Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது மரணம்: முதலாவது அறிக்கை: நிழலி

Featured Replies

எனது மரணம்: முதலாவது அறிக்கை

இப்போதெல்லாம்

மரணம் பற்றிய

எண்ணங்கள் அடிக்கடி

வருகின்றன

பல தடவை மரணத்தின்

கற்பூர வாசனை

(இடையில் சாணி வாசனையும் வரும்)

என்னருகே வந்தும் உள்ளது

மரணம் நேற்று

காபி கடையில் (Starbucks)

நான் ஒடு cup காபிக்காக

காத்திருக்கையில்

என் பக்கம் வந்து

அமர்ந்திருந்தது

எதுவும் பேசாமல்

அதன்

கண்ணின் ஓரம் நீர்

துளி இருந்தது

திடீரென ஒரு Right turn

இல் என் car திருப்புகையில்

மரணம் என் பக்கத்து

seat இல்

அமர்ந்திருந்தது

என்னை கேள்வி கேட்குமாய்

அதன் முகம் இருந்தது

பின்

அந்த இரவில்

சரியாக நடுச் சாமத்தில்

மனைவியை தேடி

கைகள் போகையில்

அருகே

மரணம் படுத்திருந்தது

இம்முறையும்

ஒற்றை வார்த்தையும்

பேசவில்லை அது

மரணத்தின் முகத்தை

முன்பும் பார்த்திருக்கின்றேன்

உயிர் தப்ப

எதிரியின் காலை முத்தமிடுகையில்

மரணம் காறித் துப்பிவிட்டு

போயிருக்கு

எதிரியின் நகரத்தில்

என்னை விற்கையிலும்

அது பரிகாசம் செய்திருக்கு

நான் இரட்டை நாக்கில்

தொங்குகின்றேனாம் என்று

(ஒன்று தமிழ் மற்றது வாழ்வு)

ஆனால் இப்பவெல்லாம்

அது ஒன்றும் சொல்வதுமில்லை

செய்வதுமில்லை

ஒரு அகதி போன்று

என்னருகே வரும்

மீண்டும் விலகிப் போய்

மெளனமாகப் பார்க்கும்

அதன் விழிகளில்

என் வம்சம் முழுதும் எரித்த

வேட்கை மிச்சமிருக்கும்

எப்போது

என்னை ஆக்கிரமிப்பாய்

எனக் கேட்டவுடன்

மர்மமாய் அழுது

விலகிச் செல்லும்

மரணம் கூட தீண்டா

உலகிலா நான் இருக்கின்றேன்

***********

எனக்கு மரணத்தின்

வாசனை இப்பவெல்லாம்

பிடித்துப் போகின்றது

அப்பா சாகும் நாளின்

முன்னிரவில்

அந்த வாசனையை

அவரில் கண்டேன்

அவரின் அறை முழுதும்

அது நிரம்பியிருந்தது

பின் என் மருமகனின்

சாவுச் செய்தி கேட்ட

நாளின் முதல் நாள்

அந்த வாசனை

என் கனவுகளிலும்

நிரம்பி இருப்பதை

நினைவு கொள்கின்றேன்

மரணம்

எப்போதும் அறிவித்து வரும்

விருந்தாளியாகவே

எனக்கு வந்திருக்கு

ஒன்றில் என் அப்பனை

இல்லையேல் என் உறவை

காவு வாங்குகையிலலும்

அது பாவம்

அறிவித்து விட்டே வந்தது

ஒரு மெல்லிய

காற்றாய் மரணத்தின்

வாசனை பரவும்

பின் என்னுயிரை

உருக்கும்

******

இப்போது அது

என்னிடம் அடிக்கடி வருகின்றது

எல்லாரும் நித்திரை கொண்டபின்

என் அறை முழுதும்

வாசம் கொள்கின்றது

சில நேரம் அது அழும்

சில நேரம் தானே

கடவுள் என அரற்றும்

தான் தழுவா உயிர் எது

என இறுமாப்புக் கொள்ளும்

தான் வெல்லாத இடம் எங்கே

எனக் கேட்கும்

சில நேரம்

பச்சிளம் பாலகனை கொன்ற

வெறியில்

மூச்சிறைக்கும்

அப்படிக் கொன்ற பின்

அது பிதற்றும் போது

ஒன்றும் நான் சொல்வதில்லை

என் பிள்ளையை மட்டும்

ஒளித்து வைப்பேன்

இன்றிரவும் என்னால்

மரணத்தின் வாசனையை

நுகர முடிகின்றது

மெல்ல மெல்ல

என்னை ஆரத் தழுவத்

தொடங்கிய வாசனை

அது

மெல்லிய

போதை ஏறும்

கற்பூரம் மணமும்

சாணி மணமும் கொண்ட

அந்த வாசனையை

உணர்திருக்கின்றீர்களா?

