Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள நினவுகள்

Featured Replies

கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....

பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. 

முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். 

யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னுமொருவன். எம்மக்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது நடக்காதவிடத்து விவாதித்து என்ன பலன் என வாசகர்கள் சலித்துக் கொண்டார்களோ என எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் எல்லோரையும் தனக்குள் முகல்நூல் அடக்கிக் கொண்டதன் பக்கவிளைவே இது. இலகுவாக அனைவருடனும் தொடர்புகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவுமாக தமது மனதின் இடைவெளிகளை நிரப்புவதற்கும் முகநூல் போதிய வகை செய்வதாக நம்பிக்கொண்டு பலர் இணையத்தளங்களைத் தவிர்த்துவருகின்றனர். காலத்தின் மாற்றங்களுக்கு நாமும் விதிவிலக்கல்ல.

உங்களுக்கும் இனிய ஆங்கில தமிழ்ப் புத்தாண்டு  வாழ்த்துக்கலும் பொங்கல்வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சூடான திரிகள் பற்றி எரிந்து பல காலம் ஆகிவிட்டது. விவாதங்கள் மூலம் அறிவூட்டல் செய்யலாம் என்பதில் முன்னர் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அத்தோடு சமூக வலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்கள் அவரவர் நட்புவட்டங்களில் நடைபெறும்போது அவை காத்திரமானவையாக இருக்கமாட்டா என்பதால் இவற்றில் நான் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. சில முகநூல் இலக்கிய, அரசியல் விவாதங்கள் வெறும் விளம்பரங்களுக்காகவும், ஒருவரை ஒருவர் முதுகு சொறியவும், அல்லது அவதூறு செய்யவுமே வழிவகுக்கின்றன. இவற்றினால் சமூக முன்னேற்றம் உண்டாகப்போவதில்லை. 

ஆனால் ஆங்கிலத் தளங்கள் Reddit, Guardian பின்னூட்டங்கள் போன்றவை முக்கியமான கருத்தாடல்களை புரிய உதவுகின்றன. அதே போன்று யாழ் இணையமும் தொடர்ந்தும் கருத்தாடலை ஊக்குவிக்கும் நோக்கோடு இயங்கினாலும், உறுப்பினர்களாகிய நாங்கள் (என்னையும் சேர்த்துத்தான்) கருத்தாடலில் ஈடுபடாது விடயங்களை வாசித்துவிட்டு மட்டும் போவது பெரிய குறைபாடுதான். இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கவேண்டும். 

இன்னுமொருவனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இன்னுமொருவன்!

நுணாவிலானின் கருத்து.. ஓரளவுக்காவது எம்மவரின் நிலையைத் தெரிவிக்கின்றது!

வளம் மிகுந்த நதிக்கரைகளில் ஒரு காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக வாழ்ந்த ஒரு இனம்...! 

யாதும் ஊரே...யாவரும் கேளிர் என ஓங்கிக் குரல் கொடுத்த இனம்!

வாழ்வை எவ்வாறு வாழ்வது என்று வள்ளுவன் வாய் மொழி மூலம் உலகுக்கு உணர்த்திய இனம்!

ஓட...ஓடத் துரத்தப் பட்டு....ஒதுங்க இடமின்றி..மணல் வெளிகளிலும், வளம் குறைந்த நிலங்களிலும் வாழ நிர்பந்திக்கப் பட்ட இனம்!

இனி ஓடுவதற்கு நிலமில்லை என்ற போதில் மட்டும்... ஆயுதம் தூக்க நிர்பந்திக்கப் பட்ட இனம்!

துரத்தியவர்களாலேயே ...தோற்கடிக்கப் பட்ட இனம்!

இன்று வெறும் மாயைகளிலும், வசதிகளிலும்....மயங்கிச் சுயம் தொலைத்து நிற்கின்றது!

செத்துப்போன ராஜராஜனின் பெயர் சொல்லிப் பெருமை பேசுகின்றது!

அதே ராஜ ராஜனுக்கு..அவன் கட்டிய ..காலத்தால் அழியாத வரலாற்றுக் கோவிலிலேயே..அவனுக்குச் சிலையாக நிற்கக் கூட அனுமதியில்லை என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்து விடும் பலம் அதனிடம் இருந்தும்...அதனை உணராது..அந்தப் பொருளாதாரத்துக்கு மிண்டு கொடுக்கும் மௌனியாக அது வாழ்ந்து கொண்டிருக்கின்றது!

அந்த இனத்திடமிருந்து எதனை எதிர்பார்கின்றீர்கள்?

