Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மலர்ந்தும் மலராத……………………

 

                                             25fingerstotoesphotogra.jpg

 

அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத்தை கொடுத்து விட்டு அதிகாலை வேளையிலேயே நரேன் வேலைக்குப்போனது நினைவு வரவே விலுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள் நிவேதிதா . ஆனாலும் அவளை ஓர் இனம்புரியாத அசதி ஆட்டிப்படைத்தது . தன்னால் நரேனுக்கு ஒரு கோப்பி போட்டுக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை வருத்தியது .

 

lac_leman.jpg

 

நிவேதிதா பிரான்சின் எவியோன் லே வான் நகரில் 7 பனிக்காலங்களை முடித்திருந்தாள் . இயற்கையிலேயே அமைதியை நாடிய நிவேதிதாவுக்கு நரேனும் , எவியோன் லே வான் நகரும் அவளது வாழ்வில் உயிர்பாகவே இருந்தது . குடும்பத்தில் ஒரே மகளான நிவேதிதா நரேன் எப்படியிருப்பானோ என்ற தயக்கத்துடனேயே நரேனைக் கைப்பிடித்தாள் . நரேனது அதிர்ந்து பேசாத ஆழ்கடல் அமைதி அவளை அவனிடம் இயல்பாகவே இறுக்கியது .ஆரம்பகாலங்களில் நிவேதிதாவிற்கு அகண்டு விரிந்த லுமென் வாவியும் தூரத்தே , தெரியும் கோடையிலும் பனி உருகாத எவியோன் மலைச் சிகரமுமே லயிக்கும் இடங்கள் . நேரம் போவது தெரியாமல் லுமென் வாவிக் கரையில் வேரோடிப்போயிருப்பாள் நிவேதிதா . நரேன் , நிவேதிதாவிற்கு கேட்காமலேயே குறிப்பறிந்து எல்லாவற்றையும் செய்து கொடுப்பான் .

 

பல்கலைகழக மாணவியான நிவேதிதா பிறென்ஞ் மொழியைப் படிப்பதில் அவளுக்குப் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை . அவள் இலகுவாகவே ஓர் தொழில்சார் துறையொன்றைத் தெரிவு செய்து தனது பிறான்ஸ் வாழ்கையை உறுதியாக்கினாள் . அவளின் முன்னேற்றம் நரேனுக்கு மிகவும் மகிழ்சியைக் கொடுத்தது .தெளிந்த நீரோடைபோல் அவர்களது வாழ்க்கை அளவிலாச் சந்தோசத்துடன் ஓடிக் கொண்டிருந்தாலும் , அவர்கள் வாழ்வில் ஒருவித சோகம் என்னவோ ஓரமாக இழையோடிக்கொண்டுதான் இருந்தது.

 

Massif-du-Mont-Blanc1293112932.jpg

 

அந்த அதிகாலையில் சுடச்சுட கோப்பியை போட்டுக்கொண்டு பல்கணி கதவைத் திறந்து தூரத்தே தெரிந்த லுமென் வாவியையையும் எவியோன் மலைச் சிகரத்தையும் கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள் நிவேதிதா . பனிக்குளிர் அவள் போட்டிருந்த ஸ்வெற்றரினுள் ஊடறுத்து மூசிப்பாய்ந்தது . நிவேதிதா குளிருக்கு இணைவாக கோப்பி கோப்பையை அணைத்துப் பிடித்தபொழுது , சூடான கோப்பியின் ஆவி அவளை ஒருவித மோனநிலைக்குத் தள்ளியது . ஏதோ ஓர் நெருடல் அவளை உந்தி தள்ள , உள்ளே சென்று தனது டயறியை அவசரமாகப் புரட்டினாள் . அதில் அவளது மாதாந்த சுற்றுகை போனமாதம் பதியப்படாமல் இருந்தது . இந்த முறையும் பீரியட் தள்ளிப் போச்சுதே என்று மனதில் எண்ணியவாறு , இன்று பின்னேரம் வேலையால் வரும் பொழுது டொக்ரர் அந்துவானைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலைக்குப் போகத் தயாராகினாள் நிவேதிதா .

