Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்த நாளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SuperStock_1850-8726.jpg

 

வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு   நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படிந்த வெண்மை நிறமான துணிக்கைகளை எடுத்து முகர்ந்து பார்க்கையில், அவனது நினைவுகள் பல வருடங்கள், பின்னோக்கி நகர்ந்தன!


அது ஒரு சற்றுக் குளிர்மையான காலைப்பொழுது. சகாரா பாலைவனத்திலிருந்து, தெற்கு நோக்கிப் பயணம் செய்த மெல்லிய மணல் துணிக்கைகள் வெண்ணிறத் துகள்களாகக் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை, என அந்த நாட்டு மக்களால் நம்பப்படுவதால், இதனை அவர்கள் ஒரு பாதிப்பாகக் கருதுவதில்லை. இது வரும் பருவ காலத்தைக் ‘ஹமட்டான்' என அழைத்துக் கொள்வதோடு சரி. அன்று சனிக்கிழமையாதலால், சற்று நேரம் மேல் மாடியிலிருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். இரண்டு பேர், எதிர் எதிராக நடந்தபடி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு போனார்கள். உனது சுகம் எப்படி, உனது மனைவியின் சுகம் எப்படி, அவளது குழந்தைகளின் சுகம் எப்படி, உனது இரண்டாவது மனைவியின் சுகம் எப்படி, என்று ஒருவருடன் ஒருவன் கதைத்தபடி, எதிர்த் திசைகளில் சென்று கொண்டிருந்தது, சின்ன வயதில் பௌதீகத்தில் படித்த ‘தொப்ளரின் விளைவை' அவனுக்கு நினைவு படுத்தியது.


தூரத்தில் ஒரு தாய், தனது குழந்தையொன்றை முதுகில் கட்டியவாறு, தனது இரண்டு கைகளிலும், இரண்டு கோழிகளைத் தலைகீழாகத் தூக்கியபடி, அந்த மேட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்ததை அவதானித்தான். பொதுவாகக் குன்றின் மீது இருந்த அவனது வீட்டை நோக்கி, அவனது நண்பர்கள் தான் வருவதுண்டு. உள்ளூர் வாசிகள் பொதுவாக எட்டிப்பார்ப்பது அபூர்வமாகையால், சற்று ஆச்சரியத்துடன், அந்தத் தாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி அந்தத் தாய், தனது வீட்டுக்கதவைத் திறந்ததும், மனசு பக்கென்றது. நேற்று இரவு வீட்டுக்கு வந்து போன நண்பர்கள், போற வழியில் ஏதாவது இசக்குப் பிசகாக ஏதாவது செய்து தொலைத்து விட்டார்களோ, என்று எண்ணியவன், கீழே ஓடி வந்து, மரியாதைக்காகக் கதவைத் திறந்ததும், அந்தப் பெண், அப்படியே அவனது கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடவும் சற்றுக் கலவரமடைந்து போனவன்,’மமா' என்று கூறியபடி அவளது கரங்களைப் பிடித்து அந்தப் பெண்ணைத் தூக்கிவிட்டான். அவனது கால்களில், அந்த நாட்டு வழக்கப்படி, பலர் விழுந்தெழும்புவது வழமை தான் எனினும், ஒரு தாய் அவனது காலில் விழுந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு கோழிகளையும், அவனிடம் கையளித்தவள், தனது மகனைக் கல்லூரியிலிருந்து கலைத்து விட்டதைப் பற்றிக் கூறினாள். அவன் படிப்பிப்பது, கணித பாடமென்பதாலும், அநேகமான ஆபிரிக்கர்களுக்குக் கணிதம், சூனியம் என்பதாலும், அவன் பலரை, வகுப்பிலிருந்து அடிக்கடி கலைத்து விடுவதுண்டு. மற்றவர்களைப் போல,' பாம்' மரங்களை வெட்ட விடுவது போன்ற தண்டனைகள், மரங்களுக்கேயன்றி, மாணவர்களுக்கு அல்ல என்று அவன் நம்புவதே, அதற்கான காரணமாகும். அவளது மகன் யாரென்று உடனே நினைவுக்கு வராததால், உள்ளூர் மொழியில், மகனது பெயரைக் கேட்டவன், தாய் பெயரைச் சொன்னதும் யாரென்று அவனுக்குப் புரிந்து விட்டது. அந்த மாணவனது, தகப்பன் ஒரு ‘ பிறிக் லேயர்' எனவும் தனது மகன், நன்றாகப் படிக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியவள், இந்தத் தடவை மட்டும், அவனை மன்னித்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டாள். அவள் வந்த விதமும், தனது மகனின் படிப்பில் அவள் காட்டிய  அக்கறையும் அவனுக்குக் கொஞ்சம் பிடித்துக்கொண்டது. எனவே, அன்று விடுமுறையானதால், அந்தப் பையனது தகப்பனைப் பார்க்க முடியுமா எனக் கேட்டான். ஆம், என்று கூறியவள், அங்கு தான் அண்மையில் ஒரு ‘சைட்' டில் அவர் வேலை செய்வதாகவும், அவனை அப்போதே, கூட்டிச் செல்வதாகவும் கூறினாள்.