இரந்து வாழும் புலவர்களிடமிருந்து....மன்னனை வாழ்த்தும் வரிகள் வருமேயன்றி....உணர்வு மிகுந்த எழுத்துக்கள் என்றும் பிறக்கப் போவதில்லை!

வரப்போகும் புத்தாண்டாவது,,,,பழையன கழித்துப்..புதுமையான மாற்றங்களைக் கொண்டு வரட்டும்!

கிருபன் மேலே கூறியது போன்று...மற்றவர்களின் முதுகு சொறிதலைக் காலம் கடந்தே புரிந்து கொண்டவர்களின் நானும் ஒருவன்!

புதிய நம்பிக்கைகள் சுமந்து....யாழில் பயணிப்போம்!

Edited by புங்கையூரன்

வணக்கம் இன்னுமொருவன், பத்தாண்டுகள் விவாதித்துக் கண்ட பலன் என்ன? விவாதம்நடைமுறைக்கு ஆனது. ஆனால் விவாதமே பொழுது போக்கு என்றால் அதனால் என்ன பயன். அதனால் தான் காத்திரமாக விவாதித்த பலர் காணமல் போயினர். சிலர் காலத்தால் பதில் சொல்லப்பட்டு, அவர்கள் உருவாக்கிய விம்பம் உடைந்து வேறு முகத் தோடு வந்திருக்கலாம். அது சரிநீங்கள் எந்தநாட்டில் இருகிறீர்கள். உங்களையும் கிருபனையும் சந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக கண்டிக்கிறேன்.

போன மூன்று பேர்களுக்குள்ளும் சேர்த்துவிட்டீர்களோ தெரியாது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
ஆவி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக நானும் கண்டிக்கிறேன்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
ஆவி

ஐயோ பேய் tw_skull:tw_skull:tw_skull:

2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக கண்டிக்கிறேன்.

 

1 hour ago, தமிழரசு said:

இன்னுமொருவன் அத்தனை பேர்களுக்குள்ளும் எனது பெயரை தவறவிட்டதற்தாக வன்மையாக நானும் கண்டிக்கிறேன்.

இதனை நானும் வன்மையாக ஆமோதிக்கின்றேன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவனுக்கு கடந்த 10 ஆண்டில்... பல பிரச்சனை வந்திருப்பது தெரியிது. காலப்போக்கில் காணாமல் போன குறுக்காலபோனவனை தெரியுது இருக்கிற நெடுக்காலபோவனை தெரியல்ல. இப்படி நிறைய பெயர்கள்.. அதுவும் யாழில் நீண்ட பல கருத்துக்களோடு வலம்வந்த பலர் காணாமல் போயுள்ளனர் உங்கள் பட்டியலில். அதற்காக சம்பிரதாய பூர்வ மன்னிப்பையும் நீங்க கேட்வில்லை. என்ன பிரச்சனையோ..??!

கால ஓட்டம் என்பது வாழ்வியல் ஓட்டத்தோடு சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாற்றங்கள். சிலர் அந்த மாற்றங்களுக்குள் தாக்குப் பிடிச்சு தங்கி இருக்க... இன்னும் பலர் தாக்குப் பிடிக்க முடியாமல்.. நேரத்திடம் தோற்றுவிடுகின்றனர்.. அதனால்.. அவர்களின் பங்களிப்பு இல்லாவிடினும்.. பார்வையில் யாழ் இருக்கிறது.

யாழில்... அதனோடு மாணவப் பருவத்தில் இருந்து பயணிப்பவன் என்ற வகையில்.. யாழ் மாற்றங்களோடு மாளாது பயணிக்கும்.. அதற்குரிய அடித்தளச் சிந்தனை யாழை உருவாக்கியவர்கள்.. கொண்டு நடத்துபவர்களிடம் உண்டு என்றே நம்புகிறேன். 

ஆனால்.. ஒன்றை மட்டும் அவதானித்திருக்கிறேன்.. சிலர் தாம் வளர்த்த கற்பனையில் இருந்து விடுபடுவதாக இல்லை. தாமே மற்றவர்களை பற்றி ஒரு விம்பத்தை உருவாக்கி தாமே அதை அலங்கரித்து.. பின் அடித்து நொருக்கிட்டு.. பின்... அது சிதைந்ததாக சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இப்படி பல மனிதர்களின் கண்ணோட்டங்கள்.. கருத்துக்கள்... எல்லாவற்றையும் தனதாக்கி யாழ் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

சிந்தனைக்கு அறிவுக்கு வேண்டிய செய்திகள் வருகின்றன. சிந்தனைக்குரிய ஆக்கங்கள் பகிரப்படுகின்றன. ஆனால்.. நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் ஒத்துப்போகலாம்.. கள உறவுகள் தங்கள் சொந்தச் சிந்தனையில்.. தீவிரத்தை தவிர்த்து.. கொஞ்சம்.. ஜாலியாக இருக்க முற்படுகிறார்கள் என்பது.

