Jump to content

விடுப்பு ராணிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வாத்தியார் தோட்ட வேலையை முடித்து விட்டு கைகால் அலம்பி கொண்டு

 "டேய் குகன் ஆட்டுக்கு குழை ஒடிச்சு போட்டனீயே"

"ஒம் அப்பா "

"எங்க அம்மா"

"எங்க போறது இங்க தான் நிற்கிறேன், டி போடுறன்  கொண்டு வாரன்"

.

"உவள் சுதா அவளோட கம்பசில படிக்கிற குகனை லவ் பண்ணுறாள்"

"நீ கண்டனீயே"

"பக்கத்து வீட்டு பவளத்திற்கு முன் வீட்டு பர்வதம் சொன்னவளாம்"

"அவளுக்கு யார் சொன்னதாம்"

"அவளுக்கு செல்வராணி சொன்னதாம்"

"அவளின்ட கதையை கேட்டு ஒரு பொம்பிளை பிள்ளையின் வாழ்க்கையில் விளையாடதையுங்கோ, அவள் 'R Q' வேற வேலையில்லை ஊர் விடுப்புக்களை தன்ட இஸ்டப்படி சொல்லிக்கொண்டு திரிவாள் நீங்களும் நம்பிகொண்டிருங்கோ"

செல்வராணி காலையில் வெளிக்கிட்ட என்றாள் பின்னேரம் வந்தா ஊரில இருக்கிற புதினம் எல்லாம் எடுத்து கொண்டு வந்திடுவா.அடுத்த நாள் கை கால் வைத்து தன்னுடைய இஸ்டப்படி அந்த கிராமத்திற்கு சென்றுவிடும்

செல்வராணிக்கு  "ஆர் க்யூ" என்று பட்ட பெயரை குகன் வைத்து விட்டான் அது அவனது வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரும்   பாவிக்க தொடங்கி விட்டார்கள்.  செல்வராணி என்ற பெயரை ஆங்கிலத்தில் மாற்றி அதன் முதல் எழுத்துக்களை   தான் வைத்தான்.

அதே போன்று அவளது கணவன் பேரம்பலத்தை பிபி என்று அழைப்பார்கள்.மொட்டை கடிதம் போடுதல்,பெட்டிசன் போடுதல்  போன்றவற்றுக்கு பெயர் போனவர்தான் பேரம்பலத்தார்.பெட்டிசன் பேரம்பலம் போடாத பெட்டிசனே இல்லை என்று சொல்லாம்.

இப்படித்தான் ஒரு நாள் குகன் மாமரத்தில ஏறி அக்கம் பக்கத்து வீடுகளை விடுப்பு பார்த்து கொண்டிருந்தான்.

" பரதேசி பேரம்பலம் தான் போட்டிருப்பான்,அவன் வரட்டும் அவனின்ட காலை முறிக்கிறேன்"

என்று நாலு வீடு கேட்க தக்கனா கத்திகொண்டிருந்தார் பாங்கர் பரம்.இவரின்ட சத்ததிற்கு வீட்டுக்குள்ளிருந்த‌ திருமதி பரம் வெளியே ஒடிவந்து

"ஏனப்பா உப்படி கத்திறியள் நெஞ்சு நோகப்போகுது"

"கத்தாமல் என்ன செய்ய சொல்லுறாய்,நாங்கள் ரோட்டோட வீடு கட்டுறமாம் என்று உவன் பரதெசி கவுன்சில்காரனுக்கு அறிவிச்சு போட்டான்,"

"பக்கத்துவீடும் றோட்டொடதானே இருக்கு,பிறகு ஏன் எங்களை மட்டும் கட்டவிடமாட்டாங்களாம்"

 

"கவுன்சில்காரனுக்கு அவங்கள் காசு கொடுத்தவங்களாம்"

"அப்ப நீங்களும் கொடுக்க வேண்டியது தானே"

"கொடுத்திட்டன் கொடுத்திட்டன் "

"பிறகு ஏன் கத்தி கொண்டிருக்கிறீயள்"

"இப்ப சும்மா நூறு ரூபா வீண் தானே"

"அவனை கண்டன் என்றால் பெட்டிசன் எழுதுறகையை முறிச்சு போட்டுத்தான் மற்ற வேலை எனக்கு"