Apr 17, 2010

Edited by நிழலி

வாழ்க்கை முறையில பாரிய மாற்றங்கள் செய்யப்படாதவரை மரணம் பற்றிய பிரமை நேரத்துக்கு நேரம் எங்களை ஆட்டிப்படைச்சு வலியை தருவதை நிறுத்துறது மிகக்கடினம். மரணத்தை நாங்கள் தவிர்க்க ஏலாது. எல்லாரும் ஒரு நாளைக்கு மண்டைய போடத்தான் வேணும். ஆனால்.. மரணபயம் காரணமாய் எங்களுக்கு வாழ்க்கையில வருகிற துன்பங்களை நாங்கள் சமயோசிதமாக சிந்திச்சு செயற்பட்டால் குறைக்கலாம். மரணத்தை தள்ளிப்போடுறது, உயிராபத்தில இருந்து தப்பிக்கொள்ளுறது, உயிராபத்து ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் வேறு, மரண பயம் எண்டுறது வேற.

மரணபயம் எண்டுறது நாங்கள் உயிர்வாழுறதுக்கு, எங்களுக்கு உயிராபத்து ஏற்படாமல் இருக்கிறதுக்கான எச்சரிக்கைகள் போல இருந்தால் அது வேறவிசயம். ஆனால்.. நாங்கள் சாகப்போறம், சாகப்போறம் எண்டு பீதியாட்டுவதாய் இருந்தால்... அந்த மனநிலை எங்கட வாழ்க்கை முறையில சில மாற்றங்கள் செய்யப்பட்டு நீக்கப்படவேணும்.

இதற்கு ஓர் நல்லவழிமுறை தேவையில்லாத நேரங்களில மரணபயம் வந்தால்.. உதாரணத்துக்கு அறையில படுத்து இருக்கேக்க சாவுபயம் வந்தால்.. கண்ணை மூடி தியானம் செய்யலாம். மூச்சை அவதானிச்சுக்கொண்டு எண்ணங்களை முதலில நெற்றி, பின்னர் உச்சந்தலையில குவிச்சுப்பாருங்கோ. எல்லாம் போயிடும். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு உறங்கினாலும் இந்த நினைவுகளை தவிர்க்கலாம்.

  • தொடங்கியவர்

வாழ்க்கை முறையில பாரிய மாற்றங்கள் செய்யப்படாதவரை மரணம் பற்றிய பிரமை நேரத்துக்கு நேரம் எங்களை ஆட்டிப்படைச்சு வலியை தருவதை நிறுத்துறது மிகக்கடினம். மரணத்தை நாங்கள் தவிர்க்க ஏலாது. எல்லாரும் ஒரு நாளைக்கு மண்டைய போடத்தான் வேணும். ஆனால்.. மரணபயம் காரணமாய் எங்களுக்கு வாழ்க்கையில வருகிற துன்பங்களை நாங்கள் சமயோசிதமாக சிந்திச்சு செயற்பட்டால் குறைக்கலாம். மரணத்தை தள்ளிப்போடுறது, உயிராபத்தில இருந்து தப்பிக்கொள்ளுறது, உயிராபத்து ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் வேறு, மரண பயம் எண்டுறது வேற.

மரணபயம் எண்டுறது நாங்கள் உயிர்வாழுறதுக்கு, எங்களுக்கு உயிராபத்து ஏற்படாமல் இருக்கிறதுக்கான எச்சரிக்கைகள் போல இருந்தால் அது வேறவிசயம். ஆனால்.. நாங்கள் சாகப்போறம், சாகப்போறம் எண்டு பீதியாட்டுவதாய் இருந்தால்... அந்த மனநிலை எங்கட வாழ்க்கை முறையில சில மாற்றங்கள் செய்யப்பட்டு நீக்கப்படவேணும்.