அது இரு வகையில் அமையலாம்..

1. அனுபவத்தின் வாயிலான ஞான முதிர்வு

2. கால ஓட்டம் தந்த நெருக்குவாரத்தால் எழும் மூளைச் சோர்வு. 

மற்றும் படி.. யாழ்... தொய்ந்திருக்கு என்பதை விட... அதன் நெகிழ்வியல்பு கூடி இருக்கு என்பது பொருந்தும். காலமாற்றத்தில் அதனையும் யாழ் கடக்க வேண்டி இருக்கோ என்னமோ.

10 ஆண்டு நிறைவை காணும் தங்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் யாழோடு கூடி வர வாழ வேண்டுகிறோம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் விவாதித்து கண்ட பலன் என்ன என்று கேட்போருக்கு ஒரு சின்ன உதாரணம்..

யாழில் எங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து..

யாழில்.. எங்கள் சொந்த சின்ன முயற்சியால்.. சமகால அறிவியல் நிகழ்வுகளை.. வேகமாக வளர்ந்து வரும் அறிவியலை தாய் மொழியில் வழங்கனும் என்ற நோக்கில்.. மொழிபெயர்த்துச் செய்திகளை போட்டு வந்தோம். பலர் வரவேற்றார்கள். சிலர் அதிலும் சினந்து கொட்டினார்கள்.

இன்னும் சிலர் நீ என்ன பெரிய.. பருப்பாடா.. என்று சொந்தக் கற்பனையில் தாம் வளர்ந்த விம்பத்தோடு மோதிக் கொண்டு வந்து செய்தியும் போட்டார்கள்.

ஆனால்.. அறிவியல் உலகின் முன் அது சமர்ப்பிக்கப்பட்ட போது அந்த முயற்சிக்கு மதிப்பளித்தார்கள். மதிப்பெண்ணும் வழங்கினார்கள்.

ஆக.. நாம் விவாதிப்பதன் பலன் என்பது விவாத மேடையில் அடுத்த வினாடி எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாறாக.. அதன் தாக்கம் என்பது எவ்வளவு தூரம் சமூகத்துக்குள் கடத்தப்படுகிறது.. சரியான தளத்தில் வடிவில் போய் சேர்கிறதா என்பதில் தான் உள்ளது.

அதற்காக அடுத்தவனுக்கு எழிதில் புரியாத வகைக்கு.. மெஞ்ஞான வடிவில்.. பந்தி பந்தியா எழுதிட்டு அதன் பலாபலனை எதிர்பார்த்துக் காத்திருந்தால்... அந்தக் காத்திருப்பில் அர்த்தமில்லை என்பதே நியாயமாகும். திருக்குறள் சிறந்து.. ஆனால் அதுக்கு பொழிப்புரை இல்லை என்றால்.. அதன் பயனை சமூகம் பெற முடியாது. அதனால் தான் திருக்குறளை யாத்தவருக்கு ஈடாக பொழிப்புரை எழுதினவையையும் போற்றினம். 

சமூகம் என்பது ஒரு கலவை. அந்தக் கலவையை சரியாக பகுத்தாய்ந்து.. தேவைக்கு ஏற்ப வழங்குவது தான் உபயோகமான விவாதம்.. கருத்துக்களம்.. சமூக வலையாக இருக்கலாம். எப்பவும் சீரியஸாவே இருக்கனுன்னு எதிர்பார்ப்பக் கூடாது. உங்களிடம் அவதானித்தது.. எப்பவும் சீரியஸா தான் கருத்துக்களும்.. களமும் இருக்கனுன்னு. அது செயற்கையாகவே சமூகத்துக்குப் படும். சமூகத்தில் எல்லா தளத்தையும் அது போய் சேராது. மாறா சில தளங்களை அடைவதோடு அது செத்துவிடும். 

