Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணர்வுகள் உறவுகள்'(அம்மம்மா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகள் உறவுகள்

அம்மம்மா

இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

24959_1165159828930_1825936284_345679_5718647_n.jpg

காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி.

இவங்களிற்குள்ளை ஏதும் சண்டையாயிருக்குமோ??என்றும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் சண்டை பிடித்ததையும் அவன் காணவில்லை. மத்தியானமானதும் தாத்தா கள்ளடிக்கப் போய விட்டு வருவார். அவர் தூரத்தில் வரும்பொழுதே முற்றத்தில் படுத்திருக்கும் வாதாபி வாலையாட்டியபடி மெதுவாய் முனகியபடி சந்தோசத்திலை நிலத்திலை விழுந்து புரளும்.. குசினிக்குள் நின்றபடியே டேய் செம்பிலை தண்ணி எடுத்து வை தாத்தா வாறார் என்று குரல் கொடுப்பார்.தூரத்தில் தாத்தா வந்து கொண்டிருப்பார். அவர் வாறது எப்பிடி வாதாபிக்கும் உள்ளை நிக்கிற அம்மம்மாவிற்கும் தெரியும் ?? வாதாபி மணத்திலை கண்டு பிடிச்சிருக்கும். அம்மமாவுக்கும் மணக்கிற சக்தி இருக்கோ எண்டு மண்டையை போட்டு குழப்பி ஒருநாள் அவாவிடமே கேட்டும் பார்த்தான்.சின்னப்பெடியன் உனக்கு விளங்காது எண்டு சொல்லி சிரிச்சார்.

தாத்தா நேரடியாக கிணத்தடிக்குப்போய் கைகால் கழுவி விட்டு வந்து செம்புத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு அதை கொண்டுவந்து சாப்பிட சப்பாணி கட்டியமர்ந்ததும் அவன் கொண்டுபோய் வாழையிலையை குடுப்பான். பெரும்பாலும் வழையிலைதான் சாப்பிடுவார். வாழையிலை இல்லாத காலத்திலை அம்மம்மா ஒரு ஓலைப்பெட்டியை கவித்துப்போட்டு அதில் பெரிய பூவரசம் இலைகளை மெதுவாய் நெருப்பில் வாட்டி கோப்பை போல வட்ட வடிவமாய் அடுக்கி தருவார் அதிலை என்னதான் சொதி குளம்பு ஊத்தி சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடியும்வரை கொஞ்சம்கூட கீழே ஒழுகாது .

அது மட்டுமில்லை தாத்தா செருமினால் பிடரியை சொறிந்தால்.உச்சந்தலையை சொறிந்தால்.நெஞ்சை தடவினால் அதற்கெல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அது அம்மம்மாவிற்கு மட்டுமே புரியும். அதே நேரம் அம்மம்மாவின் ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தங்கள் தாத்தாவிற்கு மட்டுமே புரிந்தவை.பால் குடித்து முடித்துவிட்டதொரு குழந்தைக்கு முதுகில் தட்டி அது ஏவறை (ஏப்பம்) விட்டதும் ஆனந்தப்படும் ஒரு தாயைப்போல் தாத்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் தானது வயிற்றை தடவி ஒரு ஏவறை விட்டால்தான் அவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணலாம்.இரவில் சாப்பிட்டு முடிந்ததும் காலை நீட்டி சுவரில் சாய்ந்படி வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றியலை. பாக்கு. சுண்ணாம்பு புகையிலை. எல்லாம் அளவாய் சேர்த்து பாக்குஉரலில் போட்டு இடித்து அதை ஒரு முழு வெற்றிலையில் கொட்டி சுருட்டி அதனை இரண்டாகப்பிரித்து பாதியை தாத்தாவிடம் கொடுக்கச்சொல்லி அவனிடம் நீட்டிவிட்டு பாதியை அவர் வாயில் போட்டு மென்றுவிட்டு வாய்கொப்பளித்துவிட்டு படுக்கப் போவார்.