"சும்மா றோட்டீல நின்று கத்திகொண்டிருக்காதையுங்கோ பிறகு அவன் பொலிஸுக்கு போய் எதாவது அண்டி போடுவான் பெரியவளின்ட  கலியாணம் முடியும் வரை சும்மா இருங்கோ"

"ஏன் அவனின்ட மனிசி போய் குத்தி கித்தி போடுவாள் என்று நீ பயப்பிடுறீயே"

"போன தடவை பவளத்தின்ட மகளுக்கு வந்த   லண்டன் வரனை அவள் தானே தடுத்தி நிறுத்தினவள்"

"அதென்று உமக்கு தெரியும்,"

" பவளம்தான் சொன்னவள்,அவள் செல்வராணிக்கு   தனக்கு இரண்டும் பெடியள் என்ற திமிரில ஊர்சனத்தின்ட கலியாணங்களை குழப்பி கொண்டு திரியிறாள்"

"பவளமும் செல்வராணி யும்  உம்முடைய சொந்தக்காரர் தானே"

"அதுகளின்ட பரம்பரையே எரிச்சல் பிடிச்ச பரம்பரை, ஆனால் நாங்கள் அப்படியில்லை"

"வெளியில் நின்று குடும்பகதைகளை கதைக்காமல் உள்ள போவம் வாரும் ,ஒரு பிளேன் டீ போடும் வாரன்" கூறியபடி மனைவியை பின் தொடர்ந்து உள்ளே சென்றார் பாங்கர் பரம்.

 

அன்று சுரேஸுக்கு நல்ல விடுப்பு கிடைத்து விட்டது ,அம்மா என்று அழைத்த படி வீட்டினுள் ஒடிச்சென்றான்.

"அம்மா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே"

"சொன்னால் தானே தெரியும்"

" பாங்கரின்ட வீட்டுக்கு பிபி பெட்டிசன் போடிட்டாராம்"

"யார் சொன்னது"

" பாங்கர் தான் ஊர் கேட்க கத்தினார் நான் மரத்தில இருந்து கேட்டனான், பவளம் அன்ரியின் மகளின்ட லண்டன் வரனையும் செல்வராணி குழப்பினவவாம் என்று பாங்கரின்ட வைவ் சொல்லி கொண்டிருந்தா"

 

"உனக்கு ஏன் பெரிய ஆட்களின்ட கதை  ,போய் பெடியளோடா போய் விளையாடு"

"தம்பி கதவு தட்டி கேட்குது போய் பார்,யார் வந்திருக்கினமென்று"

 

"அம்மா! பவளம் அன்ரி வந்திருக்கிறார்"

"வாங்கோ அக்கா வாங்கோ இருங்கோ"

 

இருவரும் சுகம் விசாரித்த பின்பு

"என்ன அக்கா திடிரென்று இந்த பக்கம்"

"உவள் செல்வராணி இந்த பக்கம் வந்தவளே"

"இல்லை ஏன்"

"உனக்கு விசயம் தெரியுமோ அவளின்ட பெடியன் இந்த முறையும் பாஸ் பண்ணவில்லையாம்"

"அப்படியே பெரிசா புளுகி கொண்டு திரிஞ்சாள்"

"அவளின்ட மனசுக்குத்தான் உப்படி நடக்குது"

"மற்றவன் வெளி நாட்டுக்கு களவாய் போனவன் இப்ப எங்க நிற்கிறானாம்"

"நான் அவளிட்ட கேட்கவில்லை கேட்டாள் புளுகி தள்ளுவாள் மலிந்தா சந்தைக்கு வரும் தானே,சுவிஸ்க்கு தான் போய்யிருப்பான் என்று நினைக்கிறன்"

"அக்கா ,ஞாயிற்று கிழமை வீரகேசரி பேப்பரில வந்த கதையை படிச்சனீங்களா?"

