Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் எதிர்காலம் - பகுதி 1

Featured Replies

முன்குறிப்பு
இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. 
எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். 

***

எனது பாதை எங்கு செல்கிறது?

சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. வெளிநாடு போய்வந்தவர்களின் புழுகல்கள் மூலமாக கனவுகளை வளர்த்துக் கொண்டேனே தவிர யதார்த்தமான நிலமையைச் சிறிதளவேனும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத நிலமை. பட்டப்படிப்பில்லாமல் எங்கோ எப்படியோ நுளைந்து சுமாராக முன்னேறியிருந்தாலும்  தற்போதைய வாழ்க்கையைக் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் படிப்பில் நேரடியாகத் தலையிடுவதில்லை. படிப்பு என்பது முதலில் எமது அறிவை வளர்த்துக் கொள்ளவே, வேலை இரண்டாம் பட்சம் என்றே கருதுகிறேன். அவர்கள் பிற்காலத்தில் ஓரளவு வசதியாக வாழக்கூடிய வகையில் சொத்து சேர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 

இனி என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே ! 

நான் குறைந்தது 5 வருடங்களாவது திட்டமிட்டு செயற்படுவது வழக்கம். ஆனாலும் பல தடவைகள் இலக்குகள் மாறி வேறு விதமாக அமைந்து விடுகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நான் எதிர்பார்த்த/எதிர்பாராத விதமாக வாழ்க்கை நகர்ந்தாலும் அன்று முதல் என்னுள் மாறாமல் இருப்பது நான் தமிழன் என்ற பெருமை மட்டுமே. 

நான் மேலே குறிப்பிட்டதுபோல் எனது உழைப்பில் தேடிய சொத்தினை (அது சிறிதாக இருந்தாலும்) எனது பிள்ளைகள் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் ஓரளவு தமிழ் பேசுவார்கள். எழுத்துக்கூட்டி வாசிக்கவும் முடியும். இலங்கையில் எமது உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். மற்றப்படி எமது பழக்கவழக்களோடு ஒன்றியிருந்தாலும் அவர்களின் தமிழ் கலாச்சாரம் என்பது பொலிவூட், சாமத்தியவீடு போன்ற கொண்டாட்டங்களுடனேயே மட்டுப்படுகிறது. இதையெல்லாம் நியாயப்படுத்தி அவர்களைத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. பிரெஞ்சுக்காரர்கள். சில பெற்றோரைப்போல் தமிழர்களுக்குள் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப் பட்டாலும் கூட அடுத்த சந்ததி என்னவாகும் என்பது நிச்சயமில்லை. 80-90 களில் வந்தவர்களே இன்று வெள்ளைக்காரப் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நிலையில் எனது உழைப்பினை எனது பிள்ளைகளுக்குப் பின் வெள்ளைக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். இக் கருத்தினை வைத்து என்னை இனவெறியனாகக் கருத வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

***
 
முதுமையும் தாழ்வும்

மனித நாகரிகம் தோன்றிய முற் பகுதிகளில் மக்கள் வீடு கட்டுவதும் விவசாயம் செய்வதுமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்கான காரணம் பெற்ற அனுபவத்தினை இலகுவாக அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாததாக இருக்கலாம். இலகுவான எழுத்து வடிவங்கள் தோன்றியபோது மனித வளர்ச்சி வேகமடைய ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகள் இடைவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளும் முடிவுகளும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  கணணி, தொலைத்தொடர்பு வருகைக்குப் பின் வயது வித்தியாசமின்றி எல்லோராலும எல்லாத் தகவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் அலசி ஆராயக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் 70 வயதானவரை விட 20 வயதான ஒருவருக்கு அதிகமான தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் குறைந்து போகின்றது.

சென்ற வருட ஆரம்பத்தில் (2022) நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பலர் வேலையை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நான் விளிம்பில் தப்பிப் பிழைத்திருந்தேன். இந்த வயதில் இதுபோன்ற வேலை தேடி எடுப்பது கடினம். வருட முடிவில் எல்லோருக்கும் தமது வேலைகளில் ஜனவரி முதல் தகமைகளை மேம்படுத்த முயல வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளனர். அதாவது புதிய தகமைகளைப் படிக்க வேண்டும். நான் மீண்டும் படிக்கும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து ஏதாவது படித்து ஒரு சான்றிதளாவது பெற முயற்சிக்க வேண்டும். 

