Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோழிமுட்டைக் கண்ணன்! அதுதான் பெருத்த முழிகொண்ட கணக்கு வாத்தியாரின் பட்டப்பெயர். இந்தப் பட்டப் பெயரை மாணவர்கள் அவருக்குச் சூட்டியிருப்பது வாத்தியாருக்கும் தெரியும். அதற்குப் பழிதீர்ப்பது போன்று, முட்டை முட்டையாகக் கணக்குகளை இடுவார்! நாங்கள்தான் அதனைப் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும். கோழிகளுக்குக்கூட 21 நாட்கள் அவகாசமுண்டு! ஆனால் எங்களுக்கோ...! இரண்டொரு நொடிகளில் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும்! சற்றுப் பிந்தினாலும் பென்சிலுக்கும் அவர் விரலுக்கும் இடையே அகப்படும் காதுமடல், அடுத்த நாள்வரை தொட முடியாதபடி வீங்கி வலிக்கும். அந்தப் பரிதவிப்பைப் பார்த்து அம்மாதான் எண்ணைபோட்டுத் தடவி ஒத்தணம் தந்து ஆறுதல்படுத்துவா. பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் நாங்கள் கிளித்தட்டோ, கிட்டிப்புள்ளோ விளையாடுவதைக் கண்டால் போதும்! வீங்கி வலித்த காதை மறுநாள் உயிரையே வாங்குமளவிற்கு வலிக்கச் செய்துவிடுவார். அந்தப்பயத்தில்  அவரது கண்ணில் படாது எங்களை பாதுகாத்துக் கொள்வதில் நாங்கள் பூரண பயிற்சியும் எடுத்துக்கொண்டோம். குட்டியானை போன்ற வாத்தியாரைச் சுமந்துவரும் பூனைக்குட்டி அளவான அவரது ஓட்டோசயிக்கிள் எழுப்பும் பேரொலி, எங்களுக்குப் பேருதவி புரிந்தாலும்! இடையிடையே நாங்கள் மாட்டிக்கொள்வது உண்டு. 
 
வாத்தியார் வீட்டிற்கு முன்புறம் பிதான வீதி. பின்புறம் பரமேசுவராக் கல்லூரி. அவர் வீடு பூக்கள், காய்கள், கனிகளென்று மரங்களால் சூழ்ந்த சோலைவனம். மா, பலா, மாதுளை, தோடை, நாவல், சம்புநாவல், தண்ணீர்க்காய், விளிம்புரிக்காய் எனப் பழமுதிர்ச் சோலையாக  விளங்கியது. சோலைக் காய்கனிகள் வாயூற வைத்தாலும்! கல்லூரிப்பக்கமிருந்த வேலிக்கு அருகேதானும் நாங்கள் போகமுடியாது! வேலி ஓரமாகவே கல்லூரி மாணவிகளின் மலசல கூடம் இருந்ததால், அந்தப்பக்கம் மாணவர்கள் தலைவைத்தும் படுக்கமுடியாது!! பொம்பிளைப் பிள்ளைகள் வேலிபாய்ந்து மாங்காய் தேங்காய் புடுங்கமாட்டர்கள் என்பது தமிழர் கலாச்சாரத்தின் ஒரு ஆழமான நம்பிக்கை....!வாத்தியாரோ! நப்பிக்கும் நப்பி! அணில்கடித்த பழமானாலும்! ஐந்து காசு வாங்காமல் கொடுக்கமாட்டார். ஆனால் துணைவியார்..! கைநிறையச் சோற்றோடு காகம் கலைப்பவர்! வாத்தியாரிட்டை படிக்கிற மாணவ மாணவிகளுக்கு ஏதும் கொடுத்து மகிழ்வதற்கு ஆவலுள்ள அவருக்கு, வாத்தியாரிடம் பயமென்றால்! அப்படியொரு பயம்! அதனால் நாங்கள் பள்ளிக்கூட வாத்திமார் கூடிக்கதைக்கும் இடைநேரம் பார்த்துப், பக்கத்துப் பனைவளவைச் சுற்றிச் சென்று, அங்கு வேலியில் உள்ள ஒரு கண்டாயத்தின் ஊடாக உள் நுளைந்து, மாணவிகளும் விரும்பிக்கேட்ட மாங்காய், தண்ணீர்க்காய், விளிம்புரிக்காய் என்று அடித்துவந்து கொடுப்பதும். அதனை அவர்கள் உண்டு அனுபவிக்கும் ஆனந்தம்கண்டு! இன்பப் பெருமகிழ்ச்சி அடைவதும்! அடிக்கடி நடைபெறும் ஒரு சம்பவமாகவும் திகழ்ந்தது! 
 
