Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நகரங்களின் கதை

– க.கலாமோகன்

அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ்

எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட் விற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன்.

“சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவர்கள் வந்து

விடுவார்கள்.” என்று சொல்லப்பட்டது.

கூடத்தை விட்டு வெளியே வந்தபோது அப்பாவின் மரணம் ஏன் எனது விழிகளிலிருந்து கண்ணீரைக் கொட்ட வைக்கவில்லை என ஒரு தடவை கேட்டுக் கொண்டேன். எனது கண்ணீர்க் கடல் வற்றிவிட்டதோ? ஒருவேளை அப்படியுமிருக்கலாம். பல இரவுகள் என்முன் படமாய் வந்து போயின. இந்த இரவுகளில் முகம் தெரியாத பலரிற்காக அழுதேன். இது அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்காக அல்ல. அவர்களது வாழ்வுகள் அநியாயமாகப்

பறிக்கப்பட்டுவிட்டன என்பதற்காகவே. எனது கடல் இவர்களுக்காக அழுததில்

வற்றிப்போய்விட்டது. அப்பா இயேசுநாதர் போல் புத்துயிர் பெற்று வந்தால் என்னிடம்

ஏன் அழவில்லை என்று கேட்டுச் சுயவிமர்சனம் செய் என என்னை நிந்திப்பாரா? அவர் அப்படிப்பட்டவரல்ல என எனக்குள் ஒரு தடவை சொல்லிக் கொள்கிறேன்.

நான் இப்போது பாரீஸில் அகதியாக, பாதி உறவினர் கொழும்பிலும், மீதி

யாழ்ப்பாணத்திலும். அருகே இருந்த bar ஒன்றிற்குள் புகுந்து ஒரு டெமி (பியர்)

அடித்துவிட்டு மீண்டும் தொலைபேசிக் கூடத்திற்குள் புகுந்து கொழும்புக்கு

அடிக்கின்றேன்.

”ராமசுந்தரம் வந்துவிட்டாரே?” இது நான்

“ஓம். ஓம் லைனிலை நில்லுங்கோ, நான் அவரை கூப்பிட்டு விடுகிறேன்”

சில கணங்கள் காத்திருப்பை வெட்டும் வகையில், மறு முனையில் பெரியமாமாவின் குரல்.

“நீ ஏன் உடனை ரெலிபோன் எடுக்கேல்லை. நான் இங்கை வந்து ஒரு கிழமையாகுது”

“மாமா, உங்கடை தந்தி பிந்திதான் கிடைச்சுது. விஷயத்தை சொல்லுங்கோ, அப்பா

என்னெண்டு செத்தவர்”

“அவருக்கு வருத்தமொண்டுமில்லை, சாப்பிட்டிட்டு விறாந்தைக்கு வந்தவர் திடீரெண்டு விழுந்தார். அப்படியே செத்துப்போட்டார். செத்த வீட்டாலை எங்களுக்கு கனக்கச் செலவு உடனை கொழும்புக்கு காசை அனுப்பிவை. நான் அதை அங்கை கொண்டு போய்க் கொடுக்கிறன். மாமி உன்னோடை கதைக்கப் போறாவாம். அவவிட்டைக் குடுக்கிறன் கதை”

ரெலிகாட் யூனிட்டுகள் முடிவுக்கு வந்தததால், அதனை இழுத்துவிட்டு இன்னொரு காட்டை நுழைக்கின்றேன். ஏற்கனவே நான்கு காட்டுகள் தின்னப்பட்டு விட்டன.

“மாமி”

“தங்கச்சியை எப்ப உங்கை எடுக்கப் போறீர்?”

“எடுக்கத்தான் வேணும் ஆனா…”

”ஆனா வெண்டா….”

“என்னிட்டை இப்ப காசில்லை. வேலையிலையிருந்தும் நிப்பாட்டிப் போட்டாங்கள்…”

“நீர் இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்

எப்பிடியும் அவவை உங்கை எடும். தம்பியும் (அவவின் மகன்) உங்கைதான் இருக்கிறான்.

அவன் உங்கை வந்து ஒரு வருஷம்தான். நாங்கள் எங்கடை கடன் எல்லாத்தையும்

தீர்த்திட்டம். நாளைக்கு அவன் இங்கை 30 (முப்பது ஆயிரம் பிராங்) அனுப்பிறான்.

நீர் அவனிட்டைக் குடுத்தீரெண்டா அவன் தான் குடுத்தனுப்பிற கடையிலை குடுத்து

அனுப்பி வைப்பான். உம்மடை தங்கச்சியின்ரை ஆளும் அங்கைதான் இருக்கு. அவரோட கதைச்சு எப்படியும் அவவை அங்கை எடுக்கிற வழியைக் கெதியாப்பாரும். மாமா உம்மோடை கதைக்கப் போறாராம். கதையும்” றிஸீவர் மாமாவின் கரங்களுக்குச் செல்லும் சத்தம், தொலைவாகயிருந்த போதும் தெளிவாகவே எனது காதில் விழுகிறது.

“காசை உடனை அனுப்பிவை”

“ஓம்”

“அவவை உடனை அங்கை எடு”

“ஓம்”

“நாளைக்கு எனக்கு ரெலிபோன் எடு!”

