Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்னாட்டி

Featured Replies

வணக்கம் வாசகர்களே!!! கள உறவுகளே !!!!

 

ஓர் வித்தியாசமான கதையுடன் உங்களைத் தொடுகின்றேன் . இந்தக் கதை எழுதும்பொழுது பலத்த மனப் போராட்டங்களின் மத்தியிலேயே எழுதினேன் . உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ??? இந்தக்கதையை நான் யாரையும் மனம் புண்படுத்த எழுதவில்லை . மாறாக   , இந்தக்கதை சொல்லவருகின்ற செய்தி ஒரு பொதுக்களத்தில் காய்த்தல் உவத்தல் இன்றி விவாதிக்கபடவேண்டிய அத்தியாவசியம் எங்கள் முன்னே இருக்கின்றது . வழமைபோல் உங்கள் எல்லோரது ஆதரவினையும் விமர்சனங்களையும் நாடி நிற்கின்றேன்.

 

நேசமுடன் கோமகன்

 

************************************************

 

சின்னாட்டி

 

10645859.jpg

 

 

காலைக் கதிரவன் சோம்பல் முறித்தபடியே அந்தக் கிராமத்தில் படர்ந்து கொண்டிருந்தான் . முதல் நாள் பெய்த மழையில் சின்னாட்டியின் மண் வீடு நன்றாகவே ஊறல் எடுத்திருந்தது . சினாட்டி கூதலுக்கு இதமாக ஒரு தடித்த போர்வையைச் சுற்றியபடியே வீட்டின் முன்னால் இருந்த திண்ணையில் குந்தியிருந்தான் . அவன் அவனது இடுப்பில் பக்குவமாச் சுற்றப்பட்டிருந்த கோடாப்போட்ட சுருட்டை எடுத்து லாகவமாக சுருட்டின் முனையைக் கிள்ளிப் பற்ற வைத்துக்கொண்டான் .

 

சின்னாட்டியினது வீடு அவனிற்கும் அவனது மனைவி காமாட்சிக்குமே போதுமானதாக இருந்தது . வீட்டின் கூரை வைக்கோலினால வேயப்பட்டிருந்தது. அதில் முதல்நாள் இரவு பெய்த மழையின் மிச்சங்கள் துளிகளாக சின்னாடி இருந்த திண்ணையின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தன . அவன் முன்னே இருந்த முற்றத்தில் கம்பளி பூச்சிகளும் சரக்கட்டைகளும் வரிசை கட்டிச் சென்றன . தூரத்தே மாட்டுக்கொட்டில் நின்ற சிவப்பியில் இருந்து கன்றுக்குடி வாயில் நுரை தள்ள பால் குடித்தாலும் , சிவப்பி இரவில் இருந்து ஈனக்குரலில் அழுது கண்ணீர் விட்டது . அவனது பைரவனும் ஊளையிட்டு அந்தக்காலை வேளையின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது . இந்த அபசகுனங்கள் பறையடிப்பதில் முடிசூடா மன்னாயிருந்த சின்னாட்டியின் அனுபவப்பட்ட மனதில் கலக்கத்தையே ஏற்படுத்தின . அவனோ சுறுட்டின் சுறுட்டலில் மயங்கி இருந்தான் .

 

“ என்னவும் “

 

சிந்தனையில் மூழ்கிய சின்னாட்டியை காமாட்சியின் குரல் நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது . அவன் அவளை ஏறிட்டு நோக்கினான் . அவள் பழஞ்சோறுடன் வெங்காயமும் கருவாட்டுப் பொரியலுடன் நின்றிருந்தாள்.

 

“தோட்டத்துக்கு போகேலையே ? களைபுடுங்கவல்லே வேணும் ?

 

“ஓம்….. போகத்தான் வேணும் . உதிலை வைச்சிட்டு போ “

 

என்றான் சின்னாட்டி . வீட்டு படலையடியில் ,

 

“ஓய்……… சின்னாட்டி…….. ஏய் ……. சின்னாட்டி “

 

என்ற குரல் அவனைக் கலைத்தது .

 

“ஆராக்கும் . உள்ளுக்கை வாங்கோவன் .”

 

“ நான் உன்ரை வீட்டை சம்பந்தம் பேச வரேலை . உடையார் அந்தா இந்தா எண்டு கிடக்கிறார் . உன்னை பாக்கவேணுமாம் .”

 

உயர்குடியின் குரலின் ஆணவம் அந்த வீட்டிலும் வளவிலும் பட்டுத் தெறித்தது.

 

“ என்னவாக்கும்..... ஆரோடை என்ன கதை கதைக்கிறீர் ? நீர் நிக்கிறது என்ரை வீட்டு படலையடி .”

 

சின்னாட்டியும் குரலை உயர்த்தினான் . அவனது குரலின் வெம்மையால் வந்த உயர்குடி ,

 

“ ஓமடா…….. ஓமடா……… உங்களுக்கு குடுத்தும் தெளியேலை “

 

என்று புறுபுறுத்தவாறே நகர்ந்தது .

 

உடையார் என்ற பெயரைக் கேட்டதுமே சின்னாட்டியின் முகம் கருமை படர்ந்து இறுகியது . விதி அவனது வாழ்வை உடையார் வடிவில் நன்றாகவே புரட்டிப் போட்டிருந்தது . அதன் தொடராக , காமாட்சி அவன் வாழ்வில் நித்திய சாட்சியாக வலம்வந்து சின்னாட்டியின் மனதில் ஆறாவடுவாக நடமாடுகின்றாள் .

 

“உடையார் போகப்போறானோ ?? செய்த அனியாயங்களுக்கு அவன் அவ்வளவு கெதிலை சாகக் கூடாது . புழுத்து நாறவேணும் .“

 

என்று மனதிற்குள் கறுவிக்கொண்டான் சின்னாட்டி.