"இல்லை ஏன்"

"நான் படிச்சனான் உவள் சுதா வின்ட கதை போல இருக்கு உவன் பிபி தான் எழுதியிருக்கான் ஊர்குருவி என்ற புனை பெயரில்"

"அப்படி எழுத முடியாதே"

""எல்லாத்தையும் எழுதி போட்டு கடைசியில் சுத்த கற்பனை எண்டு போட்டிட்டான்"

"பேப்பரை உன்னிட்ட இருக்கோ ஒருக்கா தா நானும் வாசிச்சு பார்ப்போம்"

"உவள் செல்வராணியின்ட பேப்பரைத்தான் நானும் வாசிச்சனான் அவளிட்ட‌ ,வாங்கி தரட்டே"

"சீ, சீ, நான் போகும் பொழுது பர்வதத்திட்ட‌ வாங்கி கொண்டு போறன்"

"வந்த விசயத்தை மறந்திட்டு சும்மா கதைச்சுக்கொண்டிருக்கிறன் பெரியவளுக்கு வெளிநாட்டு வரன் ஒன்று வந்திருக்கு ,மாப்பிள்ளை வீட்டார் பெண்னை பார்க்க வேணும் என்று சொல்லுயினம் அது தான் உன்னிட்ட கேட்பம் என்று வத்தனான்"

"போனமுறை செய்த மாதிரி இந்த முறையும் வீட்டை கூப்பிடுங்கோவன்"

,"எனக்கு வீட்டை கூப்பிட விருப்பமில்லை, உவள் செல்வராணி மணந்து பிடிச்சிடுவாள் அது தான் வேற எங்கயாம் காட்டுவோம் என்று நினைக்கிறன், என்ட சிங்காரிக்கும் தெரியாம இருந்தால் நல்லம் "

" அப்ப கோவிலுக்கு கூட்டிகொண்டு போய் காட்டுங்கோ"

"நீ தான் அவளை வெள்ளிக்கிழமை ஒருக்கா கூட்டிகொண்டு போகவேணும்"

"சிங்காரிக்கு சொல்லிபோடாத பொம்பிளை பார்க்கப்போயினம் என்று"

"சரி அக்கா வெள்ளிக்கிழமை நான் கூட்டிகொண்டு போறான்"

இருவரும் கதைத்தபடி படலையை திறக்க,எதிரே சென்ற செல்வ‌ராணி

 "என்ன இரண்டு பேரும் நிற்கிறீயள் எதாவது விசேசமே"

"சும்மா வந்தனான் "

"மகளுக்கு எதாவது வரன் புதுசா வந்திச்சோ"

"இல்லை அக்கா ,உங்களுக்கு எதாவது தட்டுபட்டால் சொல்லுங்கோ"

"சொல்லுறன் சொல்லுறன்"

"உங்கன்ட மகன் வெளிநாடு போனான் எங்க நிற்கிறான்"

"அவன் கனடாவுக்கு போயிற்றான் அவனுக்கு பேப்பர் எல்லாம் கொடுத்திட்டாங்கள் "

மீன்காரன் மீன் ,மீன் என கூவிக்கொண்டு வர எல்லோரும் அவனை மொய்த்துக்கொண்டனர்..

அந்த‌  இடம் ஒரு சின்ன சந்தையாக மாறிவிடும் ஒரு அரை மணித்தியாலத்திற்கு அதன் முதலாளி மீன்கார அந்தோனி தான்.

அவரிடம் கடனுக்கும் மீன் வாங்குவார்கள் .

"என்ன வர வர மீன் விலை கூடிகொண்டு போகுது"

"என்னத்தை செய்ய ஒரு பக்கம் பெடியள் மற்ற பக்கம் நெவி உதுகளை சுழிச்சு கொண்டு மீன் பிடிக்கிறதென்றால் அவன்களுக்கு கஸ்டம் தானே,விடியற்காலை நெவி போர்டுக்கு அடிச்சு போட்டாங்கள் அவன்கள் திருப்பி செல் அடிச்சு தள்ளுறாங்கள்"

"இனி உன்னிட்ட வாங்கிறதிலும் பார்க்க சந்தைக்கு போய் வாங்கலாம்"என்று சொல்லி போட்டு செல்வராணி அந்த இடத்தை விட்டுஅகன்றாள்

"போறபோக்கில நாங்கள் எல்லாம் மீன் சாப்பிட இருப்போமோ தெரியவில்லை"

"ஏன் அப்படி சொல்லுறாய் அந்தோனி "என எல்லோரும் கோரோசாக‌

குரல் கொடுத்தனர்

",கடற்கரை பக்கம் நிலமை நாளுக்கு நாள் மோசமா போய் கொண்டிருக்கு இன்றைக்கு ஒரு பெரிய மீன் மட்டும் தான் கிடைச்சுது சமனாக வெட்டி பிரிப்போம்" கூறிய படி கத்தியை தீட்டி மீனை வெட்டி கொடுத்துவிட்டு கழிவுகளை வீதியோரம் வீசினான்.