ஒருநாள் நண்பன் பாலா, பிரதான வீதியால் வாத்தியார் வீடுகடந்து வரும்போது! வீட்டு மதிலோடு இருந்த பலாமரத்தில் காய்த்திருந்த பலாக்காய்களில் கண்போய்விட்டது! பருத்தும், பெருத்தும், முள்விரிந்த காயொன்று மதிலால் எட்டித் தொடக்கூடிய உயரத்தில் இருந்ததால், அவனுக்கு அதனை ஒருமுறை சுண்டிப்பார்க்கும் ஆசையும் வந்துவிட்டது! அதனால் அன்று நன்றாக இருட்டியபின்பு சென்று சுண்டிப்பார்த்தான். ஆள் கொஞ்சம் கட்டையானதால், ஒரு கல்லைவைத்து ஏறிச் சுண்டியபோது, கல்லுப் புரண்டு கால்சறுக்க, அவன் விழுந்த அரவத்தையடுத்து ''யாரது..?'' என்ற அதட்டல் பலாமரத்தடியில் இருந்து எழுந்தது. பதை பதைத்துப்போன பாலா! ஓடினால் சந்தேகம் ஏற்படும் என்றெண்ணிக் காற்சட்டையைக் சிறிது கழற்றிப் பிடித்தபடி மதிலோடு ஒன்றிவிட்டான். கேற்றுக்கு மேலால் ரோச்லைற் ஒன்று துளாவி வந்து அவன்மேல் ஒளி பாச்சிவிட்டு அணைந்தது. ''டேய் அங்காலை பத்தை இருக்கிறது கண்ணுக்குத் தெரியல்லையாடா...? அங்கைபோய் இருடா!'' என்ற கட்டளையும் பிறந்தது. அப்போது வீட்டுக்குள் இருந்து வாத்தியாரின் குரல் கேட்டது! ''என்ன பொன்னா? என்ன சத்தம்?'' பொன்னன் நகைச்சுவையோடு பதில் சொன்னான். ''ஒன்றுமில்லை ஐயா வெளியிலை ஒருத்தன் எங்கடை மதிலுக்குத் தண்ணிபாச்சுறான்.'' நல்ல காலம்! படுகஞ்சத்தனம் கொண்ட வாத்தியார் ரோச்சுலைற்றுக்குப் புதுபற்றறி போட்டுக் கொடுக்கவில்லை, அதனால் மங்கிய வெளிச்சத்தில் பொன்னன் பாலாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ''இரண்டாவது சோ படம் பார்த்துவிட்டு வாறதுகள் வந்துபோகுமட்டும் கவனமாயிருந்தால் போதும், மற்றும்படி நீ அங்கு காவல் காக்கத் தேவையில்லை!'' பொன்னனுக்கான வாத்தியாரின் அறிவுரைப்படி, தோட்டம் கொத்தும் பொன்னனை, வாத்தியார் பலாக்காய்களுக்கு காவல் வைத்திருப்பதும், காவல் காக்கும் நேரமும், பாலாவின் மூலமாக எங்கள் அனைவருக்கும் தெரியவந்தது,   
 