 

1970களில் சின்னாட்டி வாலிப முறுக்கேறியவன் . அந்த ஊரிலும் சுற்றுப்புறங்களிலும் சின்னாட்டி பறையடிப்பதில் அவன் முடிசூடாமன்னன் . ஒவ்வொரு செத்தவீட்டிலும் இறுதி முத்தாய்ப்பு சின்னாட்டியினது பறையடியாகத்தான் இருக்கும் . அதிலும் அவன் கட்டுச்செட்டாகவே இருப்பான் . முதலில் தனது அடிபொடிகளை அனுப்பி விட்டு இறுதி ஊர்வலத்திற்கே தனது பெரிய பறையுடன் வருவான் . சின்னாட்டியின் பேரானாரின் குருகுல வளர்ப்பில் அவன் தாளக்கட்டுகளை மிகவும் லாவகமாவே கையாளுவான் . அவனது உயர்ந்த கட்டுமஸ்தான தேகமும் , முறுக்கு மீசையும் , தலையை வளர்த்து சுற்றிய கட்டுக்குடுமியும் , சின்னாட்டியை பார்ப்பவர்கள் கிலிகொள்ளவே செய்யும் . அவனது பறை அடியில் செத்தவீட்டில் இருக்கின்ற வெள்ளள ஆண்கள் சாராயம் தந்த களிப்பில் உருவேறி சன்னதம் ஆடுவர் . சின்னாட்டியின் பறை அடியை வெள்ளாளக் குடும்பங்கள் தங்களது செத்தவீட்டின் உயர் கௌரவமாகவே கருதி வந்தனர். ஆனாலும் , சின்னாட்டியோ அவனைச் சேர்ந்தவர்களோ பேசிய சம்பளத்தைவிட அவர்களின் சந்தோசங்களை ( கள்ளு , பீடி , சுருட்டு ) ஏற்றுக்கொள்ளாதது வெள்ளாளரிடையே சினத்தை ஏற்படுத்தினாலும் , அவர்களது இயல்பான ஆதிக்க மனோபாவம் அதைத் தடுத்து வைத்திருந்தது.

 

40757210151224639493482.jpg

 

அன்றைய காலகட்டங்களில் யாழ்ப்பாணமும் அதனை அண்டிய பகுதிகள் யாவும் மிகவும் இறுகிய சாதிக்கட்டமைப்புகளைக் கொண்டிருந்தன . சாதியில் குறைந்தவர்ளை சாதியில் கூடிய யாழ்ப்பாணியத்தின் தத்துப்புத்திரர்களான வெள்ளாளர்கள் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கி நசுக்கி எறிந்தார்கள் என்பது தமிழர் வரலாற்றில் கருமை படர்ந்த அத்தியாயங்களாகவே இருந்தன . இடையில் தேசியவிடுதலையின் ஆழுமைகளால் மட்டுப்படுத்தப்பட்டாலும் இன்றும் அது ஆங்காங்கே பீறிட்டுக்கிளம்பத்தான் செய்கின்றது. ஆரம்பகாலக் கட்டங்களில் இருந்த உயர்குடி அரசியல் மேய்ப்பர்களது சமரசஅரசியலின் ஒரு வேலைத்திட்டம் , கீழ்சாதிக்காறர்களுடன் சம்பந்திபோசனமும் , அவர்களது நல்லகாரியங்களில் கலந்து அவர்களைப் பெருமைப்படுத்தி அவர்கள் வாக்கு வங்கிகளைத் தங்கள்பக்கம் திருப்புவதும் ஒன்றாக இருந்தது . அத்துடன் சிவப்பு சட்டைக்கறர்களது வர்க்க விடுதலை பற்றிய பேச்சுக்களும் கீழ்சாதி இளைஞர்களை அனல் கொள்ளச் செய்தன . அவர்கள் மாவோ சேதுங்கையும் ஸ்டாலினையும் அறியத் தொடங்கினார்கள் . அடிமைச்சமூகத்தில் ஊறிய கீழ்சாதிப் பெரிசுகள் தங்கள் இளையபரம்பரையின் நடவடிக்கைகளை கிலியடனேயே பார்த்தார்கள் . சின்னாட்டி பெரிதாகப் படிக்காவிட்டாலும் சிவப்புச்சட்டைக்காறரது போதனைகள் அவனைப் பண்புள்ள மனிதனாகவே மாற்றியிருந்தன . அவன் பறை அடிப்பதிலே பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததால் வெள்ளாளர்கள் “ பறைப்புள்ளையளுக்கு வந்த கொழுப்பைப் பார் “ என்று உள்ளர அவன்மீது கறுவிக்கொண்டார்கள் .

 

சின்னாட்டியின் ஊரில் உடையார் சிதம்பரப்பிளை தான் ஊரின் முதல்குடிமகன் . ஊரின் சகல விசேடங்களிலும் பரிவட்டம் உடையாருக்கே கட்டப்பட்டது . பரம்பரை பணக்காறத்தனம் உடையார் சிதம்பரப்பிளை மல்லுவேட்டி மைனராகவே வலம்வரச்செய்து . உடையார் சிதம்பரப்பிளைக்கு வீட்டில் அழகான மனைவியாக சொர்ணலக்ஸ்மி இருந்தாலும் , ஊரிலும் சுற்றுப்புறங்களிலும் சாதிமதபேதமின்றி தொடுப்புகளை வைத்திருப்பதில் அவர் கம்யூனிஸ்ட் ஆகவே இருந்தார்.

 

சின்னாட்டி அப்பொழுது தனது முறை மச்சாளான காமாட்சியை கலியாணம் செய்திருந்தான் . காமாட்சி பொதுநிறத்தில் கடைந்தெடுத்த தந்தத்தில் உருவான சிலைபோலவே இருப்பாள் . தனது இளம் மனைவி அழகானவள் என்பதில் சின்னாட்டிக்கு சிறிது பெருமை இருக்கவே செய்தது . உடையார் எவ்வளோ முயற்சி செய்தும் காமாட்சி , உடையாருக்கு நழுவுகின்ற மீனாகவே இருந்தாள் . அத்துடன் உடையாரின் ஆண்மைக்கும் சாதித்தடிப்புக்கும் சவாலாகவே இருந்தாள் . ஒரு பறைச்சி தன்னை உச்சுவது கண்டு உடையார் என்ற கொக்கு மறுகியே போனது . இறுதியில் கொக்கு “ பத்துப்பரப்பு செம்பாட்டுத் தோட்டக்காணி “ என்ற கிடுக்கிப்பிடியினால் காமாட்சி என்ற விலாங்கு மீனைக் கொத்திக்கொண்டது . இதில் சின்னாட்டியின் ஏழ்மை நிலையே காமாட்சியை உடையாரிடம் சரணடையச் செய்தது . உடையாரின் உக்கிரமான தாக்குதலால் காமாட்சி கர்பமாகியிருந்தது அப்பாவி சின்னாட்டிக்குத் தெரிய வாய்ப்பில்லை . பிள்ளை தன்னால் வந்ததாகவே சின்னாட்டி நம்பிக்கொண்டிருந்தான். இந்த நேரத்தில் தான் சின்னாட்டியின் ஒன்றவிட்ட தம்பி , உடையாரின் பெறாமகளை காதலித்து கலியாணம்செய்ய முத்தையன் கட்டுவுக்கு கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் . ஊரே இதனால் கீயோ....... என்றது . இதன் எதிரொலி பக்கத்துக் கிராமங்களிலும் கேட்டன . இரவோடு இரவாக எல்லா நளவர்கள் , பறையர்கள் வீட்டுக் கிணறுகளில் செத்த எலிகளும் , செருப்புகளும் , மனிதக் கக்கூசுகளும் வெள்ளாளர்களால் எறியப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் சின்னாட்டியின் ஊரில் அந்த அவலம் நிகழ்ந்தது. அதுவே தமிழர் வாழ்வில் வருங்காலத்தில் சிங்களம் மேற்கொள்ள இருந்த இன அழிப்பிற்குக் கட்டியம் கூறும் செய்தியாகவும் அமைந்திருந்தது.

