Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

19 JUN, 2023 | 07:51 PM
image
 

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது

நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில்  தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன

நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை  கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை.

https://www.virakesari.lk/article/158103

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கியில் 70 மணித்தியாலங்களுக்கே ஒக்சிஜன்

Published By: SETHU

20 JUN, 2023 | 10:40 AM
image
 

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பயணித் நீர்மூழ்கி காணாமல் போன நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனேடிய கரையோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளனர். 

இந்நீர்மூழ்கியில் உள்ள ஒக்சிஜன் சுமார்  70 மணித்தியாலங்களுக்கே போதுமானதாக இருக்கும் என  போதுமானதாக இருக்கும் கருதப்படுவதாக என அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட இச்சிறிய நீர்மூழ்கியில் 5 பேர் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயைத் தளமாகக் கொண்ட  அக் ஷன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமீஷ் ஹார்டிங்கும் இந்நீர்மூழ்கியில் பயணித்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் எனும் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்நீர்மூழ்கி கனடாவின் சென் ஜோன்ஸ் நகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது, 

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி இந்நீர்மூழ்கி இறங்கத் தொடங்கியது.  எனினும் 2 மணித்தியாலங்களின் பின்னர் இந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மசாசூசெட்ஸ் மாநில கரையோரத்திலிருந்து சுமார் 900 மைல்கள் (1450 கிலோமீற்றர் தூரத்தில்) தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க கரையோர காவல்படை தெரிவித்துள்ளது,  அதேவேளை. கனேடிய கரையோர காவல்படையும் விமானமொன்று சகிதம் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளது.

அமெரிக்க, கனேடிய கடற்படையினர் மற்றும் வணிக ஆழ்கடல் பயண நிறுவனங்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

டைட்டான் எனப் பெயரிடப்பட்ட இந்த  நீர்மூழ்கி 4,000 மீற்றர் ஆழம்வரை செல்லக்ககூடியது என  ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளை பார்வையிடுவதற்கான 8 நாள் பயணத்துக்கு 250,000 டொலர்கள் அறவிடப்படடுகிறது. டைட்டடானிக் கப்பல் சிதைவுகளை நோக்கி சுழியோடுவத்றகான வாய்ப்பும் இதன்போது வழங்கப்படுகிறது.

இந்நீர்மூழ்கியில் ‍6பொதுவாக  மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதில் சுமார் 70 மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே எஞ்சி இருக்கும் தாம் கருதுவதாக அமெரிக்க கரையோர காவல்படை அதிகாரி றியர் அட்மிரல் ஜோன் மோகர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/158113

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் கடலுக்குள் போன 5 பேரின் கதி என்ன?

டைட்டானிக்

பட மூலாதாரம்,OCEANGATE

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,காரேத் ஈவான்ஸ் & லாரா கோஸி
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

டைட்டானிக்கை நேரில் பார்க்க 8 நாள் சுற்றுலா

டைட்டானிக் சுற்றுலாவில் விபரீதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹாலிவுட் சினிமா வடிவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்ட 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate).

தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. ஒரு லாரி அளவிலான இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். அதில், வழக்கமாக 4 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் வழக்கமாக ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணிப்பார்கள்.

விபரீதத்தில் முடிந்த இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.

டைட்டானிக் சுற்றுலாவில் விபரீதம்

பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.

காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன.

 

நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் இருக்க வாய்ப்பு

"நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கலாம்" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார்.

2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்புக் குழுவினர் இந்த பணியை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் சுற்றுலாவில் விபரீதம்

பட மூலாதாரம்,CBS NEWS

நீர்மூழ்கியில் இருந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கதி என்ன?

ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.

"காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையு ம் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது.

இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது.

டைட்டானிக் நீர்மூழ்கி

ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது.

10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இஇருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

போலார் பிரின்ஸ் என்ற போக்குவரத்து நீர்மூழ்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் சுற்றுலாவில் விபரீதம்

டைட்டானிக் கப்பல் விபத்து

டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது.

ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.

https://www.bbc.com/tamil/articles/cml11w828mmo

உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

வாகனங்கள் களவெடுப்பவர்களே சிப்சை ஒட்டிவிட்டு ஆறுதலாக வாகனம் எங்கே இருக்கிறதென்பதை துல்லியமாக கண்டுபிடித்து களவெடுக்கிறார்கள்.

இதுக்கெல்லாம் அப்படியான வசதிகள் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

வாகனங்கள் களவெடுப்பவர்களே சிப்சை ஒட்டிவிட்டு ஆறுதலாக வாகனம் எங்கே இருக்கிறதென்பதை துல்லியமாக கண்டுபிடித்து களவெடுக்கிறார்கள்.

வாகன கள்ளர்கள் வாகனத்தில் சிப்சை ஒட்டிவிட்டு பின்பு அதைவைத்து வாகனம் எங்கே இருக்கிறது என்று  தேடி கண்டுபிடித்து ஏன் களவெடுக்கிறார்கள்? சிப்சை ஒட்டும் போதே களவு எடுக்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?

வளர்ப்பு மகனால் வந்த வினை .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?

உண்மை.ஆனால், ஊடகங்களுக்குத் தீனி கிடைத்திருக்கிறது. மேற்கு முதல் கிழக்குவரையான ஊடகங்கள் மீட்டுவிடுவார்கள் அல்லது கண்டுபிடித்துவிடுவார்கள்.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

உண்மையில் இந்த பெரும் பணக்கார விளையாட்டு / பொழுது போக்கு விபரீதமாகியதால் இவ்வுலகுக்கு என்ன நட்டம் நேர்ந்துவிடப் போகின்றது?

உண்மை தான்…!

ரைற்ரானிக் உண்மையில் ஒரு கல்லறை…! அதை அப்படியே விட்டு விடுவதே நல்லது…! இதே போலவே எலன் மஸ்கின் விண்வெளி உல்லாசப் பயணத்திற்கும் ஒரு மீள இயலாத விபத்து நடக்க வேண்டும்…!

 

  • கருத்துக்கள உறவுகள்

ரைற்ரானிக் விபத்தில் இறந்து போன மக்களை நினைவுக்கூர யாரையும் காணொம், ஆனால் தாண்டு போன கப்பலை வைத்து படம் தயாரித்து சாம்பாதித்தார்கள், இப்பொழுது இடிபாடுகளைக் காட்டி உழைக்க வெளிக்கிட்டு மாட்டி இருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்மூழ்கி மாயமான கடலடியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டது

Published By: SETHU

21 JUN, 2023 | 11:16 AM
image
 

அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிய நீர்மூழ்கி காணாமல் போன கடலின் அடிப்பகுதியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சோனார் தொழில்நுட்பம் மூலம் இந்த சத்தம் உணரப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

கனடாவின் P3 ரக விமானமொன்றின் மூலம் இச்சத்தம் உணரப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை இச்சத்தம் கேட்டது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சத்தம் உணரப்பட்டதை அமெரிக்க கரையோரகக் காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது.

6.5 மீற்றர் (21 அடி) நீளமானஇ டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழ‍மை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான ‍ தொடர்பை இழந்தது.

டைட்­டானிக் கப்பல் சிதை­வு­களை பார்ப்­ப­தற்­காக சென்று கொண்‍டிருந்த நிலையில் இந்நீர்மூழ்கி காணாமல் போனது, இந்நீர்மூழ்கியில் பாகிஸ்தானின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர், ‍அவரின் மகன், பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் ஆகியோரும் உள்ளனர் அறிவிக்கக்கப்பட்டுள்ளது,

6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழ‍மை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான ‍ தொடர்பை இழந்தது.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் 7600 சதுரமைல் பரப்பளவுள்ள பகுதியில் அமெரிக்க. கனேடிய கரையோர காவல்படை கப்பல்கள் தேடுதல் மேற்கொண்டுவந்தன. 

