Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரி பின்னக் காதலிப்பம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி பின்னக் காதலிப்பம்...

அவளுக்குப் பயமாகவிருந்தது.  எப்படி இந்த இரவைக் கழிப்பது?  எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது.  உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவனை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ?  மனம் கிடந்து தவித்தது.
          "சே! சே! இதென்ன கலியாணம்?  முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு.  நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்?  எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்ர்த்துக் கொண்டேன்?  திடீரென்று இதென்ன. . .?"

பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள்.  தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன்.

இப்போது ஓர் ஆணுடன் எப்படி வேண்டுமானாலும்  இருக்க லைசன்சு தந்துவிட்டார்கள்.
"அப்படியானால் நான் இதுவரை காத்ததெல்லாம். . .?" அவளுக்குத் தன்னை நினைக்கவே அருவருப்பாயிருந்தது.

சே சே நான் எவ்வளவு கீழ்த்தரமானவளாகப் போகப் போகிறேன்.  முன் பின் தெரியாத அவரின் ஆதிக்கத்துக்குட்பட்டு, என்னை இழந்து, இந்த இரவிலேயே என் நிறை, மானம் எல்லாவற்றையும் அவரிடம். . .  நினைக்க நினைக்க வெட்கமும் வேதனையும் அவளைப் பிடுங்கியெடுத்தன.  

இன்னும் சில நிமிடங்கள்தான்.  அதன் பிறகு  அவன் வந்துவிடுவான்.  எல்லாரும் உறங்கி விடுவார்கள். முன்பின் அறிமுகமே இல்லாத அவனும் அவளும் அந்தத் தனியறையில். . . இதுவரை தங்களுக்குத் தாங்களே போட்டு வைத்திருந்த வேலிகளைத் தாண்டி. . . உணர்வுகளுக்கு அடிமையாகி, எல்லைகள் வரம்புகளைத் மீறிய அச்சங்கமத்தில் விலங்குகள்போல் நடந்து கொள்ளுவதற்குத்தானா சாந்தி என்கிறார்கள், முகூர்த்தமென்கிறார்கள்?  இதிலேயென்ன சாந்தியிருக்கிறது?  இதற்கு எதற்கு முகூர்ததம்? ஆயிரம் காலமாக வளர்த்த பயிர் இந்தக் கலியாணமாம்.  அது வேறு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதாம்.

அவளுக்குச் சிரிப்பாயிருந்தது, வெறுப்பாகவுமிருந்தது.
          "பேசாமல் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் யாரையாவது காதலித்திருக்கலாம்."  அவள் அங்கலாய்த்தாள.;

காதலித்திருந்தால் எவ்வளவு நல்லது. அவர் வருவார்.  இருவரும் பழகிய பழக்கத்தில் சினேகமாக, மகிழ்வாக, காதல் கைகூடிய நிலையில் எத்தனை வரம்புகளைத் தாண்டினாற்தான் என்ன? நட்போடும் உரிமையோடும் உணர்வுகளைப் பரிமாறி, என்னில் அவரும், அவரில் நானும் சங்கமிக்க, சுகிக்க எவ்வளவு சந்தோசமாயிருக்கும்.  மனத்தில் வெறுப்பேயிருக்காதே.

"இதென்ன? இவரோடு நானெப்படி. . .?"

"நான் அவரோடு பேசியதுமில்லை.  பழகியதுமில்லை.  எடுத்த எடுப்பில் என் முந்தானையை. . . இவருக்காக. . .சே! சே!. . . " அவள் துவண்டு போனாள்.  மனம் பேதலித்துப் போயிற்று.