“ஓம்”

தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏதோ பிராங் மெத்தையில் சயனம் செய்பவனைப்போல அனைத்துக்கும் “ஓம்” போட்டு விட்டேன். இந்த “ஓம்”கள் எல்லாம் உண்மையா எனக் கேட்டபடி றூம் கதவினை அண்மித்தபோது எனக்கு முன்னே மரணம் வந்தது.

மரணம், முன்பெல்லாம் மரணங்கள் என வரும்போது சோகம் வாழப்படும். பேசிய

சமாதானமும், சமாதானம் பேசிய போரும் எனது உணர்வுகளுக்கு இருந்த உரிமைகளைக்கூட பறித்து எங்களையும் வேறு வாழும் பிணங்களாக்கிவிட்டதே. வாழ்விற்காக, மரணிக்காதவர்களையும் கொல்லும் வித்தையைக் கற்றுக்கொண்டிருக்கும் இன்னொரு உலகில் நாம். காசு, காசு, காசு, என்ற ஓலம் தான் மரண ஓலங்களையும் முந்தித் தலையை நீட்டுகிறது.

“ஓம்” போட்டவன் நான் தலைக்குமேலே வெள்ளம் போய்விட்டது. இனிச் சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற திடகாத்திரத்தோடு கதவைத் திறந்தால் காலை வங்கியிலிருந்து வந்து என்னால் உடைக்கப்படாதிருந்த கடிதம் தனது அச்சுறுத்தும் விழிகளைக் காட்டுகிறது. எனது கணக்கிலிருந்த 300 பிராங்குகளையும் தின்று அதற்கு மேலும் தின்று விட்டேனாம். வேலையில்லாது இருக்கும் ஒருவர் இப்படி நடந்து கொள்வது வங்கிச் சட்டத்திற்கு முரணானதாம். எவ்வளவு விரைவில் நான் வங்கியின் பணிப்பாளரைச் சந்திக்க முடியுமோ அது நல்லதாம். இல்லையேல் “நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற மிகவும் நாகரீகமான குறிப்பு. முழமும் போனால் என்ன என்ற திடகாத்திரம் இருந்ததால் கடிதத்தைக் கிழித்து ஜன்னல் வழியாக எறிகின்றேன்.

இன்றிரவு நான் தூங்க வேண்டும். ஆனால் எப்படி? அதுவும் இவ்வளவு சுமைகளையும் தாங்கியபடி. எனது றூமிற்கு அருகிலுள்ள றூமில் இருப்பவன் ஒரு போர்த்துக்கல் தொழிலாளி. அவனிற்கு பிரெஞ்சு துண்டாகவே தெரியாது. ஆனால் ஒரு பிரெஞ்சுகாரிக்கு மூன்று பிள்ளைகளைக் கொடுத்துவிட்டான். இதற்கெல்லாம் பாஷை இடையூறாக இருக்கவில்லை. முடிவில் பிரெஞ்சுக்காரி அவனைத் துரத்திவிட்டாள். அவன் தனிக்கட்டை. தனக்குப் பிறகு மூன்று பிள்ளைகளையும் பார்த்து நான்கு வருடங்கள், என்னைக் கொண்டுதான் பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதுவான். பதில்கள் வரா. அவனோ, எனக்கூடாக சளைக்காமல் அவளுக்கும், பிள்ளைகளிற்கும் எழுதிக் கொண்டிருப்பான்.

காலை 4 மணிக்கு வேலைக்குப் போகுமுன் ஒரு பியர். மாலை 5 மணிக்குத் திரும்பி

வந்தவுடன் வைனில் தொடங்கி விடுவான். எனது சுமையைக் குறைக்க ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது. அவனிடம் ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் போய்க் கதவைத் தட்டுகின்றேன். திறந்தவனின் கையில் போத்தல். அதனைக் கண்டவுடன் எனது சுமையில் அரைவாசி உடனடியாகவே இறங்கியது.

“உது புதுசா வந்த வைன். திறம், குடி” கேட்காமலேயே, குறிப்புணர்ந்து

உபசரித்தான். நான் மறுக்கவில்லை உபசரிப்பைத் தேடித்தானே நான் அங்கு

போயிருந்தேன்.

“வடிவாக்குடி. இன்னும் மூன்று போத்தல் இருக்கு”

இருவரும் எமது சுமைகளை இறக்கி இன்னோர் உலகை வாழ வெளிக்கிட்டோம். ஏற்கனவே பொரித்து ஆறிப்போன சார்டின் மீன்களைச் சூடாக்கி என் முன் டேஸ்ட்டுக்காக வைத்தான்.

அப்பா மீண்டும் என் நினைவில் முன் வந்தார். தந்தியோடு வந்த கடிதங்கள்

பொக்கற்றுக்குள் இருந்ததால் தைரியமாக அவைகளை எடுத்து உடைத்தேன். “நீ

ஒண்டுக்கும் யோசிக்காதை. நாங்கள் இப்படியொண்டு நடக்குமெண்டு கனவிலை கூட நினைக்கேல்லை மனதை திடமாக வைத்திரு” இந்தச் செய்திகள் எனக்கு ஒத்தடத்தைத் தந்த வேளையில் கடிதங்களில் வாழும் யதார்த்தமும், தொலைபேசிக்கூடாக வாழப்படும் யதார்த்தங்களும் ஒன்றா என ஒரு தடவை கேட்டுக்கொள்கின்றேன்.