 மற்ற தெருவுக்கு இன்றைக்கு மீன் இல்லை என்றவன் சைக்கிளை தனது வீட்டுக்கு பக்கம் செலுத்தினான் .

சந்தை கலைந்து ஒரு மணித்தியாலத்தின் பின் அதே இடத்தில் செல் வந்து விழுந்தது கழிவிகளை தின்றுகொண்டிருந்த நாய்கள் சிதறின.ஒரே ஓலம் பெடிசன் பேரம்பலம்,பாங்கர் பரம்,வாத்தியார் ,குகன், செல்வராணி,பவளம்,சுதா,பர்வதம்,பவளத்தின் மகள் ,செல்வராணியின் இரண்டாவது மகன் எல்லோரும் ஒடினார்கள் .வீட்டை விட்டு ஓடினார்கள் ,ஊரை விட்டு ஒடினார்கள் ,நாட்டை விட்டே ஒடினார்கள் ....மீன்கார அந்தோனி ஊர் விட்டு ஒடி புதிய தொழில் தேடினான்...

 

காலமும் ஒடியது....

 

Posted

என்ன எங்கள் ஆஸ்தான எழுத்தாளரின் கதை ஒன்றையும் யாழின் 20 ஆவது நிறைவில் காணவில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டது புத்தன் பாணி கதை.

நிகழ்சிகளின் தொடர்ச்சி பாத்திரங்களை அறிமுகபடுத்தி அவர்களை கொண்டே வழி நடத்தி இருக்கிறீர்கள். நவீன தமிழ் சினிமாவிற்கே கதை எழுதலாம் புத்தன் அண்ணா.

அழகாய் இருக்கிறது.

Posted

எங்கெங்கோ ஓடி இருந்து கொண்டு அன்றைய வாழ்க்கையை நினைத்து ஏங்கிக்கொண்டு இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன புத்தன் எங்கு தான் நிற்கிறீர்கள்?ஊரிலா அல்லது சிட்னியிலா?

ஊரில வேலிக்கு வேலி நின்று பெண்டுகள் குசுகுசுப்பது சில வேளைகளில் அடிபாடு வெட்டுப்பாட்டில் போய் முடிந்துவிடும்.

கதையை வாசித்து கொண்டு போகும் போது அப்படித் தான் முடிய போகுதென்று நினைத்து ஏமாந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வதந்தி தந்தியை விட வேகமாய் பரவும்.....ஆனால் சுதாகரிப்பதற்குள் பல குடும்பத்தை சீரழிச்சு விடும். அதைவிட வதந்தியை பரப்புகிறவர்கள் நிர்மூலமாய் போவதும் கண்கூடு. நல்ல படிப்பினை....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழக்கம் போல....புத்தனின் எழுத்து நடை!

ஆனால் கதை முடிவில....கண்ணைக் கலங்க வைச்சிட்டுது...மனுசன்!

எனினும் எமது வாழ்க்கையும்....அப்படித்தானே....இருந்தது! இன்னும் இருக்கின்றது!

ஒரு குவாலா...காட்டுத் தீயில்...காயமடைஞ்சு போனால்.....இந்த ஊரில சனம் கண்ணீர் விடுகுது!

நம்ம ஊரில....மனுசர்...செத்துப் போனாலும்...கண்டும் காணாமல் இருக்குது!

இது தான்  நிலைமை!

கதைக்கு நன்றி புத்தன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுப்பு ராணிகள் ஆரம்பத்தில் கலகலப்பாக பயணித்து முடிவில் கண்கலங்க வைத்து விட்டது. இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் தொலைந்து போனவர்களினால் விடுப்பு ராணிகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. பகிர்வுக்கு நன்றிகள் புத்தன்.