ஓர் வரனுக்காக அவள் காய்ந்து கிடந்தவளல்ல.  உரிய நேரத்தில் பெரியவர்கள் செய்யவேண்டியதைச் செய்வார்கள் என்று அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டுத் தானுண்டு தன் பாடுண்டு என்று வாழ்ந்தவள்.  ஆனால் இப்போது அவளுக்குத் தான் செய்தது தவறோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

கட்டுப் பெட்டியாக இருந்து விட்டோமே.  காதலிக்கத் தெரியாததால் யாரோ முன்பின் தெரியாத ஓர் அன்னியனைக் கல்யாணம் என்ற பெயரால் எடுத்த எடுப்பிலேயே கட்டியணைக்க வேண்டிய கீழ் நிலைக்கு வந்து விட்டோமே என்று அவள் மனம் தவித்தது.

சோர்ந்துபோய் அவனுக்காக அவள் காத்திருந்தாள்.  உடல் முழுவதும் பயத்தில் நடுங்கியது.

கதவு தட்டப்படவில்லை.  திறந்தது. அதிலாயினும் இங்கிதம் வேண்டாமோ?  "இப்படித்தான் தன்னையும் தன் அனுமதியின்றித் திறந்து விடுவானோ?"

அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட அவளுக்குத் தைரியமில்லை.  கடைக் கண்ணால் அவன் வருவதை அவதானித்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது. பெண்மைக்கேயுரிய பயிர்ப்பில் அவன் அருகே வரவர தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆமையாய் ஒடுங்கிக் குறுகினாள்.

"ஹும். . ."  செருமல் சத்தம் கேட்டது.  அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.  பார்க்க மனதில்லை. மீண்டும் செருமல்.

விளக்கை மறைத்து நின்ற அவனது நிழல் கூட அவள் மீது கவிவதை அவளால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து கொண்டாள். நிமிர்ந்தாள்.

ஹி. . . அவனது அசட்டுச் சிரிப்பு.  பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை.  ஒதுங்கி நின்றாள்.  என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? ஒன்றும் புரியாத மௌனம். வார்த்தைகள் வரமறுத்தன.  

சே! நான்தான் வெட்கத்தில் நிற்கிறேன்.  இந்த ஆள் ஏதாவது கதைக்கலாம் தானே. . .!  அவருடைய அவசரத்துக்கு என்னோடு கதையென்ன வேண்டிக்கிடக்கு?- மனதில் வெறுப்போடு நினைத்தாள்.

மௌனம் தொடர்ந்தது.  பாவம் ஒரு பாவமுமறியாத அப்பாவியோ தெரியாது.  சில வேளை நல்லவராயுமிருப்பார்.  நாம எதுக்குச் சும்மா வெறுத்து வெறுத்து நினைக்கவேணும்?  முதன் முதலாக அவள் நினைவில் ஏதோ அவனைப் பற்றிய கனிவு.

"ஹும். . . இந்த விளக்கு சரியான புகையா இருக்குது லைற்றப் போடுவமா. . . " முதன் முதலாக அவன் வாய் திறந்தான்.

"இந்த வெளிச்சமே அதிகம் போல இருக்கு.  எதுக்கு லைற்றெல்லாம்."-அவள் நினைத்தாள்.

பக். விளக்கு அணைந்தது. திடுக்கிட்டாள். தலை சுற்றியது.

பளிச். லைற் வந்தது.  அப்பாடா! அவளுக்குச் சற்று ஆறுதலாயிருந்தது.

அறைக் கதவைப் பார்த்தாள். அதை அவன் தாளிடவில்லையென்று தெரிந்தது.

பக்கத்து அறையில் யாரோ கலியாணத்திற்கு வந்திருந்தவரின் குறட்டைச் சத்தம் கேட்டது.

நல்ல இழுவை இழுக்கிறார். -ஒரு பகிடி விட்டான்.

"களுக்"-அவளுக்குச் சிரிப்பு வந்தது.

"நானும்  இப்படித்தான். படுத்தனெண்டா ஒண்டும் தெரியாது. குறட்டைதான்".-அவனது சுய விமர்சனம்.