கண்ணுக்கெட்டிய வரையும், எந்த விதக் கட்டிட வேலைகளும் நடப்பது போலத் தெரியவில்லை எனினும், அந்தத் தாயுடன் நடந்து சென்றான். ஓரிடத்தில், களிமண் குழைக்கப் பட்டுக், கட்டப்பட்டிருந்த தடிகளின் மீது, உருண்டைகளாக அவை அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவன் மட்டும், வெளியில் வந்து அவனது காலடியில் குனியவே, ‘பிறிக் லேயரைப்' பிழையாய் விளங்கிக் கொண்ட தனது முட்டாள் தனத்தை நொந்துகொண்டான்!


மறுநாள், அந்தப் பையன், ‘அஜிபோலா' வீட்டுக்கு வந்தான். அவனைக் குளித்து விட்டு உள்ளே வரும்படியும், கீழேயுள்ள அறையில் தங்கிக் கொள்ளும்படியும் கூறினான். நம்ம ஆக்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதால், அவர்களின் ‘செல்வாக்கு' மூலம் தண்ணீர்த் தாங்கி அடிக்கடி நிரப்பப்படும்.

ஒரு வாளியில் மட்டும் தண்ணீரை நிறைத்தவன், கைகளில் உள்ள விரல்களை உபயோகித்து, காது, மூக்கு போன்ற பகுதிகளை, முதலில் கழுவியபின்பு, முழு உடம்பையும் கழுவத் தொடங்கினான். ஒரு ஐந்து நிமிடங்களில்,அவனது  குளிப்பு முடிந்ததைக் கண்டு, சற்று ஆச்சரியப் பட்டுப் போனதுடன், எவ்வளவு தண்ணீரை நாம் வீணாக்குகின்றோம் என்றும் ஒரு கவலையும் அவனுக்கு ஏற்பட்டது. அன்று காலையில்.சிற்றோடையொன்றில், குளித்துக்கொண்டிருந்த குழந்தையொன்றும், தலைக்கு ;ஒமோ;போட்டுக் குளித்துக் கொண்டிருந்ததுவும், அவனது மனதில் ஒரு வலியை ஏற்படுத்தியிருந்தது.  