இத்தேடுதல் நடவடிக்கைகளில் தற்போது அமெரிக்க கடற்படை நிபுணர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158210

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Video Game Controller மூலம் இயக்கப்படும் கப்பலில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் மீதம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் ஏற்கெனவே பயணம் செய்தவர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் அனைவரும் ஆபத்துக்களை அறிந்திருந்தோம்" என்றார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'டைட்டன்' நீர்மூழ்கியில் ஆக்சிஜன் காலியான பிறகு உள்ளே இருப்பவர்களுக்கு என்ன ஆகும்? முழு விவரம்

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,DAWOOD FAMILY

 
படக்குறிப்பு,

பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத்

21 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் சிதைவுகளை நேரில் பார்க்கும் சுற்றுலா விபரீதத்தில் முடிந்திருப்பதே இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நீர்மூழ்கி காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அதற்கு என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவரவில்லை. நீருக்கடியில் சத்தம் எழுந்ததைக் கண்டுபிடித்துள்ள தேடுதல் குழுவினர், அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சப்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது.

இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை.

 

தற்போது சுமார் 4 கி.மீ. ஆழத்தில் தேடும்பணி நடந்து வருகிறது.

இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருக்கும் என்று மதிப்பிடப்படும் நிலையில், அதன் பிறகு நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

நீர்மூழ்கி

பட மூலாதாரம்,REUTERS

ஆக்சிஜன் காலியான பிறகு என்ன நடக்கும்?

நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸுடன் பிபிசி நிருபர் பேசியுள்ளார்.

டாக்டர் லெடெஸ், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்களுக்கான சில காரணிகளை விளக்கினார்.

"இது விளக்கை அணைப்பது போல் இல்லை, அது மலையில் ஏறுவது போன்றது," என்று அவர் கூறினார்.

"அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்."

அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.

"தாழ்வுநிலையில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம்". என்கிறார் அவர்.

"அதிகமாகக் குளிர்ச்சியடைந்து சுயநினைவை இழந்தால், அதன் மூலம் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியாக இருக்கும்போது இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி எங்கே மூழ்கியது?

காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.

பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நீருக்கடியில் சத்தம் - நீர்மூழ்கி விபத்தில் சிக்கியதா?

நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் உள்ளுடு தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.

வியாழக்கிழமையன்று கூடுதலாக சப்தம் கேட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி
 
படக்குறிப்பு,

நீர்மூழ்கி காணாமல் போன பகுதி (வரைபடம்)

தேடுதல் பணியில் யார், யார் ஈடுபட்டுள்ளனர்?

அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.

காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

30 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு

காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீர் மூழ்கியில் யார்யார் பயணித்தனர்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

  • ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.
  • ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.
  • சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்
  • பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
  • ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

பயணத்திற்கு முன்பு பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கூறியது என்ன?

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,SUPPLIED

 
படக்குறிப்பு,

நீர்மூழ்கியில் பயணம் செய்த பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத்(மேலே), பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங்

கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஓஷன்கேட் நிறுவனம் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி விபத்தால் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு, ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) என்பவர் தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

'பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக' ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிபுணர் பணிநீக்கம்

காணாமல் போன நீர்மூழ்கியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணரை 2018-ம் ஆண்டில் ஓஷன்கேட் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. வாய்மொழியாக அவர் கூறிய விஷயங்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் முறைப்படி அறிக்கையாக தயார் செய்து ஆய்வுக்கு முன்வைத்துவிட்டார்.