எனக்குச் சத்தம் கேட்டா நித்திரை கொள்ள ஏலாது. -அவனை நோக்கிய அவளின் முதல் வார்த்தை.  அது அவனை ஆதரித்தா அல்லது நிராகரித்தா?-அது அவளுக்கே தெரியாது. ஏதோ, பகிடியை ஒரு உண்மையோடு கலந்து சொல்லி வைத்தாள்.

"அப்ப நான் கீழ படுக்கிறன். நீங்க அந்தக் கட்டில்ல படுங்க."-அவன் தலையணையையும் ஒரு போர்வையையும் இழுத்தான்.  

அவளுக்குத் தர்ம சங்கடமாயிருந்தது.  எதிர் பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று.

"சே! சே! நீங்கள் வயதுக்கு மூத்தவர்.  நீங்க இந்தக் கட்டில்ல படுங்க. . . நான்,,.  கீழ படுக்கிறன்".

"இதென்ன, நாங்களென்ன இந்தியாக் காறரா? பால் செம்போட நீங்கள் வந்து முன்பின் தெரியாத என்ர கால்ல விழுறதுக்கும், புருசன் சாப்பிட்ட எச்சில் இலையில சோறு போட்டுச் சாப்பிடுறதுக்கும், புருசன் தான் சொகுசாக் கட்டில்ல படுத்துக்கொண்டு பொஞ்சாதிய நிலத்தில படுக்க வைக்கிறதுக்கும். . . ?  எங்களுக்கெண்டு நாகரீகமான தனித்துவமான கலாச்சாரம் இருக்குது, பண்பாடு இருக்குது. பேசாமக் கட்டில்ல படுங்க".-படபடவென்று கூறிவிட்டுத் தலையணையையும் போர்வையையும் நிலத்தில் எறிந்தான்.

மெதுவாக உள்ளுக்குள் சிலிர்த்தாள்.  "சே! நான் எவ்வளவு கீழாக அவரை நினைத்தேன்.  அவர் சரியான நல்லவர் போல கிடக்குது.  எண்டாலும் நம்ப ஏலாது.  காரியத்தை நிறைவேற்ற வாழைப் பழம்போலப் பேசுறாரோ தெரியாது.  லேசாக இளகி விடக் கூடாது".-அவள் நினைத்தாள்.

"இப்பிடிப் பெண்கள மதிக்கிற நீங்கதானா சீதனத்த வெகு கறாராப் பேசியது?"-குத்தலாகக் கேட்டாள்.

"ஐயையோ! நானா பேசின நான்?  வீட்டாக்கள் விடமாட்டம் எண்டுற்றாங்க.  நான் உங்கட படத்தப் பார்த்துப் போட்டு, உங்களக் கோயில்லையும் நேரில பாத்துப் போட்டு. , . ஓம் எண்டுற்றன்.  நான் என்ன செய்யிறது? கூடப் பிறந்த ஒண்டு ஒண்டுமில்லாம என்ன எதிர்பாத்துக் கொண்டு அண்ணா! அண்ணா! எண்டுற்றுக் கிடக்குதே.  அதனால அவங்க வாங்கிறத வாங்கிப் போட்டுத்தான் விடுவம் எண்டு நிண்டுற்றாங்க." அவன் வழிந்தான்.

கதை எங்கோ திரும்பி எங்கோ போகத் தொடங்கியது.  அவளுக்கு ஆறுதலாயிருந்தது.  "அப்பாடா! இப்போதைக்கு மரியாத கெடத் தேவையில்ல.  இந்த இரவை இப்பிடிக் கதைச்சே களிச்சிரலாம்."

அவன் தொடர்ந்தான்.  "எனக்குப் பேசி முடிக்கிற கலியாணத்தில விருப்பமில்ல. அதில நம்பிக்கையுமில்ல. . . அதால. . ."

"அதால. . .?|

தங்கச்சியிர விசயத்தை முடிச்சுப்போட்டு. . .  "

"முடிச்சுப் போட்டு. . ."

ஆரையாவது காதலிச்சிக் கலியாணம் முடிப்பமெண்டுதான். . யோசிச்சனான், . . ஆனா. . அதுக்குத் தைரியம் காணாது.  சந்தர்ப்பமும் இடங்கொடுக்கயில்ல. . அதால. "

 

"அதால. . . ?"