இது எங்கள் சொந்த அவதானிப்பில் கண்ட ஒரு யதார்த்தம்... பகிர்ந்து கொள்கிறோம்.. உபயோகமாக இருக்கும் என்பதால். மாறாக அங்கலாய்துப் பயனில்லை. விடா முயற்சி அவசியம். tw_blush:

தேசிய தலைவர் சொன்ன மாதிரி விமர்சனங்கள் என்ற கல்லெறிதல்களுக்கு பதில் கல்லெறிந்து கொண்டிருந்தால்.... நமக்குத் தான் நஸ்டம். எறியப்படும் கற்களில் வகையானதை வைச்சுக் கொண்டு வகையற்றதை ஒரு ஓரத்தில் தூக்கிப் போட்டிட்டு.. நாம் எம் முயற்சியை தொடரனும். இதுவே யாழில்.. கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம்.  இதனை பள்ளிக்கூடமோ.. பல்கலைக்கழமோ புகட்ட முடியாது. ஆனால் யாழ் புகட்டி இருக்குது. அதாவது யாழ் ஒரு சமூக ஆய்வுக்கான தளமாக விளங்கி இருக்குது. எனியும் விளங்கும். எல்லாம் பாவிப்பவர்களின் வகையில் தான். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நனறி  இன்னுமொருவன்

மாற்றங்கள் எம்மிலிருந்து தானே ஆரம்பிக்கின்றன

அதை நாமே தொடக்கி வைக்கலாமே....

விவாதங்களை தொடக்கி வைப்போம்

தொடருவோம்...

  • தொடங்கியவர்

அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்pறி. 

முதலில் எனது பந்தியில் விடுபட்ட உறவுகளிற்கு. பட்டியல் முழுமையற்றது என்பதைக் குறிக்கவே Ellipsis குறியுடன் பட்டியிலை முடித்திருந்தேன். ஆங்கிலத்தில் பல பதங்களைப் போல 'இலிப்சிஸ்' என்ற பெயரும் புராதன கிரேக்கத்தின் எச்சம். இந்தப்பெயரின் அர்த்தமே தோல்வியினை ஒத்துக் கொள்வது தானே (falling short). ஒரு தோப்பு நமது நினைவில் ரம்மியமாகப் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு மரம் மட்டும் காரணமும் அல்ல எந்த மரமும் காரணமல்லாமலும் அல்ல. யாழ் தோப்பும் விதிவிலக்கு அல்ல.

அடுத்து, யாழ் களம் அமைந்ததற்கான அடிப்படையே எமது ஈழக்கனவு தான். அதனால் விவாதம் என்றவுடன் பின்னூட்டங்களும் இனி என்னத்தை விவாதிப்பது/விளக்குவது என்ற விரக்த்தியினையே வெளிப்படுத்துகின்றன. இன்னுமொருபுறம் விவாதம் பொழுதுபோக்காவது கண்டிக்கப்படுகிறது. புரிந்துகொள்ளக் கூடியது தான். ஆனால் இவை இரண்டுமே கூட விவாதப்பொருளாகின்றன,

பொழுதுபோக்கு அவரவர் வசதிக்கும் தேடலிற்கும் ஏற்ப மாறுபடும். சக்கை உணவும் பசிபோக்கும் நிறையுணவும் பசிபோக்கும். இருப்பினும் உண்டவர் வாழ்வு உண்டதைப் பிரதிபலிக்கும். பசி என்பது வெறும் அறிகுறி. ஒவ்வொருமுறை பசிக்கும் போதும் பசியின் தார்ப்பரியத்தை எவரும் ஆராய்வது இல்லை. இயந்திர ரீதியில் பசி அடக்கப்பட்டபடி வாழ்வு நகர்கிறது. இது பசிக்கும் மற்றும் பசி குறியிடும் அனைத்திற்கும் பொருந்தும். பொழுதுபோக்கு முனையில் யாழ் களம் தனித்துவத்துடன் நிறையுணவு வழங்குவது சாத்தியமானது. 

எமது சமூகத்தில் பலர் நாற்பது வயதில் அறுபது வயது மனிதர்கள் போல் தெரிகிறார்கள். ஆண் பெண் இருபாலாரிற்கும் இது பொருந்தும். இளமை என்பது மனத்தில் இருந்து வரவேண்டியதே அன்றி நரைக்கடிக்கும் மையினால் அல்ல. அசதி நம்மவர்களைப் பற்றியுள்ளது. இதற்கான காரணம் முள்ளிவாய்க்கால் என்று கூறுவது ஒரே ஒரு வகையில் மட்டும் உண்மை. அதாவது, ஈழத்தமிழனிற்கு போராட்டம் இருந்தவரை ஒரு ஆரோக்கியமான நிறையுணவு போன்ற பொழுதுபோக்கு இருந்தது. பொதுமை பற்றிப் பேசினர். ஆதரிப்போரும் விமர்சிப்போரும் ஓயாது தேடினர். அன்றாட உழல்தல்களிற்கப்பால் ஒரு குவியம் இருந்தது. முள்ளிவாய்க்காலில் அனேகம் பேரிற்குத் தொலைந்தது உண்மையில் இது தான். போராட்டம் வகித்த அச்சாணி பாத்திரம் போராட்ட தொலைவில் தான் பலரால் உணரப்படுகிறது.

