Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிற்கு போய் வந்து ஒரு பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரக்தி,ஏமாற்றம்,அழுகை அத்தனையும் தந்த பதிவு. நான்கு வருடங்களுக்குள் நாம் கண்ட கனவுகள் எதுவும் இருந்ததற்கான அடையாளாமே இல்லாமல் போய்விட்டது என்பதை உங்களின் மூலம் உணரும் போது வேதனையைத் தவிர எதுவுமே மிஞ்சவில்லை. ஞாபகவீதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருந்திருக்கும் என்னைப் பொறுத்தவரைக்கும் அந்தக் கற்பனையிலேயே வாழ்ந்து விடுவோமா என்ற உணர்வைத் தான் இந்தப்பதிவு தந்துவிட்டுச் சென்றுள்ளது. கள்ளிச்செடியில் எல்லாம் ஒரு தலையாய்க் காதலித்தவளின் பேரை எழுதி ஏதோ கலியாண்ப்பதிவு பண்ணியதாக என் நினைவைச் சுமந்தவையும், வேப்பமரத்திலும், முருக்க மரத்திலும் இதயம் வரைந்து அம்புவிட்டதும், நான் ஏதோ கேட்டு குடுக்கவில்லை என்று புளிய மரத்துக்குக் கீழ் இருந்த வைரவருக்கு சூலம் நெளியும் வரைக்கும் கல்லாலை எறிஞ்சதும், பிறகு சாமி கண்ணைக் குத்திப்போடும் என்று  கிணத்திலை போய் தண்ணி அள்ளிக்கொண்டு வந்து குளிப்பாட்டி சூலத்தை நெளிவு எடுத்து 3 தேசிக்காய் குத்தி திருநீறு, பொட்டு வைத்து விட்டதும். வெளியில் போகும் போதெல்லாம் அந்தக் கடவுளை நினைத்து நானே வாய்க்கு வந்ததை மனதுக்குள் பாடிக்கொண்டு வெளியில் போனபோதெல்லாம் ஒரு முறை அல்ல நூறு தடவை அடையாள அட்டை இல்லாமல் கூட ஆமி பிடிச்சும், மோட்டார் சைக்கிள் குரூப் காரன் துவக்கை லோட் பண்ணி காதுக்குள் வைத்து விட்டதும், ..

கடவுளைக் கூட கடவுளாக நினைத்ததே இல்லை. ஊரடங்குச் சட்டம் இருந்தாலும் நான் வகுப்பு முடித்து விட்டு வந்து எத்தனை  மணி நேரம் ஆனாலும் நான் அருகில் இருக்கும் கோவிலுகு செவ்வாய்,வெள்ளி  போய் அங்கையே முகம்,கால் கழுவி கும்பிடாமல் வீட்டுக்குப் போன நாட்களே இருக்காது. அது போலத்தான் பாடசாலை வாழ்க்கையும் என் கால் படாத ஒரு அடி கூட இருக்க முடியாது பள்ளி வழாகத்தில். அங்கு விட்டு வைத்ததில்லை படுத்து,உண்டு,  உறங்கி எதையும் சடப்பொருட்களாகப் பார்க்க முடியாத அளவுக்கு உயிரோடு கலந்தவை. 9ம் வகுப்பில் படிப்பித்த ஆவர்த்தன அட்டவணை எந்த வகுப்புக் கட்டிடத்தில், எந்த ஆசிரியர் படிப்த்தார் என்பது இப்போதும் கண்மூடினால் வரும்.

 

சமூகத்துடனான தொடர்பும் கூட அப்படித் தான் 18,19 வயதிலேயே கோவில் காசைச் சுத்திய நிர்வாகத்திற்கெதிராக போஸ்டர் ஒட்டவும், சாதி குறைஞ்சவர்கள் கோயிலுக்கு பின்பக்கத்தால் வாறார்கள் என்று சுற்றிக் கட்டிய மதிலையும் உடைச்சு அப்பரட்டை வயராலை அடிவாங்கியதும். அதே கோவில் நிர்வாகம் திருவிழா முடிந்தவுடன் ஆற்றும் உரையில் செய்தவங்களைத் தெரியும் எல்லாம் என்ரை மாமன்,மச்சான்ரை பொடியள் தான் என்றதும் என்று ஊர் கற்றுத் தந்ததும் அதிகம்.

மாவீரர்நாள், கரும்புலிகள் நாளுக்கெல்லாம் பாண்ட் அடிச்சு முடிச்சிட்டு துயிலும் இல்லத்தில் இருக்கும் போது இருக்கும் உணர்வு

எந்தக் கோவிலிலும் அப்படி ஒரு ஆத்மதிருப்தி கிடைத்ததில்லை.

 

மண்மணக்கும் போதே தெரியும் மழை வரப்போகுது என்று, அநேகம் அவை பொய்த்ததில்லை அந்தளவுக்கு என்னுடன் பரீட்சயமானவை, பிலம்பெயர்ந்து வந்து வசதி வந்தது , எல்லாம் வந்து இந்த மண் ஏனோ என்னில் ஒட்டிக்கொள்ளவில்லை, மக்கள் அரவணைத்தாலும் கூட அந்த மண் அந்நியனாகவே பார்க்கிறது.

 

ஊருக்குப் போகும் கனவு இருந்தது அது உடைந்தே கனகாலம் காரணம் ஒன்று என் அப்பாவின் இழப்பு.

இன்னும் நம்ப முடியவில்லை, அவர் இல்லை என்று ஒரு கணம் கூட நினைத்தும் பார்த்ததில்லை. விசா கிடைக்காததால் அவருடைய இறுதிச்சடங்குக்கு கூட போகமுடியவில்லை. இப்ப நினைத்தால் போகாததும் நல்லதாகவே தோன்றுகிறது. இன்று வரை கனவில் கூட நான் அவரை இறந்ததுகிடப்பது போலக் கற்பனை செய்யவில்லை. அது என்னால் முடியாத ஒன்று. எப்போதும் ஓடியாடி வேலை செய்கிற என் அப்பா தான் என் நினைவில் ஆழமாக உள்ளார்.

 

அடுத்தது  அப்பாவின் இழப்பின் பின்னரான குடும்பத்தின்  சில பிரச்சனைகள். அண்ணாவும் நானும் எப்போதும் பேசிக்கொள்ளும் விடையம் தலைவர் இல்லாத போது ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிப்போன எம் இனத்தைப் போலவே அப்பாவின் இழப்பின் பின்னரும் உறவுகள் என்பதே சுயநலமாகிப் போய் விட்டது தான். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்றது தான் ஒட்டுமொத்த இனத்தின் நிலமையும்.

 

அதுக்கடுத்தது சீராளன். ஒரு புலனாய்வுப் போராளி. அவனையும் என் மனம் நினைக்காத நாளில்லை யாரோ ஒருவனாய் வந்து எம்வீட்டில்  ஒருவனாய் சிலகாலம் இருந்தவன். அவனை தேடுவது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதற்காய், தன்னுடைய சயனைட் குப்பியில் பாதியை உடைத்து பிளாஸ்டரில் சுத்தி தந்தவன். ஒருவேளை நான் ஒழித்து வைத்த அந்த ஆலமரப்பொந்தில் இருந்தால் நம் நட்புக் சாட்சியாய் இருக்கும். ஆனால் எங்களை மாதிரியே அந்த மரமும் வெட்டப்பட்டதோ யாருக்குத் தெரியும்.

 

எழுத ஆயிரம் இருக்கு. 22 வருடங்களாக ஊரில் இருந்த வாழ்க்கை தான் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இயக்கும் ஊக்கியாக இருக்கும் ஆனால் உங்கள் பதிவு ஏனோ ஒட்டுமொத்த எண்ணப்பாடுகளையும் ஆட்டங்காணச் செய்துள்ளது.

கள்ளிச்செடியில்  கிறுக்கி விட்ட காதல் நினைவுகள் போல கருகிப்போய்விட்டது. :(

  • Replies 88
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
புலிகளை அழித்துவிட்டால் தமிழனை அழிப்பது இலகு என்பது எதிரிக்கு நன்கே தெரியும்.
அதனால்தான் இத்தனயும் அரங்கேற்றினான்.
இன்னொரு பதிவிலும் எழுதினேன்.
"அங்கே தமிழர்கள் உணவு உண்டு ஆடை உடுத்தி திரிகிறார்கள்" 
இதற்கு சிங்கபூர்  என்று சிலேடை பேசுகிறது ஒரு கூட்டம். அவர்களுடைய அறிவு அந்த மட்டத்திலேயே இருக்கிறது.
 