ஆரம்ப வாழ்வு முதல் தகமைகளையும் அனுபவங்களையும் கடும் முயற்சியில் பெற்றுக் கொள்கிறோம். ஆரம்பப் படிப்பில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்படிப்பு உருவாக்குகிறது. மேற்படிப்பின் எல்லை தொழிலை நோக்கி உள்ளது. தொழிலிலும் தொடர்ந்து இறுதிவரை முன்னேற வேண்டும். எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளுக்கும் அனுபவங்களுக்கும் ஓய்வூதியத்தை எட்டியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னால் மீதி வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. என்னைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. 

ஏன் இந்த நிலமை ? வாழ்நாள் முழுவதும் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களை என்ன செய்வது ?
 
***
 
எனது தேசியம்

2006 இலும் பின்னர் 2012 இலும் இலங்கை சென்றிருந்தேன். 2012இல் கொழுப்பிலிருந்து யாழ் நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். கிளிநொச்சிப் பகுதியை A9 ஊடாக வாகனத்தில் கடந்து சென்றபோது எனது மனதில் ஏற்பட்ட சோகம் கோபம் இயலாமை ஏமாற்றம் தோல்வி எல்லாமே கலந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. 

அதன்பின் இலங்கையில் எனக்குடனான தொடர்பு அங்குள்ள உறவினர்கள் மட்டுமே என்று தோன்றியது. நான் பிறந்த நாட்டில் எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் பிரான்ஸ் எனக்குத் தந்துள்ளது. இனிமேல் பிரான்ஸ்தான் எனது நாடு என்று முடிவு செய்திருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது.

என்னைப்பொறுத்தவரை எமக்கான தீர்வு என்றாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதை விட இனி எதுவுமே கிடைக்காது என்ற சிந்தனையிலிருந்து பாதையை வகுப்பது புத்திசாலித்தனம்.

பிரான்ஸ் தேர்தலின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் வேட்பாளர்களின் கலந்துரையாடலின் ஒரு பகுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில் வேட்பாளரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
‘பிரெஞ்சுக்காரன்(ரி) என்றால் என்ன?’ என்பதே அக் கேள்வி.
அவரது இவ்வாறு பதிலளித்திருந்தார்.
பிரெஞ்சுக்காரன் என்பவன் :

  1. தன்னை உருவாக்கிக் கொள்வான் (கல்வி, அறிவு)
  2. எதிர்காலத்தை நோக்கி நகரத் தலைப்படுவான் (திட்டமிடல், உழைப்பு)
  3. சொத்துக்களை உருவாக்குவான்

இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா.

இந்த வரைவிளக்கம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் அடுத்த 9-13 வருடங்களில் ஓய்வுபெற்றபின்னான வாழ்க்கைக்கு இப்போது அத்திவாரமிடப் போகிறேன்.

மீதி இரண்டாம் பகுதியில் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் 
எல்லோரும் நனமை வேண்டி 
கருத்து பரிமாறினால் 
பலருக்கும் சில விடயங்களை கற்று கொடுக்கும் 
என்று எண்ணுகிறேன் 

  • தொடங்கியவர்
4 hours ago, Maruthankerny said:

நல்ல விடயம் 
எல்லோரும் நனமை வேண்டி 
கருத்து பரிமாறினால் 
பலருக்கும் சில விடயங்களை கற்று கொடுக்கும் 
என்று எண்ணுகிறேன் 

ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

எம்மில் பலருக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்வதென்ற திட்டம் எதுவும் இல்லை. வாரத்தில் 5-6 நாட்கள் காலை முதல் இரவு வரை வேலை செய்யும்போது உடல் தசைகளும் மூளையும் இயங்கிக் கொண்டே இருக்கும். திடீரென எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டு வீட்டினுள் இருப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. வாழ்க்கையில் எப்போது ஒரு குறிக்கோள் வேண்டும். ஓய்வூதியத்திற்கு முன்னரே நாம் வலுவாக இருக்கும்போது இது பற்றி சிந்தித்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். 

ஓய்வு என்பதை சாப்பாடு, தூக்கம், தொலைக்காட்சி பார்ப்பதும் மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம். 

