Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைக் கதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது. இந்த இரு செய்திகளும் சில யானைக் கதைகளையும் சிறி லங்காவில் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த அரிய விலங்குகளுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பற்றி என் நினைவுகளைக் கிளறி விட்டது.

யானை, அனேகமான பல காட்டு விலங்குகள் போல, முழுவதுமாக அடர் காட்டில் வாழப் பிறந்த ஒரு விலங்கு. தனியனாகத் திரியும் யானைகள் அரிது-அப்படித் தனியனாக அலையும் யானை அனேகமாக மூர்க்கமான ஆட்கொல்லியாகவே இருக்கும் (செங்கை ஆழியானின் "யானை" நாவல் ஒரு தனியன் யானையைப் பற்றியது). கூட்டமாக இந்த ராட்சத விலங்குகள் வாழ, சில நூறு ஏக்கர்கள் அடர் காடு அவசியம். சராசரியாக ஒரு யானை ஒரு நாளைக்கு நாற்பது மைல்கள் தூரம் நடக்கும் என்றால், எவ்வளவு பெரிய பரப்பளவு காட்டு யானைக்குத் தேவை என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். யானைகள் வளர்ப்பு விலங்குகளாக மாற்றப் படும் போது அவற்றுக்கு இழைக்கப் படும் முதலாவது பெரிய கொடுமை அவற்றின் இந்த "நாற்பது மைல்" நடை கட்டுப் படுத்தப் படுவது தான். பூனை, நாய் போன்ற சமூக நாட்டமுள்ள விலங்குகளை மனிதர்கள் செல்லப் பிராணிகளாக வீட்டில் வைத்திருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் சிறிலங்கா போன்ற நாடுகளில் யானை மிக அற்பமான காரணங்களுக்காகவெல்லாம் வீட்டின் கொல்லைப் புறத்தில் கட்டி வளர்க்கப் படுவது கிட்டத்தட்ட ஒரு மிருக வதை தான்.

சிங்களவர்களிடையே பாரம்பரியமாகப் பணக்காரர்களாக இருக்கும் குடும்பங்கள் "வளவு காரர்கள்" என அழைக்கப் படுகின்றன. அரேபியர்கள் பெருமைக்காக ஒட்டகம் வளர்ப்பது போல பழைய காலத்தில் வளவு காரச் சிங்களவர்கள் யானைகள் வளர்ப்பதை ஒரு பெருமையாகக் கருதுவார்கள். தென்னிலங்கையில், குறிப்பாக மலையகத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் பல வளவு காரர்களின் தோட்டம் துரவுகள் இன்றும் காணப்படுகின்றன.இதன் உரிமையாளர்கள் நகரங்களை நோக்கிக் குடிபெயர்ந்து விட்ட போதும், குலப்பெருமையை விட்டு விடக் கூடாது என்பதற்காக இந்தத் தோட்டங்களில் வேலையாட்களைப் பாராமரிப்பாளர்களாகக் குடியமர்த்தியிருப்பார்கள். இன்றும் பல வளவுகாரத் தோட்டங்களில் யானைகள் வளர்க்கப்படுவது தொடர்கிறது. சாதாரணமாக 5000 கிலோகிராம் நிறையும் 10 அடிவரை உயரமும் உடைய ஒரு முழு யானையை ஒரு வளவு மூலையில் கட்டி வைத்திருப்பது பார்க்கச் சங்கடமான ஒரு காட்சி. நடந்து பழக்கப் பட்ட யானை அதன் மலம் சிறுநீரினால் ஈரமான நிலத்தில் மணிக்கணக்காக நின்று கொண்டிருக்கும். இதனாலேயே காலில் அழற்சியும் தோல் நோயும் வந்து அவதிப்படும் யானைகள் பல காண முடியும்.