Posted

ஒருவகையில் விடுப்பு சொட்டை நொட்டைகள் நக்கல்கள் என எமது பாரம்பரிய மனநிலை செல்வரும் கிபிர் வரும் என்பதை விழுந்து வெடிக்கும் வரை பல இடங்களில் உணரமறுத்திருக்கின்றது. அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. அதை சூசகமாக இக் கதை உணர்த்துகின்றது.

16 hours ago, putthan said:

வீட்டை விட்டு ஓடினார்கள் ,ஊரை விட்டு ஒடினார்கள் ,நாட்டை விட்டே ஒடினார்கள் ....மீன்கார அந்தோனி ஊர் விட்டு ஒடி புதிய தொழில் தேடினான்...

கதையை எமது சமூக இயல்புக்குள்ளாக நகர்த்திவந்து செல்விழும் இடத்தில் விட்டுள்ளீர்கள். 

இந்த முடிவை படிக்கும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. 1993 கடசியில் என நினைக்கின்றேன். புநகரி தாக்குதலுக்கு பின்னர் யாழில் புலிகள் பொதுக்கூட்டம் போட்டு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். தாக்குதல் காணொளிகளும் போட்டு பொறுப்பாளர்கள் பெண்புலிகள் மக்களை நோக்கிப் பேசுவார்கள். சனம் கூட்டத்தை கவனிக்காது. மாறாக விடுப்பு பார்க்கவே பெரும்பாலும் கூடியிருப்பார்கள். அவ்வாறு ஒருமுறை நடந்த கூட்டத்தில் நானும் போயிருந்தேன். பலர் இருந்தார்கள் , பலர் நின்றார்கள் சிலர் தள்ளியிருந்த மதிலில் இருந்து தம்மடித்துக்கொண்டு தங்களுக்குள் கதைத்துக்கொண்டு கூட்டத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மகளிர் அரசியல் துறை போராளி  யாழில் எங்கெல்லாம் போராளிகள் இராணுசத்தை தடுத்து கவல் அரண் அமைத்து ராணுவம் உள்நுழையாதபடி காவலில் ஈடுபட்டுள்ளார்கள் என பட்டியலிட்டார். மேலும் அவர் கூறினார் " அவர்கள் அங்கெல்லாம் உயிரைக் கொடுத்து கண்விழித்து காவலில் நிற்பதால் தான் நீங்கள் இங்கு மதிலில் குந்தியிருந்து சுதந்திரமாக தம்மடிக்கின்றீர்கள்" எனைய சனங்களின் பார்வை ஒரே நேரத்தில் பின்னால் இருந்த மதில்நோக்கி போனது. அவர்கள் புகைத்ததை கீழே போட்டு அணைக்க முற்பட்டதை காண நேர்ந்தது. 

பிரதேசங்களை புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது அது எவ்வளவு முக்கியமானது என்பதை பெரும்பாலனவர்கள் உணரவில்லை. அவர்கள் வேறு உலகத்தில் இருந்தார்கள். கிளாலிப் பயணத்தின் போது கடற்கரும்புலிகள் இருபக்கமும் கட்டவுட் போட நடுவால் பயணம்செய்த எத்தனை மக்களுக்கு அந்த காவலுக்காக உயிரை விட்ட உயிராயுதங்கள் மீது நன்றிஉள்ளது என்பது கேள்விக்குறி. 

விடுப்பு ராணிகள் என்ற கதை பேரினவாத ஒடுக்குமுறைக்குள் இருந்த எமது மக்களின் என்னுமொரு உலகம். 

எமது போராட்டத் தோல்வியில் துரோகத்துக்கு நிகரான பங்கு அலட்சியத்துக்கும் உள்ளது. இந்த அலட்சியம் பகலவனின் அர்சுனனும் துரோணரும் என்ற கதை உருவாகிறதுக்கான அடிப்படைக் காரணங்களில் பிரதான பங்கு வகிக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

"விடுப்பு ராணிகள்"

அழகான கதை. வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர் முழுக்க இருக்கும் விடுப்பு ராணிகள் இந்த பெண்களிடம் ரகசியம் எதையும் சொல்ல கூடாது என்று சொல்கிறார்கள் அப்படி சொன்னால் அது ஊர் முழுக்க பரவிடுமாம் உன்மையா புத்தன் ??