மறுநாள் இரவு 9மணியிருக்கும், நண்பர்கள் நாங்கள் சங்க நூல்நிலயத்தின் முன்படிக்கட்டில் இருந்து, படிகளையும் பளிங்குபோல் தேய்த்துத் துலக்கி, அரட்டையடித்து ஆனந்தமாக இருந்த வேலையில்! வாத்தியாரின் பலாக்காய்க் காவல் கதையும் எழுந்து அனைவரையும் சிரிக்கவைத்தது! பலாக்காய் நன்றாக முற்றிவிட்டது என்று சுண்டிப்பார்த்து அறிந்ததைப் பாலா சொல்லச் செவிமடுத்த செவிகள், செய்தியை மனதுக்குள் அனுப்பியது. இனிமையான கானங்களை, வாத்தியார் தந்த வலிகளையும் பொருட்படுத்தாது உள்வாங்கிச் சிந்தை குளிரவைத்த செவிகளுக்கு உதவிட மனங்கள் விரும்பின. ஆகவே செவிகள் இதுவரை வாத்தியாரிடம் பெற்ற வலிகளுக்குப் பழிதீர்க்கும் முகமாக அந்தப் பலாக்காய்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்தன. நாங்களும் கோரிக்கையைத் தட்டாது நிறைவேற்றும் கடமை வீரர்களானோம்! பொன்னன் காவலுக்கு நிற்கும் நேரமும் சந்தேகமின்றித் தெரிந்திருந்தது. பெரியவரானாலும்! இளைஞர்களான எங்ளோடு சேர்ந்து கும்மாளமடிப்பதில் கில்லாடியான மகிழுந்துஓட்டி கணேசண்ணை உதவிக்கு வந்தார். அவரின் உதவியோடு, வாத்தியார் மரத்துப் பலாக்காய்கள் இரண்டு மகிழுந்தில் ஏறி, நூல்நிலயத்தில் பழைய புத்தகங்கள் நிறைந்த பறண்மேல் ஏறிப் பதுங்கிக்கொண்டன. 
 
அன்று சந்தை களைகட்டியிருந்தது. அம்மா சொன்ன காய்கறிகளை வாங்கிவரச்  சந்தைக்குப் போயிருந்தேன். ''கோட்டை முனியப்பருக்கு நேர்ந்துவிட்ட பலாக்காயை வெட்டிப்போட்டாங்கள்! வெட்டினவங்களை எனக்குத் தெரியும்! ஆனால் நான் கேட்கமாட்டேன்! முனியப்பர் கேட்பார்...!'' வாத்தியார்தான் சந்தைக் குத்தகைக்காரர் கந்தையாவுடன், பக்கத்தில் நின்ற விதானையாரிடமும் சத்தம்போட்டுச் சொல்லிய செய்தி..! சந்தை இரைச்சலையும் ஊடறுத்தது, அங்கு கூடிநின்ற அனைவரது காதுகளிலும் வீழ்ந்தது! விதானையாருக்கு எங்கள் குறும்புகள் அனைத்தும் அத்துப்படி ஆனதால், அவரது சந்தேகக் கண்கள் என்னையும் ஒருமுறை நோக்கிவிட்டுத் திரும்பியது. வாத்தியார் தெரிவித்த செய்தியானது! நண்பர்கள் எல்லோருக்கும் சென்றபோது! அனைவருக்கும் குலப்பன் காச்சல் பிடிக்காத குறைதான்! எந்தக் கடவுளிடமும் இல்லாத பயம், மதவேறுபாடின்றி எங்கள் அனைவருக்கும் கோட்டை முனியப்பரிடம் உண்டு.  
 