 

மாலைவேளை டொக்ரர் அந்துவானின் கிளினிக் ஓரளவு பரபரப்பு நிறைந்ததாகவே காணப்பட்டது . அந்துவான் அந்தநகரிலயே பிரபல்யமான டொக்ரர் . அந்துவான் திருமணம் தனது தொழிலுக்குத் தடையாக இருக்கும் என்று திருமணத்தைத் தனது தொழிலுக்காகத் தியாகம் செய்த இலட்சியவாதி . தனது முறை வந்தபொழுது மந்தகாசமான சிரிப்புடன் வரவேற்றார் அந்துவான் . நிவேதிதா தனது மாற்றங்களை மறைக்காது டொக்ரரிடம் சொன்னாள் . அந்துவான் பொறுமையாக் அவள் கூறியதைக் கேட்டுவிட்டு அவளது யூரினை பரிசோதித்து சிறிது நேரத்தில் சந்திக்கும்படி கூறினார் . அவள் தனது யூறினைக் கொடுத்து விட்டு ஒன்றும் புரியாதவளாகப் பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தாள் . அவளின் யூறின் ரெஸ்ற் அறிக்கை வந்தவுடன் அந்துவான் அவளைக் கூப்பிட்டார் . அந்துவான் சிறு சிரிப்புடன் அவள் கர்ப்பமாகியுள்ள விடையத்தை உறுதி செய்தார் . நிவேதிதாவிற்கு மகிழ்ச்சியில் என்னசெய்வதென்று தெரியவில்லை . அவள் சிறுபிள்ளைபோல் டொக்ரர் மேல் ஓ ஃபீமேல் ஓ என்று கேட்டாள் . அவர் சிரிப்புடன் நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தார்.

 

நிவேதிதா இந்த விடையத்தை நரேனுக்கு றொமான்ரிக் ஆகவே சொல்ல ஆசைப்பட்டாள் . தன்னுடைய அம்மாவிற்கு சொல்ல கைகள் துறுதுறுத்தாலும் அவளிற்கு மனமெங்கும் நரேனே வியாபித்திருந்தாள் . பிள்ளை இல்லாத குறை நரேனில் இருந்தாலும் அவளிடம் அதை அவன் காட்டியதே இல்லை . அவள் ஏதாவது கதைத்தால் கூட இப்ப என்ன அவசரம் என்று புன்னகையுடன் கூறுவான். ஆனாலும் அவளால் அவனது மனவோட்டத்தை நன்றாக உணரக்கூடியதாக இருந்தது . அவன்மேல் வைத்திருந்த அன்பு அவளிற்குக் கூடியதே ஒழியக் குறையவில்லை . நிவேதிதா அவனுக்குப்பிடித்த கோதுமை மா புட்டும் ,கத்தரிக்காய் குளம்பும், முட்டைப்பொரியலும் பொரித்தாள் . வீட்டு லைற்றுகளை எல்லாம் அணைத்து விட்டு மெழுகுதிரிகளை ஏற்றினாள் . நிவேதிதா வெளியில் போய்வந்த களைப்புத் தீர நன்றாக முழுகினாள் . உடைமாற்றும்பொழுது அவளையறியாமலே அவளது கைகள் அவளது வயிற்றைத் தடவிப் பார்த்தன . உலகில் உள்ள எல்லாப் பெண்களும் இப்படித்தான் செய்வார்களோ ? தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் அன்று உதித்த பூரணை நிலவு போல நன்றாகவே தெரிந்தது . நிவேதிதா உடையை மாற்றிக்கொண்டு நரேனின் வருகைக்காகக் காத்திருந்தாள் .

 

நிவேதிதா ஷம்பூ போட்டுக் குளித்திருந்தால் , அவளது நீண்ட தலைமுடி அவள் தோளெங்கும் விரிந்து பரவி அவளது அழகை மேலும் கூட்டியிருந்தது . அன்றுபார்த்து நரேன் வரத்தாமதமாகியது. நிவேதிதா பொறுமையிழந்து அவளது மடிக்கணணியை நோண்டத் தொடங்கினாள். அன்றய அலைச்சலினால் அவளையறியாமலே தூக்கம் அவளைத் தன்பிடியில் கொண்டு வந்தது . நரேனினது சூடான முத்தம் அவளை எழுப்பியது . நரேன் அவளையும் அந்த அறையினது மாற்றத்தையும் பார்த்து வியந்தவனாக,

 

" நல்லாத்தானே இருந்தனீர் ? "

 

என்று குறும்புடன் கேட்டான் . நிவேதிதா இடைமறித்து ,

 

"முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோ சாப்பிட " என்றாள் கள்ளச்சிரிப்புடன் .