அவர்களின் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அனைத்தையும் சரிபாதியாய் பகிர்ந்து கொண்டதன் முழு அர்த்தமுமே அவர்கள் இரவில் பகிர்ந்து கொள்ளும் அந்த வெற்றிலையில் ததத்துவமாய் பொதிந்திருந்தது அப்பொழுது அவனிற்கு புரிந்திருக்கவில்லை.அப்படியானதொரு நாளில்தான் தாத்தா நோய்வாயப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது இறுதிக்கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு தாத்தா மயங்கிய நிலைக்கு போய்விட்டிருந்தார். அவன்தான் அவசரமாக ஓடிப்போய் நடராசா பரியாரியை அழைத்து வந்தான். வந்தவர் எல்லாம் பரிசோதித்துவிட்டு சொந்தபந்தங்களிற்கு சொல்லினுப்பிட்டு பால் ஊத்துறவை ஊத்துங்கோ எண்டு சொல்லிவிட்டு அவரின்ரை பங்கிற்கு அவரும் பால் ஊத்திவிட்டு போய்விட்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எண்டு எல்லாரும் வரிசையாய் நிண்டு பால் ஊத்தியாச்சு. ஆனால் இன்னமும் சேடம் இழுத்துக்கொண்டுதானிருந்தது. பலர் சொல்லியும் அவர் விரும்பினபடி விதம் விதமாய் சமைச்சு போட்ட கையாலை பால் ஊத்தமாட்டன் எண்டிட்டார் அம்மம்மா ..மண் பொன் எல்லாம் உரசி ஊத்தியாச்சு நேரம் போய்க்கொண்டேயிருந்தது சேடம் இழுத்துக்கொண்டேயிருந்தது. பிள்ளை உயிர் கிடந்து தவிக்கிது இப்பிடி தவிக்கவிடாதை அடம்பிடிக்காமல் பாலை ஊத்து எண்டு ஊர்பெருசுகள் எல்லாரும் வற்புறுத்தினால் பிறகுதான் விசும்பியபடி ஒரு கறண்டியில் பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினார் தாத்தாவின் மார்பு சில அங்குலம் கட்டிலில் இருந்து மேலே எழும்பி திரும்ப கீழே இறங்க மெல்லியதாய் ஒரு கொட்டாவியோடு அவரது உயிர் பிரிந்து போனது. வீடு முழுதும் ஒரே ஓலம்.

00000000000000000000

அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்.

அவனிற்காக கிளாசுகள் வாங்கித்தான் தேத்தண்ணி குடுக்கவேணும்.செத்த வீட்டிற்கு வந்ததும் வெறும் தேத்தண்ணியை குடிச்சபடி வெற்றிலையை போட்டு சப்பித் துப்பினபடியே இருப்பான் அவனின்ரை உதவியாளர் அல்லது அவனிட்டை தொழில் பழகிறவர்தான் இடைக்கிடை மேளத்தை அடிச்சபடி இருப்பினம்.கடைசி பொற்சுண்ணப்பாடல் முடிஞ்சு எல்லாரும் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் போதுதான். தேத்தண்ணி இருந்த இரத்தினன்ரை கிளாசிலை சாராயம் நிரம்பியிருக்கும். ஒரு சுருட்டை பற்றவைத்து விட்டு மேளத்தை தூக்குவான். அதுக்கு பிறகு சத்தத்தை வைச்சே இரத்தினன் அடிக்கத் தொங்கிட்டான் எண்டு எல்லாருக்கும் தெரியும்.

தாத்தா செத்த நேரம் அவரின்ரை ஆம்பிளை பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டிலை உடைனை வரமுடியாத நிலைமை அதலை அவன்தான் கொள்ளி வைக்கவேணும் தாத்தாவேறை தண்ணியடிச்சிட்டு டேய் நீ தானடா எனக்கு கொள்ளி வைக்கவேணும் எண்டு அடிக்கடி சொல்லுவார். கொள்ளி வைக்கிறதெண்டு முடிவாகிட்டுது அதுக்கு கட்டாயம் மொட்டையடிக்கவேணும். மொட்டையடிச்சால் பிறகு பள்ளிக்கூடத்திலை எல்லாரும் அவனை மொட்டைப் பாப்பா சட்டியுடைச்சான் மூண்டுபானை கூழ் குடிச்சான் எண்டு நக்கலடிப்பினம் அதாலை மொட்டையடிக்காமல் தலைமயிரை ஒட்ட வெட்டச்சொல்லி கேக்கலாமெண்டு தம்பிஜயாவை தேடிப்போனான். தம்பிஜயாவோ பின்வளவு பூவரசிலை தோல்வாரை கட்டிப்போட்டு சவரக்கத்தியை இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தான்.

தம்பி ஜயா மொட்டையடிக்காமல் கொஞ்சம் ஒட்டவெட்டினால் காணும்தானே??