பழுத்து மூக்கைத் துளைக்கும் வாசனையைப் பலாக்காய்கள் வெளியிட முனைந்தன, வெட்டிச் சுவைக்கும் ஆசையை முனியப்பர் தட்டிப் பறித்துவிட்டார். மீறிச் சுவைத்தால்! எங்கள் இரத்தம் முனியப்பரால் சுவைக்கப்படும்! இதனால் என்ன செய்வதென அறியாது பயம் மேலோங்கியது. மேலும் அறையில் வைத்திருந்தால், பலாப்பழ வாசனை அங்குவரும் மற்றவர்களையும் ஈர்த்து எங்களை அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிடும். ஆசையோடு உண்டுமகிழவும் முடியாத நிலை! யாருக்காவது தெரிந்தவர்களுக்கு தானமாகக் கொடுத்தாலும் பிடிபடுவோமோ என்று பயம்! தெரியாதவர்களுக்கு கொடுத்தாலும் ஐயம் ஏற்படுமோ என்றும் பயம்! ஆகவே சந்தையில் கொண்டுசென்று விற்றுவிடும் யோசனையே, சிறந்ததாகத் தெரிந்தது. சரி எங்கு விற்பது? திருநெல்வேலிச் சந்தை? பழஞ்சந்தை? பெரியகடை? இங்கு எல்லாமே எங்கள் ஊர்ப்பெரிசுகளும் சுத்தித்திரிகிற இடங்கள். இருந்தும் ஒரு வழி தெரிந்தது! இப்போ திருவிழாக்காலம்! சின்னக் கடைப்பக்கம் இந்தப் பெரிசுகள் எட்டியும் பார்க்கமாட்டுதுகள். அவர்களின் மனைவிமார் மச்சக்கறி காச்சும் சட்டிகளைக் கண்ணிலும் படாது, கோடியிலிருக்கும் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியிருப்பார்கள். ஆகவே சின்னக்கடை பாதுகாப்பான இடமாகப் பட்டது. வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கும் உயிருக்குயிரான நண்பன் ஒருவனின் உதவியும் கிடைக்கவே, கணேசண்ணையின் மகிழுந்திற்கு பெற்றோல் போடும் ஒப்பந்தத்தோடு, செலவை அனைவரும் பங்குபோட்டுக் கொள்வதாகவும் முடிவாகியது. நண்பன்மூலம் பலாப்பழங்கள் இரண்டும் சின்னக்கடையில் விற்கப்பட்டன. 
 
''தம்பியவை! கொஞ்சம் நில்லுங்கோ! படையல் முடியுது! புக்கை, மோதகம், வடை சாப்பிட்டுப்போகலாம்...!'' பலாப்பழங்கள் விற்ற பணத்தில் வாங்கிய தேங்காய்களை சிதற அடித்துக் கற்பூரமும், சந்தணக்குச்சுகளும் கொளுத்தி, முனியப்பரை உள்ளம் உருக வணங்கிவிட்டு! மீதிப்பணத்தையும் உண்டியலிலும் போட்டுவிட்டுத் திரும்பியபோது, அந்த அசரீரி கேட்டது!. ஆச்சரியத்துடன் நாங்கள் திரும்பிப் பார்த்தோம். ஏதோ நேர்த்திக்காக முனியப்பருக்கு அன்று படையல் செய்தவர் அழைப்பதைக் கண்டோம்! ஆனாலும் அது அந்த நேர்த்திக்கரரின் அழைப்பைப் போல் தெரியவில்ல! நாங்கள் உள்ளம் உருகிப் பிழை பொறுத்தருள வேண்டிய கோட்டை முனியப்பர் அழைத்தது போலவே கேட்டது! மனப்பாரத்தை இறக்கிவைத்த முனியப்பர், படையல் பிரசாதப் பாரத்தை எங்கள் வயிற்றில் ஏற்றிவைக்க மகிழ்ந்த நாங்கள், மகிழுந்தில் ஏறி அமரவும், மகிழுந்து இந்து வாலிபர் சங்க மண்டபத்தை நோக்கிப் பறந்தது. 
 
மகிழுந்து ஓட்டி கணேசண்ணைக்கு இடைக்கிடை வயதுக்கேற்ப, ஞானம் பிறப்பதுண்டு. அந்த ஞானம் எங்களிடம் பெற்றோலுக்கு பணம்வாங்கும் போதும் பிறந்தது. ''தம்பியவை! 'களவும் கற்க மற' என்று எங்கள் முன்னோர்கள் சொல்லிவைத்தது எவ்வளவு உண்மை....! வந்த பலாப்பழங்கள் உங்களுடைய வாய்க்குக் கிட்டாது போனாலும் பரவாயில்லை, போனது போகட்டும். ஆனால் உங்களிடம் இருந்த உங்கள் பணத்துக்கும் செலவு வைச்சிட்டுது பாத்தீங்களே..!!'' இனிமேல் என்றாலும் நல்ல பிள்ளைகளாக இருக்கப் பழகுங்கோ! புத்திமதி சத்தியமாய் உறைத்தது!
 