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'விடுப்பு ராணிகள்' என்றவுடன், 'வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வாக இருக்கும் ராணிகளாக்கும்' என எண்ணி வாசித்தால், இது ஏதோ வேறை மாதிரி போகுது.. ஒன்னும் புரியலை!  emboubli.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை எழதி முடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/03/2018 at 12:58 AM, பகலவன் said:

. நவீன தமிழ் சினிமாவிற்கே கதை எழுதலாம் புத்தன் அண்ணா.

அழகாய் இருக்கிறது.

tw_blush:வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் ....எழுதலாம் ஆனால் நேரமில்லை tw_blush:tw_blush:

On 17/03/2018 at 1:31 AM, அபராஜிதன் said:

எங்கெங்கோ ஓடி இருந்து கொண்டு அன்றைய வாழ்க்கையை நினைத்து ஏங்கிக்கொண்டு இருக்கினம்

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் ...அந்த ஏக்கம் என்னை ஒரு குட்டி எழுத்தாளனாக்கி விட்டது யாழ் இணையத்தில்

On 17/03/2018 at 1:36 AM, ஈழப்பிரியன் said:

என்ன புத்தன் எங்கு தான் நிற்கிறீர்கள்?ஊரிலா அல்லது சிட்னியிலா?

ஊரில வேலிக்கு வேலி நின்று பெண்டுகள் குசுகுசுப்பது சில வேளைகளில் அடிபாடு வெட்டுப்பாட்டில் போய் முடிந்துவிடும்.

கதையை வாசித்து கொண்டு போகும் போது அப்படித் தான் முடிய போகுதென்று நினைத்து ஏமாந்துவிட்டேன்.

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் சிட்னியில் தான் நிற்கிறேன்....அவையள் கொஞ்சம் மாணம் மரியாதைக்கு பயந்து அடிபாட்டுக்கு போகாதவையள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/03/2018 at 4:11 AM, suvy said:

வதந்தி தந்தியை விட வேகமாய் பரவும்.....ஆனால் சுதாகரிப்பதற்குள் பல குடும்பத்தை சீரழிச்சு விடும். அதைவிட வதந்தியை பரப்புகிறவர்கள் நிர்மூலமாய் போவதும் கண்கூடு. நல்ல படிப்பினை....!  tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்.சிலர் ஊரில இருந்தவையள் அவையளுக்கு விடுப்பு கதைக்காவிடில் நித்திரை கொள்ளமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/03/2018 at 8:19 AM, புங்கையூரன் said:

வழக்கம் போல....புத்தனின் எழுத்து நடை!

ஆனால் கதை முடிவில....கண்ணைக் கலங்க வைச்சிட்டுது...மனுசன்!

எனினும் எமது வாழ்க்கையும்....அப்படித்தானே....இருந்தது! இன்னும் இருக்கின்றது!

ஒரு குவாலா...காட்டுத் தீயில்...காயமடைஞ்சு போனால்.....இந்த ஊரில சனம் கண்ணீர் விடுகுது!

நம்ம ஊரில....மனுசர்...செத்துப் போனாலும்...கண்டும் காணாமல் இருக்குது!

இது தான்  நிலைமை!

கதைக்கு நன்றி புத்தன்!

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் ...பெரிய கதையாக எழுத வெளிக்கிட்டன் ஆனால் எங்கன்ட சிட்னி வாழ்க்கைக்கு(நேர்ப்பிரச்சனை} சரி வராது என்று சுறுக்கி போட்டன்... இதை வைச்சு தொடர் கதையா எழுதலாம் என்று இருக்கிறன் பார்ப்போம்...அல்லாவின் விருப்பம் ....

On 17/03/2018 at 10:53 AM, Kavallur Kanmani said:

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் தொலைந்து போனவர்களினால் விடுப்பு ராணிகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. பகிர்வுக்கு நன்றிகள் புத்தன்.

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் ..அதென்றால் உண்மைதான்..

On 17/03/2018 at 5:28 PM, சண்டமாருதன் said:

விடுப்பு ராணிகள் என்ற கதை பேரினவாத ஒடுக்குமுறைக்குள் இருந்த எமது மக்களின் என்னுமொரு உலகம். 