இதற்குப் பரிசாக, அவரை பணிநீக்கம் செய்ததுடன், கம்பெனி ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் இரு தரப்பும் பின்னர் சமரசம் செய்து கொண்டன.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,DAVID LOCHRIDGE

 
படக்குறிப்பு,

பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ்

'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

ஓஷன்கேட் நிறுவனம் - நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் இடையிலான வழக்கில் நீதிமன்ற ஆவணங்களில் டேவிட் லாக்ரிட்ஜ் கண்டுபிடித்த பாதுகாப்புக் குறைபாடுகளாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, தற்போது காணாமல் போயுள்ள டைட்டன் நீர்மூழ்கியின் முன்பக்க காட்சிப் பகுதி 4,265 அடி ஆழம் வரையே செல்ல சான்றளிக்கப்பட்டது.

ஆனால், 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க இந்த நீர்மூழ்கியில் தான் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அது தற்போது காணாமல் போயிருப்பது குறித்து டேவிட்டின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதே நீர்மூழ்கிதான், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்ஷூடன் காணாமல் போயுள்ளது.

 

'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி ஓஷன் கேட் நிறுவனம் கூறுவது என்ன?

ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் சுற்றுலாவுக்கென மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளது. அவற்றில் ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலில் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செல்லக்கூடியது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

'டைட்டன்' நீர்மூழ்கியின் முதலிரு பயணங்கள் வெற்றி

2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

'டைட்டன்' நீர்மூழ்கியின் செயல்திறன் என்ன?

10,432 கிலோகிராம் எடையும், 22 அடி நீளமும் கொண்ட டைட்டன் நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று ஓஷன்கேட் இணையதளம் கூறுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,CBS NEWS

டைட்டானிக் சுற்றுலா - 8 நாள் பயணத் திட்டம்

ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திற்கு போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இந்த நீர்மூழ்கிகள் கொண்டுவரப்படும்.

ஓஷன்கேட் நிறுவனம் சுவாரஸ்ய விளம்பரம்

"உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையும் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது.

இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது.

டைட்டானிக் கப்பல் எப்போது, எப்படி விபத்தில் சிக்கியது?

1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் இந்த விபத்து உலகம் முழுவதும் அனைவரும் அறிந்த, ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகிவிட்டது.

டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டைட்டானிக் சிதைவுகள் எங்கே மூழ்கிக் கிடக்கின்றன?

'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.

https://www.bbc.com/tamil/articles/c8095k86erko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதவு இல்லாத கழிவறை, 17 போல்ட் போட்டு வெளிப்புறத்தில் சீல் - டைட்டன் நீர்மூழ்கி பாதுகாப்பானதா?

’டைட்டன் நீர்மூழ்கி’ பாதுகாப்பானதா? அது எப்படி இயங்குகிறது?

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மேட் மர்ஃபி
  • பதவி,பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தற்போது கடலில் மாயமாகியிருக்கும் ’டைட்டன் நீர்மூழ்கி’ அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக் குழுவினரால் பயணத்திற்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி இறங்குவதற்கு முன்னால், துணைக்குழுவினர் அதை வெளியிலிருந்து பூட்டி, பின் போல்ட் மூலம் மூடினர்.

பின் ஆழ்கடலுக்குள் இறங்கிய நீர்மூழ்கி, டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது, அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது. இந்த நீர்மூழ்கி ஓஷன்கேட் என்னும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

தற்போது காணாமால் போயிருக்கும் இந்த நீர்மூழ்கியைத் தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

   

’டைட்டன் நீர்மூழ்கி’ - ஒரு பார்வை

கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது.

‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’.

’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது.

இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும்.

'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும்.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,REUTERS

டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்குகிறது?

’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல.

கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது.

கப்பலுக்குள் வடிவமைப்பு எப்படியிருக்கும்?

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,OCEANGATE

இந்த நீர்மூழ்கியின் உட்பரப்பு மிகவும் குறுகலாகக் காணப்படுகிறது. வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) என்ற கணக்கில் மட்டுமே இதன் கொள்ளளவு இருக்கிறது.

ஒரே நேரத்தில் விமானி உட்பட மொத்தம் 5 பேர் மட்டுமே இதில் பயணிக்க முடியும். ஆனால் இந்த அளவு மற்ற நீர்மூழ்கி கப்பல்களைவிட பெரியது எனக் கூறப்படுகிறது.