ஒயாது செல்வத்தைப் பெருக்குவதிலும், குளந்தைகளைப் படிப்பிப்பதிலும், பக்கத்துவீட்டுக் காரனையும் இனசனத்தையும் மிஞ்சியவராய்க் காட்டிக்கொள்வதிலும் மகிழ்ந்திருப்பதாய் வெளிப்படைக்குக் காட்டிக்கொள்ளினும் பலர் வெற்றிடத்தை உணருகின்றனர். பல்கலைக்களகம் சென்றிராத பெற்றோர் தம் குழந்தைகளை பல்கலைக்கழகம் வாயிலாகப் பெருநிறுவனங்களின் அலுவலகங்களில் அமர்த்திவிடப் போராட, தாம் பல்கலைக்கழகம் சென்ற பெற்றோர், பள்ளிக்கூடங்களின் worker-bee தர்ப்பரியத்தைப் புரிந்து கொண்டு, ராணித்தேனியாவதற்காய்  ஹாவர்டும் ஸ்ரான்போட்டும் வேண்டி ஓட, இரு சாராரும் நிறையவே வெற்றிகள் பெற்று, மில்லியன்களும் அதிகாரங்களும் அதிகரித்து விட்டது உண்மை தான். ஆனால் ஒரு வெற்றிடம்  அவர்களிற்குள் அசதி ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் எமது சமூகத்திற்குள் மது என்பது போத்தலலோடு கவிழ்ப்பதாய் இருக்கிறது. உணவு என்பது மெல்லாது முழுங்குவதாய் இருக்கிறது. ஆன்மீகம் என்பது மொட்டை அடித்து ஜோஹா செய்வதாக இருக்கிறது. 

முகநூலில் தமது வாழ்வு பரிபூரணமானது என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காய் போடப்படும் படங்களிற்கு உண்மையில் அப்படங்களைப் போடுபவர்களே பச்சைகுத்த மாட்டார்கள் என்ற நிலையில் அசதி பற்றிக் கொள்கிறது. அடுத்த சந்ததிகளை விட்டுவிடுவோம். குறைந்த பட்சம் நாற்பது வீதமான எமது சந்ததியினர் தமிழில் உரையாடும் தேவை அற்றவர்களாக வாழ்கிறார்கள். தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அப்பால் தமிழ் தமிழர் வாழ்வில் அகன்றபடி இருக்கிறது. உடலும் உளமும் புத்துணர்வு பெறுவதற்கு 'வெற்றி பெற்ற' தமிழர்கள் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்திற்கு அந்நியமான முனைகளிலேயே நுகர்கின்றனர். பாவிக்காது விடப்படும் மொழி நிச்சயமாக அகன்று செல்லும்.

ஈழம் என்பது பொதுமை சார்ந்தது. இலக்கிய வட்டங்கள் மற்றும் இதர வட்டங்கள் அனைத்தும் முதுகுசொறிவதற்காக மட்டும் இயங்குவதால் இவையும் முகநூல் மட்டத்தில் தான் செயற்படுகின்றன. ஆனால் தமிழில் மட்டும் உரையாடும் எத்தனையோ குடும்பங்கள் பாரம்பரிய பேசாப்பொருட்களிற்கு அடிமைப்பட்டு, பேச நாதியின்றி, செய்வதறியாது உழல்வது புலத்தில் இன்னமும் இருக்கின்றது. புலத்தில் வறுமை இருக்கின்றது. ஈழம் என்பதன் அடிப்படை சக தமிழன் மீதான பரிவு. ஒரு இனமாக நாம் தொடர்வது அவசியமாயின் இனம் ஆரோக்கியமாவது அவசியம். Activism என்பதற்குப் புலத்தில் தமிழன் மத்தியில் கூட நிறைய இடமிருக்கிறது.

நாம் ஒரு புராதன சமூகமாக இருந்தும் முதிர்ச்சி அற்ற சமூகமாகத் தொடர்வதற்கான காரணம் நாம் விடுதலையடையாத சமூகம். விடுதலை என்பது சிங்களவரிடம் இருந்து அல்ல, எமது பயத்தின் நிமித்தம் வஞ்சனையால் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை மனவமைப்பில் இருந்து பலர் இன்னமும் விடுதலைபெறவில்லை.

