Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிமிக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிமிக்கி

k5.jpg

மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்த்ததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள்.

நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான்.

இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா.

உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

0000000000000000000000

ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது.

ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை.

00000000000000000000000

ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார்.

மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார்.

ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ??

தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம்.

சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும்.

கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா.

தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ??

எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே?

உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம்.

சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம்.

தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார்.

அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார்.

வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான்.

000000000000000000000000

இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான்.

மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது.

மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள்.

0000000000000000

பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது..தம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சம் பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு?

நான் நினைச்சமாதிரியே இருக்கு ..

அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள்??

. என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது.

கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்??

சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ?

இல்லைத்தான் .....

சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது...

எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான்.

அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும்.

விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது

நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன்.

சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே??

அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள்.

யாவும் கற்பனையே

Edited by sathiri

  • Replies 54
  • Views 9.5k
  • Created
  • Last Reply

சூப்பர்

சிமிக்கி அந்த மாதிரி சாத்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது சாத்திரி.. கடைசியில ஏன் இந்தக் கொலவெறி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையின் கரு உருவாகுவதற்கு காரணமான பாடல் இதுதான்

Edited by sathiri

சாத்ஸ்.... யாவும் கற்பனையல்ல! நடைமுறையில் நடப்பவைதான்!

வெளிநாடு என்பது வெறும் பெயருக்கு. அங்குதான் எம் அடையாளங்களையும் அன்பையும் பாசத்தையும் உறவுகளையும் தொலைக்க ஆரம்பிக்கின்றோம்!

அருமையான கதையை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.

"Like" பண்ண ஒன்றுகூட என்னிடம் தற்போதைக்கு இல்லையே என்பது இந்தக் கதையை வாசித்தபோதுதான் கவலையளிக்கின்றது.

பாராட்டுக்கள் சாத்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

உண்மையிலேயே அருமையாக இருக்கின்றது. :)

கண் கலங்க வச்சிட்டியள்!

கதை எழுதியவிதம் அருமையிலும் அருமை .முடிவுதான் மனதை கொஞ்சம் சஞ்சலபடுத்திவிட்டது.

எனது பெற்றோரையும் ஒருக்கா இழுத்துவிட்டது,கனநாட்கள் பார்க்க போகவில்லை இன்று போகவேண்டும் .

வெள்ளிவிழா நான் சிறிதரில் பார்த்தேன் (பிழை பிடிக்க வந்துவிடுவார்கள் நாள் திகதி வருடத்துடன் கவனம் )

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனிய வாழ்க்கைப் பயணம் அழகாக உங்கள் கதைக்குள்......கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் உயிர்வாழும் பிணைப்பு காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்மபந்தம்....அந்த அன்பிற்கு ஒரு போதும் வயதாவதில்லை...

எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை  ??

அதுதான்  அந்தப் பாட்டு.  சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில்  காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது  கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.  நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள்  புகுந்து இறுக்கிக் கொண்டது.

ராகங்கள் நூறு  

பாவங்கள் நூறு

அவள்பாட்டும் அவன்பாட்டும் ஒன்றல்லவோ...

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள்..

காதல் தேவன் காவியம்

நீங்களோ இவர்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்

அட அட அடடடா :)

நன்றி நன்றி நன்றி

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிமிக்கி அந்த மாதிரி சாத்!

நன்றிகள் அலை நீங்களும் சிமிக்கி போடுறளீங்களோ??

முழுதாக வாசிக்கவில்லை சாத்திரி.

இருந்தாலும் பீல் பண்ணக்கூடியதாய் இருக்கிறது. :lol:

நன்றிகள் அலை நீங்களும் சிமிக்கி போடுறளீங்களோ??

நான் சொன்னது சிமிக்கிக் கதையை, கதை எழுதிய விதம் மிக அருமை சாத்!

" எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள். "

ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்றால் அவனுக்குப் பன்முகப்பட்ட ஆழுமை இருக்க வேண்டும் . " போரியலும் , காமமும் தான் சாத்திரியினால் எழுதமுடியும் " என்ற எகடியங்களைப் பலமுறை நீங்கள் தகர்த்தாலும் , இதில் முனைப்பாகவே இருந்திருக்கின்றீர்கள் . இறுதியில் உங்கள் கைவண்ணம் நன்றாகவே தெரிகின்றது . வாழ்த்துக்கள் சாத்திரி .

Edited by கோமகன்

கதை நல்லாயிருக்கு சாத்திரி. அதிகமாக புலத்தில் நடக்கும் அனுபவக் கதை. தமிழ் சினிமாப் பாணியிலான கடைசி முடிவைத் தவிர்த்திருக்கலாம்.

மேலோட்டமாக வாசித்து விட்டு, ரமணி சந்திரன் ரேஞ்சில எழுதத் தொடன்கிட்டீன்களோ என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு முதல் கருத்தைப் பதிந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல வார்த்தையே இல்லை சூப்பர் சாத்திரி அண்ணா. :)

யாவும் கற்பனை என்று எழுதினாலும் புலம்பெயர்வாழ்வில் நடக்கும் நிஜங்களே?

முடிவு தான் கற்பனை என்றாலும் இந்த முடிவு தான் நெஞ்சை தொடுகிறது.

வாழ்த்துக்கள் அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மற்றும் புலம்பெயர் வாழ்வில் வயோதிபர்களின் வாழ்க்கை முறையை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள். அம்மா அப்பாவை இங்கு கூப்பிட்டு வைத்து பார்ப்பதற்கு முற்றிலும் எதிர்ப்புக்காட்டுபவன் நான். இன்று எனது தாயார் இங்கு வருவதற்கும் எனது ஏதிர்ப்பு இருந்தது. ஆனால் 9 பிள்ளைகளைப்பெத்தும் எவரும் ஊரில் இல்லை என்பதால் மட்டுமே அவர் இங்கு வரவழைக்கப்பட்டார். இருப்பினும் அவர் ஊரில் இருந்தது போல் சந்தோசமாக இல்லை என்பதை அறிவேன்.

தயவுசெய்து உங்கள் பெற்றோர்களை இங்கு எடுக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள். நாம் எவ்வளவுததான் அற்புதமாக வைத்துப்பார்த்தாலும் அவர்களது உலகம் வேறு. அதையே சாத்திரியும் இங்கு சொல்லி நிற்கிறார். கண்கள் பனித்தன. நன்றிகள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில் வாழும் பெற்றோர்களின் வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது .

" சிமிக்கி" நல்ல அழகாக சொல்லப் பட்ட உணர்வுள்ள எழுத்தோட்டம்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதியவிதம் அருமையிலும் அருமை .முடிவுதான் மனதை கொஞ்சம் சஞ்சலபடுத்திவிட்டது.

எனது பெற்றோரையும் ஒருக்கா இழுத்துவிட்டது,கனநாட்கள் பார்க்க போகவில்லை இன்று போகவேண்டும் .

வெள்ளிவிழா நான் சிறிதரில் பார்த்தேன் (பிழை பிடிக்க வந்துவிடுவார்கள் நாள் திகதி வருடத்துடன் கவனம் )

அதே காலத்தில் லண்டனிலும்...................

அரசியல் வகுப்பெடுத்துகொண்டு இந்தியாவிலும்...........

இருப்பது இறைவனுக்கே சாத்தியம்.

இறைவனை கண்டுவிட்டோம் என்ற களிப்பில் அந்த திகதிகளை பதிவுசெய்துவைக்க கேட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது..உண்மையைச் சொல்லப் போனால் வெளிநாடு என்று வந்து கஸ்ரப்படும் முதியர்வர்களின் நிலை பற்றி பக்கம்,பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.இருக்கும் போது எதுவுமே கண்ணுக்கு தெரியாது,இல்லாது போது தான் தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது சாத்திரி.. கடைசியில ஏன் இந்தக் கொலவெறி?