கப்பலின் முன்புறத்தில் உள்ள குவிமாடத்தில் ஒரு பெரிய துவாரம் (porthole) இருக்கிறது. அதன் மூலம் நாம் கடலுக்குள் செல்லும் வழியைப் பார்க்க முடியும். இந்தத் துவாரத்தின் அளவு மற்ற எந்த நீர்மூழ்கிகளிலும் இருப்பதைவிட மிகப் பெரியது என அதன் நிறுவனமான ஓஷன்கேட் தெரிவிக்கிறது.

அதேபோல் அத்தகைய ஆழத்தில், நிலைமைகள் மிகவும் குளிராக மாறும் என்பதால், இந்த நீர்மூழ்கியின் சுவர்கள் தொடர்ந்து தன்னைச் சூடாக்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மட்டுமே இந்த பயணத்தின்போது கிடைக்கும் ஒளியின் ஒரே ஆதாரமாக இருக்கின்றன.

நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் பயணிகளுக்காக சிறியளவில் கழிவறையும் இருக்கிறது. பயணத்தின்போது ஒருவர் கழிவறையை உபயோகிக்க வேண்டுமென்றால், உள்ளே சென்று அங்கிருக்கும் திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும். அப்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக கப்பலின் பைலட் மெல்லிய இசையை ஒலிக்க விடுவார்.

ஆனாலும் இத்தகைய அசாதாரண ஆழ்கடல் பயணத்திற்குத் தயாராகும்போது, பயணிகள் தங்களது உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் டைட்டானிக் கப்பல் சிதலமடைந்து கிடக்கும் பகுதியை அடைந்த பிறகு, அதன் காட்சிகளை ஒளிரச் செய்யும் வகையில் நீர்மூழ்கியின் வெளிப்புறத்தில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,AMERICAN PHOTO ARCHIVE

அதோடு அந்தக் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக 4K கேமராக்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் பாதையை நிர்ணயிக்க வெளிப்புற லேசர் ஸ்கேனரும், சோனாரும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதை, நீர்மூழ்கிக்குள் இருக்கும் பெரிய டிஜிட்டல் திரையில், பயணிகளால் காண முடியும்.

டைட்டன் நீர்மூழ்கியில், 96 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இந்தப் பயணத்தின்போது பயணிகளின் சுவாச வீதத்தில் மாறுபாடு ஏற்படலாம்.

நீர்மூழ்கியின் பெரும்பாலான உட்பகுதி "off-the-shelf technology"இல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. இது இந்த கப்பலின் கட்டுமானத்தை சீரமைக்கவும், இதை எளிதான முறையில் இயக்கவும் பயன்படுகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

டைட்டன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

கடலின் ஆழத்திற்குச் செல்லும் இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்மால் பயன்படுத்த முடியாது.

அதற்குப் பதிலாக, ஒரு பிரத்யேக வகையில் செய்தி பரிமாரப்படும் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக கடலின் மேற்பரப்பில் இருக்கும் குழுவுடன், நீர்மூழ்கிக்குள் இருப்பவர்கள் அறிவுறுத்தல்களைப் பெற முடியும்.

இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், நீர்மூழ்கியின் பைலட் கப்பலைச் செலுத்துகிறார். வீடியோ கேம் கண்ட்ரோலர் போல இருக்கும் ஒரு சாதனத்தின் மூலம் அவர் நீர்மூழ்கியைத் தனது கட்டுப்பாட்டில் கடலுக்குள் செலுத்துகிறார்.

தற்போது தொலைந்து போயிருக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் விமானி ரஷ், கடந்த ஆண்டு சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, நீர்மூழ்கியை இயக்குவது அவ்வளவு சிரமமான காரியமல்ல என்று தெரிவித்திருந்தார்.

 

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

கடலின் ஆழத்தில் செல்லும்போது, அங்கு நிலவும் கடுமையான அழுத்தங்களை நீர்மூழ்கி கையாள வேண்டும்.