சமூக முன்னேற்றம் என்பதை ..... நினைத்தாலே வெறுமைதான் மிஞ்சுகிறது.
 
உங்களின் எழுத்துக்களின் ஊடாக உங்களின் சமூகம் சார்ந்த சிந்தனைகளை தெரிந்துகொள்கிறேன்.
இந்த களத்தில் உங்களை தெரிந்து கொண்டதில் ஒரு மகிழ்ச்சி!

பல விடயங்களை அவதானித்து, தொகுத்து  அனுபவங்களை எழுதி உள்ளீர்கள்.

புலம்பெயர்ந்த பின் எமது ஊர் பற்றிய எங்கள் சிந்தனைகள் நாம் புலம்பெயர முன் இருந்த சம்பவங்களுடன் உறை நிலையில் நின்று விடுவதுடன் அந்த நினைவுகள் எப்படி எமது உணர்வுகளுடன் கலந்து, பெருப்பித்து உணர்வது பற்றி சிறப்பாக சொல்லி உள்ளீர்கள். இதே விடையத்தை எனது சகோதரர்களுடன் முன்னர் கதைத்தை உங்கள் எழுத்து மீள நினைவு படுத்தியது.  

 

விரிவாக பதில் எழுத விருப்பம். ஆனால் எல்லாவற்றையும் தொகுத்து எழுத பொறுமையும் மன அமைதியும் இப்போ இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன் அண்ணா. கனமான ஒரு பதிவு. முதலில் பின்னூட்டங்களை வாசித்து விட்டுத்தான் உங்கள் அனுபவப் பகிர்வை வாசித்தேன். கடைசியாக நீங்கள் எழுதிய திரை விமர்சனத்திற்குப் பிறகு உங்களைக் காணவில்லை என யோசித்தாலும், ஏதாவது ஒரு புத்தகத்தில் தொலைந்த்திருபீர்கள் என நினைத்தேன். 2006 இல்தான் புலம்பெயர்ந்து இருந்தாலும் 09,10,11 வருடங்களில் இலங்கைக்குப் போய் வந்ததால், மாற்றங்கள் அவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. ஊரிலே "வெளிநாட்டுக் காரர்" உடன் திரிவது, இடங்களுக்குப் போவதை பல காரணங்களுக்காக விரும்புகிறார்கள். அந்த அடையாளத்தை எதோ கௌரவமாக அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஊருக்குப் போகும் பொது  இலங்கை தேசிய அடையாள அட்டை இருப்பதால் அதையே பாவிப்பது. அவுஸ் கடவுசீட்டை எதற்குமே பாவித்தது கிடையாது. அத்துடன் இலங்கை போகும் போது வாகனம் ஓட்டும் போதும் இலங்கை சாரதி அனுமதிப் பத்திரம் தான் பயன்படுத்துவது. எனது பயணங்களில் கிடைத்த சில அவதானிப்புக்களும் உங்களது பார்வையும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதால் ஒரு விரிவான பதிலை சீக்கிரமே இடுவேன்.

இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும், இலங்கை என்பது இனிமேல் மெக்சிக்கோ இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து போன்று ஒரு சுற்றுலா நாடு மட்டுமே என்ற எண்ணத்தோடும் வெளிக்கிட்டேன். அதுவும் சுற்றுலா செல்வதற்கு இலங்கையினைக் காட்டிலும் ஏகப்பட்ட தெரிவுகள் உள்ள நிலையில் இனிமேல் நான் இலங்கை போகப் போவதில்லை என்றே நினைக்கிறேன். 

 
 தமிழ்க் கிராமங்களும் கிராமங்களின் தன்மை குறைந்து பேராசையிலும் பணம் பறிப்பிலும் பொருளாதாரத்திலுமே குறியாக இருக்கிறார்கள். திருப்த்தியினை அதிகம் காணமுடியவில்லை. முன்னர் மிகச் சிறு கிராமங்களாக என்னுள் பதிவாகியிருந்த குக்குக்கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போன்று தான் தெரிகின்றன. தங்களிற்குள் மக்கள் போட்டி போட்டு வீடு கட்டுகிறார்கள். பொறாமைப் படுகிறார்கள், கோவில் வைத்து அடிபடுகிறார்கள். வெளிநாட்டுக் காரரைக் கண்டால் குறியாகப் பணம் கேட்கிறார்கள். 
 
என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் கங்கைக்குச் சென்று அப்பாவின் அஸ்த்திகரைத்து மீண்ட ஒருவரின் பயணம் போன்றே அமைந்தது. ஒரு நிரந்தர வெற்றிடத்தை எனக்குள் உணர்கிறேன்.

 

 

இந்தக் கட்டுரையை உணர்வுப் பூரணமான நிலையில், அவர் எதிபார்ப்புகள் பொய்த்துவிட்ட நிலையில், விரக்தியில் இருந்து எழுதியுள்ளார் இன்னுமொருவன். 
 
பிறந்த பூமி சுற்றுலாச் செல்லக் கூட தகுதியில்லா இடம் என்று கூற்று  எனக்கும் ஈழத்தில் உள்ளவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கைகழுவுவதாக இருக்கிறது. போர் தந்த ஓலம் அதனுடைய வடுக்கள் மாறாத நிலையில் அங்கு வாழும் மக்களிடம் ஓர் உயர்தரமான நடத்தையை எதிபார்ப்பது ஒப்பவில்லை. இவ்வளவு சீக்கிரம் பிறந்த மண்ணையும், மக்களையும் வெறுப்பது நியாயமா??    
  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகளில்.. மனித எண்ண ஓட்டங்கள்.. விருப்புகள்.. வெறுப்புகள்...தேவைகள்.. காணும் கோலங்களின் பரிமானத்தை தீர்மானிக்கின்றன.

 

2012_11_14_06.jpg

 

அண்மையில்.. யாழ் நகர வீதிகளில் ஒளிரும்.. சோடியம் விளக்குகளின் வரிசையை ஒரு படத்தில் பார்த்துவிட்டு.. ஒரு கள உறவு சொல்லி இருந்தார்.. புலிகள் அற்ற 4 வருடத்தில்.. யாழ்ப்பாணம் அரைச் சிங்கப்பூராகி விட்டது என்று. (இந்த விளக்குக்ளை எரிய விடுவதன் பின்னால் கூட.. எம்மை அடிமைப்படுத்தியோர் உள்ளனர்.)

 

இன்னொருவர் சொல்லி இருந்தார் நெடுந்தீவு சிங்கப்பூராகிட்டுது என்று. ஆனால் அங்கோ... மக்கள் வந்தோருக்கு வழங்க இருக்கை கூட இன்றி உள்ளார்கள்.

 

இந்தக் குட்டி கதையும்.. தேசத்தின் கோலங்களோடு நகர்ந்திருக்கிறது... ஒரு ஊர் அடிமைப்பட்டுக் கிடந்தால் இப்படித்தான் இருக்கும்.. அதுக்குப் போரை மட்டும் சாட்டுச் சொல்லக் கூடாது...!

 

estate+lines.jpg

 

போரின் நேரடி வடுவைச் சுமக்காத மலையகம் இன்றும் அந்தத் தினக்கூலியோடு தான்.. தகரக் கூரைகளோடு நிரையான லயன்களில் தான் பெரிதும் இயங்கிக் கொண்டுள்ளது. காரணம்.. போர் அல்ல.. அந்த மக்களைச் சூழ்ந்துள்ள அடிமைத்தனம். அதனை திணித்துள்ள பேரினம்.. பேரினக் கைக்கூலிகள்..!

 

1116_Awards_3.jpg

 

இக்கதை 2005 எழுதப்பட்டது. மேற்படி அனுபவம்.. 2013 இல் பதியப்பட்டுள்ளது. இந்த 8 வருட காலத்தில் ஊர் போரின் பல பரிமானங்களைக்களைக் கண்டுவிட்டது. ஆனால்.. அடிமைத்தனம் என்பது மட்டுமே அன்றும் இன்றும் எஞ்சியுள்ளது. அதுதான் கோலங்களின் பெரும் பகுதியை தீர்மானிக்கிறது என்பது வெளிப்படை உண்மையும் ஆகிறது.