"ஹும். . . கலியாணத்த முடிச்சுப்போட்டுக் காதலிப்பமெண்டு யோசிச்சன். . ."
"ஆரை?"

"ஆரை. . . முடிக்கிற ஆளைத்தான்."

"ஓஹோ! சீதனத்தையும் வாங்கிப்போட்டு. . . ?"-அவள் கேட்டாள்

"ஓம். . அதுக்குப் பிறகு பிரச்சினையில்லைத்தானே!  வைவ் விட்ட ஐ லவ் யு எண்டு சினிமா வசனம் பேசலாம்தானே.  பயமுமில்ல, ஹாய், ஹுய் எண்டு கத்தி பிரச்சனையுமெடுக்கமாட்டாள்."

"அப்ப காதலியுங்கவன். கலியாணம் முடிஞ்சுதானே! எனக்கும் கவலைதான்.  முன்பின் தெரியாத ஒருவர முடிச்சுப்போட்டு. . . இவ்வளவு காலமும் பாதுகாத்ததையெல்லாம் ஒரே இரவில இழக்கிறத நினைச்சால். . . இதைக் காட்டிலும் ஆரையாவது காதலிச்சுக் கலியாணம் செய்தா இந்த வெட்கக் கேடு இல்லைத்தானே!"

"அப்ப காதலியுங்கவன். . . ஆரையாவது. . ."-அவன் குத்தலாகச் சொன்னான்.

"நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும். இனி..."-அவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.  மனத்திற்குள் குமுறல்.  தாங்காது மீண்டும் தொடர்ந்தாள்.

"ஏன் இந்த முதல் நாளிலேயே இப்படிக் குத்தலாப் பேசுறயள்.  நீங்க இருக்கக்குள்ள நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும்?"

"ஆரையுமெண்டால். .அதுக்குள்ள நான் அடங்கக்கூடாதெண்டோ சொன்ன நான்?  விருப்பமெண்டா  என்னக் காதலியுங்கவன்.  ஆர் வேண்டாமெண்டது?" 

"ஹும். . . யோசிப்பம்." -அவளின் சறுக்கலான பதில்.

"நீங்க யோசிச்சு முடிவெடுக்கிற வரைக்கும் எனக்குப் பொறுக்க ஏலாது."

அவளுக்குச் சிலீரென்றது.  என்ன இவன் தனது சுயரூபத்தைக் காட்டப் போகிறானோ!

அவன் சொன்னான்- "எனக்கு நித்திர வருகுது.  நான் இந்தக் கட்டில்ல ஒரு ஓரத்தில படுத்துக்கொள்ளுறன். இது டபிள் பெட் தானே! நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொங்கலில ஒருவரோடொருவர் உரசாமப் படத்துக்கொள்ளலாம்.  நீங்களும் நித்திரையக் கொள்ளுங்க. . . இல்லாட்டி இருந்து யோசியுங்க.  குட் நைற்|."

அவன் குறட்டை விடத் துவங்கி விட்டான்.  அது உண்மையோ பொய்யோ! ஆனாலும் அவளுக்கு அது இனிய சங்கீதமாயிருந்தது.
 

  • கருத்துக்கள உறவுகள்

கதை  வித்தியாசமாய் இருக்கிறது . பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விறுவிறுப்பா இருக்கு கதை. கதை முடிஞ்சுதோ கரு. அல்லது தொடருமோ ???

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பெட்டையள் எல்லாம் உந்த விசயத்தில முன்னோட்டம் பார்த்திட்டுத்தான் கலியாணமே கட்டுதுங்க. அதுவும் முன்னோட்டம் பலரோடு.. கலியாணம்.. இன்னொராளோட.

 

இருந்தாலும்.. இன்னும் பழைய பஞ்சாங்கம் படிக்கிற பெட்டையள் ஒன்றிரண்டு.. எங்கினையின் கிராமங்களில்.. இருக்கலாம்.. என்று நம்புவோமாக.