 

"ஏன்ன…. என்ன விசையம் ஒரு ரைப்பாய் இண்டைக்கு இருக்கிறீர் ? "என்று வினாவிய நரேனை இழுத்து அணைத்தவாறே ,

 

announcing_pregnancy.jpg

 

"கள்ளா என்னை அம்மாவாக்கிப் போட்டியேடா நல்லா இருப்பியா ? " என்று அவன் காதோரம் கிசுகிசுத்தாள் .

" என்னாது…… நீர் அம்மாவோ ? கிழிஞ்சுது போ....... . என்று நிவேதிதாவை ஆதரவுடன் அணைத்து முத்தமிட்டான் நரேன் . நரேன் இரண்டுபக்கத்து அம்மாமாருக்கும் செய்தியைச் சொல்லி வைத்தான் .

 

இரண்டுபக்க குடும்பமுமே நீண்டகாலத்திற்குப்பின்பு மலரப்போகும் அந்த புதியமலருக்காக ஆவலுடன் காத்திருந்தனர். நீவேதிதா இப்பொழுது நிறையவே மாற்றங்களை உணர்ந்து கொண்டாள் . அவளால் முன்புபோல் இயல்பாக நடக்கமுடியவில்லை . அவளது புதியமலர் அவள் வயிற்றின் உள்ளே அங்கும் இங்கும் ஓடிவிளையாடி அவ்வப்பொழுது அவளை இடித்துக் கொண்டிருந்தது . நரேன் தனது பதியத்திற்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தான் .

 

நான்கு மாதங்களைக் கடந்த நிலையில் நரேன் ஒருநாள் மாலை நிவேதிதாவை வழமையான ஸ்கேன் செய்வதற்கு டொக்ரர் அந்துவானிடம் கூட்டிச்சென்றான் . அந்துவான் நிவேதிதாவை பரிசோதித்து விட்டு அவர்கள் இருவரையும் இருக்கச்சொன்னார் . வழமையாக சிரிப்புடனேயே காணப்படும் அந்துவானினது முகம் அன்று இறுகியிருந்ததை நிவேதிதா கவனிக்கத் தவறவில்லை . அவளது மனம் துணுக்குற்றது . அந்துவான் தனது குரலைச் செருமியவாறு அவர்களைப்பார்த்துச் சொல்லத்தொடங்கினார் .

 

"உங்கள் குழந்தைக்கு முள்ளந்தண்டு வடம் வளரவில்லை. மூளை வளர்ச்சியும் போதுமானதாக இல்லை . ஏறத்தாள 97 வீதம் ஹண்டிக்கப் ஆக உள்ளது . லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படும் . குழந்தை பிறந்தாலும் இந்தக்குழந்தையால் எழுந்திருக்கமுடியாது , நடக்க முடியாது . இதன் மூளை சீராக இயங்காது . இப்படியான குழந்தைகளை நாங்கள் ஆரம்பத்திலேயே பெற்றோர்களது சம்மதத்துடன் அழித்துவிடுவோம் . ஆனால் அதற்கான பிறப்புச் சான்றிதழும் , மரணச்சான்றிதழும் கொடுப்போம் . இதை இப்பொழுதே சத்திரசிகிச்சை மூலம் அழித்துவிடுவது நல்லது ".

 

என்று அந்துவான் அவர்களிடம் கூறி முடித்தார் .

 

நிவேதிதா அழுகையை அடக்கமாட்டாதவளாய் அழத்தொடங்கினாள் . நரேன் மனதில் எரிமலை குமுறிக் கொண்டிருந்தது .