 

உடையார் பெறாமகள் கிடைக்காத வெப்பிராயத்தில் தனக்கு வேண்டியவர்களுடன் ஊர் அம்மன் கோவிலில் ஊரில் இருந்த எல்லா பறையர்களையும் கூட்டி வைத்திருந்தார் . அன்றைய காலகட்டங்களில் உயர்குடிகளே பிளவுஸ் அணியலாம் என்ற அழுகிய நாகரீகம் இருந்தது. வயதான பெண்மணிகள் உடலில் பிளவுசுகள் இல்லாமல் நின்றிருந்தார்கள் . காமாட்சி மட்டும் சின்னாட்டியின் உத்தரவுக்கமைய பிளவுஸ் அணிந்து நான்கே மாத கர்ப்பத்துடன் நிற்கமுடியாமல் நின்றாள் . அப்பொழுது தான் சாதிகுறைவானவர்களும் மேலே பிளவுஸ் அணியும் முறை புளக்கத்தில் வந்தது . வயதானவர்கள் தொடர்ச்சியான அடிமைப் புத்தியால் பிளவுஸ் அணிய வெக்கப்பட்டார்கள்.

 

“ எந்த பறை நாயடா என்ரை பெறாமோளை தூக்கினது ?? கள்ள நாயளுக்கு அவ்வளவு கொழுப்போடா ?? “

 

உடையார் நாக்கில் சாதியின் தடிப்பு துள்ளி விளையாடியது .

“ ஏனாக்கும் எங்களுக்கு ஒண்டும் தெரியாது கமக்காறன் . நாயே…….. பொத்தடா வாயை . உன்ரை குடும்பத்திலை தான் ஆரோ தூக்கினவன் . இருங்கோடா உங்களுக்கு செய்யிறன் வேலை “

 

என்று காமாட்சியின் பக்கம் திரும்பிய உடையாரின் கண்கள் வெறியில் மின்னின . “ எளிய நாயாள் உங்களுக்கு உந்த பிளவுசும் ஒரு கேடே?? எடி சொர்ணலக்ஸ்மி!!!!! கொண்டுவாடி கொக்கச்சத்தகத்தையும் மிளகாய் துளயும்” என்று உடையார் ஊளையிட்டார். எல்லோரும் வினோதமாகவும் பதட்டத்துடனும் உடையாரைப் பர்த்தார்கள் . அந்தக் காலத்திலேயே தமிழனை தமிழனே மிதித்து தனது காலடியில் வீழ்த்துவதற்கான காட்சி அங்கே அரங்கேறத் தயாராக இருந்தது . சொர்ணலக்ஸ்மி கொகச்சத்தகத்தையும் மிளகாய் தூளையும் கொண்டு வந்தாள் . எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க , உடையார் வெறி பிடித்தவர் போல,

 

“எளிய பறை வே.....யள் . வாடி இங்கை “ என்றவாறே ,

 

காமாட்சியின் தலைமயிரை எட்டிப்பிடித்து கொக்கச்சத்தக த்தால் அரிந்துவிட்டு , “ உங்களுக்கெல்லாம் பிளவுஸ் கேக்குதோடி “ என்றவாறே , அவளின் முதுகுப் புறமாக கொக்கச்சத்தகத்தால் ஆழ இழுத்தார் உடையார் . அவர் இழுத்த வேகத்தில் பிளவுஸ் கிழிந்து சதையுடன் வந்தது . அத்துடன் நில்லாது கையில் இருந்த மிளகாய் தூளை காயத்தில் வீசி எறிந்தார் உடையார் . காமாட்சி வலியால் குளறினாள் . வெறியுடன் பாய்ந்த சின்னாட்டியை பலர் ஒன்று சேர்ந்து பூட்டுப் போட்டு வீழ்த்தினார்கள் . உடையார் கெக்கட்டம் விட்டு சிரித்தவாறே “ உங்களுக்கு இதெல்லாம் காணாதடி “ என்றவாறே காமாட்சியின் பின்புறமாக எட்டிப் பலமாக உதைந்தார் . அவள் அலங்கமலங்க கோவில் முன் கட்டில் நிலைகுலைந்து விழுந்தாள் . அவள் விழுந்த வேகத்தில் அவளது வயிறு கட்டில் மோதி ரத்தக்குளம்பானது . உடையார் தனது வாரிசு அவள் வயிற்றில் வளருவது தெரிந்தும் வெள்ளாள சாதீய மேலாதிக்கம் அவர் கண்ணை மறைத்தது . சின்னாட்டி வீரிட்டுக் குளறினான் .

 

”டேய்…………. உடையார் நீ புழுத்து நாறுவாயடா . என்னாலை தான் நீ கட்டையிலை போவாயாடா “

என்று மண்ணை அள்ளி எறிந்தான்.

 

“ இங்கை பற்றா பறைபுள்ளை சாபம் போடிறார் “ .

 

என்று சின்னாட்டியின் கோபத்திற்கு எண்ணை ஊற்றினார் உடையார் . அப்பொழுது தான் சின்னாட்டி அந்த வேலையைச் செய்தான் . அவன் அடிக்கின்ற இரண்டு பெரிய பறைகளையும் வீட்டில் இருந்து கொண்டு வந்து அம்மன் கோயலடியில் கோடாலியால் கொத்திப் பிளந்து எரித்தான் . அங்கே யாழ்பாணத்துக் குடிமை என்ற சாதி , சின்னாட்டியினுடைய பறையுடன் சேர்ந்தே எரிந்தது . அவன் உடையாரை நோக்கி ,

“ டேய் எல்லாரும் கேளுங்கோடா . இண்டையிலை இருந்து என்ரை ஆக்கள் உங்களுக்கு பறை அடிக்கமாட்டாங்களடா . நான் கும்பிடிற அம்மாளாச்சி மேலை சத்தியம் “ .

 

என்றவாறே கையை கத்தியால் கீறி காமாட்சி விழுந்த இடத்தில் விட்டு தனது நெற்றியிலும் பூசிக் கொண்டான் . அப்பொழுது அவனது தோற்றம் பயங்கரமாகவே இருந்தது . அவனது செய்கையை உடையாரின் நண்பர்கள் கைதட்டி ரசித்தனர் . அதன்பின்பு சின்னாட்டியின் பறை எங்குமே ஒலிக்கவில்லை .