எவர் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, தமிழ் என்பதும் அதன் அனைத்து விழுமியங்களும் இன்றைய தேதிக்கு பொருளீட்டுவதற்குப் பயனற்ற ஒன்றாகவே பலரிற்கும் இருக்கிறது. எனவே வெறும் பிறான்ட் அளவில் தான் இன்று தமிழ் அடையாளம் இருக்கிறது. எவரிற்கெல்லாம் தமிழ் நிலைப்பது அவசிமோ அவர்கள் இந்த பிறான்டினைக் கவர்ச்சி மிக்கதாய் ஆக்குவது தவிர்க்கமுடியாதது. தமிழர்களையே தமிழோடு இணைந்து இருக்கச் செய்வதற்கு தமிழ் பிராண்ட் முனைந்தால் தான் சாத்தியம். அப்படி முனைகையில் தொலைந்த பொதுமை மீழலாம் அசதி நீக்கும் குவியம் கிடைக்கலாம்.

யாழ்களம் நிறையுணவொத்த பொழுதுபோக்கினை தமிழ் சமூகம் மற்றும் மொழி சார்ந்து வழங்குவதன்மூலம் ஒரு தலைமைத்துவத்தை இம்முனையில் உருவாக்கமுடியும்.  


 

Edited by Innumoruvan

6 hours ago, nedukkalapoovan said:

விமர்சனங்கள் என்ற கல்லெறிதல்களுக்கு பதில் கல்லெறிந்து கொண்டிருந்தால்.... நமக்குத் தான் நஸ்டம். எறியப்படும் கற்களில் வகையானதை வைச்சுக் கொண்டு வகையற்றதை ஒரு ஓரத்தில் தூக்கிப் போட்டிட்டு.. நாம் எம் முயற்சியை தொடரனும். இதுவே யாழில்.. கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம்.  இதனை பள்ளிக்கூடமோ.. பல்கலைக்கழமோ புகட்ட முடியாது. ஆனால் யாழ் புகட்டி இருக்குது. அதாவது யாழ் ஒரு சமூக ஆய்வுக்கான தளமாக விளங்கி இருக்குது. எனியும் விளங்கும். எல்லாம் பாவிப்பவர்களின் வகையில் தான்.

நன்றி நெடுக்ஸ் 
இதுதான் எனது நிலைப்பாடும்

பச்சை போட்டால் முழு கருத்துடனும் நான் உடன்படுகின்றேன் என்பதால் 

இந்த பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இருக்குறமப்பா  

Just now, முனிவர் ஜீ said:

நாங்களும் இருக்குறமப்பா  

இன்னும் ஒருவன் உங்களையும் மறந்துட்டாரா?

Crying fountain animated emoticon

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இன்னும் ஒருவன் உங்களையும் மறந்துட்டாரா?

Crying fountain animated emoticon

 

கால் ஓட்டத்தில் மறதியென்பது ஒரு மருந்துகூட பல மறதிகளால் மனிதன் மனிதனாகிரான் மன்னித்துtw_blush:

காலத்திற்கு ஏற்றவகையில் நாங்கள் மாறியுள்ளோம். என்னைப்பொறுத்தவரை வாசிப்பதைவிட, ஒலி, காணொலிப்பதிவுகளை அதிகம் விரும்புகின்றேன். நீண்ட வாசிப்புக்கு பொறுமை, நேரம் இல்லை. எழுதுவதையும் இங்கு என்றால் சுருக்கமாகவும், பேஸ்புக் என்றால் ஒரு குத்து மட்டும் என்று செல்கின்றது. வாட்ஸ் அப் என்றால் முகக்குறிகள்.

காலத்திற்கு ஏற்றவகையில் யாழ் இணையத்திலும் மாற்றங்கள் தேவை. யாழ் கருத்துக்கள உறவுகளை இணைக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்று இருக்கவேண்டும் அல்லது அதை உருவாக்கவேண்டும் நான் அண்மைக்காலங்களாக நினைத்து வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Innumoruvan said:

கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்....

பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. 

முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். 

யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.

வணக்கம் இன்னுமொருவன்..?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.?எனது பெயரும் உங்கள் ஆக்கத்திற்குள் அடங்கியுள்ளது அதற்கு நன்றிகள் பல..?

இது யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகின்றது இன்னுமொருவன்.
எதிர்பார்ப்புக்கள் எப்போதும் முழுமையடைவதில்லை என்பதால்அதை  யாரும் ஏமாற்றம் என்று நினைப்பதில்லை.இன்னொரு முறையாவது அந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருப்பர்.