இதற்கு ஓர் நல்லவழிமுறை தேவையில்லாத நேரங்களில மரணபயம் வந்தால்.. உதாரணத்துக்கு அறையில படுத்து இருக்கேக்க சாவுபயம் வந்தால்.. கண்ணை மூடி தியானம் செய்யலாம். மூச்சை அவதானிச்சுக்கொண்டு எண்ணங்களை முதலில நெற்றி, பின்னர் உச்சந்தலையில குவிச்சுப்பாருங்கோ. எல்லாம் போயிடும். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு உறங்கினாலும் இந்த நினைவுகளை தவிர்க்கலாம்.

இந்தக் கவிதை எழுதியபின் என் பயம்

இந்தக் கவிதை யார் முழுமையாக் புரிவர் என்பதே? நான் எவருக்கும் புரியாத கவிதை எழுதி என்னை பெரிய ம** என்று காட்டுகின்றேனா என்று கூட ஒரு பயம் இருந்தது

உன்களின் பதில் மனசுக்கு மிக ஆறுதல் தருகின்றது..... ஒன்று மட்டும் கேட்கின்றேன் உங்களிடம்............. நிறைய எழுதுங்கள்

Edited by நிழலி

மரணவாசனை எங்கும் பரவியிருக்கின்றது.

மரணத்தோடு விழயாடிய காலங்களில் வாழ்வு மீதான ஆசை எங்கோ ஒரு ஓரத்தில் ஒழிந்துகொண்டே இருந்தது. பின்னர் வாழ்வு மீதான வெறுப்பில் மரணத்தை நாடும்போது மரணம் விலகிச்சென்றது. ஒரு முறை ஒரு கிழவர் சொன்னார் மரணத்தை வரவழைக்க முயற்சிசெய்யாதே மரணித்துவிட்டதாகவே நினைத்துக்கொள் இனி வாழும் வாழ்வை வாழ்வின் மேலதிகம் என ஏற்றுக்கொள் என்று. அதன்படியே தொடர்கின்றது. இன்றய நாளில் இருந்து 300 வருடங்கள் முன்னர் எப்படி இருந்தேன் 300 வருடங்களுக்குப் பின்னர் எப்படி இருப்பேன் என்று எமது வாழ்வை தேடிப்பார்த்தால் என்னதான் இருக்கப்போகின்றது? மரணம் குறித்த சிந்தனை மிக நல்ல ஆறுதல். பெரும் துன்பங்கள் நெருக்கடிகள் வரும்போது என்றோ ஒரு நாள் மண்டையை போடப்போறம் என்பதை நினைத்துவிட்டால் துன்பங்களின் கனம் மிக லேசாகிவிடும். மரணம் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு நிகழும் ஒன்று என்ற போதும் வாழ்வு மீதான பற்றால் பலர் மரணத்தின் இயல்பை ஏற்றுக்கொள்வதில்லை. மறுக்கப்படினும் மரணம் குறித்த நினைவுகளும் சிந்தனைகளும் காதல் காமம் மற்றும் எந்தவொன்றையும் விட சுகமானது என்பதே உண்மை.

ஓர் முக்கிய விசயம் சொல்ல மறந்துபோனன். மரணபயம் வந்தால் வாழ்க்கைத்துணையை இறுக்க கட்டிப்புடிச்சுக்கொண்டால் பயம் போயிடும் என்று எங்கையோ ஒரு உளவியல் குறிப்பிலை பார்த்து இருந்தன். உடலுறவு இந்தப்பயங்கள் குறைவதற்கு உதவலாம். மனம், உளம் இறுக்கமாய் இருக்கேக்க உடலுறவில ஈடுபட்டால்.. எல்லாம் சுகமாகும் எண்டு எங்கையோ ஓர் தகவலை வாசிச்சதாய் ஞாபகம்.

அதுக்காக.. உங்கட பயத்தை தீர்க்கிறதுக்காய் வாழ்க்கைத்துணையுக்கு நேரம் கெட்ட நேரத்தில போய் கரைச்சல் கொடுக்காதிங்கோ.

http://video.google.com/videoplay?docid=6765607872406834873&q=J.+Krishnamurti++Dr.+Allan+W.+Anderson&hl=en# மரணத்தை பற்றி கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கூறியது

மரணத்தின் முகத்தை

முன்பும் பார்த்திருக்கின்றேன்

உயிர் தப்ப

எதிரியின் காலை முத்தமிடுகையில்

மரணம் காறித் துப்பிவிட்டு

போயிருக்கு

எதிரியின் நகரத்தில்

என்னை விற்கையிலும்

அது பரிகாசம் செய்திருக்கு

நான் இரட்டை நாக்கில்

தொங்குகின்றேனாம் என்று

(ஒன்று தமிழ் மற்றது வாழ்வு)