 

பழைய நினைவுகளில் மூழ்கிய சின்னாட்டியின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

“ என்னவும் “ என்ற காமாட்சியின் குரல் சின்னாட்டியைக் குலைத்தது .

 

“ என்ன ?”

“ நான் சொல்லுறதை கோவிக்கமல் கேளணை . உடையார் எங்களுக்கும் எங்கடை சாதிசனத்துக்கும் செய்தது அனியாயம் தான் . அவன் இப்ப அதுகளை அனுபவிக்கிறான் . இப்ப சாககிடக்கிறான் . ஒரு எட்டு எட்டிப் பாத்திட்டு வாங்கோ . நாங்கள் சாதிகுறைஞ்சாலும் நடப்புகளாலை பெரியமனிசர் எண்டு காட்டுங்கோ . ஒருத்தனை மன்னிக்கிறதுதான் நாங்கள் அவனுக்கு குடுக்கிற பெரிய தண்டனை . என்ரை சொல்லு கேளுங்கோ “

 

என்ற காமாட்சியை சின்னாட்டி ஏறெடுத்துப் பார்த்தான் . அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை . இதில் காமாட்சியின் ஆசைநாயகன் எப்படியிருக்கிறான் என்பதை அறியும் ஆவல் கலந்திருந்ததை அப்பாவி சின்னாட்டியால் அறியமுடியாமல் இருந்தது . “

 

சரி நான் போறன் உடுப்புகளை எடுத்துவை . குளிச்சுபோட்டு வாறன்.”

 

என்றவாறே கையில் வேப்பங்குச்சியுடன் கிணத்தடி நோக்க நகர்ந்தான் சின்னாட்டி. சின்னாட்டி எட்டுமுழவேட்டியை கட்டிக்கொண்டு சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டான் . நீண்ட தலைமயிரை வாரி குடுமியை கண்ணாடியில் பார்த்து சரிசெய்து கொண்டான் . காலதேவன் அவனது தேகத்தில் பல கோடுகளைப் போட்டாலும் , அவனது உறுதி குலையாத உடல் அவனது 65 வயதிலும் பலபெண்களைத் திரும்பிப் பார்க்க வைத்தன.

அவன் உடையாரின் வீட்டை அடைந்தபொழுது அங்கு ஒரு கூட்டமே கூடியிருந்தது . அவர்கள் தங்களுக்குள் குசுகுசுத்தவாறே அவனுக்கு வழிவிட்டனர் . அவன் வீட்டினுள் நுளைந்தபொழுது அவனது தீட்டு அவர்களை ஒன்றும் செய்யவில்லை . அவன் உடையாரின் அருகே நின்று ,

 

“ நானாக்கும் . சின்னாட்டி வந்திருக்கிறன் “ என்று உரத்துச் சொன்னான் . உடையாரின் கண்கள் உருண்டன . மெதுமெதுவாக அவைதிறந்தன . உடையார் அவனை அருகே வருமாறு சைகை செய்தார் .

 

“உங்களுக்கு ஒண்டுமில்லையாக்கும் . நீங்கள் இன்னும் இருப்பியள் .”

 

அவன் வார்த்தையில் குரூரம் கொப்பளித்தது .

 

“ சின்னாட்டி உனக்கு நான் துரோகம் செய்துபோட்டன்ரா. நீதான் எனக்கு பறை அடிக்கவேணும் “

 

என்று சிரமப்பட்டுச் சொன்ன உடையாரின் கண்கள் நிலைகுத்தி நின்றன . உடையாரின் கண்களை மூடிய அவன் அழுகுரலை எழுப்பினான்.

 

உடையாரின் செத்தவீட்டை பெரும் எடுப்பாகவே அவர்கள் செய்தார்கள் . ஊரின் பெரும் சாதிமான் போனதாலும் , தங்கள் சாதிப்பெருமைகளை உடையாரின் செத்தவீட்டில் விளம்பரப்படுத்தவே எல்லோரும் விரும்பினார்கள் . வீட்டின் வெளியே குதிரை வண்டில் தயாராக வந்து நின்றது . வீட்டு கிணற்றடியில் உடையாரைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். உடையாரின் சொந்தம்பந்தமெல்லாம் அங்கே கூடிக்கொண்டு இருந்தார்கள் . சின்னாட்டியின் அடிபொடிகள் ஒவ்வரவர் வருகைக்கும் பறை அடித்து அவர்களின் சோகத்தை உசுப்பேத்திக்கொண்டிருந்தார்கள் .

 

சின்னாட்டி தனது வீட்டிலே தனது கூட்டாளி ஒருவனிடம் வாங்கிய பெரிய பறையை வார் வாந்து கொண்டிருந்தான் . இறுதியில் அவன் பறையைத் தட்டிப்பார்த்த பொழுது அது அதிர்ந்தது . சின்னாட்டியின் மனதில் உடையார் செய்த காமாட்சிக்குச் செய்த கொடூரங்களே நிறைந்து அவனை உருவேற்றின . இதனால் அவன் சிறிது தலைவலியையும் காச்சலையும் உணரவே , காமாட்சியிடம் கொத்தமல்லி தேத்தண்ணி கேட்டான் . அவன் தாளக்கட்டுகளை தன்னுள் உருவேற்றிக் கொண்டிருப்பதால் , சின்னாட்டி பறை அடிக்கின்ற நாட்களில் காமாட்சி அதிகம் அவனிடம் பேசமாட்டாள் . அவள் தந்த தேத்தண்ணியை பனங்கட்டியுடன் குடித்துவிட்டு , சுருட்டை எடுத்து பற்றவைத்தவாறே பறையையும் தூக்கிக்கொண்டு உடையார் வீட்டை நகர்ந்தான்.

 

சின்னாட்டி உடையார் வீட்டை அடைந்தபொழுது அங்கு உடையாரை வழியனுப்ப ஆயுத்தமாக பொற்சுண்ணம் இடித்துக்கொண்டிருந்தார்கள் . சின்னாட்டி பறையை ஓரத்தில் வைத்து விட்டு அவரின் கால்மாட்டில் வந்து கையைத் தூக்கி கும்பிட்டான் . அவனது நெற்றயில் அகலப் பூசிய திருநீறும் சந்தனப் பொட்டும் அவனை அழகுபடுத்தின . இரண்டு மூன்று நளத்திகள் ஒப்பாரியில் உடையாரின் புகழ் பாடினார்கள் . பொற்சுண்ணம் இடித்து உடையார் புறப்படத்தயாரானார் . அவரின் தொடுப்புகள் மனைவி அவரின்மேல் விழுந்து குழறினார்கள் . சின்னாட்டி தனது சமாவைத் தொடக்கினான் .