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை முனியப்பருக்குப் பயந்து அருமையான பலாப்பழங்களை கோட்டை விட்டிட்டீங்களே.. :(:D

அண்ணை கலக்கிறீங்க .

தொடர்ந்து எழுதுங்கள் ,இலகு நடையில் நகைச்சுவையுடன் பஞ்சாமிர்தம் சாப்பிட்ட திருப்தி .

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக உங்கள் அனுபவக் கதையைப் பதிந்துள்ளீர்கள். தொடர்ந்தும் உங்கள் குறும்புக் கதைகளை வாசிக்க ஆவலாக உள்ளோம் பாஞ்ச்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை 'கோழி முட்டைக் கண்ணன்' வாத்தியார் ஒரு கணக்கு வாத்தியார் மட்டுமில்லை!

 

நல்ல உளவியல் வாத்தியார் போலவும் கிடக்கு! :D

 

சின்னக்கடை ஐடியா தான் உங்கள் அனுபவப் பகிர்வின் 'உச்சம்'! இருந்தாலும் அதிஸ்ட தேவதை உங்களுடன் இருந்த படியால தப்பிற்றீங்கள் போல கிடக்கு!

 

சில வாத்திமார் தங்கட 'அல்சேசன்' நாய்க்கு மாட்டிறைச்சி வாங்க, விரதகாலத்திலும்' சின்னக்கடைக்கு வாறது கண்டிருக்கிறன்!

 

தொடருங்கள், பாஞ்ச்!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

சேட்டைகள்  நினைவுகளை  தூக்குகின்றன

அந்தந்த வயசில்

அவை அவை நடக்கணும்

செய்யணும்

அது காலம் பூராகவும் கூடவரும்........

 

எங்கள் ஊரிலும்  ஒரு நிகழ்வு நடந்தது

வீட்டு நகையைக்காணவில்லை என்று 

அம்மனுக்கு பலி  வைத்தார்கள்

சொந்த மகனே வலி  வந்து இறந்தார் (கண்ணால் பார்த்தது)

இதில் ஆச்சரியம்  என்னவென்றால்

இது அம்மனுக்கு பலி  வைத்த

சொந்த தகப்பனுக்கு முன்பே தெரிந்திருந்தது தான் :(  :(

 

தொடருங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவங்களை இயல்பாய் இரசிக்கும்படி சொல்லியுள்ளீர்கள் ...!

 

இவற்றைப் படித்ததும் ஞாபக அடுக்கில் இருந்து இரு சம்பவங்கள் !

 

ஒருமுறை  கந்தர்மடத்தடியில் இருக்கும்  ஒரு பட்டறையில் விதானையார் வந்தார் , நல்ல பழக்கம். சுமார் 40 வருடத்துக்கு முன். அவர் முதலாளியிடம்  தம்பி வீட்டில லொறி நிக்குது யாராவது ஓடக்  கூடியவர்கள்  இருந்தால் வீட்டை போய் அதைக் கொண்டுவந்து பவர், பின்னுக்கு கம்பிகள் நெளிந்து கிடக்கு என்று திறப்பைக் கொடுத்து விட்டுப் போட்டார். முதலாளிக்கும் றைவிங் தெரியாது. அப்ப அங்கு அவரது நன்பர் ஜோசப்  இருந்தார் .