 

இந்தப் பெண்ணைப் போலவே.. தன் மானத்தை அவ்வளவு இலகுவில்.. ஓர் பெண் முன்னிலையில் இழக்க மனம் வராத ஆண்களும் இந்த உலகில் வாழக் கூடும். :icon_idea:

 

நல்ல கதை.. கரு. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி  ராசா...

 

பெற்றோரின் பொறுப்பு

பிள்ளைகளுக்கு ஒரு வயதெல்லை வந்ததும்

நாள் நட்சத்திரம் பார்த்து

முகூர்த்தம் பார்த்து

முதலிரவுவரை பொருத்தம் பார்த்து

உள்ளே அனுப்பி  கதவை மூடுவதுடன் முடிகிறது

 

வாழ்வை ஆரம்பிக்கவேண்யது அவர்கள்  தான்..

அதன் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள்

எப்படி ஆரம்பிக்கிறார்கள்

அவரவர் விருப்பம்

அவரவர் சுய முடிவுகள் தான்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டினாப்பிறகும் லவ்வு பண்ணலாம் எண்டதுக்கு நல்ல உதாரணக்கதை. happy0199.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கூறிய நிலாமதி> மெசொபொத்தேமியா சுமேரியர்> நெடுக்ஸ்>விசுகு >குமாரசாமி ஆகியோருக்கு நன்றிகள்.  கதை முடிந்துவிட்டது. சிறுகதைதானே!  விரும்பினால் கருப்பொருளைவிரிவு படுத்தி நெடுங்கதையாக்கலாம்.  ஆனால் அதில் பெரிய ஆர்வம் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல கதையை ஒரு பெண்ணின் மனம் பேசுகிற கதையை மனத்திருப்தியோடு வாசித்தேன். திருமணம் என்ற பந்தத்தினூடாக அறிமுகமற்ற ஆடவனை சரியாக விளங்கிக்கொள்ள முன்பே சடங்கென்ற பெயரால் சுயத்தை இழக்க வைப்பது அநேகமாகப்பல பெண்களுக்கு நடந்திருக்கிறது. இந்த கதையில் வரும் நாயகிபோல எத்தனை போராட்டங்களுடன் அவர்களின் இரவுகள் கழிந்திருக்கும். இதுவே முடித்த முடிவாக சுயத்தின்பால் மீளமுடியாத அவமானங்களைக்கூட சடங்கும் சம்பிரதாயமும் என்ற போர்வைகளால் போர்த்திக்கொண்டு வாழப்பழக்கப்பட்டுபோன பெண்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது கதை. இந்தக்கதை சொல்லாத கதைகளை கிரகிக்கச் சொல்கிறது. பாராட்டுகள் கரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாராட்டுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவான மொழி.. சோர்வற்ற நடை.. :D ஒரே இழுப்பில் வாசித்து முடித்தேன்.. வாழ்த்துக்கள் கரு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கரு!

 

கதை சொல்லிய விதமும் அழகு!

 

தொடர்ந்து எழுதுங்கள் , கரு!

 

அது சரி... என்னவோ காலம், காலமாய்ப் பொத்திப் பொத்தித் பாதுகாத்தது எண்டு கதையில வருகுது.. அது தான் எனக்கு வடிவாய் விளங்கவில்லை! :o

 

ஒரு 'தவம்' என்று சொல்லுங்கள் ... ஒத்துக் கொள்கிறேன்! :D

 