 

அவனது பெரிய பறை மற்ற சிறய பறைகளைவிட “ டண்டணக்கு டண்டணக்கு டடாண்டணக்கு ணக்குணக்குவென “ ஓங்கி அதிர்ந்தது . அங்கு கூடியிருந்த அண்களுக்கு மெதுவாக உரு ஏறத்தொடங்கியது . உடையாரைத் தாங்கிய குதிரைவண்டில் ஒழுங்கையை தாண்டி பிரதான வீதிக்கு வந்துவிட்டிருந்தது . உடையாரின் முன்னே நிலபாவாடை விரித்துக் கொண்டிருந்தார்கள் . குதிரை வண்டில் அருகே இருபக்கமும் பூவும் , அரிசிப்பொரியும் எறிந்து கொண்டு வந்தார்கள் . சின்னாட்டியின் அடிபொடிகள் முன்னே பறையடிக்க , சின்னாட்டியோ குதிரை வண்டிலை சுத்திச்சுத்தி ஒருவித நளினமான ஆட்டத்துடன் தலையையை ஆட்டியவாறு தனது பெரிய பறையை அடித்தான் .

 

வீதி சந்தியில் குதிரை வண்டில் நின்று பறையடி சமாவிற்குத் தயாரானது . சின்னாட்டி நடுவில் நிற்க அவனைச்சுற்றி அவனது அடிபொடிகள் நிற்க , சின்னாட்டி சமாவைத் தொடங்கினான் . அவனிற்கும் அவனது சொந்தபந்தங்களுக்கும் வெள்ளார் நடத்திய கொடூரங்களின் கோபம் அவனது பறை அடியில் விழுந்து தெறித்தது . அவனது குடும்பி அவிழ்ந்து ஆடியது. அவன் வெறிபிடித்து அடித்துக் கொண்டிருக்க வெள்ளாளர்கள் அவனது தாளக்கட்டுகளில் வெறிப்பிடித்து ஆடினார்கள் . ஒருசிலர் காசுகளை சின்னாட்டி மீது வீசி எறிந்தார்கள் . அப்பொழுதும் அவர்களது திமிர்த்தனமே அதில் பட்டுத்தெறித்தது . இந்தப் பறையடி சமா நடந்துகொண்டிருந்த வேளையில் , பறையை அடிப்பதற்கு கையை ஓங்கிய சின்னாட்டி அப்படியே மயங்கி விழுந்தான் . பகமை மறந்த அந்தப் பண்பாளனது உயிர் , அதிக உணர்ச்சி வசப்பட்டதன் எதிர்வினையான மாரடைப்பினால் அவனை விட்டுப் பிரிந்திருந்தது . ஆனால் சாதீயம் ????????????

 

 

கோமகன்

 

16/01/2013

 

******* எழுத்து உரு மாற்றப்பட்டது

Edited by கோமகன்

  • Replies 78
  • Views 6.8k
  • Created
  • Last Reply
கோமகன் அண்ணா படங்களுடன் அசத்திட்டியள்      
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக, நண்பர்கள் கூடியிருந்து கதைக்கும் போது, தனது சாதியைப் பற்றி, அடிக்கடி கதைத்துக் கொண்டிருப்பவர்களை  அல்லது தான் சாதியில் உயர்ந்தவர் என்று நிலைநாட்ட முயன்று கொண்டிப்பவர்களை, அவதானித்ததில், அவர்களுக்குள் ஒரு பெரிய தாழ்வு மனப்பான்மை,மறைந்திருப்பதைப் பல தடவைகளில் அவதானித்திருக்கின்றேன்! இவர்களில் பலர் எனது மிக நெருங்கியவர்களாக ஆனபின்பும், அவர்களது சாதீயம் பற்றிய கண்ணூட்டம் அதிகம் மாறிப் போகவில்லை!

 

குட்டக் குட்டக் குனிகின்ற மனப்பான்மை மாறிப்போகையில், ;சாதீயம்' தானாகச் செத்துப் போகும்!

 

கதைக்கு நன்றிகள், கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சாதீயம் ????????????

"சாதியம்"இதை ஒரு சந்ததியின்(தலமுறை) காலத்தில் ஒழிக்க முடியாது பல சந்ததிகள் செல்ல வேண்டும்,அல்லது புலம் பெயர வேண்டும் புலம்பெயர்ந்த தலைமுறையிலும் ஒரு தலைமுறை போன்பின்புதான் மாற்றங்கள் வரும். சில சாதி அடையாளங்கள் மதம் மாறி ஒரு தலைமுறை சென்ற பின்பு..... சாதி அடையாளம் மாறி மத அடையாளத்திற்கு சென்றுள்ளது.... கதையில் காமாட்சி உடையார் தொடர்பை தவிர்திருக்கலாம்....வெளாளரின் திமிரை காட்டுவதற்காக சாதி குறைந்தவர்களை சபலகாரர் என்று காட்டுவது போல எனக்கு படுகிறது கதை தொடாராது ஆனால் சாதியம் தொடரும்..:D..கோமகன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதீயத்தை ஆதரிக்கிறேன், எதிர்க்கிறேன் என்பதற்கு அப்பால் இது குறித்துப் பேச வேண்டிய விடயம் நிறையவே எமது சமூகத்தில்

இருக்கிறது. தமிழ்நாட்டில் 0,2% வீதமான கலப்புத்திருமணங்கள் நடப்பதாகத்தான் அண்மைய ஆய்வு கூறியுள்ளது. அதற்கு

எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் ஈழத்திலும் இந்த சாதீயம் தனது நச்சுவேர்களைப் பரப்பியுள்ளது.

புலம்பெயர்நாடுகளில் இது குறைவாக இருந்த போதும்,அதன் வீரியம் குறைந்த பாடில்லை.

 

அதே வேளை இந்த சாதீயம் குறித்து பேசுபவர்களிடமும் எனக்கு பலத்த கேள்விகள் உண்டு.

மேட்டுக்குடி,வெள்ளாளர்,ஆதிக்க சாதிகள் என்று பேசுபவர்கள், சமூகப்புரட்சி செய்வதாக எல்லாம் பீற்றிக்கொள்பவர்கள் என்றாவது தம்மிலும் கீழானவர்களுடன் தொடர்புகொள்ளத் தயாரா??

 

அடக்கப்படும் சாதீயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தலித்கள் என்றால் அவர்கள் மேட்டுக்குடியில் சம்பந்தம் செய்தால் தான் சமூகப் புரட்சியா?

ஏன் தம்மிலும் கீழானவர்களை அவர்கள் கலப்பு செய்ய விரும்புவதில்லை? இதில் எங்கை சமூகப்புரட்சி இருக்கு?????