ஆனால் இப்பவெல்லாம்

அது ஒன்றும் சொல்வதுமில்லை

செய்வதுமில்லை

ஒரு அகதி போன்று

என்னருகே வரும்

மீண்டும் விலகிப் போய்

மெளனமாகப் பார்க்கும்

அதன் விழிகளில்

என் வம்சம் முழுதும் எரித்த

வேட்கை மிச்சமிருக்கும்

எப்போது

என்னை ஆக்கிரமிப்பாய்

எனக் கேட்டவுடன்

மர்மமாய் அழுது

விலகிச் செல்லும்

மரணம் கூட தீண்டா

உலகிலா நான் இருக்கின்றேன்

***********

Apr 17, 2010

இயல்பான இந்த வரிகளுக்கு நன்றி அண்ணா. அந்த முகத்தை நானும் பார்த்திருக்கிறேன் அண்ணா.

நெஞ்சை சுடும்

வலிகளுடன் அழைத்த போது

வராத நீ ..

இன்று மட்டும்

நான் கேட்காமலே

வரும் மர்மம் என்ன ...

என்னை தான்

அழைக்க வருகிறாய்

என்று ஆவலுடன் காத்திருந்த போது

என் நண்பனை

அழைத்து சென்றாய்...

மரணமே !

உனக்கு நண்பன் இல்லையா ..??

Edited by அபிராம்

மரணத்தை நானாகத் தேடிப் போகக்கூடாது. அதுதான் என்னிடம் வரவேண்டும். அது என்னைத் தேடி வரும்போது அதனைக் கைநீட்டி வரவேற்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறேன். எனக்கு வாழத்தான் பயமே தவிர, மரணிக்கவல்ல. வாழ்க்கையின் பயத்தைப் போக்கப் பல பிரயத்தனங்கள் செய்யவேண்டி உள்ளது. ஏற்கனவே ஒரு மரணம் என்னை ஆட்டிப் படைத்துவிட்டதால், நான் மரணத்தை சாதாரணமாக எதிர்கொள்ளப் பழகிவிட்டேன். இலக்கற்ற ஒரு வாழ்வு வாழ்வதைவிட மரணம் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

பலதடவைகள் மரண வாசல் வரை சென்றதால் மரண பயமே போய்விட்டது.நன்றி நிழலி கவிதைக்கு.

மரணம் எல்லோருக்கும் பொதுவானது.இறக்கும் நாட்கள் தான் வித்தியாசமானவை.எவ்வளவுக்கு எமக்கு மரண பயம் கூடுகிறதோ அவ்வளவுக்கு எமது இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். அத்துடன் சூழ உள்ளவர்களையும் மிகவும் பாதிக்கும். மாறாக வாழ்க்கை துணையுடனோ,பெற்றோருடனோ, நண்பர்களுடனோ இறுக்கமான பிணைப்பை அதாவது மனம் விட்டு பேசும் போது மரண பயம் குறையும்.வாழ்க்கையும் இனிதாக அமையும்.

நிழலி, உங்கள் கவிதை நன்றாக உள்ளது. வரிகள் இயல்பாக வந்து விழுந்துள்ளன.

ஒவ்வொரு உயிரின் நிழலிலும் படிந்திருப்பது மரணம். எமது புரிதல்களில், தேடல்களில் மரணம் என்பது பொதுவாக இடம்பெறுவதில்லை. தவிர்க்க முடியாத ஒன்றை பலரும் பேசாது தவிர்க்க எண்ணுவது எவ்வளவு மடமை. உங்கள் வரிகள் அற்புதமாக இதை படம் பிடித்து காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை உள்ளம் திறந்து எழுதும்மடலாக் இருக்கிறது............மரணம் எல்லோருக்கும் வரும் ஆனால் உங்களுகாக சில ...கடமைகள் இருகின்றான். அதை நிறைவு செய்த பின் தான் போகலாம். அதுவரை இறைவன் உங்களை காப்பான் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள் . வர ....வர இந்த நிழலி நம்பிக்கையிலாமல் .....பேசுறார்........வாழ்க்கையில் சில சிக்கல்கள் மன சோர்வுகள். வரும் .... .பிறருக்காக ..வாழுங்கள் வாழ்க்கை இனிமையாகும்.........உன் மனைவிக்காக ... .உன் அன்பு செல்வங்களுகாக் ...........வாழுங்கள். வாழும் வரை .நம்பிக்கயோடு வாழுங்கள். படைத்தவன் படியளப்பான். எங்கோ இருந்து ஒரு நல்ல சேதி வரும். நம்பிக்கை தான் வாழ்க்கை .