எனது வயதான உறவினர் ஒருவர் எப்போது வீட்டில் இருந்தவாறே கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பார். எல்லா வருத்தங்களும் உண்டு உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இன்னொருவர் 73 வயதாகிறது, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர். எந்த மருந்தும் பாவிப்பதில்லை, ஆரோக்கியமாக உள்ளார்.
ஒரு வயதிற்கு பின்னர் எமது மூளையும் உடலும் சரியாக இயங்காது. அப்போதுதான் வீட்டுக்குள் முடங்க வேண்டும். அதுவரை நன்றாக வாழ வேண்டும். 

நான் இங்கு எழுதப்போகும் திட்டம் எல்லோருக்கும் சரிவராது. இங்கு முதுமையோடு வாழ்வதற்கு ஏராளமான வழிகள் பொழுதுபோக்குகள் உள்ளன. சாத்தியமானதைப் பின்பற்றலாம்.

யாழ் உறவுகள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் பெற இருப்பவர்களும் விரும்பினால் தங்கள் அனுபவங்களை அல்லது திட்டங்களைப் பகிர்ந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இணையவன், ஒரு அருமையான விடயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்: இப்போது ஆயுள் (life span) என்பதை விட நல ஆயுள் (health span) என்பதையே மேற்கு நாடுகளில் வலியுறுத்துகிறார்கள். 100 வயது வரை வாழலாம், ஆனால் அதில் கடைசி 30 வருடங்களை படுக்கையில் கழிப்பதை விட, வாழும் 60- 70 வருடங்களையும் செயல்பட்ட படியே வாழும் கலை தான் நீங்கள் குறிப்பிடும் எண்ணக் கரு!   

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கட்டுரை.

[என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம் ] 🤔
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரயோசமான விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள். 👍

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் இணையவன். இப்போ புலம்பெயர் சமூகத்துக்கு அவசியமான விவாததுக்கு உரிய கருத்தாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு திரி. 👍
பல விடயங்களை அலசி ஆராயலாம்.நிறைய எழுதலாம்.
எனது சந்ததி எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை இங்கு பிறந்து வளர்ந்த ஈழத்து சந்ததிகள் சந்திக்காது என நினைக்கின்றேன். 
 
  • கருத்துக்கள உறவுகள்

 Best Model Fitness GIFs | Gfycat  Walking The Dog GIFs | Tenor Abductores en máquina sentado on Make a GIF

ஒய்வு பெற்ற பின்... 
1)  ஜிம்மிற்கு  மாதாந்த அடிப்படையில் அங்கத்தவராக  சேர்ந்து, பல கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கலாம். மாதாந்த கட்டணம்  இங்கு 20 ஐரோ மட்டுமே. நீங்கள் ஆணழகன் போட்டிக்கு செல்வதற்கான கடுமையான பயற்சி அல்ல. உங்களால் எவ்வளவு உடலை அசைத்து பயிற்சியை செய்ய முடியுமோ அதே அளவு செய்யுங்கள். உங்கள் தசைகள்...  எப்போதும் தளர்வடையாமல் இருக்கும். அதனை கிழமைக்கு மூன்று தரம், மூன்று மணித்தியாலம் செய்தாலே பலன் அதிகம்.

2) நாய்  வளர்க்க வசதி உள்ளவர்கள், ஒன்றை வாங்கி வளர்த்தால்..... தினமும் இரண்டு முறையாவது அதனை வெளியே அழைத்துச் செல்லும் போது... உங்களுக்கு  நடைப் பயிற்சியும், மனதில் உற்சாகமும் பிறக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

 மிகவும் பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு . நாம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு சிரமம் இருக்காது . இயந்திர உலகம் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள்  அவர்களது வேலைக்கு மத்தியில் வயதானவர்களை கவனிப்பது சிரமம். , தங்கள் குழந்தைகளைபராமரிப்பது , தங்கள் வேலைக்கு ஓடுவது என்று  இயந்திரமாகவே மாறிவிடடார்கள்  . எனவே மற்ற்வர்களுக்கு பாரமாய் இராது இயன்றவரை இயங்கி வாழ்தலே சிறந்தது. இந்த சிந்தனையை யாழ்களத்துக்கு எடுத்துவந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இணையவன்

நானும் இவ்வாறு  எழுதணும் என்று தான் ஒரு  திரி  தொடங்கினேன்

கிட்டத்தட்ட

அரசியல் தாயகம் புலம் பெயர் வாழ்வு  சார்ந்து  ஒரே கோட்டில் நிற்கிறோம்  என்பதை  உணர்கிறேன்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.இன்னமும் நிறைய விடயங்களை தொட்டு எழுதுங்கள்.