 

 

Sunday, December 04, 2005

 

கோலங்கள்! [தேசப்பிரியன்] tm_toolbar_logo.gif

 

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

 

http://vizisirukathai.blogspot.co.uk/2005/12/blog-post.html

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான பதிவு. தொழில் நுட்ப்பம் டாக்டர்கள் மற்றும் வாழ்வியல் தொடர்பாக இது ஒருவரது  அனுபவமும் அவிப்பிராயமும் அரசியல் பார்வையும்தான். பொதுமைப் படுத்த முடியாது. அவை இன்னும் பலரது அனுபவங்களையும் பரந்துபட்ட பல்வேறு மதிப்பீடுகள் ஆய்வுகள் தொடர் விவாதம் என்பவற்றைக் கோரிநிற்க்கும் பிரச்சினைகளாகும்.

இப்படி பல நூறு நேர்மையான பதிவுகள் அவசியம்.அவற்ரை தொகுத்து நோக்குவது பொது நிலமையை புரிந்துகொள்ள உதவும். .  

 

உலகைன் பல்வேறு நிறுவனங்கள் களத்தில் நேரடியாக செயல்பட்டு நிலவரத்தை கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கின்றன. நமது கள நிலை அறிவும் அறியாமையும் அவர்களால் இலகுவாக இனம் கானப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

 

எனவே நம் நமது பல்வேறுபட்ட அரசியல் நிலைபாட்டிலிருந்து ஊகிப்பதை நிறுத்திவிட்டு கள யதார்ததில் இருந்தும் களத்தில் வாழும் மக்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும்.  மக்கள் சமூக பொருளாதார சாத்தியப்படுகளுக்கூடாகவே நகர்கிறார்கள். இவற்றை கற்றுக்கொண்டு சாத்தியமான கிட்டிய மேம்பாடான தெரிவு பற்றி மட்டுமே நாம் பேசமுடியும். மக்களிடம் கற்றுக்கொண்டு அரசியல் கலாச்சார பொருளாதார தொழில்நுட்ப்ப அடுத்த கட்டம்பற்றி சிந்திக்க நாமும் முன்வர வேண்டும்.

 

கள யதார்த்த தரவுகளில் இருந்து அரசியல் செய்யாமல் தம் தமது அரசியல் நலன்களின் அடிப்படையில் களநிலமைகளைத் திரிக்கும் சூழலால் நடுகல்லான மாவீரர் பலருக்கு அஞ்சலி எழுதும் வரலாற்றுக் கடமையைக்கூட  தாம் வாழும் நாளில் செய்யமுடியாத துர்பாக்கியசூழல் நம் கவிஞர்கள் கலைஞர்களைச் சுற்றி  உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலைக்கு போலியதார்தத்தில் இருந்து ஒருபோதும் பங்களிப்புச் செய்ய முடியாது. 

 

பதிவாளர் இன்னொருவனுக்கு நன்றிகள்

 

 

Edited by poet

இன்னுமொருவன்.... ஒரு யதார்த்தமான பதிவினைத் தந்தமைக்கு முதலில் என் நன்றியும் பாராட்டுக்களும்..!

 

புலம்பெயர்வு என்றொன்று ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்தாலும் கடந்த 3, 4 வருடங்களில் ஊரிலும் , நம் மக்களிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வழமைக்கு மாறாக வேறுபட்டவையாகவே காணப்படுகின்றன.

அதற்கு என்ன காரணம் என கண்டறிவதற்கு நிறைய விடயங்களைப்பற்றி ஆராயவேண்டியிருக்கும். 

 

2009 இன் பிற்பாடு ஏற்பட்டுவரும் பொருளாதார பெளதீக அரசியல் மாற்றங்கள் என்பது தமிழ்மக்களை  நடுநிலை என்ற நிலையிலிருந்து ஒருதலைப்பட்டசமாக நகர்த்திக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அவர்களுக்கும் வேறு வழி இல்லை.

"புலிகள் இனிமேல் இல்லை... அல்லது தேவையில்லை" என்ற ஒரு எண்ணம் ஆழமாக விதைக்கப்பட்டுவருகிறது. அதன் ஆரம்ப விளைவுகள்தான்  எம் கண்முன்னே தெரிகிறது. இது எமது மக்களை எங்கே கொண்டு செல்லும் என்பதையும் அவர்களையும் அவர்களின் வாழ்வியலையும் எப்படி மாற்றும் என்பதையும் இப்பொழுதே கொஞ்சம் எதிர்வுகூறக்கூடியதாகவுள்ளது. பல குரல்கள் எங்கெங்கோ இருந்து எச்சரித்தாலும் அதைக் கேட்பதற்கு செவிகள் எதுவும் தயாராக இல்லை.

 

அதனை உங்களின் பதிவு யதார்த்தமாகப் பிரதிபலிக்கிறது. அத்தோடு,  எந்தெந்த விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ... அதில் மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால் மாறவே கூடாது என நினைத்த பலவிடயங்களில் அதீத மாற்றங்கள் தென்படுவதை உங்களின் பதிவின்மூலம் காணக்கூடியதாகவுள்ளது.

 

உங்களால் பழைய ஞாபகவீதியில் பயணிக்கமுடியாமல் போனமைக்கு அதுவே முக்கிய காரணமாக இருக்குமென நினைக்கின்றேன்.

நல்ல மாற்றங்கள் அவசியம்தான்... ஆனால் ஏமாற்றங்களை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் மட்டுமே நடந்தேறிக்கொண்டிருப்பது எம் மண்ணின் மக்களின் அடிப்படை இயல்பை முற்றிலுமாக மாற்றிவிடும்.

 

உங்களின் பதிவு தெளிவாக அதேநேரம் நடுநிலையாக பல விடயங்களை சொல்லியிருப்பது சிறப்பு.

உங்கள்  மனதின் எதிர்பார்ப்புகள் அங்கு போனபொழுதில் காணாமல்போனதன் வலி ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது.

என்னசெய்வது......  அதிசயங்கள் நிகழ்ந்தாவது பழையவை மீண்டும் வராதா??? என்ற ஏக்கந்தான் இறுதியில் மிஞ்சுகிறது...! :(

கொஞ்சங் கொஞ்சமாக மிச்சம்மீதியையும் இழந்துகொண்டிருக்கிறோம்! :(

 

 

 

  • தொடங்கியவர்
கருத்திட்ட அனைவரிற்கும் நன்றிகள். மகிழ்வைப் பதிவிட்டால் வாசிப்பவர்களிற்கும் மகிழ்வு கிடைக்கும். விரக்த்தியினையும் ஏமாற்றத்தையும் வேதனையையும் பதிவிட்டால் வாசகரிற்கும் அது தான் கிடைக்க முடியும். அந்த வகையில், இந்தப் பதிவினை வாசித்து எனது வெறுமையினைப் பகிர்ந்து, அதன் மூலம் அதன் தாக்கத்தை எனக்குள் சற்றுக் குறைத்த உங்கள் அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள். யாழிற்கு வெளியேயும் பகிர்ந்துகொண்ட சுபேஸ் மற்றும் நிழலிக்கு நன்றிகள்.
 
ஈழத்திருமகனும் ஆதித்தியஇளம்பிறையனும் முன்வைக்கும் ஆதங்கம் அல்லது கோபம் நியாயமானது தான். ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பது பொதுவாக எங்களால் ஒரு பிளாங்க்கற் கூற்றாகவே புலத்தில் புரியப்படுகிறது. அந்தக் கூற்று இங்கு அப்ஸ்ற்றாக்றானதாக இருக்கிறது. ஆனால் நேரில் யாழில் நிற்கையில், போரின் பாதிப்பு என்பது ஒரு ஸ்பெக்ற்றம் ஆகத்தான் இருக்கிறது. அதிஸ்ற்றவசமாக யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தவர்களில் மிகமிகப் பெரும்பான்மையானவர்கள் மிகமிகக்குறைந்த பாதிப்பிற்குள்ளானவர்களே. நெடுக்காலபோவான் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல, இங்கு விபரிக்கப்பட்டிருக்கும் விடயங்களில் போரின் பங்கு ஒரு பங்கு மட்டுமே. 
 
மேலும், எனது ஊர் நான் சுற்றுலா செல்லவே இலாயக்கற்றது என்று நான் எனது சுயமிதப்பில் மகாராணி அன்ருவனெற் பாணியில் கூறவில்லை என்பது பதிவில் தெளிவாக வெளிப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.
 