  • தொடங்கியவர்

....வர இந்த நிழலி நம்பிக்கையிலாமல் .....பேசுறார்........வாழ்க்கையில் சில சிக்கல்கள் மன சோர்வுகள். வரும் .... .பிறருக்காக

அக்கா,

வாழ்வு பற்றிய அவநம்பிக்கையும் தோல்வியும் தான் மரணம் பற்றி சிந்திக்க தூண்டுவன அல்ல

மாறாக அவற்றின் வெற்றி தான் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்... வாழ்வை ஒரு பயணம் என்று எடுங்களன்...அப்படி எடுத்தால் ஒரு இடத்தை அடைந்த பின் தான் அடுத்த இடம். ஒரே இடத்தில் தரித்து நிற்க நான் புகையிரத இயந்திரம் அல்ல

நான் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு கால பைரவனால் சபிக்கப் பட்டவன் என்றே நினைக்கின்றேன்

என் குடும்பம் பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கு என்பதால் இதனை விட தெளிவாக எழுத முடியாது

**************

இந்தக் கவிதை நான் சாகப் போறன் என்ற பயத்தில் எழுதியது அல்ல

சாவையும் ஒரு பெருநிகழ்வாய் பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் முழு முதல் கடவுள் எது என்றால் அது சாவுதான்

யாரால், எதனால் இறுதி முடிவை (சாவை) மிஞ்ச முடியும்

****

ஒரு சிங்களப் படம்

சாஹாரவே சிகினய (Saharawe Sihinaya)

90 இன் முதல் பகுதியில் வந்தது

மரணம் ஒரு Character ஆகவே அந்த அற்புத படத்தில் வந்தது..... (சிங்கள படம் என்றவுடன் கிளர்ந்து எழும் கோபங்களை அடக்குவீராக....)

அது எல்லாருடனும் பயணித்தது, உடலுறவு கொண்டது....

மரணத்தை கூட நேசிக்க கூடிய ஒரு உருவகமாக பார்க்கலாம் என்று உணர்த்தியது அந்த சிங்களப் படம்தான் (என் 20களின் போது)

அன்றிலிருந்து மனம் பிரக்ஞை கொண்டது மரணம் பற்றி

இடையில்

மாமா செத்தார்

நல்லா இருந்த அப்பா 2 மாத அறிவித்தலுடன் மாயமானார்

எந்த அறிவித்தலும் இன்றி மருமகன் செத்து துண்டம் துண்டமாகினான்

****************

சாவு நிகழ்ந்திருக்க வேண்டிய எல்லா நேரத்திலும் நான் தப்பிருக்கின்றேன்

ஜூலை 83 கலவர முதல் நாளில்

திருநெல்வேலியில் புறப்ட்ட சிங்கள் தோட்டா பல, செய்தி அறியாது யாழ் பஸ் நிலையம் அருகே கொழும்பிற்காக எம் குடும்பம் காத்திருந்த அருகே இருந்த சக பயணியை கொன்றது

அம்மாவின் சேலையை துவைத்தது

நாம் யாழ் இ.போ.ச நிலையத்தில் தஞ்சம் புகுந்து தப்பிக் கொண்டோம்

என் சுய மரியாதைக்கான நரம்பினையும் அறுத்து சிங்களவனிடம் மண்டியிட செய்தது

****

இந்திய இராணுவத்தை நம்பி

என் அண்னன்மார் துப்பாக்கியால் தம் சகோதரனை சுட்டுக் கொன்றிருந்தனர்

ஒரு சந்தியின் ஒரு திசையில் என் அண்னன்

மறுதிசையில் மாற்று போராட்டக் குழுவின் தலைவனாய் என் தம்பி

இடையில் என் வீடு

***

அகிலன்,

அறிவாளி

என என் பள்ளி (Sr Johns College 92 batch)

மாணவர்களின் பிரேதம் முன்

மெளனாமாக அமர்ந்திருந்தேன்

அடுத்த தோட்டா

என்னை துளைக்கும்

என்று என்

எல்லா அறைகளையும்

ஆமைப் பூட்டினினால்

இறுக்கி இருந்தேன்

**

ஆனால் துளைக்கவில்லை....இன்று உயிருடன்....