நானும் 66இலேயே இளைப்பாறிவிட்டேன்.எனக்கும் செருப்படி இருக்கு போல.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க வேலையிலிருந்து மனம் வெறுத்து, 'நம்மிடம் இருக்கும் திறமைக்கு வெளிநாடு சென்று பொருளீட்டலாமே.!' என முடிவெடுத்து இங்கே வந்தேன். இங்கும் அரசாங்க வேலைதான், ஆனால் திறமைக்கும், நிபுணத்துவ அனுபவத்திற்கும் இன்னும் மதிப்பிருந்து கொண்டிருக்கிறது.

வயது ஏற ஏற, அடுத்த நகர்வை நிறுவனம் மேற்கொள்ளும், அறிவாற்றலையும், அனுபவத்தையும் இளையோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என ஆலோசனைகள் வரும். ஆனாலும், பட்டறிவையும், சில நுணுக்கங்களையும் முழுமையாக கடத்த இயலாதுதானே? அதுவே என்னை இங்கே இறுத்தி வைத்துள்ளது.. இன்னும் எத்தனை வருடங்கள் செல்கிறதென பார்ப்போமே..! 😜

வேண்டிய பொருளீட்டும் எல்லையை நெருங்கியவுடன் இங்கிருந்து விடை பெற உத்தேசம். ஆனால் ஒய்வு பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன் மின் துறை சார்ந்த பகுதி நேர ஆலோசனை சொல்லும் தொழிலை செய்யலாம். ஏற்கனவே மாதந்தோறும் வருமானம் பெறும் வண்ணம் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தாயிற்று.

நமக்கும், எம்மை நம்பி வாழ்க்கையில் இணைந்த மனைவிக்கும் முதிய காலத்தில் யாரிடமும் எதிர்நோக்காமல் வாழும் அளவிற்கு நம்மிடம் செல்வம் மிக முக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நோயுறும் காலத்தில் இருவருக்கும் உதவும். பிள்ளைகள் அவரவர் வழிகளில் செல்ல நாம் தடையாக இருக்கக் கூடாது. அது அவர்களின் வாழ்க்கை, செம்மையாக வாழட்டும்..!

ஒரு வயதிற்கு மேல் உடல் உழைப்பைவிட, மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை ஓரளவு செய்துகொண்டே பேரப் பிள்ளைகளுடன் விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதுவே இன்பமயமான கொடுப்பினையாகும்.

ஓய்வுடன் வீட்டில் சும்மா இருந்தால் மனம் கறள் பிடித்துவிடும், அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன விடயம்: (டிஸ்கி)

திரியின் தலைப்பு ஈழத் தமிழனின் எதிர்கால புலம்பெயர் வாழ்க்கை பற்றியது.. ஆனால் நானோ, தமிழ்நாடு தமிழன். 'ஒரு அனுபவ பகிர்வாக இருக்கட்டுமே!' என எனது கருத்தை பதிந்தேன்..😋

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣

உங்களுக்கு புரியாது..

கணவன் சம்பாதிக்கும் வரைதான் வீட்டில் புலியாக இருக்க முடியும், எப்போ ஓய்வு பெற்று மனைவியை சார்ந்து வீட்டில் இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே எலியாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அப்புறம் நாமாக விரும்பி அவர்களுக்கு ஒத்தாசை செய்வது, நமக்கு அதுவே நிரந்தர வேலையாக மாறிவிடும்.

'உத்தியோகம் புருச லட்சணம்' என பெரியோர்கள் சும்மா சொல்லவில்லை, அவை ஆயிரம் பொன் வார்த்தைகள்..! 🤗😂

சரி, மற்ற உறவுகளின் கருத்தை எதிர்நோக்குவோம்..! 😜

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்

வயோதிப வாழ்க்கை என்பது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதல்ல. எமக்கு ஏற்றவாறான வாழ்கை முறையை ஒருங்கமைத்து வாழ முடியும். ஏறத்தாள மொத்த வாழ்வில் மூன்றில் ஒரு காலப் பகுதியை இது அடக்குகிறது. சிலர் ஏற்கனவே திட்டமிட்டும் சிலர் காலப்போக்கில் எடுத்த முடிவாலும் இன்னும் சிலர் சில நிர்ப்பந்தங்களுக்காகவும் தமது வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். 