இரண்டு பக்கங்களிலும் போலித்தனம் இல்லை. ஒரு வேளை அது என்னிடம்தான் உள்ளதோ? எது போலி? எது யதார்த்தம்? நான் வாழும் விதம் கூட யதார்த்தம்தான். என்னிடம் காசு இல்லை. காசு இருப்பது சிலரின் யதார்த்தமாக இருக்கும் போது என்னுடையதோ அதற்காகத் தவிண்டையடிப்பது. இன்று ஒருமையில் பேசும் பலர் நாளை என் நிலைக்குத் தள்ளப்படும்போது “பாரும், எம்மடை பாடு இப்படியிருக்கு” என்று பன்மையில் பேசுவார்கள். எது ஒருமை எது பன்மை என்பதை விளக்கிக் கொண்டதுதான் எனது இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்குக் காரணம் என நான் ஒரு போதுமே சொல்லமாட்டேன்.

எனது ஒருமை பன்மைகளிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒன்று.

ஒருமைகள் பன்மைகளாகி, பன்மைகள் பன்மைகளாகாமல், இன்னொரு ஒருமையை வாழும் உலகில் நான்.

நான் மூன்று நகரங்களின் புத்திரன். எனது முதலாவது நகரம் யாழ்ப்பாணம்.

போர்த்துக்கல் நண்பனின் றூமைவிட்டு எனது றூமிற்கு வந்து கட்டிலில் களைப்புடன்

விழும்போது இந்த முதலாவது நகரை நோக்கி எனது கால்கள் ஒரு தடவை ஓடுகின்றன.

தாழங்காய் பொறுக்கிய நாள்கள். ஊமைக்கடல் அடிக்கடி வற்றும். அதன் மீது கால்

விரல்களால் கீறப்படும் ஓவியங்களைச் சூரியன் வந்து முத்தமிட்டுச் செல்வான்.

வளர்ந்தேன். வேலை கிடைத்தது கொழும்பிற்கு. பாஸ் எடுக்காமல் போனேன்.

கொழும்பு. இது எனது இரண்டாவது நகரம்.

மூன்று வருடங்களின் பின் அகதியாகி, முதலாவது நகரிற்கு, இரண்டு சூட்கேஸ் நிறையப் புத்தகங்களைச் சுமந்தபடி வந்தேன். வழியிலே என்னை மறித்த இளம் சிங்களச் சிப்பாய்கள் சூட்கேஸிற்குள் கிடந்த தமிழ்ப் புத்தகங்களைக் கண்டு “ஏன் நீ மஹாவம்சத்தை அவமதித்தாய்?” என விசாரணை ஏதும் செய்யவில்லை.

முதலாவது நகரிற்கு வந்தபோது அங்கே நான் அகதி முகாமிலிருந்த விஷயம்

தெரியாமல் செத்தவீடு வேறு கொண்டாடப்பட்டிருந்தது. நான் இறந்து உயிர்த்தேன். ஒரு வேளை, யேசுவைப் போல் நானும் மீள உயிர்த்தவனோ?

“பரமண்டலத்திலிருக்கும் பிதாவே எனது பாவங்களை அர்ச்சி” ஊரிலுள்ள அனைத்துக் கோவில்களிலும் என் பேரால் அர்ச்சனைகள், பூஜைகள் என்பன செய்யப்பட்டன. நான் மறுஜென்மம் பெற்றுவிட்டேன் என்பதற்காகத்தான்.

“நீ எங்களுக்கு உழைச்சுத்தர வேணாம். ஆனா கொழும்புக்கு மட்டும் திரும்பிப்

போகாதை”

வீடு, இப்படி என்னிடம் கெஞ்சிக் கூத்தாடியபோது கொழும்பு வீதிகளில் வாள்களோடு

நின்று குங்குமப் பொட்டிட்டவர்களையும் காதில துவாரங்களைக்

கொண்டிருந்தவர்களையும் தேடிய அப்பாவிச் சிங்களக் காடையர்கள் மத்தியிலிருந்து எனது உடலைப் பௌவுத்திரமாகக் காத்த குணசேனாவின் நினைவு வந்தது. அவனும் ஒரு அப்பாவிதான். அப்பாவிகள் வாள்களை தூக்க தூண்டுதலாக இருந்தது எது என்பதை என்னைப் போலவே புரிந்து கொண்டவன். யாழ்ப்பாணம் இங்கு எவ்வளவு நாள்கள் தான் வாழ்வது! இது மட்டுமென்ன நகரங்களே இல்லாத நகரா?

வீட்டின் மன்றாட்டம், முடிவில் “வெளிநாடு போ!” என்று என்னைத் துரத்துவதில்

வந்து நின்றபோது வியப்படைந்தேன். வெளிநாடு போவதா? எப்படி? நிறையக் காசு

வேண்டுமே!

“போறதெண்டது சின்ன விஷயமே காசுக்கு எங்கை போறது?” இது நான்.

பதில் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆனால் என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி

வைத்துவிட்டார்கள். நான் தப்பிவிட்டேன்.