 

"அதை அழித்துவிடுவோம் டொக்ரர் . நீங்கள் திகதியை குறியுங்கள் " . என்றான் . அந்துவான் ஒருகிழமை கழித்து தான் வேலை செய்யும் ஹொஸ்பிற்றலில் அந்த மலரைப் பறிப்பதற்கு  நாளைக் குறித்தார் . நிவேதிதா முதலில் முரண்டு பிடித்தாலும் , நரேனின் யதார்த்தபூர்வமான ஆலோசனைகளும் , அரவணைப்பும் அவளை ஒரு நிலைக்கு கொண்டுவந்தன . சத்திரசிகிச்சையன்று இருவரும் கையொப்பம் இடவேண்டிய அனைத்துப்பத்திரங்களிலும் கையொப்பமிட்டனர் .

 

 

baby_lying.jpg

 

நரேனது முகம் இறுகிப்போயிருந்தது . சில மணித்துளிகள் நரேனைக் கடுமையாகச் சித்திரவதை செய்தன . அவனது பாழும்மனம் வேதனையில் அலைபாய்ந்து துவண்டது . அவனுக்குப் பின்னாலிருந்து அப்பா….. என்று கூப்பிடுவதுபோல் ஓர் உள்ளுணர்வு அவனைத் தாக்கியது . அங்கே அந்துவான் அவனது தோளை ஆதரவுடன் பற்றியவாறே மறுகையில் ஒரு குடுவையுடன் நின்றிருந்தார் . அவன் திரும்பியபோழுது அவனது இரத்தம் உயிரற்று இரசாயனக்கலவையில் மிதந்து கொண்டிருந்தது . நிவேதிதாவுக்குக் கொழுகொம்பாக நின்ற நரேனோ , தனது அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாதவனாக அந்தப் பறிக்கப்பட்ட மலரைப் பார்த்து வீரிட்டு அழுது கொண்டிருந்தான் .

 

கோமகன்

11/10/2012

 

** ஒரு சொல் மாற்றப்பட்டது .

 

 

Edited by கோமகன்

உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். யதார்த்தமும் காதலும் அன்பும் குடும்ப உறவும், வேதனையும் , சம அளவில் கலந்து  படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்.

 

நிச்சயமாக அவர்களது வாழ்கையில் இன்னுமொரு பூ மலரவேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமல் எனக்குள் ஏற்படுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

 

நன்றி கோமகன் உங்கள் பகிர்வுக்கு.

Edited by பகலவன்

இப்பிடியான நிலை எந்த ஒரு தம்பதியினருக்கும் வரக்கூடாது.

கதையைப் படிக்கும்போது அதனாலான வலியை உணரக்கூடியதாய்   இருந்தது.
 

இதேபோல ஒரு சம்பவம் எனது நண்பரின் குடும்பத்திலும் நடந்தது.

ஆனால் அவர்கள் அந்தக் குழந்தையை பெற்று எடுத்து  காலப்போக்கில்  அந்தக் குழந்தையை குணப்படுத்தியும் விட்டார்கள். இப்பொழுது அந்தக் குழந்தை இந்தியாவில் மிக நன்றாக வளர்ந்து வருகிறது.


 

நல்லதொரு  கதைக்கு   மிக்க நன்றி கோ. :)


 

                  

யதார்த்தமாக இருந்தது கதை .எழுதிய விதத்திற்கு பாராட்டுகள் கோ .

இருந்தும் சில சொல்லாடல்கள் ,சொற்கள் இடத்திற்கு தகுந்ததாக எனக்கு படவில்லை .

குறிப்பாக கசக்கிய என்ற சொல் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தையின் வரவும் அதன் காலங்களும் இனிமையானவை. கதையை அனுபவித்து தந்த கோமகன் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எனது அண்ணா,அண்ணிக்கும் நடந்தது திருமணமாகி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகியும் கருத்தரிப்பதும் சில மாதங்களில் கலைந்து போவதுமாக ... :(

போகாத கோவில், வைக்காத நேத்திக்கடன்கள் இல்லை. இப்ப அடுத்தடுத்து மூன்று சிங்கக் குட்டிகள். :rolleyes:

கூட இருந்தே பார்த்ததனால் அந்த வேதனைகளை என்னாலும் புரியமுடிகிறது.