 

ஜோசப், மிக நல்ல  அண்ணர். அவரது வேலை சயிக்கிள் பார்,மட்கார்ட், செயின் கவர் எல்லாம் அழகாய் பெயின்ற் அடிப்பார். பின்பு  ரலி, ரட்ஜ் ,பி.எஸ். ஏ போன்ற எந்தச் சயிக்கிலானாலும்  அவற்றின் எம்பிலங்களை அச்சில் வார்த்ததுபோல் கீறி. மஞ்சள், சிவப்பிலான மெல்லிய கோடுகளை அப்படியே வரைவார். அதனால் அவருக்கு னிறைய ஓடர்கள் எல்லா சயிக்கிள் கடைகலில் இருந்து வந்து கொண்டிருக்கும். அவர் பெரும்பாலான நேரம் அங்குதான் இருப்பார். அந்தக் காலத்தில் அவ்ரிடம்தான் முன் கான்டில் வளைந்த , பிரிவீல் பண்னமுடியாத ரேசிங் சயிக்கிள் இருந்தது. அதை எல்லொராலும் ஓட முடியாது, அதனால் யாரும் அதை இரவல் கேட்பதும் இல்லை. ( பின்னாளில்  நான்  சாதாரண  சயிக்கிளுக்கு பிரிவீலை போல்ஸ் எடுத்துவிட்டு  பித்தலையால் ஒட்டி அதைப் போல் பின்னுக்குச் சுத்தாதபடி வைத்திருந்தேன்.)

 

ஜோசப்பிடம் முதலாளி கேட்டார் உமக்கு லொறி ஓடத் தெரியுமோ என்டு.

இவரும்  ஓ.ஓ  நான் மீன் லொறியெல்லாம் ஓடியிருக்கிறன் உவற்ற கம்பிலொறி என்ன பெரிய இதெ வண்டில் மாதிரி என்டார் . இவர் பெரிசாய்  காரோடியும் நாங்கள் கானேல்ல. சும்மா கராஜ்ஜுக்க முன்னுக்கு,பின்னுக்கு எடுத்து விடுறதோட சரி.

அப்ப நீங்கள்  இரண்டு பேரும் போய்  விதானையாற்ர  வண்டில எடுத்துக் கொண்டு வாங்கோ என்டு சாவியைத் தந்தார்.

 

நாங்கள் இருவரும் அங்கு போய் அந்த செவர்லட் லொறியை முன்னுக்கு கம்பி போட்டுச் சுத்திச் ஸ்ராட் பண்ணி ஒரு மாதிரி அந்தக் கேட்டால பெரிய கஸ்டப்பட்டு றோட்டுக்கு எடுத்து வந்து தண்டவாளத்தால ஏற்றி லேடீஸ் கொலிஜ் பின் ஒழுங்கயால வரும் போது , அது மிகச் சிறிய ஒழுங்கை ஒருபக்கம் பள்ளிக்கூடச் சுவர், மறுபக்கம் சீமைக்கிலுவை மர வேலி, அதுக்குள்ளால இவர் வேலிப் பக்கமாய் வண்டியச் செலுத்த அது உள்ள கதியால் எல்லாம் பட, படவென முரித்துக்கொண்டு வருகுது அப்ப ஒரு பொடியன் சயிக்கிளில எதிர் வந்து லொறிக்கு ஸ்டைலாய் வெட்டி கடக்க அவரது சேட்டு லொறிக்கம்பியில் பட்டு கிழிந்து விட்டது. பொடியன் அழுது கொண்டு லொறிக்குப் பின்னால வாறான். ஒருமாதிரி பக்கத்திலதான் பட்டறை , கொண்டுவந்து விட்டாச்சுது.

 

பொடியன் முதலாளியிடம் ,அண்ண  இவயள் என்ட சேட்டை கிழிச்சுப் போட்டினம் என்டு அழ ,விதானையாரும் வந்திட்டார். என்ன பிரச்சினை என்டு கேட்டிட்டு அவர் பொடியனிடம் , சரி நீ அழாத நான் உனக்கு புதுச் சேட்டு வாங்கித்தாறன் என்டார்.