உடல். எனது உடல். காசினால் காக்கப்பட்ட உடல். எனது உடல். கடல் கடந்து

அகதியாகிவிட்ட உடல். மூன்றாவது நகரில் நான் இப்போது அகதி. முதலாவது நகரிலோ அகதிப் பெருமை கிட்டாமல் எத்தனையோ உடல்கள் மண்ணிடை மண்ணாய்ப் புதைந்த வண்ணம்.

தப்புதல், கருத்துடனோ கட்சியுடனோ கடவுளுடனோ சம்பந்தப்பட்ட விஷயமில்ல. காசுடன் சம்பந்தப்பட்டது என்பதை மூன்றாவது நகரில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். எனது மூன்றாவது நகரம் பாரீஸ்.

நான் மூன்று நகரங்களிற்கிடையே சிக்கிக் கிடக்கும் ஒரு புத்திரன். யாழ்ப்பாண

போஸ் ஓபிஸ் முத்திரை குத்தப் பெற்று கடிதங்கள் வருவது நின்றுவிட்டது. கடிதங்கள் சுற்றி வளைந்து வரும். அதுவும் கொழும்பு முத்திரை குத்தப்பட்டு வரும்

கடிதங்களில் இப்படியொரு குறிப்பு இருக்கும். “உடனடியாக இந்த நம்பருக்கு எடு”

என்னிடமோ ரெலிகாட் வாங்கக்கூட காசில்லை. இப்படியெனில் எப்படித் தொலைபேசியிலாவது வாழ முடியும்?

போனவாரம் எனது பிரெஞ்சுச் சிநேகிதியைச் சந்தித்தபோது, தனது பிறந்த தினத்திற்கு ஒரு புத்தகத்தில் சில கவிதை வரிகளையாவது அன்பளிப்புச் செய்திருக்கலாமே என முகத்தைச் சுழித்தாள். நான் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மனிதர்கட்கும் அந்நியமான, என்னைத் தமது வீடுகளிற்கு வாவென நண்பர்கள் எனப்படுவோர் அழைக்கும்போது “ஓம் வருகின்றேன்.” என வாக்குறுதி கொடுத்துவிட்டுப் போகாது விடுக்கின்றேன். போனால்கூட எனது பொருளாதார நிலையை விளங்கிக்கொள்ளாமல் “அப்ப, உம்முடைய றூமுக்கு எப்ப வாறது…” எனக் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தினால்தான். எனக்கு வீடு இல்லை. நான் தூங்குமிடங்கள் எனது வீடுகளுமில்லை.

வீடு என்பது அவசியமா என்ற விசாரணைக்குள் நான். சில வேளைகளில் இந்த மூன்று நகரங்களையும் தாண்டி வீடுகள் மனிதர்களும் இல்லாத நான்காவது நகரம் ஒன்று இருக்குமாயின் அங்கே போனால் என்ன என்று என்னிடம் கேட்டுக் கொள்வதுண்டு.

பெரியமாமா கேட்டுக்கொண்டபடி மறுநாள், நான் போன் பண்ணவில்லை. தூங்கி விழித்து, மீண்டும் சில தினங்கள் தூங்கி, விழித்து ஒரு காலையில் எழுந்து பாரிஸிலிருக்கும் எனது ஒன்றவிட்ட தம்பிக்கு போன் பண்ணுகின்றேன்.

“உங்கடை மாமா கொழும்பில வந்து நிற்கிறார். உங்களோடை பேச வேணுமாம். உடனடியாக எடுங்கோ!”

“எந்த மாமா?”

“வேலு மாமா”

இவர் பெரிய மாமாவோ, சிறிய மாமாவோ அல்ல, இன்னொரு மாமா. ஒன்றவிட்ட தம்பி தந்த இலக்கத்தை எழுதிவிட்டு சொற்ப யூனிட்டுகளுடன் எஞ்சிக்கிடந்த ரெலிக்காட்டின் துணையுடன் கொழும்பிற்கு அடிக்கிறேன். வேலு மாமா பேசுகின்றார்.

“மருமோன் உம்மடை பெரிய மாமா கொழும்பிலையிருந்து யாழ்ப்பாணத்திற்குப்

போயிட்டார். நீர் திரும்பவும் போன் எடுக்கிற தெண்டு சொல்லீட்டு எடுக்காமல்

விட்டிட்டீர்” எண்டு குறையாச் சொன்னவர்.

“ஓம் மாமா. நீங்கள் சொல்லிறது சரி. என்னிட்டைக் காசு வசதியில்லை. அதாலைதான் கொழும்புக்குத் திரும்பவும் அடிக்கேல்லை. இங்கையிருந்து கொழும்புக்கு அடிக்கிறதெண்டா சரியான செலவு”

“ஓம் மருமோன். எனக்கு விளங்குது. எங்களுக்கு இங்கை கஷ்டம் இருக்கிறதைப் போல உமக்கும் அங்கை கஷ்டம் இருக்கும் தானே. எதுக்கும் கொஞ்சக் காசெண்டாலும் அனுப்பி வையும். நான் யாழ்ப்பாணத்திற்குப் போய் விஷயத்தை வடிவா விளங்கப்படுத்திறன்”

”நீங்கள் எப்ப அங்கை திரும்புவியள்”

“5000 ரூபா குடுத்துப் பாஸ் எடுத்தனான். அடிக்கடி பாஸ் எடுத்துக்கொண்டு

கொழும்புக்கு வர என்னிட்டை வசதியில்லை. இங்கை கொஞ்ச அலுவல்கள் இருக்கு. அதுகளை முடிச்சிட்டுப் போக இன்னும் ஏழெட்டு நாளாகும்.”