காலப் போக்கில்,அவனுக்குக் கணிதத்தை, மெல்ல,மெல்லத் தான் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. பைபிளைப் போன்றோ, அல்லது  பூமிசாத்திரத்தைப்  போன்றோ, கணிதத்தைப் பாடமாக்கி எழுத முடியாமல் உள்ளது என்பது தான்,அஜிபோலாவின் பிரச்சனையாகவிருந்தது. அவன், உதாரணமாகச் செய்து காட்டுபவைகளை, கேள்வி,வேறு இலக்கங்களுடன் இருந்தாலும்,அப்படியே,எழுதிவிட்டு வரும், பழக்கம் அவனிடமிருந்தது. அந்த அடிப்படைச் சிந்தனையை, மாற்றியதும், அவனுக்கும் அஜிபோலாவுக்கும் இடையில் பிரச்சனைகள் வரவில்லை, காலப் போக்கில், அவன் தனது வீட்டுக்கே போவது குறைந்து விட்டது. அஜிபோலாவின் சமையல் அவனுக்கும் பிடித்துக்கொண்டது. இறைச்சி கொஞ்சம், மீன் கொஞ்சம், அவித்த முட்டை கொஞ்சம் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ‘’டையினமயற் என எம்மவர்களால் அன்புடன் அழைக்கப்படும் மிளக்காய்த் தூளையும் போட்டு, மஞ்சள் நிறப் ‘பாம்' ஒயிலில் கொதிக்க வைத்தால், அதுக்குப் பெயர் ‘கறி' எனப்படும். தேவையான படி, மீனோ அல்லது இறைச்சியோ அல்லது முட்டையோ சாப்பிட்டுக் கொள்ளலாம். கறியும் ஒரு வாரம் வரைக்கும், பழுதடையாமல் இருக்கும்.


ஒரு நாள், அதிகாலையில் கல்லூரிக்குப் போனபோது, எல்லோரும் ஏசுநாதருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு அடித்த, சுழல் காற்றில், ஒரு கட்டிடத்தின் கூரை தூக்கி எறியப்பட்டகற்குத் தான் நன்றி சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியாமல், பக்கத்திலிருந்தவரை ஏனென்று கேட்கப், பகலில் அந்தச் சுழல்காற்று வந்திருந்தால், மாணவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். எனவே,அதனை இரவில் வர வைத்தற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றார்கள் என்று விளக்கமளித்தார். என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என அவன் தனக்குள்  நினைத்துக் கொண்டான். அன்றைய தினமும் ஒரு மாணவனை, வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த படியால் துரத்தி விட்டவன் பின்னர், அந்த மாணவனுக்கு  ‘நித்திரை வருத்தம்' இருப்பதாக அறிந்து மனவருத்தப் பட்டான். ரெஸ்ரி'  என அழைக்கப்படும் ஒருவகை மாட்டிலையான்கள் கடிப்பதால் இது ஏற்படும். இவர்கள் மட்டுமல்ல,மாடுகளும் மேய்ந்தபடியே, பல மணி நேரங்கள் தூங்கி விடுவதைப் பிற்காலங்களில் பல தடவைகள்  அவன் அவதானித்துள்ளான்.


இனிக்கதைக்குத் திரும்பவும் வருவோம்,  உயர்தர வகுப்பில், மிகத்திறமையாகச் சித்தியடைந்த அஜிபோலா, பிற்காலத்தில் நல்ல வேலையில் இருந்தான். அவனும், அவனது தாயும், அவனது முன்னேற்றத்துக்கு அவனது 'உதவி' தான் காரணம் என்று நம்புகின்றார்கள். காலமும், அவனது பாதையை நகர்த்தி நீண்ட நாட்களாகி விட்டன. அஜிபோலா, தனது மகனுக்கும் அவனது பெயரை, வைத்திருப்பதாகச் சொல்லுகின்றான். வருடம் தவறாது, அவனது பிறந்தநாள் வாழ்த்தும், அவன் பல நாடுகள், மாறியபோதும், அவனைத் தேடி வந்து கொண்டிருக்கின்றது.