பதிவில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, ஏராளம் வெள்ளைக் காரர்களும் இதர மக்களும் அந்நாட்டில் சுற்றுலா செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ற்றொப்பிக்கல் தீவில் சுற்றுலா செய்து மகிழ்வது கஸ்ற்றமா என்ன. புலத்தில் இருந்து கூட அங்கு சென்று மாவின் கீழிருந்து கள்ளருந்தி, கூழ் குடித்து, ஆட்டிறைச்சி ருசித்து மிகச்சிறப்பாக மகிழலாம். இன்னும் சிறப்பு வேண்டுமெனின், புலத்தில் உள்ள பழைய ஊர் நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலாவைத் திட்டமி;ட்டு, அனைவரும் ஒரே காலத்தில் அங்கு சென்று, பழைய கதைகள் கதைத்து, தங்கள் வட்டத்திற்குள் வேண்டுமாயின் தமது ஞாபகங்கள் அப்படியே அங்கு இப்போதும் தெரிகின்றன அல்லது மெருகேறி மிளிர்கின்றன என்று தம்மைத்தாமே நம்பவைக்கவும் முடியும். ஆனால், அவ்வாறு மெருகூட்டிப் பதிவேற்றிய ஞாபகத்தை அடுத்த பயணத்தில் தனியே சென்று தேடின் கிடைப்பது நிச்சயம் கடினம். ஏனெனில் புலம் பெயர்ந்த எங்களின் ஞாபகங்கள் எங்ளிற்குத் தான் பொதுவானது. ஊரிற்குப் போய் கற்பனையில் செயற்கையாகத் தான் எங்கள் ஞாபகங்களை நாங்கள் காணவேண்டுமெனின்;, அதை எமது பக்-யாட்டிலே புலத்தில் செய்யலாமே?
 
நுவரெலியாவில் பணிபுரியும் தமிழ் கதைக்கும் குழந்தைத் தொழிலாழி பற்றியோ, யாழ்ப்பாணத்தில் சிறுவனை ஐயா என்று அழைத்தபடி நிலத்தில் இருக்கும் 'சாதி குறைந்த' முதியவரைப் பற்றியோ அலட்டிக்கொள்ளாதவரை, இறந்த முகங்களை ஞாபகப் படுத்திக்கொள்ளாதவரை, 30 ஆண்டுகளை நாங்களும் மறந்திருக்கும் வரை, பொதுமைக்கான கனவுகள் இல்லாதவரை, சின்னச்சின்னப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்குமு; கர்ப்பனை அற்றிருக்கும் எங்கள் சமூகம் எமக்கு உறுத்தாதவரை, ஊர்போதலை முற்றுமுழுதான சுற்றுலாவாக மட்டும் பார்;க்கும் வரை எந்த விரக்த்தியும் வரப்போவதில்லை.
 
நுணாவிலான், புலத்தில் பிறந்த உங்கள் தங்கையின் கூற்று வியப்;பளிக்கவில்லை. இங்கு பிறந்த தலைமுறை, எங்களைப் போல் அந்த ஞாபகங்களோடு இ;ங்கு வாழச் சபிக்கப்ட்ட சந்ததியினர் அல்லத் தானே. அவர்களிற்கு ஒப்பீடு ஞாபகவீதி தேடல் முதலிய உபாதைகள் இல்லைத் தானே. அந்தரத்தில் தொங்கிக் கதைத்து வரும் முகங்கள் அவர்களிடம் குறைவு தானே. கரிபியனில் அல்லது இந்தப் பதிவில் நான் குறிபி;ட்டுள்ள தங்கல்ல பிரதேச சிங்கள வீடு போன்று இலங்கை அவர்களிற்கு மகிழ்வேற்றியதில் வியப்பில்லை.
 
ஜீவா உங்களது ஊர் ஞாபகங்களைத் தத்ரூபமாகப் பதிந்துள்ளீர்கள். ஏறத்தாள புலத்தில் எங்கள் அனைவரிற்கும் அந்த ஞாபகங்களின் வீச்சு அவ்வாறு தான் பதிவாகி உள்ளது. துரதிஸ்ரவசமாக அங்கு தான் எமது ஞாபகவீதித் தொலைவு என்ற பிரச்சினையே தொடங்குகிறது. அதாவது, எவருக்குள் எல்லாம் ஆழமாக வேரூன்றி வீச்சோடு விருட்சமாய் அவை பதிவாகி இருக்கின்றனவோ அவர்களிற்குத் தான் ஏமாற்றமும் அதிகமாகிறது. இருப்பினும், இந்தப் பிரச்சினை என்னுடைய பிரச்சினையாக மட்டும் இருக்கவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். எவரிற்கேனும் அவை மீளக் கிடைப்பின் மட்டற்ற மகிழ்ச்சியே. மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களின் அப்பாவின் இழப்பு மிகவும் தத்ரூபமானது. அப்பா உயிருடன் இருப்பவர்களும் கூட ஊர் செல்கையில் இதே வலியினை வன்னியைக் கடக்கையில அடைந்தே தீருவர்.
 
தும்பளையான் உங்கள் அனுபவங்களையும் அவசியம் எழுதுங்கள். 
 
போயட் கூறியுள்ளதைப் போல இந்தப் பதிவு என் ஒருவனுடைய அனுபவப் பதிவு மட்டுமே. நான் சந்தித்த மக்கள் ஒரு பகுதியினர் மட்டுமே (ஆனால் அந்த சாம்பிள் ஓரளவிற்குப் பரந்த குறுக்குவெட்டு முகத்தைக் கொண்டிருந்தது). 
 
ஈசன் நீங்கள் குறிப்பி;ட்ட அந்தக் காவோலை உரசும் தனிமை அற்புதம். திட்டுத்திட்டாகச் சொட்டுச் சொட்டாக அங்கொன்று இங்கொன்று அத்தகைய உணர்வுகள் கிடைத்து மகிழ்வேற்றத்தான் செய்தன.
 
நான் ஊரிற்குப் போகும் போது, எனது மனதில் இருந்த முக்கிய தேடல் ஒன்று தான். அதாவது, எங்களைத் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்திவிட்டு கேட்க ஆட்கள் இல்லை என்ற தினாவெட்டில் அரசு இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், என்னென்ன புதிய வகையில் எங்கள் சமூகம் உயரமுடியும் என்பது தான். அதாவது நாங்கள் உயர்வதற்கு முயல்கிறோம் என்பதே மற்றவர்களிற்குத் தெரியாது எவ்வாறு நாங்கள் உயர்வது என்பதே தேடலாக இருந்தது. துரதிஸ்ற்றவசமாக சமூகத்தை உயர்த்துவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் சமூகத்தைக் கட்டியமைப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதாய் எனக்குப் பட்டது. 
 
30 வருடங்கள் எத்தனை உயர்வுகளைக் கைப்படுத்திய எங்கள் சனம், நடுவில கொஞ்சம் பக்கங்களைக் காணோம் என்பது போல், அந்த சகாப்த்தம் முற்றாக அழிந்து நிற்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அரசியலை விடுவோம், சின்னச்சின்ன நாளாந்த விடயங்களைக் கூட தீர்க்கத் திராணியற்று நிற்கிறார்கள். சிந்திக்கத்தெரியாது நிற்கிறார்கள். தலைமைத்துவ பண்புகள் எங்கே போயின? இ;ந்த முப்பது வருடங்களின் பின்னர், மீண்டும் பத்துவருட பழைய சோதனைப் பேப்பர் செய்து பழகி சோதனை எழுதும் கூட்டமாக எவ்வாறு நாங்கள் மாறினோம்? எத்தனை பெரிய பிரச்சினைகளை எல்லாம் நம் கற்பனைக்கெட்டா விதத்தில் 30 வருடங்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். எதுவுமே எம்மில் ஒட்டாது மிஞ்சாது போனது எப்படி? எதையுமே நாங்கள் கற்காது விட்டது எப்படி? எங்கள் கற்பனை என்னானது? நிறைந்து கிடக்கும் வியாபார சர்ந்தர்ப்பங்களைப் பயன்படுத்திச் சமுகமாக உயரமுடியாது தடுக்கும் தழைகள் மற்றும் பார்வைகள் எவ்வாறு இந்த 30 வருடத்தைக் கடந்தும் தப்பின?
 