****************************************************************

இப்ப சொல்லுங்கள் மரணம் பற்றி நான் கவிதை எழுதினால், அது வாழ்வில் சோர்வு கொண்டா?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை.

ஆனால் படிக்கும் போது ..ஒருவித மனச்சஞ்சலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி...

முதலில் நன்றி பலரும் பேசத் துணியாததை பேசியதற்கு...உண்மையில் எனக்கு(ம்) சிலவேளைகளில் செத்துப்போனால் என்ன என்கிற உணர்வுகள் வந்திருக்கு.. அது சிலவேளைகளில் ஒருவித பாரிய மனநோயாகவோ இருக்கலாம் என நினைத்து ஒருவருக்கும் சொல்லாமல் ஒழித்த காலமும் உண்டு...அதேபோல சில/பல தடவைகள் சாவின் விளிம்பு என்னும் இடங்களிற்கும் போயுள்ளேன்.....சின்ன உதாரணம் இங்கே கனடாவில் ஒவ்வொரு தடவை left எடுக்கேக்க ஒரு குறித்த சதவீதம் தற்கொலை செய்கிறோம் என்றுதான் நான் கருதுவது/அப்படியான நிலைக்கு போகவில்லை என்றால் நீங்கள் ஒன்றில் கார் ஓடுவதில்லை அல்லது old lady driving என்றுதான் நான் சொல்லுவேன்...அதுவேற ...

உண்மையில் சின்னக்குட்டி இணைத்த இணைப்பு விளங்கவில்லை...யாருக்கும் "பாதர் டேமியனை" தெரியுமா? அவரால் விடயங்களை இலகுவாக சொல்லமுடியும் என நான் நினைக்கிறேன்..... நான் அடிமட்ட மட்டி இல்லை என்று ஒருவித நம்பிக்கை உள்ளபடியால் சொல்லுகிறேன்..அந்த இணைப்பு அந்த துறையில் இல்லாதவர்களுக்கு மிகக் கடினம்....

மரணத்தை பற்றி எனக்கு எனக்கு தெரிந்ததை வார கிழமை எழுதுகிறேன் ...மீண்டும் ஒருமுறை நன்றி...மரணத்தை பற்றி சிந்திப்பது/ பேசுவது அப்நோர்மல் இல்லை என உணர்த்தியதிற்கு...

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி மரணத்தைப் பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருந்தது.

நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று.

ஆனால் அது எந்த நேரத்தில், எந்த ரூபத்தில் வரும் என்பதும்..... அதன் பின் அதனை குடும்ப அங்கத்தினர் அதனை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை பொறுத்தே மரணத்தை வெல்ல முடியும்.

நோயினால் ஏற்படும் மரணம், முதுமையில் ஏற்படும் மரணத்தை ஏற்கக் கூடியதாக இருந்தாலும்.....

விபத்தினால் ஏற்படும் மரணம், போரினால் ஏற்படும் மரணம் அந்தக் குடும்பத்தை சீரழித்து விடும்.

இதிலும் போரினால் ஏற்படும் மரணமானது கருவறையில் உருவாகிய சிசுவிலிருந்து 101 வயது மூதாட்டி வரை கொன்று குவித்ததை ஈழத்தமிழர்கள் கண்கூடாக பார்த்தோம். எத்தனை பிள்ளைகளின் தந்தையை , தாயை, சகோதரர்களை, இழக்கவைத்தது மரணம்.

அதன் மூலம் எவ்வளவோ கனவின் மூலம் கட்டப்பட்ட குடும்பவாழ்க்கையையே சிதைத்தது மரணம்.

இவ்வளவிற்கும் இது நடக்கப் போகின்றது என்று தெரிந்திருந்தும் வாய், மூடி பார்த்துக் கொண்டிருந்த உலகத்தின் மீது இனம் தெரியாத வெறுப்பு ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை நான் பாம்பு கடித்தும்,விமானத்தில் போகும் போது விமானம் வெடித்தோ சாகக் கூடாது...மற்றும் படி மரணத்தை பற்றிய பயம் பெரிதாக இல்லை.