மாமாவுடன் தொடர்ந்து பேச வேண்டும் போல எனக்கு ஆசையாக இருக்கின்றது. அதற்குள் ரெலிக்காட்டினுள் இருந்த கடைசி யூனிட் ஒரு கிக்கீ போட்டுவிட்டுத் தனது இறுதி மூச்சை விடுகின்றது. சோகத்துடன் றூம் திரும்புகின்றேன்.

*பாரிஸ் முரசு, 29.04.1992*

http://thoguppukal.wordpress.com/2011/02/24/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95-%e0%ae%95/

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நகரங்களுக்கு அல்லாடும் அப்பாவித்தமிழனின் கதை

சா வீடு நடந்தால் ஆறுதல் சொல்லக்கூடும் மனிதர்கள் இப்போது இல்லை காசுதான் எல்லாமுமாக இருக்கிறது பணத்தினால் காப்பாற்றப்பட்ட உடல் பணம் காய்ச்சி மரமாக மாறித்தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டம். மானுட வாழ்வு எவ்வளவு விரக்திக்குரியதாக இருக்கிறது. வெளியே சொல்ல முடியாத சோகங்கள்....வெற்றி பெற்ற கதாசிரியர்...

கிருபன் இணைப்பிற்கு நன்றி

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் எந்தக் காலத்திலும் முக்கியம்.பணம் இல்லா விட்டால் பிணத்திற்கு சமம்...பணம் என்டால் பிண்மும் வாய் திறக்கும் என பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்கள் இணைத்துள்ள இந்தக் கதையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன!

எங்கள் கலாச்சாரத்திலும், வளர்ப்பு முறைகளிலும் எங்கோ ஒரு தவறு இருக்கின்றது என்ற கருத்து என்னிடம் வலிமை பெறுகின்றது.

ஒருவேளை எமது கலாசாரம் எமது மண்ணுக்குத் தான் பொருந்துமோ தெரியாது!

எமது இளைய தலைமுறையின், தூள் கடத்துதல், கடனட்டை மோசடி போன்ற செயல்களுக்கு, இந்த மாதிரியான மாமிகள் தான் காரணமோ என எண்ணத் தோன்றுகின்றது!

எமது இனத்தின் 'சுயநலத் தனமான' போக்கிற்கும் எமது கலாச்சாரமே(?) காரணமாகிப் போனதோ எனவே எண்ணத் தோன்றுகின்றது!>

  • தொடங்கியவர்

தமிழர்கள் குறுக்கு வழியால் முன்னுக்கு வந்தால் அதையும் இட்டுப் பெருமிதம் அடைபவர்கள் ஆச்சே நாங்கள்!

முன்னர் எப்போதோ கேள்விப்பட்டது... ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவன் மேற்கு நோக்கி அகதியாக வருவதற்கு உலகைச் சுற்றி சைக்கிளில் வலம் வரப்போகின்றேன் என்று சொல்லி பல மாதங்களைச் செலவழித்து தான் விரும்பிய நாட்டிற்கு வந்தானாம். ஆனால் தமிழர்கள் எப்போதும் முகவர்கள் ஊடாக குறுக்குவழியில் எப்படி வரலாம் என்றுதான் முதலில் யோசிப்பார்களாம்.

மேலும் பணம்தான் எப்போதும் உறவுகளில் விரிசல்கள் வராமல் இருக்கவும், விரிசல்கள் வரவும் காரணமாக இருக்கின்றது. சில குடும்பங்களில் அன்பையும் பணம்தான் தீர்மானிக்கின்றது!

கதையில் பிரச்சாரத் தொனியை போன்று எல்லாவற்றை ஒரு கதைக்குள் அடக்கி விட வேண்டிய அவசரம் அதிகமாக இருக்கு. ஒரு நல்ல கதையை வாசித்த மாதிரி திருப்தி வரவில்லை.

92 இல வாசிச்சிருந்தா நல்லயிருக்குமோ என்னமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

காசை எவ்வள்வு கஸ்டப்பட்டு மேற்கு நாடுகளில் உழைக்கிறார்கள் என்று பலருக்கு ஊரில் தெரிவதில்லை அல்லது தெரிய வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்களோ தெரியவில்லை.

இணைப்பிறக்கு நன்றி கிருபன்.

உறவுகளை இணைப்பதில் பணம் பாலமாக இருக்கின்றது. பாரம்பரியமாக குடும்பத்தலைவன் உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். மனைவியை வேலைக்குப் போகவிடாமல் சாப்பாடு போடுகின்றவனே உண்மையான ஆம்பிளை. தங்கைகளுக்கு உழைத்துச் சீதணம் கொடுக்கும் அண்ணன். இப்படியான பொறுப்பு பழக்கத்தில் இருக்கின்றது. வெளிநாடு செல்வதும் ஒரு பொறுப்புச் சார்ந்த பழக்கமாக உருவாகிநிற்கின்றது.