எமது போராட்டத் தோல்வியில் துரோகத்துக்கு நிகரான பங்கு அலட்சியத்துக்கும் உள்ளது. இந்த அலட்சியம் பகலவனின் அர்சுனனும் துரோணரும் என்ற கதை உருவாகிறதுக்கான அடிப்படைக் காரணங்களில் பிரதான பங்கு வகிக்கின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்... 

 

 

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்... எமது போராட்டத்தில்  மக்கள் அலட்சிய போக்குடையவர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/03/2018 at 4:10 PM, nunavilan said:

29261268_10156269209916913_7455292923471

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் Nunavilan

On 17/03/2018 at 6:05 PM, கறுப்பி said:

 

"விடுப்பு ராணிகள்"

அழகான கதை. வாழ்த்துகள்...

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் karupi

On 18/03/2018 at 5:02 PM, தனிக்காட்டு ராஜா said:

ஊர் முழுக்க இருக்கும் விடுப்பு ராணிகள் இந்த பெண்களிடம் ரகசியம் எதையும் சொல்ல கூடாது என்று சொல்கிறார்கள் அப்படி சொன்னால் அது ஊர் முழுக்க பரவிடுமாம் உன்மையா புத்தன் ??

 

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்....முகப்புத்தகம்,இணையங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் விடுப்புராணிகள் தான் messengerstw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/03/2018 at 5:02 PM, தனிக்காட்டு ராஜா said:
On 18/03/2018 at 5:12 PM, ராசவன்னியன் said:

'விடுப்பு ராணிகள்' என்றவுடன், 'வேலைக்கு போகாமல் விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வாக இருக்கும் ராணிகளாக்கும்' என எண்ணி வாசித்தால், இது ஏதோ வேறை மாதிரி போகுது.. ஒன்னும் புரியலை!  emboubli.gif

 

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள். கொசிப்பை(gossip) நாங்கள் விடுப்பு என்று சொல்லுவோம்....

On 19/03/2018 at 3:00 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை எழதி முடியுங்கோ.

வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள் விடுப்பு ராஜக்களைப்பற்றி எழுதுவேன் அப்ப விளங்கிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுப்பு ராணிகளும் ராஜாக்களும் இல்லாவிட்டால் உலகம் சுவாரசியமாக இருக்காது. பிறர் நாற்றம் முகர்ந்துதானே தன் நாற்றம் மறக்கமுடியும்??

போர்ச்சூழல் என்னதான் வாழ்வைக் கலைத்துப்போட்டாலும் விடுப்புக் கேட்பதை மட்டும் கலைக்கவில்லை என்பது உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் கண்டது, உந்த விடுப்பு ராணிகள் ஊரை ,நாட்டை விட்டு ஓடி புலம்பெயர்ந்த நாடுகளிலும் தங்கள் விடுப்புகளைத் தொடரலாம்.

உவள் செல்வியின் மூத்தவள் காப்பிளியுடன் திரியிராலாம். குமாரசாமியார் மனிசியிட்டநெடுகவும் அடிவாங்கிராம் தெரியுமோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

விடுப்பு ராணிகளும் ராஜாக்களும் இல்லாவிட்டால் உலகம் சுவாரசியமாக இருக்காது. பிறர் நாற்றம் முகர்ந்துதானே தன் நாற்றம் மறக்கமுடியும்??

போர்ச்சூழல் என்னதான் வாழ்வைக் கலைத்துப்போட்டாலும் விடுப்புக் கேட்பதை மட்டும் கலைக்கவில்லை என்பது உண்மைதான்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் .அதென்றால் உண்மைதான்.
 

8 minutes ago, கந்தப்பு said:

யார் கண்டது, உந்த விடுப்பு ராணிகள் ஊரை ,நாட்டை விட்டு ஓடி புலம்பெயர்ந்த நாடுகளிலும் தங்கள் விடுப்புகளைத் தொடரலாம்.

உவள் செல்வியின் மூத்தவள் காப்பிளியுடன் திரியிராலாம். குமாரசாமியார் மனிசியிட்டநெடுகவும் அடிவாங்கிராம் தெரியுமோ.

யாரப்பு அந்த செல்வி? பழைய உங்கன்ட "காய்"போல இருக்கு ஆத்திரத்தில் அவரின்ட‌ மகளை இழுத்து விடுறீயள் போல்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.