எனக்குத் தெரிந்த மூன்று வித்தியாசமான நபர்களின் சிறு உதாரணங்களைத் தருகிறேன்.

  1. இவர் ஐரோப்பியர். ஓரளவு வசதியானவர். என்ன செய்வதென்று தெரியாமல் ஓய்வூதியத்தில் சில வருடங்களைக் கழித்து விட்டார். ஒரு நாள் வீட்டில் உடைந்துபோன மரக் கதிரை ஒன்றைத் திருத்த முயன்றார். நுட்பமான வேலைகள் எதையும் முன்னர் செய்திருக்கவில்லை. எப்படித் திருத்துவது என்று எதுவுமே தெரியாமல் பல முயற்சிக்குப் பின் ஒருவாறு திருத்திவிட்டார். அன்றிலிருந்து அதில் ஆர்வம் ஏற்பட, தனது உறவினர் வீடுகளில் பழுதான தளபாடங்களைத் திருத்த வெளிக்கிட்டார். சிறிது சிறிதாக உபகரணங்களையும் வாங்கி தனது பிள்ளைகளின் வீடுகளுக்குத் தேவையான தளபாடங்களைப் புதிதாகச் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டார். செய்து முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வாராயினும் யாரும் அழுத்தம் தராதபடியால் மெதுவாகச் செய்வார். வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகள் இவரது ஆக்கங்களைக் காட்டிப் பெருமைப் படுவார்கள்.
     
  2. இவரும் ஐரோப்பியப் பெண். ஒரு பெண் பிள்ளை திருமணமாகிச் சென்றுவிட, கணவனும் இறந்துவிட, பரிஸ் புறநகர் அடுக்குமாடி வீடொன்றில் தனிமைப் பட்டார். சில வருடங்களின் பின் திடீரென ஒரு முடிவைத் தானாகவே எடுத்தார். தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு கிராமத்தில் சிறு வீடு ஒன்றை வாங்கிக் குடியேறினார். அக் கிராமமோ அங்கிருப்பவர்களோ அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் அல்ல. அங்கு சென்றது கிராம மக்களோடு பழக ஆரம்பித்தார். தினமும் கிராமத்தைச் சுற்றி வந்து அவர்களோடு பேசுவார். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
     
  3. தமிழ் மூதாட்டி. 80 வயதாகிறது. தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலை செய்வதுதான் இவரது முழுநேர வாழ்க்கை. முதுகு வலியால் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டே சமையல் செய்வார். எப்போதும் பேரப் பிள்ளைகள் சாப்பிட்டார்களா பாடசாலைக்கு நேரத்துக்கு வெளிக்கிட்டார்களா என்பதே சிந்தனை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இவர் வாழ்வது ஏனையவர்களுக்காகவே.

- முதலாமவர் பெருமையோடு வாழ்கிறார்.
- இரண்டாமவர் தனது மகிழ்ச்சியைத் தேடிவிட்டார்.
- மூன்றாமவர் ஏனையவர்களுக்காக மட்டும் வாழ்கிறார்.

மூன்றாவது உதாரணத்தில் விருப்பம்போல் முதுமைக் காலத்தை நிர்ணயிப்பதில் புற காரணிகள் தடையாக இருந்துள்ளன.

எமது தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் முக்கியமானவை:

  1. வாழ்க்கைத் துணை
    எடுக்கப்படும் முடிவிற்குக் கணவன் மனைவி இருவருடைய ஒத்துழைப்பும் விருப்பமும் அவசியம். அப்படி இல்லாவிடினும் அது ஒருவரைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. உங்கள் துணையுடன் எதிர்காலம் பற்றிக் கலந்தாலோசியுங்கள். அவருக்கும் புதிய யோசனைகள் ஆர்வங்கள் இருக்கலாம்.
  2. உடல் ஆரோக்கியம்
    நோய்கள் வராமல் முற்பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. நல் உணவு, உடற்பயிற்சி, போதிய நித்திரை ஆகியன உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். பல தமிழர்களைப்போல் யூடியூப் மருத்துவத்தை நம்பாமல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் நல்ல மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்.
  3. குடும்ப உறவுகள்
    பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பது இனிமையானது. ஆனால் அதுவே முட்டுக்கட்டையாகவும் இருக்க வாய்ப்புண்டு. வசதியான நாடுகளில் முதியவர்களின் உதவி இல்லாமலே அவர்களால் வாழ முடியும். 