அவர்களிடமும் மேட்டுக் குடியாய்,ஆதிக்க சாதியாய் வரத்தான் விரும்புகிறார்களே தவிர சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல,

அந்த வகையில் இதெல்லாம் அந்தளவு விரைவில் மாறக்கூடிய விடையமா என்பது கேள்விக்குறியே?? :icon_idea:

 

பல பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் இருக்கும் ஒரு சமூகவிடையத்தை கதையாக கொண்டுவந்துள்ளீர்கள்,

அந்த வகையில் நன்றி கோமகன் அண்ணா, உங்கள் படைப்புக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் கதையைக் கொண்டு சென்ற விதம் அருமை. ஆனால் காமாட்சியின் விடயம் தான் கொஞ்சம் இடிக்குது. தெளிவாகச் சொல்லப்படவில்லை.

 

 

ஜீவா என் பிள்ளைகள் எம்மிலும் (கீளானவர்கள்) என நீங்கள் குறிப்பிடும்
எவரைக்  காதலித்தாலும் அவர்களுக்கு மனபூர்வமாக மணம் முடித்துக்
கொடுக்க நானும் என் கணவரும் தயாராகவே உள்ளோம். நான் இதை உங்கள் திரிக்காக
மட்டும் எழுதவில்லை.

நான் நினைக்கிறேன் எம் அடுத்த தலைமுறை
கல்வியையும் குணத்தையும் மட்டுமே பார்க்கும் என்று. எம்மதும், எமக்கு
முந்தியதும் தான் உதை தூக்கிப் பிடிப்பார்கள் என்று.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு நின்மதி.புலத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்களுடன் சாதியம் பற்றி பேசியுள்ளேன். பலருக்கு அதை பற்றி தெரியாது. இன்னும் சிலர் இந்தியா இலங்கை போன்ற இடங்களில்  சாதியம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.எப்படியானவர் உங்களின் காதலனாக/காதலியாக, கணவனாக/மனைவியாக வரவேண்டும் என கேட்ட போது சாதியம் பற்றி எவரும் பேசவில்லை.  நன்றி கோமகன் உங்கள் பதிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பற்றி எழுதியதால் நிர்வாகம் இத் திரியை நீக்கனும்  :D 

 

சாதீயம் புலத்தில் பார்ப்பதாக தெரியவில்லை, ஆனா புதுவியாதி தொட்டிருக்கு, போட்டி போட்டு ஓப்பிட்டு பார்க்கும் குணம்

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி  கோ

 

ஆனால் கதை ஒட்டவில்லை

மறைந்துபோன சாதிகளை   மீள  எடுத்து நாமே விடுகின்றோம் போலுள்ளது.

அத்துடன் எந்த மனிதரையும் இங்கு நல்லவராக தெளிந்தவராக காட்டவில்லை.

எல்லாமே தப்பானவர்கள் தான்.

மனைவியை அடிப்பதற்கு தனது தொழிலை எறிந்துவிட்டுப்போவது

துரோகம்  செய்தவன் அநியாயம் செய்தவனுடன் உடன்கட்டை ஏறுவது என்பன  கதைக்கான பெரும் பின்னடைவு.

 

எதையோ  சொல்ல வெளிக்கிட்டு தடுமாறி  அதை சொல்லாது விட்டது தெரிகிறது.

சிவப்புக்காறர்களால் சமுதாயம் திருந்தியது என்பதைவிட.

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா படங்களுடன் அசத்திட்டியள்      

 

வாங்கோ ஆசாமி . நீங்கள்தான் இந்தக்கதைக்கு முதல்கருத்து எழுதியிருக்கின்றீர்கள் . ஆனால் ஒற்றைவரியில் அசத்தல் என்று சொல்கின்றீர்கள் . நீங்கள் கருத்துக்களத்துக்குப் புதியவரானாலும் பயப்பிடாமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் . அப்பொழுதுதானே உங்களைப்பற்றி என்னால் அறியமுடியும் . வருகைக்கு நன்றி  :)  :)  .

எம் சமுதாயத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினையை கருவாக எடுத்த தைரியத்திற்கு பாராட்டுக்கள்.


 

இந்தக் கதைக்கு  என் பக்கமும் சில விமர்சனங்கள் இருக்கு. ஆனால்... அப்புறமாக எழுதுகின்றேன்.  :)            

நன்றி கோமகன் உங்கள் பதிவிற்கு.

 

முதலில் எங்களை நாங்கள் அறியாத எழுபதுகளுக்கு கூட்டி சென்றமைக்கும், எம்மினத்தின் நாங்கள் கேள்விபட்டதை மீண்டும் ஒருமுறை சாட்டை அடியாக தந்தமைக்கும் நன்றிகள். நீங்கள் கதை நகர்த்திய விதம் எனக்கு சின்ன வயதில் படித்த செங்கையாழியானின் கதைகளை ஞாபகபடுத்தின.

 

இருந்தாலும் உங்கள் மீது சில விமர்சங்களையும் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.

 

முதலாவதாக புங்கையூரான், சுமோ சொன்னது போல உங்கள் கதையின் கருவுக்கும், அது ஏற்படுத்த போகும் தாக்கத்துக்கும் வீரியம் குறைப்பதாகவே காமட்ச்சியின் பாத்திரம் அமைகிறது. பத்து பரப்பு காணிக்கு கூட சோரம் போகாத எத்தனையோ பெண்கள் எல்லா குடியிலும் இருக்கிறார்கள் என்பது எனது வாதம்.

 

இரண்டாவது நீங்கள் உங்கள் முழுகதையையும் தடித்த எழுத்துக்களில் எழுதாமல், சாட்டையாக, அல்லது உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய இடங்களை மட்டும் தடித்த எழுத்துக்களில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

 

மொத்தத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க கூடிய இன்னொரு எழுத்தாளன் எங்கள் மத்தியில் இருக்கிறான் என்பதில் பெருமை அடைய வைத்திருக்கிறது உங்கள் கதை.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் .சற்று முன்னைய  காலத்தின் ..சாபக்கேடுகளில்  இதுவும் ஒன்று. இக்காலத்தில் இது புலம்பெயர் நாடுகளில் திருமண விடயத்தில் ..கவனிக்க் படுகிறது. இரத்தத் ஓட்டத்தில் ஊறிய ஒன்று .   கதை  மிகவும் விறு விறு பாகவும் ..உணர்வு பூர்வமாகவும் இருந்தது.  கலை எழும்பிய  உணர்வு வேகத்தில் மாரடைப்பு வந்தது  ஒரு பிளஸ் பாயிண்ட் .. உயர் குல  இழி குல த்த்வனும் இறுதியில் போகும் இடம் ஒன்றுதான். ( சுடலை ) ...காமாட்சியின் சமபவம்  நடந்திருக்க சாத்தியம் உண்டு. உணர்வு பூர்வமான் ஒரு கதை .. கோ வுக்கு ஒரு சபாஷ்.............போடலாம். நல்ல ஒரு ;அதிர்வு.