மற்றும் படி, பொத்திப் பொத்திப் பாதுகாப்பதும்,  மனித விதிகளுக்கு ஏற்புடைத்தாக இருக்கலாம்! ஆனால், இயற்கை விதிகளுக்கு ஏற்புடைத்ததல்ல! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன இசைக்கலைஞனுக்கும் புங்கையூரானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  புங்கையூரான்! "காலம் காலமாய்ப் பொத்திப் பொத்தித் பாதுகாத்தது.." என்ற வரிகள் கதையிலில்லை என்றாலும் நீங்கள் அப்படிக் கருதுகிறீர்கள் போலிருக்கிறது.  நமது குல ஒழுக்கங்கள் மாசுபடாமலிருக்க> குறிப்பாகப் பெண்களைப் பெரியவர்கள் பொத்தித்தானே பாதுகாக்கிறார்கள்.  அவர்களுக்கென்று ஒரு தெரிவினைச் செய்யும் முழுச்சுதந்திரம் நமது தாயகத்தில் இல்லைத் தானே.  இதனால் எத்தனை பெண்கள் இலவு காத்த கிளிகளாய் வாழ்ந்து கடைசியில் தம் வாழ்வை வீணடித்து விடுகின்றனர்.  எவ்வளவுதான் இயற்கை மனிதனைத் து}ண்டினாலும் சமூகக் கட்டுப்பாடுகள் அத்து}ண்டல்களை மறைமுகமாக நின்று தடுத்துவிடுகின்றன அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. சொன்ன முறையும் நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு வித்தியாசமான ஒன்று. ஆனால் ஒரு ஆணால் பெண் எப்படிச் சிந்திப்பாள் என்று அறியமுடியாது. அறிய முனைந்தால் அதைப் போல வீணான வேலை எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்!

அவன் சொன்னான்- "எனக்கு நித்திர வருகுது. நான் இந்தக் கட்டில்ல ஒரு ஓரத்தில படுத்துக்கொள்ளுறன். இது டபிள் பெட் தானே! நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொங்கலில ஒருவரோடொருவர் உரசாமப் படத்துக்கொள்ளலாம். நீங்களும் நித்திரையக் கொள்ளுங்க. . . இல்லாட்டி இருந்து யோசியுங்க. குட் நைற்|."

நிலத்தில படுக்கப்போகின்றேன் என்று வீர வசனம் எல்லாம் விட்டவர், ஓரமாகக் கட்டில படுக்க இடம் கேட்கின்றது புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ரகுமானும் சித்தாராவும் கட்டிலை ஒட்டிப் போட்ட மாதிரிக் கிடக்கு! இது தேன்குடிக்க நினைக்கும் நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு கேட்கும் என்ற மாதிரியான சந்தேகத்தை பெண்ணுக்குத் தோற்றுவிக்காதோ!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. சொன்ன முறையும் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன இசைக்கலைஞனுக்கும் புங்கையூரானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  புங்கையூரான்! "காலம் காலமாய்ப் பொத்திப் பொத்தித் பாதுகாத்தது.." என்ற வரிகள் கதையிலில்லை என்றாலும் நீங்கள் அப்படிக் கருதுகிறீர்கள் போலிருக்கிறது.  நமது குல ஒழுக்கங்கள் மாசுபடாமலிருக்க> குறிப்பாகப் பெண்களைப் பெரியவர்கள் பொத்தித்தானே பாதுகாக்கிறார்கள்.  அவர்களுக்கென்று ஒரு தெரிவினைச் செய்யும் முழுச்சுதந்திரம் நமது தாயகத்தில் இல்லைத் தானே.  இதனால் எத்தனை பெண்கள் இலவு காத்த கிளிகளாய் வாழ்ந்து கடைசியில் தம் வாழ்வை வீணடித்து விடுகின்றனர்.  எவ்வளவுதான் இயற்கை மனிதனைத் து}ண்டினாலும் சமூகக் கட்டுப்பாடுகள் அத்து}ண்டல்களை மறைமுகமாக நின்று தடுத்துவிடுகின்றன அல்லவா?