அங்கு நான் ஏறத்தாள பத்து பேரிடம் (வௌ;வேறு மட்டத்தினர்) ஒரு கேள்வியினைக் கேட்டேன்:
 
இதே நாட்டில் இருந்து தான் இன்று உலகெல்லாம் பரவி எங்கட சனம் அந்தந்த நாடுகளின் தன்மைகளைக் கச்சிதமாப் பழகி அந்நாட்டு மக்களிற்குப் போட்டியாக வாழ்கிறார்கள். வியாபாரம் கல்வி என அத்தனை முனையிலும் புலத்தில் தமிழரின் ஆழுமைகளும் தலைமைத்துவமும் மிளிர்ந்துகொண்டிருக்கிறது. ஏன் ஊரில் மட்டும் மாறமாட்டோம் என்ற அடம்பிடிக்கிறீர்கள் என்று? எனக்கு வியப்பாக இருந்தது என்னவெனில் ஏறத்தாள அனைவரது பதிலும் ஒன்றாகவே இருந்தது. அதன் சாராம்சம், 'இஞ்சை நாங்கள் மாறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லைத்தானே. பழைய விடயங்கள் எங்களிற்குப் பரிட்சயமானவை தானே. ஏன் மாத்தோணும்?;' என்பதாக இருந்தது. அவர்கள் அடுப்பில் இருக்கும் பானைக்குள் நீந்தும் நண்டுகளா அல்லது நாம் தேவையற்றதைப் பற்றி அலட்டிக்கொள்கிறோமா என்று உண்மையில் எனக்கு முடிவெடுக்கமுடியவில்லை.
 
சிங்கப்பூர் என்பது வெறும் கல்லும் மண்ணும் சீமெந்தும் லைற்றும் தாருமாக மட்டுமே அங்கு பதிவாகி இருக்கிறது. சிங்கப்பூர் என்ற தேசத்தின் கட்டமைப்பு மற்றும் தற்காலம் தொடர்பில் எந்தக் கோட்பாடுகளோ கொள்கைகளோ எவரிற்கும் தேவையற்றன. றோட்டு லைற்றுப் போட்டு நல்லாத் தானே காப்பெற்றாக இருக்கு?
 
முன்னர் ஆபத்துக்களிற்குள் உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட சிலர் இன்னமும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இன்றைய நிலையில் சொற்பத்திலும் சொற்பமான தொகையினர். 
 
பொருளாதார முன்னேற்றம் குடும்பம் குடும்பமாக சாத்தியப்பட்டாலும், சொரி மலர்களாகத் தான் அவர்கள் இருப்பார்களே அன்றி, இப்போதைக்கு அவர்கள் சரமாவதற்கான சாத்தியம் தெரியவில்லை. இத்தருணத்தில் நாங்கள் இருகேள்விகளைக் கேட்பது அவசியம்.
 
1) அவர்கள் சொரி மலராக இருந்தால் என்ன? அவர்கள் கேட்டதைப் போல் ஏன் அவர்கள் மாறவேண்டும்? சரம் என்பது ஏன் அவசியம்? உணர்ச்சி நிலைக்கு அப்பால், நாங்கள் சரமாவது அவசியம் என்று எம்மால் காரணகாரியத்தோடு அறிவு பூர்வமாக அவர்களிற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறுவமுடியுமா?
 
2) முதலாவது கேள்வியில் நாம் வெற்றி கண்டால், அடுத்த பெருங்கேள்வி, சரத்திற்கான நாரினை நாங்கள் என்ன படிமுறைகளில் கண்டடையப் போகிறோம். அதுவும் 30 வருடங்கள் எங்கள் கண்முனனே இருந்த அசைக்கமுடியாத நாரே இடம்தெரியாது போயுள்ள நிலையில் எமது புதிய உத்தி என்ன என்பது.

எமது நாட்டின் இன்றைய நிலையை மிக தத்துரூவமாக எம் கண்முன் தங்கள் பயண கட்டுரைமூலம் காட்டிய தங்களுக்கு எனது நன்றிகள். நாட்டின் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் தெளிவாக எல்லோருகும் புரிய தக்க முறையில் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். முடிவுரையில் தாங்கள் கூறிய விடயம் பலரால் விளங்கி கொள்ளபட முடியாததாக இருந்தாலும் அதுவே உண்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

பயணக்கட்டுரைக்கு,,,,

ஆனால்   இது  போன்ற துவழும்  கருத்து  விதைத்தலுக்கு எனது ஆதரவு என்றும் இருந்ததில்லை

நமபிக்கை தரும்  எழுத்துக்களே  இன்று தேவை


 

Edited by விசுகு

 

நன்றி 

பயணக்கட்டுரைக்கு,,,,

ஆனால்   இது  போன்ற துவழும்  கருத்து  விதைத்தலுக்கு எனது ஆதரவு என்றும் இருந்ததில்லை

நமபிக்கை தரும்  எழுத்துக்களே  இன்று தேவை

 

 

நம்பிக்கை என்பது கற்பனையை வளர்ப்பதல்ல. யதார்த்தத்தை உணர்ந்து அதன் மேல் கட்டி எழுப்புவதே நம்பிக்கை ஆகும்.

 

ஊருக்கு போனேன் 
அந்த கவலையை எப்படி எழுதுவேன்.
ஏதோ ஒன்றை தொலைத்த உணர்வை அங்கு உணர்ந்தேன் 
அது எது.
30 வருடங்கள் எத்தனை உயர்வுகளைக் கைப்படுத்திய எங்கள் சனம், நடுவில கொஞ்சம் பக்கங்களைக் காணோம் என்பது போல், அந்த சகாப்த்தம் முற்றாக அழிந்து நிற்பதை ஜீரணிக்கமுடியவில்லை. அரசியலை விடுவோம், சின்னச்சின்ன நாளாந்த விடயங்களைக் கூட தீர்க்கத் திராணியற்று நிற்கிறார்கள். சிந்திக்கத்தெரியாது நிற்கிறார்கள். தலைமைத்துவ பண்புகள் எங்கே போயின? இ;ந்த முப்பது வருடங்களின் பின்னர், மீண்டும் பத்துவருட பழைய சோதனைப் பேப்பர் செய்து பழகி சோதனை எழுதும் கூட்டமாக எவ்வாறு நாங்கள் மாறினோம்? எத்தனை பெரிய பிரச்சினைகளை எல்லாம் நம் கற்பனைக்கெட்டா விதத்தில் 30 வருடங்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். எதுவுமே எம்மில் ஒட்டாது மிஞ்சாது போனது எப்படி? எதையுமே நாங்கள் கற்காது விட்டது எப்படி? எங்கள் கற்பனை என்னானது? நிறைந்து கிடக்கும் வியாபார சர்ந்தர்ப்பங்களைப் பயன்படுத்திச் சமுகமாக உயரமுடியாது தடுக்கும் தழைகள் மற்றும் பார்வைகள் எவ்வாறு இந்த 30 வருடத்தைக் கடந்தும் தப்பின?

 

 

யதார்த்தமான முக்கியமான கேள்விகள்   ஆனால் இதற்கு முன்னர் ஒரு பதில் இருந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் அநேகமாக ப. நடேசனின் இறுதி பிபிசி செவ்வி என நினைக்கின்றேன். அதில் ஒரு கேள்வி " விடுதலைப்புலிகளுக்கு பின்னரான தமிழ்மக்களின் அரசியல் எப்படி இருக்கும்?"  அவரின் பதில் விடுதலைப்புலிகளுக்குப் பின்னராக தமிழ்மக்களுக்கான அரசியல் என்று எதுவும் இருக்காது என்பதாகவே இருக்கும். அந்த பதிலும் எனக்கு வியப்பை தரவில்லை உங்கள் கேள்விகளும் எனக்கு வியப்பைத் தரவில்லை.
 
இப்போது கேட்கும் கேள்விகளே முப்பது வருட எழுச்சியை உறைநிலையில் இருந்து வீழவைத்தது. எழுச்சியை சிதைத்த காரணிகளிடம் 30 வருட எழுச்சியும் காலமும் குறித்து கேள்வி கேட்பதாகவே எனக்கு தோன்றுகின்றது.
 
முன்னர் இருந்த சமூகம் இப்போது இருக்கின்றது. அல்லது அதைவிட மோசமாக இருக்கின்றது. இடையில் முப்பது வருடம் இந்தச் சமூகம் எங்கே போனது என்று மறுவளமாக நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணவில்லை என்று கேள்விகேட்கின்றது.
 