பொடியன் குளறி ஐயோ  இது சிங்கப்பூர் சட்டை மாமி அனுப்பினவ இப்படியெ வீட்ட போனால் அப்பா கொன்டு போடுவார் என்டு அழுகிறான்.சரி நீ வா நான் வந்து அப்பாட்டச் சொல்லுறன். என்டுட்டு ஜோசப்பத் தேடினால் ஜோசப் லொரியால சயிக்கில இறக்கிக் கொண்டு பறந்திட்டுது.

 

பிறகு  கொஞ்ச நாளால விதானையார் அங்கு வந்தார். அப்ப ஜோசப் அவரைப் பார்காதமாதிரி  சயிக்கிலுக்கு  பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். விதானையார்  போய் அவற்ர முதுகில தட்டி  தம்பி ஜோசப் இந்த லொறியை ஒருக்காய் வீட்ட கொண்டுவந்து விடுமன்  என்னிடம் இன்னுமொரு சிங்கப்பூர்  சேட்டு கிடக்கு.

 

அடுத்த சம்பவம் பிறகு, பசிக்குது.

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ...குறும்புகளை நினைவூட்டிபார்ப்தும் ஒரு சுவை... :D

இப்பவெல்லாம் பாஞ்சுவின்ரை கதையை தேடி வாசிக்கச் சொல்லுது மனம் . இந்தக் கதையிலை நான் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டன் . அந்த சொல்லு இப்ப யாருமே பெரிய அளவிலை பாவிக்காத சொல்லு . அதுதான் " கண்டாயம் " . கண்டாயம் எண்டால் வேலி பொட்டு எண்டுறது என்ரை விளக்கம் . பாஞ் ஒருக்கால் விளங்கப்படுத்த முடியுமா ?? கதைக்குப் பாராட்டுக்கள் பாஞ்  :)  :)  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வாத்திமார் தங்கட 'அல்சேசன்' நாய்க்கு மாட்டிறைச்சி வாங்க, விரதகாலத்திலும்' சின்னக்கடைக்கு வாறது கண்டிருக்கிறன்!

 

தொடருங்கள், பாஞ்ச்!

 

நாய் வளர்த்தால் அதுக்கும் சோறுபோட மனிசி ஒரு சுண்டு அரிசி கூடப்பொங்கிப் போடும் என்று, பறை நாய்கூட வளர்க்க விரும்பாத கஞ்சல் வாத்தியார்! அல்சேசன் நாய் வளர்த்து விடுவாரா..! அவருடைய கருமித்தனம் மேலும் யாழில் மீட்டப்படும்போது உங்கள் நெஞ்சமும் ஆடிவிடும், புங்கை அவர்களே!! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் பாஞ்சுவின்ரை கதையை தேடி வாசிக்கச் சொல்லுது மனம் . இந்தக் கதையிலை நான் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டன் . அந்த சொல்லு இப்ப யாருமே பெரிய அளவிலை பாவிக்காத சொல்லு . அதுதான் " கண்டாயம் " . கண்டாயம் எண்டால் வேலி பொட்டு எண்டுறது என்ரை விளக்கம் . பாஞ் ஒருக்கால் விளங்கப்படுத்த முடியுமா ?? கதைக்குப் பாராட்டுக்கள் பாஞ்  :)  :)  .

 