ஒவ்வொருவரும் சுயமாக தத்தம் கால்களில் நிற்பதை இந்தப் பாரம்பரியம் எப்போதும் பிரச்சனைக்குள்ளாகுகின்றது. பிள்ளைகள் என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைவதையே நல்ல பழக்கமாக இந்த சமூகம் முன்வைக்க முனைகின்றது. இதில் தனிமனிதனுக்குரிய பண்பு சிதைக்கப்படுகின்றது. பாரம்பரிய நிர்ப்பந்தங்கள் திணிப்புகள் என்பது சமூக மேலாண்மை சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் போது உட்படும் ஒவ்வொருவரும் தலமைத்துவப் பண்பற்றவர்களாக உருவாகின்றார்கள். அறிவிருந்தும் அடிமைகளாக வாழும் ஒரு சமூகம் இதன் பின்னணியில் உருவாகி நிற்கின்றது.

கண்முன்னே ஒருவன் கஸ்டப்பட்டு உழைப்பதை பார்த்தால் அவ் உழைப்பை அனுபவிற்பவர் செலவுசெய்வதில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பார். உழைப்பு வெளிநாட்டில் என்னும் போது உழைப்பின் கஸ்டம் குறித்த காட்சிகள் புலப்படப்போவதில்லை.

வேலை செய்யத் தென்புடைய ஒவ்வொருவரும் அது ஆணோ பெண்ணோ வயதானவரோ மனைவியோ அப்பனோ அவர்கள் வேலை செய்ய வேண்டும். என்னுமொருவனின் உழைப்பு அவர்களின் வேலையை நிறுத்தக் கூடாது. உழைக்கக் கூடிய தெனிபிருந்தும் வேலைக்குப் போகமாட்டேன் உட்கார்ந்த இடத்தில் இருந்துதான் தின்பேன் என்றால் அவர்கள் வாழத்தேவையில்லை. வேலையில்லாப் பிரச்சனை யுத்த சூழல் என்பன விதிவிலக்கு.

வேலைக்குப் போகமாட்டேன் கணவன் உழைப்பில் தான் வாழ்வேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. மேலும் திருமணமான பின் விலை உயர்ந்த நகைகள் ஆடைகள் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் தமது உழைப்பில் அதை வாங்க வேண்டும். இதற்காக கணவனை சித்திரவதை செய்தால் அவர்களை விவகாரரத்து செய்யவேண்டும்.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை தாம்தான் வாழவேண்டும். அடுத்தவனுக்காக வாழ்வதும் அடுத்தவனை வாழவைப்பதும் தவறு.

உழைப்பைச் சுரண்டுதல் என்பது வேறு சமூகப் பற்று பொதுவாழ்கைக்கு அற்பணித்தல் என்பது வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை தாம்தான் வாழவேண்டும். அடுத்தவனுக்காக வாழ்வதும் அடுத்தவனை வாழவைப்பதும் தவறு.

சுகனின் கருத்திற்கு + 1 (பச்சை தீர்ந்துவிட்டது).

ஊரில் உள்ள பெரும்பான்மையினரிற்கு கதையில் வருவது போல வெளிநாட்டில் உள்ளவர்கள் ஒரு பணம் காய்ச்சி மரம். ஊருக்குப் போய் பிறந்து வளர்ந்த இடங்களில் சுத்தித் திரிந்து தெரிந்தவர்களோடு பழைய கதைகள் கதைப்பமெண்டு போனாலும், அவர்கள் எங்களை ஒரு நடமாடும் வங்கி ஆகத்தான் பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்துக்கு முந்திய கதை, இருப்பினும் அழகாய் சொல்லபட்டு இருக்கிறது.

காலத்தின் கோலமோ மாயையோ தோற்றமோ .....தெரியவில்லை வீட்டுக்கு ஒருவராவது

வெளியேறியே ஆக வேண்டி இருந்தது .பணத்தை பெறுபவருக்கு அது கிடைக்கும் வரை

படும்பாடு புரிவதில்லை .......உள்ளூரில் இருப்பவர்களுக்கு தேவைகளதிகமாகி விடுகிறது ..........

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடமிருந்து பண உதவி பெறுகின்றவர்கள்

அங்கு பணக்காரர்கள்.

பணம் கொடுத்த நாங்கள் இங்கே பிச்சைக்காரர்கள்.

இணைப்பிறக்கு நன்றி கிருபன்.

உறவுகளை இணைப்பதில் பணம் பாலமாக இருக்கின்றது. பாரம்பரியமாக குடும்பத்தலைவன் உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். மனைவியை வேலைக்குப் போகவிடாமல் சாப்பாடு போடுகின்றவனே உண்மையான ஆம்பிளை. தங்கைகளுக்கு உழைத்துச் சீதணம் கொடுக்கும் அண்ணன். இப்படியான பொறுப்பு பழக்கத்தில் இருக்கின்றது. வெளிநாடு செல்வதும் ஒரு பொறுப்புச் சார்ந்த பழக்கமாக உருவாகிநிற்கின்றது.