யானைகளைப் பராமரிக்கும் யானைப்பாகன்கள் பற்றி சிங்கள மக்களிடையே ஒரு வியப்புக் கலந்த பயம் இருக்கிறது. மந்திர மாயம் தெரிந்தவர்கள் என்ற நம்பிக்கை தான் இந்தப் பயத்தின் அடிப்படை. நான் அறிந்த வரை பள்ளிக் கூடம் போகப் பிடிக்காமல் யானைப்பந்தியில் வேடிக்கை பார்க்கப் போய் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடு பிடி வேலைகள் செய்து பதவி உயர்வில் இறுதியில் யானைப்பாகனாக வருவது தான் நடக்கிறது. சில சங்கேதச் சொற்கள் மூலம் ஒரு யானையை பாகன் இருத்தி எழுப்புவதைக் கண்டிருப்பீர்கள். இது யானைக்குப் புரியும் மந்திர மொழி என்பதை விட ஒரு விலங்கை அதன் கற்றுக் கொள்ளும் சக்திக்கேற்ப பழக்கியெடுப்பது என்பதே பொருத்தமானது. ஒரு பொலிஸ் நாயை நோக்கி அதனைக் கையாள்பவர் "சார்ஜ்" என்று கட்டளையிட்டதும் அது திருடனைத் துரத்த ஆரம்பிக்கும். பொலிஸ் நாய் போல யானைகளும் சிறுவயதிலேயே சில சங்கேதச் சொற்கள் மூலம் பழக்கப் படுகின்றன. பல சமயங்களில் இந்த அதட்டல் மொழியோடு அங்குசம் என்ற கொஞ்சம் சுமாரான கூர் ஆயுதமும் பாவித்துத் தான் யானையை பாகன் நடப்பிக்கிறான். சிறிலங்கா ரூர் போகிறவர்கள் வளர்ப்பு யானையைக் கிட்ட நின்று பார்க்கக் கிடைத்தால் அதன் காது மடலையும் முன்னங்கால்களையும் உற்றுக் கவனியுங்கள். பல அங்குசத் தழும்புகள் தெரியும்.

என்ன தான் மனிதருக்குப் பழக்கப் பட்டதாக இருந்தாலும் வளர்ப்பு யானை தறிகெட்டு ஓடி நாசம் செய்யும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இந்த சுவாரசியமான விவகாரம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்

(இந்தப் பகுதிக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த பகுதி வரும்..)

மூலம்: சொந்த ஆக்கம்

நன்றாக எழுதுகிறீர்கள் ஜஸ்ரின்.

14 வயதாக இருக்கும் போது லவ் பேர்ட்ஸ் வளர்த்தேன். ஒரு நாள் கூட்டைத் திறந்து விட்டேன். பின் வளவில் இருந்த தென்னை மரங்களின் ஓலைகளில் அவை சந்தோசத்தினால் கத்தி குளரிக் கூச்சலிட்டபடி தொங்கியும் தாவியும் பறந்த காட்சி..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு யானைக்கதை தொடருங்கோ

(இந்தப் பகுதிக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த பகுதி வரும்..)

அப்ப இதுவும் தொடர்கதை என்றீயள்

  • கருத்துக்கள உறவுகள்

(இந்தப் பகுதிக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த பகுதி வரும்..)

வரவேற்கிறோம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் யானைக் கதைக்கு என் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு தொடர்த்து எழுதுங்க, கேரள & தாய்லந்து வீடுகளில் வளர்க்கின்ற யானைகளை பற்றியும் எழுதுங்க, அத்துடன் ஏன் போரின் போது யானையின் நான்கு கால்களையும் காலாற் படை வீரர்கள் உயிரையும் கொடுத்து காக்கிறார்கள் என்று எழுதுங்கள்.

யானையை பற்றி தாய்லந்தில் எடுத்த படம் - Tom Yum Goong

http://www.youtube.com/watch?v=e_AeT1n-Lec

Another comedy film - Baytong

செங்கை ஆழியானின் யானை கதை நானும் படிச்சன்

அண்மையில் மதம் கொண்ட யானை பாகனை காலில்

போட்டு மிதிக்கும் காணொளி பார்த்ததிலிருந்து யானை என்றாலே பயம் தான் . இந்த கதையிலிருந்து யானைகள் பற்றிய மேலும் பல தகவல்கள் வரும் என்று எதிர் பார்கிறன்

இலங்கையில் ரயிலில் மோதி யானைகள் மரணம் எனும் செய்தி படிக்கும்போது பரிதாபமாக

இருக்கும்...:( அதும் அதில் ஒரு யானை வயிற்றிலிருந்து இறந்த நிலையில் குட்டியும் மீட்க பட்டது எனும் செய்தி .....:(