இதற்காக ’கப்பலின் ஒவ்வொரு நகர்வையும், உடனுக்குடன் கணிக்கும் கண்காணிக்கும் அமைப்பை’ ஏற்பாடு செய்துள்ளதாக ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் கடலுக்குள் நிலவும் மாறுபட்ட அழுத்த நிலைகளைக் கண்காணிப்பு செய்ய அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி கடலுக்குள் இறங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக்குழு அதை வெளிப்புறத்திலிருந்து பூட்டுகிறது. மேலும் 17 போல்ட்களை கொண்டு வெளிப்புறத்தில் சீல் செய்கிறது.

இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தப் பயணத்தில் பல சவால்களும், ஆபத்துகளும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம், அதன் விளம்பர வீடியோக்களிலேயே குறிப்பிட்டிருந்தது.

நீர்மூழ்கி, விபத்து, டைட்டானிக்

பட மூலாதாரம்,DIRTY DOZEN PRODUCTIONS

ஓஷன்கேட் நிறுவனத்தால் ‘டைட்டன்’ வடிவமைக்கப்பட்டபோது, நீர்மூழ்கி கப்பல்களைச் சோதனை செய்யும் வல்லுநர்கள் தங்களது ஒருமித்த கவலைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் வடிவமைப்பில் இருக்கும் ‘பேரழிவுக்கான சிக்கல்கள்’ குறித்து அவர்கள் அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோல் ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ வடிவமைப்பு குறித்து பல தவறான கூற்றுகளை ஓஷன்கேட் நிறுவனம் கூறி வருவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயணத்திற்கு முன் பயிற்சிகள் அளிக்கப்பட்டதா?

இந்தப் பயணங்களில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்களுக்கு, ஆழ்கடல் பயணம் மேற்கொள்வதில் கடந்த கால அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதேனும் பயிற்சிகள் தேவைப்பட்டால், அது ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பயணிகள் நிச்சயம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட இடத்தில் நீண்டநேரம் அமர்ந்துகொள்ளவும், ஏணியில் ஏறுவதற்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனவும் ஓஷன்கேட் நிறுவனம் கூறுகிறது.

மேலும் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் ஓஷன்கேட் கூறுகிறது.

அதேநேரம் "பயணத்தின்போது பயணிகள் எவ்வாறு ஈடுபட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம்" எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. தகவல்தொடர்பு குழுக்களுடன் பணிபுரியவோ அல்லது கப்பலின் பைலட்டுக்கு வழிசெலுத்துவதில் உதவும் வாய்ப்பையோ பயணிகள் பெறலாம் எனவும் ஓஷன்கேட் குறிப்பிடுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c721vgrzdn8o

  • கருத்துக்கள உறவுகள்

Update : ரைட்டானிக்கைக் காணச் சென்றவர்களும் உயிரிழப்பு!

ரைட்டானிக்கைக் காணச் சென்றவர்களும் உயிரிழப்பு!

டைட்டானிக்கப்பலின்  சிதைவுகளைப்  பார்வையிட  titan என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

‘ஓஷன்கேட்‘  நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த நீர் மூழ்கிக் கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 செல்வந்தர்கள் கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப் பட்டிருந்த நிலையில், கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை டைட்டன் இழந்தது.

இதனையடுத்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் titan னின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.

இதனையடுத்து நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி 22,00பேருடன் பயணித்த  டைட்டானிக் கப்பலானது அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிமலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 1,600 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிதைவுகளைப் பார்வையிடச் சென்ற 5 பேரும் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1336017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி?

டைட்டானிக்

பட மூலாதாரம்,DAWOOD FAMILY/LOTUS EYE PHOTOGRAPHY/REUTERS

23 ஜூன் 2023, 01:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது

இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது.