கரு, வார்த்தைகள் என்னுடையவை தான்... கதையின் கருத்தை எனது வசனத்தில் எழுதி விட்டென் போல உள்ளது!  :o

தவறுக்கு வருந்துகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்> சுவைப்பிரியன்> புங்கையூரான்.  கிருபன்! கதையின் நாயகனை நான் முற்றும் துறந்த முனிவனாகவோ நாயகியைத் திறக்கவே விரும்பாத கன்னியாஸ்திரியாகவோ சித்தரிக்கவில்லை.  அந்த சந்தர்ப்பத்தில் இருவருக்கும் ஏற்படும் சுயமரியாதையைக் காத்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடரப்போகும் சாதாரண தம்பதிகளாகவே சித்தரித்திருக்கிறேன்.  மேலும் அந்தப் பெண்ணே அவனைக் கட்டிலில் படுத்துக்கொள்ளுமாறு கேட்கிறாள் அதை நீங்கள் கவனிக்கவில்லையா?  அவர்கள் தாம்பத்தியத்தையே வெறுக்கவில்லையே! அது ஒரு தற்காலிக சங்கோஜம் அதாவது சங்கடமான நிலை அவ்வளவு தான்.  மானுடப் பண்பாட்டுக்கு வலுவூட்டுவது  அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்,பின் தெரியாத ஒரு ஆணைத் திருமணம் செய்யும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அப்பட்டமாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்...தொடருங்கள்

மிக மிக மிக நன்று .கரு அசத்தல் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எழுதியவிதம் தான்.

அதுவும் ஒரு அந்நியனை எப்படி முதலிரவில் எதிர்கொள்வது என்ற பெண்ணின் மனவோட்டத்தை அழகாக பதிந்துள்ளீர்கள் .

வாழ்த்துக்கள் .

ஏதாவது தமிழ்நாட்டு அல்லது நம்மவர் சஞ்சிகைகளுக்கு தொடர்ந்து எழுதுங்கள் .இந்த கதையையும் அனுப்பி வையுங்கள் .

கதை நன்றாக இருக்கின்றது. ஆனால் இற்றைக்கு பல வருடங்கள் முன் 1970 களில் அல்லது அதற்கும் முதல் நடக்கக் கூடிய கதை போன்று இருக்கு.

 

ஆணும் பெண்ணும் காதலிக்காட்டிக் கூட, பெற்றோர் பார்த்து, ஆளையாள் பார்த்து  திருமண நிச்சயம் ஆன பின் ஓரளவுக்கேனும் கதைத்து பழகும் வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழலில் இன்று இருக்கின்றோம்.  பொதுவாக தொலைபேசியிலாவது கதைத்து பழகியிருப்பார்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி> அர்ஜுன்> நிழலி ஆகியோருக்கு நன்றி.  நிழலி! நாம் புலம்பெயர் தேசத்தில் அல்லது நமது தாயகத்தில் வாழும் ஓரளவு திருந்திய சமுதாயத்தினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு இக்கதையின் யதார்த்தத்தை அளவிட முடியாது.  இன்றும் திருமணசேவைகளும் வெப்வழி> பத்திரிகை வழி திருமணங்களும்> புறோக்கர் வைத்து வரன் பார்ப்பதும் நடக்கிறது.  கிராமப்புறங்களில் ஒரே கிராமத்தில் வாழ்பவர்களே அந்நியத்தன்மையோடு திருமணங்களில் இணைகிறார்கள்.  ஆகவே கதை காலாவதியாக இன்னும் பலவருடங்கள் செல்லலாமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த முதல் இரவு பிரச்சனை .... ஒரு சுவர்சயமாக்த்தான் இருக்கும். 
(செக்ஸ் விடயம் தவிர்த்து பல மன கேள்விகள் மன பயம் நெருடல்கள் என்று வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாக இருக்கும்)
அதை பற்றி எழுத எமக்கு அந்த அனுபவம் இல்லை.
 
அனுபவ பட்டவர்கள் .... இது ஒரு நண்பரின் கதை என்று சொல்லியாவது 
தங்களது அனுபவங்களை எழுதலாம். 
இல்லது அப்படி நடக்காத படியால் .... அதை பெரிதாக நாம் தான் எண்ணுகிறோமோ தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.