அதில் படிந்திருக்கும், சகாராவின் வெள்ளைத் துணிக்கைகளைத் தடவும் ஒவ்வொரு தடவையும், அவன் நேரில் வாழ்த்துவது போலவும், ஒரு விதமான அன்னியோன்னியமும் வந்து போவது போலவே அவன் உணர்கின்றான்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை, என் வாழ்விலும் பல ஆசிரியர்கள் கடந்து சென்றுள்ளார்கள், அவர்கள் இல்லாவிட்டால் இந்த நிலைக்கு வந்திருப்பேனோ தெரியா, நன்றி அவர்களுக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டான ஒரு பகிர்வு மிக்க ந ன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, ஆபிரிக்காவில‌ இருந்திருக்கிறிங்க‌ள் போல‌ இருக்கு! ந‌ல்ல‌ சிறு க‌தை! இன்னும் எழுதுங்க‌ள். ப‌ல‌ பேர் போகாத‌ ஆபிரிக்காவுக்கு எங்க‌ளையும் அழைத்துச் செல்லுங்க‌ள்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை, என் வாழ்விலும் பல ஆசிரியர்கள் கடந்து சென்றுள்ளார்கள், அவர்கள் இல்லாவிட்டால் இந்த நிலைக்கு வந்திருப்பேனோ தெரியா, நன்றி அவர்களுக்கு

கருத்திட்டமைக்கு நன்றிகள், உடையார்!

 

ஆசிரியர்கள் பொதுவாக 'ஏணிப்படிகள்' என்று கூறுவார்கள்! 

 

எல்லோரையும் மேலே உயரத்துக்குத் தூக்கிவிட்ட 'ஏணி' மட்டும், தனது இடத்தை விட்டு, ஒரு அங்குலம் கூட, மேல்நோக்கி நகர்வதில்லை!

நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டான ஒரு பகிர்வு மிக்க ந ன்றி.

நிலாக்கா, யாழில் நான் இணைந்த காலத்திலிருந்தே, கரம் நீட்டி, மேலே தூக்கி விடுபவர்களில், நீங்கள் முதன்மையானவர்! நன்றிகள்!

 

அத்துடன் நீங்கள் ஒரு ஆசிரியை என்பதால், இந்தக்கதை உங்களை ஈர்த்திருக்கலாம் என்று கருதுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கதை  என்று சொல்லமுடியவில்லை

அனுபவித்து எழுதியதுபோலுள்ளது.

இதைப்பார்த்ததும் எமது உயர்வுக்காக உழைத்த பலரை நாம்

காலப்போக்கிலும் போராலும் தவறவிட்டுவிட்டதை உணர மனம் கலங்குகிறது.

 

நன்றி ஐயா.

இன்றும் எழுதணும்..........

  • கருத்துக்கள உறவுகள்
புங்கையூரான் நீங்கள் உலகம் பூரா இருந்திருக்கிறீர்கள் போல :)  உங்கள் வாத்திய சேவை தொடரட்டும்.உங்களிட்ட படித்திருந்தால் நானும் இஞ்சினியர் ஆகியிர்ப்பேனோ என்னவோ :lol:
 
உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை, ஆபிரிக்காவில‌ இருந்திருக்கிறிங்க‌ள் போல‌ இருக்கு! ந‌ல்ல‌ சிறு க‌தை! இன்னும் எழுதுங்க‌ள். ப‌ல‌ பேர் போகாத‌ ஆபிரிக்காவுக்கு எங்க‌ளையும் அழைத்துச் செல்லுங்க‌ள்!

 

வணக்கம் ஜஸ்டின்.

வாழ்வின் சில அனுபவங்களை மீட்டிப்பார்க்கும் போது, அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு விதமான உந்துதல் வருகின்றது. அப்படியான ஒரு உந்துதலின் விளைவே, இந்தக் கதையாகும். வெளியில் இருந்து, பார்க்கும் போது, வித்தியாசமாகத் தெரியும் ஆபிரிக்கா, உண்மையில் ஒரு இருண்ட கண்டமல்ல. அதன் மண்ணும், மக்களும், அதன் நாளாந்தத் துடிப்புகளும் மிகவும் இனிமையானவை. சிலவற்றையாவது, நிச்சயம் யாழ் உறவுகளுடன், பகிர்ந்து கொள்வேன். நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. இதை முன்னமே வாசிக்காது போனனே..