  • தொடங்கியவர்

பொதுவாக, நண்பர்கள் கூடியிருந்து கதைக்கும் போது, தனது சாதியைப் பற்றி, அடிக்கடி கதைத்துக் கொண்டிருப்பவர்களை  அல்லது தான் சாதியில் உயர்ந்தவர் என்று நிலைநாட்ட முயன்று கொண்டிப்பவர்களை, அவதானித்ததில், அவர்களுக்குள் ஒரு பெரிய தாழ்வு மனப்பான்மை,மறைந்திருப்பதைப் பல தடவைகளில் அவதானித்திருக்கின்றேன்! இவர்களில் பலர் எனது மிக நெருங்கியவர்களாக ஆனபின்பும், அவர்களது சாதீயம் பற்றிய கண்ணூட்டம் அதிகம் மாறிப் போகவில்லை!

 

குட்டக் குட்டக் குனிகின்ற மனப்பான்மை மாறிப்போகையில், ;சாதீயம்' தானாகச் செத்துப் போகும்!

 

கதைக்கு நன்றிகள், கோமகன்!

 

ஆக சாதீயம் என்பது இன்றும் தனிப்பட்ட முறைகளில் கதைக்கப்படுகின்றது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள் . எனது கதையின் சம்பவங்கள் எழுபதுகளில் நடைபெற்றாலும் , இன்று அதன் வீரியம் குறைந்ததே ஒழிய அது முற்றுமுழுதாக அகன்று விடவில்லை . வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான்  :)  :)  .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா என் பிள்ளைகள் எம்மிலும் (கீளானவர்கள்) என நீங்கள் குறிப்பிடும்

எவரைக்  காதலித்தாலும் அவர்களுக்கு மனபூர்வமாக மணம் முடித்துக்

கொடுக்க நானும் என் கணவரும் தயாராகவே உள்ளோம். நான் இதை உங்கள் திரிக்காக

மட்டும் எழுதவில்லை.

 

 

முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல பெற்றோராய் இருப்பதற்கு. :)

 

நான் எழுதிய காரணங்கள் இரண்டு.

1. பொதுவாக எனது குடும்ப சூழ்நிலையை வைத்து..

நான் காதலிக்கிறேன் என்று சொன்ன போது வாங்கிய திட்டுக்களும், என் மீது பிரயோகித்த அழுத்தங்களும் கொஞ்ச நஞ்சமல்ல வயது வரவில்லை இல்லை ஏதும் நியாயமான காரணங்களைக் கூறி முடித்ததும் செய்து வைக்கிறோம் என்பது வேறு, நாடு,சாதி,மதம் என்று எதிர்ப்பது வேறு.

 

அந்த வகையில் பெற்றோர்,சகோதரர்கள் யாருடைய ஆதரவும் இன்றி ஒரு சதம் உதவி கூட இன்றி மாலை முதல் தாலி வரை என் சொந்த சம்பாத்தியத்தில் செய்தும், அவர்கள் கூட இருக்கவில்லையே என்ற வருத்தம் இன்றும் இருக்கிறது.

 

2.வலைப்பூக்களிலும்,கருத்தாடல் நிகழ்வுகளிலும், ஏன் யாழில் கூட சிலர் மேட்டுக்குடியினரை எதிர்த்து பல ஆக்கங்கள் கருத்துக்கள் வரும் ஆனால் அப்படி பேசும் தலித் சமூகத்தவர்கள் கூட தம்மை விடப் பிற்படுத்தப் பட்டவர்களை தீண்டாமை எனும் பேரில் ஒதுக்கி வைத்து வைத்து சமூகப்புரட்சி பற்றிப் பேசுவது எவ்வளவு முரண்நகை என்பதை பதிவு பண்ணத்தான் எழுதினான் அக்கா. :icon_idea:

சாதியை ஒழிப்பது இலகுவான விடயமல்ல., இன்னும் சில தலைமுறைகளுக்குப் பிறகு சாத்தியப்படலாம்!!  

 

நன்றி கோ பதிவிற்கு. 

கதையின் இடையில் வருகின்ற வரலாற்று விளக்கம் கதையின் ஓட்டத்தை குழப்புகிறது. தனியாக துருத்திக் கொண்டு நிற்கிறது.

வருங்காலத்தில் சிங்களம் செய்ய இருக்கும் இன அழிப்புக்கு கட்டியம் கூறும் நிகழ்வு என்று கூறியதற்கான காரணமும் புரியவில்லை.

இந்தக் கதையில் வரும் சம்பவங்களை விட மிகக் கொடுரமான விடயங்களை 60, 70களில் வெளிவந்த பல கதைகள் பதிவு செய்திருக்கின்றன. (உதாரணம்: டானியல், டொமினிக் ஜீவா). இவர்கள் கண் முன்னே நடந்தவைகளை எழுதினார்கள். அதே போன்று கோமகனும் இன்றைக்கு நடப்பதை எழுத வேண்டும்.

சாதி இன்றைக்கும் உயிரோடுதான் இருக்கிறது.

1970களில் என்று எழுதி "சாதி" என்பதை இறந்த காலத்திற்கு உரியதாக்குவது தவறு. இது விழிப்புணர்வு இல்லை.

கதையின் முடிவு மோசமான கருத்தை தருகின்றது.

பறையை தூக்கி எறிந்து "புரட்சி" செய்த கதாநாயகன் கடைசியில் ஆதிக்க சாதிக்காரனின் சாவுக்கு பறை அடிக்கிறான். ஆதிக்க சாதிக்காரனே வெல்கிறான். பறை அடிக்க பிறந்தவன் பறை அடிக்கின்ற போதே செத்தும் போகிறான்.

என்னதான் கோமகன் சொல்ல வருகிறீர்கள்???!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்தோடும் கேள்விகளோடும் ஒத்துப் போகமுடிகின்றது. சாதியத்தை எதிர்க்கின்றேன் பேர்வழி என்று சாதியத்தை ஆதரிக்கின்ற கதையின் கரு. பாலச்சந்தரும் புரட்சியான கதைக்களத்தைத் தேர்ந்துவிட்டுப் இறுதியில் சமரசம் செய்வதுபோல சின்னாட்டியும் உடையாருக்கும் பறை மேளத்தை அடிக்கின்றார். அந்தச் செய்கைக்கு ஒரு விளக்கமும் இல்லை.