நிலையான சமூக முரண்பாடுகள் உள்ள சமூகத்தில் தலமைத்துவப்பண்புகள் சாத்தியம் இல்லை. சமூகமுரண்பாடுகள் நிலுவையில் இருக்க ஒரு தலமைத்துவம் என்பது தற்கொலை. இதுவும் கண்முன்னே கடந்துபோனது.
 
சமூகம் குறித்த அக்கறை ஏக்கம் கனவு என எமக்குள் இருக்கும் உணர்வுகளும் அது சார்ந்த கணிசமான அறிவுசார் அசைவுகளும் இந்த முரண்பாட்டுத் தளத்தை தகர்த்தெறியவல்லதல்ல. இன்றைய எமது புலப்பெயர்வும் இரண்டாந்தர பிரஜைகளான வாழ்வும் இவ் முரண்பாட்டுத்தளத்தின் ஒரு கூறுதான்.
 
மாற்றம் என்பதும் இந்த இனம் தனது சுயத்தை முற்றாக இழப்பதும் ஒரு நேர்கோட்டில் இருக்கின்றது.
 
 
 
 
 
 
 

 

 

 
 
நிலையான சமூக முரண்பாடுகள் உள்ள சமூகத்தில் தலமைத்துவப்பண்புகள் சாத்தியம் இல்லை. சமூகமுரண்பாடுகள் நிலுவையில் இருக்க ஒரு தலமைத்துவம் என்பது தற்கொலை. இதுவும் கண்முன்னே கடந்துபோனது.
 

 

 

சுகன், "நிலையான சமூக முரண்பாடுகள் உள்ள ஒரு சமூகத்தில்" என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.  பேரினவாதம் ஒன்றுக்கு எதிரான போராட்டம் ஒன்றின் தேவை இருக்கும் போது, அதற்கு முதலே சமூக முரண்பாடுகளை களைந்து எறியும் இன்னொரு போராட்டம் அல்லது செயல்முறை எப்படி சாத்தியமாகும்? அல்லது, உலகம் முழுதும் வெற்றியடைந்த போராட்டங்களை நடத்திய சமூகங்கள் எல்லாம் தமக்குள் இருக்கும் சமூக முரண்பாடுகளை முற்றாக இல்லாதொழித்து விட்டா முன்னகர்ந்தது?

 

அத்துடன் சமூக முரண்பாடுகளின் தீர்வு என்பது லைட்டை off பண்ணும் வேகத்தில் நடக்கும் என்கின்றீர்களா?

 

 

மாற்றம் என்பதும் இந்த இனம் தனது சுயத்தை முற்றாக இழப்பதும் ஒரு நேர்கோட்டில் இருக்கின்றது.

 

 

ஒரு இனம் என்ற அளவில் தமிழ் இனத்தின் சுயம் என்பது அதன் அழிவில் தான் இருக்கு என்ற உங்கள் வாதம் முற்றிலும் பிழையானது.

சுகன், "நிலையான சமூக முரண்பாடுகள் உள்ள ஒரு சமூகத்தில்" என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்.  பேரினவாதம் ஒன்றுக்கு எதிரான போராட்டம் ஒன்றின் தேவை இருக்கும் போது, அதற்கு முதலே சமூக முரண்பாடுகளை களைந்து எறியும் இன்னொரு போராட்டம் அல்லது செயல்முறை எப்படி சாத்தியமாகும்? அல்லது, உலகம் முழுதும் வெற்றியடைந்த போராட்டங்களை நடத்திய சமூகங்கள் எல்லாம் தமக்குள் இருக்கும் சமூக முரண்பாடுகளை முற்றாக இல்லாதொழித்து விட்டா முன்னகர்ந்தது?

 

அத்துடன் சமூக முரண்பாடுகளின் தீர்வு என்பது லைட்டை off பண்ணும் வேகத்தில் நடக்கும் என்கின்றீர்களா?

 

ஒரு இனம் என்ற அளவில் தமிழ் இனத்தின் சுயம் என்பது அதன் அழிவில் தான் இருக்கு என்ற உங்கள் வாதம் முற்றிலும் பிழையானது.

 

விடுதலைப்புலிகள் சமூமுரண்பாட்டை களையவில்லை என்பது அல்ல பொருள். பேரினவதத்திற்கு எதிரான போருடன் சமூகமுரண்பாட்ட களைவதற்கான பல்வேறுவிதமான முன்நகர்த்தல்களை அவர்கள் செய்தார்கள்.

 

ஒரு எழுச்சி முற்றாக தோற்கடிக்கப்பட்டது. ஏன் என்ற கேள்வி அற்ற அளவுக்கு சமூக முரண்பாடுகள் நிலையானது.

 

நாம் காலகாலத்துக்கும் அழிவுக்கு புறக்காரணிகளின் காரணத்தில்  தொங்கிக்கொண்டிருப்பது கூட  சமூக முரண்பாட்டை தக்கவைப்பதற்கான ஒரு மறைமுக உத்திதான்.

 

ஒரு எழுச்சியின் வெற்றி என்பது மக்களின் பெரும்பான்மை ஒன்றுபடுதலிலும் பங்களிப்பிலும் இருக்கின்றது. அந்தவகையில் ஒன்றுபடுதல் என்பதை சிதைத்த காரணிகள் என்ன என்பதை மீள மீள நான் எழுத விரும்பவில்லை. ஆனால் அந்தக் காரணிகள் அப்படியே இருக்கின்றது. எழுச்சிக்கு முன்னரும் இருந்தது எழுச்சியின் போது அதை சிதைத்தது இப்போதும் இருக்கின்றது. இது நிலையானது. இந்த நிலையான தளத்தை உடைத்தெறிவதும் இனம் தனது சுயத்தை இழப்பதும் ஒரு நேர்கோட்டில் இருக்கின்றது.

 

இங்கே இனம் என்பது சிதைவுபட்ட பல கூறுகளை ஒன்றாக கற்பனை செய்யும் ஒரு அறிவுசார் நிலை. யதார்த்தத்தில் இனம் என்பது தனிமனிதர்களாக குழுக்களாக பிரதேசங்களாக சாதிய மதங்களாக சிதறிக்கிடக்கின்றது.

 

எமது கனவுகள் இனம் என்றே ஆரம்பிக்கின்றது ஆனால் யதார்த்தத்தில் அப்படி இல்லை. வில்லங்கத்துக்கும் விதண்டாவதத்திற்கும் இல்லை நாம் எல்லோரும் ஒரு இனம் என்று வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம். ஆனால் இனவிடுதலை என்பது யதார்த்தத்துக்கு புறம்பாக சாத்தியம் இல்லை. இல்லை சாத்தியம் என்று மல்லுக்கட்டினால் அது தற்கொலை. முள்ளிவாய்க்கால் ஒரு தற்கொலை. பாதி அழிந்து மீதி சிதைந்து விட்டது. என்னும் இரண்டு தற்கொலை முயற்சி எடுத்தால் ஈழத்தில் தமிழினம் சுத்தமாக துடைக்கப்பட்டுவிடும்.

 

நானும் ஏனைய இனங்களின் போராட்டங்கள் வரலாறுகளை ஓரளவு அறிந்திருக்கின்றேன். எந்த சமூகத்தையும் எம்முடன் ஒப்பிட முடியவில்லை. எமக்குள் இருக்கும் முரண்பாடுகள் நிச்சயமாக வித்தியாசமானது ஆழமானது. அது தன்னை தானே மீள மீள அழிக்கும் படியாக கருக்கொண்டுள்ளது. பேரினவாத்தின் துப்பாக்கின முனையில் கூட பிணக்குவியல்களின் நடுவில்கூட இந்த முரண்பாடுகள் தன்னை சற்றேனும் விட்டுக்கொடுக்கவில்லை. புலம்பெயர் தேசங்களில் பல்லின சமூகங்களின் மத்தியில் கூட தன்னை அது தக்கவைத்தக்கொள்கின்றது. எமது பிரச்சனை எமக்கேயான தனித்துவமானது அதை என்னுமொரு சமூகத்துடன் ஒப்பிடுவது கூட ஒரு தக்கவைப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் பதிவு பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை. 30 வருடங்களிற்கு முன்னர் இருந்த அதே நிலைதான் இன்று இன்னமும் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இடையில் 30 வருடங்களில்  புலிகள் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து  ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் தோல்வியடைந்து விட்டார்கள் அவ்வளவுதான்.

இன்னுமொருவனின் பதிவு பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை. 30 வருடங்களிற்கு முன்னர் இருந்த அதே நிலைதான் இன்று இன்னமும் வளர்ச்சியடைந்திருக்கின்றது. இடையில் 30 வருடங்களில்  புலிகள் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து  ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் தோல்வியடைந்து விட்டார்கள் அவ்வளவுதான்.