கதையிலையாவது ஒரு கொலை செய்வமெண்டால் அதுக்கும் விடமாட்டீங்களே :( அனியாயத்திற்கு சனநாயக வாதியா இருக்கிறீங்களே :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைகளை வாசித்து, நீண்ட நாட்களாகி விட்டது, சாத்திரியார்!

நன்றிகள், சாத்திரியார்!!!

சிமிக்கி வாழ்க்கையை மாற்றும் அளவு பலம் வாய்ந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை சாத்திரியார்.

எங்கள் தலைமுறையோடு முற்றுப்பெறப் போகும் வாழ்வின் கோலம்.சுயநலம் மிக்க பிள்ளைகளால் முதிய பருவத்தில் தம்பதிகள் வெவ்வேறிடமாக வாழ்தல் என்பது மிகவும் வேதனைக்கு உரியது. ஏன் பிள்ளைகள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை???? சில இடங்களில் இப்படிப்பட்ட பிள்ளைகளிடம் கேட்டால் அவர்கள் கூறும் காரணம் அம்மா அப்பாக்கு நெடுக சண்டை வரும் அதுதான் அவர்களை வெவ்வேறு இடமாக வைத்திருக்கிறோம் என்று தங்கள் அப்பட்டமான சுயநலத்தைப் பூசி மெழுகுவார்கள். அவர்களின் அப்பட்டமான பொய்முகங்களை உணர்ந்தும் பிள்ளைகளுக்கு மதிப்பளித்து தங்களை வருத்தி பேசுவதற்கும், அருகாமையிலிருந்து முகம்பார்க்கவும் வழியில்லாமல் மனவலிகளைச் சுமக்கும் சுமைதாங்கிகளாக வாழ்ந்து...இல்லையில்லை வாழ பாசத்தின் பெயரால் நிர்ப்பந்திக்கபடுகிறார்கள். முதுமைக்குத் தேவை அன்பான முறுவலிப்பு, ஆதரவான பேச்சு, பிரியமான பார்வை எத்தனை முதியோருக்கு இவை கிடைக்கின்றன?....பாக்கியம் கிடைத்திருக்கும் பலருக்கு அதனை பவுத்திரமாக பேணத் தெரியவில்லை....அபாக்கியப்பட்டவர்களுக்கு....நெஞ்சம் நிறைந்த ஏக்கம் மட்டுமே சொந்தமாக இருக்கிறது. நீண்ட காலம் நான் பெற்றோருடன் வாழவில்லை. என் வாழ்நாளில் சில வருடங்கள் மட்டுமே பெற்றோருடன் இணைந்திருந்திருக்கிறேன். யென்மாந்திர பந்தம் என்பதை சில வருடங்களே உணர்த்திவிட்டன. அவர்கள் இருந்திருக்கக்கூடாதா...என்று நாளந்தம் மனதில் ஏக்கம் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. என்னுடைய நினைவுகளில் இன்று என் பெற்றோர் முழுமையாகவே வியாபித்திருப்பார்கள் காரணம் உங்களின் கதை. எல்லாப் புலன்களையும் சில நிமிடங்கள் இந்தக்கதையில் ஒன்றித்துப் போக வைத்துவிட்டீர்கள். சாத்திரியார் உங்கள் எழுத்துக்களில் இந்தக்கதை ஒரு முத்திரை பதிக்கக்கூடிய இடமாக இருக்கும்.

http://www.youtube.com/watch?v=ceLtI7itQz4

சாத்திரியாரின் கதைக்குப் பொருத்தமான பாடல்

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை அண்ணா.நான் உங்கட கதையை கண நாளாய் வாசித்து வருகிறேன் இந்த கதை எனக்கு பிடிச்சிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயதானாலும் என்ன வருத்தம் வந்தாலும்

மற்றவர்கள் அது யாராக இருந்தாலும் அவர்களிடம்

சேர்ந்திருந்து பராமரிக்கப்படுவதை விட

அவர்களை உங்களிடம் அழைத்து உதவிகளைப்

பெற்றுக்கொள்ளுதல் நல்லது.

எலி வளையானாலும் தனி வளை தேவை

நன்றி சாத்திரியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.