 

அதுபோலவே உடையாரை உச்சிக்கொண்டு திரிந்த காமாட்சி பத்து பரப்புப் செம்பாட்டுத் தோட்டக் காணிக்காக  சோரம் போவதும் சாதி குறைந்த பெண்கள் மீதான கேவலமான பார்வையைத்தான் காட்டுகின்றது. மொத்தத்தில் இந்தக் கதை மூலம் சில சாதிய உரையாடல்களை மட்டும்தான் அறியமுடிந்தது. 

  • தொடங்கியவர்

"சாதியம்"இதை ஒரு சந்ததியின்(தலமுறை) காலத்தில் ஒழிக்க முடியாது பல சந்ததிகள் செல்ல வேண்டும்,அல்லது புலம் பெயர வேண்டும் புலம்பெயர்ந்த தலைமுறையிலும் ஒரு தலைமுறை போன்பின்புதான் மாற்றங்கள் வரும். சில சாதி அடையாளங்கள் மதம் மாறி ஒரு தலைமுறை சென்ற பின்பு..... சாதி அடையாளம் மாறி மத அடையாளத்திற்கு சென்றுள்ளது.... கதையில் காமாட்சி உடையார் தொடர்பை தவிர்திருக்கலாம்....வெளாளரின் திமிரை காட்டுவதற்காக சாதி குறைந்தவர்களை சபலகாரர் என்று காட்டுவது போல எனக்கு படுகிறது கதை தொடாராது ஆனால் சாதியம் தொடரும்.. :D..கோமகன்

 

நீங்கள் கூறிய மதமாற்றம் தாயகத்தில் நடைபெற்றதுதான் . மதம்மாறியபின்பும் அங்க சாதீயம் உருவாடியதே . காமாட்சியின் பாத்திர உருவாக்கம் ஏழ்மையின் நிலையில் அவள் உடையாரிடம் மடிகின்றாள் . அதேவேளையில் உடையாரின் பெறாமகள்  வாட்டசாட்டமான சின்னாட்டியின் உறவுக்காறனில் மயங்கி கலியாணம் செய்ய முத்தயன்கட்டுவிற்கு ஒடுகின்றாள் . ஆக இங்கு சபலம் என்பது சமனாகின்றது  . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்கநன்றி புத்தா .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய மதமாற்றம் தாயகத்தில் நடைபெற்றதுதான் . மதம்மாறியபின்பும் அங்க சாதீயம் உருவாடியதே . காமாட்சியின் பாத்திர உருவாக்கம் ஏழ்மையின் நிலையில் அவள் உடையாரிடம் மடிகின்றாள் . அதேவேளையில் உடையாரின் பெறாமகள்  வாட்டசாட்டமான சின்னாட்டியின் உறவுக்காறனில் மயங்கி கலியாணம் செய்ய முத்தயன்கட்டுவிற்கு ஒடுகின்றாள் . ஆக இங்கு சபலம் என்பது சமனாகின்றது  . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்கநன்றி புத்தா .

 

 

அது தானா   இது?

நானும் சமூதாய  சீர்திருத்தம் என்று நினைத்தேன்

ஒரு பகுதியை   அல்ல  இருபகுதியை  அல்ல

ஒட்டு  மொத்த இனத்தையே  சீரளிக்கும் கருத்து.  எழுத்து.

தொடர்வது நல்லதல்ல.

நன்றி  வணக்கம்.

சபலம் என்பது பொதுவானதுதான். "எங்களின் பிள்ளைகள் உங்கள் வீட்டில், உங்களின் பிள்ளைகள் எங்கள் வீட்டில்" என்பது ஒரு பிரபல்யமான வசனம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபலம் என்பது பொதுவானதுதான். "எங்களின் பிள்ளைகள் உங்கள் வீட்டில், உங்களின் பிள்ளைகள் எங்கள் வீட்டில்" என்பது ஒரு பிரபல்யமான வசனம்.

 

கே.டானியலின் கதைகள் எல்லாவற்றிலும் இது இருக்கும். கமக்காறிச்சிக்கு எப்பவும் வாட்டசாட்டமான சாதி குறைவானர்களுடன் தொடுப்பு இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் இடையில் வருகின்ற வரலாற்று விளக்கம் கதையின் ஓட்டத்தை குழப்புகிறது. தனியாக துருத்திக் கொண்டு நிற்கிறது.

வருங்காலத்தில் சிங்களம் செய்ய இருக்கும் இன அழிப்புக்கு கட்டியம் கூறும் நிகழ்வு என்று கூறியதற்கான காரணமும் புரியவில்லை.

இந்தக் கதையில் வரும் சம்பவங்களை விட மிகக் கொடுரமான விடயங்களை 60, 70களில் வெளிவந்த பல கதைகள் பதிவு செய்திருக்கின்றன. (உதாரணம்: டானியல், டொமினிக் ஜீவா). இவர்கள் கண் முன்னே நடந்தவைகளை எழுதினார்கள். அதே போன்று கோமகனும் இன்றைக்கு நடப்பதை எழுத வேண்டும்.

சாதி இன்றைக்கும் உயிரோடுதான் இருக்கிறது.

1970களில் என்று எழுதி "சாதி" என்பதை இறந்த காலத்திற்கு உரியதாக்குவது தவறு. இது விழிப்புணர்வு இல்லை.

நானும் சபேசனின் இந்தக்கருத்தோடு உடன் படுகிறேன்.

கோ முதலில் கதை எழுதிய விதத்திற்கு நிறைய பாராட்டுக்கள்.அனுபவித்து வாசித்தேன் .

இரண்டாவது கதையின் கரு ,

புதிய வார்ப்புகள்  கதாநாயகி மாதிரி வில்லனை குத்திவிட்டு ஓடுவதுபோல படமாக்காமல் யதார்ர்தமாக முடித்ததற்கு நன்றி .கதை என்பது யதார்த்தமாக உண்மையாக இருக்கவேண்டும் போதனையாக இருக்ககூடாது.அதற்கு போதகர்கள் இருக்கின்றார்கள் .

விஸ்பரூபத்திற்கு எதிர்ப்பு வந்தது போல உங்கட கதைக்கும் எதிர்ப்புகள் தான் கிளம்புது .உண்மைகளை ஏற்றுகொள்ள இங்கு எவருக்கும் விருப்பமில்லை .சாதிய விடயத்தில் நாம் ஒரு துளிதானும் இன்னமும் அடுத்த படிக்குபோகவில்லை .சின்னாட்டியும் அவன் மனைவியும் போல் தான் அங்கு தாழ்த்தபட்படவர்களின் வாழ்க்கை .தொடர்ந்து எழுதுங்கள் .

சொந்த வாழ்க்கையையே பொய்யாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கெல்லாம் கதை எழுத முடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.