 

இன்னுமொருவன் எழுதிய பல மாற்றங்களை 2004இல் ஒரு மாத காலம் எனது தாயாரின் ஈமக்கிரிகைகளுக்காக ஊரில் இருந்தபோது அவதானித்தேன்.. முக்கியமாக விவசாயம்.. வாழைக்குலை பெரிதாக வேண்டும் என்று வாழைத் தண்டில் உரத்தை வைத்து புண்ணுக்கு மருந்து கட்டுவதைப்போல கட்டியிருந்தார்கள்.. அதனால்தானோ என்னவோ இன்னொருவனும் மேலே ஒரு இடத்தில் அந்த பழங்களை சாப்பிடமாட்டார்கள் என கூறி இருந்தார்.. முன்பு வீட்டுக்கு வீடு இருந்த குப்பைக் கிடங்குகளை காணவில்லை.. குப்பை ஏத்துறது.. வயலுக்கு குழை தாக்குறது.. இப்படி எதுவுமே இல்லை. வீட்டில் சேரும் சருகுகளை கூட்டி கொழுத்துவதைத்தான் அப்போது கண்டேன்.. ஆக விவசாய உற்பத்தி முழுவதுமே இரசாயண மயம்தான்.. அதற்கு கூலி ஆட்களின் பற்றாக்குறையும் ஒரு காரணம் என நினைத்தேன்.. ஆக 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை இன்றில்லை.. எனது அனுபவப்படி இன்னொருவன் கூறுவதை என்னால் மறுக்க முடியவில்லை பெருமளவு விசயங்களில்.

 

என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் கங்கைக்குச் சென்று அப்பாவின் அஸ்த்திகரைத்து மீண்ட ஒருவரின் பயணம் போன்றே அமைந்தது. ஒரு நிரந்தர வெற்றிடத்தை எனக்குள் உணர்கிறேன்.
 
நச் இப்ப எல்லாம் ஒரு கடமைக்கு ஊருக்கு போவதாக உள்ளது மண்ணின் உணர்வு மனகளில் சிதைந்து போனதால் .
நாலு கிழமை ஊரில் இருந்தேன்.மனைவியுடனும் என் ஒரே மகளுடனும் போய் வந்தேன்.வெயில் கூட தாங்க கடினமாய் இருந்தது.கள்ளைக்கூட
ஆசையாய் குடிக்கமுடியவில்லை.எங்கும் ஒரே சன வெட்கை. பாதையெல்லாம் சின்னனாய் போனமாதிரி உணர்வு.யாரைக்கண்டாலும் 
ஏதோ ஒரு பயமும் .சின்னப்பெடியள் ரவுடிமாதிரி திரியுறாங்கள்.

 

நாலு கிழமை ஊரில் இருந்தேன்.மனைவியுடனும் என் ஒரே மகளுடனும் போய் வந்தேன்.வெயில் கூட தாங்க கடினமாய் இருந்தது.கள்ளைக்கூட
ஆசையாய் குடிக்கமுடியவில்லை.எங்கும் ஒரே சன வெட்கை. பாதையெல்லாம் சின்னனாய் போனமாதிரி உணர்வு.யாரைக்கண்டாலும் 
ஏதோ ஒரு பயமும் .சின்னப்பெடியள் ரவுடிமாதிரி திரியுறாங்கள்.

 

 

கள்ளை எப்படி ஆசையாக குடிக்கிறது.. மண் முட்டிய வட்டில கட்டி எடுத்தால்தானே கள்ளு கள்ளாக குளிர்மையாக இருக்கும்.. பிளாஸ்ரிக் கான்கள்தானே வட்டுகளில தொங்கி அனலாய்க் கொதிக்கின்றன.. :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்
பதிவுக்கு நன்றி இன்னுமொருவன்
 
நானும் 2011யில் அம்மாவின் செத்த வீட்டுக்கு ஊருக்குப் போயிருந்தேன்.செத்த வீட்டில் வந்து படுப்பதற்கு கூட‌ அங்கு சொந்தங்கள் இல்லை.இருந்த சொந்தங்கள் கூட தங்கட வீட்டில களவு போய் விடும் அல்லது பிள்ளைகளை இரவில் தனிய வீட்டில் விட்டுட்டு வர பயத்தில் இரவில் ஒருத்தரும் படுக்க வரவில்லை :(
 
நான் அவதானித்தனில் இருந்து அங்குள்ளவர்கள் வெளி நாட்டுக் காசால் சோம்பேறி ஆகிக் கொண்டு வருகிறார்கள்.செத்த வீட்டுக்கு சாப்பாட்டு கொடுப்பதற்கு கூட அதுவும் கொஞ்ச பேருக்கு கொடுப்பதற்கு கூட கடையில் ஓடர் எடுக்கினம்.வாழையிலை பாவனையில் இல்லை.மரக்கறி,இலை,குழை சாப்பிடுவதில்லை.
 
யாழ்பாணத்தில் நிறைய கடைகள் முஸ்லீம்களால் நடத்தப்படுக்கிறது.முக்கியமாக சாப்பாட்டுக் கடைகள்.பெரும்பாலான உணவகங்களில் வெளிநாட்டில் இருந்து போவோருக்காக உப்பு,உறைப்பு,புளி இல்லாமல் சமைக்கினம் :lol: ஒவ்வொருத்தரின் வீடுகளும் அந்த மாதிரி இருக்குது.இங்கு லண்டனில் உள்ளவர்களது வீடுகள் கூட அப்படி வசதியாய் இருக்கவில்லை :)
 
அங்குள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதில்லை எதற்கெடுத்தாலும் சோடா,எதற்கெடுத்தாலும் ஆட்டோ,வீடுகளில் சிங்கள பைலாப் பாடல்கள் என்று எல்லாத்தையும் மறந்து சந்தோசமாக வாழ நினைக்கினம்.நான் போன நேரம் 10,15 வீடுகளைத் தாண்டினால் ஆமிக் காம்ப் இருக்கும்.பெரும்பாலானோர் 18 வயசிக்கும் குறைவான சின்னப் பெடியங்கள்.கூலிக்கு ஆட்களை பிடிக்கிறது சரியான கஸ்டமாக இருந்தது.வன்னியில் நிறையப் பேர் வேலையில்லாமல் வறுமையில் வாட யாழ்ப்பாணத்தில் கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் இருந்தது நெருடலாக இருந்தது
 
புலம் பெயர்ந்த ஊர் சங்கம் ஒன்று தங்கள் ஊரில் போய் விளையாட்டுப் போட்டிகள் வைத்தார்கள் அதில் சைக்கிள் ஓட்டப் போட்டி ஆரம்ப நிகழ்வாக இருந்தது.அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டும் போட்டியில் பங்கு பற்றலாம் என அறிவித்து இத்தனை ஆயிரம் காசும் பரிசாக கொடுப்பதாக அறிவித்திருந்தார்களாம்.பார்த்தால் அங்கு இருக்கும் சிங்களவன் ஒருவன் சண்டை பிடித்து தானும் இதே ஊரில் கன காலமாய் இருக்கிறேன் என்று சொல்லி போட்டியில் பங்கு பற்றி முதல் பரிசை தட்டிக் கொண்டு போயிட்டான் :D உடனே மிச்ச போட்டியை கான்சல் பண்ணிட்டு திரும்பி வந்திட்டினமாம்.சிங்களவன் எப்படியும் அங்குள்ளவர்களோடு சேரத் தான் துடிக்கிறான்.நட்பு பாராட்ட துடிக்கிறான்.
 
குடிப்பழக்கம்,போதைப் பழ்க்கம் எல்லாம் கூடி இருக்குது.சிங்களவன் அங்குள்ள பெண்களை காதலித்து கல்யாணம் கட்டிறான்.எப்படியோ,எந்த விதத்திலோ அங்குள்ளவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறான்.அப்படி வைத்திருக்கவே விரும்புகிறான்.மீண்டும் போராட்டம் என்று வரக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறான்.90 ஆண்டுக்கு பின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களுக்கு போராட்டம் என்டால் என்ன,யுத்த பாதிப்புக்கள் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
 
எது எப்படி இருந்தாலும் நாங்கள் இங்கே காலத்திற்கேப்ப,நாட்டுக்கேற்ப மாறிக் கொண்டு அங்குள்ள மக்களை பார்த்து நீங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சரியா எனத் தெரியவில்லை :unsure:
 
இன்னுமொருவன் புலிகள் காலத்திலும் சாதி இருந்து கொண்டு தான் இருந்தது ஆனால் புலிகளுக்கு பயத்தில் அடக்கி வாசித்தார்கள்.இப்பத் தான் அந்தப் பயம் தேவையில்லையே
 
 
 
 

இதிலே எனக்கொன்றும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் வாழும் நாடுகளில் உங்களை எல்லோரும் அனுசரித்து மரியாதையை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஆனால் மிகவும் துவேஷமாகச்  சிங்களவன் என்று கருத்து எழுதுகிறீர்கள். 