அசைவுகள் சில எல்லோரது புலனுக்கும் எட்டாது. ஆனால் யாழ் களத்தின் அசைவுகள் பலரது புலனுக்கும் எட்டியுள்ளது.

எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.

களத்தின் உயிர் மூச்சே ஊர்ப்புதினம் தான்.
இப்போது அந்த ஊரின் மூச்சே கேள்விக்குறியாகியுள்ளது.

2016  முடிவதற்குள் கூட்டமைப்பினர் தீர்வை வாங்கித் தருவார்கள் என்று நம்பியவர்கள் மீண்டும் வந்து களத்தினை தங்கள் கருத்துக்களால் அலைமோத வைக்க வேண்டும். அல்லது அவர்களும் ஏதாவது எதிர்பார்ப்புக்களுடனும் ஏக்கங்களுடனும் தவிக்கின்றார்களோ தெரியவில்லை.

இருந்தாலும் யாழ் களம் இதையும் கடந்து செல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் மக்கள் தோன்றிய காலமுதல் 'எங்களைப்போல் அடுத்த தலைமுறை இன்பமாக வாழுமா?' என்றகவலையுடன்தான் மக்கள்வாழ்வு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது, வளர்கிறது. அந்த வளர்ச்சிக்குள்தான் யாழும் வளர்கிறது. வளரும்.

இன்னுமொருவனின் கவலை இயல்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்

அட என்னையும் ஒரு மனிதனாக மதித்து ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி

14 hours ago, நந்தன் said:

அட என்னையும் ஒரு மனிதனாக மதித்து ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி

ஒரு குடும்பம் என்றால் அப்பா, அம்மா, பிள்ளைகள், பாட்டா, பாட்டி, ஆடு, மாடு, கோழி, நாய், பூனை எல்லாம் நினைவில வரும்தானே. குடும்பத்தில எந்த  இடத்திலை உங்களை வச்சு இருக்கிறார் என்று இன்னுமொருவனைத்தான் கேட்கவேணும். :26_nerd:

 

சிந்திக்க வைத்த பதிவை தந்த இன்னுமொருவனுக்கு நன்றி.....

போராட்டத்தின் பின்னடைவு என்பது முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிவைக்கப்பட்ட ஒன்றல்ல,  மாறாக அது ஒரு தொடர்ச்சிக் குறி. தோல்வி என்பது விஸ்தரிக்கப்படுகின்றது. ஒரு சுயநலம்மிக்க சுரண்டல் சமூகத்தில் பல பத்தாயிரம் பேர் இனம் என்ற பொது உடன்பாட்டிற்காக தமது உயிரைக்கொடுத்தார்கள். ஒரு பெரும் மாற்றம்மிக்க காலமாக 30 வருடகால போராட்டம் வரலாற்றில் பதியப்பட்டது. இருந்தும் பாரம்பரிய சுயநலமே இவ் முப்பது வருட காலத்தைக் கடந்து எஞ்சி நிற்கின்து. நிற்க முனைவதே தெடர்ச்சியான தோல்வி. நீங்கள் சுட்டிக்காட்டிய பல விசயங்கள் நுணுக்கமாக இத் தொடர்ச்சிக்குள் அடங்குகின்றது. யாழ்கள விவாதங்களின் சோர்வும் கூட இத் தொடர்ச்சிக்குள்ளகவே நுணுக்கமாக அடங்குகின்றது. 

கருத்துக்களால் பொதுத் தன்மையை எட்டமுடியாத நிலை

கருத்துக்கள் தன்னை பாதிப்பதாக அதீதமாக உணர்தல் - அறிவுபூர்வமாக அன்றி உணர்சிவசத்துடன் அணுகும் நிலை

கருத்தாடுவதால் என்ன பயன் என்ற குழப்பம்

கருத்தெழுதும் நேரத்தை வீணாணதாக கருதும் நிலை

இவ்வாறு இன்னும் சில தன்மைகள் இருக்கின்றது. ஆனால் இத் தன்மைகள் எல்லாம் போராட்ட பின்னடைவுக்கு முன்னரும் பின்னரும் வேறுபடுகின்றது. தெடர் தோல்வியில் இந்த வேறுபாடும் அடங்குகின்றது. 

கருத்துக்களத்திற்கு வருதல் முரண்படுதல் வெளியேறுதல் ஒதுங்குதல் என்பனவெல்லாம் கூட எமது இனம் சார், பொதுத் தன்மைசார் உளவியல் நிலையை சுட்டிக்காட்டுகின்றது. 