இருப்பிடம், பொருளாதாரம் போன்றவை இங்கு பெரிய பிரச்சனை இல்லை. வசதியாக வாழ வேண்டுமானால் உழைக்கும்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

இதுவரை -
- சோர்வாக இருந்தாலும் தினமும் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து வேலைக்கும் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம்
- வேலையில் தரப்படும் அழுத்தங்களை யோசித்துக் நிம்மதியற்ற தூக்கம்
- பிள்ளைகளின் படிப்பு, மாலைநேர வகுப்பு, விளையாட்டு எல்லாவற்றையும் நினைத்துக் குழப்பம்
- வீட்டுக் கடன், வருமானவரி, போகுவரத்து, சேமிப்புத் திட்டம், காப்புறுதி என்றெல்லாம் ஏகப்பட்ட சிந்தனைகள்
இத்தனை காலமும் இன்னும் பல பிரச்சனைகளைத் தாங்கிவிட்டோம். முதுமையில் இவையெல்லாம் ஓய்ந்து சீராக வந்துவிடும்.

இனிமேல் எமக்குப் பிடித்த வழியில் அமைதியாக மகிழ்சியாகப் பயணிப்போம்.

  • தொடங்கியவர்

ஊக்கமளித்தவர்களுக்கும் கருத்துப் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி.

21 hours ago, Justin said:

இணையவன், ஒரு அருமையான விடயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்: இப்போது ஆயுள் (life span) என்பதை விட நல ஆயுள் (health span) என்பதையே மேற்கு நாடுகளில் வலியுறுத்துகிறார்கள். 100 வயது வரை வாழலாம், ஆனால் அதில் கடைசி 30 வருடங்களை படுக்கையில் கழிப்பதை விட, வாழும் 60- 70 வருடங்களையும் செயல்பட்ட படியே வாழும் கலை தான் நீங்கள் குறிப்பிடும் எண்ணக் கரு!   

ஜிஸ்ரின், இரண்டு வரிகளில் சுருக்கமாக அழகாகக் கூறியுள்ளீர்கள்.
 
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிறந்த கட்டுரை.

[என்னைப் பொறுத்தவரை நேரக் கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை முறை. நாம் விரும்பும் செயல்களை விரும்பும் நேரத்தில் செய்து முடிக்கலாம் ] 🤔
 
விளங்க நினைப்பவன், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என்று வந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோன்று நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்குச் சரிவராது.
 
13 hours ago, முதல்வன் said:

தொடருங்கள் இணையவன். இப்போ புலம்பெயர் சமூகத்துக்கு அவசியமான விவாததுக்கு உரிய கருத்தாடல்.

முதல்வன், இது எமது சமுகத்துக்கு அவசியமாக இருந்தாலும் பேசாப் பொருள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 
9 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு திரி. 👍
பல விடயங்களை அலசி ஆராயலாம்.நிறைய எழுதலாம்.
எனது சந்ததி எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை இங்கு பிறந்து வளர்ந்த ஈழத்து சந்ததிகள் சந்திக்காது என நினைக்கின்றேன். 
 
குமாரசாமி, இந்தச் சந்ததி விடயத்தில் நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கட்டுரையில் இரண்டாவது பகுதியில் எனது முடிவு பற்றி எழுதுவேன். பல அனுபவம் உள்ள உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.
 
7 hours ago, தமிழ் சிறி said:

 ஒய்வு பெற்ற பின்... 

தமிழ்சிறி, இந்த ஜிம் வாக்கிங் எல்லாம் பலர் வாயால் சொல்லக் கேட்டுள்ளேன். நீங்கள் செயலில் காட்ட முன்கூட்டியே எனது வாழ்த்துகள்.
 
5 hours ago, நிலாமதி said:

 மிகவும் பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு . நாம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு சிரமம் இருக்காது . இயந்திர உலகம் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள்  அவர்களது வேலைக்கு மத்தியில் வயதானவர்களை கவனிப்பது சிரமம். , தங்கள் குழந்தைகளைபராமரிப்பது , தங்கள் வேலைக்கு ஓடுவது என்று  இயந்திரமாகவே மாறிவிடடார்கள்  . எனவே மற்ற்வர்களுக்கு பாரமாய் இராது இயன்றவரை இயங்கி வாழ்தலே சிறந்தது. இந்த சிந்தனையை யாழ்களத்துக்கு எடுத்துவந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்

நிலாமதி அக்கா, நிச்சயமாக, ஏனையவர்களுக்குச் சுமையாக இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.  ஆனாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் உறவுகளுடன் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்களையும் மதிப்போம். 
 