 

மீண்டும் ஒரு யதார்த்தத்தை பதிவு பண்ணியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மெருகூட்ட பட்ட எழுத்து நடை ... கதை க்கு பாராட்டுக்கள் ஆ னால் கதை யின் பொருள் எனக்கு சோகத்தை தந்து விட்டது . மீண்டும் அவர்களுக்கு வாரிசு கிடைக்க என் வேண்டுதல் கள்

  • தொடங்கியவர்

உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். யதார்த்தமும் காதலும் அன்பும் குடும்ப உறவும், வேதனையும் , சம அளவில் கலந்து  படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்.

 

நிச்சயமாக அவர்களது வாழ்கையில் இன்னுமொரு பூ மலரவேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமல் எனக்குள் ஏற்படுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

 

நன்றி கோமகன் உங்கள் பகிர்வுக்கு.

 

உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்களும் மிக்கநன்றி பகலவன் . இந்தக் கதை ஒரு பத்திரிகைக்காக எழுதினேன் ஆக்கம் நீண்டதால் போடமுடியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் கதைக்கான படங்களும் அழகு தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி....மனசுக்கு கொஞ்சம் கவலையைத் தந்தாலும் இப்படியான பிள்ளை தான் பிறக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கு உடனடியாகவே அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்பதே சிறந்தது...புரிந்துணர்வோடு செயல் பட்ட தந்தையாருக்கு நன்றிகள்...பிள்ளை இல்லையே என்ற ஒரு கவலை தான் அவர்களை உறுத்தும்...அல்லது வைத்தியரின் அறிவுரையினை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ளும் முயற்சியை செய்யலாம்...

 

உடல்,உள ஆரோக்கியம் இல்லாத ஒரு பிள்ளை பெற்று விட்டு தாங்களும் கஸ்ரப்பட்டு பின்னர் பிள்ளையையும் உடலளவில்,மனதளவில் கஸ்ரப்பட வைக்காமல் இருப்பது சிறந்த வழி.இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இப்படியான குறை பாடுகளுடன் பிறப்பவர்கள் அனுபவிக்கும் கஸ்ர,நஸ்ரங்கள் ஏராளம் என்று சொல்லலாம்...

கூடப்பிறந்தவர்களால்,உறவுகளால் ஊதாசீனப்படுத்தபட்டு வளரும் பிள்ளைகளாகவே இருப்பார்கள்..தங்கள் முயற்சியில் முன்னேறினாலும் அதில் கூட குழப்பத்தை விழைவிப்பார்கள்..ஆகவே இனிவரும் காலத்திலாவது பெற்றோர் (espicially disablity child) விடையத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளவேணும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல இல்லங்களில் நடந்த உண்மைக்கதை இது ....எழுத்துருவில் வடிவமைத்த கோமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் பாத்திரப்படைப்பும் எழுத்து நடையும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளன. பாத்திரங்களின் மனஉணர்வுகளை மிகவும் யதார்த்தமாக எடுத்து வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் கோமகன்.

பகிர்வுக்கு நன்றி கோ! கதையை நகர்த்திய விதம் அழகு, ஆனால் முடிவு தான் கவலை அழிக்கிறது. இப்படி எனது நண்பி ஒருவருக்கும் நடந்தது.



படங்கள் மிக அழகு தமிழ் கதைகளில் வெள்ளைக்காரப் பிள்ளைகளின் படங்கள் வருவது சிறிது கவலை தருகின்றது.



தமிழ் குழந்தையின் படத்தைப் போட்டிருந்தால் மிக நன்றாயிருக்கும். வெள்ளைப் பிள்ளைகள் வடிவு தான் ஆனால் நாம் தமிழர் அல்லோ!

  • தொடங்கியவர்

இப்பிடியான நிலை எந்த ஒரு தம்பதியினருக்கும் வரக்கூடாது.

கதையைப் படிக்கும்போது அதனாலான வலியை உணரக்கூடியதாய்   இருந்தது.

 

இதேபோல ஒரு சம்பவம் எனது நண்பரின் குடும்பத்திலும் நடந்தது.