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடருங்கள் . யானை நிறைந்த அறிவு உள்ளது என்று சொல்வார்கள். மதம் மதம் பிடித்தால் தப்ப முடியாது . ஒரு காணோளி பார்தேன் கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வம் காட்டும் எல்லாருக்கும் நன்றிகள். யானைக் கதை எழுத புனித நாளான வெள்ளிக்கிழமை தான் பொருத்தமான நாள். தொடர்ந்து யானை காட்டுவோம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் ஜஸ்டின் யானைக் கதையை நானும் விரும்பி படிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

யானையைப் பற்றி மேலும் அறிய ஆவலாயுள்ளோம்.... எழுதுங்கள் ஜஸ்ரின்.

http://www.youtube.com/watch?v=6Dq0TGL02R8&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் உண்மை கதை போல இருக்கு :lol:

ஜஸ்டின் நீங்க யானையை வைத்து காமடி... கீமடி... ஒன்றும் பண்ணலை தானே :icon_idea:

ஜஸ்ரின் உங்கள் தொடர் வளர வாழத்துக்கள். நீங்கள் ஒரு மிருகவைத்தியர் என்று அறிந்தேன். மிருகங்களைப்பற்ரி அறிந்தவராலேயே, அவைகளின் குணாம்சங்களைத் துல்லியமாக உணரமுடியும். இந்த யானையை சரியாக வழிநடத்தும் பாகன் நீங்களாத் தான் இருக்கமுடியும். மேலும் விமர்சனங்களை வைக்கும்பொழுது நடுநிலமையில் வைத்தால் நல்லது. சிங்களவர்களில் " வளவுக்காறர்களைப் " பற்றிக் குறிப்பிடும் நீங்கள் ஏன் யானை கட்டிப் போரடித்த எமது மரபினரையும் குறிப்பிடவில்லை? ஆக, யானை விடையத்தில் இரண்டு பக்கமுமே தவறு விட்டிள்ளோம் என்பது எனது கருத்து :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கலங்கா யானைகளைப் பற்றிய கதை நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உலகப் படத்தை விரித்து வைத்து அதில் யானைகள் இயற்கையாக வாழும் பிரதேசங்களை குறித்துப் பார்த்தால் அதிசயப் படுவீர்கள். தெற்கு தென் கிழக்கு ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டும் தான் காட்டு யானைகள் வாழ்கின்றன. இன்று வாழும் யானைகளின் உறவு முறையான "மமொத்" எனப்படும் கம்பளி போர்த்த ராட்சத யானைகள் 4500 ஆண்டுகள் முன்பு வரை ஐரோப்பா, வட தென் அமெரிக்கா, சைபீரியா( இது வட-கிழக்கு ஆசியாவின் பகுதி) எனப் பரந்து வாழ்ந்து வந்தன. "ஐஸ் ஏஜ்" எனப்படும் உறைபனிக்காலத்தின் முடிவு காரணமாக வாழ்விடம் இல்லாத நிலையில் மமொத் இனம் அழிந்து போனதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், மனிதர்கள் இடம் விட்டு இடம் நகர்ந்து வேட்டையாடி வாழ ஆரம்பித்த காலத்தில் மமொத்துகள் அழிக்கப் பட்டதாக இப்போது பலர் நம்புகிறார்கள். இந்த வகையில் மனித நடவடிக்கைகளால் முற்றாக அழிக்கப் பட்ட முதலாவது மிருக இனமாக மமொத் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. இனி சுவாரசியமான சிறிலங்கா யானைகள்...