டைட்டானிக்

பட மூலாதாரம்,REUTERS

ஓஷன்கேட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

"எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைட்டானிக்

பட மூலாதாரம்,IFREMER/REUTERS/ OLIVIER DUGORNAY

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டானிக்

பட மூலாதாரம்,NOAA VIA SPL

எப்படி விபத்து நடந்தது?

அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு "பேரழிவு வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது.

ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது.

இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது.

புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள்.

நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள்.

தந்தைக்காக நீர்மூழ்கியில் சென்ற மகன்

டைட்டானிக்

பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP

நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள்.

பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார்.

தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவ்ரகள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது.

ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.

அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்.

ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார்.

அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார்.

நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார்.

நீர்மூழ்கி வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்தேன்: டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

ஜேம்ஸ் கேமரூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீர்மூழ்கியை இழந்துவிடுவோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

டைட்டானிக் கப்பலைக் காண கேமரூன் இதுவரை 33 முறை சென்று வந்திருக்கிறார்.

நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

"என்ன நடந்தது என்பதை நான் என் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது"

"ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்"

"அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு'"

https://www.bbc.com/tamil/articles/c97nq3r1qvno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாக உயிரிழந்திருப்பார்கள் - அமெரிக்க கடற்படை மருத்துவர்

23 JUN, 2023 | 12:19 PM
image
 

டைட்டானிக்  சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாகவே உயிரிழந்திருப்பார்கள் என அமெரிக்ககடற்படையின் முன்னாள் மருத்துவர் டேல்மோல் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என அவர்தெரிவித்துள்ளார்.

உள்ளே சிக்குண்டிருப்பது இன்னமும் மோசமான நிலையாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்திருக்கும் என நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும்,மிகுந்த குளிராக காணப்படும் ஒக்சிசன் முடிவடையும் நிலை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/158400

  • கருத்துக்கள உறவுகள்

Image

 

Image

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவை ஒரு பாடமாக இருந்தாலும் இனிமேலும் தொடராமலா இருக்கப் போகுது........சாகசவீரர்கள் ஒருபோதும் சும்மா இருக்க போவதில்லை........!   😢

  • கருத்துக்கள உறவுகள்

நீர்மூழ்கி நொருங்கி எல்லோரும் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

(அதீத அழுத்தம் காரணமாக இருக்கலாம் ☹️ )

Titanic sub suffered 'catastrophic implosion,' all five aboard dead

By REUTERS   
Published: JUNE 23, 2023 00:52
Updated: JUNE 23, 2023 07:41
The Titan submersible, operated by OceanGate Expeditions to explore the wreckage of the sunken Titanic off the coast of Newfoundland, dives in an undated photograph (photo credit: OceanGate Expeditions/Handout via REUTERS)zoom-image-icon.svg
The Titan submersible, operated by OceanGate Expeditions to explore the wreckage of the sunken Titanic off the coast of Newfoundland, dives in an undated photograph
(photo credit: OceanGate Expeditions/Handout via REUTERS)

"The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said.

The five people aboard a missing submersible died in a "catastrophic implosion," a US Coast Guard official said on Thursday, bringing a grim end to the international search for the vessel that was lost during a deep-sea voyage to the wreck of the Titanic.

"These men were true explorers who shared a distinct spirit of adventure, and a deep passion for exploring and protecting the world's oceans," OceanGate Expeditions, the US-based company that operated the Titan submersible, said in a statement. "Our hearts are with these five souls and every member of their families during this tragic time."
An unmanned robot deployed from a Canadian ship discovered the wreckage of the Titan on Thursday morning about 1,600 feet (488 meters) from the bow of the century-old wreck, 2-1/2 miles (4 km) below the surface in a remote area of the North Atlantic, US Coast Guard Rear Admiral John Mauger said at a press conference.
 
 

"The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said.

https://m.jpost.com/international/article-747358

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழுப்பெடுத்த விளையாட்டுக்கள்,பொழுது போக்குகள்  நிறுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. 

இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan.

உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. 

இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan.

உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே. 

அதே அதே..⁉️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.