தம்பி இது சடங்கு சம்பிரதாயம் இதுகளை மீறக்கூடாது எண்டபடி அவன் தலையில் தண்ணியை தெளித்து வழிக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனின்ரை சலுனிலை பலவருசமாய் வைத்து தம்பிஜயா தேய்த்தக்கொண்டிருந்த சீனாக்காரத்தை எடுத்து கீழைபோட்டு உடைத்துவிட்டான் அதற்கு எப்பிடியும் பழிவாங்கியே தீருவான் என்பது அவனிற்கு தெரியும்.மொட்டையடித் முடித்தவன் தம்பின்ரை மண்டை வடிவான உருண்டை மண்டையெண்டு பழிவாங்கிவிட்ட திருப்தியில் சொல்லிச் சிரித்தான்.

எல்லாரது அழுகுரல்களோடையும் வேலியை வெட்டி பிணம் வீதியில் இறங்கியது வேட்டி கட்டியபடி மொட்டைத்தலை தோளில் கொள்ளிக்குடத்துடன் அவனும் ஊர் ஆண்களும் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பட்டினத்தார் பாடலும் எவ்வொரு சந்தியிலும் இரத்தினனின் மேளச்சமாவுமாக சுடலைக்கு போய் சேர்ந்ததும் அடுக்கியிருந்த மரக்குற்றிகளில் பிணத்தை கிடத்தி பெட்டியை பிரித்தார்கள். அவனை பிணத்தை சுற்றி வலம்வரச்சொன்ன தம்பிஜயா கொடுவாக்கத்தியால் கொள்ளிக் குடத்தில் கொத்தி அதிலிருந்து வழிந்த நீரை பிணத்தை நோக்கி தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.கடைசியாய் தாத்தாவின் தலைமாட்டில் கொள்ளியை செருகியபோதுதான் அவனால் அடக்கமுடியாமல் அழுகை விம்மிவெடித்தது. அப்பிடியே திரும்பிப் பாக்காமல் வீட்டிற்கு போகச்சொன்னார்கள்.

எட்டுச்செலவு வரைக்கும் ஒவ்வொருநாளும் ஒப்பாரிபெண்டுகள் சொந்தக்காரரின் பட்டிணி பண்டம் எண்டு நாட்கள் போய் எட்டுச்செலவும் முடிந்து அடுத்நாள். டேய் செம்பிலை தண்ணியெடுத்து வாசல்லை வையடா எண்டு வழைமைபோல குசினிக்குள் இருந்து அம்மம்மா குரல் குடுத்தார். என்ன இது மனிசி பழக்கதோசத்திலை சொல்லுதோ எண்டு நினைக்க வாதாபியும் மெதுவாய் முனகியபடி வாலை ஆட்டியபடி நிலத்தில் கிடந்து புரண்டது.அவனிற்கு பயம் வரவே செம்பில் தண்ணியை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான். தாத்தாவின் படத்திற்கு முன்னாள் ஓலைப்பெட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு வாட்டிய பூவரசம் இலைகளை வட்டமாய் அடுக்கிக்கொண்டிருந்தார் அம்மம்மா....

Edited by sathiri

  • Replies 54
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீர் முட்டுகிறது அண்ணா உங்கள் தாத்தாவின் நினைவுகளை வாசிக்கையில்...அழகான நினைவு மீட்டல்..இரத்தினன் சுயமரியாதைப் போராளியாகத் தெரிகிறான்... அவனின் சுயமரியாதைக்கு தலை வணங்குகிறேன்..இது உங்களின் இன்னொரு பரிமாணம்...பாராட்டுக்கள் அண்ணா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீர் முட்டுகிறது அண்ணா உங்கள் தாத்தாவின் நினைவுகளை வாசிக்கையில்...அழகான நினைவு மீட்டல்..இரத்தினன் சுயமரியாதைப் போராளியாகத் தெரிகிறான்... அவனின் சுயமரியாதைக்கு தலை வணங்குகிறேன்..இது உங்களின் இன்னொரு பரிமாணம்...பாராட்டுக்கள் அண்ணா...

பாட்டி பற்றி நான் எழுதும் பொழுதே உங்கள் பதிவுமொன்று பார்த்தேன் அதே நேரம் கிட்டத்தட்ட நாகேசும் இதே போன்றதொரு பதிவை இட்டிருந்தார் ரெலிப்பதி வேலை செய்யிதோ??