யானைகள் தறிகெட்டு ஓடி மனிதர்களை துவம்சம் செய்வது குறித்து அடிக்கடி செய்திகளில் கேள்விப் படுகிறோம். "மதம்" என்பது பருவமடைந்த ஆண்யானைகளுக்கு வரும் செக்ஸ் சம்பந்தப் பட்ட ஒரு உடலியல் மாற்றம். ஒரு குட்டி யானை, ஆணோ பெண்ணோ, அதன் நடத்தைகளில் ஒரு குழந்தையைப் போன்றது. ஒரு காலை மட்டுமே சங்கிலியால் கட்டி விட்டால் ஓயாமல் தன் பாட்டில் தலையை ஆட்டிக் கொண்டே நின்று கொண்டிருக்கும். ஆர்வத்தினால் அருகே இருக்கும் பொருட்கள் மனிதர்களைத் தொடுவதைத் தவிர குட்டி யானை வேறெந்த ஆபத்தும் தராது. பருவமடைந்ததும் ஆண்யானை கவனமாகக் கையாளப் படவேண்டிய ஒரு விலங்கு. ஒற்றைச் சங்கிலி இப்போது முன்காலுக்கும் பின்காலுக்குமாக இரட்டைச் சங்கிலியாக மாறும். மதம் என்பது ஒரு சக்கர நிகழ்வாக வந்து போகும்-வரும் இடைவெளி யானைக்கு யானை வேறுபடும். உடலில் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக ஏற்படுகின்ற சில ஹோர்மோன்கள் தரும் நடத்தை மாற்றமே இந்த மதம். பாகனுக்கும் அருகில் சென்று பார்க்கும் பொது மக்களுக்கும் மதம் கொண்ட யானையின் குணாதிசயங்கள் நன்றாகவே விளங்கும். முக்கியமாக, மதம் கொண்ட யானையின் கன்னப் பகுதியில் இருக்கும் ஒரு வகைச் சுரப்பியில் இருந்து கருமையான திரவம் வெளிவந்து வழிந்து கொண்டிருக்கும். ஏற்கனவே சிறுத்த யானையின் கண்கள் இன்னும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கும். சில வளர்ப்பு யானைகள் கட்டியிருக்கும் சங்கிலியை அறுக்க சீரியசாக முயன்று கொண்டிருக்கும்.இதனால் மதத்தின் அறிகுறி கண்டவுடனேயே மூன்று கால்களுக்கும் சங்கிலி போடப் படும். முடிந்தால் யானையை தனிமையான ஒரு இடத்திற்கு நகர்த்தியும் விடுவார்கள்.

இவ்வளவு தெரிந்தாலும் மதம் கொண்ட வளர்ப்பு யானை பாகனைக் கொல்வதும் சில சமயம் திருவிழாவில் அட்டகாசம் செய்வதும் அரிதாக நடக்கவே செய்கிறது. காரணம் மதத்தின் அறிகுறிகள் தெளிவாக எல்லா யானைகளிலும் வெளித்தெரியாததே ஆகும். சில சமயங்களில் யானை மதம் பிடித்த நிலையிலும் பொறுமையாக நடந்து கொண்டாலும் யானைப் பாகன் அதன் பொறுமையைச் சோதித்து விடுவதுண்டு. சில வருடங்கள் முன்பு இலங்கையில் நடந்த சம்பவம் நல்ல உதாரணம். ஆற்றங்கரையில் தன் யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பாகன் கடுமையாகத் திட்டவே, கோபம் கொண்ட யானை அங்குசத்தை பறித்து இரண்டாக உடைத்து வீசியது. இதன் பிறகாவது பாகன் விட்டிருக்கலாம். இன்னும் அடக்க முற்படவே தூக்கிப் போட்டு மிதித்து விட்டது. அடுத்த சில மணிநேரங்கள் பாகனின் உடலை யாரும் நெருங்கவும் விடவில்லை. பாகன் மது போதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

பாகனுக்கு எப்பவுமே கத்தி தலைக்கு மேல் தொங்குவது அவரது தொழிலோடு சேர்த்து வரும் இலவச இணைப்பு. ஒரு திருவிழாவில் பொது இடத்தில் யானை குழப்பம் விளைவித்தால் என்ன செய்வது? பதில் இலகுவானது: யானையை கட்டுப் படுத்தும் குழுவில் நீங்கள் இல்லையானால், குதிக்கால் பிருஷ்டத்தில் பட அவ்விடத்தை விட்டு ஓடி விடுங்கள் (அல்லது யானை புக முடியாத ஒரு இடத்தில் பதுங்கிக் கொள்ளுங்கள்). துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் மேலே மைசூர் யானை வீடியோவில் காண்பது போல, எங்கள் தென்னாசியர்களுக்கேயுரிய ஆர்வக்கோளாறு ஜீன்கள், எங்களை ஓடி ஒளிய விடுவதில்லை (அந்த வீடியோவில், எப்படி யானைகளுக்குப் பின்னாலேயே ஒடுகிறார்கள் பாருங்கள், ஏதோ கயிறு போட்டுப் பிடிக்கப் போகிறவர்கள் போல!). இதனாலேயே பொது மக்கள் கொல்லப் படுவது யானை குழம்பும் சமயங்களில் பெரும்பாலும் நடக்கிறது.