 

 

சிங்களவன் எப்படியும் அங்குள்ளவர்களோடு சேரத் தான் துடிக்கிறான்.நட்பு பாராட்ட துடிக்கிறான்.
 
குடிப்பழக்கம்,போதைப் பழ்க்கம் எல்லாம் கூடி இருக்குது.சிங்களவன் அங்குள்ள பெண்களை காதலித்து கல்யாணம் கட்டிறான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிடம், ஊரில் உள்ளவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. ஊரைவிட்டு வெளிக்கிட்ட பின்னர், நான் விட்டுவிட்டு வந்தது போலவே ஊர் இருக்கோணும் என எதிர்பார்ப்பது தவறு என்பது எனது கொள்கை. எப்படி எமக்கு தலை நரைத்து, மொட்டை விழுந்து மாற்றங்கள் வருகிறதோ அதே போன்ற மாற்றங்கள் ஊரிலும் வருவது இயல்பு. தகவல் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிய இந்தக்காலத்தில் அந்த மாற்றம் மிக இலகுவில் வந்துவிடுகிறது. உங்கள் ஞாபகவீதிப்படி உங்கள் சொந்த ஊர் 23 வருடங்களாக இருக்கவேண்டும் என எண்ண முடியாது தானே. நீங்கள் 15 வயதில் (உங்களுக்கு 38 வயசு எனக் கணக்குப் பண்ணி விட்டேன்!) வெளிக்கிடும்போது இருந்த உங்கள் பார்வையும், இப்போது உங்கள் பார்வையும் ஒரே மாதிரியானதாக இருக்காது என நம்புகிறேன். அதுவும் உங்கள் ஏமாற்றத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். எமக்கு நாமே  ஊர் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு படத்தைக் கீறி வைத்திருக்கிறோம். நிஜமும் நிழலும் வேறாக இருப்பதாலேயே அதிகமான ஏமாற்றங்கள் வருகின்றன.

நாம் இருக்கும் நாடுகளில் ஆளுக்கு ஒரு கைத் தொலைபேசி, ஆளுக்கு ஒரு கார் என்று இருப்பது வழமை. அதை பகட்டாக நாம் எண்ணுவதில்லை. அதேபோலத்தான் ஊரில் இருப்பவர்களும் ஆளுக்கு ஒரு மோட்டர் சைக்கிள், கைத்தொலைபேசி எனப் பாவிக்கிறார்கள். பத்து வருடங்களின் முன்பு மோட்டார் சைக்கிள் ஓடுவது, கைத்தொலைபேசி வைத்திருப்பது பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. நானறிந்த வரை இன்று அந்த நிலை யாழில் இல்லை. விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக வெளிநாட்டுக் காசில் இவ்வாறான நுகர்வு ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இவ்வாறான தேவையற்ற நுகர்வுகளுக்கு பணம் போகிறது எனத் தெரிய வந்தால் அனும்ப்பும் பணத்தின் அளவை குறைக்க வேண்டும். நான் பார்த்ததிலே, வெளிநாட்டு உறவினரிடம் பணம் கேட்பவர்களே, நாட்டில இன்னும் சண்டை, அந்தப் பிரச்சனை, இந்தப் பிரச்சனை என சாட்டுக்களைச் சொல்லிப் பணம் கேட்கிறார்கள், தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு கூப்பிடும் படி வற்புறுத்துகிறார்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினரிடம் நாடு அந்த மாதிரி இருக்கு எனச் சொல்லிவிட்டு எப்படி பணம் கேட்க முடியும்? நாட்டில் பிரச்சனை இல்லை எனக் கூறவில்லை, ஆனால் இருக்கும் பிரச்சனை வேறுவிதமானது.

நீங்கள் உயர்பதவியில் இருப்பவர்கள் பற்றிக் கூறியது மிகச்சரி. சேவை நோக்கம் ஒரு சிலரைத்தவிர யாருக்குமே இல்லை. இந்த நிலை காலம் போகப் போக மாறும் என நம்புகிறேன். அத்துடன் மக்களும் கொஞ்சம் நிமிர்ந்து நடக்கும் வரை இந்த அதிகாரிகள், உயர் பதவிகளில் இருப்போர் மாறப் போவது இல்லை.

நான் போயிருந்த போதும் சில நல்ல வியாபார முயற்சிகள் பற்றி அங்கிருந்தவர்களுடன் கதைத்தேன். நான் சொல்ல முதலே, தம்பி உது சரிவராது எண்டு எதோ ஒரு சாட்டு சொல்லத் தொடங்கிவிட்டார்கள். கையைக் காலை அசைத்து வேலை செய்ய பலருக்கும் பஞ்சி. உதாரணமாக கட்டடம் கட்டுவது சம்பந்தமான துறைகளிலே மிகவும் நல்ல வருமானம் வரும் தொழில்கள் தெற்கிலிருக்கும் நிறுவனங்கள் வந்து செய்கிறார்கள். சுற்றுலாத் துறையைக் கூட நன்றாக விருத்தி செய்ய முடியும். ஆனால் எல்லோருக்கும் பஞ்சி. திருகோணமலை நிலாவெளி, அறுகம்குடா பகுதியில் உல்லாசப்பயணத்துறையைக் கவர சிறந்த முயற்சிகள் எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் அவர்கள் சிங்கப்பூராகப் பார்ப்பதில் வியப்பில்லையே. அவர்களுக்குத் தெரிந்த சிங்கப்பூர் அவ்வளவு மட்டும்தான். நாம் கடந்த காலத்தை நினைத்து இறந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கலாம். அதனால் பலன் ஒன்றுமில்லை. முந்தி அப்பிடி, முந்தி இப்பிடி என நினைப்பதை விட இப்ப இப்பிடித்தான் என நான் நினைப்பதுண்டு.

சனம் இப்போது சந்தோசமாக இல்லை எனப் பலரும் குறைபடுகிறார்கள், சந்தோசத்தை எதை வைத்து அளவிடுகிறார்கள்? அதோட சனத்தை எப்பவும் சந்தோசமா வைத்திருக்கலாமா? ரோட்டுப் போட்டாலும் பிரச்சினை, போடாட்டிலும் பிரச்சனை, கரண்ட குடுத்தாலும் பிரச்சனை, குடுக்காட்டிலும் பிரச்சனை, யாழ்தேவி வந்தாலும் பிரச்சனை வராட்டிக்கும் பிரச்சனை, தொலைபேசி இருந்தாலும் பிரச்சனை, இருக்காட்டிக்கும் பிரச்சனை. பிரச்சனையை பிரச்சனையாகவே விட்டு விட வேண்டியது தான்.

இறுதியாக இன்னுமொரு விடுதலைப் போராட்டம் என்பது இனிமேல் நடக்கவே மாட்டாது என்ற சூழ்நிலையில் சமூகம் சார்ந்த எமது நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார எழுச்சி மூலமே இனி எதுவுமே சாத்தியம் என்பதே எனது கொள்கை. "இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாயும் வேண்டாள், செல்லாது அவன் வாயின் சொல்"

இந்த மார்கழி ஊருக்கான எனது பயணச்சீட்டை இந்தக்கிழமைதான் வாங்கினேன். போய்வந்து எனது அனுபவங்களை பதிவேன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இன்றுதான் முழுமையாக வாசித்தேன், உங்களின் Flashback  என்னையும் முன்னைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது ....
 
இன்றைய நிலை நான் எதிர்பார்த்ததுபோலவே உள்ளது ...... :( 
 
அதனால் சமாதான காலத்தில் தாயகம் சென்று வந்ததன் பின்னர் செல்ல வில்லை போவதற்கு மனசும் வரவில்லை .....  
 
பகிர்விற்கு நன்றி இன்னுமொருவன்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.