உங்கள் விளக்கம் சரியானதே! கூடுதலாகப் பெண்கள் தங்கள் முகத்தை வெளியாருக்குக் காட்ட நாணமுற்று வேலியினூடாகப் புதினம் பார்க்க இடப்படும் ஒரு துவாரம், பொட்டு என அழைக்கப்படுகிறது. அதுவே ஓர் ஆள் நுளையும் அளவிற்கு பெரிதாகும்போதும் பொட்டாகவே அழைக்கப்பட்டு, ஆள் கடக்கும் அளவு பெரிதாகும்போது கண்டாயம் எனவும் அழைக்கப்படுகிறது. அதிகமாக தோட்ட வேலிகளில் பிரதான நுளைவாயிலை அடுத்திருக்கும் சிறிய துவார வாயில்கள், தோட்ட வேலை செய்பவர்களினால் இன்றும் கண்டாயம் என அழைக்கப்படுகிறது. கண்டாயத்தைக் கடவை, கடப்பு, துவாரம், வழி, எனக் குறிப்பிடும் சொற்களும் அகராதியில் உண்டு. இவையே நான் அறிந்தவை. மேலும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் வாலிபக்குறும்பு நன்றாக செல்கிறது... ஒரு சம்பவத்தை அதனை விபரிக்கும் தன்மையால் மென்மேலும் மெருகேற்றி கேட்பவரை இரசிக்கத் தூண்டுவது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை சிலருக்கு அது ஒரு வரம். இரசித்து வாசிப்பது இந்தக் கதையில் மாத்திரம் அல்ல பாஞ்ச் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளையும் வாசிக்கும்போதும் இரசிக்கிறேன்.....எழுத்தைக் கையாள்வதைக்காட்டிலும் இப்படி இரசிப்பதில் பேரின்பம் இருக்கிறது. தொடர்ந்தும் உங்களின் சனரஞ்சகமான படையலுக்காக.... பார்த்திருக்கிறோம்...என்ன பன்மையில் சொல்கிறாளே என்று நினைக்கவேண்டாம்..உங்கள் எழுத்தை வாசிக்க அப்படி ஒரு கூட்டம் அலைமோதுகிறது...  :rolleyes:  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் பாஞ்சு பாஞ்சு தமிழ் வகுப்பில முன்னுக்கு நிக்கேக்கயே நினைச்சம் இப்பிடியொரு கதை(தா)நாயகன் தான் என்று. அதை உங்கள் வாலிபக்குறும்புகள் மெய்யாக்கியுள்ளது. இளமைக்கால நினைவுகளும் சரி இளமை கடந்த கால நினைவுகளும் சரி நினைவுகள் என்றும் இளமையோடுதான் வாழும். அதற்கு உங்கள் பகிர்வும் சாட்சியாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாலிப வயதுக் குறும்பு பாகம் - 2´ம் கலக்கலாக இருக்கு பாஞ்ச்.
சுவியின் சிங்கப்பூர் சட்டையும் அருமை, ரசித்து வாசித்தேன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதிச் சிறப்பித்த இசைக்கலைஞன், அர்யுன், மெசொபொத்தேமியா சுமேரியர், புங்கையூரன், விசுகு, சுவி, நிலாமதி, கோமகன், வல்வை சகாறா, சாந்தி, தமிழ்சிறி இவர்களுடன், மேலும் என் பதிவை ரசித்து என்னைப் பசுமையாக்கிய அலைமகள், நந்தன், குமாரசாமி அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்து ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறேன்!!. :wub:

 

''நாளெல்லாம் கணணியை விரலால் தட்டிக் கொஞ்சி மகிழும் உங்களுக்கு, ஒரு தேங்காயைத் தட்டி உடைத்துத் தரும்படி வேண்டும் என் கெஞ்சல் கேட்கவில்லையே...!'' என்ற ஆதங்கத்தில் கண்ணீர் வடிக்கும் என் மனைவியின் கண்ணீரையும் கண்டு துடிக்கிறேன்!!. :o:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின்ர கதை நல்லாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சுவை கிண்டினால் பாஞ்'சுவை'க் கதைகள் பல வெளிவரும் போல இருக்கே! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சுவை கிண்டினால் பாஞ்'சுவை'க் கதைகள் பல வெளிவரும் போல இருக்கே! :)

 

என்னைக் கிண்டவருவது...!  ராசவன்னியரா..?  :o  ராசகன்னிகையா...??  :wub:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கிண்டவருவது...!  ராசவன்னியரா..?  :o  ராசகன்னிகையா...??  :wub:

 

 

அக்காளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் அத்தானின் கனவில் கல்லெறியுமாறு. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்காளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் அத்தானின் கனவில் கல்லெறியுமாறு. :lol:

 

எய்தவன் வன்னிக் காட்டில் பதுங்கியிருக்க! அம்பைமட்டும் நோவதேன் சாந்தி??. சாந்தியடையுங்கள் சாந்தி!!.  :(

Edited by Paanch

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உங்களின் அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.