குழம்பி ஓடும் யானையக் கட்டுப் படுத்துவதற்கென்று பயிற்றப் பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனேகமாக மிருக வைத்தியர்களாகவோ அல்லது காட்டிலாகா றேஞ்சர்களாகவோ இருப்பார்கள். கண்டி பெரஹரா பார்த்தவர்கள் யானைகள் மின் விளக்கெல்லாம் பூட்டிக் கொண்டு ஆடி அசைந்து வருவதைக் கண்டிருப்பீர்கள். இந்த யானைகள் கவனமாக மிருக வைத்தியர்களால் பரிசோதிக்கப் பட்ட பின்னரே ஊர்வலத்திற்குச் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. இருந்தாலும் ஒரு யானை திடீரென்று தன் மனதை மாற்றிக் கொண்டு தன் பாட்டில் போகும் வாய்ப்பு எப்போதுமே உண்டு. இதனால் இந்த ஊர்வலச் சுற்றாடலில் மயக்கமருந்து ஊசியைச் செலுத்தக் கூடிய துப்பாக்கியோடு ஒரு குழு தயாராக நின்று கொண்டிருக்கும். யானைகளை மயக்கமடையச் செய்யும் இந்த மருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு 5000 கிலோ யானையை மயக்க, ஐந்து மில்லி லீற்றர் (ஒரு தேக்கரண்டி அளவு!) மருந்தே போதுமானது என்றால் அதன் சக்தியை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். இவ்வளவு சக்தி மிக்க மருந்தைக் கையாள்பவரும் கவனமாக இருக்க வேண்டும். தப்பித் தவறி ஊசியை தனக்குத் தானே ஏற்றிக் கொண்டால் (இது அவசரத்தில் நடக்கக் கூடிய ஒரு சம்பவம்) சில நிமிடங்களில் மரணம் நிச்சயம். இந்த ஆபத்திற்காகவே, மயக்க மருந்தை முறிக்கும் மருந்தையும் சேர்த்தே தயாரித்து ஒரே பொதியில் அடைத்திருப்பார்கள் இந்த மருந்தின் தயாரிப்பாளர்கள். கூட இருக்கும் ஒருவர் இந்த உயிர் காப்பு மருந்தை சிரிஞ்சில் ஏற்றித் தயாராக நிற்பார். ஏதாவது கோல் மாலாகி விட்டால் பாதிக்கப் பட்டவரின் பிருஷ்டத்தில் "சதக்" கென்று உயிர்காப்பு மருந்தை ஏற்றி விட்டு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைக்க வேண்டியது தான்.(இது வரை சிறிலங்காவில் யாரும் இப்படி பிருஷ்டக் குத்து வாங்கியதாக நான் அறியவில்லை!)

இதை விட, தறிகெட்டு ஓடும் வளர்ப்பு யானையைக் கட்டுக்குள் கொண்டு வர வேறுவழிகள் இல்லை என்று தான் எங்களுக்குப் படிப்பித்தார்கள்.அதைக் கேள்விக்குள்ளாக்கிற மாதிரி ஒரு சம்பவம் சில ஆண்டுகள் முன்பு கொழும்பில் நடந்தது. ஒரு பௌத்த விகாரை யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளியே வந்து மக்களை விரட்ட ஆரம்பித்தது. வன இலாகா வருவதற்கு முதலே ஆலயத்தின் மூத்த பிக்கு தெருவுக்கு வந்தார். கொஞ்சம் "புல்டோ" ரொபிகளை இரண்டு கைகளிலும் நிரப்பிக் கொண்டு யானையை எதிர் கொண்டு போக ஆரம்பித்தார். சில நிமிடங்களில் யானை அமைதியாகி அவரோடு அடங்கி நடக்க ஆரம்பித்தது. இந்த சம்பவத்தின் பிறகு யானை அடக்கும் வன இலாகாக் குழுவினர் மயக்க மருந்தோடு "புல்டோ" ரொபியும் எடுத்துச் செல்ல ஆரம்பித்தார்களாம்! (கடைசி வரி மட்டும் பகிடி, தயவு செய்து சிரிக்கவும்!)

மேலும் வரும்-

Edited by Justin

யூ மீன் குணசிறீ புலுட்டோ ஜஸ்ரின் :D :D :D . அருமை அருமை . தொடருங்கள் . மதம் பிடிக்கிறதே அதுக்குத்தானா ? ஆம்பிளையோடை சேத்துவிடலாம் தானே ? ஏன் அது பாவத்தை கஸ்ரப்படுத்துவான் ? ஆண் யானைக்கும் நலம் அடிப்பது உண்டா ஜஸ்ரின் :o :o ??