மனத்தில் ஒருவித பயத்தை வரவழைத்துவிட்டது கவிதை.நான் பெரிதாக தத்துவ புத்தகங்கள் படிப்பவனல்ல.ஜே,ஜே,கே ஜை பற்றி மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டதுடன் சரி.

பல வித பயத்திற்கு ஆட்படும் நான் மரணத்தை பற்றி எந்தஒரு நாளும் சிந்தித்துமில்லை மரணபயம் என்றொன்று வந்ததுமில்லை.எதோ கணப்பொழுதில் நடக்கும் ஒரு நிகழ்வு எப்போதும் அது எவர்க்கும் வந்துவிட்டுபோகலாம் என்ற நினைப்பில் அதைபற்றி நான் நினைப்பதில்லை.

கலியாணம் முடித்த புதிதில் எனது மனைவியின் அக்காவின் கணவர் தின்னவேலியில் செல் அடிபட்டு இறந்தபோது எனது மனைவி பட்ட துன்பம் சொல்லி மாளாது.எனக்கு அவர்களை தெரியவும் மாட்டாது எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை.ஒரு மூன்று மாதம் கடக்கவில்லை எனது அத்தான் லண்டனில் கார்விபத்தில் மரணமானார் என்னை அந்த மரணம் முற்றுமுழுதாக பிரட்டி எடுத்துவிட்டது.வந்த புதுதில் அவருடன் தான் லண்டனில் இருந்தேன் அப்படி ஒரு மனிதரை இதுவரை நான் என் வாழ்க்கையில் சந்தித்ததில்லை.

அதன் பின் மரணத்தை எவர்க்கும் எந்த நேரத்திலும் நடக்கலாம் எனவே நான் மரணம் பற்றிநினைப்பதில்லை.

மரணமானது அவர் சார்ந்தவர்களுக்கு எப்படியான ஒரு சோகமான ஒரு நிகழ்வு என்பதையும் எமது போராட்டம் மறந்துவிட்டிருந்தது.

நல்ல கவிக்கு நன்றிகள் நிழலி அண்ணா. நான் எப்போதும் கடவுளை வேண்டுவது என்னை சுற்றி உள்ளோர் என்னை விட்டு எனக்கு முன்பு போகக்கூடாது என்று...அதை என்னால் தாங்கவும் முடியாது. என் உயிரான அப்பாவும் என்னை தன் மகள் போல வளர்த்த பெரிய அத்தானும் என்னை விட்டு சென்றபோது நான் பட்ட துன்பம் இனி எனக்கு எப்பவும் வேண்டாம். மற்றும் படி எனக்கு மரணபயம் இதுவரை வந்ததில்லை. மரணம் வரும் போது சுனாமி மாதிரி வந்து, ஒரேடியாக ஒரே நாளில் குடும்பமாக கூட்டிக்கொண்டுபோய்விடவேண்டும் என்பது எனது ஆசை.

Edited by ஈழமகள்

கவிதை என்று எழுதி இருபது, கவிதை போன்று எனக்குத் தெரியவில்லை, மாறாக மனதில் உள்ளதை உள்ளபடியே வார்த்தைகளின் மூலம் வெளிபடுத்தி இருக்கிறீர்கள்.முதலில் அதற்கு பாராட்டுக்கள்.

'மரணம் கூட தீண்டா

உலகிலா நான் இருக்கின்றேன்'

மரணத்தின் வாசல் வரைக்கும் சென்று, உள் அனுமதி இன்றி திருப்பி அனுப்புப்பட்டு இருக்கிறேன். மீண்டு வந்தபோது இதே மாதிரியான சிந்தனை தான் மனதில் உருவானது...

நுணா சொன்னது போல் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம், உங்களில் உண்மையான அக்கறை உள்ளவரிடம், மனம்விட்டு வெளிப்படுத்துங்கள். மரணத்தைப் பற்றி நினைக்காதவர்கள் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம், ஆனால் அடிக்கடி உங்களுக்கு மரணத்தைப் பற்றி சிந்தனைகள் வருமானால், உங்கள் மனம் அண்மையில் எதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டு இருக்கிறது என்று நினைக்கிறன். அது உங்கள் உடல் நலக் குறைவாகவோ, அல்லது உறவினரின் பிரிவாகவோ இருக்கலாம். எப்போதில் இருந்து மரணத்தைப் பற்றி அடிக்கடி ஜோசிக்க ஆரம்பித்தீர்கள் என்று ஜோசித்து காரணத்தை அறியப்பாருங்கள்.