ஆனால் அவர்கள் அந்தக் குழந்தையை பெற்று எடுத்து  காலப்போக்கில்  அந்தக் குழந்தையை குணப்படுத்தியும் விட்டார்கள். இப்பொழுது அந்தக் குழந்தை இந்தியாவில் மிக நன்றாக வளர்ந்து வருகிறது.

 

நல்லதொரு  கதைக்கு   மிக்க நன்றி கோ. :)

 

 

என்னைப் பொறுத்தவரையில் முற்று முழுதாக உங்கள் கருத்துடன் உடன்படமுடியவில்லை . புலத்தில் என்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை ,பேதங்கள் இல்லாது அந்தக் குழந்தை வழரலாம் ;ஆனால் ஆசியா இந்த விடயத்தில் வளர பல ஆண்டுகள் செல்லவேண்டும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கவிதை :) :) :) .

  • தொடங்கியவர்

யதார்த்தமாக இருந்தது கதை .எழுதிய விதத்திற்கு பாராட்டுகள் கோ .

இருந்தும் சில சொல்லாடல்கள் ,சொற்கள் இடத்திற்கு தகுந்ததாக எனக்கு படவில்லை .

குறிப்பாக கசக்கிய என்ற சொல் .

 

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கும் , உங்கள் வரவிற்கும் மிக்க நன்றிகள் அர்ஜுன் . திருத்தங்கள் செய்து விட்டுள்ளேன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

கதையை அனுபவித்து,உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் கோமகன்...சில குடும்பங்களையும் கண்டு இருக்கிறேன்...இப்படிப்பட்ட குடும்பத்தில் பெண் தான் பாவம் :(

அன்றாட வாழ்வில் இது மாதிரி கண்டிருக்கிறேன். இதனை தாண்டி வந்தவைகள் சில நன்றாக இருக்கின்றன. சிலவற்றைப் பார்த்தால் கவலை. கருத்துக் கூற விரும்பவில்லை.

அழகாக கதையை எழுதியதற்குப் பாராட்டுகள், ஆனால் மிகவும் துன்பமான கரு. இது யதார்த்தம்தான், ஆனால் சிறு சிசுவோ, பெரிய பிள்ளையோ பெற்றோர் இருக்கும்போது ோதுபிள்ளை தவறுவது கொடுமை. இனி 2, 3 நாட்களுக்கு இந்தக்கதை மனதின் ஓரத்தில் நின்று அரிக்கும்.  :( 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியான குழந்தையளை முதல்லையே அழிக்கிறது நல்லம் . ரதி சொன்ன மாதிரி இப்பிடி நடக்கேக்கை பொம்பிளையள்தான் பாவம் . அவையின்ரை நிலமை அறிஞ்சு அன்பாய் ஆதரவாய் நடக்கிற கணவர்மார் குறைவு . இதை சாட்டியே டிவோர்ஸ் எடுத்த ஆக்களையும் பாத்திருக்கிறன் . உணர்வு கதைக்கு பாராட்டுகள் கோமகன்.

  • தொடங்கியவர்

ஒரு குழந்தையின் வரவும் அதன் காலங்களும் இனிமையானவை. கதையை அனுபவித்து தந்த கோமகன் பாராட்டுக்கள்.

 

உண்மைதான் சாந்தி . புதுவரவும் அதனால் ஏற்படும் பாசப்பிணைப்புகளும் இல்லறவாழ்வில் உன்னதமானவை .    ஆனால் நரேனுக்கும் நிவேதிதாவிற்கும் காலம் தனது தீர்ப்பை மாற்றி விட்டது . உங்கள் வரவிற்க்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள் :) :) .

 

  • தொடங்கியவர்

இப்படி எனது அண்ணா,அண்ணிக்கும் நடந்தது திருமணமாகி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகியும் கருத்தரிப்பதும் சில மாதங்களில் கலைந்து போவதுமாக ... :(

போகாத கோவில், வைக்காத நேத்திக்கடன்கள் இல்லை. இப்ப அடுத்தடுத்து மூன்று சிங்கக் குட்டிகள். :rolleyes:

கூட இருந்தே பார்த்ததனால் அந்த வேதனைகளை என்னாலும் புரியமுடிகிறது.