முள்ளிவாய்க்காலும் சிங்களப்பேரினவாதத்திற்கு பெருவெற்றி, தமிழரின் சுயநலம் நோக்கிய நகர்வும், பொருள் தேடும் பாய்ச்சலும் பேரினவாதத்தின் வெற்றியே, தமிழில் இருந்து தள்ளிப்போதலும் வெற்றியே, கருத்துக்களத்தில் இருந்து தள்ளிநிற்பதும் கூட வெற்றியே. ஒருவன் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமானால் என்னுமொருவன் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டும். 

இறுதியாக..

பொதுத்தன்மையை நோக்கி விதைக்கப்படும் கருத்துக்கள் அதை உடனே எட்டாவிடினும் ஒருநாள் வளர்ந்து விருட்சமாகி பலன் தரும் என்ற நம்பிக்கையே யாழ்களம். அதை எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் புத்தாண்டு பிறக்கட்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் உறுப்பினர்கள் அனைவரும் களத்துடன் நேரடியாகத் தொடர்பிலில்லையே தவிர களத்தில் உலவுகிறார்கள்.

கடந்த காலங்களில் தமிழர் தேசியம் தொடர்பாக வந்த இடுகைகளில் கருத்துக்களை எழுதியவர்களில் ஒரு சாரரை கண்டமேனிக்கு தெருவில் வழிப்பறிக்கொள்ளைக்காரனாகச் சித்தரித்து ஐரோப்பிய மற்றும் புலம்பெயர் நாடுகளில் புலிகள் பெயரில் காசு சேர்த்து சுருட்டியவர்களது பட்டியலில் அவர்களையும் சேர்த்து வசைபாடியதே இங்கு கருத்தெழுதுவதில் அனேகருக்கு வேறுபட்ட மனப்பாங்கினை உருவாக்கியது.

இப்படி வசை பாடியோர்  தங்களது குறிக்கோள் பலித்ததும் யாழ்களத்தைவிட்டு ஒதுங்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

தவிர

தேசியம் சம்பந்தமாகவே தாயக அரசியல் மற்றும் சாதாரண விடையங்களை வாதிட்டாலும்,

இதெல்லாம் புலிகளால் வந்தது எனக்கூறி தங்கள் எஜமானர்களை எப்போதும் காப்பதில் ஒருசிலர் முயற்சி செய்துகொண்டே இருந்தது கடந்தகாலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு பொதுமகனுக்கு அரசியலில் யாரையும் சார்ந்து இருக்கவேண்டிய தேவை இல்லை ஆனால் அவன் எவ்வகை அரசியல்வாதியை அன்றேல் அரசியல் சக்தியை அதாரித்திருக்கலாம் என்பதில் அவனுக்குச் சுதந்திரம் உள்ளது அவ்வகையில் கடந்த சிறீலங்காவின் தேர்தலின்போது களத்தில் நடந்த விவாதங்கள் பலரைச்சோர்வடையச் செய்துவிட்டது. அத்தோடு இலங்கையின் வடக்குக்கிழக்கின் தேர்தல் முடிவுகளும் அவர்களது நிலைப்பாடுகளை மாற்றியமைத்துவிட்டது.

இவைபோல் பல விடையங்களுடன் சேர்ந்து,

புலத்தின் தமிழர்களது பெயரில் "நாங்கள் எப்படியான அரசியல் முன்னெடுப்புக்களையோ அன்றேல் கொள்கை முன்னெடுப்பக்களையோ எடுத்துச் செல்வதென்பது எமக்குத் தெரியும் நீங்கள் உஙகடை அலுவல்களைப்பாருங்கள்"  என உண்மையாகத் தமிழர்களோ அன்றேல் தமிழர்களது பெயரில் யாரோ கூறிய விடையம் புலம்பெயர்தேசங்களில் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டதும். அப்பிரச்சாரம் இலங்கைத்தீவின் தேர்த்தல் களத்தில் தமிழர்களது பிறிதொரு பிரிவினை ஆதரித்துநின்ற புலம்பெயர் உறவுகளைச் சோர்வடையச்செய்த்தும் இவைபோன்ற இன்ணோரன்ன காரணங்களும் யாழ் களம் வெறுமையடையக் காரணமாகிவிட்டது.

இவை இப்படியே தொடர முடியாது. அரசியல் மற்றும் கொள்கைரீதியான வேறுபாடுகளை மறந்து யாழ் களம் எனும் ஒற்றைக்கருந்த்துடன் எதிர்காலக்தில் ஒன்றுபடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.