4 hours ago, விசுகு said:

வணக்கம் இணையவன்

நானும் இவ்வாறு  எழுதணும் என்று தான் ஒரு  திரி  தொடங்கினேன்

கிட்டத்தட்ட

அரசியல் தாயகம் புலம் பெயர் வாழ்வு  சார்ந்து  ஒரே கோட்டில் நிற்கிறோம்  என்பதை  உணர்கிறேன்

தொடருங்கள்

விசுகு அண்ணா, நீங்களும் சமூக, குடும்பச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவர். உங்கள் அனுபவமும் எமக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதில் எழுதுவது பொருத்தமாக இல்லாவிட்டால் தாராளமாகத் தனித் திரியில் எழுதுங்கள். 
 
4 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு கட்டுரை.இன்னமும் நிறைய விடயங்களை தொட்டு எழுதுங்கள்.

நானும் 66இலேயே இளைப்பாறிவிட்டேன்.எனக்கும் செருப்படி இருக்கு போல.

ஈழபிரியன் அண்ணா, யாரையும் குறை கூறும் அளவில் இல்லை. நீங்களும் தோட்டம் பேரப் பிள்ளைகள் என்று சுறுசுறுப்பாகத்தானே இருக்கிறீர்கள். எமது சமூகத்தில் உள்ள பொதுவான குறைபாடு பற்றி விவாதிப்பது பயனுள்ளது. ஓய்வில் இருக்கும் உங்களது கருத்துகளையும் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு அனுபவமும் தனித்துவமானது. உங்களுக்குப் பின் உள்ளோர் தவிர்க்க வேண்டிய கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களை எழுதுங்கள். 
 
3 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சின்ன விடயம்: (டிஸ்கி)

திரியின் தலைப்பு ஈழத் தமிழனின் எதிர்கால புலம்பெயர் வாழ்க்கை பற்றியது.. ஆனால் நானோ, தமிழ்நாடு தமிழன். 'ஒரு அனுபவ பகிர்வாக இருக்கட்டுமே!' என எனது கருத்தை பதிந்தேன்..😋

ராசவன்னியன் அண்ணா, நாடற்ற ஈழத் தமிழர்களுக்குத்தான் அங்கும் இங்கும் இல்லாத இடைப்பட்ட வாழ்க்கை என்ற நிலையிலிருந்து எழுத ஆரம்பித்ததால்தால் தலைப்பை அப்படி எழுதியுள்ளேன். உங்கள் கருத்து மிகவும் வரவேற்கப்படுகிறது. நன்றாகத் திட்டமிட்டுள்ளீர்கள். அத்துடன் ஓய்வூதியத்தின் பின்னரும் உங்கள் அனுபவங்களை முதலீடாக்குகிறீர்கள். பாராட்டுகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இணையவன் said:

விளங்க நினைப்பவன், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என்று வந்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டதுபோன்று நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வருவது எனக்குச் சரிவராது.

இப்போது எனக்கு விளங்கிவிட்டது .நேரக் கட்டுப்பாடுகள் உள்ள வாழ்க்கை முறை அழுத்தங்களை கொண்டுவரும்.  
நேரக் கட்டுப்பாடுகள் உள்ள வாழ்க்கை முறையை மட்டுமே தெரிந்த எனக்கு  உங்களிடம் இருந்து அறிந்து கொள்கிறேன்👍 நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஒய்வு பெற்ற பின்... 
1)  ஜிம்மிற்கு  மாதாந்த அடிப்படையில் அங்கத்தவராக  சேர்ந்து, பல கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கலாம்.