அமைதியான இடத்தில் தனிமையில் இருந்து அதிக நேரம் ஜோசிப்பதை குறைத்து கலகப்பாக இருக்கும் இடங்களில் நேரத்தை செலவிடுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் சினிமா பாட்டுகள் கேட்கிறது நல்லது தான், ஆனால் சில சோக பாட்டு இருக்கே... பாட்டுத் தானே என்று கேட்கத் தொடக்கி கோதாரி... நாலு நிமிசத்தில வேற ஒரு சகாப்தத்தில மனதை கொண்டு போய் விட்டுடும். :lol: திரும்பி வர நாலு நாள் ஆகும்...

(வீடு அமைதியாக இருந்தால், தூங்கிற்று இருக்கும் உங்கள் பிள்ளைகளை எழுப்பி விளையாடுங்கோ!)

மனதில் எப்போதும் ஒரே மாதிரியான திந்தனைகள் ஓடுவதில்லை. இந்த சிந்தனைகளும் இன்னும் சில நாட்களே...

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

பாறையாக இறுகிக் கிடப்போரையும் பனியாக உருக்கிவிடும் வல்லமை படைத்தது மரணம் ஒன்றுதான்.

கடைசிவரை நான் இருப்பேன் உன் கை பற்றி நான் நடப்பேன் என்று உறுதிமொழி தந்தவரின் அந்த இறுதி நிமிடத்தில்

அவர் கரங்களை இறுகப் பற்றியபடி இறைவனைப் பிராத்தித்த அந்த பொல்லாத நிமிடத்திலும் சோகத்தை எனதாக்கி

சந்தோசமாய் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தனுப்பஎன்னால் எப்படி முடிந்தது என்று இப்போதும் எண்ணிப்பார்த்து

எனக்குள் அழுகிறேன்.ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு போதிமரம்.ஒருமுறை வைத்தியசாலையை அல்லது முதியோர்

இல்லத்தை தரிசித்தால் போதும் எம் ஆணவம் அழிந்து ஆன்மீக விடுதலை பெற்று விடலாம்.

கவிதை அனைவர் மனதையும் ஒருமுறை அசைத்துப் பார்த்துவிட்டது. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாவு சாவல்ல

சாவுக்குமுன் நிகழும்

போராட்டமே சாவு.

kannadasan2200912182355.jpg

.. கண்ணை மூடி தியானம் செய்யலாம். மூச்சை அவதானிச்சுக்கொண்டு எண்ணங்களை முதலில நெற்றி, பின்னர் உச்சந்தலையில குவிச்சுப்பாருங்கோ. எல்லாம் போயிடும். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு உறங்கினாலும் இந்த நினைவுகளை தவிர்க்கலாம்.

அப்படியே உயிர் போய் விட்டால் ,பிறகு சொல்லுவாங்கள் அவர் மரணிக்கவில்லை சமாதியா போயிட்டார் என்று

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்ததை கண்மணி சொல்லி விட்டா.மரனத்தை பற்றிய புரிதல் இருந்தால் இந்த போட்டி பொறாமை என்று பகையை வளர்த்து காலத்தை வீண்ளாக்கமல் வாழ்வை அனுபவிக்கலாம்.மற்றும்

கடைசி லலைக்கும் வாழ்வதற்க்கு தயார் படுத்திக்கொன்டிருக்காமல் இன்றே வாழலாம். மற்றும் வோல்கனா பெண் வாசனை முகர்வது சிறுமையா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணம் என்பது இயற்கையானது அதை ஏற்றுகொள்ள பழக வேண்டும், எம்மில் தங்கிவாழ்பவருக்கு தேள்வையான பொருளாதாரத்தை தேடிவைத்து விட்டால். எ்ம்தேள்வை என்ன, இருந்து என்ன பிரயோசனம், மரம்,செடி,கொடி, பூச்சி,புழு பிறக்கிறது இறக்கிறது எதுவும் அழுகிறதா இருந்தவரை வாழ்ந்து போய்சேர்கிறது அதுபோலவே மனித வாழ்வும்.

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியின் நிலை என்ன? :lol::lol::lol:

வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியின் நிலை என்ன? :lol::lol::lol:

சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இதைத்தான் சொல்லுறதோ? :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.