 

அதுசரி.. அந்த வாத்தியார் லண்டன், அவுஸ் எண்டு போனவர்தானே.. :D

பகிர்வுக்கு நன்றி, எமது ஆசிரியர்கள் பல நைஜீரியாவில் வேலை செய்துள்ளார்கள், அங்குதானா இது நடந்தது?

 

நல்லபதிவு ,கண்கள் நனைகின்றன எனக்குநடந்த அனுபவங்களை 

நினைத்துப்பர்த்தேன் . 
நன்றிகள் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை  என்று சொல்லமுடியவில்லை

அனுபவித்து எழுதியதுபோலுள்ளது.

இதைப்பார்த்ததும் எமது உயர்வுக்காக உழைத்த பலரை நாம்

காலப்போக்கிலும் போராலும் தவறவிட்டுவிட்டதை உணர மனம் கலங்குகிறது.

 

நன்றி ஐயா.

இன்றும் எழுதணும்..........

கருத்துக்கு நன்றிகள், விசுகர்!

 

எனக்கும் ஒரு அனுபவப் பகிர்வு போலத்தான் தெரிகின்றது! :D

 

நேரம் கிடைக்கும் போது, பகிர்ந்து கொள்வேன்!

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் புங்கை. எனக்கு வாசித்தவுடன் மனதில் எதோ ஒரு உணர்வு நிறைந்து கொண்டது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்யாது. :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிந்தவுடன் இந்தக் கதயைப் படிட்திருந்தாலும், விருப்பு வாக்கும் போட்டிருந்தேன், ஆனால் உண்மையில் என்ன எழுதவென்றே தெரியவில்லை. அடுத்த முறை கடைக்கு வரும் ஆபிரிக்கரைக் கேட்டு சிலதஇ இங்கு பதிவிட முயற்சிக்கிறேன்.

எப்போதும் போல உங்கள் எழுத்துக்கள் அருமை. :)

அருமையான பதிவு புங்கை .

சில பதிவுகள் வாசித்ததன் பின் உண்மையில் ஒரு உங்களில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது .

ஆபிரிக்க பதிவுகள் வாசிக்க நன்றாக இருக்கும் .முத்துலிங்கம் சில கதைகள் எழுதியிருக்கின்றார் .

தொடர்ந்து எழுதுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா எழுதினால் அதை தேடிவாசிப்பேன்..அருமை.. அடுத்த பதிவு எப்ப..

 

உங்கள் ஆக்கங்கள் மிக நன்றாக இருக்கிறது. படைப்புக்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புங்கையூரான் நீங்கள் உலகம் பூரா இருந்திருக்கிறீர்கள் போல :)  உங்கள் வாத்திய சேவை தொடரட்டும்.உங்களிட்ட படித்திருந்தால் நானும் இஞ்சினியர் ஆகியிர்ப்பேனோ என்னவோ :lol:
 
உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்

 

பொதுவாக வாத்தியாரை, மற்றவர்கள் ஏணியாக்கி, அதில் ஏறிச் செல்வார்கள்! :o 

 

ஆனால், வாத்தியார் வேலையையே ஏணியாக்கி, அதில் ஏறிச்செல்பவர்கள், மிகவும் குறைவு, ரதி! :D 

 

அந்த அனுபவங்கள், மிகவும் சுவையானவை! நன்றிகள்! 

அடடா.. இதை முன்னமே வாசிக்காது போனனே..

 

அதுசரி.. அந்த வாத்தியார் லண்டன், அவுஸ் எண்டு போனவர்தானே.. :D

நன்றிகள், இசை!

 

காகம் பறக்காத ஊருமில்லை! 

 

தீவான் மிதிக்காத மண்ணுமில்லை! :D

பகிர்வுக்கு நன்றி, எமது ஆசிரியர்கள் பல நைஜீரியாவில் வேலை செய்துள்ளார்கள், அங்குதானா இது நடந்தது?