ஒவ்வொருவரும் சுயமாக தத்தம் கால்களில் நிற்பதை இந்தப் பாரம்பரியம் எப்போதும் பிரச்சனைக்குள்ளாகுகின்றது. பிள்ளைகள் என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைவதையே நல்ல பழக்கமாக இந்த சமூகம் முன்வைக்க முனைகின்றது. இதில் தனிமனிதனுக்குரிய பண்பு சிதைக்கப்படுகின்றது. பாரம்பரிய நிர்ப்பந்தங்கள் திணிப்புகள் என்பது சமூக மேலாண்மை சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் போது உட்படும் ஒவ்வொருவரும் தலமைத்துவப் பண்பற்றவர்களாக உருவாகின்றார்கள். அறிவிருந்தும் அடிமைகளாக வாழும் ஒரு சமூகம் இதன் பின்னணியில் உருவாகி நிற்கின்றது.

கண்முன்னே ஒருவன் கஸ்டப்பட்டு உழைப்பதை பார்த்தால் அவ் உழைப்பை அனுபவிற்பவர் செலவுசெய்வதில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பார். உழைப்பு வெளிநாட்டில் என்னும் போது உழைப்பின் கஸ்டம் குறித்த காட்சிகள் புலப்படப்போவதில்லை.

வேலை செய்யத் தென்புடைய ஒவ்வொருவரும் அது ஆணோ பெண்ணோ வயதானவரோ மனைவியோ அப்பனோ அவர்கள் வேலை செய்ய வேண்டும். என்னுமொருவனின் உழைப்பு அவர்களின் வேலையை நிறுத்தக் கூடாது. உழைக்கக் கூடிய தெனிபிருந்தும் வேலைக்குப் போகமாட்டேன் உட்கார்ந்த இடத்தில் இருந்துதான் தின்பேன் என்றால் அவர்கள் வாழத்தேவையில்லை. வேலையில்லாப் பிரச்சனை யுத்த சூழல் என்பன விதிவிலக்கு.

வேலைக்குப் போகமாட்டேன் கணவன் உழைப்பில் தான் வாழ்வேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. மேலும் திருமணமான பின் விலை உயர்ந்த நகைகள் ஆடைகள் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் தமது உழைப்பில் அதை வாங்க வேண்டும். இதற்காக கணவனை சித்திரவதை செய்தால் அவர்களை விவகாரரத்து செய்யவேண்டும்.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை தாம்தான் வாழவேண்டும். அடுத்தவனுக்காக வாழ்வதும் அடுத்தவனை வாழவைப்பதும் தவறு.

உழைப்பைச் சுரண்டுதல் என்பது வேறு சமூகப் பற்று பொதுவாழ்கைக்கு அற்பணித்தல் என்பது வேறு.

:):):) 2 .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கிட்டத்தட்ட இது போன்ற நிலையிலிருந்திருக்கின்றேன்.

வரவுக்கு அதிகமாகவும் கடன் என்னை மூழ்கடிக்கும் எல்லைவரை சென்று வந்திருக்கின்றேன். ஆனால் அது ஒரு சுகமான தியாகம். அதை நான் விரும்பியே ஏற்றேன். என்னால் உழைக்கமுடியும் என்ற துணிவும் மனத்தைரியமும் என்னிடம் இருந்தது. என்னால் பயன் பெற்றோர் பலர் இன்று என்னைவிட படிப்பிலும் வசதியிலும் மேல் நிலையிலுள்ளனர். அவர்களைக்காணும் போதும் அவர்களைப்பற்றி கேள்விப்படும்போதும் எனக்கு சந்தோசமே. சிலர் நான் செய்த உதவியை மீண்டும் எனக்கு செய்யவிரும்பியபோது அதை நான் மறுத்ததுண்டு. காரணம் என் கடமையைத்தான் நான் செய்தேன். அப்படி எனக்கு திரும்ப செய்ய வேண்டும் என்று அடம்பிடித்தவர்களை வேறு வழிகளில் அதைச்செய்யுமாறு வேறு சிலரும் அதனால் பயன்பெற வழி செய்ததுண்டு. இன்றும் அதையே செய்கின்றேன். எமது வருமானத்தில் 10 வீதத்தையாவது எம் உறவுகளுக்கு எம் இனத்துக்கும் கொடுப்பதில் உள்ள சந்தோசம் எதிலும் இல்லை.

விசுகு, நீங்கள் அதிர்ஷ்டக்காரர். உங்கள் உழைப்பு பலரை உயர்த்தப் பயன்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான எம்மவரின் உழைப்பு ஊரில் இருப்போரைச் சோம்பேறிகளாகவும் விரயகாரர்களாகவும் தான் வைத்திருக்கிறது. இதனாலேயே சுகனின் கருத்துடன் நூறு வீதம் நான் உடன்படுகிறேன். ஊரில் தமிழ் பட ஹீரோ கணக்கில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளவல்கள், கொழும்பில் வவுனியாவில் ஐ-பொட், ஐ-போன் வைத்திருந்து விலாசம் காட்டும் மாணவர்கள் இவர்களெல்லாம் சொந்தமாக ஒரு தொழிலும் இன்றி வெட்டியாக இருந்து கொண்டு தான் இந்த சொகுசுக்களை அனுபவிக்கிறார்கள். என் ஆலோசனை என்னவென்றால் உறவுகளுக்கு அனுப்பும் காசை நாம் நன்றாகக் குறைத்து உண்மையாகவே தொழில் ஆரம்பிக்க உதவி கேட்கும் இடம்பெயர்ந்தோர் முன்னாள் போராளிகளுக்கு அதிகம் உதவ வேண்டும்.