சிறி அண்ணா, நீங்கள் சொன்ன   சிறந்த ஆலோசனை ஒய்வு பெற்றவர்களுக்கு மட்டுமல்ல வேலை செய்பவர்களுக்கும். ஜிம்மிற்கு சென்றோ அல்லது வேறு இடத்திலோ ,வீட்டிலோ.   வீட்டில் இருந்து வேலை பார்த்துவிட்டு முதுகில் பிடித்து கொண்டது வலி, கால் பிடித்து கொண்டது என்று தாண்டி தாண்டி நடக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழனின் வெளிநாட்டு வாழ்வு எப்படி அமையுதோ இல்லையோ.. புலத்தில் (தாயகத்தில்) நிலைமை மோசமாகப் போகுது. ஏனெனில்.. பயிர் செய்கை செய்யப்படாத தரிசுக் காணிகள் எல்லாம் சிங்கள அரச மயமாகப் போகிறது. ஏலவே.. இராணுவ முகாம்கள்.. உயர் பாதுகாப்பு வலயங்கள்.. பெளத்த பாரம்பரிய நிலங்கள்.. வனத்திணைக்களக் காணி.. தொல்பொருள் திணைக்களக் காணி.. மாவீரர் துயிலும் இல்லங்கள்.. சிங்கள.. முஸ்லிம் மீள் குடியேற்ற நிலங்கள்.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற நிலங்கள்.. என்று புடிச்ச காணிகள் போக.. இப்படியும் காணி பறிபோனால்.. புலம்பெயர் தமிழர்கள் நிரந்தர ஏதிலிகளாகவே மாய வேண்டியது தான். இதில் அந்தந்த நாட்டு கடவுச் சீட்டு வைச்சிருக்கிறம் என்ற வெட்டிப் பெருமையோடு போய் சேர வேண்டியான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இப்போ செய்வதை… ஒய்வு பெற்ற பின்பு செய்ய ஏன் தயங்குகின்றீர்கள். 🤣

Now Part time

After full time.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2023 at 18:28, ராசவன்னியன் said:

அரசாங்க வேலையிலிருந்து மனம் வெறுத்து, 'நம்மிடம் இருக்கும் திறமைக்கு வெளிநாடு சென்று பொருளீட்டலாமே.!' என முடிவெடுத்து இங்கே வந்தேன். இங்கும் அரசாங்க வேலைதான், ஆனால் திறமைக்கும், நிபுணத்துவ அனுபவத்திற்கும் இன்னும் மதிப்பிருந்து கொண்டிருக்கிறது.

வயது ஏற ஏற, அடுத்த நகர்வை நிறுவனம் மேற்கொள்ளும், அறிவாற்றலையும், அனுபவத்தையும் இளையோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என ஆலோசனைகள் வரும். ஆனாலும், பட்டறிவையும், சில நுணுக்கங்களையும் முழுமையாக கடத்த இயலாதுதானே? அதுவே என்னை இங்கே இறுத்தி வைத்துள்ளது.. இன்னும் எத்தனை வருடங்கள் செல்கிறதென பார்ப்போமே..! 😜

வேண்டிய பொருளீட்டும் எல்லையை நெருங்கியவுடன் இங்கிருந்து விடை பெற உத்தேசம். ஆனால் ஒய்வு பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன் மின் துறை சார்ந்த பகுதி நேர ஆலோசனை சொல்லும் தொழிலை செய்யலாம். ஏற்கனவே மாதந்தோறும் வருமானம் பெறும் வண்ணம் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தாயிற்று.

நமக்கும், எம்மை நம்பி வாழ்க்கையில் இணைந்த மனைவிக்கும் முதிய காலத்தில் யாரிடமும் எதிர்நோக்காமல் வாழும் அளவிற்கு நம்மிடம் செல்வம் மிக முக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நோயுறும் காலத்தில் இருவருக்கும் உதவும். பிள்ளைகள் அவரவர் வழிகளில் செல்ல நாம் தடையாக இருக்கக் கூடாது. அது அவர்களின் வாழ்க்கை, செம்மையாக வாழட்டும்..!

ஒரு வயதிற்கு மேல் உடல் உழைப்பைவிட, மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை ஓரளவு செய்துகொண்டே பேரப் பிள்ளைகளுடன் விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதுவே இன்பமயமான கொடுப்பினையாகும்.

ஓய்வுடன் வீட்டில் சும்மா இருந்தால் மனம் கறள் பிடித்துவிடும், அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣

சிறப்பு. கிட்டத்தட்ட இணையவனின் பகுதி 2 உம் உங்கள் பதிலை சார்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன்.

Active Income மற்றும் Passive income போன்றவற்றை தொட்டுச்செல்லும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் இந்த திரி கண்ணில் பட்டது இணையவன் (நம்ம கண்ணில் நல்லது ஏன் படப்போகுது🤣). படித்து விட்டு என் கருத்தையும் எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.