நன்றிகள், வந்தி!

 

அதே! :D

 

நல்லபதிவு ,கண்கள் நனைகின்றன எனக்குநடந்த அனுபவங்களை 

நினைத்துப்பர்த்தேன் . 
நன்றிகள் .

 

நன்றிகள்  Gari!

 

அனுபவங்களும், அதன் மீட்டல்களும் தானே, வாழ்க்கை! :D

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல ஆபிரிக்க படைப்பு ...நன்றிகள் புங்கையூரன்....தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் கலக்கட்டும் யாழை....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் புங்கை. எனக்கு வாசித்தவுடன் மனதில் எதோ ஒரு உணர்வு நிறைந்து கொண்டது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்யாது. :lol:

உங்களின் கருத்து, என்னைப் 'பப்பா' மரத்திலேற்றுகின்றது! :D

 

நன்றிகள், சுமே!

பதிந்தவுடன் இந்தக் கதயைப் படிட்திருந்தாலும், விருப்பு வாக்கும் போட்டிருந்தேன், ஆனால் உண்மையில் என்ன எழுதவென்றே தெரியவில்லை. அடுத்த முறை கடைக்கு வரும் ஆபிரிக்கரைக் கேட்டு சிலதஇ இங்கு பதிவிட முயற்சிக்கிறேன்.

எப்போதும் போல உங்கள் எழுத்துக்கள் அருமை. :)

நன்றிகள்,ஜீவா!

 

நாடுகள், காலநிலைகள் மாறினாலும், உலகம் முழுவதும், மனித உணர்வுகள் பொதுவானவையே!

 

அதனால் தான், எல்லா இடங்களிலும், கடவுளுக்குத் தேவை இருக்கின்றது!

அருமையான பதிவு புங்கை .

சில பதிவுகள் வாசித்ததன் பின் உண்மையில் ஒரு உங்களில் ஒரு மதிப்பு ஏற்படுகின்றது .

ஆபிரிக்க பதிவுகள் வாசிக்க நன்றாக இருக்கும் .முத்துலிங்கம் சில கதைகள் எழுதியிருக்கின்றார் .

தொடர்ந்து எழுதுங்கள் .

நன்றிகள், அர்ஜுன்!

 

ஆபிரிக்காவைப்பற்றி, இன்னும் ஒன்றிரண்டு பதிவுகள், எழுதலாமென எண்ணுகின்றேன்!

புங்கை அண்ணா எழுதினால் அதை தேடிவாசிப்பேன்..அருமை.. அடுத்த பதிவு எப்ப..

கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுடன்  தங்கள் பிள்ளைகள் போன்று 

அன்புடன் பழகுவார்கள். அவர்களுக்குத் தெளிவாகப் பாடங்களை நடாத்துவார்கள்.

வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் மாணவர்கள் திண்டாடுவது உண்மை 

நல்லதொரு சிறு கதைக்கு நன்றி புங்கையூரன் :)   

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை உள்ள பெரிய கொடை பசிச்ச வயிறுக்கு சாப்பிடு போடுறதும் , ஏழையளுக்கு படிப்பிக்கிறதும்தான் .ஒருகாலத்திலை எங்கடை ஊரிலை வாத்தியார் எண்டால் தெய்வங்கள் இப்ப நிலமை தலைகீழ் . உங்கடை சேவையை பாராட்டிறன் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையை வாசித்தவுடன் கருத்து எழுத நேரம் கிடைக்கவில்லை புங்கை.