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இலங்கையில் உள்ள யானைகள் தீம் பார்க்கு போய் இருந்தோம்...அவர்கள் எங்களை ஜீப்பில் காட்டை சுற்றிக் பார்த்தோம்...எங்களோடு வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து

வன விலங்கு அதிகாரி ஒருவரும் வந்திருந்தார்...அப்போது எங்களுக்கு பின்னால் ஒரு யானை துர‌த்திக் கொண்டு வர[ பிள்ளையார் என்று சொல்லி அம்மா கும்பிட்டவ] அவர் உட‌னே பின்னுக்கு வந்து ஏதோ சிங்களத்தில் சொன்னார் யானை அப்படியே நின்று இடையாலே போய் விட்டது...என்ட‌ கேள்வி என்ட‌ என்டால் எப்படி அவரால் யானைக் கட்டுப்படுத்த முடிந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், ஆண்யானைக்குத் தான் இனப்பெருக்கக் காலங்களில் மதம் வரும். எனவே பெண்யானை கிடைக்கும் பட்சத்தில் சில நேரங்களில் புணர முயலலாம். சில சமயங்களில் பெண்யானையை மதம் கொண்ட ஆண்யானை தாக்கவும் கூடும்-இது வளர்ப்பு யானைகளிடையே தான் அதிகம். காட்டில், யானை ஒரு குடும்பமாக வாழும் போது மதம் கொண்ட ஆண்யானையின் வன்முறை குறைவு என்கிறார்கள். யானைக்கு விதைகள் உடலுக்கு உள்ளே தான் இருக்கும் (விதைப் பையினுள் அல்ல)-இதனால் நலம் அடிப்பது நடைமுறையில் கடினமானது.

ரதி: "அலியா" என்று தொடங்கி யானைப் பாஷையில் ஏதாவது சொல்லியிருப்பார். இது உடவளவையில் நடந்ததா அல்லது பின்னவலையிலா? தீம் பார்க் என்றால் பழக்கப் பட்ட யானைகள் சுதந்திரமாக விடப் பட்டிருக்கும். காட்டு யானையாக இருக்காது என நினைக்கிறேன். யானைப் பாஷை என்பது வளர்ப்பு யானைகளுக்கு பழக்கும் போதே ஊட்டுவிக்கும் சில சொற்கள் தான். இதில் மஜிக் எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது ஜஸ்டின், தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

(இந்தப் பகுதிக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த பகுதி வரும்..)

மூலம்: சொந்த ஆக்கம்

நன்றாய் இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், ஆண்யானைக்குத் தான் இனப்பெருக்கக் காலங்களில் மதம் வரும். எனவே பெண்யானை கிடைக்கும் பட்சத்தில் சில நேரங்களில் புணர முயலலாம். சில சமயங்களில் பெண்யானையை மதம் கொண்ட ஆண்யானை தாக்கவும் கூடும்-இது வளர்ப்பு யானைகளிடையே தான் அதிகம். காட்டில், யானை ஒரு குடும்பமாக வாழும் போது மதம் கொண்ட ஆண்யானையின் வன்முறை குறைவு என்கிறார்கள். யானைக்கு விதைகள் உடலுக்கு உள்ளே தான் இருக்கும் (விதைப் பையினுள் அல்ல)-இதனால் நலம் அடிப்பது நடைமுறையில் கடினமானது.

ரதி: "அலியா" என்று தொடங்கி யானைப் பாஷையில் ஏதாவது சொல்லியிருப்பார். இது உடவளவையில் நடந்ததா அல்லது பின்னவலையிலா? தீம் பார்க் என்றால் பழக்கப் பட்ட யானைகள் சுதந்திரமாக விடப் பட்டிருக்கும். காட்டு யானையாக இருக்காது என நினைக்கிறேன். யானைப் பாஷை என்பது வளர்ப்பு யானைகளுக்கு பழக்கும் போதே ஊட்டுவிக்கும் சில சொற்கள் தான். இதில் மஜிக் எதுவும் இல்லை.