உங்கள் கதை, இந்தக்காலத்தில் உறவுகளை விட இங்கு பணமே பிரதானம் என்பதை மிகத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. துயரம் பகிர்தல் என்பது மனிதர்களிடத்தில் இன்று அருகி விட்டதோ என ஐயப்பட வைக்கிறது இக்கதை. தந்தை இழந்தவன் ஆறுதலுக்கு ஏங்குவான் என்ற உணர்வு புரியாதவிடத்து பணம் மலையை விட உயர்ந்து நிற்பது மிக வேதனைக்குரியது.

பாராட்டுக்கள். கதை நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிறக்கு நன்றி கிருபன்.

உறவுகளை இணைப்பதில் பணம் பாலமாக இருக்கின்றது. பாரம்பரியமாக குடும்பத்தலைவன் உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். மனைவியை வேலைக்குப் போகவிடாமல் சாப்பாடு போடுகின்றவனே உண்மையான ஆம்பிளை. தங்கைகளுக்கு உழைத்துச் சீதணம் கொடுக்கும் அண்ணன். இப்படியான பொறுப்பு பழக்கத்தில் இருக்கின்றது. வெளிநாடு செல்வதும் ஒரு பொறுப்புச் சார்ந்த பழக்கமாக உருவாகிநிற்கின்றது.

ஒவ்வொருவரும் சுயமாக தத்தம் கால்களில் நிற்பதை இந்தப் பாரம்பரியம் எப்போதும் பிரச்சனைக்குள்ளாகுகின்றது. பிள்ளைகள் என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைவதையே நல்ல பழக்கமாக இந்த சமூகம் முன்வைக்க முனைகின்றது. இதில் தனிமனிதனுக்குரிய பண்பு சிதைக்கப்படுகின்றது. பாரம்பரிய நிர்ப்பந்தங்கள் திணிப்புகள் என்பது சமூக மேலாண்மை சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் போது உட்படும் ஒவ்வொருவரும் தலமைத்துவப் பண்பற்றவர்களாக உருவாகின்றார்கள். அறிவிருந்தும் அடிமைகளாக வாழும் ஒரு சமூகம் இதன் பின்னணியில் உருவாகி நிற்கின்றது.

கண்முன்னே ஒருவன் கஸ்டப்பட்டு உழைப்பதை பார்த்தால் அவ் உழைப்பை அனுபவிற்பவர் செலவுசெய்வதில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பார். உழைப்பு வெளிநாட்டில் என்னும் போது உழைப்பின் கஸ்டம் குறித்த காட்சிகள் புலப்படப்போவதில்லை.

வேலை செய்யத் தென்புடைய ஒவ்வொருவரும் அது ஆணோ பெண்ணோ வயதானவரோ மனைவியோ அப்பனோ அவர்கள் வேலை செய்ய வேண்டும். என்னுமொருவனின் உழைப்பு அவர்களின் வேலையை நிறுத்தக் கூடாது. உழைக்கக் கூடிய தெனிபிருந்தும் வேலைக்குப் போகமாட்டேன் உட்கார்ந்த இடத்தில் இருந்துதான் தின்பேன் என்றால் அவர்கள் வாழத்தேவையில்லை. வேலையில்லாப் பிரச்சனை யுத்த சூழல் என்பன விதிவிலக்கு.

வேலைக்குப் போகமாட்டேன் கணவன் உழைப்பில் தான் வாழ்வேன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. மேலும் திருமணமான பின் விலை உயர்ந்த நகைகள் ஆடைகள் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் தமது உழைப்பில் அதை வாங்க வேண்டும். இதற்காக கணவனை சித்திரவதை செய்தால் அவர்களை விவகாரரத்து செய்யவேண்டும்.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை தாம்தான் வாழவேண்டும். அடுத்தவனுக்காக வாழ்வதும் அடுத்தவனை வாழவைப்பதும் தவறு.

உழைப்பைச் சுரண்டுதல் என்பது வேறு சமூகப் பற்று பொதுவாழ்கைக்கு அற்பணித்தல் என்பது வேறு.

4 +

முதலில் பதிந்தேன் 92 என்று .அந்த கால கட்டத்தில் இந்த நிலை இருந்தது இன்று இல்லை .

அடுத்து இதில் கருத்து எழுதிய பலருடன் நான் முரண்படுகின்றேன். காசின் அருமை தெரியாமல் நாட்டில் இருப்பவன் வெளிநாடு வந்ததும் டபுள் அடிப்பதுதான் நடக்கின்றது .மனிதன் என்பவன் சூழ்நிலை விலங்கு.அந்த அந்த நேரத்தில் தேவைக்கேற்ப வடிவம் எடுத்து விடுவான் .

வெளி நாடு வந்து வேலைக்கு போகாமல் படுத்து கிடப்பவர்கள் ஒரு சிலரே .ஒரு சதத்திற்கு உதவாது என்று நினைத்த பலர் தான் முழு குடும்பத்தையும் பார்த்த கதைகளும் உண்டு .

இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்கள்" கதையை வாசியுங்கள். ஒரு இளைஞ்னின் வாழ்க்கையே அப்படித்தான் \

வெளிநாடு வந்து வீட்டை கவனிக்காத தமிழன் எவனுமில்லை .சீன் காட்டுவது ஒரு சிலரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.