 

மீண்டும் ஒரு யதார்த்தத்தை பதிவு பண்ணியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். :)

 

வாழ்க்கையில் எல்லாவற்றையுமே கடக்கவேண்டும் . உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்கநன்றி ஜீவா .

 

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத……………………

 

"உங்கள் குழந்தைக்கு முள்ளந்தண்டு வடம் வளரவில்லை. மூளை வளர்ச்சியும் போதுமானதாக இல்லை . ஏறத்தாள 97 வீதம் ஹண்டிக்கப் ஆக உள்ளது . லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இவ்வாறு ஏற்படும் . குழந்தை பிறந்தாலும் இந்தக்குழந்தையால் எழுந்திருக்கமுடியாது , நடக்க முடியாது . இதன் மூளை சீராக இயங்காது . இப்படியான குழந்தைகளை நாங்கள் ஆரம்பத்திலேயே பெற்றோர்களது சம்மதத்துடன் அழித்துவிடுவோம் . ஆனால் அதற்கான பிறப்புச் சான்றிதழும் , மரணச்சான்றிதழும் கொடுப்போம் . இதை இப்பொழுதே சத்திரசிகிச்சை மூலம் அழித்துவிடுவது நல்லது ".

 

என்று அந்துவான் அவர்களிடம் கூறி முடித்தார் .

 

 

கோமகன்

11/10/2012

 

நன்றி  கதைக்கு கோ

நன்றாக எழுதியுள்ளீர்கள்

 

எனது கடைசி  மகள் வயிற்றில் வந்தபோதும் இப்படி ஒரு  குண்டைத்தூக்கி  வைத்தியர்   போட்டார்.

கழுத்துப்பகுதி  அதிகம்  வளர்ந்துள்ளது.  இது நீங்கள்    எழுதியது   போல் ஒரு சோர்வான மூளை வளர்ச்சி  குன்றிய பிள்ளையைத்தரலாம்   எனவே அழித்துவிடுவோம் என.   நானும்  இரண்டு நாட்களாக மனைவியை  ஒரு மாதிரி சமாளித்து அழிக்கும் முடிவுடன் போனபோது வைத்தியர் வேறு முடிவு எடுத்திருந்தார்.  தாங்கள் கணக்கு  பார்த்ததில் ஒரு மாதம் விடுபட்டுவிட்டது என்றும்  அதன்படி பார்த்தால் வளர்ச்சி  சரியானதே என்றும் சொன்னபோது சந்தோசத்துக்கு அளவேது.

  • கருத்துக்கள உறவுகள்
எனது சகோதரிக்கும் இப்படி நடந்தது.போர்க்காலத்தில் இலங்கையில் அதிக மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் நடைபெற்றது. ஆண் குழந்தை பிறக்கும் போதே  இதயம் தொழிற்படாமல் இறந்ததாக வைத்தியர்கள் கூறினார்கள்.
 
ஓர் இரவு  சகோதரியும் கணவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் அழுதழுது சொன்ன செய்தி என் வாழ் நாளின் மிகக்கவலையான நாள்.
தாய்க்கு தான் அதன் நிஜ உணர்வுகளை புரிய முடியும் என நினைக்கிறேன். இன்றும் அக்கவலையில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை. 
 
நன்றிகள் கோமகன் மனதை தொட்ட கதையை எழுதியமைக்கு.
  • தொடங்கியவர்

மெருகூட்ட பட்ட எழுத்து நடை ... கதை க்கு பாராட்டுக்கள் ஆ னால் கதை யின் பொருள் எனக்கு சோகத்தை தந்து விட்டது . மீண்டும் அவர்களுக்கு வாரிசு கிடைக்க என் வேண்டுதல் கள்

 

எல்லோர்கும் விரும்பியது கிடைத்து விட்டால் வாழ்கையில் சுவாரசியம் இல்லாது போய்விடுமே ???  சோகமும் இருந்தால் தானே அந்த வாழ்கை பல தெளிவுகளைப் பெற முடியும் . உங்கள் ஊக்குமும் பாராட்டுதல்களுமே என்னை வழிநடத்தும் . வரவிற்கும் கருத்திற்கும் மிக்கநன்றிகள் நிலாமதியக்கா .

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.