அந்த தீம் பார்க்கின் பெயர் தெரியாது பொலநறுவைக்கு அண்மையில் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்,யானை பற்றி சுவாரசியமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.பாரங்கள் தூக்குவதற்காக யானைகளை சிங்களவர்கள் பயன்படுத்துவதை கண்டிருக்கிறேன்.மேலும் ஆஜன்டீனியனின் சர்க்கஸ் ஒன்றில் இலங்கை யானை என்று காட்டி இலக்கங்களை எடுத்தல்,ஏனைய மிருகங்களுடன் பல சர்கஸ் வித்தைகளை காட்டி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.விவேகமான மிருகம்.

யானைகள் இயற்கையாக உருவத்தில் பெரிதாக இருந்தாலும் தாவரபட்சணியாக இருந்தும் மிகவும் தைரியமான மிருகமாக இருப்பது சில வேளைகளில் ஆச்சரியமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன்.அதால தொடர்ந்து எழுதவும்.நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

பல தகவல்களை அறிய கூடியதாக இருக்கு, யானை ஆண் உறுப்பு மிகவும் சிறியதா?

ஒரு ஆங்கில படத்தில் ஒரு விளையாட்டு வீரனின் மனகிலேசத்தை போக்க, இந்தியன் குருஜி ஒருவர் விளையாட்டு திடலில் கொண்டு வந்து உடல் உறவு செய்ய விடுவார், பெண் யானை பீறிட்டு கத்தும், அப்ப குருஜி ஒரு தத்துவம் அவிழ்த்துவிடுவார் நீளத்தில் ஒன்றும் இல்லை, கடுகு சிறிதென்றாலும் கரம் பெரிது என்று'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகளுக்கு பதில் தருவதோடு இந்தத் தொடரின் இறுதிப் பகுதியை ஆரம்பிப்போம். ஆண்யானையின் ஜனன உறுப்பைப் பற்றி உடையார் ஆர்வமாகக் கேட்டிருந்தார். யானைக்கு அதன் உடல் பருமனுக்குத் தகுந்தவாறு நீளமான தடிப்பான ஆண்குறி இருக்கிறது. உடையார் குறிப்பிடும் படம் "லவ் குரு" என நினைக்கிறேன். எந்த அடிப்படையில் யானையைக் கொண்டு வந்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் யானைக்கு "சைஸ்" பிரச்சினையெல்லாம் இல்லை எனத் தெளிவாக என்னால் கூற முடியும்.

யானையின் புத்தி சாலித்தனம் பற்றி நுணாவிலான் குறிப்பிட்டிருந்தார். யானை ஒரு தாவர உண்ணியாக இருந்தாலும் அது இரை கவ்விகளால் வேட்டையாடப் படாமல் தப்பி வாழ நன்கு "பழகிக்" கொண்டிருக்கிறது. ரஷ்ய விஞ்ஞானி பவ்லோவ் எப்படி நாய்க்கு மணியடித்ததும் எச்சில் சுரக்கும் படி "பழக்கினாரோ" அதே போல யானையும் பழக்கியெடுக்கக் கூடிய ஒரு விலங்கு. இதனாலேயே சாகச வித்தைக் காரர்களிடமும் கோயில் குளங்களிலும் மாட்டிக் கொண்டு அவதிப் படுகிற நிலையும் யானைக்கு வந்தது. யானையும் தன் பங்கிற்கு தப்பி வாழும் நுட்பங்களை இயற்கையாகவே பழகி வைத்திருக்கிறது. உதாரணமாக, யானைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு விலங்கு முதலை. யானை ஆற்றில் அல்லது குளத்தில் இறங்கும் போது கவனித்தீர்களானால் பின் கால்களை முதலில் நீரினுள் வைத்தவாறு பின்பக்கமாகத் தான் இறங்கும். இது நீரினுள் மறைந்திருந்து வேட்டையாடும் முதலைகளிடமிருந்து தப்பும் ஒரு நுட்பம். மேலும் யானைக்கு இயற்கை கொடுத்திருக்கும் பாதுகாப்பாக அதன் மோப்ப சக்தி இருக்கிறது. சில மைல்கள் தூரத்திலிருந்து காற்றுடன் வரும் மணங்களை யானை மோப்பம் பிடித்து விடும்.