படத்தில் நிற்பது நான் அம்மம்மா ஒன்றுவிட்ட தங்கை

சொந்த சோகக் கதை, எழுத்தில் நன்றாக இருக்கிறது சாத்திரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாத்திரி!உங்கள் சிறிய சுயசரிதையின் மூலம்.....என்னை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் அண்மைக்காலப் பதிவுகளில் மனம் லயித்து வாசித்த கதையிது. அம்மம்மா என்ற சொந்தம் எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய தாயார் தந்தையை காதலித்து மணந்தார் அதனால் மனமுடைந்த எனது அம்மம்மா என்னுடைய அம்மாவை தன் பிணத்தில்கூட முழிக்கக்கூடாது என்று எழுதிவைத்துவிட்டு நித்திரைக்குளிசைகளைப் போட்டு மாண்டுவிட்டாராம். அம்மா சொல்ல அவரைப்பற்றி அறிந்ததுண்டு. இதுவரைக்கும் அம்மம்மா பாசம் என்றால் இன்னது என்று தெரியாமலே போய்விட்டது. இப்படியான அம்மம்மாக் கதைகளை வாசிக்கும்போது என்னுடைய அம்மம்மாவும் சின்ன வயதில் என்னை அரவணைக்க இருந்திருக்கலாம் என்று தோன்றும். இதை எழுதும்போது என்னை அறியாமலே துக்கம் தொண்டையை அடைக்கிறது. நன்றி சாத்திரி உங்கள் அம்மம்மாக்கதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள்,

கண்முன்ன ஊர் நினைவுகளை கொண்டு வந்து, பழைய நினைவுகளை மீண்டுவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவை நினைவூட்டியமைக்கு நன்றி, சாத்திரியார்.எனது அம்மம்மாவின் மரணத்துக்கு போக முடியாமல் போனது மிக வருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.

இது தான் சாத்திரியாரின் எழுத்தின் முத்திரை!

'ஒரு மடமாதும் ஒருவனுமாகி, இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி......

எதிர்பார்த்தேன். விட்டு விட்டீர்கள்!

நல்ல கதைக்கு நன்றிகள், சாத்திரியார்!

உங்கள் சேவை நாட்டிற்கு தேவை .தொடருங்கள் ,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த சோகக் கதை, எழுத்தில் நன்றாக இருக்கிறது சாத்திரி.

உலகின் ஏதோ ஒரு மூலையில் எந்த உறவுகளுமற்ற இயந்திர வாழ்க்கையில் ஏதாவதொரு நல்லநாள் பெருநாளில் இவர்களது ஞாபகங்கள் மனதின் ஓரத்தில் கீறிப்போகும். வரப்போகும் சித்திரை புத்தாண்டில் தாத்தாவினதும் அம்மம்மாவினதும் கைவியளக்காசு கட்டாயம் நினைவில் வரும் :(

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சாத்திரி

பழைய நினைவுகளைக்கிளறியதால் கண்கள் பனித்துவிட்டன.

எனக்கும் என் அம்மாவின் தகப்பனாரைத்தவிர வேறு எவரையும் கண்டதில்லை. அவரும் இறக்கும்போது எனக்கு 7 வயசு.

ஆனால் 5 பெட்டைகளுக்கு பின் பிறந்ததால் நான் என்றால் அவருக்கு உயிர் என்றும் பவுண் பவுணாக வாங்கி (அறுணாக்கொடிவரை) எனக்குப்போட்டு அழகு பார்ப்பார் என்றும் சொல்வார்கள்.. அவர் சாகும்போது அவருக்கு வயது சரியாக 100.

அவரது செத்தவீட்டுக்கு வந்த மச்சாள்மாருடன் விளையாடிக்கொண்டிருந்தது மட்டுமே ஞாபகம் உள்ளது. :lol::D

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி பற்றி நான் எழுதும் பொழுதே உங்கள் பதிவுமொன்று பார்த்தேன் அதே நேரம் கிட்டத்தட்ட நாகேசும் இதே போன்றதொரு பதிவை இட்டிருந்தார் ரெலிப்பதி வேலை செய்யிதோ??

அதே...அதைத்தான் நானும் நினைத்தேன்...என்ன அதிசயம்... :)

Edited by சுபேஸ்

நன்றி சாத்திரி, மீண்டும் ஒருமுறை என் அம்மம்மாவை உயிர்பித்து தந்தமைக்கு. அப்படியே நேரில் வந்து மடியில் இருத்தி தலையை கோதிவிட்டது போல இருந்திச்சு உங்கள் கதையை படித்து முடிக்கும் போது.

