கள் இருக்குமிடத்தில் நாமிருந்தால் எல்லாம் எதிர்மறையாகவும்
நிறைவாகவும் நிகழும்.

அது சரி... இந்தச் சிறுகதையில் எத்தனை வில்லிகள் ..... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி மகள் பூரிப்புடன் அம்மாச்சி பேத்திக்கு அறுகரிசி போடுகிறாள், அம்மாவுக்கு வாய்த்ததென்னவோ வாய்க்கரிசிதான்...., நிறைய யோசிக்க வைத்த கதை....சில விக்கிரமாதித்தன் கதைகள் மாதிரி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 6:37 PM, வல்வை சகாறா said:

அடப்பாவிகளா கவிதையை எழுதினேன் அதற்கு பொழிப்புரையும் எழுதினால்தான் விளங்கிக் கொள்வோம் என்பதையும் இந்தக்களத்தில் கடந்திருக்கிறேன். இப்போது சிறு கதை எழுதினேன் அதற்கும் விளக்கம் எல்லாம் எழுதும் நிலையா? இவங்க ரொம்ப கலாய்க்கிறாங்களோ?

 

அப்படியெல்லாம் இல்லை, பெற்றோர்கள் விருப்பு வெறுப்பை கடந்து பண்ணப்படும்  காதல் திருமணங்கள்  பற்றிதான் கருப்பொருளா எடுத்துகிட்டு இருக்கிறீர்கள் என்பது விளங்குது,

ஆனால்  இந்த கதையின் முடிவுதான் மண்டையைபோட்டு உடைக்குது 

என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது.  அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்....

கலாய்ப்பதற்கு ஒன்றுமில்லை, சீரியஸா பேசும்போது நீங்கள், சண்டமாருதன், கிருபன் போன்றவர்களின் எழுத்துக்களை புரிவது கடினமாயிருக்கும் என்பதை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/02/2018 at 2:17 PM, valavan said:

 சீரியஸா பேசும்போது நீங்கள், சண்டமாருதன், கிருபன் போன்றவர்களின் எழுத்துக்களை புரிவது கடினமாயிருக்கும் என்பதை சொன்னேன்.

எனக்குப் பிரசங்கித்தனமாக எழுத வராது. சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் இருப்பதால் அதில் உள்ளமாதிரி  கருத்துக்கள் எழுதும்போது படிப்பவரின் ஊகத்திற்கு பாதியை விட்டுவிடுவேன். ?

இது சில தீவிரமான உரையாடல்களில் உதவியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.