சிறிலங்காவின் யானைக் கணக்கெடுப்புக் குறித்துத் தான் இந்தத் தொடர் உருவானது. இந்தக் கணக்கெடுப்பின் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம். 1815 இல் ஆங்கிலேயர் வந்த போது இலங்கையில் 30,000 யானைகள் இருந்ததாகக் கணிக்கப் பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் இருக்கும் மொத்தக் காட்டு யானைகளின் தொகை யாருக்கும் சரியாகத் தெரியாது. இது வெறும் 3500 தான் என்று இலங்கை வனப்பாதுகாப்புச் சங்கம் கூறுகிறது. ஆச்சரியமான விடயம் என்னவெனில் ஏறத்தாழ அதே அளவான வளர்ப்பு யானைகள் வீடுகள், புத்த விகாரைகள், இந்துக் கோயில்கள் மற்றும் சரணாலயங்களில் இருக்கின்றன. யானைகள் வளர்ப்பது சிங்கள மற்றும் தமிழ் மன்னர்களின் வழி வந்த ஒரு பழக்கம் என்றாலும் நவீன சிறிலங்காவில் வளர்ப்பு யானைகள் உல்லாசப் பயணத்துறை சார்ந்ததாக மாறி விட்டது. பின்னவெலயில் அமைந்திருக்கும் அனாதை யானைகள் காப்பகம் இலங்கையில் உல்லாசப் பயணிகளிடமிருந்து வருவாய் ஈட்டித் தரும் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகும். சில சமயங்களில் தலைவர்கள் ராஜதந்திர நோக்கத்தோடு கொடுக்கும் "பரிசு யானைக் குட்டிகளும்" பின்னவலையில் வசிக்கும் அனாதை யானைகளிடையே இருந்து தான் தெரிவு செய்யப் படுகின்றன. அண்மையில் மகிந்த தெவினுவர விஷ்ணு ஆலயத்திற்கு பெரிய விளம்பரத்தோடு "அன்பளிப்பாகக்" கொடுத்த பெண்யானை இந்த அனாதரவான யானைகளிடையே இருந்து தான் தெரிவு செய்யப் பட்டது. அந்த யானைக்கு ஆறு மாதங்களேயான ஒரு குட்டி இருந்ததும் அம்மாவைப் பிரிந்த அந்தக் குட்டி பால் மறுத்து நோய்வாய்ப்பட்டு இறந்து போனதும் பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வரவில்லை.இதனிடையே அடுத்த சில வருடங்களுக்குள் 300 யானைகள் இலங்கை முழுவதும் உள்ள பௌத்த மற்றும் இந்து ஆலயங்களுக்கு "அன்பளிப்பாக" வழங்கப்படும் என்றும் சிறிலங்கா அரசு அறிவித்த பின்னணியில் தான் இந்த யானைக் கணக்கெடுப்பு நடக்கிறது இப்போது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது யானைகளை ஏன் எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள "அரைவாசி" மூளையே போதும்.

இந்தப் பதிவின் ஒரு நோக்கம் யானைகளை-அவை எங்கு வாழ்ந்தாலும்- பாதுகாப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இலங்கையிலோ ஆபிரிக்காவிலோ யானைகள் மனித குடியேற்றங்கள், காடழிப்புக் காரணமாகக் கொல்லப் படுவதை சாதாரண யாழ் கள உறுப்பினர்களான நாங்கள் தடுக்க இயலாது.ஆனால் சில சின்னச் செயல்களால் யானைகள் வேட்டையாடப் படும் அல்லது சிறைப் பிடிக்கப் படும் செயல்களில் நாங்கள் பங்காளிகளாக இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். யானைத் தந்தத்தில் மோதிரம் செய்து போடுதல், யானை முடிக்காப்பு சொல்லிச் செய்வித்தல் என்பன போன்ற அறிவற்ற செயல்களை நாம் விட்டு விட வேண்டும். இலங்கையில் இருக்கும் யானைச் சரணாலயங்களுக்கு வருமானம் கொடுப்பதும் மேலும் யானைகளை சிறைப் பிடிக்க நாங்கள் ஊக்குவிப்புக் கொடுப்பதாக அமையும். இளைய காட்டு யானைகள் கொடூரமான முறையில் அனாதைகளாக்கப் பட்டு அரசினால் சிறைப் பிடிக்கப் பட்டு காட்சிப் பொருளாக மாற்றப் படக்கூடிய சாத்தியங்கள் நிறையவே தெரிகின்றன இப்போது. இந்தக் கொடுமைகளில் நாங்கள் பங்காளிகளாக மாறாது பார்த்துக் கொள்வோம்.

-முற்றும்-

இன்னொரு குறுந்தொடரில் இரு வாரங்களில் சந்திப்போம் நண்பர்களே. உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.