நன்றி சாத்திரி. தொடர்ந்து எழுதுங்கள். எங்கள் எழுத்துக்கு ஒரு வசீகரம் இருக்கிறது.

.

கதை ஏக்க உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

என் அம்மம்மா ஒரு இரும்பு மனுசி. பணத்திமிர். யாரையும் மதிக்க மாட்டா. தாத்தாவும் அவவுக்குப் பயம்."உங்கட அம்மா ஒரு அரக்கி" என்று என் அம்மாவிடம் சொல்லுவேன். அதற்கு "மருமக்களுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் கொடுத்து அண்டாது" என்று பதிலுக்குச் சொல்லுவா.

நான் தான் மூத்த பேரப்பிள்ளை. ஆனாலும் எனக்கும் அவவுக்கும் சரிவராது.

எனக்கு பேரன் பேத்தி பாசத்தை தந்தவர்கள் நல்லூரில் எங்கள் அயல் வீடுகளில் இருந்த புன்னாலைக்கட்டுவன், பருத்தித்துறை, நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த, நான் வாழ்க்கையில் என்றும் மறக்காமல் நேசிக்கும் உயிர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா.. அருமையான பதிவு.. :(

எனது அம்மம்மாவுக்கும் ஒரு கதை இருக்கு. இவர்களின் வாழ்வியலே தனி. :unsure:

மிக நல்ல பதிவு சாத்!!! திரும்ப ஊருக்கு ஒருமுறை எல்லோரையும் அழைத்துச் சென்று விட்டீர்கள். எனக்கு முந்தி பறைமேளச் சத்ததிற்கு அலேர்ஜி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சின்னனில கொஞ்ச காலம் அம்மம்மாவோட தான் இருந்தோம் பிறகு அப்பாவோட வேலை மாற்றம் காரணமாக வேற ஊருக்குப் போனாலும் ஒவ்வொரு விடுமுறைக்கும் யாழ்ப்பாணத்திற்கு முக்கியமாக அம்மம்மாவை பார்க்கப் போறது ...இடையில் யுத்தம் வந்து பாதை மூடி கொஞ்சக் காலம் போக முடியாமல் போயிட்டு கடையில் அவ நோய் வாய்ப்பட்டு கோமாவாக்கி விட்டது எவ்வளவோ கஸ்டப்பட்டு தான் யாழ் சென்றோம் அந்தப் பயணமும்,அம்மம்மாவின் இறப்பும் மறக்க முடியாதவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி!உங்கள் சிறிய சுயசரிதையின் மூலம்.....என்னை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.

பிளேன் ரிக்கற் காசு பாதியை என்ரை எக்கவுண்டில் போட்டு விடுமோய். :lol: கருத்திற்கு நன்றிகள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் அண்மைக்காலப் பதிவுகளில் மனம் லயித்து வாசித்த கதையிது. அம்மம்மா என்ற சொந்தம் எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய தாயார் தந்தையை காதலித்து மணந்தார் அதனால் மனமுடைந்த எனது அம்மம்மா என்னுடைய அம்மாவை தன் பிணத்தில்கூட முழிக்கக்கூடாது என்று எழுதிவைத்துவிட்டு நித்திரைக்குளிசைகளைப் போட்டு மாண்டுவிட்டாராம். அம்மா சொல்ல அவரைப்பற்றி அறிந்ததுண்டு. இதுவரைக்கும் அம்மம்மா பாசம் என்றால் இன்னது என்று தெரியாமலே போய்விட்டது. இப்படியான அம்மம்மாக் கதைகளை வாசிக்கும்போது என்னுடைய அம்மம்மாவும் சின்ன வயதில் என்னை அரவணைக்க இருந்திருக்கலாம் என்று தோன்றும். இதை எழுதும்போது என்னை அறியாமலே துக்கம் தொண்டையை அடைக்கிறது. நன்றி சாத்திரி உங்கள் அம்மம்மாக்கதைக்கு

சகாரா கிட்டத்தட்ட உங்களது குடும்பக் கதை போலத்தான் என்னுடையதும். அம்மா அப்பா கதல் திருமணம் அதனால் அம்மம்மா கடைசிவரை அப்பாவுடன் கதைக்கவேயில்லை. ஆனாலும் என்னுடன் பசத்திற்கு குறைவில்லை. வீராப்பு வைராக்கியம் என்பவற்றால் நாம் பெற்றதைவிட இழந்தவைகளே அதிகம். அது எமது சமூகத்தில் இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் போகின்றது. புலம்பெயர் தேசத்தில் எமது சமூகமும் அதனை காவித்திரிவது வேதனையான விடையம். ஆனால் அடுத்தடுத்த சந்ததிகளில் மாற்றம் நிச்சயம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள்,