ஆபிரிக்க நாடுகளின் வாழ்வுமுறை அந்த மக்களின் கல்வி பற்றி மேலோட்டமாகவே சிலர் எழுதியுள்ளார்கள். ஆனால் அந்த மக்களோடு வாழ்ந்த ஒரு எழுத்தை உங்கள் எழுத்தில் காண்கிறேன். கதையை நகர்த்திய விதம் அந்த இடத்தில் இருந்து பார்ப்பது போல இருக்கிறது.
சகாரா மணற்துகள்கள் என் முகத்திலும் ஒட்டிக் கொள்கிற உணர்வோடு கதையை எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் வாழ்ந்த நாடுகளில் இத்தகைய மக்களின் கதைகளை எழுதுங்கள். புலம்பெயர்ந்து போன இடங்களில் வாழும் மக்களின் வாழ்வின் துயர்களை எல்லோரும் அறிய வேணும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கங்கள் மிக நன்றாக இருக்கிறது. படைப்புக்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

நன்றிகள், தப்பிலி!

 

உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கங்களே, எழுத வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துகின்றன.

மிகவும் நல்ல ஆபிரிக்க படைப்பு ...நன்றிகள் புங்கையூரன்....தொடரட்டும் உங்கள் படைப்புக்கள் கலக்கட்டும் யாழை.... :D

நன்றிகள், புத்தன்!

 

சேர்ந்தே கலக்குவோம். :D

ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுடன்  தங்கள் பிள்ளைகள் போன்று 

அன்புடன் பழகுவார்கள். அவர்களுக்குத் தெளிவாகப் பாடங்களை நடாத்துவார்கள்.

வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் மாணவர்கள் திண்டாடுவது உண்மை 

நல்லதொரு சிறு கதைக்கு நன்றி புங்கையூரன் :)   

நன்றிகள், வாத்தியார்!

 

ஏன் வாழ்விலும், இவ்வாறு பல ஆசிரியர்கள் இடம் பிடித்திருக்கின்றார்கள்!

 

இன்று நினைக்கும் போதும், கண்கள் பனிக்கின்றன!

உலகத்திலை உள்ள பெரிய கொடை பசிச்ச வயிறுக்கு சாப்பிடு போடுறதும் , ஏழையளுக்கு படிப்பிக்கிறதும்தான் .ஒருகாலத்திலை எங்கடை ஊரிலை வாத்தியார் எண்டால் தெய்வங்கள் இப்ப நிலமை தலைகீழ் . உங்கடை சேவையை பாராட்டிறன் .

வணக்கம், மைத்திரேயி!

 

உங்கள் கருத்துக்கள், நடைமுறை யதார்த்தை எப்போதும் பிரதிபலிக்கும், நன்றிகள்!

இந்தக்கதையை வாசித்தவுடன் கருத்து எழுத நேரம் கிடைக்கவில்லை புங்கை.

ஆபிரிக்க நாடுகளின் வாழ்வுமுறை அந்த மக்களின் கல்வி பற்றி மேலோட்டமாகவே சிலர் எழுதியுள்ளார்கள். ஆனால் அந்த மக்களோடு வாழ்ந்த ஒரு எழுத்தை உங்கள் எழுத்தில் காண்கிறேன். கதையை நகர்த்திய விதம் அந்த இடத்தில் இருந்து பார்ப்பது போல இருக்கிறது.

சகாரா மணற்துகள்கள் என் முகத்திலும் ஒட்டிக் கொள்கிற உணர்வோடு கதையை எழுதியுள்ளீர்கள்.

நீங்கள் வாழ்ந்த நாடுகளில் இத்தகைய மக்களின் கதைகளை எழுதுங்கள். புலம்பெயர்ந்து போன இடங்களில் வாழும் மக்களின் வாழ்வின் துயர்களை எல்லோரும் அறிய வேணும்.

நன்றிகள், சாந்தி!

 

உங்கள் கருத்தை முழுமையாக உள் வாங்குவதோடு, மேலும் சில அனுபவங்களை, நேரம் கிடைக்கும் போது, யாழுடன்  பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன்! :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கதையை கடையில் இருந்து வாசித்தேன்.அங்கு பதில் எழுதும் வசதி இல்லை.அதால உடன் கருத்து எழுத முடியவில்லை.ஒரே பதில் சூப்பரோ சுப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.