கண்முன்ன ஊர் நினைவுகளை கொண்டு வந்து, பழைய நினைவுகளை மீண்டுவிட்டீர்கள்

நன்றிகள் உடையார் இப்படி எதையாவது மீட்டுவதுதானே எனக்கு வேலை :lol: மீட்டல்கள் தொடரும் <_<

அம்மா அப்பா கதல் திருமணம் அதனால் அம்மம்மா கடைசிவரை அப்பாவுடன் கதைக்கவேயில்லை.

அட அந்தக்காலத்திலேயே மானிப்பாய் சனம் அட்டகாசம் தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட அந்தக்காலத்திலேயே மானிப்பாய் சனம் அட்டகாசம் தான்!

அலைதான் அந்த நேரம் மானிப்பாய் விதானையா இருந்தவா :lol: :lol:

சாத்ஸ்! நானும் சின்னனில இருந்தே அம்மம்மா வீட்டிலதான் வளர்ந்தனான்!

அம்மம்மா அப்ப மந்திகை ஆஸ்பத்திரியில "நர்ஸ்" ஆக இருந்தவ! அவவின்ர வேலையின்ர குணமோ என்னவோ.... அவ எப்பவுமே புறுபுறுத்தபடி சுடுதண்ணியாவே இருப்பா! :D அவவுக்கு ஒரு தங்கச்சி இருந்தா. அவவின்ர பெயர் பூமாதேவி. "பூமம்மா" என்றுதான் எல்லாரும் கூப்பிடுறது. நானும் அப்பிடித்தான் கூப்பிடுறனான். என்னுடைய ஆறு வயசு மட்டும்தான் அவ உயிரோட வாழ்ந்தாலும்.... :( இன்றைக்கும் எனை இடுப்பில் தாங்கித்திரியும் பூமாதேவி அவதான். அவவை என் வாழ்க்கையில மறக்க ஏலாது. கலியாணம் கட்டாமல் தன் சகோதரியின் பிள்ளைகளுக்காக வாழ்ந்த அன்னை தெரேஷா போலத்தான் அவ ..... !

அவவுக்குப் பிறகு...என்னுடைய அம்மம்மா மட்டுந்தான் எனக்கு அம்மம்மா என்று சொல்லிக்கொள்ள இருந்தா!. பென்ஷன் எடுத்தாப்பிறகும்.... அவ புறுபுறுக்கிறத நிப்பாட்டவில்லை என்றாலும்... எனக்கு ஒரு அம்மம்மாவாக எல்லாமாக இருந்தா. இப்பவும் இருக்கிறா. வயசு 90+. பிள்ளையள் எல்லாரும் வெளிநாட்டில. அம்மப்பாவின்ர பென்ஷனும் சேர்ந்து டபிள் பென்ஷன். மனிஷி இன்றைக்கும் திடமா இருக்கு.

இப்பவும் புறுபுறுத்தபடி அதே தினாவெட்டோடு... றாங்கியோடு... வாழுறா என் அம்மம்மா! அவ நூறுவருசத்துக்கு மேல் வாழவேணும் என்பதுதான் இந்த பேரப்பிள்ளையின்.... உறவும் உணர்வும் வேண்டுதலும்!!!

என் சின்ன அம்மம்மா பூமாதேவியை ஏதோ ஒரு வகையில் ஞாபகப்படுத்தியது தங்களின் கதை! மிக்க நன்றி சாத்ஸ்.

அம்மம்மா சம்மந்தப்பட்ட விடயங்களைவிட... நிறைய முக்கியமான சமுதாய விடயங்களும் உங்கள் கதைகளுக்குள் பொதிந்து கிடக்கின்றது.

பாராட்டுக்கள்! தொடர்க...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவை நினைவூட்டியமைக்கு நன்றி, சாத்திரியார்.எனது அம்மம்மாவின் மரணத்துக்கு போக முடியாமல் போனது மிக வருத்தம்.

உங்களை போலவே எனக்கும் எனது அம்மம்மா இறந்து ஒரு வருடங்களிற்கு பிறகே எனக்கு தகவல் கிடைத்திருந்தது நான் அப்பொழுது தாய்லாந்தில் இருந்த காலம். மனதிற்குள் அழ மட்டுமே முடிந்திருந்தது :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.